வரவேற்பு
இசைக்கவி ரமணன்
உனக்கே உனக்காக (2)
வரவேற்பு
(கேட்டு மகிழ)
வாசல் திறந்துவைத்தேன்! உன்
அருகில் இருக்கும் பேற்றை எண்ணி
அழுக்கைத் துடைத்துவைத்தேன்!
உருகும் என்றன் உயிரில் சிறிய
தீபம் ஏற்றி வைத்தேன்! நீ
உதிர்க்கும் சிரிப்பை ஏந்திக்கொள்ள
உள்ளம் திறந்துவைத்தேன்!
எதுவுனக்குப் பிடிக்குமென்று
எனக்குத் தெரியவில்லை! உனக்கு
எதையும் கொடுக்கும் தகுதி இந்த
ஏழை எனக்கு இல்லை!
இதயம் ஒன்றைப் பறிகொடுத்து
எதிரில் நிற்கும்போது
இன்னும் என்ன தருவதென்று
இதுவும் புரியவில்லை!
வசந்தகாலம் நூறு உன்றன்
வாசலாகட்டும்!
வழிமுழுவதும் தேவகானம்
வளைந்து பொழியட்டும்!
இசைந்து இசைந்து இறைவன் உனக்கு
இன்பம் வழங்கட்டும்! அதை
இங்கிருந்தோ எங்கிருந்தோ இந்த
ஏழை பார்க்கட்டும்! அதிலென்
வாழ்வு நிறையட்டும்!
நான்
வந்தகதை விதியினாலே
வாழ்க்கை முடிந்தது! நீ
வரும்வரைநான் வாழவேண்டும்
வாழ்தல் புரிந்தது
இந்த வாழ்வில் இருக்கும் கணங்கள்
இனி உனக்காக! என்
இன்பம் யாவும் வைத்து நின்றேன்
இருவிழிக்காக!
நானிருக்கும் வரையுனக்கு
நலங்கள் பாடுவேன்!
நாளும் இரவும் காவலாகக்
கடவுளைத் தொழுவேன்!
தேன்மயங்கும் உன் நினைவே
நெஞ்சில் சூடுவேன்! அந்தத்
தெருமுனையில் நிலவொளியில்
தேய்ந்து கரைவேன்!