இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக   (13)

 

போய்விடாதே!

 {கேட்டு மகிழ சொடுக்குங்கள்}

birds-cloud-girl-pretty-running-Favim.com-116014_large

அம்மாடி!
இனிமேலும் இந்த
பூமியை விட்டுப் பறப்பதற்கு
உந்தித் தவிக்க வேண்டாம்.

கால்கள் பிசகுபோல் காணப்பட்டு
வார்த்தை விழாத சந்தங்கள்போல்
இறக்கைகளை விரித்துக்கொண்டு
நாக்கு குழறிய பேச்சுபோல் புழுதி கிளப்பி நாணும்
யத்தனத்தின் அருவருப்பு இத்தோடு தீர்ந்தது.

இறகுகளைச் சிறகுகளாய் நம்பினேன்
சொடுக்கி எடுத்த மீன்களின் செதில்கள்போல்
உதிர்ந்து உதிர்ந்து அவை
உயிரை உறுத்தின

பறக்கவேண்டும் என்பது ஆசையல்ல
பறக்க முடியாது என்னும் பொய்யைத்
தாங்க முடியவில்லை
சிறகுகளா பறப்பதற்குக் காரணம்?!

பொருளைத் தாங்கி பொருளில் நின்று
பொருளால் தொடப்படாமல் புன்னகைத்துக் கொள்ளும்
அருளல்லவா வானம்!
அதன் தயவல்லவா நான் பறப்பதும்
பறக்காமல் மிதப்பதும்
பூமியைப் புள்ளியாகப் பார்ப்பதும்
காற்றின் இழைபிரித்துக் கானங்கள் பாடுவதும்!

நிறைவின் உச்சத்தில்
நீந்தாமல் நீந்தி நிலவுகின்றேன்
எங்கிருந்தாலும் வானந்தானே என்னும்
ஏமாற்று வேலைகள் நடக்காது
நிலத்தில் ஏது நீலம்? நிர்மலம்?
நீளும் விரிவு? நிம்மதி?

‘’ஓ! அப்படியென்றால் நானெதற்கு?’’
என்று
புன்னகைத்தபடி புன்னகை போலவே
போய்விடாதே

வானம் போதுமென்று
வாய்விட்டுச் சொல்லிவிடுமா
வானம்பாடி?

எல்லாம் அடைந்துவிடலாம்
எண்ணங்கள் நின்றுவிடலாம்
ஏக்கங்கள் தொடரத்தானே செய்யும்?

நீ
வந்துசென்ற பின்னே அங்கே
குந்தியிருக்கும் வாசத்தைப் போல
என்
பல்லவியைத் தொடர்ந்து
பாதை வளைவில்
எட்டிப் பார்க்கும் சரணத்தைப் போல….

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *