நாட்டுப்புறப் பாடல்களில் காதல்
-சிந்து. மூ
நாட்டுப்புறப் பாடல்கள் காலம் கடந்தும் இன்றும் மக்களிடையே வாழ்ந்து வருகின்றன. பண்டைய தமிழர்கள் இசையில் மிகுந்த நாட்டம் உடையவர்கள். அவ்வகையில் நாட்டுப்புறப் பாடல்கள் மிகுந்த ஓசைபெற்று அமைந்திருப்பதை உணரமுடிகிறது. மனத்தில் உள்ள உணர்வுகளை உள்ளவாறு வெளிப்படுத்தும் கண்ணாடியாக வாய்மொழி இலக்கியமான நாட்டுப்புறவியல் அமைவதைக் காணலாம். படிப்பறிவில்லாத பாமர மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகைகயில் அமைந்திருப்பது சிறப்பிற்குரியது. மனத்தில் உள்ள இன்ப துன்பங்களை மெய்ப்பாடுகளோடு எடுத்தியம்பும் இலக்கியமாகத் திகழ்கிறது.
நாட்டுப்புறப் பாடல்களைக் குழந்தைப்பாடல்கள், உணர்ச்சிப்பாடல்கள், தொழிற் பாடல்கள், கொண்டாட்டப்பாடல்கள், ஒப்பாரிப்பாடல்கள் என வகைப்படுத்தலாம். அவற்றுள் உணர்ச்சி நிலையான காதலைப் பற்றி ஆராய்வதாகும்.
காதல் பாடல்
நாட்டுப்புறப் பாடல்களில் காதல் முதன்மை பெறுவதைக் காணலாம். காதல் பாடல்களில் கற்பனை, அணிநயம் இடம்பெறுவதில்லை. மனத்தில் தோன்றும் காதலைத் தன் வாய்மொழி வார்த்தைகளால் பாடல்களாக வெளிப்படுத்துவர்.
காதல்
ஆண் பெண் இருவரின் உள்ளத்தில் தோன்றும் ஒருவித உணர்ச்சியை வெளிப்படுத்துவது காதலாகும். அக்காதல் இன்பமும், பொருளும், அறமுடையது. தொல்காப்பியத்தில் அன்பின் ஐந்திணை பற்றிக் கூறும் தொல்காப்பியர்,
”இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொரு புணர்ந்த ஐந்திணை” 1 என்று சுட்டுகிறார்.
இலக்கியத்தில் களவு ஏற்படும் காலத்தில் தலைவிக்குச் செவிலி, தோழி, பாங்கன், பாங்கியிற் கூட்டம் எனத் தூதாக அமைவர். ஆனால் நாட்டுப்புறத்தில் உள்ள தலைவியின் காதலானது, பாடல்கள் வாயிலாக இனிமையாகவும், உண்மையான உணர்வுகளோடும் வெளிப்படுத்தப்படுகிறது.
காதலானது மனிதனது பருவ காலங்களில் மொட்டவிழ்ந்து மலராகும் போது மனிதனது பருவத்தில் தோன்றும் உணர்வுகளால் காதல் என்னும் மணமானது பரப்பப்படுகிடுன்றது. வண்டும் மலரும் ஒன்றால் ஒன்று ஈர்க்கப்படுவதுபோல, ஆண்மையும், பெண்மையும் ஒன்றால் ஒன்று ஈர்க்கப்படுகின்றது.
காதல் பாடலில் இடம்பெறும் பொருண்மைகள்
நாட்டுப்புறப் பாடல்களில் காதல் வயப்படல், வருணித்தல், அன்பு வெளிப்படல், இடஞ்சுட்டல், உரையாடல், காவல்செய்தல், மறக்கமுடியாமை, உறுதி நிலை ஆகியவை முதன்மையாக விளங்குவதைக் காணலாம். காதல் பாடல்கள் அன்பினை வெளிப்படுத்தும் சிறந்த ஊடகமாக அமைகிறது என்றால் மிகையாகாது.
காதல் வயப்படல்
அறிமுகம் இல்லாத ஆணும், பெண்ணும் சந்திக்கின்ற சூழலில் ஏற்படும் கவர்ச்சியும், தொடர்ச்சியாக இரண்டு மூன்று முறை சந்திக்கின்ற போது மேலும் ஒருவரால் ஒருவர் கவரப்பட்டுக் காதல் கொள்ளும் நிலையே காதல் வயப்படல் என்று கூறலாம்.
”ஏரிக்கரையிலே
ஊருக்குத் தெரியாம ஒதுக்குப்புறமா
உன்ன பாக்கயல தூண்டிலில
மாட்டிக்கிட்ட மீனு போல
துடிக்குதடா ஏ மனசு……” 2 காதல் வயப்பட்ட பெண்ணொருத்தி தன் காதலை அழகாக வெளிப்படுத்துகிறாள்.
வருணித்தல்
காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் ஒருவரையொருவர் வருணித்துப் பாடுவது குறிப்பிடத்தக்கதாகும்.
”கொசுவம் கட்டி
இடுப்பாட்டிப் போரபுள்ள
உனக்காகக் காத்திருக்கும்
மாமன சித்த திரும்பித்தா
பாருபுள்ள……”3 என்று காதலன் காதலியையும்,
”முறுக்கு மீசை காரா
முரட்டு காவல்காரா
கருத்த உடம்புக்காரா
கண்டாங்கி கட்டுனவளா
கண்டுக்காமா போகாதடா……”4 என்று காதலி காதலனையும் வர்ணித்துப் பாடும் நிலையைக் காணலாம்.
அன்பு வெளிப்படல்
பெண் அன்பின் உறைவிடம் என்று கூறுமிடத்து நாட்டுப்புறப் பாடலில் ஆண் ஒருவன் பெண்மீது கொண்ட அன்பை,
”தங்கத்துக்குத் தங்கம் – பெண்ணே
தனித்தங்கம் நான் இருக்கப்
பித்தளைத் தங்கத்துக்குப் – பெண்ணே
வீணாசைப் பட்டாயோ!” என்று பாடுவதிலிருந்து ஆணின் அன்பினை உணரமுடிகிறது.
இடஞ்சுட்டல்
காதலர்கள் யாரும் அறியாது சந்தித்துப் பேசும் விதமாகக் காதலன் காதலியிடம்,இடஞ்சுட்டுமாறு கேட்கும் நிலையில்,
”ஒதுக்குப்புறமா
ஓலை குடிசையடுத்து
ஒத்தடிப் பாதையிலுள்ள
ரெட்டப் பனமரம் தா அடையாளம். 5” என்று சந்தித்துப் பேசுவதற்குரிய இடத்தினைக் காதலி குறிப்பிடுவதை உணரமுடிகிறது.
காதலில் உறுதி
ஆண்,பெண் காதலுக்குத் தன் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காதபோது உடன்போக்கு என்னும் நிகழ்வானது நடைபெறும். பெற்றோரின் சம்மதம் பெறும் வரைக் காத்திருந்து திருமணம் செய்வதும் உண்டு.
”கண்ணோடு கண்ணாக
கலந்த உன்னைக்
கல்யாணம் செய்யாம
ஊரைவிட்டுப் போவதில்லை….” என்ற பாடலின் வாயிலாக நாட்டுப்புறப் பாடல்களில் காதலனும் காதலியும் உறுதியாக இருந்து மணம் முடிக்கும் நிலையைப் பெரும்பான்மையாகக் காணமுடிகிறது.
முடிவுரை
நாட்டுப்புறப் பாடல்கள் உணர்ச்சி நிலையான காதலைப் பற்றி வெளிப்படையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஆண்மையும், பெண்மையும் ஒன்று ஒன்றால் ஈர்க்கப்பட்டுக் காதல் வயப்படும் நிலையைக் காணமுடிகிறது.
தன் காதலுக்கிடையே பலவித இன்னல்கள் தோன்றினாலும் தன் காதலில் உறுதியாக இருந்து வெற்றி கண்ட நிலையை நாட்டுப்புறப் பாடல்கள் பதிவு செய்கின்றன.
நாட்டுப்புறக் காதலானது
“செம்புலப்பெயல்நீர் போல,
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே”6 என்னும் குறுந்தொகைப் பாடலின் வரிகளை மெய்ப்பிக்கும் தன்மையைக் காணமுடிகிறது.
*****
பின்னிணைப்பு
- மு.சண்முகம் பிள்ளை (ப.ஆ) தொல்காப்பியம்,பொருளதிகாரம்.களவியல் நூ – 1
- இராமாத்தாள் (தகவலாளர்) வயது 61, சித்தநாயக்கன் பாளையம்கோவை.
- இராமாத்தாள் (தகவலாளர்) வயது 61, சித்தநாயக்கன் பாளையம்கோவை.
- இராமாத்தாள் (தகவலாளர்) வயது 61, சித்தநாயக்கன் பாளையம்கோவை.
- இராமாத்தாள் (தகவலாளர்) வயது 61, சித்தநாயக்கன் பாளையம்கோவை.
- சங்கஇலக்கியமுலமும் உரையும் அறிஞர் ச.வே சுப்பிரமணியம்.
- குறுந்தொகை பா.40
*****
கட்டுரையாசிரியர்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை
கற்பகம் பல்கலைக் கழகம்
ஈச்சனாரி.
