முனைவர் ப. ஜெயகிருஷ்ணன்

முன்னுரை 

     மனிதனின் வளமான வாழ்விற்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைவது அறிவியலாகும். அறிவியலை முறையாகப் பெறாத நாடும்,மொழியும் உலக அளவில் தலை நிமிர்ந்து நிற்க முடியாத அளவிற்கு அறிவியல் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.. உலகிலுள்ள அனைத்து மக்களும் அறிவியலை அவர்களது மொழிகளில் கொண்டுவரப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ச்சி அடைந்த நாடுகளான  பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் அறிவியல் தொழில்நுட்பக் கல்வியை அவர்களது மொழியிலேயே கற்கின்றனர். கி.பி. 2050-ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பம், கணினி வழிக்கல்வி ஆகியவற்றை முறையாகப் பெறாத ஆறாயிரம் மொழிகளில்  5980- மொழிகள் உலகில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடும் என்று யுனெஸ்கோ அறிக்கை தெரிவிக்கிறது. மாறி வருகின்ற உலகிற்கு ஏற்பத் தமிழ்மொழியும் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குள் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே அறிவியலைத் தமிழ்வழியில் கற்கவும் கற்பிக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளாக வெளிவந்த தமிழ் நூல்களிலுள்ள அறிவியல் செய்திகளும் ஆராயப்பட்டு வருகின்றன. இயல்தமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று தமிழை மூன்றாக வகைப்படுத்துவர். அறிவியல் தமிழ் நான்காம் தமிழாக இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

      தமிழில் தொல்காப்பியம்,சங்க இலக்கியம் ஆகியவற்றில் ஏராளமான  அறிவியல் செய்திகள் காணப்படுகின்றன. இவை 2000-ஆம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் அறிவியலில் மேன்மையான அறிவு பெற்றிருந்ததை காட்டுகின்றன. தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூற வந்த நூலாயினும் அறிவியல், தத்துவம், மருத்துவம் வானவியல், சோதிடம், கணிதம் போன்ற துறைகளின் கருத்துக்களை வெளியிடும் ஒரு நூலாகவும் அமைந்துள்ளது.

உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மேலைநாட்டு அறிவியல் சிந்தனையாளர்களான தேல்ஸ் (கி.மு.639-544) அனாக்ஸிமாண்டர்(கி.மு.611.547) ஷுனோபேன்ஸ்(கி.மு.576480) எம்படோகில்ஸ்(504-433) அரிஸ்டாட்டில் (கி.மு.384-322) போன்றோர்கள் வெளியிடாத பல அறிவியல் கருத்துக்களைத் தொல்காப்பியர் வெளியிட்டுள்ளார். உயிரினங்களின் வாய்ப்பாட்டைத் தொல்காப்பியர்.

           ”ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
          இரண்டறிவதுவே யதனொடு நாவே
          மூன்றறிவதுவே யவற்றொடு மூக்கே
          நான்கறிவதுவே யவற்றொடு கண்ணே
          ஐந்தறிவதுவே யவற்றொடு செவியே
          ஆற்றிவதுவே யவற்றொடு மனனே” என்று ஆறு வகையாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் தகுந்த எடுத்துக்காட்டுகளையும் தொடர்ந்துள்ள நூற்பாக்களில் தருவது அவரின் ஆழ்ந்த உயிர்கள் குறித்த அறிவை அறிந்து கொள்ள முடிகின்றது.

           புல்(ஓரறிவு); நந்து(இரண்டு அறிவு)
எறும்பு(மூன்று அறிவு);தும்பி(நான்கு அறிவு);
விலங்கு(ஐந்து அறிவு);மனிதன் (ஆறு அறிவு);

என்ற பாகுபாடு பரிணாம வளர்ச்சியைத் தெளிவாக எடுத்தியம்பும் சிந்தனையாக அமைந்துள்ளது.

     தாவரங்களின் பல்வேறு பாகங்களான தோடு, மடல், ஓலை, ஏடு, இதழ், பூ, குழை என்று பிரித்து விளக்கியிருப்பது தாவரவியல் ஆசிரியர் தாவரங்களின் பாகங்களைப் படம் வரைந்து விளக்கியுள்ளது போல் அமைந்துள்ளது.

           ”தோடே மடலே ஓலை என்றா;
ஏடே யிதழே பாளை என்றா
ஈர்க்கே குலையென நேர்ந்தன பிறவும்
புல்லொடு வரும் எனச் சொல்லினர் புலவர்”
(மரபியல்-87)

பின்னர் எழுந்த சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சிற்றிலக்கியம், உரைநடை இலக்கியம், கவிதை, சிறுகதை, நாவல், புதுக்கவிதை ஆகியவற்றில் ஏராளமான அறிவியல் செய்திகளை அறிஞர்கள் தந்துள்ளனர். இவற்றை முறையாக ஆய்வுக்கு உட்படுத்திக் கற்கும்போது ஏராளமான அறிவியல் தமிழ் கலைச்சொற்களை நாம் பெறமுடியும்.

தமிழில் அறிவியல் கலைச்சொல்லாக்க முயற்சியும் குறிப்பிடத்தக்க வரலாற்றினைக் கொண்டதாகும்.

 சான்றாக ‘அறிவியல்’ என்ற சொல்லின் படிநிலை வளர்ச்சியைக் கூறலாம்

     இயற்கை சாஸ்திரம்-1927
பிரதம சாஸ்திரம்-1935
அறிவுக்கலை-1942
பொது விஞ்ஞானம்-1959
அறிவு நூல்-1963
விஞ்ஞானம் -1982
அறிவியல்-1993-2012

அறிவியல் கருத்துக்களை உள்வாங்கித் தமிழில் அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்பு, இலக்கணப் பிழைகள் இன்றி உருவாக்க முனைய வேண்டும். ஆனால் பல அறிவியல் நூல்கள் குறிப்பாகப் பாடநூல்கள் ஆங்கில வழி நூல்களின் நேரடி மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளன. ஆனால் இன்று எழுத்து சொல் வாக்கிய அமைப்புகளில் அறிவியலைக் தருவதில் ஒரு சீர்மையற்ற நிலையே காணப்படுகிறது. இந்த நிலை மாறவேண்டும்.

தவறான மொழி பெயர்ப்பு

The mineral wealth versus world population

     என்ற தொடர் தமிழ்வழிப் பாடநூலில் ‘உலக மக்கள் தொகைக்கு எதிராகத் தாதுச் செல்வங்கள் அமைகின்றன’ என்பது தவறான மொழிபெயர்ப்பாகும்.  ‘தாதுச் செல்வங்களும் மக்கள் தொகையும்’ என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும்

சீர்மையற்ற மொழிபெயர்ப்பு

ஒரு பொருளுக்குப் பல சொற்கள் வழங்குவது சீர்மையற்ற மொழிபெயர்ப்பாகும்.

சான்று: பீக்கர், முகவை, ஜாடி

சிமின்று, சிமெண்ட், சிமென்ட்டு, சிமெண்டு

இலக்கணப் பிழைகளின்றி அறிவியல்தமிழ் அமையவேண்டும். குறிப்பாக எழுவாய் பயனிலை மாறிவருதல்,வேற்றுமை உருபுகளின் தவறான பயன்பாடு, ஒருமைப் பன்மை மயக்கம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்

பேச்சு வழக்குச்சொற்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்

சான்று: இராது, லியாக, முன்னமே, கெட்டியான.

எழுத்து

தமிழ் நெடுங்கணக்கில் 247 எழுத்துக்கள் உள்ளன. பிறமொழி உறவால் ஸ,ஷ, ஜ, க்ஷ ஆகிய கிரந்த எழுத்துக்களும் தமிழில் பயில்கின்றன. இலக்கண விதிகளில் பின்வரும் சில விதிவிலக்குகளை அறிவியல்தமிழில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மொழி முதலெழுத்து

இரப்பர், இரசாயன பந்தம்

மொழி இடை எழுத்து

     எலக்ட்ரான் – க்ட்
பெயின்ட் – ன்ட்

மொழி இறுதி எழுத்து

     ஆர்பிட்
ஸ் என்ற கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு
ஸ்கான்டியம், ஸ்ரான்ஸியம்
பாஸ்பரஸ் – பாஸ்பரசு – (தமிழ் மரபு)

ஒலிபெயர்ப்பு முறைகள்

உலகப் பொதுக்கலைச்சொற்கள் வழக்கில் அறிமுகமாகிவிட்ட பிறமொழிகள், அறிவியலாரின்பெயர்கள், சமன்பாடுகள், அளவுகள், குறியீடுகள், சுருக்கக் குறியீடுகள் ஆகியவற்றை அவ்வாறே அறிவியல் தமிழில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கலைச்சொல்லாக்க முறைகள், பின்வரும் முறையில் அமைய வேண்டும்.

நேருக்குநேர் மொழிபெயர்ப்பு
இணைப்பு மொழிபெயர்ப்பு
கருத்துப் பெயர்ப்பு

சான்று (Salts – உப்புக்கள், Rock Salt – இந்துப்பு)

ஒட்டுக்களைப் பெயர்த்தல்

  1. Exothermic reaction – வெப்பம் வெளியிடும் வினை- exo- வெளி
  2. Endothermic reaction – வெப்பம் கொள்வினை -Endo- கொள்
  3. Sub atomic particle – துணை அணுத்துகள்கள் -Sub-

 புதுச்சொல் படைத்தல்

      Element – தனிமம்;     Coal – நிலக்கரி
Blow – ஊது; blowing – ஊதுதல்; blower – ஊதி.

கணினிப் பயன்பாடு

     மேலைநாட்டு மொழிகளில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக எண்ணற்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றின் விளைவாக முதல்மொழி, இரண்டாம் மொழி, அந்நியமொழி என்ற நிலையில் கணினி வழிக் கற்பிப்பதற்கும் கற்பதற்கும் பல புதிய அணுகுமுறைகள் வெளிவந்துள்ளன. தமிழ் மொழியில் கணினிவழிக் கற்றலும் கற்பித்தலும் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. கணினியை மொழி கற்றல் கற்பித்தலுக்குப் பயன்படுத்துவதன் முக்கிய நோக்கமே அதன் பல்லூடகத் தன்மையாகும். கணினிவழிக் கற்றுத் தருவது என்பதாகாது; பல்லூடகத்தின் ஒவ்வொரு பரிமாணத்தையும் முழுமையாகக் கேட்டல், உணர்தல், பார்த்தல் போன்றவற்றின் அடிப்படையில் மொழியின் அடிப்படைத்திறன்களை வளர்ப்பதாகும். பல்வேறு கோணங்களில் பாடக்கருத்துக்களை மிக எளிமையாகச் சுலபமாக ஆர்வமூட்டும் வகையில் பயிற்றுவிக்கிறது பல்லூடகக் கல்வி. எனவே பல்லூடகத்தன்மையில் தயாரிக்கப்பட்டு ஆசிரியரின் துணையோடு நடைபெறும் மொழிக்கல்வி, மொழித்திறன்களை வேகமாக வளர்க்கஉதவும். பாடப்பொருளையும் எளிதில் கற்றுவிட முடியும்.

           எனவே தமிழில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள கணினிவழிக் கல்வி முறைகள் அனைத்தையும் இணையதளங்களில் உள்ள தமிழ் கற்பித்தல் முறைகளையும் மதிப்பீடு செய்யவேண்டும்.அதனடிப்படையில் நிறைகுறைகளைக் கண்டறிந்து குறைகளைக் களைந்தால், பிற மொழியினருக்குத் தமிழ்க் கற்பித்தல் சிறப்பாகச் செய்யஇயலும்.

பல்லூடகம் வழி தமிழ்க் கற்றலும், கற்பித்தலும் 

     உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்றுவரை பல்வேறு முறைகளில் கற்பித்தலும் கற்றலும் நிகழ்ந்து வருகின்றன.

கல்வெட்டு, ஓலைச்சுவடிகளில் இருந்த தகவல், அச்சு இயந்திரக் கண்டு பிடிப்பிற்குப் பின்பு காகித ஊடகத்திற்கு வந்தது போன்று இன்று கணினிக் கண்டு பிடிப்பினால் மின்னணு வடிவில் வந்துள்ளது என்றும் இது காலத்திற்கேற்ற ஊடக மாற்றம் என்றும் கூறுவார் எல்.இராமமூர்த்தி. கணிப்பொறி மென்பொருள், பல்லூடகம் (Multimedia), இணையம் போன்ற தகவல்தொடர்புச் சாதனங்களின் கண்டுபிடிப்பு இன்று எல்லாத் துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருவது போன்று மொழிக்கல்வியிலும் இலக்கியக்கல்வியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. கற்பித்தல், கற்றலில் புதிய புதிய முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் பல கணிப்பொறி, பல்லூடகம்வழி அவர்கள் மொழியைக் கற்பிக்கவும் கற்கவும் பெரும் ஆர்வம்காட்டி வருகின்றன

           செம்மொழி என்ற உயர்வைப் பெற்றுவிட்ட தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியங்களையும் நவீனக் கணிப்பொறித் தொழில்நுட்பத்தின் வழிக் கற்பிப்பதும் கற்பதும் இன்று இன்றியமையாத தேவையாக மாறிவிட்டது. தமிழைக் கணிப்பொறி வழிக் கற்பதற்கு அரசும் தனியார் நிறுவனங்களும் தமிழில் அறிமுக நூல்கள், இதழ்கள், கட்டுரைகள், குறுந்தட்டுகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளன.

இணையமும் தமிழும்

     உலகையே ஒரே கைக்குள் மாற்றிவிட்ட ஆற்றல்வாய்ந்த தொழில் நுட்பம்தான் இணையம். இணையத்தில் செய்திகள் படிக்கலாம், படங்கள் பார்க்கலாம், பாடல்கள் கேட்கலாம், அரட்டை அடிக்கலாம், பொழுது போக்கலாம், அறிவைப் பெருக்கலாம். உலகம் முழுவதிலும் உள்ள அனைத்துக் கணினிகளையும் ஒரே மின்னணு வலையில் சங்கிலிப் பிணைப்பில் ஒன்றாக்கிச் செய்யப்பட்டதுதான் இணையம்.

இணையதளம்

           உலகில் முதல் இணையதளம் அர்பாநெட் ஆகும். தமிழில் முதல் இணையதளம் 1995- இல் தொடங்கப்பட்ட (Words home & Nation-Anthology of Singapore) வளையத்தில்தான் தமிழ் இணையம் வழக்கில் வந்தது.

தமிழ் இணைய மாநாடு

           தமிழ் இணைய மாநாடு 1997-இல் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்திலும், இரண்டாவது தேசிய மாநாடு 1999-இல் சென்னையிலும், மூன்றாவது 2000-இல் சிங்கப்பூரிலும், நான்காவது 2001-இல் மலேசியாயாவிலும், ஐந்தாவது கலிபோர்னியாவிலும் ஆறாவது அண்ணாப் பல்கலைக்கழகம், சென்னையிலும்  நடைபெற்றது.

இணையம் வழி தமிழ் கற்றலும் கற்பித்தலும்

           ஆசிரியரை மையமிட்டக் கல்வி மாணவரை மையமிட்டக் கல்வி என்ற இரண்டு முறைகளும் மாறி இணையத்தை மையமாக வைத்த கல்வி என்று பரவலாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இணையம்வழி தமிழ்படிக்கப் பல இணையதளங்கள் உள்ளன. குறிப்பிடத்தகுந்தது தமிழ் இணையப் பல்கலைக்கழகமாகும். 17-2-2001-இல் தொடங்கப்பட்டது. மூன்று முதன்மையான பணித்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 1.கல்வித்திட்டம் 2. மின்நூலகம் 3. கணித்தமிழ்ப்பணிகள். இங்கு பின்வரும் ஆறு நிலைகளில் கல்வி கற்பிக்கப்படுகிறது. 1.மழலைக்கல்வி 2.சான்றிதழ்க்கல்வி 3.பட்டையக்கல்வி 4.பட்டப்படிப்பு 5.பட்டமேற்படிப்பு ,6.ஆய்வு இவை தவிர பயணியர் தமிழ் சிறப்பு ஆய்வுத்திட்டங்களும் உள்ளன. இங்கு இணையம் வழித்தேர்வும் நடைபெறும். எந்த நாளிலும் எந்த நேரத்திலும் தேர்வு எழுதலாம். இணைய வழிப்பாடநூல் எழுதுவதும் தமிழ் இலக்கண இலக்கிய வடிவங்களைக் கற்பிப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஒலிப்படக்காட்சிவழி ஆக்கப்பட்டுள்ளன. தேவாரம் போன்ற பாடல்கள் ஓசை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மின்நூலகம்

           நூல்களைக் கணினியில் பாதுகாக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இதற்காகச் செயலாற்றி வருகிறது. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நிலையமும் இப்பணியை செய்து வருகிறது. தமிழகத்திலுள்ள கன்னிமாரா நூலகம், தேவநேயப்பாவாணர் நூலகம், தஞ்சைப் பல்கலைக்கழக நூலகம் இப்பணியை செய்து வருகின்றன. உலகில் அனைவரும் பயன்படுத்தத் தக்க விதத்தில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் செயலாற்றிவருகிறது. தொல்காப்பியம் முதல் இக்கால இலக்கியம் வரை ஏறக்குறைய 250-க்கும் மேற்பட்டநூல்கள் 100000 பக்கங்களுக்கு மேல் அமைந்துள்ளன. இலக்கண இலக்கியம், சமய இலக்கியம், சிற்றிலக்கியம், நீதிநூல்கள், சித்தர் இலக்கியம், 20ஆம் நூற்றாண்டு இலக்கியங்களான கவிதை, உரைநடை, புதுக்கவிதை போன்றவை இடம்பெற்றுள்ளன. ரோஜா முத்தையா செட்டியாரின் நினைவால் சிகாகோ பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இங்கு 100000 நூல்கள் உள்ளன. இணைய முகவரி w.w.w.lib.uchicago.edu/su/southasia/rmrl/html,[itir சென்னை நூலகம் 2006-இல் தொடங்கப்பட்டது. www.chennailibrary.com, விருபா டாட்காம் நூலகம் தமிழ் தொடர்பான ஏராளமான தகவல்கள் கிடைக்கும் நூலகம் டாட்நெட் இது ஈழத்து நூல்களையும் இதழ்களையும் வெளியிட்டு வருகிறது.

ஒருங்குறியீட்டு முறை

           கணினிகளுக்கிடையே தமிழ் எழுத்துக்களைப் படைப்பதில் எழுத்துச் சிக்கல் இருந்துவந்தது.  20-ஆம் நூற்றாண்டில் ஒருங்குறியீட்டு (Unicode) முறை வந்ததால் இச்சிக்கல் தீர்ந்தது. யூனிக்கோடு முறையில் டாம்,  டாப் என்ற இருவகை எழுத்துருக்களும் தமிழ் 99 விசைப்பலகையும் பயன்படுத்தப்பட்டது. இருந்தாலும் இடப் பிரச்சனையால் தமிழை முழுமையாக வெளியிட முடியவில்லை. 256 – எழுத்துக்குறிகளில் 128 குறியிடங்கள் ஆங்கிலத்திற்குக் கொடுக்கப்பட்டன. கணினி வல்லுநர்கள் 8 பிட் முறையை 16 பிட்டாக மாற்றினார்கள். 65536 குறியிடங்கள் கிடைத்தன. எல்லா மொழி எழுத்துக்களையும் பயன்படுத்த முடியும். முதல் மாநாட்டில் TSCII உருவாக்கப்பட்டது. இரண்டாவது மாநாட்டில்……TANSCII உருவாக்கப்பட்டது. இதில் தமிழுக்கு 128-160 இடங்கள் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து 16 பிட் வளர்ச்சியால் தமிழுக்கு 2944முதல் 3072 ஒதுக்கப்பட்டன.  அவற்றில் 12 உயிர், 18 மெய், குறியீடுகள், கிரந்த எழுத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

[தொடரும்]

******

கட்டுரையாசிரியர் பணிபுரிவது
தமிழ்த்துறை
கேரளப்பல்கலைக்கழகம்
காரியவட்டம்
திருவனந்தபுரம் 695 581

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *