இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக  (5)

 

காதலே நான்

                                                                                                                {கேட்டு மகிழ}

spells-for-love

ஒய்யாரியே! உட்கார்!

ஓரக்கிளையின் லாகவம் போலே.

 

உன்னிடம் கொஞ்சம்

சொல்லித்தான் ஆகவேண்டும்

கொஞ்சமேனும்…

 

நெஞ்சு முழுக்கக் காதலோடுதான், இந்தப்

பஞ்ச பூதங்கள்

கும்மி அடித்தபடி, இந்தக்

குருட்டு உலகில், என்னை

இறக்கி விட்டன.

 

நாலு வயதிலேயே

வாலிபனாய்த்தான் உணர்ந்தேன்

எல்லாப் பெண்களுமே இளையவர்களாய்

எனக்காகவே பிறந்தவர்களாகத்தான்

தெரிந்தார்கள்.

 

தொடவே முடியாமல்

விடவே முடியாமல்

தொடரும் பயணம்.

 

இன்றைக்கு என்னத்தை

இப்படி வியந்து பார்க்கிறாய்?

 

இந்த நானூறு வயதிலும்

இம்மியும் மாறவில்லை நான்.

 

எனக்குப்

பெண்கள் வேண்டும்

அதைவிடவும் அவர்களுடைய

கண்கள் வேண்டும்

கண்களையே நினைவுபடுத்தும்

மலர்கள் வேண்டும்

மலர்களையே பரிகசிக்கும்

மழலை வேண்டும்

மழலையின் துவக்கமான

மர்மம் வேண்டும்

மர்மத்தைப் புகுந்து பார்க்கக்

கவிதை வேண்டும்

கவிதையைச் சிரஞ்சீவியாக்க

கானம் வேண்டும்

கானத்தில் தற்செயல் சந்திப்பாய்க்

கடவுள் வேண்டும்

கடவுளைக் கட்டித் தழுவக்

காதல் வேண்டும்!!

 

வேண்டுமளவு காதலுடன்தான்

விளைந்திருக்கிறேனே!

வேண்டுமளவு காதலென்ன

காதலே வேண்டுமளவு

காதலுடன்தானே, இங்கே

காலெடுத்து வைத்திருக்கிறேன்!

 

இன்னொன்றும் உனக்கு

இப்போதே சொல்லிவிட வேண்டும்

 

என்

எல்லா உறவுகளுக்கும்

பிரிவுகளுக்கும் பரிவுகளுக்கும்

பதைப்புகளுக்கும் மதர்ப்புகளுக்கும்

தெளிவுக்கும் குழப்பத்திற்கும்

துளியாய் வரும் கண்ணீருக்கும்

 

இந்தப்

பொல்லாத காதல்தான் காரணம் என்றால்

புரிந்துகொள்ள முடிகிறதா?

 

காதல் உயிரென்றால்

காமம்தான் உடம்பென்று

வாதிட்டு என்னை

வசக்க நினைத்தார்கள்

 

நானும் இந்தப்

பஞ்ச பூதங்களின் மேல், வழக்கு

பதிவு செய்யலாமென்று

பத்திரங்களைத் தயார் செய்தேன்..

 

என்ன தவறு செய்ய இருந்தேன்

பறத்தலைக் கால்கொடுத்துக் கெடுத்த

பாழும் உலகம் எப்படி வாழ்க்கையைப்

பந்தாடுகிறது பார்!

 

இதோ கேள்!

எனக்கு..

காதலே வாகனம்

காதலே வாசகம்

காதலே வாழ்க்கை

 

காதல்தான்,

என்

கண்ணெதிரே நானே இறந்து

கனலில் எரிந்து,

என்மேல்

காதலுற்ற தேவதையின்

கண்ணீர்த் துளிபட்டுச்

சின்ன மலரயாய்ச்

சிரிக்கும் மயானம்.

 

சந்தனக் கரங்களுடன்

சண்பகக் கண்களுடன்

வந்தென் மார்பில் சுவாசித்தபடி

 

இந்த தரிசனத்தைத்

தந்ததே

நீதான் என்பதை

நினைத்துப் பார்ப்பாயா?

 

இல்லை,

எப்போதும்போல் காத்திருப்பாயா

இன்னொரு கவிதைக்காக?

இன்னமும் பெறாத முத்தத்திற்காக?

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காதலே நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *