அகநானூற்றில் முருக வழிபாட்டுப் பதிவுகள்

0

-பீ.பெரியசாமி

முன்னுரை

சங்ககாலம் முதல் இன்றுவரை முருக வழிபாடு என்பது தமிழர் பண்பாட்டில் கலந்த ஒன்றாகவே இருந்து வருகிறது. இதனை, “மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும், முல்லை, குறிஞ்சி மருதம், நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே“ (தொல்.அக.5) எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். இதன்வழி முருகனை மலையும் மலையைச் சார்ந்த நிலமுமாகிய குறிஞ்சி நிலக்கடவுளாக அக்கால மக்கள் வழிபட்டனர் என்பது காணக்கிடக்கிறது. இக்குறிஞ்சி நிலக்கடவுளின் வழிபாட்டுப் பதிவுகள் எங்கெல்லாம் எவ்வாறெல்லாம் அகநானூற்றில் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரை ஆராயவுள்ளது.

வெறியாட்டு நடத்துதல்

தொல்காப்பியம் களவியலில் வெறியாட்டு குறித்து கூறியுள்ளது. இதற்கென ஒரு துறையும் ஒதுக்கியுள்ளார் தொல்காப்பியர். முருகனுக்கு உரித்தான காந்தள் பூவினைச் சூடி ஆடுவது அது.

”வெறிஅறி சிறப்பின் வெவ்வாய் வேலன்
வெறியாட்டு அயர்ந்த காந்தளும்”
(தொல். கள)

அகநானூற்றில்,

”சூர்உறை வெற்பன் மார்புறத் தணிதல்
அறிதனள் அல்லல் அன்னை வார்கொல்
…………………………………….. ………………. ……………………
முருகன் ஆர் அணங்கு என்றலின்” 
(அகம்.98)

எனும் பாடலில், எனக்கு நேர்ந்த துன்பமானது தலைவனின் மார்பை அடைதல் அல்லாது விலகுவதில்லை. இதையறியாமல் அன்னையானவள் வெறியாட்டு நடத்த முனைகிறாள். வார்கோலினை வளைக்குமாறு கூறி என் வளை நெகிழ்தலை அன்னையானவள் அறிந்துகொண்டாள். இது என்னவென்று அறியாது குறிசொல்லும் முதுபெண்டிரிடம் கேட்டாள். அவர்கள் கையில் இருக்கும் பிரம்பால் என்னைத் தட்டிப் பார்த்து, ”முருகன் பிடித்து ஆட்டுகிறான்” என்று கூறினர். இதனை மனத்தில் கொண்டே தாய் வெறியாட்டுக்கு ஆயத்தம் செய்வதாக தலைவி கூறுகிறாள். மேலும்,

”அறியா வேலன் தரீஇ, அன்னை
வெறிஅயர் வியன்களம் பொலிய ஏத்தி
மறிஉயிர் வழங்கா அளவை”(அகம்.242) எனும் பாடலில், “பல பிரப்பரிசிகளைப் பலியாக வைத்தும், உண்மையறியாத வேலனைக் கொண்டுவந்து வெறியயரும் பெரிய களத்தினைப் பொலியுறுமாறு போற்றித் துதித்தும், ஆட்டுக்குட்டியின் உயிரைப் பலியிட்டும் வெறியாட்டு செய்வதற்கும் முனைந்தாள் அன்னை“ என்பதில் வெறியாட்டு நிகழும்போது முருகனுக்குப் பலியிடுதல் என்பது அக்காலப் பண்பாட்டு மரபில் இருந்துள்ளமையை அறிய முடிகிறது. இது காலப்போக்கில் மாறிவிட்டது. மேலும், வெறியாட்டுக் களத்தினைக் குறித்து, ”வேலன் வெறிஅயர் வியன்களம்“ (அகம்.182) எனும் பாடல்வரி கூறுகிறது. இதன்வழி வெறியாட்டு நிகழ்த்துவதற்கெனத் தனியிடம் அக்காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது பெறப்பட்டது.

பலியிடும் மரபு

சங்ககாலம் முதற்கொண்டே நம் தமிழினத்தில் பலியிடுதல் எனும் சடங்கு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அகநானூற்றுப் பாடல்களிலும் காணமுடிகிறது. அவற்றுள்,

”படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேள் பேணத் தணிகுவள் இவள்என
……………………….. …………….. …………………….
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்”
(அகம்.22)

எனும் பாடலில், வணங்காதவரைத் தேய்த்துப் பழித்த பலவாகிய புகழைக் கொண்டவன்; பெரிய கையினை உடைய நெடுவேளாகிய முருகன். அவனை வணங்கினால் இவள் துயரம் தீங்கும் என, அந்தவேளை அவர்கள் நினைத்தனர். அறிவுரை கூறுகின்ற முதுபெண்டிரும், அதுவே உண்மை என்று கூறினர். ஆகவே, வெறியாட்டுக்களம் நல்ல முறையில் அமைக்கப்பெற்று, வேலினை நிறுத்தி அதற்கு மாலையினையும் சூட்டினர். வலிமை நிறைந்த கோவிலிலே ஆரவாரம் உண்டாகுமாறு முருகனின் புகழினையும் பாடினர், பலியிட்டனர், செந்தினையினைக் குருதியுடன் கலந்து தூவினர். இவ்வாறு முருகனை அச்சம் பொருந்திய நடு இரவினில் அவ்விடத்திற்கு வரவழைத்தனர் என்பதன் வழி இரவினிலே பலியிடுதல் நடைபெற்றது என்பதும் குருதி கலந்த உணவு தூவப்பட்டது என்பதும் அறியப்படுகிறது.

முருகனின் சிறப்பு

முருகனின் சிறப்பினை அகநானூறு,

”உருகெழு சிறப்பின் முருகுமனைத் தழீஇக்
கடம்பும் கணனும் பாடி நுடங்குடி”
(அகம்.138)

எனும் பாடலில், உட்குப் பொருந்திய சிறப்பினையுடைய முருகனைக் கையாற்றொழுது, மலையின்கண் வருவித்து, அவன் கடம்பையும் களிற்றையும் புகழ்ந்துப் பாடிப் பனந்தோடும் காந்தள் மாலையும் கைக்கொண்டு, இரவு முழுவதும் வறிதே அசைந்து ஆடினராதல் நன்றாகுமோ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும்,

”கடியுடை வியல்நகர்க் காவல் கண்ணி
முருகு என வேலன் தரூஉம்
பவருமாகப் பயந்தன்றால் நமக்கே
”    (அகம்.232)

எனும் பாடலில், நாள்தோறும் விரவிய பூப்பலியோடு கலந்து, காவல் பொருந்திய பரந்த மனையினைக் காத்தல் கருதி, அன்னையானவள் நம் வேறுபாடு முருகனால் ஏற்பட்டதென்று எண்ணி, வேலனை அழைத்துவரும் காலமாகவே நமக்குவந்து விளைந்தது என்பதில் முருகன் மகளிரிடையே தோன்றும் வேறுபாட்டைக் களையும் தெய்வமாகக் காட்சிபட்டுள்ளார். மேலும்,

”மெய்ம்மலி உவகையன் அந்நிலைக் கண்டு
முருகு என உணர்ந்து முகமன் கூறி
உருவச் செந்தினை நீரோடு தூவிதூஉம்”   (அகம்.272)

எனும் பாடல், நம் வீட்டினிடத்து, உள்ளத்திலே மிகுந்த மகிழ்ச்சியுடையவனாய் அவன்வந்து சேர்ந்தான். அந்தச் சூழலிலே, நம் தாயும் கண்டாள் எனின், முருகனே என நினைத்து முகமகிழ்ந்து வரவேற்பளிப்பாள். நல்ல நிறம் வாய்ந்த செந்தினையை நீரோடு தூவி, வந்தவனை முருகனெனவே நினைத்து வழிபடவும் தொடங்கிவிடுவாள் என்பதில் முருகனை எவ்வாறு அக்கால மக்கள் தன் மனத்தில் வைத்து வழிபட்டனர் என்பதை அறிய முடிகிறது.

சூரபதுமனை அழித்தல்

சூரபதுமன் எனும் அரக்கனை முருகப்பெருமான் அழித்ததனையும், அதனோடு தொடர்புடைய செய்திகளையும் அகநானூறு கூறுகிறது. இதனை,

”சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
சினம்மிகு வேந்தன் தண்பரங்குன்றத்து”  
(அகம்.59)

எனும் பாடலில், சூரபத்மனை அவன் சுற்றத்தோடு தொலைத்த ஒளிச்சுடரும் முனையினையுடைய நெடுவேலினையுடையவன், சினம் மிகுந்த முருகன். அச்சினம் தணிந்து, அவன் அருளுடையவனாகக் கோயில் கொண்டிருக்கும் இடம் திருப்பரங்குன்றம் என்பதிலிருந்தும்,

”புரிகணத் தன்ன நாய்தொடர் விட்டு
முருகன் அன்ன சீற்றத்துக் கருந்திறல்”   
(அகம்.68)

எனும் பாடலில், ஒலியையொத்த கடுஞ்சீற்றத்துடன் பகைவரை எதிர்க்கக் கூடியவனாகிய முருகனின் வலிமையை இவ்வடிகள் எடுத்துக் கூறுகின்றன.

பெயர்

முருகனை – செவ்வேள், முருகன், முருகு, வேலன் எனும் பெயர்களில் அகநானூற்றுப் பாடல்களில் சுட்டியுள்ளனர். இதனை, ”காடுகெழு நெடுவேள்” (அகம்.5) என்பதில், மலையும் மலையினைச் சார்ந்த இடத்துக்குமுரிய கடவுள் நெடுவேள் எனும் முருகன் என்பதை உணர்த்துகிறது.

முடிவுரை

முருகன் – மலையும் மலையினைச் சார்ந்த இடத்துக்குமுரிய கடவுள் என்பதும், முருகனை வழிபடும்போது பலியிடுதல் நடைமுறையில் இருந்தது என்பதும், அவ்வாறு செய்யப்பட்ட வழிபாட்டுக்கு வெறியாட்டு என்று பெயர் என்பதும், முருகன் சூரனை அழித்தான் என்பதும். அவ்வாறு அழித்தபின் சினம் தணிந்தபின் திருப்பரங்குன்றில் கோயில் கொண்டான் என்பதும் இக்கட்டுரை வாயிலாக அறியப்படுவனவாகும்.

******

கட்டுரையாளர்
தமிழ்த்துறைத்தலைவர்
D.L.R.  கலை மற்றும் அறிவியல் கல்லூரி
விளாப்பாக்கம், ஆற்காடு.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *