அதுவும் இதுவும்…
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (14)
அதுவும் இதுவும்…
{கேட்டு மகிழ இங்கே சொடுக்கவும்}

அதுவோர் அழகிய சுனை
இது ஏதோ ஒன்றின் முனை
அது
மடுவாய் இருக்கலாம்
தோற்றப் பிழையாய் இருக்கலாம்
சுனையாகவே கூட இருக்கலாம்
இது
மலையாய் இருக்கலாம், அதிலொரு
மலராய் இருக்கலாம், ஏதோ ஒன்றின்
முனையாகவே கூட இருக்கலாம்
அதற்கும் இதற்கும் முடிச்சுப் போட்டது
அதுவோ இதுவோ இல்லை
யாரோ எதுவோ தெரியவில்லை
ஓர்
அந்திச் சிவப்பின் மந்திர மயக்கம்போல்
அதீதமான அபாயத்தின் விளிம்புபோல்
அபரிமிதமான லஹரியில்
தன்வயமின்றித் தள்ளாடின
இயல்பின் உச்சத்தில்
எதுதான் சந்நிதியில்லை?
மயக்கத்தில், அது
மயக்கமென்று புரியாததால்
தெளிவின் எதிர்ப்பதமே
தெளிவென்று மார்தட்டும்.
உலகமே தொலைந்துபோன இந்த
உன்மத்தத்தில்
ஊரேது? உறவேது?
உயிர்தான் ஏது?
எதற்கும் அப்பாற்பட்டதாய்
அதுவும் இதுவும் எண்ணிக்கொண்டிருக்க
ஓரத்தில் சாய்ந்தபடி
ஒருவழிப்போக்கன் சொன்னான் :
’’அது சுனையல்ல
ஆனந்தக் கடலின் முனை
இது முனையல்ல
அடங்காத கண்ணீரின் சுனை”
