‘அண்ணாமலை’’….!
’’கட்டாந் தரைதனில் கையே தலையணையாய்
கொட்டாவி விட்டுறங்கு கோமானாய் -கட்டாயம்
தன்னாலே வந்துனக்கு தாலாட்டு பாடிடுவார்
பெண்ணாளும் அண்ணா மலை’’….
’’கண்டதே காட்சியாய், கொண்டதே கோலமாய்
உண்டதோர் பிக்ஷையில் உன்மத்தம் -கொண்டுநீர்
ஏகான்மம் ஏற்றிட ஏற்றிடுவான் உச்சிக்கு
மீகாமன் அண்ணா மலை’’….
’’கற்ற கரத்தளவே பெற்ற பகுத்தறிவை
முற்றும் துறக்க முனைந்திடுவாய் -சற்றும்
நினையாத வேளை நினக்கருள் செய்வான்
மனையாளும் அண்ணா மலை’’….
’தொட்ட குறைதோஷம், விட்ட குறைவேஷம்
எட்டநின்று சாட்ஷியாய் ஏற்றிட -அட்டவணை
போட்டுயர்ந்த ஞானம் படிப்படியாய் நல்கும்
மாட்டமர்ந்த அண்ணா மலை’’…
’’அச்சம் பொறாமை அசூயை அவமானம்
மிச்சமின்றி போட்டு மிதித்திடு -உச்சம்
உனக்களிக்கும், ஒன்றிலும் ஒட்டாத இன்ப
மனக்களிப்பே அண்ணா மலை’’…கிரேசி மோகன்….!