தாலாட்டும் அன்பினிலே
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (8)
தாலாட்டும் அன்பினிலே
(கேட்டு மகிழ)
தாலாட்டும் அன்பினிலே, நின்று
தள்ளாடும் பூங்கொடியே! தென்றல்
காலாட்டும் கீற்றினிலே, நீ
கள்ளூறும் நிலவல்லவலோ!
சேலாடும் உன் விழியில், நின்று
நூலாடும் என்னுயிரே! என்னைத்
தோளோடு நீ அணைத்தால், நான்
தொல்லைக்குத் தொடுவானே!
நானென்ன சொல்வேனம்மா? மெளன
நாதங்கள் பொல்லாதம்மா! நீ
தேனென்றபின் எனதே என்றபின், இன்னும்
நீங்காத திரையென்னவோ? மனம்
நில்லாமல் வலை பின்னவோ?
தேனூறும் பூவிருக்க, மணம்
திசையெங்கும் பாய்விரிக்க, இங்கு
நானோடு நான் துன்பம் தானோடு தான், இதில்
நாளென்ன பொழுதென்னவோ? என்று
நான்மட்டும் வலைபின்னவோ?
பேசாமல் வந்துவிடு! மறு
பேச்சின்றித் தந்துவிடு! என்னை
நானாக வாழவிடு, இல்லை
நீயாக மாற்றிவிடு
படத்திற்கு நன்றி