Category: கவிப்பேழை

  • நந்தவனக் குயிலே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (15)

     

     

    நந்தவனக் குயிலே!

      (பாடல்)

    10294248_354612934692545_5491888087630846935_n

    நந்தவனக் குயிலே! சின்னப் பனித்துளியே!
    சின்னப் பனித்துளியில் சிலிர்க்கும் சித்திரப் புல்நுனியே!
    புல்லின் நுனிமுனையில் புன்னகைக்கும் ஒளியே!
    ஒளிமடி தேடும் ஒய்யார நிழலே!

    நிழல்தவழ்ந்துவரும் அந்த நீலநதிக்கரையே
    கரைமணல் பஞ்சில் காலைத் தழுவும் நிலவே!
    நிலவு நெகிழ்ந்திடும் நேசம் பொங்கிவரும் விழியே
    கொஞ்சம் விழியசைந்தால் நெஞ்சில் கொஞ்சும் நந்தவனமே!

    வானம் கொடுத்தவரம் வாணி வீணை தெறித்த ஸ்வரம்
    மோனக் குகையினிலே ஒருநாள் முளைத்த ஒளிமயம்
    தேனும் திணறும்விழி இன்பத் தென்றல் மயங்கும் மொழி
    ஊனும் உருகுதம்மா! இந்த உயிருக்கென்ன வழி?

    சின்னச்சின்ன விழிகள் பேசும் என்ன என்ன மொழிகள்!
    மொழியின் நடுவே ஏனோ மூடும் மர்மத் திரைகள்
    திரைநடுவினிலே வந்து திறக்கும் உதயங்கள்
    உதயக் கரங்களில் வந்து உருகும் இதயங்கள்

    பஞ்சுச் சிறகாக உன்னை நெஞ்சில் அணைத்திடவா?
    பட்டு மலரிதழில் உயிரைத் தொட்டு முத்தம் தரவா?
    கண்ணை இமைத்தாலும் கலங்கும் வண்ணத் திருக்குளமே
    ஓரத்தில் நின்றபடி உயிரால் வருடி மகிழவா?

    ஒன்றும் புரியவில்லை எந்தன் உள்ளம் உள்ளத்தில் இல்லை
    உள்ள உயிரொன்று உந்தன் உள்ளங் கையில் முல்லை
    என்று தொடங்கியதோ? நடுவில் ஏன் மறைந்ததுவோ?
    என்றும் தொடர்ந்திடுமோ? என்னென்ன செய்திடுமோ?
     

    Share
  • அதுவும் இதுவும்…

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (14)

     

     

    அதுவும் இதுவும்…

    {கேட்டு மகிழ இங்கே சொடுக்கவும்}

     

    2f525004326e8d13fa96ef6e2140a672-d68s40h
    அதுவோர் அழகிய சுனை
    இது ஏதோ ஒன்றின் முனை

    அது
    மடுவாய் இருக்கலாம்
    தோற்றப் பிழையாய் இருக்கலாம்
    சுனையாகவே கூட இருக்கலாம்

    இது
    மலையாய் இருக்கலாம், அதிலொரு
    மலராய் இருக்கலாம், ஏதோ ஒன்றின்
    முனையாகவே கூட இருக்கலாம்

    அதற்கும் இதற்கும் முடிச்சுப் போட்டது
    அதுவோ இதுவோ இல்லை
    யாரோ எதுவோ தெரியவில்லை

    ஓர்
    அந்திச் சிவப்பின் மந்திர மயக்கம்போல்
    அதீதமான அபாயத்தின் விளிம்புபோல்
    அபரிமிதமான லஹரியில்
    தன்வயமின்றித் தள்ளாடின
    இயல்பின் உச்சத்தில்
    எதுதான் சந்நிதியில்லை?

    மயக்கத்தில், அது
    மயக்கமென்று புரியாததால்
    தெளிவின் எதிர்ப்பதமே
    தெளிவென்று மார்தட்டும்.

    உலகமே தொலைந்துபோன இந்த
    உன்மத்தத்தில்
    ஊரேது? உறவேது?
    உயிர்தான் ஏது?

    எதற்கும் அப்பாற்பட்டதாய்
    அதுவும் இதுவும் எண்ணிக்கொண்டிருக்க
    ஓரத்தில் சாய்ந்தபடி
    ஒருவழிப்போக்கன் சொன்னான் :

    ’’அது சுனையல்ல
    ஆனந்தக் கடலின் முனை

    இது முனையல்ல
    அடங்காத கண்ணீரின் சுனை”
     

    Share
  • போய்விடாதே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (13)

     

    போய்விடாதே!

     {கேட்டு மகிழ சொடுக்குங்கள்}

    birds-cloud-girl-pretty-running-Favim.com-116014_large

    அம்மாடி!
    இனிமேலும் இந்த
    பூமியை விட்டுப் பறப்பதற்கு
    உந்தித் தவிக்க வேண்டாம்.

    கால்கள் பிசகுபோல் காணப்பட்டு
    வார்த்தை விழாத சந்தங்கள்போல்
    இறக்கைகளை விரித்துக்கொண்டு
    நாக்கு குழறிய பேச்சுபோல் புழுதி கிளப்பி நாணும்
    யத்தனத்தின் அருவருப்பு இத்தோடு தீர்ந்தது.

    இறகுகளைச் சிறகுகளாய் நம்பினேன்
    சொடுக்கி எடுத்த மீன்களின் செதில்கள்போல்
    உதிர்ந்து உதிர்ந்து அவை
    உயிரை உறுத்தின

    பறக்கவேண்டும் என்பது ஆசையல்ல
    பறக்க முடியாது என்னும் பொய்யைத்
    தாங்க முடியவில்லை
    சிறகுகளா பறப்பதற்குக் காரணம்?!

    பொருளைத் தாங்கி பொருளில் நின்று
    பொருளால் தொடப்படாமல் புன்னகைத்துக் கொள்ளும்
    அருளல்லவா வானம்!
    அதன் தயவல்லவா நான் பறப்பதும்
    பறக்காமல் மிதப்பதும்
    பூமியைப் புள்ளியாகப் பார்ப்பதும்
    காற்றின் இழைபிரித்துக் கானங்கள் பாடுவதும்!

    நிறைவின் உச்சத்தில்
    நீந்தாமல் நீந்தி நிலவுகின்றேன்
    எங்கிருந்தாலும் வானந்தானே என்னும்
    ஏமாற்று வேலைகள் நடக்காது
    நிலத்தில் ஏது நீலம்? நிர்மலம்?
    நீளும் விரிவு? நிம்மதி?

    ‘’ஓ! அப்படியென்றால் நானெதற்கு?’’
    என்று
    புன்னகைத்தபடி புன்னகை போலவே
    போய்விடாதே

    வானம் போதுமென்று
    வாய்விட்டுச் சொல்லிவிடுமா
    வானம்பாடி?

    எல்லாம் அடைந்துவிடலாம்
    எண்ணங்கள் நின்றுவிடலாம்
    ஏக்கங்கள் தொடரத்தானே செய்யும்?

    நீ
    வந்துசென்ற பின்னே அங்கே
    குந்தியிருக்கும் வாசத்தைப் போல
    என்
    பல்லவியைத் தொடர்ந்து
    பாதை வளைவில்
    எட்டிப் பார்க்கும் சரணத்தைப் போல….

     

    Share
  • காணவில்லை

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (12)

    காணவில்லை

    (கேட்டு மகிழ சொடுக்குங்கள் மேலே)

     

    images (2)
    சிட்டுக் குருவிகளைக் காணவில்லை என்று
    விசனத்தோடிருந்தார்கள்
    நான்மட்டும்
    கைகளை மடக்கிக் கழுத்தைப் பொருத்தி
    அண்ணாந்தபடி என்னுள்
    மல்லாந்திருந்ததைக் கண்டு
    நேயமற்றவன் என்று
    நெருங்கி விலகினார்கள்

    எப்படிச் சொல்வது…?

    ஒருநாள்
    எதையோ திறக்கப்போய்
    இதயம் திறந்துகொண்டபோது
    கூடமெங்கும் சிட்டுக் குருவிகளின்
    குதூகலம்.

    ஒரேபாட்டு, தன்னைத் தானே
    ஓயாமல் பாடிக்கொள்வதைப் போல
    எல்லாக் குருவிகளும்
    ஒரேமாதிரியாய்த்தான் இருக்கின்றன.

    எத்தனை இருக்கும்?
    எப்படித் தெரியும்??
    எழுத்துக் கூட்டியா பார்ப்பார்கள் மழலையை?

    ஒருவேளை
    மூச்சுவிடாமல் இங்குமங்கும் பறந்தபடி
    என்னவோ சொல்லிக்கொண்டே இருப்பதால்
    ஒன்றுதான் நூற்றுக்கணக்காய்த் தெரிகிறதா?

    இருக்கட்டும்
    இவைகளின்….இல்லை…இதன் தயவில்தான்
    இதயம் தட்டுப்பட்டது.
    இரவுபகலை அறவே காணோம்
    சிட்டுக் குருவிகளின் கீச்சுக்கீச்சே
    இதயத் துடிப்பாகிவிட்டது

    கணநேரம் அந்தக் கீச்சுக்கீச்சு நின்றால்
    அதே கூடத்தில் துளி இறகாய்
    நானே
    விழுந்திருக்கும் வினோதம் கண்டு
    மீண்டும் துவங்கும் கீச்சுக்கீச்சால்
    மீளவா போகிறது உயிர்?

     

    Share
  • சிட்டுக்குருவிக் கூட்டமே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (11)

     

    சிட்டுக்குருவிக் கூட்டமே!

    (பாடல்)

    south-indian-women-paintings-wallpaper

    சிட்டுக்குருவிக் கூட்டமே!

    சில்லுவண்டுச் சீட்டியே!

    சொட்டுச் சொட்டா எறங்கிவந்து தோளெத்தொட்டு மூச்சுப்பட்டு

    மொகவாயெ ஏந்தி என்ன

    முழுக்க முழுக்க மூழ்கடிக்கும் பரவசமே!

     

    பரவசமே! ஈசல்

    பரபரப்பே!

    படபடக்குற கண்ணுக்குள்ளெ பளபளக்குற மின்னலிலே

    கெறங்கிப்போன மனசக்கிள்ளிக்

    கிலுகிலுப்பை ஆட்டிக்கிட்டுச்

    சிரிப்பவளே சிரிப்பவளே சிரிப்பவளே

     

    மனசெப் பந்தாக்கி மதில்மேலே எறியாதே! அது

    மருதாணிக் கைக்குள்ளெ மறுபடியும் சேரும்வரெ

    மாருத்துடிக்க வெக்காதே!

    கனவெயும் நெனவெயும் கலக்கிப்போட்டுக் கொழப்பாதே!

    காலத்தெ நிறுத்திவச்சுக் காவடிச் சிந்து பாடாதே!

     

    உள்ளங்கையி ரேகையே! என்

    உசுரெக் குலுக்கும் ராகமே!

    மெள்ளவுள்ளெ வந்திடாமெ மினுக்கிக்கிட்டு மேடையேறி

    நீட்டிப் படுத்துகிட்டு

    கொலுசுக் காலு கிணுகிணுங்கும் ஒய்யாரியே!

     

    ஒய்யாரியே! அட என்

    உல்லாசமே!

    ஒண்ணும் மிஞ்சாமெ ஊரெவாரிச் சுருட்டிக்கிட்டு

    ஒண்ணுமே தெரியாமெ

    கண்ணக்கொட்டி எதிரெ நிக்குற கைவிலங்கே!

     

    வெள்ளத்துக்கே திடுதிப்புன்னு தாகம்வந்து சேருமா?

    விறுவிறுன்னு வீதியேறி வீட்டுக்கதவத் தட்டித்தட்டி

    ஏக்கத்தோடு நிக்குமா!

    கொள்ளைக் கூட்டம்நம்மெக் கும்பிடுபோட்டுப் பாக்குமா?

    கொடுக்க வந்ததெய்வம் பழெயகடனக் கேக்குமா?

     

    ஆலவூஞ்சல் ஆட்டமே! அட என்

    அந்தரங்கத் தோட்டமே!

    காலு தாளம் போடும்போது ககனம் கரகம் ஆடுதடி

    காத்துக்குள்ளே மூச்சாகி மூச்சுக்குள்ளே உசுராகி

     

    உசுருக்குள்ளே சிரிப்பவளே! என்னெ

    உருக்கி உருக்கி வளர்ப்பவளே!

    வருசம்மாசம் வாரமெல்லாம்

    வாசலோடு கோலமாச்சு

    வந்துசேர்ந்த ஒருகணந்தான்

    பூசணிப்பூ சிரிப்பாச்சு!

     

     

     

    Share
  • காதல் தலைநகரம்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (10)

    காதல் தலைநகரம்

     {கேட்டு மகிழ}

    10492257_262440010611850_2207399982510381694_n

    திருவரங்கம்

    பேதைமை செய்யும் பெரியவாகிய கண்களின்

    காதல் தலைநகரம்

     

    உண்ணும்போது மிடறு விழுங்கிக்கொள்ள

    தண்ணீர் கொஞ்சம் அருந்திக்கொள்வதுபோல்

    சாவகாசமாய், சற்றே நின்றது ரயில்

    அது

    அடுத்த கவளத்தை அள்ளிப் போட்டுக்கொள்ளுமுன்

    பதறி ஏறினர் முதிய தம்பதியர்

     

    மதர்ப்போடு நகர்கிறது ரயில், ஒரு

    மகாராணியின் பல்லக்கைப்போல

     

    நடைமேடையெங்கும்

    கறுத்த பெண்கள் கூவிச் செல்கிறார்கள்

    அவர்கள் கைகளில்

    நேற்றிரவு எதையும் பொருட்படுத்தாமல்

    நீ அலையாய்ச் சிரித்த சிரிப்புகள்

    மல்லிகைச் சரங்களாய்….

     

     

     

     

     

    Share
  • நான் பாடும் முன்னே

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (9)

     

    நான் பாடும் முன்னே

    (பாடல்)

     

    images
    நான் பாடும் முன்னே நீ பறவையாகிறாய்
    நான் தேடும் போதோ தொடு வானமாகிறாய்
    நான் வாடும்போதோ கன்னம் வருடும் தென்றலாகிறாய்
    இமை மூடும்போதோ உற்றுப்பார்க்கும் கண்களாகிறாய்

    நீ பாதையா நான் பயணமா
    நான் பயணமா நீ மலர்களா
    நீ மலர்களா நான் பரிதியா
    நான் பரிதியா நீ வானமா

    உயரே உயரே என்னை ஏற்றி உயரச் செல்லும் பெண்ணே
    உயிரின் நிலைமை முழுதும் மாற்றும் உலகம் காணாத கண்ணே
    மண்ணா விண்ணா சொல்லேன் கண்ணா (பாடும் முன்னே)

    இரு கண்களில் பல கனவுகள்
    பல கனவினில் சில காலைகள்
    சில காலையில் சுப வேளைகள்
    சுப வேளையில் வரும் பாடல்கள்

    பாடல் நடுவே பல்லவி மறந்து சரணம் தேடும் போது
    பனிச்சதங்கையில் பாரிஜாதங்கள் காதில் கேட்காது
    காதில் விழுந்தது போலே உன்முன் (பாடும் முன்னே)

     

    Share
  • தாலாட்டும் அன்பினிலே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (8)

     

    தாலாட்டும் அன்பினிலே

    (கேட்டு மகிழ)

    woman-poster-GO37

    தாலாட்டும் அன்பினிலே, நின்று
    தள்ளாடும் பூங்கொடியே! தென்றல்
    காலாட்டும் கீற்றினிலே, நீ
    கள்ளூறும் நிலவல்லவலோ!

    சேலாடும் உன் விழியில், நின்று
    நூலாடும் என்னுயிரே! என்னைத்
    தோளோடு நீ அணைத்தால், நான்
    தொல்லைக்குத் தொடுவானே!

    நானென்ன சொல்வேனம்மா? மெளன
    நாதங்கள் பொல்லாதம்மா! நீ
    தேனென்றபின் எனதே என்றபின், இன்னும்
    நீங்காத திரையென்னவோ? மனம்
    நில்லாமல் வலை பின்னவோ?

    தேனூறும் பூவிருக்க, மணம்
    திசையெங்கும் பாய்விரிக்க, இங்கு
    நானோடு நான் துன்பம் தானோடு தான், இதில்
    நாளென்ன பொழுதென்னவோ? என்று
    நான்மட்டும் வலைபின்னவோ?

    பேசாமல் வந்துவிடு! மறு
    பேச்சின்றித் தந்துவிடு! என்னை
    நானாக வாழவிடு, இல்லை
    நீயாக மாற்றிவிடு

     

    படத்திற்கு நன்றி

     

    Share
  • எப்படி?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (7)

     

    எப்படி?

    {கேட்டு மகிழ} 

    images (1)

     

    எப்படி வந்தாய் உள்ளே?

    எல்லா வாசலும் பூட்டிக் கிடக்க

    சன்னல்களெல்லாம் சாத்தியிருக்க

    நெஞ்சக் குழியில் சுவாசம் நிறுத்தி

    இதயத் துடிப்பையும் நிலைக்கவைத்து

    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்தேன்

     

    எப்படி வந்தாய் உள்ளே?

    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்ததே

    போதுமென்று புன்னகைக்கிறாயா?

    கன்னம் மேவும் மின்னலினாலே

    கன்னம் வைத்துக் கண்சிமிட்டுகிறாயா?

     

    எப்படி? ம்…எப்படி?

    சுரங்கப் பாதை குடைந்து, கவிதையின்

    சுருதி ஊற்றில் கலந்துகொண்டு, ஒரு

    சொல்லின் நிழலில் ஒளிந்து, அந்தரங்க

    முற்றத்தில் முத்தாய் உதிர்ந்தாயா?

     

    எப்படி? வேறெப்படி? ம்..?

    காளியிடம் உனக்குப் பழக்கமுண்டா? அவள்

    காலைப் பிடித்து சாதித்தாயா?

    மாயக் காரியை மயக்கிவிட்டாயா?

    மண்குடிசைக்குள் மாளிகை விளக்காய்..

     

    எப்படி? எப்படித்தான் சொல்லேன்?

    ஊஹூம்…

    நீ எதற்குச் சொல்லப் போகிறாய்?

    சாவகாசமாக அமர்ந்து

    சாகடித்த கதைகளை வரிவரியாய்

    எங்கேனும் சொல்லுமா எந்தப் புலியேனும்?

    ஓ!

    முற்றும் என்னை முடித்துவிட்டு

    முகத்தில் அதென்ன கோணல்?

    ஆ!

    வந்திருக்கிறார்களாம்!

    வரவேற்கவில்லையாமாம்!!

     

    அழைத்தோ அழைக்காமலோ

    வாசலில் தயங்கி நிற்போரைத்தான்

    வரவேற்பார்கள் பார்த்திருக்கிறோம்

    அத்துமீறி வந்தவர்களுக்கு

    ஆரத்தி கேட்கிறதா?

    தீர்த்துக்கட்ட வந்தவர்களுக்கு

    திவ்யப் பிரபந்தமா?!

     

    நீதியைக் காட்டிலும் அநீதியின் குரல்தான்

    நெஞ்சைப் பிசைகிறது…

     

    சரி சரி

    அந்த அறையில்

    மேசையில் இருக்கும் என்

    மூக்குக் கண்ணாடியைக் கொண்டுவா

     

     

    Share
  • கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (6)

     

    கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே
    (பாடல்)

    images (1)
    கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே
    நெஞ்சைத் தொட்டுக் கிள்ளாதே
    கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கிறேன் சற்றும் விலகிச் செல்லாதே! இந்த
    பிஞ்சு நெஞ்சை இன்னமும் நீ கலங்க விடாதே!

    அஞ்சுப் பத்துவிரல்கள் எந்தன் கன்னத்தைத் தாங்க
    அருகில், மிக அருகில் என்னுயிர் ஏங்க
    நெஞ்சில் உந்தன் சுவாசம் படும் நெற்றிப் பொட்டின் வாசம் வரும்
    தஞ்சமென்று வெள்ளம்வந்து நாணலைக் கெஞ்சும், இந்தத்
    தருணத்தில் தமிழும் நிலவும் தள்ளாடி மயங்கும் (கொஞ்சி)

    சந்திக்கும் போது காலம் மணலாய்க் கரையும்
    சந்திக்க ஏங்கும்போது மலையாய் கனக்கும்
    சந்திப்பும் தேவையில்லை பிரிவுக்கும் வாய்ப்புமில்லை
    இந்த உயிர் அந்த உயிர் என்பதில்லையே, இந்த
    சொந்தம் எந்த ஜென்மபந்தம் தெரியவில்லையே
    தத்தைக்கிளி கொத்திச் சிவந்து கனிந்த பழங்கள்போல், உன்
    பட்டு இதழ் தொட்டுவரும் பவழ வார்த்தைகள்!
    கள்ளெடுத்த மொழியோ அன்பின் வழியோ உந்தன்
    காதல் மொழி?
    முள்ளெடுத்த முனையில்நின்று தவம்புரிவது எந்தன் விதி (கொஞ்சி)

    நாணத்துக்கும் வெட்கத்துக்கும் விடுதலை நாளா?
    வண்ணத்துக்கும் ராகத்துக்கும் திருமண நாளா?
    வானத்துக்கு என்னவந்தது தேனில் விழுந்ததா? என்
    வார்த்தையில் அமிழ்தம்நுழைந்து மயங்கித் துவண்டதா?
    காலத்துக்கும் இருக்கும் இந்த நெருக்கம் என்று
    கவிதை சொல்ல
    கண்விளிம்பில் மட்டும் ஒரு
    கண்ணீர்த்துளி தயங்கித் ததும்ப (கொஞ்சி)

     

     

    Share
  • காதலே நான்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (5)

     

    காதலே நான்

                                                                                                                    {கேட்டு மகிழ}

    spells-for-love

    ஒய்யாரியே! உட்கார்!

    ஓரக்கிளையின் லாகவம் போலே.

     

    உன்னிடம் கொஞ்சம்

    சொல்லித்தான் ஆகவேண்டும்

    கொஞ்சமேனும்…

     

    நெஞ்சு முழுக்கக் காதலோடுதான், இந்தப்

    பஞ்ச பூதங்கள்

    கும்மி அடித்தபடி, இந்தக்

    குருட்டு உலகில், என்னை

    இறக்கி விட்டன.

     

    நாலு வயதிலேயே

    வாலிபனாய்த்தான் உணர்ந்தேன்

    எல்லாப் பெண்களுமே இளையவர்களாய்

    எனக்காகவே பிறந்தவர்களாகத்தான்

    தெரிந்தார்கள்.

     

    தொடவே முடியாமல்

    விடவே முடியாமல்

    தொடரும் பயணம்.

     

    இன்றைக்கு என்னத்தை

    இப்படி வியந்து பார்க்கிறாய்?

     

    இந்த நானூறு வயதிலும்

    இம்மியும் மாறவில்லை நான்.

     

    எனக்குப்

    பெண்கள் வேண்டும்

    அதைவிடவும் அவர்களுடைய

    கண்கள் வேண்டும்

    கண்களையே நினைவுபடுத்தும்

    மலர்கள் வேண்டும்

    மலர்களையே பரிகசிக்கும்

    மழலை வேண்டும்

    மழலையின் துவக்கமான

    மர்மம் வேண்டும்

    மர்மத்தைப் புகுந்து பார்க்கக்

    கவிதை வேண்டும்

    கவிதையைச் சிரஞ்சீவியாக்க

    கானம் வேண்டும்

    கானத்தில் தற்செயல் சந்திப்பாய்க்

    கடவுள் வேண்டும்

    கடவுளைக் கட்டித் தழுவக்

    காதல் வேண்டும்!!

     

    வேண்டுமளவு காதலுடன்தான்

    விளைந்திருக்கிறேனே!

    வேண்டுமளவு காதலென்ன

    காதலே வேண்டுமளவு

    காதலுடன்தானே, இங்கே

    காலெடுத்து வைத்திருக்கிறேன்!

     

    இன்னொன்றும் உனக்கு

    இப்போதே சொல்லிவிட வேண்டும்

     

    என்

    எல்லா உறவுகளுக்கும்

    பிரிவுகளுக்கும் பரிவுகளுக்கும்

    பதைப்புகளுக்கும் மதர்ப்புகளுக்கும்

    தெளிவுக்கும் குழப்பத்திற்கும்

    துளியாய் வரும் கண்ணீருக்கும்

     

    இந்தப்

    பொல்லாத காதல்தான் காரணம் என்றால்

    புரிந்துகொள்ள முடிகிறதா?

     

    காதல் உயிரென்றால்

    காமம்தான் உடம்பென்று

    வாதிட்டு என்னை

    வசக்க நினைத்தார்கள்

     

    நானும் இந்தப்

    பஞ்ச பூதங்களின் மேல், வழக்கு

    பதிவு செய்யலாமென்று

    பத்திரங்களைத் தயார் செய்தேன்..

     

    என்ன தவறு செய்ய இருந்தேன்

    பறத்தலைக் கால்கொடுத்துக் கெடுத்த

    பாழும் உலகம் எப்படி வாழ்க்கையைப்

    பந்தாடுகிறது பார்!

     

    இதோ கேள்!

    எனக்கு..

    காதலே வாகனம்

    காதலே வாசகம்

    காதலே வாழ்க்கை

     

    காதல்தான்,

    என்

    கண்ணெதிரே நானே இறந்து

    கனலில் எரிந்து,

    என்மேல்

    காதலுற்ற தேவதையின்

    கண்ணீர்த் துளிபட்டுச்

    சின்ன மலரயாய்ச்

    சிரிக்கும் மயானம்.

     

    சந்தனக் கரங்களுடன்

    சண்பகக் கண்களுடன்

    வந்தென் மார்பில் சுவாசித்தபடி

     

    இந்த தரிசனத்தைத்

    தந்ததே

    நீதான் என்பதை

    நினைத்துப் பார்ப்பாயா?

     

    இல்லை,

    எப்போதும்போல் காத்திருப்பாயா

    இன்னொரு கவிதைக்காக?

    இன்னமும் பெறாத முத்தத்திற்காக?

     

    Share
  • இங்கே எப்படி நீ?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக – (4)

     இங்கே எப்படி நீ

                                                                                                                      ( கேட்டு மகிழ)

     

     

     

    இடிந்து கிடக்கிறது கோயில்download

    இறைவன் எழுந்து இறங்கிச் சென்று எத்தனையோ நாட்களாயின

     

    கடைசித் தருணத்து நிலைகுத்திய கண்கள் போலே

    காரை பெயர்ந்து, ஒரு

    கைதட்டலில் உதிர்வதற்காய்க் காத்திருக்கும் செங்கல்கள்

    அவற்றின் இடுக்கிலும் எப்படியோ கண்விழித்து

    அசையாமல் நிற்கிறது ஆலஞ்செடி

    பொருத்தமற்ற இடத்தில்

    பூவும் அருவருப்பு

     

    இது மெளனமல்ல

    இது வானத்தின் அடிவயிற்றையும் கலக்கும்

    வாழ்வில்லாத நிசப்தம்

     

    அது சந்நிதியல்ல

    அது கடவுள் காலி செய்துவிட்ட,

    ஒரு

    மாறுதலையாவது தரும்

    மரணமும் ஸ்தம்பித்துவிட்ட அவலம்

    ஆம்

    சிதைவுகளில்தான் அவலத்தின் குரூர வடிவங்கள்

    சித்திரிக்கப்படுகின்றன..

     

    அழுகை நின்றாலும் விசும்பல் தொடர்வதுபோல்

    வெளவால்களின்

    நாற்றங்கள் மட்டும் தொங்கிக்கொண்டிருக்கின்றன

    நாராசத்தின் மாறாத பதிவுபோல்.

    சுவர்களெல்லாம் புற்றாகவும் புதர்களாகவும்

    சுருதிமாறிப் பேதலிக்கின்றன

     

    இங்கே..இங்கே!!

    எப்படி நீ? எதற்கு?

    சிதையில் விழுந்த மொட்டின் முகையவிழ்க்கச்

    சித்திர நிலவு சிங்காரித்துக்கொண்டு வந்ததுபோல்

    என்னத்தைத் துளிர்விக்க இங்கே போய்

    எழுந்தருளியிருக்கிறாய்?.

     

    சொச்சமாய் இன்னும்

    ஒரு முற்றுப்புள்ளியில் ரேகைபோல்

    தொக்கிக் கிடக்கலாம் கோயில் வாசனை..

     

    உறைந்தும் காய்ந்தும் கரைந்தும் போனாலும்

    உயிரே விம்மி உதிர்ந்த கண்ணீரின்

    ஒற்றைத் துளியின் உணர்வு

    கதைசொல்லக் காத்திருக்கலாம்…

     

    சாம்பலிலிருந்து தலைசிலுப்பிக்கொண்டு எழுவதற்காய்

    ஒரேயொரு மழைத்துளியின் முத்தத்திற்காக

    ஊசிமுனை விதையொன்று தவத்தில் இருக்கலாம்…

     

    என்றெல்லாமா நம்பி வந்தாய்!

    இத்தனை வெகுளித்தனம் தேவதைக்குப் பொருந்துமா?

     

    இல்லை, ஒருவேளை

    இன்னும் பதறாமல் இருக்கும் பலிபீடத்தில்

    அங்கும் இங்குமாய் மல்லாந்திருக்கும்

    காதல் என்னும் பேதைமையைப்

    பார்வையால் திரட்டிப் படையலிட வந்தாயா?

    யாருக்கு?!

     

    முடிவில்லாத ஒரு முறிவு

    முயற்சியின்றிக் கிடக்கிறது

    எதனாலோ தூண்டப்பட்டு, அல்லது

    எதையோ தூண்டுவதற்கு

    முதலொன்று வந்து

    முன்னே நிற்கிறது

     

    வெற்றிகாண முடியாத வெறுமையும்

    தோல்வியறியாத முழுமையும்

    எதிரெதிரே நிற்கின்றன

    என்ன நடக்கும் என்பது

    எழுந்து இறங்கிச் சென்ற இறைவன்

    ஏறிவந்தாலாவது தெரியுமா?

    Share
  • என் இனிய கண்ணதாசன்

    இசைக்கவி ரமணன்

     
    குடித்துச் சிவந்த கண்கள்download

    குப்புறக் கிடக்கும் உயிரை

    எடுத்துப் புரட்டித் தெம்பை

    ஏற்றும் கவிதையும் பாட்டும்

    கொடுத்துச் சிவந்த நெஞ்சம்

    கோலமயில் ஒருத்தியோடு

    கூடியே கிடந்து கொஞ்சி

    பாலமாய்ப் பஞ்சு மார்பில்

    படுத்துச் சிவந்த மேனி

    பட்டே அறிந்த ஞானி

    பரவசம் பருகும் தேனி

    பாதியில் பறந்த பாவி!

     

    கால்கடுக்க நான் நடந்து கண்ணிருண்ட போதிலெலாம்

    கன்னங்களை வருடவரும் தென்றல்! இவன்

    காற்றினிலே தலையசைக்கும் செந்நெல்! வந்து

    தோலுடுத்த என்மனதைத் தொல்லைவந்து சூழும்போது

    தோள்கொடுக்க ஓடிவந்த தோழன்! சும்மா

    சொல்லிச் சொல்லி வானைத்தொட்ட தேவன்!

     

    யாரெடுத்த தேகமோ! யாரிடத்தில் மோகமோ!

    யார்வசத்தில் தீருமோ! தெரியுமா? இந்த

    யாத்திரையின் இறுதியென்ன புரியுமா? இதில்

    தேரெங்கோ காத்திருக்க தெய்வமெங்கோ பார்த்திருக்க

    ஓரிடத்தும் நின்றிடாத கிள்ளை! அவள்

    ஒற்றையிதழ் பற்றிவாழ்ந்த பிள்ளை!

     

    காதலினால் போதையினால் கண்ணனையே வீழ்த்தியவன்

    ராதையினைக் கதிகலங்க வைத்தவன்! நெஞ்சில்

    ராத்திரியின் ரகசியமாய்த் தைத்தவன்! இவன்

    போதையிலே சொன்னதிலே போதிமரம் சிலிர்த்ததடி!

    பெளர்ணமியே வீதியுலா வந்ததே! அவன்

    புன்னகையில் புயலும் அடங்கி நின்றதே!

    தத்தைமகள் மெத்தையிதழ் முத்தமிட்டு முத்தமிட்டுத்

    தத்துவங்கள் சொன்னவனைக் கண்டேன்! அந்தச்

    சாயலிலே சற்று வெறி கொண்டேன்! இனி

    சத்தமில்லை சட்டமில்லை மொத்தமாகக் காதலிலே

    முப்பொழுதும் குப்புறநான் வீழ்ந்தேன்! அந்த

    மோகத்திலே முத்தெடுத்து வாழ்ந்தேன்!

     

    சோதனையும் வேதனையும் சொக்கட்டான் ஆடும்போது

    சொர்க்கம்விட்டுச் சொல்லாமல் வந்தான்! எல்லாம்

    சொல்லிவிட்டுத் தான் திரும்பிச் சென்றான்! இவன்

    காதலுக்கு தேவன்! இன்பக் கன்னியர்க்கு ராஜன், நமது

    கவலைகளைத் தீர்க்கவந்த நேசன்! அந்தக்

    கண்ணனுக்கு மட்டுமிவன் தாசன்!

     

     

    Share
  • ஒரு பயணத்தின் முடிவில்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (3)

     

    ஒரு பயணத்தின் முடிவில்

    (கேட்டு மகிழ)

     Melbourne-Daily-Photo-Blog-Beach-Dune-Harbour-Mornington-Peninsula-Pier-Sunset-MorningtonPeninsula_20120708_109_10_11-2

     

    இன்னும் சில நொடிகள்..

    இறங்கித்தான் ஆகவேண்டும்

    நீ நான் என்பார், அந்த

    நிலை மாறத்தான் வேண்டும்

     

    கன்னற் பேச்சுக்கள்

    காதினிலே குறுகுறுப்பு

    சின்ன விளையாட்டு

    சிலநேரக் கண்பனிப்பு

     

    என்று பலவாறாய்

    இன்புற் றிருந்ததெல்லாம்

    இன்னும் சிலநொடிக்குள்

    எங்கோ பறந்துவிடும்!

     

    உறவாகி விடுமென்றா

    உதடோரம் புன்னகைத்தோம்?

    மனமாரக் கண்ணிமைத்தோம்?

    மறைவாக ஸ்வப்பனித்தோம்?

     

    எந்தக் கூட்டத்தில்

    எங்கெங்கே பிறந்தோமோ

    அந்தக் கூட்டந்தான்

    அங்கங்கே சேரவந்தோம்!

     

    சேர்வது வேறு, இணைந்து

    செல்வது வேறு, என்றிந்தப்

    பார்வைக்குத் தெரிந்திருந்தால்

    படாதபாடு படுவோமா?

     

    நிலைய மிருப்பது

    நீ நான் இறங்கத்தான்

    நினைவொன் றிருப்பது

    நீ நான் துடிக்கத்தான்

     

    இருப்புப் பாதை

    இணைந்திடத்தான் போகிறது

    விருப்பேது வெறுப்பேது

    விவரமற்ற சூனியத்தில்…

     

    படத்திற்கு நன்றி:

    http://mel365.com/melbourne-daily-photo-a-never-ending-pier-into-port-phillips-bay/

     

    Share
  • வரவேற்பு

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (2)

    வரவேற்பு 

    (கேட்டு மகிழ)

    வருக வருக திருமகளே1625554_556625784436420_4864087313791331849_n

    வாசல் திறந்துவைத்தேன்! உன்

    அருகில் இருக்கும் பேற்றை எண்ணி

    அழுக்கைத் துடைத்துவைத்தேன்!

    உருகும் என்றன் உயிரில் சிறிய

    தீபம் ஏற்றி வைத்தேன்! நீ

    உதிர்க்கும் சிரிப்பை ஏந்திக்கொள்ள

    உள்ளம் திறந்துவைத்தேன்!

     

    எதுவுனக்குப் பிடிக்குமென்று

    எனக்குத் தெரியவில்லை! உனக்கு

    எதையும் கொடுக்கும் தகுதி இந்த

    ஏழை எனக்கு இல்லை!

    இதயம் ஒன்றைப் பறிகொடுத்து

    எதிரில் நிற்கும்போது

    இன்னும் என்ன தருவதென்று

    இதுவும் புரியவில்லை!

     

    வசந்தகாலம் நூறு உன்றன்

    வாசலாகட்டும்!

    வழிமுழுவதும் தேவகானம்

    வளைந்து பொழியட்டும்!

    இசைந்து இசைந்து இறைவன் உனக்கு

    இன்பம் வழங்கட்டும்! அதை

    இங்கிருந்தோ எங்கிருந்தோ இந்த

    ஏழை பார்க்கட்டும்! அதிலென்

    வாழ்வு நிறையட்டும்!

     

    நான்

    வந்தகதை விதியினாலே

    வாழ்க்கை முடிந்தது! நீ

    வரும்வரைநான் வாழவேண்டும்

    வாழ்தல் புரிந்தது

    இந்த வாழ்வில் இருக்கும் கணங்கள்

    இனி உனக்காக! என்

    இன்பம் யாவும் வைத்து நின்றேன்

    இருவிழிக்காக!

     

    நானிருக்கும் வரையுனக்கு

    நலங்கள் பாடுவேன்!

    நாளும் இரவும் காவலாகக்

    கடவுளைத் தொழுவேன்!

    தேன்மயங்கும் உன் நினைவே

    நெஞ்சில் சூடுவேன்! அந்தத்

    தெருமுனையில் நிலவொளியில்

    தேய்ந்து கரைவேன்!


     

    Share