Category: மரபுக் கவிதைகள்

  • கோடைமழை

    -மீ.விசுவநாதன்

    காலைமுதல் வெயில்தான்  கொளுத்திடும்
    –கருமேகம் கணப்போதில் சூழும்!
    சாலையெல்லாம் மழைநீ ரோடிடும்
    –சாக்கடையின் குப்பைகளும் நீங்கும்!

    கோடையினை ரசிக்கும் வேளையில்  summer rain
    –குற்றால அருவிக்குள் கொஞ்சம்
    ஆடையின்றிக் குளிக்கும் ஆசையே
    –அதுவாக வந்துமெல்ல மறையும்!

    சுட்டெரிக்கும் மதியப் போதிலே
    –சுள்ளெனவே தெருவெல்லாம் கொதிக்கும்!
    கட்டெறும்பு கூடக் கண்ணிலே
    –காணாத தரையாகக் கிடக்கும்!

    சட்டென்றே இடிமின் னலுடனே
    –சடசடென மாமழையும் கொட்டும்!
    சொட்டுகின்ற வான்நீர் அமுதமாய்ச்
    –சுகமாக நனைவேன்நான் மட்டும்!

     

     

    Share
  • வாக்காளப் பெருமக்களே

     
    மீ.விசுவநாதன்

    voter_1835206f

    பொய்யும் புரட்டும் செய்கின்ற
    பொல்லா தவரைத் தள்ளுங்கள் !
    கையும் வாயும் வேலைபெரும்
    கள்ளுக் கடையை மூடுங்கள் !
    ஐயா எனக்கு ஓட்டுயென
    அவர்கள் வந்து கேட்கையிலே
    செய்த செயல்கள் என்னவென
    சீறிப் பாய்ந்து கேளுங்கள் !

    சென்ற தேர்தல் சமயத்தில்
    ஜீப்பில் வந்த சீமானே
    மன்றம் போன பின்னாலே
    மறந்து போன தேனென்று
    நன்றாய் நாலு வார்த்தைகள்
    நறுக்கெனக் கேட்டு வையுங்கள் !
    ஒன்றும் கெட்டுப் போகாது
    உண்மை யாகப் பேசுங்ககள் !

    ஆற்று மணலை அள்ளியவன்
    கையில் நெருப்பைக் கொட்டுங்கள் !
    ஊற்றுக் கண்ணாம் ஊழலவர்
    முகத்தில் காறித் துப்புங்கள் !
    காற்றைக் கூட விற்கின்ற
    கயவரைத் துரத்தி யடியுங்கள் !
    நேற்று போல இன்றில்லை
    நிமிர்ந்து நேராய்க் கேளுங்கள் !

    தேசத் திற்காய் பணிசெய்ய
    தேர்ந்த மனிதர் வந்திடுவார் !
    காசுக் காகக் கைநீட்டா
    கருத்து மிக்கோர் வெல்வதற்கு
    காசு வாங்கா நல்லோராய்
    கடமை வாக்குத் தந்திடுவோம் !
    மாசு இல்லா பாரதத்தை
    மக்கள் நாமே அமைத்திடுவோம் !
    ( 05.05.2016)

    Share
  • பரம்பரை வீடு

    மீ.விசுவநாதன்

     
    இந்த வீட்டிற் குள்ளேதான்
    என்தாத்தா பாட்டியும் வாழ்ந்தார்கள் !
    வந்த இன்ப துன்பத்தை
    வரவேற்றுச் சிறப்புடன் வென்றார்கள் !
    எந்த வேளை ஆனாலும்
    இருக்கின்ற உணவினைப் பகிர்ந்தார்கள் !
    கந்த வேளை எப்போதும்
    கருத்தினில் வைத்தே கடந்தார்கள் !

    சும்மாப் போக வரும்போதும்
    சுவைப்பதற்கு தட்டை, முறுக்குகளை
    அம்மா செய்து எங்களுக்காய்
    அன்பாக அள்ளியே தந்தார்கள் !
    எம்மாம் பெரிய மனத்துள்ளே
    எப்போதும் கருணை கொண்டார்கள் !
    பம்மாத் தெல்லாம் இல்லாமல்
    பச்சைவயல் போலி ருந்தார்கள் !

    இன்னார் என்று இல்லாமல்
    இரக்கத்தில் உதவிடக் கரம்நீட்டும்
    பொன்னார் குணத்துப் பெரியோர்கள்
    புழக்கத்தில் பொலிகிற இல்லமிது !
    முன்னோர் பாதம் பட்டதனால்
    முத்தாக ஒளிர்கிற இவ்வீட்டில்
    பன்னீர்ப் பூவின் வாசனையை
    பரம்பரையாய் நுகர்ந்திட முடிகிறது !

    (03.05.2016)

    Share
  • முறுக்கு

    மீ.விசுவநாதன்

    A_Traditional_Tamil_Snack_Murukku
    முறுக்கு தின்னும் ஆசையிலே – தெரு
    மூலைக் கடைக்குச் சென்றேன்நான் !
    குறுக்கு நெடுக்கு மாட்களெலாம் – அங்கு
    கூடி யிருந்து சுற்றுகிறார் !

    புழுங்க லரிசி முறுக்குதனில் – உள்ள
    சுவைக்கு என்று மடிமைநான் !
    விழுங்க எனக்கு மனமின்றி – வாய்
    வெளியில் மென்று ருசித்திடுவேன்!

    வேகா முறுக்கின் தனிருசிக்கு – நா
    வெளியில் தொங்க நின்றிடுவேன் !
    ஆகா ஆகா வெனச்சொல்லி – அந்த
    அரைவேக் காட்டை அரைத்திடுவேன் !

    அரைவேக் காடு முறுக்கல்ல – என்
    அடங்கா ஆசை மனமென்று
    உரைத்த புத்தி கேட்காமல் – வெளி
    உலகில் மயங்கித் திரிகின்றேன் !

    இளமை முறுக்கும் முதிர்ந்துவிடும் – ஒரு
    இரவில் முதுமை விரைந்துவரும் !
    வளரும் மோகம் உதிர்ந்தால்தான் – என்
    மனிதப் பிறப்பும் அர்த்தம்பெரும் !

    (01.05.2016)

    Share
  • காடும் நாடும்

    மீ.விசுவநாதன்

    DSC_03951-1024x777

    காட்டுக் குள்ளே நடக்கின்றேன் – எழில்
    கண்டு நானும் களிக்கின்றேன்
    கூட்டுக் குடும்ப களிறுகளின் – நல்ல
    துணிவும் உறவும் ரசிக்கின்றேன் !

    குருவி, மைனா, பருந்துகளும் – கிளி,
    கோட்டான், கொக்கும் அழகென்றேன் !
    உருவிப் பறக்கும் காக்கையுடன் – குயில்
    உருகிப் பாடும் ஒலிகேட்டேன் !

    சருகுக் குள்ளே பாம்புடனே -தவளை
    சறுக்கித் துள்ளிப் போகிறது !
    கருகு மணிபோல் ஒருவண்டு – என்
    காத ருகிலே பாய்கிறது !

    மானும் புலியும் நீரருந்த – அந்த
    மதகுப் பக்கம் வருகிறது !
    தானும் இன்று இரையாவேன் – என்ற
    தவிப்பில் மானும் விரைகிறது !

    காட்டை ரசிக்கும் என்னாலே – ஏன்
    நாட்டை ரசிக்க முடியவில்லை !
    காட்டில் இருக்கும் ஒழுங்குமுறை – ஏன்
    நாட்டு மனிதர் பழகவில்லை !

    Share
  • பனியில் அழுக்கு படியாது

     
    மீ.விசுவநாதன்
    வாங்கும் கையாய் இல்லாமல் -தினம்
    வழங்கும் கையாய் இருந்திடணும் !
    தீங்கைத் தட்டிக் கேட்கின்ற – நல்ல
    தீரன் கையாய் பலப்படணும் !

    கண்ணீர் வழியும் கன்னத்தில் – பாசக்
    கைகள் நீண்டு துடைத்திடணும் !
    மண்ணைத் திருடும் கொள்ளையரை -உடன்
    மடக்கிப் பிடிக்க மனம்வரணும் !

    ஓட்டுப் போடும் முன்னாலே – ஓர்கணம்
    உயர்ந்த நாட்டை எண்ணிடனும் !
    நீட்டும் கையில் கறைகண்டால் -அதை
    நியாயத் தீயால் பொசுக்கிடணும்!

    மனிதன் எவர்க்கும் விலையுண்டு – மா
    மனிதர்க் கதிலே விலக்குண்டு !
    பனியில் அழுக்கு படியாது – தூய
    பணியில் ஊழல் நுழையாது !

    (26.04.2016 22.02pm)

    Share
  • ஸ்ரீராம காதை

    -மீ.விசுவநாதன்

    (இன்று ஸ்ரீராமநவமி தினம் (15.04.2016))

    மானுடனாய்ப் பிறந்த மாலின்
       –வாழ்வதனைக் காதை சொல்லும்!
    தானுடைய எண்ண வீம்பும்
       –தம்பியரின் நல்ல பண்பும்              rama
    வானுயர ஓங்கி நிற்கும்
       –வானரத்தின் ஞான வாக்கும்
    தேனுயிராம் காதல் கொண்ட
       –தெய்வமகள் தேர்வு முண்டு! 

    வான்பறக்கும் கழுகும், கங்கை
       –மாலுமியாம் குகனும், காட்டில்
    தானிருக்கும் கரடி யென்ற
       –சாம்பவனும், பொன்போல் மாய
    மானிருக்கும் பர்ண சாலை
       –மாமுனிகள் வாச முண்டு!
    கூனிருக்கும் கொள்கை கொண்ட
       –கூனிகளும் இருப்ப துண்டு! 

    காமனுக்கே உள்ளம் தந்து
       –காலனிடம் சென்றோ ருண்டு!
    மோகமதைக் கொன்று விட்ட
        –மூத்தவர்கள் நிறைய வுண்டு!
    சேமமதைப் பெறுவ தற்குச்
      –சீதையவள் கருணை யுண்டு!
    ராமனது கதையில் தானே
       –ரத்தினமாய் தர்ம முண்டு!

     

    Share
  • வழிபாடு

    -மீ.விசுவநாதன்

    வழிபா டென்பது வலியை மறக்கவும்,
    அழியும் இந்த ஐம்பூத உடலுக்குள்
    அழியா திருக்கும் ஆத்மனை எந்த
    மொழியும் இன்றியே மௌனத்தில்
    உணர்ந்தே உருகி உருகிக் கரைந்து
    கணமெலாம் முக்தனாய்க் கவலைகள் துறக்கவும்,
    மழலையும் பாம்பும் மாமழை வெள்ளமும்
    குழலது இசையும் கூத்தும் கத்தலும்
    ஒருதுளி விடமும் உளம்மகிழ் விருந்தும்
    ஒருவனாம் அந்த உத்தமன் ஒளியென
    நினைக்கும் பக்குவம் நெஞ்சில்
    தினைத்துளி வரவும் வேண்டுறப் பண்பே!

     

     

    Share
  • சிருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள்

    -மீ.விசுவநாதன்

    துங்கைக் கரையிலே தூயதோர் யோகியின்
    திங்கள் குளிர்முகம் தேடினேன் – அங்குள்ள
    சாரதை “சந்திர சேகர பாரதியை”ச்
    சேரெனச் சொன்னாள் சிரித்து.

    இன்பமோ துன்பமோ எல்லாமும் ஈடில்லாத்
    தன்மையுள முக்தன் தவசியாம் இன்முகத்தோன்
    சந்திர சேகர பாரதியின் பாதத்தில்
    வந்தனையாய் வைத்து வணங்கு.

    தூங்காத கண்ணுக்குள் தூயதோர் யோகியின்
    நீங்கா நினைவே நிறைந்திருக்கும் – ஓங்காரச்
    சொல்லான  “சந்திர சேகரரே” என்றுமிப்
    பொல்லா(ன்) அடையும் புகல்.

    எதுபொய் எதுமெய் எதுவு மறியேன்!
    மதுவுண்ட மானுடனாய் வாழும் விதியேன்!
    கதிநீயே “சந்திர சேகர”ரே யென்று
    பதித்தேன் தலையைப் பணிந்து.

    என்னையே உன்னிலே என்றோ அளித்துவிட்டேன்!
    தன்னையே நன்றாகத் தானறிந்தோன் உன்னையே
    நம்புவேன் “சந்திர சேகர பாரதீ”
    சம்புவாம் நீயே சரண்.

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(116)

    –செண்பக ஜெகதீசன்

    அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு. (திருக்குறள் -80:அன்புடைமை) 

    புதுக் கவிதையில்…

    அன்பு காட்டி வாழ்வோர்
    உடல்தான்
    உயிரோடு இயங்குவது…
    அன்பிலார் உடலது,
    எலும்பில் தோல்போர்த்திய
    வெற்றுடம்பே…! 

    குறும்பாவில்…

    அன்புகொண்டோர் உடலதுதான்
    உயிருள்ள உடல்,
    வெறும் எலும்பும் தோலுமே, அல்லாதார்க்கு..! 

     மரபுக் கவிதையில்…

    அடுத்தவர் மீதே அன்புகாட்டி
      –அவரொடு சேர்ந்து வாழ்வோர்தான்,
    எடுத்த உடம்பதில் உயிரோடு
      –என்றும் வாழும் மனிதராவர்,
    கொடுத்தே அன்புடன் ஒன்றாகக்
      –கூடி வாழார் கொண்டவுடல்,
    அடுக்கி வைத்த எலும்பின்மேல்
      –ஆடைத் தோலது போர்த்தியதே…! 

    லிமரைக்கூ…

    அன்புகாட்டில் அடுத்தவரைப் பார்த்து,
    அவரதுதான் உயிருடம்பு, அல்லார்க்குளது
    வெறுங்கூடு எலும்புதோல் சேர்த்து…! 

    கிராமிய பாணியில்…

    அன்புகாட்டு அன்புகாட்டு
    அடுத்தவர்கிட்ட அன்புகாட்டு,
    அன்புகாட்டுற மனுசனுக்குத்தான்
    ஆயுசுநெறஞ்ச உசிரொடம்பு,
    அடுத்தவர்க்கொதவும் நல்லொடம்பு… 

    அன்புகாட்டத் தெரியாதவனெல்லாம்
    கொண்டு அலைவது வெறும்ஒடம்பு,
    எலும்பத் தோலால மூடிவச்ச
    சீவனில்லா வெறும்ஒடம்பு… 

    அதால,
    அன்புகாட்டு அன்புகாட்டு
    அடுத்தவர்கிட்ட அன்புகாட்டு…!

     

    Share
  • ஆசை யாரை விட்டது?

    -மீ.விசுவநாதன்

    ஆசையாரை விட்டது – அது
    –அரசனை ஆண்டி யாக்குது!
    காசைநேரே கண்டதும் – அது
    –களவினைச் செய்யச் சொல்லுது!

    நாக்கில்பொய் வைக்குது – மொத்த
    –நாட்டினை ஆளத் துடிக்குது!
    வாக்கில்மொய் தடவுது – மக்கள்
    –வாயினை நன்றா யடைக்குது!

    மானமுள்ள தொண்டென – அன்று
    –மண்ணினைக் காக்க வந்தனர்!
    ஆனவரை சுருட்டவே -இன்று
    –ஆர்வமாய்க் கட்சி சேர்ந்தனர்!

    தோற்றத்தில் மயங்கியே – புத்தி
    –தொலைவதைக் கொஞ்சம் திருத்துவோம்!
    மாற்றத்தை வழங்கிட – தூய
    –மனிதரை நெஞ்சம் நிறுத்துவோம்!

     

    Share
  • வண்ணத்துப் பூச்சி

    –மீ.விசுவநாதன்

    வண்ணத்துப் பூச்சி பறக்கிறது -அது
    வகைவகைப் பூவை ரசிக்கிறது!
    மண்ணுக்குள் போகும் பொழுதுக்குள் -உள்ள  Butterfly
    மலரெலாம் தொட்டு மகிழ்கிறது! 

    மகரந்தப் பொடியின் அழைப்பினிலே -அது
    மயங்கியே மலரில் அமர்கிறது!
    சிகரங்கள் தொட்ட மரத்தினிலும் – தான்
    விரும்பிய பூவில் கலக்கிறது! 

    தானும்நற் தேனைச் சுவைக்கிறது – அதன்
    தயவிலே பூகா யாகிறது!
    ஏனோதா னென்று திரியாமல் – ஒரு
    இலட்சியங் கொண்டே வாழ்கிறது! 

    ஈசனது படைப்பின் அவசியத்தை – என்
    சின்னதாம் அறிவும் அறிவதற்கு
    நேசமுடன் வந்து தினந்தோறும் -என்
    நெற்றியின் மீதும் அமர்கிறது!

     

     

    Share
  • “இறைவன் சொத்து”

    மீ.விசுவநாதன்

    சின்ன தாக வீடு கட்டி
    சிறப்புடனே வாழ்வ தற்கும்
    முன்ன தாக தான தர்மம்
    கொஞ்சமேனும் செய்ய வேண்டும் !
    தன்ன தான பொருள்க ளேதும்
    தனக்கென்று கிடையா தென்னும்
    உன்ன தமான எண்ணம் வந்தால்
    உலகமெலாம் நமது வீடே !

    ஓட்டு வீடு தங்கக் கூரை,
    ஒருவேளை நல்ல தூக்கம்,
    பாட்டி னாலே இன்பங் கொண்டு
    பசிமறக்கும் அன்பு நட்பு,
    கூட்ட மாகச் சேர்ந்து வாழ்தல்
    கொற்றவனை வெல்லு மென்பேன் !
    வாட்ட மேதும் கொள்ள வேண்டாம்
    வருவதெல்லாம் இறைவன் சொத்து !
    (03.04.2016)

    Share
  • “கர்வம்”

     
    மீ.விசுவநாதன்
    பிறக்கும் முன்னே கருவிலே – நல்ல
    பிடிப்புடன் வளர்ந்தான் கர்வியாக !
    துறக்கும் உள்ள உருவிலே – ஒரு
    துளியென இருப்பான் மர்மமாக !

    ஆன மட்டும் பார்கிறேன் – என்
    ஆணவம் அடங்க மறுக்கிறது !
    போன திசைகள் யாவிலும் – தனை
    புத்தனைப் போல நினைக்கிறது !

    தாடி வைத்துக் கொள்கிறேன் – பெரும்
    தவசியே நான்தான் என்கிறது !
    மூடி யில்லா நெஞ்சிலே – கர்வ
    மூர்க்கனின் ஆட்சி நடக்கிறது !

    காற்றைக் காட்டி விற்கிற – பொய்
    கலைதனைச் செய்தே ஏய்க்கிறது !
    சோற்றுக் காக வேடமே – தினம்
    துணிவுடன் போட்டுச் சிரிக்கிறது !

    எழுத்தை எண்ணிப் படிக்கிற – தன்
    இருப்பினை மறந்து துள்கிறது !
    பழுத்த பழமாம் ஞானியை – தன்
    பணத்தினைக் கொண்டே அளக்கிறது !

    கூச்ச மின்றித் தன்னையே – வந்து
    கும்பிடச் சொல்லி அழைக்கிறது !
    மூச்சு நிற்கும் போதிலே – அந்த
    மூலனை மறந்தே அழுகிறது !

    (30-03-2016)

    Share
  • அழகிய முரண்!

    -மீ.விசுவநாதன்

    இன்னுமின்னும் கேட்கின்றேன் இன்பமே – வந்த
    எளிமையான இன்பத்தில் தவிக்கின்றேன்!
    மின்னுகின்ற தகரத்தின் தன்மையை – ஒரு
    வெள்ளிமீன் தகடென்றே எடுக்கின்றேன்!
    தொன்னையிலே நெய்மணக்க ருசித்திட – நாவு
    தொந்தரவின் சூழ்ச்சியென நகைக்கின்றேன்!
    அன்னையிடம் பால்குடித்த அற்புதம் – பின்
    ஆளான  போதவளைப் பகைக்கின்றேன்!
    மெல்லமெல்ல வான்நிலவைப் பிடித்திட – என்
    பிஞ்சுக்கை விரல்களையே அனுப்புகின்றேன்!
    மெல்லவந்த வார்த்தைகளோ மறந்திட – என்|
    சொந்தங்கள் சிரித்திடவே வாழுகின்றேன்!
    கல்லெடுத்துச் சிற்பமொன்று செய்திட – நான்
    கற்கையிலே கற்பனைத்தேர் ஏறுகின்றேன்!
    சொல்லெடுத்துக் கவிபொழியும் போதிலே – செடி
    பூமலர நறுமணத்தில் புதை(யு)கின்றேன்!

     

     

     

    Share