இலக்கியம்கவிதைகள்மரபுக் கவிதைகள்

சிருங்கேரி ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள்

-மீ.விசுவநாதன்

துங்கைக் கரையிலே தூயதோர் யோகியின்
திங்கள் குளிர்முகம் தேடினேன் – அங்குள்ள
சாரதை “சந்திர சேகர பாரதியை”ச்
சேரெனச் சொன்னாள் சிரித்து.

இன்பமோ துன்பமோ எல்லாமும் ஈடில்லாத்
தன்மையுள முக்தன் தவசியாம் இன்முகத்தோன்
சந்திர சேகர பாரதியின் பாதத்தில்
வந்தனையாய் வைத்து வணங்கு.

தூங்காத கண்ணுக்குள் தூயதோர் யோகியின்
நீங்கா நினைவே நிறைந்திருக்கும் – ஓங்காரச்
சொல்லான  “சந்திர சேகரரே” என்றுமிப்
பொல்லா(ன்) அடையும் புகல்.

எதுபொய் எதுமெய் எதுவு மறியேன்!
மதுவுண்ட மானுடனாய் வாழும் விதியேன்!
கதிநீயே “சந்திர சேகர”ரே யென்று
பதித்தேன் தலையைப் பணிந்து.

என்னையே உன்னிலே என்றோ அளித்துவிட்டேன்!
தன்னையே நன்றாகத் தானறிந்தோன் உன்னையே
நம்புவேன் “சந்திர சேகர பாரதீ”
சம்புவாம் நீயே சரண்.

 

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க