ஒரு பயணத்தின் முடிவில்
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (3)
ஒரு பயணத்தின் முடிவில்
(கேட்டு மகிழ)
இன்னும் சில நொடிகள்..
இறங்கித்தான் ஆகவேண்டும்
நீ நான் என்பார், அந்த
நிலை மாறத்தான் வேண்டும்
கன்னற் பேச்சுக்கள்
காதினிலே குறுகுறுப்பு
சின்ன விளையாட்டு
சிலநேரக் கண்பனிப்பு
என்று பலவாறாய்
இன்புற் றிருந்ததெல்லாம்
இன்னும் சிலநொடிக்குள்
எங்கோ பறந்துவிடும்!
உறவாகி விடுமென்றா
உதடோரம் புன்னகைத்தோம்?
மனமாரக் கண்ணிமைத்தோம்?
மறைவாக ஸ்வப்பனித்தோம்?
எந்தக் கூட்டத்தில்
எங்கெங்கே பிறந்தோமோ
அந்தக் கூட்டந்தான்
அங்கங்கே சேரவந்தோம்!
சேர்வது வேறு, இணைந்து
செல்வது வேறு, என்றிந்தப்
பார்வைக்குத் தெரிந்திருந்தால்
படாதபாடு படுவோமா?
நிலைய மிருப்பது
நீ நான் இறங்கத்தான்
நினைவொன் றிருப்பது
நீ நான் துடிக்கத்தான்
இருப்புப் பாதை
இணைந்திடத்தான் போகிறது
விருப்பேது வெறுப்பேது
விவரமற்ற சூனியத்தில்…
படத்திற்கு நன்றி:
http://mel365.com/melbourne-daily-photo-a-never-ending-pier-into-port-phillips-bay/
ரமணன் கவிதைகளில் நான் அடிக்கடிப் பல மேடைகளில் சொல்லும் கவிதை இது. அதுவும், “சேர்வது வேறு, இணைந்து செல்வது வேறு, என்றிந்தப் பார்வைக்குத் தெரிந்திருந்தால் படாதபாடு படுவோமா?” என்ற வரிகள் என்னை மிகவும் ஆட்கொண்ட வரிகள். ரமணனை மனமார வாழ்த்துகிறேன். கே.ரவி