இசைக்கவி ரமணன்

 

உனக்கே உனக்காக   (15)

 

 

நந்தவனக் குயிலே!

  (பாடல்)

10294248_354612934692545_5491888087630846935_n

நந்தவனக் குயிலே! சின்னப் பனித்துளியே!
சின்னப் பனித்துளியில் சிலிர்க்கும் சித்திரப் புல்நுனியே!
புல்லின் நுனிமுனையில் புன்னகைக்கும் ஒளியே!
ஒளிமடி தேடும் ஒய்யார நிழலே!

நிழல்தவழ்ந்துவரும் அந்த நீலநதிக்கரையே
கரைமணல் பஞ்சில் காலைத் தழுவும் நிலவே!
நிலவு நெகிழ்ந்திடும் நேசம் பொங்கிவரும் விழியே
கொஞ்சம் விழியசைந்தால் நெஞ்சில் கொஞ்சும் நந்தவனமே!

வானம் கொடுத்தவரம் வாணி வீணை தெறித்த ஸ்வரம்
மோனக் குகையினிலே ஒருநாள் முளைத்த ஒளிமயம்
தேனும் திணறும்விழி இன்பத் தென்றல் மயங்கும் மொழி
ஊனும் உருகுதம்மா! இந்த உயிருக்கென்ன வழி?

சின்னச்சின்ன விழிகள் பேசும் என்ன என்ன மொழிகள்!
மொழியின் நடுவே ஏனோ மூடும் மர்மத் திரைகள்
திரைநடுவினிலே வந்து திறக்கும் உதயங்கள்
உதயக் கரங்களில் வந்து உருகும் இதயங்கள்

பஞ்சுச் சிறகாக உன்னை நெஞ்சில் அணைத்திடவா?
பட்டு மலரிதழில் உயிரைத் தொட்டு முத்தம் தரவா?
கண்ணை இமைத்தாலும் கலங்கும் வண்ணத் திருக்குளமே
ஓரத்தில் நின்றபடி உயிரால் வருடி மகிழவா?

ஒன்றும் புரியவில்லை எந்தன் உள்ளம் உள்ளத்தில் இல்லை
உள்ள உயிரொன்று உந்தன் உள்ளங் கையில் முல்லை
என்று தொடங்கியதோ? நடுவில் ஏன் மறைந்ததுவோ?
என்றும் தொடர்ந்திடுமோ? என்னென்ன செய்திடுமோ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *