மீ.விசுவநாதன்
பிறக்கும் முன்னே கருவிலே – நல்ல
பிடிப்புடன் வளர்ந்தான் கர்வியாக !
துறக்கும் உள்ள உருவிலே – ஒரு
துளியென இருப்பான் மர்மமாக !

ஆன மட்டும் பார்கிறேன் – என்
ஆணவம் அடங்க மறுக்கிறது !
போன திசைகள் யாவிலும் – தனை
புத்தனைப் போல நினைக்கிறது !

தாடி வைத்துக் கொள்கிறேன் – பெரும்
தவசியே நான்தான் என்கிறது !
மூடி யில்லா நெஞ்சிலே – கர்வ
மூர்க்கனின் ஆட்சி நடக்கிறது !

காற்றைக் காட்டி விற்கிற – பொய்
கலைதனைச் செய்தே ஏய்க்கிறது !
சோற்றுக் காக வேடமே – தினம்
துணிவுடன் போட்டுச் சிரிக்கிறது !

எழுத்தை எண்ணிப் படிக்கிற – தன்
இருப்பினை மறந்து துள்கிறது !
பழுத்த பழமாம் ஞானியை – தன்
பணத்தினைக் கொண்டே அளக்கிறது !

கூச்ச மின்றித் தன்னையே – வந்து
கும்பிடச் சொல்லி அழைக்கிறது !
மூச்சு நிற்கும் போதிலே – அந்த
மூலனை மறந்தே அழுகிறது !

(30-03-2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *