-முனைவர் சு. செல்வகுமாரன்

கவிதைமொழியின் சொற்பயன்பாடு பற்றிக் குறிப்பிடும் க. பூரணச்சந்திரன் “நடைமுறை ரீதியான எழுத்தாளன் சொற்களை பயன்படுத்தும்போது ஒரு வார்த்தைக்கு ஒரு அர்த்தம் மட்டுமே தரமுயலுவான். ஆனால் கவிஞனோ எத்தனை அர்த்தங்களை ஒரு சொல் தருகிறதோ அத்தனையையும் பயன்படுத்த முயற்சி செய்வான்.

    கவிதை மொழியைப்பற்றிய ஒரு தவறான கருத்து என்னவென்றால், கவிஞர் மிக அழகான, ஒலிநயத்துடன் கூடிய சிறப்பான சொற்களைப் பயன்படுத்துவார் என்பதுதான். உண்மையில் கவிஞர்கள் தேடுவது மிக அர்த்தப்பாங்கான – அர்த்தச்செறிவான சொற்களைத்தான். சொற்கள் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பொருள் தருகின்றன. மொழியில் பல தளங்களும் விதங்களும் இருக்கின்றன. கவிஞன் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். அவன் தேர்ந்தெடுக்கும் சொல் மிக உன்னதமானதாக – எளிமையானதாக அழகுத்தன்மை உள்ளதாக – அற்றதாக, ரொமான்ண்டிசத் தன்மை வாய்ந்தாக – யதார்த்தத்தன்மை கூடியதாக, பழங்காலச் சொல்லாக – புதிய சொல்லாக, கலைச்சொல்லாக – சாதாரணமாகப் புழங்குவதாக, ஓரிரு அசை கொண்டதாக – பல அசைகள் கொண்டதாக, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஒரு தளத்தில் இயங்கும் கவிதைக்கு வேறுஒரு தளத்திலிருந்து கூடச் சொற்கள் ஆளப்படலாம். இதைச் சிறப்பாகச் செய்தால் ஒரு வியப்பதிர்ச்சி உருவாக்கும். கவிதையின் ஆழத்தைக் கூட்டும். கவிஞனின் தொழிலே சொற்களை மேலும் மேலும் தேடிச் செல்வதும் கண்டுபிடிப்பதும்தான். அச்சொற்களின் இரகசியத் தொடர்புகள் புலப்படும் சமயத்தில் கவிதையின் ஆழமும் கனமும் கூடுகின்றன. வெடித்துச் சிதறும் ஒரு வெடிகுண்டின் அழுத்தத்தைப் போல அதில் அழுத்தம் கூடுகிறது.” 14 என்று குறிப்பிடுவது கவிதைமொழியின் இயக்கம் குறித்துப் புரிந்துகொள்ள உதவுகிறது.

முல்லைக்கலிப் பாடல் (3) ஏறுதழுவுதல் பற்றியதான தோழியின் கூற்றாக அமைகின்றது. இப்பாடலில் ஏறுதழுவுதல் தொடர்பான நிகழ்வினைக் காணாதவரும் கண்டுகொள்கின்ற விதமாய் புலவர் காட்சிப்படுத்தும் விதம் படைப்பாக்க மொழிசார்ந்த ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாய் உள்ளது.

     “அவர் மிடை கொள
      மணிவரை மருங்கின் அருவி போல
      அணிவரம்பு அறுத்த வெண்காற் காரியும், ….” 15
     “ஓவா வேகமோடு உருத்துத் தன்மேல் சென்ற
      சேஎச் செவி முதற்கொண்டு, பெயர்ந்து ஒற்றும்….” 16

ஆயமகளிர் தங்களுக்குரிய பரண்களில் வந்தமர்கின்றனர். அப்போது தொழுவினுள் பசுக்களைப் புகச்செய்கின்றனர். அந்தப் பசுக்கள் பல்வேறு விதமாக அழகுபடவும், வன்மம் மிக்கதாகவும் விளங்குகின்றன. அவற்றினை காட்சிப்படுத்தும் புலவன் மலையினின்று வீழும் அருவி போல அழகின் எல்லை மீறிய வெள்ளிய கால்களை உடைய கரிய எருதுகளையும், விண்மீன்கள் பூத்து விளங்கும் அந்திவான் போல வெள்ளிய புள்ளிகள் கொண்ட வெள்ளை எருதுகளையும், இறைவனின் தலையில் சூடியுள்ள பிறை போல வளைந்த கொம்புகளை உடைய சிவந்த எருதுகளையும் பொருந்துகின்ற மாறுபாட்டினை உடைய வலிய பிற ஏறுகள் பலவற்றையும் தொழுவினுள் புகவிட்டனர் என்பதாக பதிவு செய்கின்றார். இன்னொரு இடத்தில் காயாம் பூக்கண்ணி சூடி ஏறுதழுவுகின்ற பொதுவன் ஒருவன் இடையறாத வேகத்துடன் கோபம் கொண்டு தன்னை நோக்கி வந்த சிவந்த நிறமுடைய ஒரு எருதினை அதன் செவியடியிற் பற்றிக் கொண்டு அதன் வலியை அடக்கிய அழகைத் தலைவிக்கு தோழி மூலம் காட்சிப்படுத்துகின்றார்.

      இதற்கு நல்லுருத்திரனார் ஒரு தொன்மத்தை ஒப்புமை செய்கின்றார். பகைவிடுத்த பிடரி மயிர் கொண்ட குதிரையை வாயைப் பிளந்து, கொன்ற சமயத்தில் மாயனும் இத்தகையனோ? என்று என் நெஞ்சம் அச்சம் கொண்டதாக தோழிக் கூறுவதாக அமைகின்றது. பாடல் ஆயர் வாழ்வியல் தொடர்பான பல விவரங்களை பதிவுசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுருங்கச் சொன்னால் அவையே முல்லைக்கலிப்பாடலின் அடிக்கருத்தியலாகவும் விளங்குகின்றது. ஆக முல்லைக்கலியைப் பொறுத்தமட்டில் கருத்தியலை அழகியல் உறுப்புக்களைக் கொண்டு காட்சிப்படுத்துகின்றவிதமுமே கவிதையினை வளமையுடையதாகவும், செழுமையுடையதாகவும் இனங்காணச் செய்கின்றது. அத்தோடு கவிதையில் இயல்பாய் அமைந்து விடுகின்ற உணர்ச்சியும், கட்டமைப்பும் கூட முல்லைக்கலிப் பாடலின் வளமைக்கு காரணமாக அமைகின்றன.

    முல்லைக்கலிப் பாடல் (4) தோழி, தலைவி கூற்றாக அமைந்துள்ள உரையாடல்களாகவே அமைந்துள்ளன. அவர்களின் உரையாடல்கள் வெவ்வேறான காட்சிப்படுத்தல்களை நிகழ்த்துகின்றன. பாடலின் முதல்பகுதி ஏறுதழுவுலுக்காக தொழுவத்தில் விடப்பட்ட வெவ்வேறு எருதுகளின் வலிமை குறித்தனவாகவும், வலிமையும் கொலைத்தன்மை மிக்கதுமான எருதுகளை அடக்கிவிடும் ஆயன் எத்தகைய சிறப்பு மிக்க ஆயர்குலத் தலைவியை அடையலாம் என்பதனையும் விவரணைவதாக அமைகின்றன.

   “அவ்வழி, முள்எயிற்று ஏர் இவளைப் பெறும், இது ஓர்
    வெள்ஏற்று எருத்து அடக்குவான்.
ஒள்ளிழை வாருறு கூந்தல் துயில்பெறும், ….”  17   

அதாவது, எருதுகள் நிறைந்திருக்கும் இந்தத் தொழுவத்தினிடத்தே நிற்கின்ற ஒப்பிடுதற்கு அரிதான பலம் பொருந்திய வெள்ளை ஏற்றின் கழுத்திலே கிடந்து அடக்குபவன் முள்எயிற்று அழகியான இவளைப் பெறுவான் என்பதும்,  கூரிய கொம்புகளை உடைய கார் என்று சொல்லக் கூடிய எருதின் சினத்தை அஞ்சாது தழுவி அடக்குபவன் ஒளிமிக்க அணிகலன்களையுடைய தலைவியின் நீண்ட கூந்தலிலே துயிலுகின்ற பாக்கியத்தைப் பெறுவான் என்பதும்,  குரால் நிறம் உடையக் கண்களைக் கொண்ட கொலைத்தொழில் மிக்க ஏற்றை அடக்குபவன் வெருவுதலையுடைய பிணை மானைப் போல பார்க்கும் வலிபடர்ந்த கண்களை உடைய இந்த நல்லவளைப் பெறுவான் என்பதும், மிகுதியான வலிமையுடைய சிவந்த எருதின்  சினத்தை அஞ்சாமல் அடக்கி ஆள்பவன், வரிபொருந்திய காதணியினையும், மூங்கில் போன்ற தோள்களையும் உடைய தலைவியுடன் துயிலுறுதலைப் பெறுவான் என்றும் ஆயர்கள் முறைப்படி அறிவித்தல் செய்து பல விண்மீன்கள்  சூழ்ந்த அழகிய சந்திரனைப் போலப் பல பெண்கள் சூழ்ந்திருந்த அந்தப் பரணிடத்தே தலைவியையும் அழகு நிரம்பியவளாக கொண்டு சேர்த்தனர் என்பதாகக் காட்சிப்படுத்தி நம் மனக்கண்ணில் நிறுத்தப்படுவதன் மூலம் தலைவியின் சிறப்பு  உணர்த்தப்படுகிறது.

 இங்கு ஆயர்குலப் பெண்கள் ஏறுதழுவல் மூலமாகத் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட நிலையினை விவரிக்கும் டாக்டார் மு.வ “ஏறுதழுவுதல் என்ற ஒரு வழக்கம் முல்லை நிலத்துக்கு உரியது. அது மற்ற சங்க நூல்களில் இல்லாமல் கலித்தொகையில் மட்டும் காணப்படுகிறது. அப்பகுதியில், ஆயர்களின் வீரமும் அஞ்சாமையும் விளக்கமாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஆயர் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதனால், அவளுக்கு உரிய கணவன் வீரம் மிக்கவனாக இருத்தல் வேண்டும். இன்ன காளையைத் தழுவி அடக்கவல்ல வீரனே அவளை மணப்பதற்கு உரியவன் என்று பலரும் அறியத் தெரிவிப்பது வழக்கம். அவ்வாறே வேறு குடும்பத்துப் பெண்களுக்கும் திருமண ஏற்பாடாக ஏறுகள் குறிக்கப்படும். இந்த ஏறுகளைத் தழுவி அடக்குவதற்கு வீரர்கள் காத்திருப்பார்கள். இதற்கு ஒரு நாள் குறிக்கப்படும் அன்று அஞ்சாமல் களத்தில் புகுந்து ஏறுகளை எதிர்த்து, அவற்றின் கொம்புகளால் குத்துண்டும் புண்பட்டும் வெற்றி பெறும் வீரர்களை அந்தந்தப் பெண்கள் மணந்து கொள்வார்கள். இவ்வாறு நிகழ்வதே ஏறுதழுவுதல் என்பது. இன்ன ஏற்றை அடக்கித் தழுவும் வீரனுக்கே உரியவள் இப்பெண் என்று பலமுறை சொல்லிப் பலர் அறியச் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது.” 18  எனக் குறிப்பிடுவது முதன்மையானதாகும்.

மேலும் முல்லைக்கலிப் பாடல் (14) தலைவியை தலைவன் உரிய காலத்தில் வரைந்து கொள்ளாத நிலையில், தலைவியை அயலானுக்கு மணம்செய்து கொடுக்க வீட்டில் முயல்கின்றனர். அந்தத் தருணத்தில் தலைவி தோழியின் வாயிலாகத் தலைவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வரைவு கடாவுகின்றாள். அப்பாடலின் இறுதிப் பகுதியாக இடம்பெற்றுள்ள

     “தருமணல் தாழப் பெய்து, இல் பூவல் ஊட்டி,
எருமைப் பெடையோடு, எமர் ஈங்கு அயரும்…” 19

என்னும்  வரிகள் ஆயமகளிரின் திருமணம் தொடர்பான நிகழ்வு அல்லது சடங்கில் பெண் எருமையின் கொம்பினை வைத்தல் என்பது இனவரைவியல் நோக்கில் ஆராயப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனைப் போலவே ஆயர்குலப் பெண்களின் கற்பொழுக்கமும் வலியுறுத்தப்படுவது உணர்த்தப்படுகின்றது. இது குறித்து தம் கருத்தினை பதிவு செய்யும் ராஜ்கெவுதமன்,

     “(114) தலைவி கூற்றாக உள்ள பாடலாகும். ஆயர்குடிப் பிறந்த பெண் ஒருவனோடு மட்டுமே மணவாழ்க்கை உண்டு என்பதில் கௌரவம் கொள்ளுகிறாள்.

தலைவி தருமணல் தாழப்பெய்து வீட்டைச் செம்மண்ணால் பூசி பெண் எருமையின் கொம்போடு எமர் (வீட்டார்) இங்கு அயரும் பெரும்மணம் எல்லாம் தனித்து ஒழிய – (முன்னர்) வரிமணல் முன்துறையில் சிற்றில் புனைந்து ஆடிய ஆயத்தாரிலிருந்து நான் தனிநீங்கி அவனோடு புணர்ந்த ஒருமணம்தான் அறிவேன். இந்த உலகமே பெறினும் அருநெறி ஆயர்மகளிருக்கு இருமணம் கூடுதல் இயல்பு இல்லை. (என்று பிறர் வரைவு கேட்டுவந்த போது தலைவி கூறுகிறாள்.)

     ஆணுக்கு வீரம் மாதிரி, பெண்ணுக்குக் களவு மணம் புரிந்த ஒருவனே கணவன் என்ற மதிப்பீடு ஆகியுள்ளதை இங்கே காண இயலும். தொல்காப்பியம் கற்பு பற்றி வரையறுத்த நெறி இந்தியத் துணைகண்டம் முழுமைக்கும் உரிய நெறியாக இருந்தது.” 20

     முல்லைக்கலிப் பாடல்கள் நிறைந்த வர்ணிப்புகளைக்  கொண்டுள்ளன. அவை முல்லைநில மக்களின் வாழ்வில் முக்கியத்துவம் பெற்ற ஏறுதழுவுதல், குரவையாடுதல்,  ஆயர்குலப் பெண்களின் கற்புநெறி உள்ளிட்ட செய்திகளைத் தமிழ்ப் பண்பாட்டு முறையியலோடு வெளிப்படுத்துவது ஆகியன இதன் நோக்கமாகவும் கருத்தியலாகவும் அமைகின்றன. இங்கு பாடுபொருள் முக்கியத்துவம் பெறுகின்றது. அப்படியாயின் கவிதையின் வளத்திற்கு வெறுமனே அணிசார்ந்த அமைப்புகளும், மொழியும் மட்டுமே காரணியாக இருக்க முடியாது. மாறாக இலக்கியத்தின் அடிநாதமாக விளங்கக்கூடிய பாடுபொருளும் அதன்  வளமைக்கும் செழுமைக்கும் காரணியாக அமைவதை நாம் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆக கவிதையின் வளமை என்பது ஒரு பெருங்கடல் போன்று விரிந்தும் நீண்டும் செல்லத்தக்கது.

சான்றெண் விளக்கம்

  1. வீ.அரசு – சங்க நூல்களின் காலம், ப – 7
  2. சுந்தரபாண்டியன் . க – தமிழில் பொருளிலக்கண வளர்ச்சி, ப-24
  3. நடராசன். இரா – செம்மொழிகள், ப – 8
  4. டாக்டர், மு.வ, மொழி வரலாறு, ப – 330, முதல் பதிப்பு – 1952
  5. ஜானதன் கல்லர் தமிழில் ஆர். சிவக்குமார் – இலக்கியக் கோட்பாடு, ப -112
  6. தனிநாயகம் அடிகளாரின் படைப்புகள், ப – 341
  7. தொல், அகத்திணை, பா – 5
  8. தொல் – அகத்திணை – 1
  9. ராஜ்கெவுதமன்- கலித்தொகை பரிபாடல் ஒரு விளிம்பு நிலை நோக்கு, ப-112
  10. முல்லைக்கலி, பா 1:1-3
  11. மேலது, பா – 1: 18-20
  12. மேலது, பா – 1: 24-26
  13. மேலது, பா – 101: 30 – 32
  14. க. பூரணச்சந்திரன், கவிதையியல், ப – 73
  15. முல்லைக்கலி, 3: 11-13
  16. மேலது, 3: 50-51
  17. மேலது, 4: 20 -28
  18. மு.வ, முல்லைத்திணை, பக் – 13, 14
  19. முல்லைக்கலி, பா-14:12-13
  20. ராஜ்கௌதமன்- கலித்தொகை பரிபாடல் ஒரு விளிம்புநிலை நோக்கு, பக் – 121, 122

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *