வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் சடங்கு முறைகள்

0

-மோ. பவானி

முன்னுரை

     நாடோடிகளாகத் திரிந்த மானிடச் சமூகம் ஓரிடத்தில் நிலையாகத் தங்கித் தங்கள் குடிகளை அமா்த்திச் சமுதாய அமைப்பினை உருவாக்கிய காலகட்டங்களில் தனக்குத்தெரிந்த சடங்கு முறைகளைத் தோற்றுவித்தனா். மனிதர்கள் தம் வாழ்க்கையைக் குறிக்கோளுடை.யதாக்கி ஒற்றுமையுடனும் ஒழுங்குநெறியுடனும் வாழத் தலைப்பட்டபோது ஏற்படுத்திக்கொண்ட ஒரு சம்பிரதாயச் சாத்திரமே சடங்கு ஆகும். மனித வாழ்வில் இடம்பெறும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து மக்களால் கையாளப்படுமானால் அவையே சடங்குகள் எனப்படும். அத்தகைய சடங்கு முறைகளைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

சடங்கின் நோக்கம்

   மனித வாழ்வு சிறப்பாகவும், செழிப்பாகவும் தழைத்தோங்கச் செய்வது சடங்கின் முதன்மை நோக்கமாகக் கருதலாம். மகிழ்ச்சி, நம்பிக்கை, அமைதி, நோயின்மை, பீடைகள் நீங்கவும், சமுதாயம் ஒருமைப்பாட்டுடன் செயல்படவும், குடும்பஉறவுகள் வலுப்பெறவும் சடங்குகள் தேவையானதாகக் கருதப்படுகின்றன. மனிதன் நம்பிக்கையுடன் செயல்படவும் மனநிறைவு கொண்டு வாழவும்  சடங்குகள் தேவையாக அமைகின்றன.

சடங்கு நடத்தப்படுவதால் ஏற்படும் நன்மைகள்

     சமுதாயத்தில் சடங்குகள் நடத்தப்படுவதால் பல நன்மைகள் விளைகின்றன. சமுதாயத்தில் ஒருமைப்பாடு தழைத்தோங்குகிறது. உறவினா்களுக்கிடையே நல்லுறவு, கட்டுப்பாடுகள் போன்றவை நிலைபெறுகின்றன. நம்முன்னோர்களை நினைவுபடுத்திக்கொள்வதோடு, வழிவழியாக வந்த மரபுகளும், பண்பாடுகளும் பாதுகாக்கப்படுகின்றன.

     சமுதாயத்தில் சடங்கு நடத்தப்படுவதால் ஏற்படும் நன்மையினை அழகர் சடங்குகளின் மூலம் ஓர் இனத்திற்கும் மற்றோர் இனத்திற்கும் உள்ள வேறுபாட்டையும், அச்சடங்குகளைச் செய்கின்ற மக்களின் மனநிலைகளையும், அவர்கள் வாழும் இடங்களையும் அவர்களுடைய கல்வி, நாகரிகம், பண்பாடு, ஒழுக்கம், மதம் போன்றவற்றையும் அவர்களுடைய எதிர்காலச் சமுதாயம் எப்படி இருக்கும் என்பதையும் அறியமுடிகின்றது.

வாழ்வியல் சடங்குகள்

     மனிதவாழ்வில் இரண்டறக் கலந்துள்ள சடங்குகள் அவனின் வாழ்க்கைச் சூழல்களுக்கு தகுந்தபடி மாற்றம்பெறுகின்றன. சடங்குகளை மங்கலம், அமங்கலம் என இருவகையாகப் பகுத்துக் காண்பதும், பிறப்பு, காதுகுத்துதல், பூப்பு, திருமணம் முதலான சடங்குகள் மங்கலச் சடங்குகள் என்றும், இறப்புத் தொடா்பான சடங்குகள் அமங்கலச் சடங்குகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. கள்ளிக்காட்டுக் கிராமிய மக்களின் வாழ்வில் இடம்பெற்ற வாழ்வியல் சடங்குகளை வைரமுத்து தெளிவாக எடுத்துக்காட்டுகிறார்.

  1. பிறப்புச் சடங்குகள்
  2. காதுகுத்துச் சடங்குகள்
  3. திருமணச் சடங்குகள்
  4. இறப்புச் சடங்குகள்
  5. இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள்

எனும் ஐந்து நிலைகளில் வகைப்படுத்தியுள்ளார்.

பிறப்புச் சடங்குகள் 

     சமுதாயத்தில் வாழக்கூடிய மனித இனத்தின் மாபெரும் செல்வம் குழந்தைச் செல்வமாகும். மழலைச் செல்வம் இல்லையெனில் அவா் பெற்றிருந்த செல்வத்தால் யாதொரு பயனும் இல்லை. குடும்பத்தின் செல்வமாக விளங்கும் குழந்தைக்கு எவ்விதத் தீவினையும் நிகழாமல் இருப்பதற்காக மக்கள் மேற்கொள்ளும் சடங்கு முறையே பிறப்புச் சடங்குகள் எனலாம்.

     குழந்தை பிறப்பதற்கு அறிவியல் முறையான காரணம் கண்டறிய இயலாத பழங்குடியினா் அவற்றைக் காக்கச் சடங்குகளின் துணையை நாடினர். இச்சடங்குகள் மந்திரம், சமயம் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திச் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறாகத் தொடா்ந்து இச்சடங்கு முறைகள் இன்றளவும் மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. பிறந்த குழந்தைக்கு நலன்வேண்டிச் செய்யப்படும் சடங்குகள் பிறப்புச் சடங்குகள் என்று ஞானசேகர் விளக்கிக் காட்டுகிறார்.

     பிறந்த குழந்தை நலமுடன் வாழவேண்டும் என்ற நல்ல நோக்கத்தினாலேயே பிறப்புச் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. குழந்தைக்கு சடங்குகள் நடத்துவதன் நோக்கத்தினை நடேச சாஸ்திரி என்பவர் பின்வருமாறு எடுத்துக் காட்டுகின்றார்.

    குழந்தைச் செல்வத்தின் முக்கியத்துவத்தாலும் நன்மக்கள் போற்றும் இறையருளின் இன்றியமையாலும் பல்வேறு சடங்குகளைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

தேனைத்தொட்டு வைத்தல்

     பிறந்த குழந்தையின் நாக்கில் சீனியைக் கரைத்து அதை விரலால் தொட்டு வைப்பதற்கு தேனை வைத்தல் என்று பெயர்.

     பேயத்தேவரின் மகள் செல்லத்தாயிக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்குப் பேயத்தேவரும் அவர் மனைவி அழகம்மாளும் தேனைத்தொட்டு வைக்கும் காட்சியினைக் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்தின் வழியே காட்சிப்படுத்துகின்றார் வைரமுத்து.

     பிறந்த குழந்தைக்குச் தேனைத்தொட்டு வைப்பது என்பது, அந்த ஊர் வழக்கம். வசம்பின் நுனியில் எண்ணெய்தொட்டு குழந்தையின் வாயில் மூன்றுமுறை வைக்கும்போது ஓம்புத்தி போயி ஏம்புத்தி வரவேண்டும் என்று சொல்லிச் சொல்லி வைப்பது மரபு. எனத் தேனைத்தொட்டு வைக்கும் சடங்கு முறையினைக் கிராம மக்கள் பின்பற்றிய விதத்தினை எடுத்துரைக்கிறார். குடும்பத்தில் அனுபவம் வாய்ந்த நல்ல குணநலன்களை உடையவா்களின் பண்புநலன்கள் அக்குழந்தைக்கு அமைய வேண்டும் என்ற நோக்கில் இச்சடங்கு முறை அமைந்துள்ளமையை வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

காதுகுத்தும் சடங்கு

     காதுகுத்தும் சடங்கு கிராமமக்களின் தவிர்க்க இயலாத சடங்கு முறையாகும். குழந்தை பிறந்த சில மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகளிலோ காதுகுத்தும் சடங்கு நடைபெறும். குழந்தைப் பருவத்தில் காது குத்தவில்லை எனில் இறப்பதற்குள்ளாகவும், இல்லை இறந்த பின்பாவது காது குத்தியே அடக்கம் செய்யும் வழக்கம் இன்றளவும் மக்களிடையே நிலவி வருகின்றது.

     வைரமுத்து படைப்பில் இடம்பெறும் காது குத்தும் சடங்கு முறையினை,

  1. காது குத்துவதால் ஏற்படும் நன்மை
  2. தாய்மாமன் சீர் கொண்டு வருதல்
  3. காது குத்து நடைபெறும் முறை

என்ற நிலைகளில் வகைப்படுத்தியுள்ளார்.

     கள்ளிக்காட்டு கிராம மக்களின் வாழ்வில் காதுகுத்தும் சடங்கு மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்துள்ளமையைக் கருவாச்சி காவியம் எனும் புதினம் வழியாகப் படம்பிடித்துக் காட்டுகிறார். காது குத்தும் சடங்கில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினையும், மக்களின் மனநிலையினையும் வாழ்வியல் பின்புலங்களையும் இதன்மூலம் காட்டுகிறார்.

     காதுல ஓட்ட போட்டதும் சலசலன்னு இரத்தம் ஒழுகுதா இல்லையா? இரத்தம் ஒழுங்குமுறையா இருந்தா செத்த நேரத்துல ஒறையனும் அப்படி ஒறையலனா சக்தி இருக்கா இல்லையான்னு சோதிக்கிறதுதான் காது குத்தாம். இது ஒரு வைத்தியன்கணக்கு என்று காதுகுத்துச் சடங்குகள் நடைபெறுவதற்குரிய காரண காரியங்களை மேற்கண்ட கூற்று வழியே ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். மக்களின் நம்பிக்கை அடிப்படையிலும் மருத்துவ ரீதியான அடிப்படையிலும் இச்சடங்கு நன்மையை மட்டும் விளைவிக்கும் நிலையினை எடுத்துரைக்கிறார்.

திருமணச் சடங்கு

     கிராமப்புற மக்களின் வாழ்வியல் பின்புலங்களைத் தெளிவாக உணர்த்த வைரமுத்து ஒவ்வொரு சடங்கு முறையினையும் நுட்பமாகக் கவனித்துத் தம் படைப்பு வழியே பதிவு செய்துள்ளார். மனித வாழ்வின் திருப்புமுனைச் சடங்காகக் கருதப்படும் திருமணச் சடங்கின் மேன்மையையும் தேவையினையும் தெளிவுபடுத்தும் ஆண், பெண் இருவரும் இணைந்து வாழும் திருமண வாழ்வினை,

     ஓா் ஆணும் பெண்ணும் உறவுகொள்ளச் சடங்குகள் சம்பிரதாயங்களோடு சம்மதம் வாங்கிக் கொண்டால் ஊர் அதைக் கல்யாணம் என்கிறது என்று விளக்கம் தருகின்றார்.

     நாகரிகம் வளா்ச்சியடையாத பொழுதும் கிராமங்களில் திருமணச் சடங்குகள் இன்றளவும் சிதையாமல் பின்பற்றப்பட்டு வருவதைத் தம் படைப்பின் வழியே அடையாளப்படுத்துகின்றார். இதுவே வைரமுத்துவின் படைப்பில் காணலாகும் திருமணச் சடங்குகளாகுகின்றன.

  • மணமக்கள் திருமணம்
  • மார்க்கத் திருமணம்

எனும் இருநிலைகளில் வகைப்படுத்தி ஆராயலாம்.

இறப்புச் சடங்குகள் 

     இறப்பு என்பது மனித வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இறுதி நிகழ்வாகும். இறப்பில் சிலர் இயற்கையாகவும், சிலர் நோய்வாய்ப்பட்டும் இறப்பர். மனிதா்களின் வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்த்தும் நிகழ்வே இறப்பு எனலாம். வாழ்க்கையில் மனிதர்கள் தம்முடைய குடும்பத்தோடும், உறவினர்களோடும், சமுதாயத்தோடும் வாழ்ந்து வரும்போது  “இறப்பு” ஒரு மிகப்பெரிய மாறுதலை உண்டாக்குகிறது.

     இறப்பு மனித வாழ்வின் இறுதிநிலை என்றாலும், அதற்குப் பின்னர் மீண்டும் இவ்வுலகில் பிறக்கிறான் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் வாழும் மக்களிடையே பரவலாக நிலவிவருகின்றது. இதனாலயே மற்ற நிலைகளில் கடைப்பிடிக்கும் சடங்கு முறைகளைக் காட்டிலும் இறந்தவர்களுக்குச் செய்யும் ஈமச்சடங்குகள் மனித வாழ்வில் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன. இந்நிலை பழங்குடியினர் முதல் தமக்கென ஒரு நாகரிகத்தைக் கொண்டிருக்கும் பல்வேறு சாதிக் குழுவினர் வரை அனைவரிடமும் காணக்கூடியதாகும் என்று வாழ்வியல் களஞ்சியம் எடுத்துரைக்கிறது.

     வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் மனிதர்கள் இறந்துவிட்டால் அவர்களை அடக்கம்செய்யும் முறை இல்லாமல் காணப்பட்டது. இறந்தவர்களின் உடலைப் பறவைகளும், மிருகங்களும் சிதைத்து உணவாக உட்கொள்ளும் நிலையே இருந்தது. மனிதர்களின் நாகரிக வளர்ச்சியால் சமுதாயத்தில் இறந்த மனிதனை அடக்கம் செய்யும் வழக்கம் ஏற்படத் தொடங்கியது எனலாம். உலக மக்கள் இறந்தவர்களின் உடலினை அடக்கம்செய்யப் பல வழிமுறைகளைக் கையாண்டுள்ளனர்.

     பண்டை நாளில் திபெத் மக்களும், அமெரிக்க ஆஸ்திரேலிய மக்களும் பிணத்தைப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவாக விட்டுவிடுவர். மத்தியத்தரைக் கடற்கரைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் இறந்தவா்களைத் தங்கள் குகைகளில் புதைத்தார்கள். திபெத் மக்கள் மேற்கு ஆப்பிரிக்க ஆதிகுடிகள், பாலிவேசிய மக்கள் பிணத்தைக் கடலிலோ, ஆற்றிலோ எறிந்து இருக்கிறார்கள். அந்தமானியர், நாகர், அஸ்ஸாம்வாசிகள், தோண்டுகள் மக்கள் மரத்தின்மேல் பரண்கட்டிப் பிணத்தை அதன் மீது வைத்துவிடுவர். மேலும் சிந்துசமவெளி மக்கள் பிணத்தை உட்காரும் நிலையில் தாழிகளில் வைத்து அடக்கம் பண்ணி அடைத்தனர் என்று கலைக்களஞ்சியம் எடுத்துரைக்கிறது.

     கள்ளிக்காட்டு கிராம மக்களின் வாழ்வியல் இடம்பெறும் சிறப்புச் சடங்கின் நிலைப்பாட்டினை வைரமுத்து தன்னுடைய படைப்புகளில் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார். கிராம மக்களின் வாழ்வியலோடு கலந்துள்ள இறப்பு குறித்த நிகழ்வுகள் வழியே மக்களின் வாழ்வியல் பின்புலங்களையும் எடுத்துரைக்கின்றார். இதனை,

  1. இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள்
  2. இடுகாட்டில் நடத்தப்படும் சடங்குகள்

எனும் இரு நிலைகளில் வகைப்படுத்தி ஆராயலாம்.

இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள்

     உடலைவிட்டு உயிர்பிரிந்த பின் அவ்வுடலுக்குச் செய்யப்படும் சடங்குகள் இறந்தபின் நடத்தப்படும் சடங்குகள் எனலாம். வைரமுத்து தம் நாவல்களில் கிராமமக்களின் வாழ்வியலில் நடைபெறும் இறப்பு குறித்த நிகழ்வுகளையும், சடங்கு முறைகளையும் தெளிவுபட எடுத்துக்காட்டுகிறார்.

     பேயத்தேவரின் மனைவி அழகம்மாள் இறந்த செய்தியினை உறவினர்களுக்கும், பிற ஊர்களுக்கும் சொல்லச் சொல்லும் நிலையினைக் கள்ளிக்காட்டு இதிகாசம் என்னும் நாவல்வழியாகக் கவிஞர் எடுத்துரைக்கிறார். அப்போது தான் ஊர் ஊருக்கு எழவு சொல்லப் போய்க்கொண்டிருந்த மாதாரிக் கொத்தன் தொங்கித் துவண்டுவரும் பேயத்தேவரைக் கண்டு யப்பே! நான் என்னத்தச் சொல்லுவேன் ஆத்தா எழவு சொல்லவும் நான் உசுரோட இருக்கனே என்றான். அழுக்குத் துண்டை வாயில் வைத்து அடைத்துக்கொண்டு போடா….. போயி பொழுதோட சொல்றா என்றார். பேயத்தேவர். கண்ணீா்பேய் உடைந்த வார்த்தைகளால் எனும் பகுதியில் இறந்தவுடன் இறப்புச் செய்தியினைச் சொல்வதற்கு ஆள் அனுப்பும் நிலையினைக் கிராம மக்கள் கையாண்டுள்ளமைத் தெளிவாகக் காட்டுகிறார்.

     இறப்புச் செய்தியினைப் பிறருக்குத் தெரிவிக்க ஆண்களே சென்று வந்துள்ளனர். கிராமப்புறங்களில் இவ்வேலையினை வெட்டியான் என்னும் இனமக்களே செய்துவந்துள்ளனா் என்பதை வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் புதினம் வழியே புலப்படுத்தியுள்ளார்.

     ”யப்பே! வண்டி நாய்க்கரு செத்துப் போயிட்டாரப்பே”ன்னு எழவு சொல்லி நின்னான் நச்சர்வரம் வெட்டியான் என்று பேயத்தேவரின் உற்ற நண்பராக விளங்கும் வண்டி நாயக்கர் இறப்புச் செய்தியைப் பெறுவதன் வழிச் சுட்டிக்காட்டுகின்றார்.

முடிவுரை 

     மனிதர்களின் வாழ்வில் எந்தவொரு செயலாக இருந்தாலும் நன்கு நடைபெற வேண்டும் என்று கருதி முறையாகச் செய்யப்படுகின்ற செயல்பாடுகள் சடங்கு என்ற வடிவம் பெறுகின்றது எனலாம். தாயும், சேயும் எவ்வித நோய்நொடியும் தாக்காமல் இருக்கத் தீட்டுக் கழிக்கும் சடங்குகளும், காதுகுத்தும் சடங்குகளும் கிராம மக்களின் வாழ்வில் தவிர்க்க இயலாத சடங்கு முறைகளாகும். இன்றும் அவை நடைமுறையில் இருப்பதை வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்தின் மூலம் எடுத்துரைத்துள்ளதைக் காணமுடிகின்றது.

பார்வை நூல்கள்

  1. வைரமுத்து – கள்ளிக்காட்டு இதிகாசம்
  2. வாழ்வியல் களஞ்சியம்
  3. கள்ளிக் களஞ்சியம்

*****

கட்டுரையாளர்
முனைவா்பட்ட ஆய்வாளா்
பாரதியார் பல்கலைக்கழகம் – கோயம்புத்தூா்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *