Category: Peer Reviewed

  • (Peer Reviewed) நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்

    முனைவா் பு.பிரபுராம்
    முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை,
    காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

               நாட்டார் வழிபாட்டு மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்த சமணம்

    யசோதர காவியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சண்டமாரி (நாட்டார் தெய்வம்) வழிபாட்டு மரபுகளையும் சமண தத்துவங்களையும் ஒப்பிட்டு ஆராய்வது, இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும். “நிறுவன மயமாக்கப்பட்ட சமயமான சமணம் தன் தத்துவத்தின் துணைகொண்டு நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கீழ்நிலைக்குத் தள்ளி, நாட்டாரைச் சமணச் சார்புடையோராக மாற்றியது” என்ற கருதுகோள் இவ்வாய்வில் கையாளப்பட்டுள்ளது. இக்கட்டுரைக்கான முதன்மைச் சான்றாதாரம், யசோதர காவியம். இக்காவியம், ஐந்து சருக்கங்களில் மொத்தம் 330 பாடல்களைக் கொண்டுள்ளது.


    சண்டமாரி வழிபாடு

    ஓதயநாட்டு இராசபுரத்து அரசனான மாரிதத்தன், அவந்திநாட்டு உஞ்சயினியின் அரசனான யசோதரன், அவன் தாய் சந்திரமதி ஆகிய அரச மரபினரும் பொதுமக்களும் சண்டமாரிக்கு உயிர்ப் பலியிட்டு விழா எடுத்த காட்சிகள் யசோதர காவியத்தில் உள்ளன. அக்காட்சிகளிலுள்ள கதையாடல்கள், சண்டமாரி வழிபாட்டில் நிகழ்த்தப்படும் சடங்குகளையும் அவ்வழிபாடு குறித்த நம்பிக்கைகளையும் அளிக்கின்றன.

    ஆண்டுதோறும் வேனிற்காலத்திலும் ஐப்பசித் திங்களிலும் காளிதேவிக்கு விழா எடுக்கும் வழக்கம் மக்களிடையே இருந்தது. அவ்வாறு விழா நிகழ்த்தப்படாவிடின், தேவியானவள் மனம்திரிந்து வெகுளுவாள், துன்பத்தைச் செய்கின்ற நோய்கள் பலவற்றையும் உண்டுபண்ணுவாள், உயிரைக் கொள்ளுதற்குரிய தீங்குகள் பலவற்றையும் செய்வாள், மேலும் பல தீங்குகளும் வந்தடையும் என்பது போன்ற நம்பிக்கைகளை மக்கள் கொண்டிருந்தனா்.

     

              “என்றும் இப்பரு வத்தினோ டைப்பசிச்

               சென்று தேவி சிறப்பது செய்துமஃ

               தொன்றும் ஓரல மாயினம் ஒன்றலா

               நன்ற லாதன நங்களை வந்துறும்” (யசோ.15)

              “நோவு செய்திடும் நோய்பல ஆக்கிடும்

               ஆவி கொள்ளும் அலாதன வுஞ்செயும்

               தேவி சிந்தை சிதைந்தனள் சீறுமேல்

               காவன் மன்ன! கடிதெழு கென்றனா்” (யசோ. 16)

    ஐப்பசி மாதத்துப் பூா்ணிமைக்கு முன்னதாகிய அட்டமிக்குப் பின்வரும் நாள்களுள் குற்றமில்லாது நிலவும் செவ்வாய்க்கிழமையில் உயிர்ப்பலியிட்டு காளிதேவியின் வீரகண்டையணிந்த திருவடியில் வீழ்ந்து வணங்கினால், அவள் அப்பலியேற்று, பலியிடுவோர்பால் விருப்பமுற்று அவா்க்குத் தீங்கு வராது காப்பாள் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவி வந்தது.

                          “ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கப் பின்னா்

                        மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற்

                        கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளாய்

                        மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு மென்றாள்”             

                                                                                                                                                                 (யசோ.136)

    மேலும், மக்கள் காளிதேவி கோவிலை வலம்வந்து தங்கள் இடா்களைய வேண்டுமென்று வணங்கும் முறைமையைக் கொண்டிருந்தனா். அத்துடன் மயில், கோழி, பன்றி, ஆடு, எருமை முதலிய விலங்கினங்களில் இரட்டைகளையும்(Animal Sacrifice) மனிதருள் இரட்டையரையும்(Human Sacrifice) பலியிட்டு வணங்கும் சடங்கு சண்டமாரிக்கு உகந்ததாகக் கருதப்பட்டது.

                “மாவ லோன்வலங் கொண்டு வணங்கினன்

               தேவி யெம்மிடா் சிந்துக என்றரோ” (யசோ.19)

              “மன்னன் ஆணையின் மாமயில் வாரணம்

               துன்னு சூரகம் ஆடெரு மைத்தொகை

               இன்ன சாதி விலங்கி லிரட்டைகள்

               பின்னி வந்து பிறங்கின கண்டனன்” (யசோ. 20)

              “யானிவ் வாளினின் மக்களி ரட்டையை

               ஈன மில்பலி யாக இயற்றினால்

               ஏனை மானுயா் தாமிவ் விலங்கினில்

               ஆன பூசனை யாற்றுதல் ஆறெனா” (யசோ. 21)       

    இவ்வாறு ஆண்டுதோறும் மக்களால் கொண்டாடப்படும் தெய்வம், சண்டமாரி. மனிதப் பலி, விலங்குப் பலி ஆகிய பலிகளை ஏற்று அருள்தரும் நாட்டார் தெய்வமாக அவள் விளங்கினாள். சண்டமாரிக்கு விழா எடுப்பின் தீமையகன்று, நன்மை வந்துசேரும் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டிருந்தனா்.

    சண்டமாரி ஒரு துருத்தேவதை

              நாட்டார் தெய்வமான சண்டமாரியின் உருவச் சிலையைப் பாவத்தின் (தீவினையின்) வடிவம் என்று காவிய ஆசிரியா் கற்பிதம் செய்கிறார்.

                         “பாவ மூா்த்தி படிவ மிருந்தவத்

                        தேவி மாடம்…” (யசோ. 19)

    மேலும் சண்டமாரி மிகுந்த கோபமுடையவள், நடுநிலைமை இல்லாதவள், அவள் மெய்ப்பொருள்களைக் கேட்டறிந்த கேள்வியறிவும் நுண்ணிய நூல்களைக் கற்ற கல்வியறிவும் இல்லாத கீழ்மக்கள் வழிபடும் துருத்தேவதை(கொடிய தெய்வம்) என்றும் பதிவு செய்கிறார்.

                       “சண்டகோபி தகவிலள் தத்துவம்

                        கொண்ட கேள்வியுங் கூரறி வுமிலாத்

                        தொண்டா் கொண்டு தொழுந்துருத் தேவதை

                        சண்ட மாரி தனதிட மெய்தினான்” (யசோ. 18)

    காவிய ஆசிரியா் சண்டமாரியின் பண்பினைக் கொடியதெனக் கூறுவதோடு, அத்தெய்வத்தை வழிபடும் தொண்டா்களை கல்வியறிவும் கேள்வியறிவுமற்றோர் என்றும் கற்பிதம் செய்கிறார்.

    காளி வழிபாடு தீது என்ற சித்திரிப்பு

    ஓதயநாட்டு மக்களின் விழாவயா்வு குறித்த அவாவிற்கிணங்கி மாரிதத்தன் (அரசன்) நகரின் தென்திசைக்கண் உள்ள காளிதேவி கோயிலைச் சென்றடைந்தான். அவன் சென்ற செய்தியைச் சித்திரிக்கும் காவிய ஆசிரியா், “காளிக்கு விழா எடுக்கலாம் என்று நகரமாந்தா் கூறியவுடன் அருளறமாகிய நன்னெறிக்கண் சென்று அறிவு தெளியாதவனாதலால் இச்செயல்(விழா) தீது என்று கூறாமல் இது நல்லதே என்று நகர மாந்தரிடம் மாரிதத்தன் உரைத்தான்” என்கிறார்.

                         “என்று கூறலும் ஏதமி தென்றிலன்

                        சென்று நல்லறத் திற்றெளி வின்மையால்

                        நன்றி தென்றனன் நன்னகரப்புறத்

                        தென்தி சைக்கண் சிறப்பொடு சென்றனன்” (யசோ.17)

    இதன்வழி, காளி வழிபாடு தீது தரும் என்ற சித்திரிப்பினைக் அவா் வழங்குகிறார். மேலும், காளி வழிபாடு செய்வோர் நன்னெறிக்கண் சென்று அறிவு தெளியாதோர் என்றும் உரைக்கிறார்.

    உயிர்ப்பலி வழிபாட்டைக் காட்டிலும் அருக நெறி உயா்ந்தது

    ஓதய நாட்டு மக்கள் கொற்றவைக்கு விலங்குகளுள் இரட்டையைப் பலியிடக் கருதி நிற்க, அரசன் மாரிதத்தன் மக்களுள் உடலியற் குறையற்ற இரட்டையரைப் பலியிடக் கருதினான். அத்தகு இரட்டையரைக் கொணா்க என்று சண்டகருமனுக்கு ஆணையிட, அச்சண்டகருமன் சுதத்த முனிவரின் சங்கத்துள் துறவோராய் இணைந்திருந்து, பிச்சையேற்பதற்காய் நகா்க்குள் நுழைந்த இரட்டையராகிய அபயருசியையும் அபயமதியையும் பலிக்கெனக் கொணா்ந்து பலிபீடத்தின் முன் நிறுத்தினான். பலிக்கு முன் “தங்கட்கு இறைவனாகிய வேந்தன் நிலத்தின்மேல் நீண்டகாலம் வாழ்வானாக என்று வாழ்த்துக” என்று சூழ்ந்திருந்த தளபதி முதலாயினோர் அவ்விரட்டையரைப் பணித்தனா். வறிய புன்முறுவலுடன் பின்வருமாறு மன்னனை அவா்கள் வாழ்த்தத் தொடங்கினா்.

                         “மறவியின் மயங்கி வையத் துயிர்களை வருத்தஞ் செய்யா

                        தறவியன் மனத்தை யாகி ஆருயிர்க் கருள்ப ரப்பிச்

                        சிறையென பிறவி போக்குந் திருவறம் மருவிச் சென்று

                        நிறைபுக ழுலகங் காத்து நீடுவாழ் கென்று நின்றார்” (யசோ.60)

    உலகுயிர்களை வருத்தாமல் அருளறம் நிறைந்த மனமுடையனாய் எல்லா உயிர்களுக்கும் அருளைச் செய்து, உயிர்க்குச் சிறைபோல்வதாகிய பிறப்பினைக் கெடுக்கும் சினேந்திரன் கூறிய அறத்தைக் கடைப்பிடித்து ஒழுகி, அழியாப் புகழை நிறுவி, உலகத்தை இனிது காத்தளித்து, நெடிது வாழ்வாயாக என்று அபயருசியும் அபயமதியும் மன்னனை வாழ்த்தினா். பிறவியானது உயிர்க்குச் சிறைபோன்றது. அவ்வாறு மீண்டும் பிறத்தலை ஒழிக்க வேண்டுமாயின் சமண அறங்களைக் கடைப்பிடித்து ஒழுகவேண்டும் என்றும் பலி வழிபாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும் இப்பகுதி வலியுறுத்துகிறது.

    யசோதரனும் சந்திரமதியும் பலி வழிபாட்டால் விலங்கு கதியடைதல்

    யசோதரன் தனக்குத் தீய நிமித்தங்கள் நிகழ்ந்ததாகத் தன் தாய் சந்திரமதியிடம் கூறுகிறான். உனக்குத் தெய்வமான காளிதேவிக்கு நீ உயிர்ப் பலியிட்டு வழிபடின், அத்தீயநிமித்தம் நீங்கி, நல்லவை நிகழும் என்று சந்திரமதி உபாயம் உரைக்கிறாள். யசோதரன் உயிர்க்கொலை செய்யின், மறுமையில் தேவ கதியடைவதற்கான தகுதி அகலும், இடா்பல விளையும் என்கிறான். ஆகவே காளிக்கான உயிர்ப்பலியிடலை மறுக்கிறான்.

                          “யானுயிர் வாழ்த லெண்ணி யெளியவா் தம்மைக் கொல்லின்

                        வானுய ரின்ப மேலால் வருநெறி திரியும்….” (யசோ.140)

                       “இன்றுயிர் கொன்ற பாவத் திடா்பல விளையு மேலால்” (யசோ. 141)

    உயிரைக் கொல்லாது மாவால் கோழிசெய்து அதனைச் சண்டமாரிக்குப் பலியிடலாம் என்று சந்திரமதி பதில் உரைக்கிறாள். இவ்வுரையாடலில் யசோதரனின் மனவோட்டமாக ஒரு செய்தியைக் காவிய ஆசிரியா் பதிவு செய்கிறார். “உயிருடைய பொருளொன்றின் வடிவினைச் செய்து அதனைப் பலியிடுவதும் உயிர்க்கொலையேயாம் என்னும் ஓா் அருவருப்பினை யசோதரன் தன் மனத்தே கொண்டிருந்தான்” என்கிறார்.

                “உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்கொலை போலு மென்னும்

               பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவில் மன்னன்

               செயிர்த்தவ ளுரைத்த செய்கை செய்தவற் கிசைந்த தென்றான்

               அயிர்ப்பதென் அறத்தின் திண்மை யறிவதற் கமைவி லாதான்” (யசோ.144)

    இவ்வாறு, விலங்குயிர்களைப் பலியிடுவதற்குப் பதிலாக, மக்களால் பதிலீடாகக் கருதப்படும் பொருள்களைப் பலியிடுவதுகூட (Substitute for animal sacrifice) அருவருப்பான செயல் என்ற சித்திரிப்பினைச் சமணம் வழங்குகிறது.

    பின்பு யசோதரன் விலங்குப் பலிக்குப் பதிலீடாகிய பாவனைப் பலிக்கு ஒப்புகிறான். சண்டமாரியை வணங்கிப் படைக்கப்பட்ட மாக்கோழியைத் தலையறிந்து அவன் பலியிட, அது கூவித் துடித்து வீழ்ந்து இறக்கிறது. இதனைக் கண்டு மனம்பொறாத யசோதரன், துறவுபூணும் எண்ணம் கொண்டான். ஆயின் யானைப் பாகனுடன் கள்ளவொழுக்கம் புரியும் யசோதரனின் மனைவி அமிர்தமதி, யசோதரனையும் அவன் தாய் சந்திரமதியையும் உணவில் விடம்கலந்து கொன்றுவிடுகிறாள். அவ்விருவரின் உயிர்களும் விலங்கு கதியை அடைகின்றன. யசோதரனின் மகன் யசோமதி, அவந்திநாட்டு உஞ்சயினிக்கு அரசனாகிறான்.

    யசோதரன், விந்தமலைச் சாரலில் மயிலாகப் பிறக்கிறான். சந்திரமதி, உஞ்சயினி நகா்ப்புறத்துச் சேரியில் நாயாகப் பிறக்கிறாள். அம்மயிலும் நாயும் அரசனாகிய யசோமதியின் அடைக்கலமாக வளா்கின்றன. ஒருநாள் மயில், அட்டபங்கனைக் கண்டு, அவன் கண்களைக் குத்திவிட்டுப் போகிறது. அதனால் அமிர்தமதி அதனைக் கல்லெறிந்து வீழ்த்த, நாய் அம்மயிலை வாயால் கவ்விக் கொன்றுவிடுகிறது. அதுகண்ட அரசன் ஆராயாது, நாயைக் கொல்கிறான். பின் மயில் முள்ளம்பன்றியாகப் பிறந்துழலும்போது, நாய் கருநாகமாய் வரக்கண்டு அதைக் கொல்கிறது. அப்பன்றியைச் சிங்கம் என்று கருதிய கரடி, பாய்ந்து கொன்றுவிடுகிறது. பன்றி மீனாய்ப் பிறக்க, கருநாகம் முதலையாய்ப் பிறக்கிறது. அரண்மனையில் பணியாற்றும் கூனியை முதலை கொல்ல, முதலையை அரசன் கொன்றுவிடுகிறான். வலையிற்பட்டு மீன் மாள்கிறது. முதலை ஒரு பெண்ணாடாய்ப் பிறக்க, மீன் ஆணாடாய்ப் பிறந்து அப்பெண்ணாட்டைக் கூடுகிறது. அதனைக் கண்ட கிடாவொன்று ஆணாட்டை மோதிக் கொல்ல, அது பெண்ணாட்டின் கருவில் தங்கிப் பிறக்கிறது. வேட்டைக்குச் சென்ற யசோமதியால் தாயாடு கொல்லப்படுகிறது. தகா் மட்டும் புலைச்சேரியில் வளா்கிறது. அத்தகா் யசோமதியின் முன்னோர் சிரார்த்தத்திற்காகக் கொல்லப்படுகிறது. யசோதரனாகிய அந்த ஆடு, மீண்டும் ஆடாகப் பிறக்கிறது. சந்திரமதியாகிய ஆடு, எருமையாய்ப் பிறக்கிறது. எருமை அரசனின் மாவை முட்டிக் கொல்ல, அரசன் அவ்வெருமையைக் கொன்றுவிடுகிறான். அமிர்தமதியின் உணவிற்காகத் தகா் கொல்லப்படுகிறது. பின்பு யசோதரனும் சந்திரமதியும் நகா்மருங்கில் உள்ள பறைச்சேரியில் கோழிகளாகப் பிறக்கின்றனா். யசோமதி அக்கோழிகள் இரண்டையும் கண்டு விருப்பமுற்று அரண்மனைக்குக் கொணா்ந்து வளா்க்கிறான். இறுதியில் அக்கோழிகள் இரண்டும் யசோமதி எய்த அம்பினால் இறந்துபட்டு யசோமதியின் மனைவியான புட்பாவலியின் மணிவயிற்றில் அபயமதியாகவும் அபயருசியாகவும் பிறப்பெய்துகின்றன.

    யசோதர மன்னனும் அவன் தாய் சந்திரமதியும் விலங்கு கதியில் பிறந்து அடைந்த இவ்வகைத் துன்பங்களுக்கு, முற்பிறப்பில் அவா்கள் மாவால் செய்யப்பட்ட கோழியொன்றைக் கொன்றதே காரணமாகும் என்று காவியம் கற்பிதம் செய்கிறது.

                “இன்னுமீ தைய கேட்க யசோமதி தந்தை யாய

               மன்னவ னன்னை யோடு மாவினற் கோழி தன்னைக்

               கொன்னவில் வாளிற் கொன்ற கொடுமையிற் கடிய துன்பம்

               பின்னவா் பிறவி தோறும் பெற்றன பேச லாமோ” (யசோ.250)

    இவ்வாறு பலிவழிபாட்டால் மறுமையில் தேவ கதியடைவதற்கான தகுதி அகன்று, உயிர்க்குத் தீமை விளையும் என்ற தத்துவாத்தச் சிந்தனையைக் காவியம் வழங்குகிறது. விலங்குப் பலிக்குப் பதிலீடான பாவனைப் பலியால் யசோதரனும் சந்திரமதியும் மறுமையில் விலங்குகளாகப் பிறந்து பல்வேறு துன்பங்களை அடைந்தனா் என்றும் உரைக்கிறது. ஆகவே இத்தகு பலி வழிபாட்டுடன் இணைந்த நாட்டார் தெய்வ வழிபாட்டை விட்டகன்று, சமண நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வேண்டுகோளைக் காவியம் விடுக்கிறது.

    முடிவுகள்

    • தத்துவார்த்த அடிப்படையில் நாட்டார் தெய்வ வழிபாடு கீழானது என்று யசோதர காவியம் கற்பிதம் செய்கிறது. நாட்டார் தெய்வத்தின் உருவமானது பாவத்தின் வடிவம் என்ற மாயத் தோற்றத்தினை உருவாக்க, அக்காவியம் முயன்றுள்ளது.
    • நாட்டார் தெய்வத்திற்கு உயிர்ப்பலியிட்டு வழிபடல் பாவம் (தீவினை) என்ற கருத்தியலை மக்கள் மனத்தில் விதைப்பதற்காகவே யசோதர காவியம் படைக்கப்பட்டுள்ளது. அப்பாவத்தால் மறுமையில் உயிர்க்குத் தீய பலன் கிட்டும் என்றும் காவிய ஆசிரியா் எச்சரிக்கிறார். இத்தத்துவார்த்த அச்சுறுத்தலுக்கு அஞ்சியோர், நாட்டார் வழிபாட்டை விடுத்து, சமண சமயத்திற்கு மடைமாறிய காட்சிகள் பல, காவியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சான்றாக மாரிதத்தன், சண்டமாரி வழிபாட்டை விட்டகன்று சமண நெறியேற்றதைக் கூறலாம்.
    • மேலும், நாட்டார் தெய்வத்திற்கு உயிர்ப் பலியிடுதலைப் பாவம் (தீவினை) என்று கருதிய மக்கள், அதற்குப் பதிலீடாக (Substitute for animal sacrifice) உயிரற்ற பொருட்களைப் பாவனைப் பலியாக அளித்தனா். அதன்வழி, தங்கள் தெய்வ வழிபாட்டைத் தொடா்ந்தனா். அவ்வாறு நாட்டார் வழிபாட்டில் நிலைநின்ற மக்களையும் சமணம் தன்வழிக்குத் திருப்ப முயன்றுள்ளது. அதற்கு யசோதரனின் கதையைப் பக்கபலமாக அமைத்துக்கொண்டது.

    முதன்மைச் சான்றாதாரம்

    * யசோதர காவியம் மூலமும் உரையும் – ஔவை சு.துரைசாமிப்பிள்ளை (உரையாசிரியா்),  2009, சாரதா பதிப்பகம், சென்னை.

    =======================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    முதற்கண் முனைவர் பு.பிரபுராம் அவர்களை வாழ்த்தி, என் மதிப்பாய்வை வழங்குகிறேன்.

    ஆய்வாளர் தன் ஆய்வுக் கருவாக, “நிறுவன மயமாக்கப்பட்ட சமயமான சமணம் தன் தத்துவத்தின் துணைகொண்டு நாட்டார் தெய்வ வழிபாட்டைக் கீழ்நிலைக்குத் தள்ளி, நாட்டாரைச் சமணச் சார்புடையோராக மாற்றியது” என்ற கருதுகோளை முன்வைக்கிறார். இக்கூற்று சற்று அதிகப்படியாகத் தோன்றுகிறது.

    யசோதர காவியத்தின் ஆசிரியர், தான் நூல் ஆக்கியதற்கான காரணத்தைத் தொடக்கத்தில் கூறியதை (நூல் நுவல் பொருள் – பாடல் எண் – 4) இவ்வாய்வாளர் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தெரிகிறது. யசோதரம் ஆசிரியர் இப்பாட்டில், “வெவுரு செய்யும் வினைப்பய னிற்றேனத் தெரிவு றுப்பதுஞ் செப்புத லுற்றதே” என்று நூல் யாத்ததற்கான காரணத்தை தெரிவிக்கிறார். உயிர்களுக்கு வினைவரும் வழியை அடைப்பதையும், தீவினை இதுவென்று தெரிவித்து, நல்வினைப் பயனை அடைவிப்பதற்கும் வடநாட்டில் வழங்கிய இக்கதையைத் தமிழில் ஆக்கியிருக்கிறார். இதுவே இந்நூலின் நோக்கமாகவும், அந்நோக்கத்தின் ஊடே பயணிக்கும்போது, தீவினைக்குக் காரணமானவற்றை அகற்ற, கதைக்கு ஏற்றவாறு சில புனைவுகள் மூலம் கொல்லாமை அறம் சூழ மாந்தர்களைப் படைத்து தன் நூலின் நோக்கமான “பாவனையின் மூலம் செய்யும் செயலும் தீவினைக்கு வித்தாகும்” என்பதை அறிவுறுத்துகிறார்.

    அப்படித்தான் மனித, மிருக பலியீடு என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டிப்பதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமேயன்றி நாட்டார் மரபிலிருந்து மக்களை மடைமாற்றம் செய்வதற்காக இந்நூல் எழுதியிருப்பது போன்று தன் ஆய்வைக் குறித்திருப்பது, சமண அறத்தையும், சமண இலக்கியங்களின் நோக்கத்தையும் ஆய்வாளர் எளிதில் உள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.

    இவ்வாய்வாளர் இக்கட்டுரையின் தலைப்பை “ சமணம் மறுக்கும் நாட்டார் வழிபாட்டு மரபு” என்று தலைப்பிட்டிருந்தால் நன்றாக அமையும். என் மதிப்பாய்வு, ஆய்வை குறைகூறும் நோக்கில் அமைந்ததன்று.

    =======================================================

    Share
  • (Peer Reviewed) காப்பியங்களில் சமணம் கட்டமைக்கும் பெண்கள் நிலை

    முனைவர் பெ.சுமதி
    உதவிப் பேராசிரியர்,
    ஒப்பிலக்கியத் துறை,
    தமிழியற்புலம்,
    மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,
    மதுரை -21.

    காப்பியங்களில் சமணம் கட்டமைக்கும் பெண்கள் நிலை

    முன்னுரை

    தமிழ் மொழி, உலகம் போற்றும் தொல் மொழியாம். இவற்றில் எழுந்த இலக்கியங்களும் இலக்கணங்களும் செம்மொழி அந்தஸ்துடன் இன்று, பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இங்குப் பல்வேறு மதங்கள் உள்ள நிலையில், சமண மதமும் பல்வேறு மன்னர்களாலும் பின்தொடரப்பட்டு கைவிடப்பட்ட மதங்களில் ஒன்றாகும். தென்னிந்தியாவில் சமண மதம் வேரூன்றி இருந்த சமயத்தில் தமிழ் இலக்கியங்களில் அற நூல்களும் இலக்கணங்களும் தோன்றி, நம் மொழிக்குச் சிறப்பினைப் பெற்றுத் தந்தன.

    சமயக் காழ்ப்புணர்வால் சமண மதம் ஒட்டுமொத்தமான வீழ்ச்சிக்கு உட்பட்டது என்பது, நல்ல இலக்கிய நூல்களுக்கு இழப்பேயாம். இந்திய மதங்களில் நிறுவன தெய்வ வழிபாட்டுக் கடவுளர் முறையில் பெண் கடவுளர்களுக்கு உரிய முக்கியத்துவம் இருந்தாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும், புறந்தள்ளப்படுதலும் காலம் காலமாகவே இருந்துகொண்டு தான் இருக்கின்றது. அது மதத்தாலும் இருந்திருக்கின்றது. அதற்குச் சமணமும் விதிவிலக்கு இல்லை என்ற கோணத்தில் ஆராய்வதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    சமணம் – பொருள்

    சங்கம் மருவிய காலம், அற இலக்கியக் காலமாகக் கருதப்படுகின்றது. தமிழ் இலக்கியத்திற்குச் சமணர்கள் ஆற்றிய பங்களிப்பே இதற்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    “சமணர் (ஸ்ர்மணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடு பெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. புலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர் (வென்றவர்) ஆகலின் தீர்த்தங்கரர்க்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு.” (மயிலை.சீனி வேங்கடசாமி.1954.1)

    சிறு உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று நினைக்கின்ற சமணர்கள், கடுமையான துறவு வாழ்க்கை மேற்கொண்டவர்கள். சமணர் என்றால் துறவிகள் என்றும் ஐம்புலன்களையும், உலகப் பற்றையும் வெறுத்தவர்கள் என்றும் கூறுவதிலிருந்து சமணத்தின் பொருளை அறிந்துகொள்ள முடிகின்றது.

    சமண சமயத் தத்துவம்

    சமண சமயத்தின் தத்துவமாக, “உயிர், உயரல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம். இவற்றை முறையே ஜீவன், அஜீவன், புண்ணியம், பாவம், ஆஸ்ரவம் ஸம்வரை, நிர் ஜரை, பந்தம், மோக்ஷம் என்றும் கூறுவர்.” (மயிலை.சீனி வேங்கடசாமி.1954.9)

    மேற்கூறிய ஒன்பது பொருள்களும் சமண சமயத்தின் தத்துவமாகக் கூறப்படுகின்றன. சமணப் பெண் துறவிகள், சமண சமயத்தில் பெண் பிறப்பு இழிவாகக் கருதப்பட்டது என்பதை, “பெண்பிறவி தாழ்ந்த பிறவி என்பதும், பாவம் செய்தவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்பதும் சமண சமயக் கொள்கை. பெண்ணாகப் பிறந்தவர், வீடுபேறு (மோட்சம்) அடைய முடியாது என்பதும் சமண மதத் துணிபு ஆகும்.

    அவர்களுள், சுவேதாம்பர சமணர், பெண் பிறவிக்குச் சற்று உரிமை கொடுக்கின்றனர். இல்லறத்தை நீக்கித் துறவு பூண்டு, மனத்தை அடக்கி, உடம்பை வருத்தித் துன்பங்களைப் பொறுக்கும் ஆற்றல் பெண் மகளிர்க்கு இல்லாதபடியினால், அவர்கள் பெண் பிறப்பில் வீடுபேறடைய முடியாதென்றும், ஆனால், அவரும் துறவு பூண்டு மனவுறுதியோடு முயல்வார்களாயின் வீடுபேறடையக் கூடும் என்றும் சுவேதாம்பரச் சமணர் கூறுகின்றனர்.

    ஆனால், திகம்பர் சமணர், பெண் பிறவியில் வீடுபேறடைய முடியாதென்றும், பெண்கள் ஆணாகப் பிறந்து, துறவு பூண்டு நோற்றால் தான் வீடுபேறடைய முடியும் என்றும் கூறுகின்றனர். ஒருவன் யாரையேனும் வஞ்சனை செய்தால், அவன் அடுத்த பிறப்பில் பெண்ணாகப் பிறப்பான் என்பது சமண சமயக் கொள்கை”(மயிலை.சீனி
    வேங்கடசாமி.1954.185) என்று கூறப்படுகின்து.

    ஒரு பெண், பெண்ணாகப் பிறந்த காரணத்தினாலே வீடு பேற்றை அடைய முடியாது என்பதும் ஆணாகப் பிறந்தால் வீடு பேற்றை அடைய முடியும் என்றும் கூறும் சமண சமயம், பெண் பிறப்பை வெறுத்த நிலையை அறிய முடிகின்றது. பெண் பிறப்பை வெறுப்பதற்குக் காரணம், பெண்கள் உலகப் பற்றை விட்டொழிக்க முடியாது என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இல்லற வாழ்க்கையை நீங்கி, துறவு மேற்கொள்வது பெண்களுக்கு இயலாத செயல் என்பதால் பெண்களுக்குச் சமணத்தில் துறவுக்கு இடமில்லை என்பது குறிப்பிடப்படுகின்றது.

    சமணர்களின் அறங்கள்

    சமணர்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகம் வந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கொள்கை, சங்க மருவிய காலத்தில் மக்களிடையே பரவுகின்றது, “கொலை, களவு, காமம், மது, மாமிசம் என்னும் பஞ்சமா பாதகங்களை ஒதுக்கி, உலகம், இளமை, யாக்கை முதலியவற்றின் நிலையாமையைப் போற்றி, தூய்மையாக வாழ்ந்த சமணர், போர், வேட்டை, காதல், கொள்ளை, மது, மாமிசம் என்று வாழ்ந்த தமிழ் மக்களை அற வழியில் இட்டுச் செல்ல, இயன்ற அளவு முயன்றிருப்பர். சங்க மருவிய காலச் சூழ்நிலை அவருக்குச் சாதகமாக அமைந்தது” (ஆ.வேலுப்பிள்ளை, 2011:31) என்று சமணர்களின் அறநெறிச் சிந்தனை கூறப்படுகின்றது.

    மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் அறக் கருத்துகளை எடுத்துக் கூறுகின்ற இலக்கியங்கள், சமணர்களால் படைக்கப்படுகின்றன. சமுதாயத்தைக் கட்டமைப்பிற்குள் வைக்க விரும்பிய சமணர்கள், பெண்களின் பண்புகளை வரையறை செய்கின்றனர்.

    “எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம், சிறுகாலை
    அட்டில் புகாதாள் அரும்பிணி, – அட்டதனை
    உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் – இம்மூவர்
    கொண்டானைக் கொல்லும் படை.”

    (பாலசுந்தரம் பிள்ளை. (உ.ஆ), நாலடியார், 2007:363)

    கணவன் சொல்லைக் கேட்காமல் எதிர்த்துப் பேசுகின்றவள் எமன் போன்றவள், காலையில் எழுந்தவுடன் சமையல் அறைக்குச் செல்லாதவள் போக்க முடியாத அரிய நோய், சமைத்த உணவைத் தன் கணவனுக்குப் படைக்காதவள் வீட்டிலேயே இருக்கும் பிசாசு, இந்த மூவரும், கொண்ட கணவனைக் கொல்லும் கருவிகள் ஆவார் என்று பெண்கள் பண்பைக் கட்டமைக்கின்றனர். கணவனுக்குக் கட்டுப்பட்டு வாழாத பெண்கள், கணவனைக் கொல்லும் கருவி போன்றவர்கள் என்று பெண்களின் இல்லற வாழ்க்கை கட்டமைக்கப்படுகின்றது.

    சிலப்பதிகாரம்

    கண்ணகியின் முன்பிறவி பற்றி மதுராபுரித் தெய்வம் கண்ணகியிடம் கூறுகின்றது.

    “கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள்
    எம்முறு துயரம் செய்தோர் யாவதும்
    தம்முறு துயரம் இற்று ஆகுக! என்றே
    விழுவோள், இட்ட வழுஇல் சாபம்
    பட்டனிர் ஆதலின் கட்டுரை கேள் நீ!”

    (வ.த.இராமசுப்பிரமணியம் (உ.ஆ), சிலப்பதிகாரம், ம.கா.க.கா.2005:166-170)

    இதில் கண்ணகி, தான் சாபம் பெற்ற நிகழ்வை அறிகின்றாள். கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத்தை வசு என்பவனும், கபில புரத்தைக் குமரன் என்பவனும் ஆட்சி செய்து வந்தனர். இருவருக்கும் அடிக்கடி போர் நிகழும். சிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கமன் என்ற வணிகன், தன் மனைவி நீலியுடன் கபிலபுரத்து வீதிகளில் பொருட்களை விற்றுக்கொண்டிருக்கிறான். உன் கணவனாகிய கோவலன், அப்பிறப்பில் பரதன் என்ற பெயரில் இருந்தான். சங்கமனைப் பார்த்த பரதன், இவன் எதிரி நாட்டு ஒற்றனாக இருக்கலாம் என்று கூறி, அரசனால் கொலைக் களத்தில் வெட்டப்படுகின்றான். இதை அறிந்த சங்கமனின் மனைவி நீலி, அழுது புலம்பி, பதினான்கு நாட்கள் அலைந்து திரிந்து, பின் மலையுச்சியில் ஏறி, விழுந்து உயிர் துறக்கின்றாள். அவள் உயிர் துறக்கும் போது தான் அடைந்த துன்பத்தைத் தனக்குத் துன்பத்தை உண்டாக்கியவனும் அடைவதாக என்று சாபம் கொடுத்தாள் என்று மதுராபுரித் தெய்வம் கூறுகின்றது.

    முனிவர்களும் கற்புடைய பெண்களும் சாபம் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று கூறப்படுகின்றது. இங்கு நீலி என்பவள் சாபம் கொடுத்தாள் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். சாபம் கொடுத்தல் என்பது இவர்களுக்கு எளிமையான செயல். அதில் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள், பெண்கள். சாபம் கொடுப்பதற்கு முன்பு, சாபம் பெறக்கூடியவர்களிடம் எந்த விளக்கமும் கேட்கப்படுவதில்லை. சாபத்திற்கான விளக்கம் கேட்கப்படாமலேயே பெண்களுக்குச் சாபம் கொடுத்தல் என்பது, அவர்களின் உரிமைகளை அவர்கள் கேட்டுப் பெற்றுவிடக் கூடாது என்பதையே காட்டுகின்றது. கோவலன் செய்த தவறுக்கு அவன் சாபத்தை அனுபவிக்க வேண்டும். மாறாகக் கண்ணகியும் சேர்ந்து அனுபவிக்க வேண்டிய நிலையை எண்ணும் போது, கணவன் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக வாழ வேண்டிய கட்டாய நிலையை இளங்கோவடிகள் கண்ணகிக்கு உருவாக்கி இருக்கின்றார் என்பது உணர்த்தப்படுகின்றது.

    சீவக சிந்தாமணி

    சீவக சிந்தாமணியில் விசயை துறவு மேற்கொள்ளப் போவதாகத் தன் மகன் சீவகனிடம் கூறுகின்றாள். இதை அறிந்த சீவகனும் இராசமாபுர மக்களும் பெருந்துன்பம் அடைகின்றனர். அந்த நிலையில் சுநந்தையுடன் விசயை தவம் மேற்கொள்வதற்காகப் பம்பை என்பவள் உபதேசம் செய்கின்ற இடத்தை அடைந்து,  பெண்பிறப்பை விட்டொழித்து, இந்திரர்களாய்ப் பிறந்தார்கள் என்பது, சமணத்தில் பெண்பிறப்பிற்கு மோட்சம் இல்லை என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.

    முடிவுரை

    சமணர்கள் அறக் கருத்துக்களை சமுதாயத்திற்கு வலியுறுத்தினார்கள் என்று கூறப்படுகின்றது. ஆனால் சமணர்கள் ஆணுக்கு ஓர் அறம், பெண்ணுக்கு ஓர் அறம் என்று பாகுபடுத்தி, அறத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியை சமணம் வலியுறுத்தியதாகக் காணப்படுகின்றது. பெண்பிறப்பு, சமணத்தில் இழிபிறப்பாகப் பார்க்கப்பட்டதோடு பெண்ணுக்கு மோட்சம் இல்லை என்ற கருத்தை வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

    துணை நூல்கள்

    1. இராசாராம். துரை(உ.ஆ), சீவக சிந்தாமணி, முல்லை நிலையம், சென்னை, 2001
    2. இராமசுப்பிரமணியம் வ.த(உ.ஆ), சிலப்பதிகாரம், திருமகள் நிலையம், சென்னை, 2005
    3. பாலசுந்தரம் பிள்ளை.தி.சு.(உ.ஆ), நாலடியார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், திருநெல்வேலி, 2007
    4. சீனி வேங்கடசாமி. மயிலை, சமணமும் தமிழும், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், திருநெல்வேலி, 1954
    5. வேலுப்பிள்ளை.ஆ., தமிழர் சமய வரலாறு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை: 2011

    ========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை:

    முதற்கண் முனைவர் பெ.சுமதி அவர்களை வாழ்த்தி, இந்த மதிப்பாய்வை வழங்குகிறேன்.

    ஆய்வு என்பது நாம் எடுத்துக்கொண்ட பொருளைப் பல திறக்குகள் மூலம் அவற்றின் முழுப் பொருளையும் உணர்ந்து, ஆய்ந்து, காய்த்தல், உவத்தல் அகற்றி பின், அது இட்டுச் செல்லும் வழியைக் கண்டடைவதாகும். இதைச் சரியாகப் புரிந்து தன் ஆய்வுக் கட்டுரையை ஆக்கியிருக்கிறார். எனினும், இவர் சமண மெய்யியலை முழுதும் உள்வாங்கவில்லை என்பது சிற்சில இடங்களில் தெரிகிறது.

    சமண மெய்யியல், “உயிர்” சார்ந்து அல்லது உயிரைச் சுற்றி எழுந்த மெய்யியல். அது சமணத்தின் தனித்துவமான மற்ற சமய மெய்யியல்களுக்கு அடித்தளமாகவும் அமைந்தது. சமண மெய்யியலின்படி உயிர் அருவமானது, நிறம் அற்றது, பாலினம் இல்லாதது. உயிர் தான் ஏற்ற உடம்பிற்கு ஏற்றவாறு சுருங்கி, விரியக்கூடியது, உயிர் தன் வினைத் துகள்களை முற்றாக விடும்போது மேல்நோக்கிச் செல்லக் கூடியது. இதில் கட்டுரையின் கருவிற்கு உகந்ததான உயிர்க்குப் பாலினம் இல்லை. அதாவது உயிரில், ஆண், பெண், அலி என்ற பாகுபாடு கிடையாது என்பதையும் விளங்கிக்கொண்டு தன் ஆய்வை மேற்கொண்டிருந்தால் இன்னும் சிறந்திருக்கும். சமண மெய்யியலின்படி, உயிரானது பற்றுகளிலிருந்து நீங்கி, நல்வினை, தீவினைகளை அகற்றி, வீடுபேறு பெறல் வேண்டும். ஆயின், பற்றுகள் நீங்க வேண்டுமானால் முற்றும் துறத்தல் என்பது இன்றியமையாதது. முற்றும் துறத்தல் அம்மணம். இது உயிர் ஏற்றுக்கொண்ட உருவம், பெண் உடலாகவிருந்தால் சாத்தியமில்லை என்பதால் சமணத்தில் பெண் உடலை ஏற்ற உயிர்களுக்கு வீடுபேறில்லை என்ற கருத்து உருவானது.

    ========================================================

    Share
  • (Peer Reviewed) ஆகமம்

    முனைவர் ஹெப்ஸி ரோஸ் மேரி, அ.
    உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை
    கேரளப் பல்கலைக்கழகம்
    திருவனந்தபுரம்

    ஆகமம்

             எழுத்துக்கள் தம்முள் புணர்வதைத் தமிழில் புணர்ச்சி என்றும் வடமொழியில் சந்தி என்றும் அழைப்பர்.  சந்தியை அகச்சந்தி (Internal Sandhi) என்றும் புறச்சந்தி (External Sandhi) என்றும் இருவகைப்படுத்துவர்.  ஒரு சொல்லின் இரு கூறுகளுக்கிடையே நிகழும் சந்தியை அகச்சந்தி என்றும் (வந்தான், அங்கு), இரண்டு சொற்களுக்கிடையே நிகழும் சந்தியைப் புறச்சந்தி என்றும் கூறுவர்.  இவ்வகைப் புணர்ச்சியில் தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்கள் நிகழும். தோன்றல் விகாரத்தை வடமொழியில் ஆகமம் என்பர்.  இக்கட்டுரை தொல்காப்பியம் லீலாதிலகம் கூறும் தோன்றல் விகாரத்தை விளக்க முயல்கிறது.

    புணர்ச்சி விதிகள் தோன்றக் காரணம்

          தமிழ் எழுத்திலக்கணத்தின் உயிர்ப்பகுதி புணரியல் தான்.  அதனாலேயே எழுத்ததிகாரத்தின் பெரும்பகுதியையும் புணரியல் பற்றிக்கொண்டு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் தமிழ் வரலாற்றிலக்கண ஆசிரியர் ஆ. வேலுப்பிள்ளை. புலமையும் வித்துவத் தன்மையும் காட்டுவதே முக்கியம் என்ற கருத்து நிலவிய காலத்தில் தோன்றிய உரைநடையிலும் செய்யுளிலும் கடின சந்தி விகாரங்களை அமைத்துக் கடின நடையில் தமிழறிஞர் எழுதிவந்தனர்.  கருத்துத் தெளிவே முக்கியம் கருத்தைப் புலப்படுத்த மொழி ஒரு கருவியே என்ற கருத்து இன்று நிலவுவதால் இன்றைய தமிழ் நடையில் சந்தி விகாரங்கள் பெரும்பாலும் அவசியமான இடங்களிலேயே இடம்பெறுகின்றன என்று கூறுகின்றார்.  இன்றைய நிலையில் விரிவான அளவில் புணர்ச்சி முறைகள் நமது மொழிக்கு வேண்டியதில்லை என்னும் கருத்தினை அவர் வலியுறுத்துகிறார்.  ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விரிவான முறையில் புணர்ச்சி விதிகள் பற்றித் தமிழ் இலக்கண நூலால் கூறவேண்டிய தேவையிருந்தது.  சொற்களுக்கு இடையே இடைவெளியிட்டு எழுதும் வழக்கம் அச்சு இயந்திர வரவாலும் ஆங்கிலமொழிச் செல்வாக்காலும் ஏற்பட்டது அதற்கு முன்னர் எழுதுகருவிகள்  காரணமாக எவ்வளவு தூரம் எல்லாச் சொற்களையும் தொடுத்து எழுத முடியுமோ அவ்வளவுக்கு எழுது முயற்சியும் சிக்கனப்படுத்தப்பட்டன. இத்தகைய சிக்கன முயற்சிக்குப் புணர்ச்சி விதிகள் பெருமளவும் உதவின என்று சண்முகதாஸ் குறிப்பிடுகிறார்(2008:82).

              அன்றைய வழக்கில் இருந்த செய்யுள் வடிவமும் பெரும்பாலான புணர்ச்சி விதிகள் செய்யுள் நோக்கில்  அமைக்கக் காரணமாயின.  இக்கருத்தினைச் சொல்லிலக்கணத்தில் யாப்பின் செல்வாக்குப் பற்றி எழுதிய பண்டிதர் க.வீரகக்தியின் கருத்துக்கள் இதற்கு வலுசேர்க்கும்.  அவர் வெவ்வேறு ஓசையின் ஒழுங்கான வரையறைகளே யாப்பிலக்கணமாகி இலக்கணத் துறைகளில் ஒன்றாக விரிவும் தெளிவும் பெற்றுள்ளது.   நேர்சீராயில்லாத சீரமைப்பும் தளைப்பிணிப்பும் பாவின் நீரோசையைச் சிதைத்து அதனை உரைநடைக்குள் தள்ளிவைக்கும்.  “எழுத்திற்கு மாத்திரை கோடலும் அசைத்தலும் சீர்செய்தலும் தளையறுத்தலும் ஓசை பற்றி அல்லது எழுத்துப் பற்றியன்று” என்று கூறும் சிவஞான முனிவரின் விளக்கம் ஓசைக்குள் செல்வாக்கைத் தெளிவாகத் தெரிய வைக்கின்றது.  ஓசை மாசுபடாதிருப்பதற்காக எழுத்தும் சொல்லும் சொற்றொடரும் வேண்டிய இடங்களில் யாப்புக் கட்டுக்கோப்புக் கருதித் தம் இயல்பான அமைதி நிலையிழந்து ஓசை ஓட்டத்திற்குப் பாதை திறந்துவிடுதல் வேண்டும்.  அன்றி ஓசை இவற்றிற்கு விலகிக் கொடுக்காது. விலகின் யாப்பு யாப்பற்றதாய் விடும்.  யாப்பின் செல்வாக்கு இன்றேல் எழுத்திலக்கணம் இத்துணை விரிவடைய இடமில்லை.  சார்பெழுத்துக்களின் விரிவு பல்வகைப்பட்ட விகாரங்கள் எல்லாம் யாப்பின் தாக்கமே(2008:116) என்ற பண்டிதர் க.வீரகத்தியின் கருத்து இங்கு எண்ணத்தக்கது. இதிலிருந்து தமிழ் இலக்கணங்களில் ஏன் பெருந்தொகையான புணர்ச்சி விதிகள் அமைக்கப்பட்டன என்பதற்குரிய காரணத்தினை ஓரளவு ஊகிக்கலாம்.

    தொல்காப்பியமும் புணர்ச்சி விதிகளும்

              தொல்காப்பிய எழுத்ததிகாரம் ஆறு இயல்களில் புணர்ச்சி பற்றிக் கூறுகிறது.  புணர்ச்சி பற்றிய பொதுவான கருத்துக்களெல்லாம் புணரியல் என்னும் இயலிலேயே வகைப்படுத்துகிறார்.  முதல் நூற்பாவில் புணர்ச்சி நடைபெறக்கூடிய இடமும் அதனுடன் தொடர்புடைய எழுத்துக்களும் கூறப்படுகின்றன. மொழிக்கு முதலாக வருமென்று கூறிய எழுத்துக்கள் முதனிலையிலும் மொழிக்கு ஈறாக வருமென்று முன்னர் கூறிய எழுத்துக்கள் ஈற்று நிலையிலும் வரும் என்பதை,

                 “எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்

                   மெய்யெ யுயிரென்று ஆயிரியல” ( தொல். 104)

    என்று குறிப்பிடுகிறார்.

    புணர்ச்சிக்குரிய மொழிகளினியல்பு அடுத்து கூறப்படுகின்றது. இரண்டு சொற்களினெல்லைகளில் புணர்ச்சி நடைபெறும். அவ்வாறான சொற்களில் புணர்ச்சிக்குரிய ஈற்றினை  நிறுத்தச்சொல் (நிலைமொழி) என்றும் முதனிலையுடையதைக் குறித்தசொல் (வருமொழி) என்றும் கூறுவார். அவ்விருசொற்களின் ஈறும்முதலும் வரும்மாற்றினை,

          “உயிரிறு சொல்முன் உயிவரு வழியும்

            உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்”

    தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அவ்விருவகைப்பட்ட சொற்களும் எத்தகைய மாற்றங்கள் நிகழும் என்பதைத் தொல்காப்பியர் பின்வருமாறு வகைப்படுத்துகிறார். பெயர் + பெயர், பெயர் + தொழில் (வினை), தொழில் + பெயர், தொழில் + தொழில் என்பனவாகும்.  புணர்ச்சி காரணமாக ஏற்படும் மாற்றங்கள் மூன்று வகைப்படும். அவை,

              “மெய்பிறிதாதல் மிகுதல் குன்றலென்று

             இவ்வெனமொழிப திரியுமாறே”  ( தொல். 110)

    மெய்வேறுபடுதல் (திரிதல்) மிகுதல், குன்றல் என்பனவாகும்.   திரிதல் பண்பு மெய்யெழுத்துக்கு மட்டும் உரியது.  மிகுதலும் குன்றுதலும் உயிருக்கும் மெய்யுக்கும் பொதுவானவை. இவ்வாறு நடைபெறும் புணர்ச்சியினைத் தொல்காப்பியர் வேற்றுமைப்  புணர்ச்சி என்றும் அல்வழிப்புணர்ச்சி என்றும் இருவகையாகப் பாகுபாடு செய்வர்.  உருபுகள், சாரியைகள் புணர்ச்சியிலே எவ்வாறு இடம்பெறுகின்றன என்றும்  புணர்ச்சி காரணமாகப் பொருள் வேறுபடுதலையும் புணரியலில் எடுத்துரைக்கிறார்.

    ஆனால் லீலாதிலகம் புணர்ச்சி விதிகளை விரிவாகவும் விளக்கமாகவும் கூறவில்லை.  தமிழ்ப்புணர்ச்சி விதிகளையே பின்பற்றியுள்ளதாகக் கே. என். எழுத்தச்சன் குறிப்பிடுகிறார்.  லீலா திலகம் புணர்ச்சிக்கு 28 விதிகள் தான் கூறியுள்ளது.  அவர் கூறும் விதிகள் உயிர்முன் உயிர், உயிர்முன் மெய், மெய்முன் மெய் என்ற மூன்று அமைப்பில் காணப்படுகிறது.  மெய்முன் உயிர் என்ற அமைப்பில் இடம்பெறவில்லை.  பெரும்பாலும் பெயர் + பெயர் அமைப்பிற்கே விதிகள் கூறுகின்றது..

    ஆகமம்

    புணர்ச்சி நடைபெறுமிடத்து மூன்று வகையான மாற்றங்கள் நிகழுமெனத் தமிழ் இலக்கண நூலார் குறிப்பிடுகின்றனர்.   அம்மாற்றங்களாவன தோன்றல், திரிதல், கெடுதலாகும். தோன்றல் புனர்ச்சியை வடமொழியாளர் ஆகம சந்தி என்பர். தோன்றல் புணர்ச்சி காரணமாகச் சில இடங்களில் எழுத்துக்களோ சாரியைகளோ தோன்றுவது பற்றித் தொல்காப்பியர் விதியமைத்துள்ளார். பொதுவாக இரண்டு உயிரெழுத்துக்கள் புணரும்போது அவற்றை ஒன்று சேர்ப்பதற்கு அல்லது அவ்விடத்து விட்டிசைத்தலைத் தடுக்க யகர வகரம் உடம்படு மெய்யாக வரும்.  தொல்காப்பியர் உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார் (தொல். எழுத்து. 141) எனப் பொதுவாகக் கூறுகிறாரே ஒழிய  இன்னின்ன மெய்கள் உடம்படுமெய்களாக வரும் என்றும் இன்ன உயிர்முன் இன்ன உயிர் வருமென்று குறிப்பிடவில்லை.   லீலாதிலகம் இரண்டு உயிர்களுக்கு இடையில் யகரம் தோன்றும் என்றும் தனித்து நிற்கும் அ, இ ஆகியவற்றின் முன் உயிர் வரின் வகரம் தோன்றும்.  சிலயிடத்து இரட்டித்து வரும் என்று குறிப்பிடுகிறது.

    எ.டு

            ஆன + அது                  =             ஆனயது

            காண்மூ + அது          =             காண்மூவது

           அ + அழகு                     =             அவழகு

           இ  + அழகு                    =             இவழகு

    லீலாதிலகம்  நன்னூலைப்  பின்பற்றவில்லை என்பது இங்கு தெளிவாகிறது.  நன்னூலார் “இ ஈ ஐ வழி யவ்வும் ஏனைய உயிர்வரின் வவ்வும்” என்று குறிப்பிடுகிறார். ‘இ’ யின் முன் உயிர் வரின் வகரம் வரும் என்று கூறுவதிலிருந்து இதனை அறியலாம். “ய வ முன் வரினே வகர ஒற்றும்’’ (தொல்.உயிர்மயங். 4) இந்த தொல்காப்பிய நூற்பாவை ஒட்டியே “தஸ்ய  தித்வம் வ சிலயிடத்து இரட்டும்” என்று லீலாதிலகம் குறிப்பிடுகிது.

    எ.டு

            அ + அழகு     =             அவ்வழகு

           இ + அழகு     =             இவ்வழகு

    பொதுவாகத் திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் இரண்டு உயிர்களுக்கிடையே உண்டாகும் இடைவெளி ‘வ’கர அல்லது ‘ய’கர உடம்படுமெய் நுழைவால் தடுக்கப்பெறும் என்று கால்டுவெல் கூறுவார்.  திராவிட மொழிக் குடும்பத்தின் அடிப்படை என்று இதனைக் கூறலாம்.

             “சுட்டின் முன்னர் ஞ ந மத் தோன்றின்

            ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்” ( தொல். எழுத்து. 206)

    இதனை அடியொற்றி லீலாதிலகம் “கேவலாஞ்ஞானமவா நாம் ச”  வினாப்பொருளில் வருகின்ற எகரத் தனிச் சொல்லின்முன் வரும் ஞ ந ம வ ஆகிய எழுத்துக்கள் இரட்டும் என்று குறிப்பிடுகிறது.

    எ.டு

           எ + ஞாண்  = எஞ்ஞாண், எந்நூல், எம்மரம்

    தொகைச் சொற்களிலும் ஒ, ந, ம வக்கள் அல்லாத மெய்கள் இரட்டும்.

    எ.டு

          ஆன  + காடு = ஆனக்காடு ( யானைகள் வாழும் இடம்)

    ய ர ல ழ ள ஆகியவற்றின் முன்வரும் கசதபக்கள் இரட்டும் (லீ.தி. 56) என்ற லீலாதிலகம் கூறுவது ‘ரகார இறுதி யகார இயற்றே’ (தொல். 363) என்ற தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றியாகும்.

    எ.டு

           பொய் + குதிர =        பொய்க்குதிர

           நீ + கோழி      =   நீர்க்கோழி

    ‘அளவும் நிறையும் வேற்றுமையியல ( தொல். 32) என்ற நூற்பாவைப் பின்பற்றி மகர ஈற்றுப் பெயரின்  முன் வல்லினம் வரின் இரட்டும் என்று லீலாதிலகம் குறிப்பிடுகிறது.

    எ.டு

           வட்டம்   +  பலக      = வட்டப்பலக

          சதுரம்  + கிணறு  = சதுரக்கிணறு

    ‘யரழளப்ய : கசதபனம த்வித்வம்’(லீ.தி. 388)  ய, ர, ல, ழ, ள ஆகியவற்றின் முன்வரும் கசதபக்கள் இரட்டும்.

    எ.டு

           வால் + கிண்டி          = வால்க்கிண்டி

           முள்   + கொம்பு       = முள்க்கொம்பு

    இவ்வாறு சொற்கள் இரண்டினை இணைத்து ஒரு சொற்றொடராக மாற்றுவதற்குப் புணர்ச்சியில் தோன்றல் விகாரம் பயன்படுகிறது.  உச்சரிப்பினை இலகுவாக்குவதற்கு மொழியில் பல இடங்களில் தோன்றல் விகாரம் நடைபெறுகின்றது.  பிற்கால மலையாள இலக்கண ஆசிரியர்கள் லீலாதிலகம் அமைத்த ஆகம சந்தி மலையாளத்துக்குரியது என்று கூறுவர். ஆனால் லீலாதிலகம் ஆகமசந்திக்குக் கூறும் விதிகள் அனைத்தும் தொல்காப்பியத்தைப் பின்பற்றி அமைந்தவையாகும்.

    பயன்பட்ட நூல்கள்

    1. இளையபெருமாள், மா., லீலாதிலகம், கேரளப் பல்கலைக்கழக வெளியீடு.
    2. இளம்பூரணர், தொல்காப்பியம், கழக வெளியீடு, சென்னை.
    3. சண்முகதாஸ், தமிழ் மொழி இயல்பு, பாவை வெளியீடு, 2008.

     ========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    லீலா திலகம், மணிப்பிரவாள மொழிநடையை விளக்குவதற்காக எழுந்த இலக்கணம். இக்கட்டுரையில் தொல்காப்பியம் கூறும் தோன்றல் புணர்ச்சி விதியை லீலா திலகத்தின் ஆகம சந்தி என்னும் புணர்ச்சி விதியோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார் கட்டுரையாளர். அதன் விளைவாகத் தொல்காப்பியத்தின் தோன்றல் புணர்ச்சி விதி தான் லீலா திலகத்தில் கூறப்பட்டிருக்கும் ஆகம சந்தி என்னும் புணர்ச்சி விதி என்று இக்கட்டுரையின் மூலம் நிறுவுகிறார். கட்டுரையில் பயன்படுத்திய நூல்களின் விவரங்கள், அவற்றின் பதிப்பு ஆண்டுகள் ஆகியவற்றை ஆய்வாளர் கட்டாயம்  பதிவு செய்ய வேண்டும்.

    ========================================

    Share
  • (Peer Reviewed) சிலம்பில் மலர்கள்

    முனைவர் வீ. மீனாட்சி
    உதவிப் பேராசிரியர்,
    முதுகலைத் தமிழாய்வுத் துறை,
    பிஷப் ஹீபர் கல்லூரி,
    திருச்சிராப்பள்ளி – 620 017

    சிலம்பில் மலர்கள்

    பழந்தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டுள்ளனர். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அவர்களது வாழ்வியலைத் தமிழ் இலக்கியங்கள் வழி அறிய இயலுகிறது. ஐந்திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த பழந்தமிழரின் இலக்கியங்கள், தமிழ்நாட்டில் வளர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள் அவற்றில் மலர்ந்த மலர்கள் ஆகியவை பற்றி அறிய உதவுகின்றன. பழந்தமிழர்கள் நிலங்கட்கு அந்நிலங்களில் மலர்ந்த சிறப்பான மலர்களைக் கொண்டும், மரங்களைக் கொண்டும் குறிஞ்சி (மலர்), முல்லை (மலர்), நெய்தல் (மலர்), மருதம் (மரம்), பாலை (மரம்) என்று பெயரிட்டு இருப்பது அவர்கள் இயற்கை மீது கொண்ட ஈடுபாட்டையும் சூழலியல் நோக்கினையும் விளக்குகின்றன. இதனடிப்படையில் பரல்களை மையமிட்டு இயற்றப்பட்ட சிலம்பில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் மலர்ந்த மலர்களைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

    மலர் – விளக்கம்

    மலர் என்பதற்குப் பூ; மலரென்னேவல் ; மலர்ச்சியானது என்றும் மலர்தல் என்பதற்கு எதிர்தல், தோன்றல், நிறைதல், விரிதல், மொட்டவிதழ், அகலுதல், பரத்தல், மனமகிழ்தல், மிகுதல் என்றும் கழகத் தமிழகராதி பொருள் உரைக்கின்றது.

    சிலம்பில் மலர்ந்த மலர்கள்

    பழந்தமிழரின் இலக்கியங்கள் இயற்கையின் பொருண்மையை உற்று நோக்கி உணர்ந்து படைக்கப்பட்டுள்ளன. இதில் தாவரத்தின் ஓர் உறுப்பான மலர்கள், அழகு, குளிர்ச்சி, மகிழ்ச்சி, கற்பு ஆகியவற்றின் குறியீடாக எடுத்தாளப்பட்டுள்ளன. இதில் செவ்வியல் இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில் மூவேந்தர்களின் இயற்கை எழில் சூழ்ந்த நாடுகளில் மலர்ந்த மலர்களும் அம்மலர்களின் இன்றைய அறிவியல் பெயர்களும் பின்வருமாறு :

    வேங்கை (Pterocarpus marsupium Roxb.&P.Santalinusl.) ஆத்தி (Bauhiniaracemasa Lam.)  வேம்பு            (Azadirachta indica A.Juss) பனை (Borassus flabellifer L.) கொன்றை (Cassia fistula .L) செந்தாமரை (Nelumbo nucifera Gaertn.)செங்கழுநீர் (Nymphaea pubescens Willd.)  சேதாம்பல் (Nymphaea pubescens Willd.) குவளை (Nymphaea sp.) கருவிளை (Clitoria ternatea L.) செங்கூதாளம் (Ipomoea sepiaria keen) வெட்சி (Ixora coccinea L.) தாழை (Pandanus odoratissimus L.f) ஆம்பல் (Nymphaea pubescens willd)  சேடல் (Jasminum sp) நெய்தல் (Phyllanthus emblica. L.) பூளை (Aerva tomentosa Forssk) மருதம் (Lagerstroemia reginae Roxb) கழுநீர் மலர் (Nymphaea pubescens willd) கருங்குவளை (Nymphaea sp) இலவம் (Bombax ceiba L.)முல்லை (Jasminum auriculatum Vahl) குமிழம் (Gmelina arborea Roxb) காந்தள் (Gloriosa superba L.)  பீர்க்கம்பூ (Luffa cylindrica (L) M. Roemer) காயாம்பூ (Memecylon edule Roxb) அசோகம் (Saraca asoca (Roxb.) De wilde) குரவு            (Tarenna asiatica (L.) kuntze) மகிழம் (Mimusops elengi L.) கோங்கு (Cochlospermum gossypium (L.) Alston)  வேங்கை (Pterocarpus marsupium Roxb. P. Santalinus. L) வெண்கடம்பு (Mitragyna parvifolia (Roxb) korth) சுரபுன்னை (Mammea suriga (Buch-Ham) kost) மஞ்சாடி (Adenanthere pavonina L.) செருந்தி (Ochna obtusata DC) செண்பகம் (Michelia champaca L.) பாதிரி (Stereospermum chelonodies (L.f) DC) குருகத்தி (Hiptage benghalensis (L.) kurz) செம்முல்லை (Iragia plukene Hi.R – sm’)  முசுட்டை (Rivea hypocrateriformis (Desr.) choisy)  மோசி மல்லிகை (Jasminum angustifolium vabl.) நறுந்தாளி (Ipomoea marginata) வெட்பாலை (Wrightia tinetora (Roxb.) R.Br.) பிடவம் (Randia malabarica Lam.) பகன்றை (Operculina turpethum silva moriso) மயிலை (Jasminum sp) இருவாட்சி (Jasminum sp) முள்முருங்கு (Erythrina stricta Roxb.) மல்லிகை (Jasminum sambac (L.) Aiton var. sambae) பித்திகை (Jasminum sp) செங்கழுநீர் (Nymphaea pubescens wild) கத்திகை (Hiptage benghalensis (L.) kurz) எட்டி (Strychnox nux – vomica L.)  வாகை (Albizia odoratissimus (L.f) Benth.) நீலோபற்மலர் (Nymphaea nouchali Burm.F) புன்னை (Calophyllum inophyllum L.) அடம்பம் (Ipomoea pes. caprae (L.) R.Br)  நந்தியாவட்டை (Eravatamia divaricata (L.) Burkill) நரந்தம் (Citrus sp) ஆச்சா (Hardwickia binata Roxb.) சந்தனம் (Santalum album L.)  சேமரம் (Alangium salvifolium (L.F) wang)  மாமரம்  (Mangifera indica L.) புன்கு  (Pongamia pinnta (L.) pierre) குறிஞ்சி (Phlebophyllum kunthianum Ness) காஞ்சி (Trewia polycarpa Benth) மந்தாரம் (Baubinia purpurea L.) தும்பை (Leucas cajan (L.) Mill sp.) வஞ்சி (Thespesia populnea (L.) sol. ex. corr?) பச்சிலை (Garcinia xanthochymus Hook .F) கடம்பம் (Neolamarckia Cadamba (Roxb.) Bosser) எனப் பல வகையான மலர்கள் மலர்ந்து மணம் வீசியிருக்கின்றன.

    இப்பூக்களை இளங்கோவடிகள்

    ‘கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும்
    காட்டிய பூவின்………………’

                            (சிலம்பு. அழற்படுகாதை : 93, 94)

    என்று குறிப்பிடுகின்றார். இங்கு இளங்கோவடிகள் சிலம்பில் எடுத்தாளப்படும் மலர்களை மரத்தின், செடியின் கிளையில் மலர்வதைக் கோட்டுப்பூ என்றும் கொடியில் மலர்வதைக் கொடிப்பூ என்றும் நிலத்தின் புதரில் மலர்வதை நிலப்பூ என்றும் நீரில் மலர்வதை நீர்ப்பூ என்றும் நான்கு வகைப்படுத்தியுள்ளார்.

    இதுபோன்ற பகுப்புமுறையினைச் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கரோலஸ் லின்னேயஸ் (Carl Linnaeus May 23, 1707 – January 10, 1778)  எனும் அறிவியலார் தாவர வகைப்பாட்டியல் (Plant Taxonomy)  என்று உலகிற்கு அளித்துள்ளார். அதற்கு முன்பே கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ என்று பழந்தமிழர் வகைப்பாடு செய்து தாவரக்குடும்பப் பகுப்பை உலகிற்கு அளித்திருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது. இவ்வாறு இளங்கோவடிகள் தான் வகைப்படுத்திய மலர்களைச் சிலம்பில் கையாண்டுள்ள  விதம்பற்றிப் பின்வரும் பகுதி எடுத்துரைக்கின்றது.

    மன்னரும் மலர்களும்

                நாடாளும் மன்னர்கள் தங்களுக்குரிய அடையாளச் சின்னங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம்  அளித்துள்ளனர். மன்னர்களைக் குறிப்பிடும்போது அவர்கள் சூடியிருந்த மலர்மாலைகள் அடையாளமாகக் காட்டப்படுகின்றன.

                ‘சேர, சோழ, பாண்டியரை மூவேந்தர் என அழைக்கின்றோம். வேந்தர் என்ற சொல்லே வேய்ந்தோர் என்பதன் மரூஉ என்பர். தலையில் முடி வேய்ந்தோர் என்றும் தமக்கெனக் கொண்ட மரபுடன் மலர்வேய்ந்தோர் என்றும் சிந்தித்துப் போற்றும் வகையில் முடியில் மலர் மாலையினை இணைத்துச் சூடியிருக்கின்றனர். பொதுவாக மலர்களை-மலர்மாலைகளை-முடியுடன் இணைத்து வேந்தர்கள் சூடும் பழக்கம் இந்தியப் பெருநாடு முழுவதிலும் இருந்துள்ளது’ (தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, செ.வைத்தியலிங்கன், ப.47.) எனும் கருத்துக்கு ஏற்ப சிலம்பில் மூவேந்தரும் தனக்கென்று தனியாக ஒரு அடையாள மாலை சூடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதைக் காண இயலுகிறது.

                ‘ஆரங் கண்ணிச் சோழன் ………………..’

                                                                              (சிலம்பு. பதிகம் : 12)

                ‘ஆர்புனை சென்னி அரசற்கு அளித்து’                (சிலம்பு. நடுகல்காதை : 211)

    என்று சோழ மன்னன் ஆத்தி மரத்தில் பூக்கும் பூக்களை மாலையாகச் சூடியிருப்பதை இளங்கோவடிகள் சுட்டியுள்ளார்.

                ‘சினையலர் வேம்பன் தேரானாகிக்’

                                                                             (சிலம்பு. பதிகம் : 28)

                ‘இலைதார் வேந்தன் எழில் வான் எய்தக்’                                                               (சிலம்பு. நீர்ப்படை காதை : 62)

    என்று பாண்டிய மன்னன் வேப்பம் பூ  மாலையினை அணிந்துள்ளதையும் அப்பூவின் பெயரால் வேம்பன் என்று அழைக்கப்படுவதையும் இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

                ‘தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்த’                                                     (சிலம்பு. நீர்படைக்காதை : 112)

                ‘தோடுஆர் போந்தை வேலோன் தன்நிறை’                                                          (சிலம்பு. நீர்படைக்காதை : 173)

    என்று சேரன் செங்குட்டுவன் இதழ்செறிந்த பனம் பூவினை  மாலையாகச் சூடினான் என்பதைச் சிலம்பு காட்டுகிறது.

    நாட்டு வளமும் மலர்களும்

                ஒரு நாட்டின் வளம் என்பது இயற்கை வளத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் மலர்கள் வளத்தின் குறியீடாக அமைகின்றன. இதனால்தான் இன்றும் ஒவ்வொரு நாட்டின் அடையாளச் சின்னங்களில் மலர்கள் இடம்பெறுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்கு நிலங்களின் வளத்தினை அங்கு மலர்ந்த மலர்களின் மூலம் சிலப்பதிகாரம் காட்சிப்படுத்துவதால் உணரமுடிகிறது. இதில் முல்லையும் குறிஞ்சியும் தம் முறைமையில் திரிந்த நிலையில் உருவாகும் பாலை நிலத்தில் கொற்றவையின் அருளால் அங்குள்ள மரங்களில் மலர்கள் மலர்வதாக இளங்கோவடிகள் காட்டியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

                ‘நாகம் நாறும் நரந்தம் நிரந்தன

                …………………………………………………….

                …………………………………………………….

                திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே’                                                                         (சிலம்பு. வேட்டுவவரி:2-4)

    எனும் அடிகளில் பாலை நிலத்தில் கொற்றவையின் அருளால் சுரபுன்னை, நரந்தை, சேமரம், மாமரம், வேங்கை, இலவம், புன்கு, வெண்கடம்பு, பாதிரி, புன்னை, குரா, கோங்கு ஆகிய மரங்களெல்லாம் மலர்கள் மலர்ந்து மணம் வீசியதாக இளங்கோவடிகள் குறிப்பிடுவது அன்றைய பாலைநிலத்தின் வளத்தினையும் நம் கண்முன் காட்டுகிறது.

    தெய்வங்களும் மலர்களும் 

    சிலப்பதிகாரம் சமணக் காப்பியம் என்று வகைப்படுத்தினாலும் இளங்கோவடிகள் இக்காப்பியத்துள், சிவன், திருமால், முருகன், கொற்றவை, மதுராபதி தெய்வம் எனப் பல்வேறு தெய்வங்களைக் குறிப்பிட்டுள்ளார். இத்தெய்வங்களுக்குரிய குறிப்பிட்ட மலர்களும் சிலம்பில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,

                ‘…………. மதுரை மூதூர்க்

                கொன்றையஞ் கடைமுடி                                                                                                                  மன்றப்பொதியிலில்’

                                                                         (சிலம்பு. பதிகம் : 40)

    என்று கொன்றை மாலை சூடிய சடைமுடியுடைய சிவபெருமான் என்றும்

                ‘வண்துழாய் மாலையை மாயவன்                                                                                                                    மேல்இட்டு’

                                                   (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை:16)

    எனும் அடிகளில் நப்பினை வளமுடைய துளசி மாலையை மாயவன் கழுத்தில் இட்டாள் என்றும் இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

                ‘………… அலர் கடம்பன் என்றே

                வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக                                                                                                             என்றாள்’

                                                          (சிலம்பு. குன்றக்குரவை :13)

    எனும் அடிகள் முருகனுக்கு உரிய மலர் கடம்பம் என்றும் கடம்பன் என்று பூவின் பெயராலேயே முருகன் அழைக்கப்படுவதையும் உணர்த்துகிறது. கொற்றவை  சிவனுக்கு உரிய கொன்றை மலரையும், திருமாலுக்கு உரிய துளசி மாலையையும் தோளில் போட்டுக்கொண்டு வென்றிக் கூத்து ஆடுவது,

                ‘கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த’                                                             (சிலம்பு. வேட்டுவ வரி : 11)

    என்று சிலம்பு காட்டுகிறது. மேலும் மதுரையில் வாழும் மதுராபதி தெய்வம் இடக்கையில் பொன்னிறமான தாமரை மலரை ஏந்தியுள்ளதை,

                ‘இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும்’                                                                (சிலம்பு. கட்டுரை காதை : 7)

    எனும் அடிகள் உணர்த்துகின்றது. இவ்வாறு மன்னர்களின் அடையாளமாக மட்டுமல்லாது தெய்வங்களின் அடையாளமாகவும் மலர்கள் விளங்கியுள்ளன என்பதைச் சிலம்பின் வழி அறிய இயலுகிறது.

    பூதங்களும் பூக்களும்

                சிலம்பில் பூத வழிபாடு செய்யப்படுவதாகக் கூறப்படும் இடத்தில் மலர்கள் இடம் பெற்றுள்ளன. மக்கள் நாள் அங்காடிப் பூதத்தை வழிபடும் போது

                ‘பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து’

                   (சிலம்பு. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை:69)

    என்ற அடிகள் மூலம் பூவினை இட்டு வழிபட்டுள்ளனர் என்பதைக் காட்சிப்படுத்தி யுள்ளார்.

                மேலும் அந்தணப் பூதமானது முத்துப் பூண்களுடன் தாமரை, அறுகம்புல், நந்தியாவட்டம் இவற்றைக் கொண்டு புனைந்த தலையினன் என்று காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டிருப்பதை,

                ‘ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து

                வெண் நிறத் தாமரை, அறுகை, நந்தி என்று

                இன்னனவை முடித்த நல்நிறச் சென்னியன்’                                                  (சிலம்பு. அழல்படு காதை: 18-20)

    எனும் அடிகள் உணர்த்துகின்றன.

                அரச பூதமானது சண்பகம், கருவிளை, செங்கூதாளம் எனும் நீர்ப்பூக்களைக் கொண்ட கண்ணியையும் மாலையையும் அணிந்திருந்ததாக,

                ‘சண்பகம், கருவிளை, செங்கூதாளம்

                தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை

                கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்’                                                     (சிலம்பு. அழல்படு காதை: 40-42)

    என்று இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

                வணிக பூதமானது வெட்சி, தாழை, ஆம்பல், சேடல், நெய்தல், பூளை, மருதம் போன்ற பூக்களை முடித்த தலையை உடையதாக இருந்ததை

                ‘வெட்சி, தாழை, கள்கமழ், ஆம்பல்,

                சேடல், நெய்தல், பூளை, மருதம்,

                கூடமுத்த சென்னியன் ; நீடு ஒளிப்’

                                                (சிலம்பு. அழல்படு காதை: 68-70)

    என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

                வேளாண் பூதமானது கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பு (சிலம்பு. அழல்படு காதை: 93-94) என்ற நான்கு வகைப் பூக்களை இணைந்த மாலையை அணிந்திருப்பதாக இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். இவ்வாறு தெய்வங்களுக்கு மலர் வழிபாடு உள்ளதைப் போல பூதங்களுக்கும் வழிபாட்டில் மலர் இடம் பெற்றுள்ளதைச் சிலப்பதிகாரம் எடுத்தியம்புகிறது.

    சிலம்பில் மலர்கள் வழி கையாளப்படும் உத்திகள்

                இயற்கை சார்ந்த வாழ்வியல் கொண்ட பழந்தமிழர் தம்மைச் சுற்றியுள்ள தாவர வகைகளைத் தம் படைப்பின் கருத்தைத் தெளிவுபடுத்த உத்தியாகவும் பயன்படுத்தியுள்ளனர். சிலம்பில் இத்தகு உத்திகளை உவமை, உள்ளுறை, குறியீடு எனப் பல வகையில் காப்பியப் போக்கில் இளங்கோவடிகள் அமைத்துள்ளார்.

    உவமை உத்தி

                கவிஞன் தன் கருத்தின் அழகை வெளிப்படுத்தக் கையாளும் உத்திகளில் உவமை என்பது ஒரு பொருளின் சிறப்பு, அதன் நலன், அதன்மேல் கொண்டுள்ள பேரன்பு, அதன் வலிமை, இவைகள் உணர்த்தப் பயன்படுகிறது. இத்தகைய உவமைப்பொருள் என்பது உயர்ந்ததாக இருக்க வேண்டும். இதனை,

                ‘உயர்ந்தன மேற்றே உள்ளுங் காலை’                                                                                     (தொல்.உவமவியல் : 1224)

    என்று தொல்காப்பியர் சுட்டுகிறார். இந்நிலையில் சிலம்பு பல்வேறு மலர்களை உவமைப்பொருளாகக் காட்டியிருப்பது மலர்கள் பழந்தமிழர் வாழ்வில் பெற்ற உயரிய இடத்தை இனம் காட்டுகிறது. இம்மலர்களின் மணம், மென்மை, வண்ணம், தூய்மை, தன்மை, சுவை, ஒளி, எழில், கவர்ச்சி, மங்கலம் எனும் பத்துத் தன்மைகளின் அடிப்படையில் உவமப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

    கண்மலர்கள்

                முகத்திற்கு அழகு மட்டுமல்லாது உள்ளத்தின் தெளிவை, கருத்தைக் காட்டுவன கண்களே. இத்தகைய அழகிய கண்கள் சிலம்பில் விதவிதமான மலர்களாகத் தோற்றமளிக்கின்றன.

                ‘கயமலர்க் கண்ணி…………….’ (சிலம்பு. மனையறம்படுத்த காதை : 11)

    என்று கண்ணகி பெரிய மலர்போலும் கண்ணையுடையவள் என்றும்

                ‘மாமலர் நெடுந்கண் மாதவி……………..’

                                               (சிலம்பு. அரங்கேற்று காதை : 170)

    என்று பெரிய மலர்போன்ற நீண்ட கண்களையுடைய மாதவி என்றும்

                ‘………………. கழுநீர் போலக் கண்ணகி கரும்                                                                                                                    கணும்’

      (சிலம்பு. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை : 236, 251)

                கழுநீர் மலர் போன்ற கண்ணகியின் கரும் கண் என்றும் சிலம்பில் இரு மலர்களாக மலர்ந்த கண்ணகி, மாதவி இருவரின் கண்களுக்கும் மலர்களை இளங்கோவடிகள் உவமைப்படுத்தியுள்ளார்.

                ‘தாமரை செங்கண் தழல் நிறக் கொள்ள’ (சிலம்பு. நடுகல்காதை : 110)

    எனும் அடிகளில் சேரனின் இயல்பானத் தாமரை போன்ற சிவந்த கண்கள் நெருப்பு நிறத்தைக் கொண்டன என உவமைப்படுத்தியுள்ளார்.

    முகத்துறுப்புகளும் மலர்களும்

                கண்கள் மட்டுமல்லாது பிற முகத்துறுப்புகளுக்கும் மலர்கள் உவமையாகச் சொல்லப்பட்டுள்ளன என்பதைப் பின்வரும் அடிகளால் அறிய முடிகிறது.

                ‘எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்

                கருநெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு

                உள்வரிக் கோலத்து உறுதுணை தேடிக்

                கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்’

       (சிலம்பு. இந்திர விழவு ஊர் எடுத்த காதை : 214-217)

    எனும் அடிகளில் தாமரை போன்ற முகத்தில் ஒளிபொருந்திய இலவம் பூப்போன்ற இதழ்களையும், முல்லை மொக்குப் போன்ற பற்களையும், குமிழம் பூ போன்ற மூக்கையும் உடைய பெண்கள் எனக் கூறி முகத்துறுப்புகள் அனைத்தையும் மலர்களாக அமைத்துள்ளார்.

    மலர்க் கைகள்

                கோவலன், கண்ணகியின் உறுப்பு நலனைப் புகழும் போது,

                ‘………… நின்மலர்க்கையின் நீங்காது’

                                (சிலம்பு. மனையறம்படுத்த காதை : 60)

    என்று கண்ணகியின் மலர்ப்போன்ற கையினின்றும் பைங்கிளிகள் நீங்காது தங்கியிருக்கின்றன என உரைக்கின்றான்.

                ‘காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து’

                                                      (சிலம்பு. கடல் ஆடு காதை : 98)

    எனும் அடிகளில் மாதவி தன்னுடைய காந்தள் மலர் போன்ற மென்மையான விரல்களில்  பல்வேறு வகையான மோதிரங்கள் அணிந்திருந்ததாக இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். இவ்வாறு பெண்களின் கைகளுக்கு மலர்கள் ஒப்புமைப்படுத்தப் பட்டுள்ளன.

    மலரடிகள்

                இறைவனது பாதங்களை மலர்களுடன் ஒப்பிடுதல் பழந்தமிழர் மரபு. இதனடிப்படையில் திருமாலின் பாதங்களை,

                ‘திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்!

                                                                                    நின்செங்கமல

                இரண்டு அடியான் மூவுலகமும் இருள்தீர                                                                                              நடந்தனையே’

                                                  (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை :34)

    எனும் அடிகளில் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்து போற்றும் திருமாலே உனது சிவந்த தாமரை போன்ற இரண்டு பாதங்களால் இந்த மேல், நடு, கீழ் எனும் மூன்று உலகங்களின் துன்பம் நீங்க நடந்தாயே என்று திருமாலின் பாதங்களைத் தாமரை மலருடன் உவமைப்படுத்தியுள்ளார்.

                ‘……………………. மலையர் தம் மகளார்

                செயலைய மலர்புரை திருவடி தொழுதோம்’                                                            (சிலம்பு. குன்றக்குரவை : 16)

    என்று மலை நாட்டினர் மகளாகிய வள்ளியினது அசோக மலர் போன்ற திருவடிகளைத் தொழுதோம் என்று வள்ளியின் பாதங்களுக்கு அசோக மலர் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

                இறைவனின் திருவடிகள் மட்டுமல்லாது கண்ணகியின் பாதங்களுக்கும் மலர் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளது. கண்ணகியின் சிறப்பைச் சாலினி உரைக்குமிடத்தில்

                ‘இணை மலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக்’

                                                               (சிலம்பு. வேட்டுவ வரி : 45)

    எனக் கண்ணகி தாமரை இணை மலர்கள் போன்ற சிறிய அடிகளை உடையவள் என்பதைச் சிலம்பு எடுத்துரைக்கிறது.

    உந்திக் கமலம்

                திருமால் தாமரை மலர் போன்ற உந்தியை உடையவன் என்பதை

                ‘மலர்க்கமல உந்தியாய் மாயமோ                                                                                                                     மருட்கைத்தே’

                                                  (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை : 32)

    என்றும்

                ‘பெரியவனை, மாயவனைப் பேர்உலகம்                                                                                                                 எல்லாம்

                விரிகமல உந்தியுடை விண்ணவனைக்,                                                                                                                  கண்ணும்’

                                                 (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை : 36)

    எனும் அடிகளில் திருமால் இந்தப் பெரிய உலகத்தை எல்லாம் அடக்கியுள்ள விரிந்த தாமரைப் போன்ற உந்தியை உடையவன் என்றும் உவமிக்கின்றார்.

                இவ்வாறு தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோரின் உடலுறுப்புகளுக்கு மலர்களை ஒப்புமைப்படுத்தி உவமை உத்தியினை இளங்கோவடிகள் வெளிப்படுத்தியுள்ளார்.

    வண்ணமும் மலர்களும்

                வண்ணம் நிறைந்த மலர்களைக் காணும்போது மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். வண்ணம் பற்றிய சிந்தனை என்பது மனிதனுக்கு இயற்கை பொருள்களிடம் இருந்து கற்றுக் கொண்டதுதான். அதிலும் குறிப்பாக மலர்கள் வண்ணத்தாலும் மணத்தாலும் வேறுபாட்டைக் கொண்டவை. ஒவ்வொரு மலரும் தனக்கு எனக் குறிப்பிட்ட வண்ணத்தையும் மணத்தையும் கொண்டுள்ளன. இத்தகு மலர்களின் வண்ணமானது சிலம்பில் பல்வேறு இடங்களில் உவமைக்காக இளங்கோவடிகள் கையாளுகின்றார்.

                ‘மாரிப் பீரத்து அலர் வண்ணம் மடவாள்

                 கொள்ளக்  கடவுள் வரைந்து

                ஆர்இக் கொடுமை செய்தார்? என்று

                அன்னை  அறியின்  என் செய்கோ’

                                                                      (சிலம்பு. கானல்வரி : 36)

    எனும் அடிகளில் தலைவியானவள் மழைக்காலத்தில் மலரும் பீர்க்கம்பூ போன்ற மஞ்சள்நிற மேனியளாய் நிற வேறுபாடு கொள்ள, இக்கொடுமையைச் செய்தவர் யார் என்று அன்னை அறிந்தாள் நான் என் செய்வேன்? என்று தோழிக் கூறுவதாக அமைத்துள்ளார். இங்கு தலைவியின் மேனி வண்ண மாறுபாட்டிற்குப் பீர்க்கம்பூ உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

                ‘தூநிற வெள்ளை அடத்தாற்கு உரியள், இப்

                பூவைப் புது மலராள்’

                                                  (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை : 12)

    தூய்மையான வெள்ளைக் காளையின் வலிமையை அடக்கியவனுக்கு உரியவள் இந்தப் காயாம்பூ போன்ற வண்ணத்தினை உடையவள் என்றும்

                ‘ஆயர்பாடியின் அசோதை பெற்றெடுத்த

                பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ’

                                     (சிலம்பு. கொலைகளக் காதை : 46-47)

    ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்தக் காயாம்பூப்போலும் வண்ணமுடைய கண்ணன் என்றும்

                ‘மாயம்செய் வாள்அவுணர் வீழ, நங்கை                                                                                                       மரக்கால் மேல்

               வாள்அமலை ஆடும் ஆயின்

              காயா மலர்மேனி ஏத்தி, வானோர்

              கைமெய்மலர் மாரி   காட்டும் போலும்’

                                                                   (சிலம்பு. வேட்டுவ வரி : 12)

    அசுரர்கள் வீழ்ச்சியடைய, கொற்றவை மரக்கால் அணிந்து வாள் கூத்தை ஆடுவாள் ஆயின், காயாம் பூப் போலும் மேனியுடைய அவளைப் புகழ்ந்து தேவர்கள் மலர் மழையைச் சொரிவார்கள் என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

                இங்கு கண்ணன், கொற்றவை எனும் தெய்வங்கள் அடர் நீல வண்ணம் உடையவை என்பதைக் குறிக்கவும் இடையர் குலப்பெண் கருமை வண்ணம் உடையவள் என்பதைச் சுட்டவும் காயாம் பூவினை இளங்கோவடிகள் உவமையாக எடுத்துரைக்கின்றார்.

    குறிப்பு உத்தி

                கவிதையில் ஒரு பொருளைக் குறிப்பிட்டு அதன் வாயிலாக, வேறொரு செய்தியை அறிவுறுத்துதல் குறிப்பு. இதனை, ‘ஒரு பொருளானது (Object) ஒரு சார்பாண்மைப்படுத்தலின் மூலம் ஒரு செய்தியை ஒரு பெறுநருக்குத் தெரிவிக்கிறது’ (குறியியல் – ஒரு சங்கப்பார்வை முனைவர் மொ.இளம்பரிதி ப.10) இளங்கோவடிகள் இதனை மிகச் சிறந்ததொரு உத்தியாக உருவாக்கியுள்ளார். பின்வரக்கூடிய நிகழ்ச்சிகளை முன்பு மறைமுகமாகக் குறிப்பால் உணர்த்த மலர்களைக் குறியீடாகக் காட்டியுள்ளார்.

                மங்கல வாழ்த்துப் பாடலில் மணமக்களை மலர்தூவி வாழ்த்தினர் என்று உரைக்காது மலருக்கு அடைமொழியாகச் சின்மலர் என்பதை,

                ‘காதலன் பிரியாமல், கவவுக்கை நெகிழாமல்

                தீது அறுக! எனஏத்தி சின்மலர் கொடுதூவி’

                                                            (சிலம்பு. மங்கலவாழ்த்து : 61-62)

    என்று குறிப்பிடுகிறார். இது பின்வரும் நாளில் கண்ணகிக்கு ஏற்பட இருக்கும் சிறுமையைக் குறிப்பிடுவதாக அமைகின்றது.

                இதே போன்று கவுந்தியடிகள், மாதரியிடம் கண்ணகியை அடைக்கலம் கொடுக்குமிடத்தில்,

                ‘மங்கல மடந்தையை நல்நீர் ஆட்டிச்

                செங்கயல் நெடும்கண் அஞ்சனம் தீட்டி

                தேமென் கூந்தல் சின்மலர் பெய்து’

                                    (சிலம்பு. அடைக்கலக்காதை : 131-133)

    எனக் குறிப்பிட்டுக் கண்ணகிக்கு வர இருக்கும் தீமையை முன்பே உணர்த்துவது போல் அவள் கூந்தலில் சின்மலர் பெய்து என உரைக்கின்றார்.

                ‘தாதுசேர் கழுநீர் தண்பூம் பிணையல்

                போதுசேர் பூங்குழல் பொருந்தாது ஒழியவும்’

                        (சிலம்பு. புறம் சேரி இறுத்த காதை : 21-22)

    எனும் அடிகளில் மண்மகள் கண்ணகியின் துயர்கொண்டு வருந்தும் நிலையில் மகரந்தப் பொடியுடன் கூடிய குளிர்ச்சி பொருந்திய கழுநீர் மாலை முல்லை மலர் சேர்ந்த மென்மையான கூந்தலில் சூடாது நீங்கவும் என உரைத்துக் கண்ணகிக்கு வர இருக்கும் தீங்கைச் சுட்டுவதாக அமைத்துள்ளார். கோவலன் தான் கண்ட கனவினை உரைக்கும்போது,

                ‘மாமலர்வாளி வறுநிலத்து எறிந்து’

                                             (சிலம்பு. அடைக்கலக்காதை : 101)

    என்று மன்மதன் மலர் அம்புகளை வறண்ட நிலத்தில் எறிந்துவிட்டு செயலற்று நிற்பதாக காட்டுவது பின்னாளில் கோவலன் கண்ணகி வாழ்வில் ஏற்படப் போகும் நிரந்தரப் பிரிவைக் காட்டுகிறது.

                வையை ஆறானது தன் இரு கரைகளிலும் நிறைந்த மரம், செடி, கொடிகளின் பூக்களைச் சுமந்து வரும் காட்சியில் குறிப்புப்பொருளை இளங்கோவடிகள் கையாண்டுள்ளார்.

                ‘குரவமும், வகுளமும், கோங்கமும், வேங்கையும்

                ……………………………………………………………………………………

                ……………………………………………………………………………………

                கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்’

                      (சிலம்பு. புறஞ்சேரி இறுத்த காதை : 151-173)

    எனும் அடிகளில் வையை ஆறானது குரவும், மகிழும், கோங்கும், வேங்கையும், வெண்கடம்பும், சுரபுன்னையும், மஞ்சாடி மரமும், மருதும் உச்சிச் செலுந்திலும் செருந்தியும், செண்பகமும், பாதிரியும், குருகத்தி, செம்முல்லை, முசுட்டை, மோசி மல்லிகை, நறுந்தாளி, வெட்பாலை, பிடவம், பகன்றை, மயிலை, இருவாட்சி, முள்முருங்கு, முல்லை, போன்ற மலர்களைப் பூந்துகிலாகக் கொண்டு கண்ணகிக்கு மதுரையில் ஏற்படப்போகும் துன்பங்களை உணர்ந்தவள் போல் நறுமலர்களாகிய ஆடையினை முழுவதும் போர்த்திக் கொண்டு, அடக்க முடியாத கண்ணீரை மறைத்து அடக்கிக்கொண்டு, புனல் ஆறு அன்று பூம்புனல் ஆறு எனக் கருதும் நிலையில் இருந்ததாகக் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும்,

                ‘கடுநெடும் குவளையும், ஆம்பலும், கமலமும்

                …………………………………………………………………………….

                …………………………………………………………………………….

                கண்ணீர் கொண்டு கால் உற நடுங்கப்’                                     (சிலம்பு. புறஞ்சேரி இறுத்த காதை : 184-188)

    என்று கரிய நீண்ட குவளை மலரும், ஆம்பலும், தாமரை மலரும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் நிகழப்போகும் துன்பத்தை முன்னரே அறிந்து கொண்டன போல் வண்டுகள் ஒலி அழுகை ஒலிபோல் விளங்க அம்மலர்கள் காற்றில் அசைவது, காலால் நடுங்கி கண்ணீர் விடுவது போல் இருப்பதாகக் காட்டியிருப்பது மலர்களைக் கொண்டு இளங்கோ உருவாக்கிய குறிப்பு உத்தியை உணர்த்துகிறது.

     உள்ளுறை உத்தி

                உள்ளுறை என்பது உள்ளொன்று வைத்து அதற்கு இணையான புறம் ஒன்றைக் கூறுவதாகும். இவ்வுத்தி முறையினைக் கானல்வரி பாடல்களில் பல்வேறு இடங்களில் காண முடிகிறது.

                ‘மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார்

                                                                                                    செங்கை

                …………………………………………………………………………………..

                …………………………………………………………………………………..

                பொறைமலி பூம்கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர்’

                                                                      (சிலம்பு. கானல் வரி : 27)

    எனும் அடிகளில் பிறர் அறியாமல் மறைவாக மணந்தவர்களை, வன்மையான பரதர் வாழ் பாக்கத்தில் உள்ள பெண்களின் சிவந்த முன் கைகளில் அணியப்பெற்ற வளையல்கள், தலைவன் பிரிவால் தலைவி மெலிய வீழ்தன. பிறர் அறிய அவள் செயலைத் தூற்றுகின்றன. இதை ஏழையாகிய யாம் எங்ஙனம் அறியாதிருப்போம். அறிவோம் ஐயனே எங்கள் புகார் நகர வண்டுகள் நெருக்கிய கிளைகளையுடைய மிகுதியாகப் பூத்த புன்னைமரக் கிளையில் அன்னப்பறவை ஏற, அன்னத்தை முழுமதியாகவும், புன்னைப் பூக்களை விண்மீன்களாகவும் கருதி, ஆம்பல் மலர்கள் மலர ஒலிக்கும் புகார் எங்கள் ஊர். இவ்வாறு செயற்கையைப் பார்த்து இயற்கை என நினைத்து ஏமாறும் ஊர் எங்கள் ஊர். அது போன்று எம் தலைவியும் உமது பேச்சை உண்மை என நம்பி ஏமாறுகிறாள் என்று தோழி உரைப்பதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இங்கு ஆம்பல் மலரின் மலர்ச்சியில் உள்ளுறைப் பொருள் உணர்த்தப்படுகிறது.

    மலர்கள் பயன்பாடு

                மனிதரின் மனதிற்கு மகிழ்வினைத் தரும் மலர்கள் பொதுவாக ஆண் பெண் இருவரும் தங்களை அலங்கரிக்க மாலையாகச் சூடுதல் என்ற நிலையில் மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்வில் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தியுள்ளனர்.

    மடலும் மலர்களும்

                மாதவி, கோவலனுக்கு எழுதிய மடலில் தாழையின் வெண்மையான இதழை மடல் ஏடாகக் கொண்டு இருபக்கங்களிலும் சண்பகம், மாதவி, பச்சிலை, பித்திகை, மல்லிகை, இவைகளை வெட்டிவேரால் மிடைந்து செங்கழுநீர் மலர் இதழ்கள், கத்திகை இதழ்களுடன் சேர்த்துக் கட்டியது என்று வேனில் காதையில் (45-50) உரைப்பதும், அன்றைய மலர் பயன்பாட்டை எடுத்தியம்புகிறது.

    பட்டங்களும் மலர்களும்

                மன்னர்கள் சிறந்த வணிகர்களுக்கு எட்டி என்ற பட்டத்தை வழங்கினர். பட்டத்தின் சின்னமாக எட்டிமரத்தின் பூங்கொத்துப் போன்று பொன்னால் செய்து வழங்கினர். இந்த எட்டிப் பட்டம் பெற்ற சாயலன் பற்றிய குறிப்பு அடைக்கலக் காதையில் (163) இடம் பெற்றுள்ளது. இதேபோல் காவிதி என்பதும் ஒரு மலர். இப்பூவின் பெயரால் பொற்பூவானது அமைச்சர், கணக்கர், வேளாளர் ஆகியோருக்குக் காவிதிப் பட்டத்திற்குப் பரிசளிக்கப்பட்டுள்ளது. இக்காவிதிப் பட்டம் பெற்றவர்கள் பாண்டியன் அவையில் இருந்ததை,

                ‘காவிதி, மந்திரக் கணக்கர் – தம்மொடு’ (சிலம்பு. அழற்படு காதை : 9)

    என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

    பரிசும் மலரும் 

                சேரன் செங்குட்டுவன் போரில் வெற்றி பெற்ற வீரர்களை வருக என அழைத்து பொன்னாலாகிய வாகை மலரினைப் பரிசாக அளித்தான் என்பதை,

                ‘வருக தாம் என வாகைப் பொலம்தோடு’  (சிலம்பு. நீர்ப்படைகாதை : 43)

    எனும் அடிகள் எடுத்தியம்புகிறது.

    யாழ், வாள், வெண்கொற்றக்கொடைக்கு மாலை சூட்டுதல்

                மாதவி யாழுக்குக் கோட்டுப்பூ சூடியதை,

                ‘சித்திரப் படத்துள் புக்கு செழும்கோட்டின் மலர்புனைந்து’

                                                                         (சிலம்பு. கானல்வரி : 1)

    என்றும்

                சேரன் தன் வாளுக்கு வஞ்சி பூ மாலை சூட்டியதை,

                ‘வாய் வாள் மலைத்த வஞ்சி சூடுதும்’ (சிலம்பு.காட்சிக்காதை : 149)

    என்றும்

                சேரன் வெண்கொற்றக்கொடைக்குப் பூமாலை அணியப் பெற்றதை,

                ‘மறம்மிகு வாளும், மாலை வெண்குடையும்’  (சிலம்பு.கால்கோள் காதை : 44)

    என்றும் சிலம்பில் காணமுடிகிறது.

    பூந்தெப்பம்

                பெண்கள் பூக்கள் பொருந்திய தெப்பத்தில் ஏறிச்சென்று புனல் விளையாட்டில் மகிழ்ந்ததை,

                ‘பூம்புணை தழீஇப் புனல் ஓட்டு அமர்ந்து’  (சிலம்பு. ஊர் காண் காதை : 75)

    எனும் அடிகள் உணர்த்துகின்றன. இவ்வாறு பழந்தமிழரின் வாழ்வில் மலர்கள் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    தென்றலும் மலர்களும்

                கோவலனும், கண்ணகியும் ஏழுநிலை மாடத்தில் இருக்கும்போது தென்றலானது

                ‘கழுநீர், ஆம்பல், முழுநெறிக்குவளை

                ………………………………………………………………

                ……………………………………………………………..

                தாது தேர்ந்து உண்டு ; மாதவர் வாண் முகத்து’

                                                                (சிலம்பு. மனையறம்படுத்தக் காதை : 14-19)

    என்று செங்கழுநீர்ப் பூ, சோதாம்பல் பூ, இதழ் ஒடியாத முழுவதும் விரிந்த குவளைப்பூ, தாமரை, வயல்களில் உள்ள நீர்ப்பூக்கள், தாழை மடலில் விரிந்த வெண்நிறப்பூக்கள், மாலை போல் மலர்ந்து தொங்கும் மாதவிப் பூ, சண்பகப் பூ போன்ற பல்வேறு மலர்களின் மணங்களையும் கொண்டு வந்ததாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலம்பில் இளவேனிற் வருணனை, சோலைகள் வருணனை, கடற்கரை தோற்றம் வருணனை, மருவூர்பாக்க அங்காடிகளில் பூக்கள் விற்பனை என்று பல்வேறு இடங்களில் இளங்கோவடிகள் மலர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

    சின்மலரும் – பூமழையும்

    இயற்கை வாழ்த்துடன் தொடங்கப்படும் சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடலில் சின்மலர் தூவி வாழ்த்துப் பெற்ற கண்ணகி,

                ‘……………. வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து

                குன்றவரும் கண்டு நிற்பக்கொழுநனொடு கொண்டு

                போயினார்’ (சிலம்பு. குன்றக்குரவை : 8)

    என இறுதியில் தேவர்கள், பூக்களை மழைபோல் சொரிந்து, கண்ணகியைக் கோவலனோடு அழைத்துச் செல்வதாகக் காட்சிப்படுத்தியிருப்பது சிலம்பில் இளங்கோவடிகள் மலர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் இயற்கை சார்ந்த பழந்தமிழர் வாழ்வினையும் நன்கு உணர்த்துகிறது.

                மேற்சுட்டிய கருத்துகளின் வழி ‘இயற்கையோடு (Nature) உள்ளுணர்வை (Psychology) இணைத்துப் பார்க்கும் முறை அறிவியல் வளர்ந்தபின் தோன்றியதன்று மிகப் பிற்காலத்தது. ஆனால் (சங்க காலத் தமிழர் இயற்கை நிகழ்ச்சிகள், செய்திகள் (Natural Phenomenon) எல்லாவற்றையும் நுண்ணிய உள்ளுணர்வோடு இணைத்துப் பார்த்திருக்கின்றனர்’ சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், பி.எல்.சாமி ப.40, 41) எனும் கருத்துக் காப்பியக் காலத் தமிழர்களுக்கும் பொருந்தியிருப்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

    தொகுப்புரை

    ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் மலர்ந்த மலர்கள் வழி இக்கட்டுரையானது

    • இளங்கோவின் கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ எனும் தாவர வகைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
    • சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் அடையாளச் சின்னமாக மலர்கள் இருந்ததையும், பழந்தமிழர் தெய்வ வழிபாடு, பூத வழிபாட்டில் மலர்களைப் பயன்படுத்தியுள்ளதை இனம் காட்டுகிறது.
    • இளங்கோவடிகள் மலர்களை உவமை, குறிப்பு, உள்ளுறை எனக் காப்பிய உள்ளடக்கத்தைச் சொல்லும் உத்தி முறைகளில் கையாண்டுள்ளதை எடுத்துரைக்கிறது.
    • மேலும் பழந்தமிழர் வாழ்வில் மலர்களைப் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தியிருப்பதையும் எடுத்தியம்புகிறது.

    துணைநூற்பட்டியல்

    • பி.எல்.சாமி, சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம், 1967, சென்னை-1.
    • பி.எல்.சாமி, இலக்கியத்தில் அறிவியல், சேகர் பதிப்பகம், 1982, சென்னை-78.
    • கோவை இளஞ்சேரன், இலக்கியம் ஒரு பூக்காடு, இராக்போர்ட்டு பப்ளிகேசன், 1982, சென்னை-2.
    • கு.வி.கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், பாரதிதாசன் பல்கலைக்கழகம், 2009, திருச்சி-24.
    • மொ.இளம்பரிதி, குறியியல் ஒரு சங்கப் பார்வை, காவ்யா பதிப்பகம், 2006, சென்னை-24.
    • ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை, சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம், 2013, சென்னை – 14.
    • செ.வைத்தியலிங்கம், தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1996, சிதம்பரம்-01.

     ========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சிலப்பதிகாரத்தில் மக்களின் வாழ்க்கையோடு  மலர்கள் பிரித்தறியா வண்ணம் இணைந்து காணப்படுவதை ஆய்வாளர் பல இடங்களில் சான்று காட்டி விளக்கியுள்ளார். குறிப்பாக, பழந்தமிழர் வாழ்க்கை முறைகள், மலர்களுக்கும் மன்னருக்குமான தொடர்புகள், உவமை உத்திகள் என்று பன்முகங்களில் அடிப்படைக் கருத்துகளை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

    ஆய்வின் முடிவாக மேலைநாட்டார் பதினெட்டாம் நூற்றாண்டில் மரம், செடி கொடி, நீர் ஆகியவற்றில் பூக்கும் பூக்கள் பற்றிய வகைப்பாட்டைக் கூறியுள்ளனர். ஆனால் இளங்கோவடிகள் இப்படியான பாகுபாட்டை கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார் என்பதையும் மக்களின் பண்பாட்டில் மலர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

    குறுகச் சொல்லப்பட்ட இக்கருத்துகளை விரிவாக, ஒவ்வோர் உப தலைப்பும் ஓர் அத்தியாயமாக எடுத்துச் செல்லும் அளவு சிலம்பில் கருத்துகள் குவிந்து கிடக்கின்றன. மலர்கள் பற்றிய எந்தவொரு கருத்தும் விடுபட்டுப் போகக் கூடாது என்ற முனைப்புடன் ஆய்ந்தெழுதிய கட்டுரை ஆசிரியருக்குப் பாராட்டுகள்!

    மேலும் ஆய்வாளர் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள மலர்களுக்கான தாவரவியல் பெயர்களைப் பதிவு செய்துள்ளதால் மலர்களின் மருத்துவக் குணங்கள் சார்ந்த பதிவுகள் குறித்தும் பார்த்திருக்கலாம்.

    ===========================================

    Share
  • (Peer Reviewed) கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்

    முனைவர் ஆ.ராஜா
    அருங்காட்சியகத் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்-10

    கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்
    (தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகச் சான்றுகளின் அடிப்படையில்)

    கொடுமணல் என்ற ஊர், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் காவிரியாற்றின் கிளை ஆறான நொய்யல் ஆற்றின் வடகரையில் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து, இவ்வூரைக் ‘‘கொடுமணம்’’ என்று குறிப்பிடுகிறது. இத்தகைய சங்க கால இலக்கியங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்படும் கொடுமணலில் 1985-1986ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினரால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்தகைய அகழாய்வில் கண்டறியப்பட்ட பெருங்கற்காலத்தைச் சார்ந்த  தடயங்கள் பற்றியும், குறிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ள கொடுமணல் அகழாய்வுத் தடயங்கள் குறித்தும்  இக்கட்டுரை விளக்குகிறது.

    சங்க காலத்தில் அரிய கற்களைக் கொண்டு அணிகலன்களை உருவாக்கக்கூடிய தொழிற்கூடமாகக் கொடுமணல் விளங்கியிருந்தமையைக் ‘‘கொடுமணம் பட்ட வினை மான் அருங்கலம்’’ என (பதிற்றுப்பத்து 74) அரிசில்கிழாரும், ‘கொடுமணம் பட்ட நன்கலம்’ (பதிற்றுப்பத்து 64) எனச் சங்கப் புலவர் கபிலரும் குறிப்பிடுவதன் வாயிலாக அறிய முடிகிறது. இவ்வூர், சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூவூரையும், கேரளத்திலுள்ள துறைமுகப் பட்டினமான முசிறிப்பட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது.

    தொல்பொருட்கள்

    கொடுமணலிலுள்ள வாழ்விடப் பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட போது, அகழாய்வுக் குழிகளின் பல நிலைகளில் சுவரின் அடிப் பகுதிகள், வீட்டுத் தரை எச்சங்கள், செங்கற்கள், கூரை ஓடுகள், மரத்தூண் ஊன்றப்பட்ட குழிகள், அடுப்புப் பகுதிகள் ஆகியவற்றோடு கொல்லர் உலைகளும் (இரும்பு உருக்கு உலைகள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வகழாய்வில் பல உலைகள், வட்ட வடிவில் அமைந்திருந்ததோடு, உலைகளின் கழிவு அல்லது கசடு அதிகளவில் காணப்பட்டன. இவ்வுலைகளில் சில, செம்பு உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும், கொடுமணல், ரோமானிய நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தமைக்கான பல சான்றுகள் இங்கே கிடைத்துள்ளன. குறிப்பாக, மேற்பரப்பில் கிடைத்த ரோமானியக் காசும், அகழாய்வுக் குழிகளில் கிடைத்த ரோமன் வகை ‘ரூலெடட் மண்கல’ச் (Rouletted Pottery) சில்லுகளைக் குறிப்பிடலாம்.

    படம் : 1 & படம் : 2
    கொடுமணல்: குறியீடுகள் பொறித்த கறுப்பு-சிவப்பு கிண்ணம் மற்றும் சிவப்பு பானை ஓடு
    (நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

    மேலும், இரும்பாலான கூர்முனைகள், கத்திகள், அரிவாள்1, செம்புப் பொருட்கள், கார்னீலியன் மணிகள், பச்சைக்கல் (Beryl), நீலம் (sapphire), வைடூரியம் (lapis lazuli), ஜாஸ்பர் (Jasper), அகேட் (agate), கார்னட் (carnet) ஆகிய அரிய கல்மணிகளும் கிடைத்துள்ளன. சங்கு அறுக்கும் தொழில் நடைபெற்றதற்கான தடயங்களான சங்கு வளையல் துண்டுகளும் (படம்:5) கிடைத்துள்ளன. இவ்வகழாய்வில் ஏராளமான சூதுபவள மணிகள் கிடைத்துள்ளன. அம்மணிகளில் சில, தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரிய வகை சூதுபவள மணிகளைப் பெருங்கற்கால மக்கள் உருவாக்கியதற்கான தொழிற்கூடம் கொடுமணலில் இருந்துள்ளது என்பதை இங்கே கிடைக்கக்கூடிய மிகுதியான மணிகளின் வாயிலாக அறிய முடிகிறது. இத்தொழிற்கூடத்தில் உருவாக்கப்பட்ட மணிகள், முசிறிப் பட்டினத்தின் வழியாக மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் வாயிலாகப் பண்டைய மக்கள் கடல்கடந்த வணிகத்தை அறிந்தவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    படம் : 5
    சங்கு வளையல் துண்டுகள்
    (நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

    கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வாயிலாக இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருவாக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும் இருந்தமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தொழிற்கூடங்கள் சுமார் 500 ஆண்டுகள் நின்று நிலைத்துள்ளன எனக் கா.ராஜன் கருதுகிறார். கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களை வாங்குவதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வணிகர்கள் வந்துள்ளனர். குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து வணிகர்களும் கைவினைஞர்களும் இங்கு வந்துள்ளதைத் தமிழ் மயமாக்கப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட்பெயர்களும், வணிகர் பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன.

    எல்லாவற்றிற்கும் மேலாகக் கங்கைச் சமவெளிப் பகுதியின் பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இத்தகைய மட்பாண்டங்கள், கங்கைச் சமவெளிப் பகுதியில் கி.மு 6ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இம்மட்பாண்டம், கி.மு. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும்2. மேலும், புலிப்பொம்மை சிவப்பு, ஊதாக்கல் பதிக்கப்பட்டு அழகாகச் செய்யப்பட்டுள்ளது. சில விலங்குகளின் எலும்புகளும் பறவைகளின் எலும்புகளும் கிடைத்துள்ளமையால் இம்மக்கள் புலால் உணவை அருந்தியமை தெரிகிறது.3

    மேலும், ஈமக் காட்டில் உள்ள பெருங்கற்படைச் சின்னங்கள், நீத்தோர் நினைவாக உருவாக்கப்பட்ட கல்லறைகளாகும். இவற்றில் ஒரு சிலவே மண்ணால் செய்யப்பட்ட தாழிகளாகும். இப்பெருங்கற்படைச் சின்னங்கள் பெரிய கற்பலகைகளைக் கொண்டு, நீள்சதுரம் அல்லது சதுர வடிவில் நிலத்துக்கடியில் அமைக்கப்பட்டன. இக்கற்பலகைகள் ஒரு டன் முதல் ஆறு டன் வரை எடையுள்ளவையாகக் காணப்பட்டன. தென்னிந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் குறிப்பாகக் கல்லறைகளில் மிகப் பெரியவை கொடுமணலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இக்கல்லறைகளில் இடுதுளைகள் (Porthole) இருந்தன. கல்லறைக்குள்ளும் வெளியிலும் நீத்தோர் நினைவாகப் படைக்கப்பட்ட மட்பாண்டங்கள், இரும்பு, செம்புப் பொருள்கள், மணிகள் (Beads) ஆகியவற்றையும், வெண்மை நிறப் படிகக் கற்கள் (Quartz pieces) ஆகியவை கொண்டும் நிரப்பப்பட்டன. மேலும், கறுப்புநிறத் தாங்கிகள் (Ring stand), மூடிகள் (Lids),  கறுப்பு சிவப்பு நிறக் கிண்ணங்கள் (Bowls), குறியீடுகள் மற்றும் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், மெருகூட்டப்பட்ட கறுப்புசிவப்பு, சிவப்பு வகை மண்கலங்கள், நான்கு கால்களுடன்கூடிய சிவப்பு நிறச் சாடிகள் (Jars:படம்.4), தட்டுகள், சிறிய பெரிய இரும்பு வாள்கள் (Small and big swards), கத்திகள், அம்பு நுனிகள், ஈட்டி நுனிகள், கடப்பாரை, உளி, கம்பி, ஆணி, அரிவாள், புலிப் பொம்மை, வாணலி போன்ற வடிகட்டி, கரண்டி, ஊசி, ஊதுகுழாய், கம்பி, மோதிரம், ஒலிமணி, செம்பு மற்றும் வெண்கலப் பொருள்கள் ஆகியவை, அகழாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

    படம் : 4
    நான்கு கால்களுடன் கூடிய சாடிகள்
    (நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

    இங்கு கண்டறியப்பட்ட பொருட்களில் சில, தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பது சிறப்புக்குரியதாகும். இவ்வூரில் மிகப் பரந்த அளவில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள், உலக அளவில் பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    குறியீடுகளும் எழுத்துப் பொறிப்புகளும்

    குறியீடுகள் என்பவை, பானையின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ காணப்படும். இந்தியாவில் பானைகளில் கீறப்பட்டுள்ள குறியீடுகள் பற்றிய ஆய்வினை, 1881இல் பிரான்பில் என்ற அறிஞர் தொடங்கினார். அதன் விளைவாக இ.எச்.ஹண்ட், ஜி.யஜ்தானி, பி.கே.தாபர், பி.பி.லால் போன்ற ஆய்வாளர்கள் தோற்றம், வளர்ச்சி மற்றும் குறியீடுகளுக்கு இடையிலான தொடர்பு ஆகியவற்றை அகழாய்வுகளில் கிடைத்த பானைப் பொறிப்புகள், காசுப் பொறிப்புகள், முத்திரைகள் முதலியவற்றிலிருந்து ஆராய்ந்துள்ளனர்.4

    கொடுமணலில் தமிழ்ப் பல்கலைக்கழகம், புதுச்சேரிப் பல்கலைக்கழகம், மத்திய தொல்பொருள் அளவீட்டுத் துறை ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்ட அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மட்பாண்ட ஓடுகள் பலவற்றில் கீறல் குறியீடுகளும் எழுத்துப் பொறிப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், கரூர், திருக்காம்புலியூர், உறையூர், அழகன் குளம், வல்லம் போன்ற ஊர்களிலும் குறியீடுகள் கிடைத்துள்ளன. அதே போன்று தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமான குறியீடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குறியீடுகள், பொறிப்பு பெற்ற பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் கொடுமணலில் கிடைத்த குறியீடுகள் 1456இல் 58 குறியீடுகள் தனிக் குறியீடுகளாவும், 24 அடிப்படைக் குறியீடுகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன5.

    இக்குறியீடுகள் ஏதோ ஒருவகையான தகவல்களை வெளிப்படுத்தக் கூடியவையாக இருந்திருக்க வேண்டும். எழுத்துகள் உருவாவதற்கு முன், மக்கள் தங்களின் எண்ணங்களையும் செயல்களையும், அவர்களைப் பற்றிய பதிவுகளையும் குறியீடுகள் வாயிலாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.

    தமிழ் – பிராமி எழுத்துகள்

    ஆரம்ப காலத்தில், குறியீடுகள் மற்றும் ஓவியங்கள் வாயிலாக மனிதர்கள், தங்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் செயல்பாடுகளையும் வெளிப்படுத்தி வந்தனர். அதன் பின் சிந்திக்கத் தொடங்கிய மனிதர்கள் குறியீடுகளிலிருந்து வளர்ச்சி பெற்று எழுத்துகளைக் கண்டறிந்து உருவாக்க முற்பட்டனர். பண்டைத் தமிழர்கள், கி.மு.500 வாக்கில் எழுத்துகளின் பயனை அறிந்தவர்களாக இருந்துள்ளனர். பொதுவாக இக்காலக்கட்டத்திலுள்ள எழுத்துகளைத் தமிழி அல்லது தமிழ்பிராமி என்பர். இவ்வகையான எழுத்துகள், கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வாயிலாக 500க்கும் மிகுதியாகக் கிடைத்துள்ளன6. சங்க இலக்கியங்களில் வருகின்ற பெயர்கள் இங்கு கிடைத்த பானை ஓடுகளில் காணப்படுகின்றன. குறிப்பாகச் சாம்பன் ஸீமநன்(படம்.3), கூல அந்தைய் சாம்பன் அகல், கண்ணன் ஆதன், பண்ணன், குவிரன் அதன், அந்தவன் அதன், விஸாகீ, விஸகன், அதன்7,  போன்ற எழுத்துப் பொறிப்பு பெற்ற பானை ஓடுகளைக் குறிப்பிடலாம்.

    படம் :3, கொடுமணல்: ‘சாம்பன் ஸீமநன்’ எழுத்துப் பொறித்த பானை
    (நன்றி: பேரா.கா.இராஜன்)

    இலங்கையில் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் அணைக்கோட்டை என்ற இடத்தில் பெருங்கற்படைச் சின்னம் அகழ்ந்தபோது கிடைத்த முத்திரை ஒன்றில் ‘கோவேதா’ என்ற பிராமி எழுத்து உள்ளது. ஐராவதம் மகாதேவன் அவர்களால் கேரளாவிலுள்ள எடக்கல் என்ற இடத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டின் இறுதியில் ‘கடும்மி புத சேர’ என்ற சொல், தமிழ்-பிராமியில் உள்ளது நோக்கத்தக்கது.8

    இதே போன்று இலங்கையின் மிகத் தொன்மை வாய்ந்த ஊர்களுள் ஒன்றாகக் கருதப்படும் அநுராதபுரம் என்ற இடத்தில் தெரிணியகலா மற்றும் ராபின் கோனிங்காம் தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்வில்  பிராகிருதம் தாங்கிய பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்கள் குறிப்பிட்ட மண்ணடுக்குகளில் கிடைத்தன. இம்மண்ணடுக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் காலக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதால் அம்மண்ணடுக்குகளில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்களின் காலமும் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டன.

    ஆயினும், பெளத்த மதம் அசோகரால் இலங்கையில் புகுத்தப்பட்ட போதுதான் பிராமி வடிவமும் அங்குப் புகுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இக்காலத்தை ஏற்றுக்கொள்வதில் அறிஞர்கள் தயக்கம் கொண்டனர். இருப்பினும், இக்கால வரையறை இதுவரை பிராமி எழுத்துகளின் காலம் தொடர்பாகக் கொண்டிருந்த கருத்தை உரசிப் பார்த்தது.

    இந்நிலையில், பொருந்தல் மற்றும் கொடுமணல் அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்களும் தமிழ்-பிராமி எழுத்துகளின் காலம் குறித்து முக்கியச் செய்திகளை நமக்கு வழங்கின. அதன் விளைவாக அறிவியல் முறைப்படி கரிமக் காலக் கணிப்பு முறையில் பொருந்தல், கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காலக் கணிப்பு செய்யப்பட்டன. இதன் வாயிலாக தமிழ்-பிராமியின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்குப் பின் நோக்கித் தள்ளப்பட்டது என்கிறார் கா.இராசன்.9

    காலக் கணிப்பு

    தொடக்க காலத்தில், எழுத்துகளின் வரிவடிவத்தின் அடிப்படையிலும், மண்ணடுக்கில் கிடைக்கின்ற பானை ஓடுகளின் அடிப்படையிலும், குகைத் தலங்களில் கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையிலும் காலக் கணக்கீடு செய்யப்பட்டது. காலப்போக்கில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் தாக்கத்தால் கரிமக் காலக் கணிப்பு முறையின் வாயிலாகக் காலம் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கா.இராசன் அவர்கள் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் காலக் கணிப்புக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிடிக் ஆய்வுக் கூடத்திற்கும், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்திற்கும் அனுப்பப்பட்டன. அவை கி.மு 408 என்ற காலக் கணிப்பை வழங்கின.

    பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துகளின் காலத்திற்கு ஏற்பக் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துகளின் காலமும் கி.மு.5ஆம் நூற்றாண்டுக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டது. இக்காலக் கணிப்பு இங்குக் கிடைத்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளாலும் உறுதிப்படுத்தப்பட்டன. அந்த வகையில் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமியின் காலத்தைக் கி.மு. 5 ம் நூற்றாண்டு என கா.இராசன் குறிப்பிடுகிறார்.10

    கொடுமணலில் முதன்முதலில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட  அகழாய்வுகளில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துப் பொறித்த பானை ஓடுகளின் காலத்தை, புதுச்சேரிப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினர் 2012 மற்றும் 2013களில் மேற்கொண்ட அகழாய்வுகளில் அகழப்பட்ட குழிகளின் மண்ணடுக்கில் கிடைத்த தழிழ்-பிராமி எழுத்துகளின் அடிப்படையிலும், மேற்குறிப்பிட்ட கரிமக் கணிப்பின்படியும் கி.மு.500 எனக் கருதலாம். இவ்வகையான அறிவியல் முறைப்படியான ஆய்வுக்கு முன், கொடுமணலின் காலம் எழுத்துகளின் வடிவத்தின் அடிப்படையில் கி.மு.300 எனக் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.

    எனவே, கொடுமணல் பெருங்கற்காலத்தில் பெரும் நகரமாகவும், உள்நாடு மற்றும் மேலை நாடுகளுடன் வணிகத் தொடர்பினைக் கொண்டிருந்த செழித்த ஊராகவும் திகழ்ந்திருக்கிறது என்பதை அகழாய்வுகளில் கிடைத்த பல்வேறு வகையான சான்றுகளின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், கொடுமணலில் கண்டறியப்பட்ட எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளை அறிவியல் முறைப்படி காலக் கணிப்பு செய்ததில் இதன் காலம் கி.மு.500க்கு பின்நோக்கி எடுத்துச் சென்றுள்ளது சிறப்புக்குரியது. இதன் வாயிலாகத் தமிழகத்தில் குறிப்பாகக் கொடுமணலில் பெருங்கற்கால மக்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே செழிப்புற்றிருந்தார்கள் என்பதனை அறிய முடிகிறது.

    சான்றெண் விளக்கம்

    1. Rajan, Archaeological Gazetteer of Tamil Nadu, ManooPathippakam, Thanjavur, 1997, P.89.
    2. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
    3. வாழ்வியற் களஞ்சியம் தொகுதி எட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988, பக்.72-74.
    4. கா.இராஜன், குறியீடுகளும் எழுத்துகளும், வரலாற்றுக் கலம்பகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர், 1998, பக்-1-8.
    5. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
    6. மேலது.
    7. எ.சுப்பராயலு, மண்கல தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள், ஆவணம் இதழ்-19, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2008, பக்.189-221.
    8. கா.இராஜன், குறியீடுகளும் எழுத்துகளும், வரலாற்றுக் கலம்பகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர், 1998, பக்-1-8.
    9. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
    10. மேலது.

    துணை நின்ற நூல்கள் மற்றும் இதழ்கள்

    • சு.இராசவேலு மற்றும் கோ.திருமூர்த்தி, தமிழ் நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.
    • Subbarayalu, “Vallam Excavations”, Tamiḻ Civilization, vol.2, no.4, 1985, pp.30-42.
    • Rajan, “Kodumanal Excavations – A Report”, K.V.Ramesh (ed.), Gauravam B.K.Gururajarao Felicitation Volume, Harman Publishing Company, New Delhi, 1996, pp.72-86.
    • Rajan and Osmund Bopearachchi, “Graffiti Marks of Kodumanal (India and Ridiyagama (Sri Lanka)”, Man and Environment, vol. 27, no.2, 2002, pp.97-106

    =====================================================

    ஆய்வறிஞர் கருத்துரை:

    தமிழகத் தொல்லிடங்கள், பொதுவாக கி.மு 3 ஆம் நூற்றாண்டு அளவே கால மூதெல்லையாக வைக்கப்பட்டிருந்தன. இதற்கு பிராமி எழுத்தின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்பட்டதே முதன்மைக் காரணம். கரிம ஆய்வின்படி கொடுமணல் பிராமி எழுந்துள்ள பானை ஓடுகள், எழுந்துள்ள பானையில் இருந்த பொருள்கள் கி.மு.5 ஆம் நூற்றாண்டு வரை நீளுவதால் பிராமி எழுத்தின் காலம் மட்டுமல்ல, கொடுமணல் நாகரிகக் காலமும் கி.மு. 5ஆம் நூற்றாண்டினது என நிறுவப்பட்டுள்ளதைக் கட்டுரை தெளிவாக விளக்குகிறது. வைடூரியம் < lapis lazuli என்பது தவறு. அது ஒரு நீல நிறப் பாறைக்கல். மற்றபடி, கட்டுரை நன்று.

    =====================================================

    Share
  • (Peer Reviewed) புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை

    முனைவா் பா. உமாராணி
    இணைப் பேராசிரியர்,
    கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்,
    கோயம்புத்தூா்

    புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை

    ஒரு படைப்பு தான் தோன்றிய சமூகத்தின் ஆகச் சிறந்த கூறுகளைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் என்பது இயல்பான ஒன்று. இதுவரை தோன்றிய இலக்கியங்களும், அவை சார்ந்த பின்னூட்டங்களும் நமக்கு இதையே மொழிகின்றன. ஒரு சமூகத்தின்  சிறந்த பண்பாட்டுக் கூறுகளை மட்டும் ஒரு இலக்கியம் தக்கவைத்துக் கொள்வதில்லை. அச்சமூகத்தில் மறைமுகமாகவும் எதிரிடையாகவும் தோன்றிய கருத்துகளையும் செயல்களையும் அவை பதிவு செய்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

    சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இலக்கியங்கள் வரை எல்லா இலக்கிய வகைமைக்குள்ளும் மேற்சொன்ன நிகழ்வுகள் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளன. அங்ஙனம் பொருத்திப் பார்ப்பது படைப்பிலக்கியத்திற்கு மேலும் வளமையைக் கூட்டுகிறது. அத்துடன் இத்தன்மை. இலக்கியத்தை சமுதாயம் நோக்கி நகா்த்துவதற்கும் உதவுகின்றது. இத்தகையதொரு பார்வையில் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ள தோற்ற மன்னா்களின் நிலையை வெளிக்கொணரும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    தோற்ற அரசா்கள் குறித்தான பதிவுகள் அல்லது எதிர்நிலைத் தன்மை குறித்தான பதிவுகள் ஒரு சமூகத்தை அதன் ஆழத்திலிருந்து புரிந்துகொள்ள உதவுவதுடன், அச்சமுதாயம் கொண்டிருக்கும் ஆழ்மட்ட பண்பாட்டுக் கூறுகளையும் கண்டறிய உதவுகின்றது. சங்க இலக்கியத்திலும் இத்தகைய பதிவுக் கூறுகள் ஆங்காங்கே விரிந்த நிலையிலும், சிலபோது குறிப்பாகவும் வெளிப்படக் காண முடிகிறது.

    பாடாண் திணை சுட்டும் தோற்றோர் பின்னணி

    பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண்மகனின் வீரம், கொடை முதலிய சிறப்புகளை எடுத்தோதும் திணையாகும். புறநானூற்றில் பாடாண் திணையில் மொத்தம்  120 பாடல்கள் அமைந்துள்ளன. அதில் செவியறிவுறூஉத் துறையில் 8  பாடல்களும், இயன்மொழித் துறையில் 54 பாடல்களும், வாழ்த்தியல் துறையில் 9 பாடல்களும், பரிசில் கடாத் துறையில் 15 பாடல்களும்,  கடைநிலைத் துறையில் 10  பாடல்களும், பரிசில் துறையில் 8 பாடல்களும்,  பாணாற்றுப்படை துறையில் 6 பாடல்களும், பரிசில் விடைத் துறையில் 6 பாடல்களும், விறலியாற்றுப்படைத் துறையில் 4 பாடல்களும், பூவைநிலைத் துறையில் 3  பாடல்களும், புலவராற்றுப்படைத் துறையில் 2 பாடல்களும், உடனிலைத் துறையில் ஒன்றும், குடைமங்கலம் துறையில் ஒன்றும், வாயில் மங்கலம் துறையில் ஒன்றுமாக மொத்தம் பதினான்கு துறைகளில் பாடாண் திணை பாடப்பட்டுள்ளது.

    செவியறிவுறூஉ

    செவியறிவுறூஉ என்னும் துறை, பாடாண் திணைகளுள் ஒன்றாகும். பகைமையும் கெடுதலுமற்ற வலிய எண்ணங்களை அரசனுக்கு எடுத்துரைத்தல், இத்துறையின் சிறப்பியல்பு. “மறம் திரிவு இல்லா மன்பெரும் சூழ்ச்சி, அறம்தெரி கோலாற்கு அறிய உரைத்தன்று” என இத்துறைக்குப் புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம் கூறுகிறது.

    செவியறிவுறூஉ துறையில் அமைந்த பாடலில் பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயா் வழுதியினைப் பகைத்த பகையரசா்களின் நிலையானது,

                “துன்அருந் திறல், கமழ் கடாஅத்து

                எயிறு படையாக எயிற் கதவு இடாஅ

                கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின்

                பெருங்கை யானை இரும்பிடா்த் தலை இருந்து

                மருந்து இல் கூற்றத்து அருந்தொழில் சாயா”     (புறம். 3)

    என்று முற்றும் அழிந்துபட்ட நிலையே என்பதனைச் சுட்டுகிறார் இரும்பிடத்தலையார். பாண்டியனின் பட்டத்து யானை பகைநாட்டின் படைக்கலன்களை அழிக்கும் திறனையும், கொலைத் தொழிலுக்கும் அஞ்சாத பாண்டியனின் தன்மையையும் எடுத்தோதும் நிலையில் பகைநாட்டவா் அடைந்த நிலையைத் தெற்றென விளங்க வைக்கிறார் ஆசிரியா்.

    முதுகுடுமியின் வலிமையைக் கூறும் முகத்தான், ஆசிரியா் பகையரசா்களின் நிலையையும், அவா்கள் நாட்டில் விளையும் தீங்குகளையும் சுட்டிக் காட்டுகின்றார் காரிக்கிழார். குடுமியைப் பகைத்து வாழும் மன்னின் நிலையானது,

                “செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வா் தேஎத்து

                கடல்படை குளிப்ப மண்டி, அடா் புகா்ச்

                சிறுகண் யானை செவ்விதின் ஏவி,

                பாசவல் படப்பை ஆா் எயில் பல தந்து

                அவ்வெயில்  கொண்ட செய்வுறு நன்கலம்

                பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி”         (புறம். 6)

    என்று குறிப்பிடுகிறார். அதாவது, போர்செய்ய எதிர்த்த பகைவருடைய நாடுகளில் கடல்போன்ற படையை உட்புகுந்து அழித்தும், அவா்களின் விளை நிலங்களை யானையை விட்டு அழிக்கச் செய்வதுடன் அவா்களுடைய அரண்களையும் அழிக்கும் முறையை எடுத்தோதுகின்றார். அத்துடன் அப்பகை நாட்டினரின் செல்வங்களைப் பரிசிலருக்கு அளிக்கும் நிலையும் சுட்டப்படுகிறது. மேலும்,

                “வாடுக இறைவ! நின் கண்ணி – ஒன்னார்

                நாடுசுடு கமழ் புகை எறித்தலானே!

                செலியா் அத்தை, நின் வெகுளி”     (மேலது)

    என்று குறிப்பிடுகிறார் ஆசிரியா். குடுமியின் போரின் தன்மையானது பகைவா் நாட்டை எரித்து அழிக்கும்  இயல்பினை உடையது என்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன. மேலும் அத்தகைய அழிவினை அவன் மேலும் அந்நாட்டிற்குச் செய்யத் துணியும் கோபத்துடனே இருப்பான் என்றும் குறிப்பிடுகிறார். இரு அரசுகளுக்கு இடையிலான போரில் மக்களின் விளை நிலங்கள் அழிக்கப்படுவதும், அம்மக்களிடம் இருந்து பெற்ற பொருளைப் பரிசிலாகக் கொடுத்து பெருமை கொள்ளும் நிலையும் வருந்தத் தக்கதே. குடுமியின் புகழ் பாடப்பட்டபோதும் மறைமுகமாக அன்றைய அரசுகளின் செயல்பாட்டைச் சுட்டுவதாகவே இப்பாடல் அமைந்துள்ளது.

    புறநானூற்றின் 40ஆவது பாடல்,  பகை மன்னா்களின் நிலையை எடுத்தோதுகின்றது. மதிப்பிற்குரிய பொன்னாலான பகைவரின் மணிமுடியினை அவமதித்தல் போன்றும், அவா்களை அடிமைப்படுத்தல் போன்றும் அதைத் தம் காலில் அணிகின்ற தன்மையினை,

                “நீயே, பிறா்ஓம்புறு மறமன் எயில்

                ஓம்பாது கடந்தட்டு, அவா்

                முடி புனைந்த பசும்பொன் நின்

                அடிபொலியக் கழல் தைஇய வல்லாளனை”        (புறம். 40)

    எனக் காண முடிகிறது. இப்பாடலில் வெற்றி பெற்றோரின் வீரமும், பகையில்லாத அவன் நாட்டின் சிறப்பும் கூறப்பட்டதெனினும் தோற்ற அரசன் அடைந்த இழிநிலையினையும் இப்பாடல் பதிவு செய்துள்ளது. செவியறிவுறூஉ துறையில் அமைந்த எட்டு பாடல்களில் மூன்று பாடல்கள் மட்டுமே தோற்றோரின் நிலையைப் பேசுகின்றது.

    இயன்மொழி

    தலைவனுடைய இயல்பினைக் கூறுதலும், அவன் முன்னோர் செயல்களைப் பாராட்டிக் கூறலும்  இயன்மொழித் துறையின்பாற்படும். தமிழ் மன்னா்களிடம் போர் அறம் இருந்தது. அதன் வழிநின்றே போர் செய்தனா் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடல் வழி அறியலாம். நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியைப் புகழுமிடத்து தமிழா்களின் போர் அறத்தினைத் தெற்றென விளக்கிறார்.

                “ஆவும் ஆன்இயற் பார்ப்பன மாக்களும்”  ( புறம். 9)

    என்ற பாடலானது போருக்கான அறத்தைத் தமிழா் எங்ஙனம் போற்றினா் என்று விரித்துக் கூறுகின்றது. எனினும் போரின் பின் நிகழும் துயா்கள் எண்ணிலடங்காதவை என்பதை இயன்மொழித் துறையில் அமைந்துள்ள பாடல்கள் தெளிவாகச் சுட்டுகின்றன.

    தோற்ற அரசா்களின் காவல் மரத்தை முறித்து பகைவா்களை அவமதிக்கும் செய்தியினை,

                “கடுங் கண்ண கொல் களிற்றால்

                காப்பு உடைய எழு முருக்கிப்

                பொன் இயல் புனை தோட்டியால்”            ( புறம். 14)

    என்று கபிலா் குறிப்பிடுகிறார். செல்வக்கடுங்கோ வாழியாதன் பகை மன்னனின் வலிமையை அழித்தலின் குறியீடாகக் கணையமரத்தை அழித்தான் என்னும் செய்தி இங்குச் சுட்டப்படுவதுடன் பகையரசனின் நிலையும் எடுத்துரைக்கப்படுகிறது.

    முதுகுடுமி பெருவழுதி பகைவா் நாட்டினை அழித்துச் சிதைக்கும் காட்சியினைச் சுட்டவரும் நெட்டிமையார் பகை மன்னனின் நிலம் அடைந்த அவல நிலையை முன்வைக்கிறார். இதில் பகை மன்னா்களின் நிலமானது

                “கடுந்தோ் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

                வெள்வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

                பாழ் செய்தனை, அவா் நனந்தலை நல் எயில்,

                புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்,

                வெள் உளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்

                ………………………………..

                நசைதர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,

                வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்?”          (புறம்.15)

    என அழிந்துபட்டதைக் கூறுகின்றார். இங்கு வென்ற பகையரசா்களின் நாட்டைக் கழுதைகள் பூட்டி உழுதலும், விளைவயல்களை அழித்தலும், நீர்த்துறைகளைக் கலக்குதலும், மக்கள் வாழும் இடங்களை எரியூட்டலும் செய்து பகையரசா்கள் அவமதிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதை இப்பாடல் புலப்படுத்துகின்றது. இதே கருத்தினைக் கடைநிலைத் துறையில் புறம் 392ஆவது பாடலும் முன்வைத்துள்ளது. பொகுட்டெழினி தான் போர்செய்யும் பகைநிலத்தை கழுதைகள் பூட்டி உழுதும், மதில்களை அழித்தும் போர்செய்தான் என்பதை ஔவையார் சுட்டியுள்ளார்.

    கிள்ளிவளவன் வலிமைமிக்க சேரனை அழித்த செய்தியினை கூறுமிடத்து நப்பசலையார் பகைவனின் பெருமையைத் தெளிவாக விளக்குகிறார். இங்கு பகைவன் மிக வலிமையுடையவன் என்பதை,

                “……………………..ஓங்கிய

                வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங்கோட்டு

                இமயம் சூட்டிய ஏம விற்பொறி

                மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய

                வாடா வஞ்சி வாட்டும் நின்

                பீடுகெழு நோன் தாள் பாடுங்காலே?”       (புறம். 39)

    என்று சேரனின் பெருமையினையும், இமயம் வரை சென்று தன் ஆட்சியை நிலைநிறுத்தியவன் என்றும் அவனைப் புகழ்கின்றார். அவனை வென்றான் வளவன் என்னும் சிறப்புப்பட, இப்பாடல் அமைந்ததாயினும் பகையரசனின் வலிமையும் இங்குச் சுட்டப்பட்டுள்ளது.

    பகைவா் நாட்டில் உள்ள மக்கள் தம் நாட்டைத் துறந்து செல்லும் அவலத்தைப் புறப்பாடல் பதிவு செய்துள்ளது. பொகுட்டெழினியைப் பகைக்கும் பகைவா் நாட்டில் உள்ள மக்கள், இனி இந்நாடு வாழுதற்கு உரிய இடம் அன்று என்று தம் இடத்தைத் துறந்து செல்வதை,

                “விழவின்று ஆயினும், படுபதம் பிழையாது

                மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறைநீா்க்

                கைமான் கொள்ளுமோ என

                உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே”         (புறம். 96)

    என்று குறிப்பிடுகிறது. இப்பாடலுக்கு “அவன் படையெடுத்துச் செல்லும் ஊரில் விழா இல்லையாயினும் உண்டாக்கப்படும் உணவுடன் தவறாது செம்மறியாட்டுத் தசைகளையும் சுற்றத்தார் தின்பா். அந்தச் சுற்றத்தார் யாவருடனும் ஆறு, குளம் முதலிய நீா்த்துறைகளில் படிந்து அவனுடைய யானைகள் நீருண்ணும் எனும் அச்சத்தால் அவ்வவ்வூரில் மக்கள் தங்குதலை வெறுத்தனா். இவ்வெறுப்பினால் ஒரு பகை நோ்ந்தது” என்று விளக்கம் அளித்துள்ளனா் உரைக்காரர்கள்.

    அதியமான் அஞ்சியைப் பகைத்த மன்னா்களின் நாடானது அழிந்துபடும் என்றும், அப்பகைவா்களுடன் போரிட்டதால் அதியனின் படைக்கலக் கருவிகள் தம் இயல்பினை இழந்தன என்றும் கூறுமுகத்தான் பகையரசா்களின் நிலையினைத் (புறம். 97) தெளிவுபடுத்துகிறார் ஔவையார். புறநானூறு 130ஆவது பாடலில் ஆய் அரசன் தம் படைகொண்டு கொங்கரை விரட்டினான் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. இங்கு கொங்கன் புறமுதுகிட்டு ஓடினமையும், அவனை அழிக்க ஆய் செய்த போரின் வலிமையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. புறமுதுகிட்டு ஓடும் மன்னனைத் தொடர்ந்து செல்லாத தன்மை, தமிழரிடம் இருந்ததைப் புறம் 389ஆவது பாடலும், தோற்ற அரசா்கள் வெற்றிபெற்ற அரசனுக்குத் திறை செலுத்தி வாழவேண்டிய நிலையில் இருப்பதனைப புறம் 156ஆவது பாடலும் விளக்குகின்றன.

    சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி, வடுகரை அழித்து விரட்டிய செய்தியைப் புறம் 378ஆவது பாடல் பதிவு செய்துள்ளது. இதில் இளஞ்சேட் சென்னியின் வள்ளன்மையைப் புகழும் பொருட்டே இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இயன்மொழித் துறையில் அமைந்த பாடல்களில் 11 பாடல்களில் மட்டுமே தோற்றோர் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. அவற்றில் அரசனின் வெற்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் மிகுதியும் கூறப்பட்டுள்ளது. தோற்ற மன்னா்களின் நிலையை வெற்றி பெற்ற அரசா்களின் புகழின் பின்னணியிலேயே உணா்ந்துகொள்ள வேண்டிய நிலையும், சில இடங்களில் பகையரசனின் வலிமையும் விதந்தோதப்பட்டுள்ளது.

    விறலியாற்றுப்படை

    அரசனுடைய புகழைப் பாடும் விறலியை வழிப்படுத்துதல் விறலியாற்றுப்படை எனப்படும். தொல்காப்பியம் இதனை,

                கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

                ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

                பெற்ற பெருவளம் பெறாஅா்க்கு அறிவுறீஇச்

                சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்”   (தொல். புறம். 88)

    என்று விளக்குகிறது.

    பகைவரின் பெருஞ் செல்வங்களைக் கொணா்தல்  என்பது போரின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது என்பதைச் சுட்டுவது போன்று புறம் 64ஆவது பாடல் அமைந்துள்ளது.  முதுகுடுமி போர்செய்யும் பகை நாடுகளில் வீரா்கள் இறந்து கிடக்கும் காட்சியானது விண்ணைத் தொடுமாறு அமைந்துள்ளது என்பதை,

                ”விசும்பு ஆடு எருவை பசுந்தடி தடுப்ப

                பகைப்புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின்”    (புறம். 64)

    என்ற வரிகள் மூலம் உணா்த்துகின்றார் நெடும்பல்லியத்தனார். இங்கு வீரா்கள் இறந்து கிடந்தமை, கழுகுகள் செல்லும் பாதையை மறைத்தது என்றும், அந்நாட்டு மக்களின் செல்வத்தினைப் பெற்று தங்களுக்குப் பரிசில் வழங்கினான் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதன் வழி, தோற்ற நாட்டினரின் நிலை தெளிவாக உணா்த்தப்படுகிறது. மேலும் தோற்ற நாட்டினை எரியூட்டி அழித்தல் என்பது போர் மரபுகளில் ஒன்றாக இருந்தது என்பதை,

                “முனைசுட எழுந்த மங்குல் மாப் புகை

                மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும்

                பகைப் புலத்தோனே பல்வேல் அஞ்சி”      ( புறம்.103)

    என்ற ஔவையாரின் பாடல், பதிவு செய்துள்ளது. ஒரு நாட்டினை வெற்றி கொள்வது என்பது வெறுமனே மனிதா்களுக்கு இடையேயான நிகழ்வாக அல்லாமல் இயற்கையை அழித்தல் என்னும் நிலையை அடைந்துள்ள அவலத்தை இப்பாடல் பதிவு செய்துள்ளது.

    வாள் மங்கலம்

    மன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுதல், வாள் மங்கலம் எனப்படும். இத்துறையில் புறம் 95ஆவது பாடல் அமைந்துள்ளது. தொண்டைமானிடம் அதியமானின் படைக்கலங்களைக் குறித்து பழித்துக் கூறி அவன் புகழை மறைமுகமாகப் புகழ்கிறார் ஔவையார். போரைத் தவிர்க்கும் முகமாக இப்பாடல் பாடப்பட்டதெனினும் இரு அரசுகளின் போர் உணா்ச்சியை மறைமுகமாக இப்பாடல் முன்வைத்துள்ளது.

    பரிசில் துறை

    அரசன் முன்னே பரிசிலா் தாம் பெறக் கருதிய பொருள் இதுவெனச் சொல்லுதல் பரிசில் துறையாகும். பகையரசனது யானையின் நெற்றிப் பட்டத்தில் இருக்கும் பொன்னைப் பாணா்களுக்கு அளித்தும், அதை அவா்கள் தலையில் பொலியும்படியும் செய்யும் வல்லமை வாய்ந்தவன் என்று பகையரசனின் நாட்டின் வளம் சூறையாடப்பட்டதை,

                “ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு

                பாணா் சென்னி பொலியத் தைஇ”             (புறம்.126)

    என்று புறம் 126ஆவது பாடல் முன்வைக்கிறது.

    பரிசில் விடை

    பரிசில் பெற்று விடை பெறுவான் பாடுவது, பரிசில் விடை எனப்படும். பெருந்தலைச் சாத்தனார், குமணனைக் குறித்துப் பாடிய பாடல், தோற்ற அரசனின் புகழைப் பாடுவதாக அமைந்துள்ளது. குமணன் நாடு இழந்தனன் ஆயினும் ஈகை இழந்தான் இல்லை என்றுபட புறம் 165ஆவது பாடல் இடம்பெற்றுள்ளது.

                ”பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயா்தல் என்

                நாடு இழந்ததனினும் நனி இன்னாது என

                வாள் தந்தனனே தலை எனக்கு ஈய”          (புறம். 165)

    என்று தோற்ற குமணனை இப்பாடல் புகழ்ந்து பாடுகிறது.

    வாழ்த்தியல்

    பாட்டுடைத் தலைவனின் சிறப்பைப் புகழ்ந்து வாழ்த்துரைத்தல், இத்துறையின்பாற்படும். செல்வக்கடுங்கோ வாழியாதனின் பரிசில் வழங்கும் பண்பை வாழ்த்தும் முகமாக அமைந்த புறம் 387ஆவது பாடலில் பகையரசா்களின் வீரம் வெளிப்பட்டு நிற்கின்றது. பகை மன்னா்களின் மதில்களானது யாரும் உடைத்தலைச் செய்ய முடியாத அளவு வலிமையுடையது என்றும், அவ்வேந்தா்களின் காவற்காட்டில் இருக்கும் யானைகள் மிக்க வலிமையுடையவை என்றும் கூறி, அதனை அழித்தவன் வாழியாதன் என்று புகழ்கிறார் குண்டுகட் காலியாதன்.

    தோல்வி குறித்த பதிவுகள்

    சங்க இலக்கியத்தில் அரசா்கள், வேந்தர்கள், குறுநில மன்னா்கள், நிலக்கிழார்கள், வள்ளல்கள் போன்றோரின் தோல்விகள் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பதிவுகளின் வாயிலாகப் பகையரசா்களின் அல்லது தோற்றோரின் வலிமையை, போர்த்திறனை உணா்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் இத்தகைய பதிவுகள் பெரும்பான்மையும் வெற்றி பெற்றோரின் வீரத்தினையும் கொடைச் சிறப்பினையும் வள்ளன்மையினையும் வெளிக்கொணரும் வண்ணமே அமைந்துள்ளன. புறநானூற்றில் பாடாண் திணையில் 120 பாடல்கள் இடம் பெற்றிருப்பினும் தோற்றோர் நிலையை 20 பாடல்கள் மட்டுமே முன்வைத்துள்ளன.

    மிகச் சில அரசா்கள் மற்றும் வள்ளல்கள் போன்றோரின் தோல்வியும் விதந்தோதப்பட்டுள்ளன. அவை அவ்வரசா்களின் கொடைத் திறனைக் கூறும் பொருட்டும், அவா்களின் பண்பினை உயா்த்திக் கூறுதற் பொருட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு, தோல்வியும் வெற்றியின் தன்மையில் வைத்து எண்ணப்படுகின்ற நிலையினைக் காண முடிவதுடன், தோற்றோரின் வீரச் சிறப்பினை விதந்து கூறுகின்ற பண்பையும் கவனத்திற் கொள்ளுதற்கு உரியது. இதன் சமூக, அரசியல் பின்னணியினை ஆழ்ந்து நோக்கும் போதுதான் இத்தகைய பதிவிற்கான தேவையினை உணர முடியும்.

    பார்வை நூல்கள்

    1. புறநானூறு, முதற்பதிப்பு -2004, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
    2. தொல்காப்பியம், பதிப்பு -1984, கழக வெளியீடு, சென்னை.
    3. செ.வை.சண்முகம், தொல்காப்பியத் தொடரியல், முதற்பதிப்பு-2004, உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
    4. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, பதிப்பு-2012, அமுதா நிலையம், சென்னை.

    குறிப்பு

    புறநானூற்றில் பாடாண் திணையில் மொத்தம்  120 பாடல்கள் அமைந்துள்ளன.

    செவியறிவுறூஉத் துறையில்  – 8 (2,3, 5,6,35,40,55,184)

    இயன்மொழித்துறையில் – 54(8,9,10,12,14,15,30,32,34,38,39,50,67,92,96, 97,102, 105,106,107,108,122,123,124,128,129,130,131,132,134,137,142,149,150,151153,157,171,172,173,175,176,177,215, 376, 378, 380, 381,383, 388, 389, 390, 400)

    வாழ்த்தியல் துறையில் – 9 (13,19,158-பரிசில் கடாஅ நிலை, 367,375,377,385,386,387)

    பரிசில் கடாஅத் துறையில் -15(11,101,136,139,159,160,164,169,196,197,198, 199,266)

     கடைநிலைத் துறையில் – 10 (127,382,391,392, 393,394,395,396,397,398)

     பரிசில் துறையில் – 8 (126,135,148,154, 161, 168-அரசவாகை,200,379)

    பாணாற்றுப்படைத் துறையில் – 6 (68,69,70,138,141,158)

     பரிசில் விடைத் துறையில் – 6 (140,152,162,163,165,399)

    விறலியாற்றுப்படைத் துறையில் – 4 (64,103, 105,133)

    பூவைநிலைத் துறையில்  -3 (56,59,374)

    புலவராற்றுப்படைத் துறையில்  – 2 (48,49)

    உடனிலைத் துறையில்  -1 (58),

    குடைமங்கலம் துறையில் – (60),

    வாயில்மங்கலம் துறையில் – (95)

    மொத்தம்  -14 துறைகளில் பாடாண் திணை பாடப்பட்டுள்ளது.

    =======================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சங்க இலக்கியங்களில் புறம் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் புறநானூறு, குறிப்பிடத்தக்க ஒரு நூல். அதில் பெரும்பான்மையும், வெற்றி பெற்ற மன்னர்களின் வீரம், புகழ், கொடை சார்ந்தும் சிறுபான்மை சமூகப் பொது நிலைகள் சார்ந்தும் பாடப்பட்டுள்ளமை நாம் அறிந்த ஒன்றே. அதில் பொதுவாக வெற்றி பெற்ற மன்னர்களின் சிறப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி வரலாற்றுப் பின்புலத்தை அறிதல் என்பது பெரும்பான்மை ஆய்வு நடைமுறையில் இயல்பாக உள்ளது. ஆனால் இக்கட்டுரையை ஆய்வாளர் சற்று மாறுபட்ட கோணத்தில் ஆராய்ந்து தன் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  வெற்றி பெற்ற மன்னர்கள் பற்றிப் பேசும் பாடாண் திணைப் பாடல்களில் தோற்ற அரசர்களின் நிலைகளை உற்றுநோக்கிச் சில அடிப்படையான செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

    குறிப்பாக, போர் இரு மன்னர்களுக்கு இடையே மட்டும் நடைபெறுவதில்லை. இரு நாட்டு மக்கள், இயற்கை ஆகியவற்றோடு நடைபெறுவது. அதனால் இயற்கைச் சீரழிவு, மக்கள் கொல்லப்படுதல் என்ற கோணத்தில் தனது சிந்தனையைச் செலுத்தியுள்ளார். தோற்ற மன்னர்களின் நிலைப்பாடுகள் பற்றியும் பேசியுள்ளார். அதே போல் பாடாண் திணையின் துறைகளின் அடிப்படையில் இச்செய்திகளை விளக்கியமை சிறப்பு. மேலும் தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பா மாலையில் இடம்பெற்றுள்ள பாடாண் திணையின் செய்திகளைக் கட்டுரையில்  பயின்று வந்துள்ள துறைகளில் பதிவு செய்திருப்பின் கட்டுரை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.

    =======================================================

    Share
  • (Peer Reviewed) ஐந்திணையில்  பாலை நில உருவாக்கம்

    முதுமுனைவா் இரா. சங்கர்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த் துறை தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
    திருப்பத்தூா், வேலூா் மாவட்டம்

    ஐந்திணையில்  பாலை நில உருவாக்கம்

    சங்க இலக்கியம் ஐந்திணையை அடிப்படையாகக் கொண்டு அக்கால மக்களின் வாழ்க்கை முறையினைக் கூறும் வாழ்க்கைக் களஞ்சியமாகும்.  சங்க இலக்கியத்திற்கு முதன்மைப் பொருளாக விளங்குவது நிலமும் பொழுதுமே.  முதன்மைப் பொருளாக விளங்கும் நிலத்தினைச் சான்றோர்கள் நான்கு வகையாகப் பிரித்து ‘நானிலமென’ முறையாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலெனப் பெயா் வைத்திருந்தனா்.  இருப்பினும், சங்க இலக்கியங்களில் ‘பாலை’ என்கின்ற ஒருவகை நில அமைப்பினைச் சங்க இலக்கிய புலவா்கள் தம் பாடல்களில் புனைந்துள்ளதைக் காண்கிறோம். அத்தகைய நிலத்தைப் பற்றியும், அந்நில மக்களின் வாழ்வியல் முறைகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

    நிலப் பாகுபாடு

    இயற்கை சார்ந்த தமிழக நில அமைப்பை மலை, காடு, வயல், கடலென நான்கு கூறுகளாகப் பிரித்திருந்தனா். மலையும் மலை சார்ந்த பகுதியிலும் குறிஞ்சி மலா் சிறப்புற்ற காரணத்தினால் குறிஞ்சி நிலமென்றும்;  காடும் காடு சார்ந்த பகுதியிலும் முல்லை மலரின் அழகுமிக்க காட்சியினைக் கண்டு முல்லை நிலமென்றும்; வயலும் வயல் சார்ந்த பகுதியிலும் மருத மரத்தின் செழிப்பினைக் கண்டு மருத நிலமென்றும்; கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் உப்பங்கழிகளில் பூத்துக் குலுங்கும் நெய்தல் மலரின் அழகினைக் கண்டோர் நெய்தல் நிலம் என்றும் அந்தந்த நிலத்தின் அழகுமிக்க மலரினை நிலத்திற்குரிய பெயராக வைத்திருந்தனா்.

    இதனைத் தொல்காப்பியா் ‘தமிழகத்தின் ஒட்டுமொத்த நில அமைப்பினை இயற்கையின் அடிப்படையில் நான்காகப் பிரித்திருந்தனா்’ என்பதை,

    “நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்

    படுதிரை வையம் பாத்திய பண்பே” (தொல்.பொருள்: அகம்: 2)

    என்று, நடுவில் இருக்கின்ற பாலையைத் தவிர ஏனையவற்றைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலென நிலத்தினை நான்காகப் பிரித்து, பாலை நிலத்திற்கு நிலவரையறை செய்யாமல் விடுத்திருக்கிறார்.  இந்நூற்பாவிற்கு உரையெழுதிய உரையாசிரியா்கள் பாலை நிலத்தினைப் பற்றிப் பலவாறாகக் கருத்து கூறுகின்றனா்.

    உரையாசிரியா்களின் கருத்து

    தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணனார், “பாலை என்பதற்கு நிலம் இன்றேனும், வேனிற்காலம் பற்றி வருதலால், அக்காலத்தில் தளிரும் சினையும் வாடி நிற்பது.  பாலை என்பதோர் மரம் வேனிற் வெப்பத்திலும் காய்ந்து போகாமல் பூத்துக் குலுங்குவதால் அதன் சிறப்பு அந்நிலத்திற்குப் பாலையென்று பெயா் வைத்திருக்கின்றனா்” (தொல்.பொருள் உரை, இளம்பூரணனார்) என்று குறிப்பிடுகின்றார்.

    வித்வான் இரா. மாணிக்கனார் ‘நிலத்தினை வளமுள்ள பகுதியாகப் பிரித்தலே நாட்டிற்கு நிறைவைத் தரும் எனக் கருதி, வளமுள்ள பகுதியாகிய மலை, காடு, வயல், கடல் என்பனவற்றை அடிப்படையாக வைத்தே நிலம் பகுக்கப்பட்டது என்றும்;  வளமில்லாப் பாலையையும் ஒரு பகுதியாகக் கொள்ளின் குறைவைத் தருவதாகும் எனக் கருதியே வளமற்ற பாலையை ஒரு பகுதியாகப் பிரிக்கவில்லை’ என்று கூறுகின்றார் (பாலை, கு. சொ. பொ.  ப. 110).

    வௌ்ளைவாரணனார் பாலை நிலத்தைப் பற்றிக் கூறும் உரையில்  ‘பாலையென்பதற்கு நிலமில்லையாயினும் வேனிலாகிய காலம் பற்றி வருதலின், அக்காலத்துத் தளிரும் சினையும் வாடாமல் நிற்கும் பாலையென்னும் பெயருடைய மரம் உண்டாகலின் அச்சிறப்பு நோக்கிப் பாலையென்று பெயரிட்டனா்.  ஆகவே குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே வேனில் வெப்பத்தால் வளங்குறைந்து நடத்தற்கரியதாய் மாறிய காலத்துப் பாலையென வழங்கப்படும்’ எனக் கூறுகிறார் (தொல்.பொருள் – உரை ப.84).

    இவ்வாறாக உரைகூறும் உரையாசிரியா்களின் கூற்றிற்கு இணங்க,

    “——————- வெங்கதிர் வேந்தன்

    தானலம் திருகத் தன்மையில் குன்றிய

    முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

    நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்

    பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”

    (சிலம்பு. காடுகாண் காதை: 62-66)

    என்ற சிலப்பதிகார அடிகளில் ‘வெவ்விய கதிர்களையுடைய அரசனான ஞாயிறு மாறுபட்டு நிலத்தைச் சுட்டெரிக்க, குறிஞ்சியும் முல்லையும் நல்லியல்பு கெட்டுப் பாலையென்ற தன்மையினைப் பெறும்’ என்று கூறுவதிலிருந்து பாலை நிலமென்பது குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த இடமென்பது புலனாகிறது.

    உரிப்பொருள்

    இயற்கையின் அமைவிற்கு ஏற்றாற்போல் நிலத்தினைப் பகுத்த தொல்காப்பியா், ஒழுக்கத்தினையும் திணை அமைப்பிற்கு ஏற்ப,

    “புணா்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

     ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை

    தேருங்காலை திணைக்குரிப் பொருளே”

    (தொல்.பொருள்.அகம்:16)

    என ஐவகையாகப் பகுத்திருக்கிறார்.

    மலையும் மலைசார்ந்த பகுதியில் புணா்தலுக்குரிய சூழல் மற்ற நிலங்களைக் காட்டிலும் மிகுதியாகக் கொண்டுள்ளமையால் புணா்தலும் புணா்தலுக்குரிய  நிமித்தமும் குறிஞ்சி நிலத்திற்குரிய ஒழுக்கமென்றும்; காடும் காடு சார்ந்த பகுதியில் ஆநிரைகளை மேய்த்தற் பொருட்டாகச் சென்ற ஆடவரை எதிர்பார்த்து மாலைப்பொழுதில் இல்லின்கண் தலைவி ஆற்றியிருப்பதால் ‘இருத்தலும் இருத்தல் நிமித்தமும்’ முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கமென்றும்; வயலும் வயல் சார்ந்த பகுதி நீா்ப் பாசனத்தின் பொருட்டு  செழிப்புற்று விளங்கியமையால் இந்நிலத்தில் வாழும் செல்வந்தா்கள் மனைவியை விட்டுப் பரத்தமை கொள்வதும், அதனை அறிந்த தலைவி தலைவனுடன் ஊடல் கொள்வதுமான நிகழ்வுகள் மிகுதியாகக் கொண்டிருந்தமையால் ‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’ மருத நிலத்திற்குரியது என்றும்; கடலும்  கடல்சார்ந்த பகுதியுமான நெய்தல் நிலத்தில் தலைவன் மீன் பிடித்தற்பொருட்டு கடல் பயணம் மேற்கொள்கின்ற பொழுது, அலைகடலின் நிலையை அறிந்து, தலைவன் திரும்புவானா? திரும்பமாட்டானா என்று வருந்திக்கொண்டிருப்பதால் ‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’ நெய்தல் நிலத்திற்குரியது என்று கூறும் தொல்காப்பியா், ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ என்னும் ஒருவகை ஒழுக்கத்தினையும் உணா்த்துகிறார்.  இவ்வாறாக உணா்த்தப்பட்ட ஒழுக்கத்தின் நிலைதான் என்ன என்று எண்ணும்பொழுது, உரையாசிரியா்கள் ‘நான்கு நிலங்களிலும் வினையின் காரணமாகவோ, ஊடலின் காரணமாகவோ, பிரிதல் வேண்டிய சில காரணங்களினால், தலைவனும் தலைவியும் பிரிதலுண்டு; இதனை உணா்த்துவதாகப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் அமைகிறது என்று கூறுகின்றார்.

    எல்லா மக்களிடத்தேயும் இயல்பாக நடைபெறுகின்ற பிரிவைப் பற்றி ஓர் ஒழுக்கமாக உணா்த்திய தொல்காப்பியா், அதனைப் போன்றே அமையும் கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் உரிய ஒழுக்கத்தினைக் கூட்டி, ஒழுக்கத்தினையாவது ஏழாகக் கூறி இருக்கலாம்.  ஆனால் அவா் அவ்வாறாகக் கூறவில்லை. இதிலிருந்து தொல்காப்பியா் ஒழுக்கங்கள் திணையின் அடிப்படையில்தான் புனைந்துள்ளார் என்பது புலனாகிறது.  இதன் அடிப்படையில் பாலையென்கின்ற ஒருவகை நில அமைப்பு தொல்காப்பியா் காலத்தில் மறைமுகமாகப் புனையப் பெற்றிருக்கிறது என்பது உறுதியாகிறது.

    இதனைக் காட்டிலும் இன்னமும் சிறப்பாக உணா்த்த வேண்டுமானால், பாலை நிலமென்பது நிலைத்து நிற்கும் தன்மையற்றது, குறிஞ்சியும் முல்லையும் வேனிற்காலத்தில் திரிந்தால் பாலை, மீண்டும் செழிப்புற்றால் அந்நிலம் முல்லையாகவும், குறிஞ்சியாகவும் மாறிவிடும் என்பதனை,

    “வாகைதானே பாலையது புறனே” (தொல்.பொருள்.அகம்:73:1)

    என்ற நூற்பாவில் ‘வாகையாகிய வெற்றி ஒரே மன்னனுக்கு நிலைத்திருப்பதில்லை பாலை நிலத்தினைப் போன்று மாறி மாறி வரும் தன்மையது என்பதை உணா்த்துவதாக இந்நூற்பா அமைகிறது.

    கருப்பொருள்

    வேனிற்காலத்து வெம்மையால் திரிந்த நிலமே பாலை என்பதை மறைமுகமாக உணா்த்திய தொல்காப்பியா், நிலங்களுக்குரிய கருப்பொருளை உணா்த்துவதில் பொதுத்தன்மை காட்டியதற்குக் காரணம் திரிந்த நிலத்திற்குப் பொருள் உணா்த்துவதில் உள்ள சிக்கலேயாகும்.  ஆகையால் அந்தந்த நிலத்திற்குரிய கருப்பொருளைத் தனித்தனியே கூறாமல்

    “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

       செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

       அவ்வகை பிறவும் கருஎன மொழிப” (தொல்.பொருள்.அகம்:20)

    என்று, நிலம் எத்தனை வகையாக இருப்பினும், அந்தந்த நிலத்தில் உள்ள தெய்வம், உணவுமுறைகள், மரங்கள், பறவைகள், விலங்குகள், நீா்நிலைகள் மற்றும் இசைக்கருவிகள் போன்றவையே அந்நிலத்திற்குரிய கருப்பொருளாக விளங்குமெனக் கூறுகிறார்.

    பொதுத் தன்மையாகக் கூறிச் சென்ற தொல்காப்பியரைத் தொடா்ந்த நாற்கவிராச நம்பி, அவா் விட்டுச் சென்ற குழப்ப நிலைக்குத் தீா்வுகாணும் வண்ணமாக, அந்தந்த நிலத்திற்குரிய கருப்பொருளைப் பற்றித் தெளிவாக விளக்குகிறார்.  அவற்றுள் பாலை நிலத்திற்குரிய கருபொருளாக,

    “கன்னி விடலை காளை மீளி

     இன்னகை எயிற்றி எயினா் எயிற்றியா்

     மறவா், மறத்தியா் புறவுபருந்து எருவை

     கழுகு செந்நாய் கல்கெழு குறும்பு

     குழிவறுங் கூவல் குராஅ மராஅ

     வழிஞ்சில் பாலை யோமை யிருப்பை

     வழங்குகதிர் பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சுரம்

     பகற் சூறை யாடல் பாலங் கருப்பொருள்”(அ.பொ.வி:21)

    என்று, ‘பாலை நிலத்திற்குரிய தெய்வம் கொற்றவையென்றும்; அந்நிலத்தில் வாழும் தலைமக்கள் விடலை, காளை, மீளியென்றும்; குடிமக்கள் எயினா், எயிற்றியா், மறவா், மறத்தியரென்றும்; வேனிற் வெப்பத்தினால் காய்ந்து போன நீா்நிலையும், மரங்களும், வலிமை இழந்த விலங்குகளும், பறவைகளும் பாலை நிலத்திற்குரிய கருப்பொருளெனக் கூறுகின்றார்.

    இவ்வாறாகத் தொல்காப்பியரும், இளங்கோவடிகளும், நாற்கவிராச நம்பியும், உரையாசிரியா்களும் பாலை நிலத்தினைப் பற்றிக் கூறிய குறிப்புகள் யாவுமே, பாலை என்கின்ற ஒருவகை நிலம் திரிநிலமாக இருந்தது என்பதனை உறுதிப்படுத்துகின்றன. அத்தகைய திரிநிலமான பாலை நிலத்தின் தன்மையைச் சங்க இலக்கியப் பாடல்கள் பலவாறாக விளக்குகின்றன.

    பாலை நிலத்தின் தன்மை

    குறிஞ்சியும் முல்லையுமாய்ப் பூத்துக் குலுங்கும் சோலைவனம், மழை பொய்த்ததால் கதிரவனின் கதிர்வீச்சு பட்டு, பாலையாகக் காட்சி தரும் இந்நிலத்தில் வற்றிய சுனையும், வறண்ட நீா்நிலையும், காய்ந்த மரங்களும் கடத்தற்கரிய வழியுமாய் இருந்திருக்கிறது.

    இந்நிலத்தினைப் பற்றி நச்சினார்க்கினியா், ‘பாலைத் தன்மையாவது காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவல்மாறி, நீரும் நிழலும் இன்றி, நிலம் பயன்துறந்து புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெறுவது’ (தொல். பொருள்.உரை – ப. 84) எனக் கூறுகிறார்.

    நச்சினார்க்கினியாரின் கூற்றின்படி பாலைத் தன்மையினைக் கூறும் சங்கப் பாடல்களில் அந்நிலத்தினை நீரற்றது என்றும், வழிப் போக்கா்க்குத் துன்பம் தருவதென்றும், கொலைத் தொழில் புரியும் ஆறலைக் கள்வா் வாழும் பகுதியென்றும் கூறுகின்றனவேயன்றி அந்நிலத்தினை உயா்வாகக் கூறிய பாடல்கள் இல்லை.

    இவ்வாறாகப் புலவா்களால் கொடிய தன்மையனவாகப் பாடப்பட்டதற்குக் காரணம், அந்நிலத்தின் சூழல், கொடிய தன்மை வாய்ந்ததாக விளங்கியமையே ஆகும்.  இக்கொடிய தன்மைக்குக் காரணம், வேனிற் வெம்மையே.

    வெம்மை

    வேனிற் வெப்பத்தினால் உண்டானதே பாலை நிலமாதலின் இந்நிலத்தில் வெம்மையின் கொடுமை மிகுதியாக இருந்திருக்கும்.  பாலை நிலத்தின் வேனிற் வெப்பத்தினை உணா்த்தும் பாடலாக,

    “உலைக்கல் அன்ன பாறை யேறிக்

    கொடுவில் எயினா் பகழி மாய்க்கும் சுரம்”(குறுந்:12:2-3)

    என்ற குறுந்தொகை அடிகளில் ‘தலைவன் பொருளீட்டச் சென்ற பாலை வழியானது, கொல்லனது உலைக்களத்துள்ள பட்டடைக் கல்லைப் போன்று வெம்மையையுடைய பாறைகள் நிறைந்த காட்டில், எயினா்கள் தம் அம்பினைத் தீட்டிக் கொண்டிருப்பா்.  அத்தகைய கொடுமை வாய்ந்த பாலை நிலத்தின் வழியில் எம்மைப் பிரிந்து சென்றான் நம் தலைவன்’ எனத் தலைவி கூறுவதாக அமைந்த இப்பாடல், வேனிற் வெப்பத்தினைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

    கொடுமையான வெப்பத்தினால் இந்நிலத்தில் காணப்படும் மரங்கள் யாவும் உலா்ந்த நிலையில், மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பிடித்து காடெங்கும் பற்றி எரிந்து கரிக்காடாய் விளங்கியது என்பதை,

    “நிழல் கவின் இழந்த கவா் மரத்த” (நற்:256:3)

    என்ற நற்றிணையடி விளக்குகிறது.

    இத்தகைய கொடுமை வாய்ந்த நிலத்தின் வழியாக உமணா்கள் உப்பு விற்கச் செல்கின்ற பொழுது, பாலை நிலம் வந்துவிட்டது என்பதனை அறிந்தவுடன் மனம் வருந்துவா் என்பதனை,

     “வேங்கை கொய்யுநா் பஞ்சுரம் விளிப்பினும்

       ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூவஉங்காடு” (ஐங்:311:1-2)

    என்ற ஐங்குறுநூற்று அடிகளில் ‘வேங்கை மலரினைச் சூடுதற்காக மரத்திலேறி மலா் கொய்யும் ஆயர் மகளிர், விளையாட்டின் காரணமாகப் பஞ்சுரம் என்னும் பாலைப் பண்ணைப் பாடுவதைக் கேட்டவுடன், இனி வருவது பாலைநிலமென வழிப்போக்கா் அஞ்சும் கொடிய தன்மை வாய்ந்த நிலமாக இருந்திருக்கிறது.

    மணல்

    தீப்பற்றி எறியாத இடங்களும் வறட்சியுடன் மணல் மிகுந்த பகுதியாகவும் பாலை நிலம் இருந்திருக்கிறது.  மழைக் காலங்களில் குறிஞ்சி நிலத்தில் பெய்த மழை, மருத நிலத்தினை நோக்கி வரும் காட்டாறு, வேனிற்காலத்தில் வற்றிப் போன நிலையில் மணற்பரப்பாக இருந்திருக்கிறது.  பாலை வனத்தினைப் போன்ற காட்டாற்றுப் பாதையில் மணல் காணப்படுவதால் இந்நிலத்திற்குப் பாலை நிலமெனப் பெயா் அமைந்திருக்கலாம்.  இயல்பான நிலங்களில் பாலைவனம் போன்று மிகுதியான மணல் இருந்தமையால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழகத்தில் அதிகமான மழையும் அதற்கு ஏற்றாற் போன்ற வெம்மையும் இருந்திருக்கிறது என்பதனை உணர முடிகிறது.

    நீர்வழியில்லா மேட்டு நிலங்கள், நீரற்ற நிலையில் சூறாவளிக் காற்றுடன் புழுதி பறக்கும் தன்மையனவாக இருந்தது என்பதனை,

    “களிறு உதைத்து ஆடிய கவிர் கண் இடுநீறு

     வெளிறு இல் கார் வெலம் நீடிய

     பழங்கண் முது நெறி மறைக்கும்,

     வழங்க அருங் கானம் ——–” (நற்:302:7-9)

    என்ற நற்றிணைப் பாடல் ‘மக்கள் நடந்து செல்லுதற்கு அரிய சுரவழியில், யானை நிலத்தைக் கால்களால் உதைத்து விளையாடியதால் எழும்பிய மிகுதியான புழுதி, வயிரமேறிய வேல மரங்களின் மீது மேலும் கீழுமாகப் படிந்து நிறம்மாறி நெருக்கமாக அமைந்திருக்கும்’ என்று மேட்டுநிலத்தின் தன்மையைக் கூறுகிறது.

    பத்துப் பாட்டில் ஆற்றுப்படுத்துவதாக அமையும் ஆற்றுப்படை நூல்களில் பாலை நிலத்தினைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

    நல்லியங் கோடனிடம் பரிசில் பெறுவதற்காக ஆற்றுப்படுத்தும் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், பாலை நிலத்தினைப் பற்றிக் கூறுவதாக,

    “வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப

     வேனில் நின்ற வெம்பத வழிநாள்

     காலை ஞாயிற்றுக் கதிர்கடா வறப்ப

     பாலை நின்ற பாலை நெடுவழிச்

     சுரன்முதன் மரா அத்த வரிநிழல் அசைஇ” (சிறுபாண்.ஆ:8-12)

    என்ற சிறுபாணாற்றுப்படை  அடிகளில் ‘அதிகாலையிலே நண்பகல்போல் வெப்பம் தரும் கதிரவன், அப்பாலை நிலத்திலுள்ள பரற்கற்களைச் சூடேற்றி, அந்நிலத்தின் வழியாக வருகின்றவா்களின் கால்களைக் கிழிக்கச் செய்யும் தன்மை வாய்ந்த பாலை நெடுவழியில், கடம்ப மரத்தினுடைய வரிநிழல் காணப்படும். அந்த நிழலில் சிறிது இளைப்பாறி, பின்னா் அவ்விடத்தினை விட்டுக் கடந்து சென்றால், நல்லியங்கோடனின் நாடு வரும்’ என்று உணா்த்தும் இப்பாடலடியில், பாலை நிலம் வெப்பமிக்கது என்றும், அவ்வழியில் பரற்கற்கள் மிகுதியாகக் காணப்படும் என்றும், இளைப்பாறுவதற்கு நல்ல நிழல் இருக்காது என்றும் பாலை நிலத்தின் தன்மையினைப் படம் பிடிக்கிறது.

    இதனைப் போன்றே பெரும்பாணாற்றுப்படையில் பாலை நிலம் நீரற்ற தன்மையினை,

     “மான்அடி பொறித்த மயங்குஅதா் மருங்கின்,

     ……………………………………

     அருஞ்சுரம் இறந்த அம்பா்” (பெரும்பாண்.ஆ:106-117)

    என்ற அடிகளில், ‘மான்களின் அடிச்சுவடு பதிந்து கிடக்கும். மயங்குதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தில், மழை வறண்ட காலத்தில் நீா் பெறும்பொருட்டுத் தோண்டப்பட்ட பல குழிகள் காணப்படும்.  அக்குழிகளை ஆழக்  குழிதோண்டி, அதன் அகத்தே மறைந்தொடுங்கி, நடு இரவில், அகத்திப் பூப்போன்ற வளைந்த மருப்பினையுடைய பன்றிகள் நீருண்ண வரும் வருகையைப் பகுதிநேரம் பார்த்து நிற்பா் எயினா்.  அவ்வாறாக எதிர்பார்த்திருக்கும் எயினருக்குப் பன்றி வேட்டை கிடைக்கவில்லையென்றால், எஞ்சிய அரை நாளில் அங்காந்த வாயையுடைய நாய்களுடன், பசிய தூறுகளை அடித்துக் குவித்த இடத்தே வேலியில் தொடா் வலை கட்டி விடுவா். புதா்களினின்றும் வெளிவரும் முயல்களைத் தப்பிப் போக விடாமல் வலையினகத்தே வளைத்துப் பிடிப்பா்.  பின்னா் தறுகண்மையுடைய அக்காட்டில் வாழ்வோர் அவற்றைக் கூடித் தின்கின்ற நீா் வறண்ட, அரிய பாலைக் கடுஞ்சுரம்’ என்று கூறும் இப்பாடலில் பாலை நிலத்தின் நீரற்ற தன்மையினையும், அந்நிலத்தில் வாழும் மக்கள் இடைவிடாமல் வேட்டையாடும் தொழிலைச் செய்கின்றவா் என்பதனையும் விளக்குகிறது.

    இவ்வாறாகப் பாலை நிலத்தின் தன்மையினைக் கூறும் பாலைப் பாடல்கள், புலவா்களோ, அந்நிலத்தின் வழியாகச் சென்று வந்தவா்களோ அந்நிலத்தின் தன்மையைக் கூறுவது போன்ற பாடல்கள் இல்லை.  தலைவன் பொருளீட்டப் பிரிவதும், அவன் பிரிவைத் தாங்காமல் தலைவி வருந்துவதுமாக அமையும் பாலைப் பாடல்களில், தலைவன் பிரிந்த வழி இவ்வாறெல்லாம் இருக்குமெனத் தலைவி நினைப்பதாகவே பல பாடல்கள் அமைந்திருக்கின்றன.

    இலக்கியங்களில் இன்பியல் நிகழ்வைக் காட்டிலும் துன்பியல் நிகழ்வே முதன்மையிடத்தைப் பெறுகின்ற நிலையில், பிரிவைப் பற்றிப் புனையும் பாடல்கள் அப்பிரிவுத் துன்பத்தை மிகுவிப்பதற்காக வேண்டி மிகுவருணனை கொண்டிருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.  குறிப்பாக, இந்நில வருணனை புனையும் பல பாடல்கள், ‘அக்கொடிய நிலத்தின் வழியாகச் செல்வோர் ஆறலைக் கள்வரிடமிருந்து மீள்வது அரிது’ என்ற கருத்தினைப் புனைகின்றன.  இவ்வாறான வருணனை யாவுமே இக்காலச் சிறுகதை, நாவல் போன்று அக்காலத்தில் தோன்றிய உயா் கற்பனையே ஆகும்.  ‘பாலை நிலம் வறண்ட தன்மையால் அமைந்திருக்கலாம்,  அந்நிலத்தின் வழியாகச் செல்வோர்க்குத் தாகம் தீா்க்கத் தண்ணீரற்ற நிலை நிலவி இருக்கலாம், வறட்சியால் நீரற்ற நிலை நிலவியதால் எவ்வகையான விளைச்சலுமின்றித் தங்களின் உணவுத் தேவைக்காக வழிப்பறி செய்திருக்கலாமே தவிர, கொலை செய்தனா் என்பது சிந்திக்க வேண்டிய  கருத்தாக இருக்கிறது.

    நீர் நிலைகள்

    பாலை நிலத்தின் நீா் நிலைகளைக் குறிப்பிடும் பாடல்கள் பொய்த்துப் போன காட்டாற்றையும், வற்றிய சுனையையுமே குறிப்பிடுகின்றன. அந்நிலத்தில்  வாழ்கின்ற மக்களும், விலங்குகளும் தாகம் தீா்க்க மரப்பட்டைகளையும், வேனிற் காலத்தில் விளையும் நெல்லிக் கனியையும் தின்று தாகம் தீா்ப்பதாகப் பாடல்கள் புனையப்பட்டுள்ளன.

    சுனை நீர்

    காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்ற மக்களுக்குச் சுனை நீரே குடிநீராக இருந்திருக்கிறது. பாறைகளின் நடுவே நீா்த் தங்கும் அளவிற்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையைத் தான் சுனை என்கின்றனா்.  இவ்வாறான சுனைகள் இயற்கையாகவும் நீா்த் தேவைக்காகச் செயற்கையாகவும் அமைக்கப்பட்டிருக்கலாம்.

    பாரியின் பறம்பு மலையிலுள்ள சுனைகள், வானத்திலுள்ள விண்மீன்களையொத்தன என்பதை,

    “———————— வானத்து

    மீன் கண் அற்று, அதன் சுனையே ஆங்கு” (புறம்:109:9-10)

    என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது.  வானத்திலுள்ள விண்மீனைப் போல் பாரியின் மலையில் சுனைகள் காணப்படுகின்றன என்பதனால், சுனைகள் எல்லாம் இயற்கையாக அமைந்தனவாக இருக்காது, செயற்கையாகவும் அமையப் பெற்றிருக்கும் என்பதனை உணா்த்துகிறது.

    காடுகளில் வாழ்கின்ற மக்களுக்கு நீர் தரும் சுனை, குளம் போன்றவை அமைந்திருந்தன என்பதை,

    “சுனையெல்லாம் நீலம் மலர, சுனை சூழ்

      சினை யெலாம் செயலை மலர, காய்கனி

     உறழ நனை வெங்கை ஒள் இணர் மலர,

     மாயோன் ஒத்த இன் நிலைத்தே” (பரி :15 : 30-33)

    என்ற பரிபாடலில் ‘திருமாலிருஞ் சோலை மலையின்கண் சுனையிடமெல்லாம் நீலமலா் மலரவும் சுனையைச் சுற்றி நிற்கும் அசோக மரத்தின் கிளைகளில் மலா்கள் மலரவும், காட்சிக்கினிய தோற்றத்தினை உடையதாயிற்று’ என்று கூறுவதிலிருந்து சுனைகள் குளம் போல இருந்திருக்கின்றன என்பது புலனாகிறது.

    இவ்வாறாக மழைக் காலங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கும் சுனைகள் வேனிற் வெப்பம் தோன்றியவுடன் நீர் வற்றிய சுனையாக மாறி அந்நிலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு நீர் கொடுக்காத நிலையினைப் பெற்றிருக்குமென்பதை,

    “சுவைக்காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கா்

     வீழ் கடைத் திரற் காய் ஓங்குடன் தின்று

     வீசுனை சிறுநீா் குடியினா்” (நற்:14:5-7)

    என்ற நற்றிணைப் பாடலில் ‘தலைவனுடன் உடன்போக்கு செய்த தலைவி பாலை நிலத்தின் வழியாகச் செல்கின்ற பொழுது, அவ்வேனிற் காலத்தில் விளையும் தன்மையுடைய நெல்லி மரத்தின் நெல்லிக்கனியைத் தின்று, வற்றிய சுனையில் உள்ள குடிநீரைக் குடித்தனா் என்று குறிப்பிடுவதிலிருந்து பாலை நிலத்திலுள்ள சுனை, பெரும்பாலும் வற்றியே காணப்படும் என்பது புலனாகிறது.

    இத்தகைய தன்மை வாய்ந்த பாலை நிலங்களில் உள்ள சுனைகள் முற்றிலுமாகக் காய்ந்து போன நிலையில் காட்டாறு ஓடிய மணற் பாதையை அகழ்ந்து அதில் கிடைக்கும் ஊறல் நீரைக் குடிநீராகப் பயன்படுத்தியிருக்கின்றனா்.

    மரங்கள்

    பாலை நிலங்களில் காணப்படும் மரங்கள் யாவுமே காய்ந்து போனதும், புள்ளிய நிழலைத் தருவதுமான நிலையையே பாடல்களில் புனையப் பெற்றிருக்கின்றன.  இவ்வாறாகப் புனையப்பட்ட வருணனைகள் யாவுமே பாலை நிலத்தின் தன்மையைத் தலைவன் தோழிக்கு உரைப்பதாகவும், அந்நிலத்தின் வழியாகச் செல்கின்ற தலைவனை நினைத்துத் தலைவி வருந்துவதுமாகவே காணப்படுகின்றன.

    உகாய் மரம்

    பாலைப் பாடல்களில் அதிகமாகப் பேசப்படும் இம்மரம், சாம்பல் நிறத்தினைப் போன்ற அடிப்பகுதியையும் வேனிற் காலத்திலும் நிழல் தரும் தன்மை வாய்ந்தது என்பதை, பொருளீட்டி வருவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிய இருக்கும் தலைவனுக்குத் தோழி அறிவுரை கூறுவதாக அமையும்,

    “புல்லரை யுகாஅய் வரிநீழல் வதியும்

     இன்னா வடுதிறம் மிறத்தல்

     இனிதோ ———————” (குறுந்:363:4-6)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகளில் ‘பொருளீட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவனே! நீவிர் செல்லும் வழியில் கொடுமையான பாலை நிலம் உள்ளது.  அந்நிலத்தில் வாழும் எருது, செவ்விய தண்டினையுடைய அறுகினது நீண்ட கொத்தைக் காத்துத் தின்று, உகாய் மரத்தின் புள்ளிய நிழலில் தங்கும் கொடிய நிலமாகும்.  ஆதலால் பொருளீட்டுதலைக் கைவிடுவாயாக’ எனக் கூறுவதாக அமையும் இப்பாடல் வரியில், இயல்பாகவே மழையென்றும், வெயிலென்றும் பாராமல் வாழும் காட்டெருது, மிகுந்த வேனிற் வெப்பத்தினைத் தாங்காமல் மர நிழலில் தங்குகின்றனவென்றும், அரிய அவ்வழியில் மரங்களெல்லாம் உலா்ந்து போன நிலையில் புள்ளி நிழலே காணப்படுமென்றும் பாலை நிலத்தின் தன்மையை விளக்குகிறது.

    கள்ளிமரம்

    இயல்பான காலங்களில் புதா்ச்செடிகள் நிறைந்து காணப்படும் காடுகள், வேனிற் காலத்தில் கள்ளிக் காடாகக் காணப்பட்டன என்பதனை,

    “வள்ளிளெயிற்றுச் செந்நாய் வயவறு பிணவிற்

     கள்ளியங் கடத்திடைக் கேழல் பார்க்கும்” (ஐங்:323:11-21)

    என்ற ஐங்குறுநூற்று அடிகளில் ‘கூரிய பற்களையுடைய செந்நாய், கருவுற்றிருக்கும் பெண் நாய்க்கு ஊன் வழங்குதற்காகக் கள்ளிக் காட்டினூடே பதுங்கிக் கிடந்து பன்றியின் வரவினை எதிர்பார்க்கும்’ என்று கூறுவதிலிருந்து கள்ளி மரங்கள் நிறைந்த காடாக வேனிற்காலத்துப் பாலை நிலம் விளங்கியது என்பதனை உணர முடிகிறது.

    வெட்பாலை மரம்

    கள்ளிக்காடும், புள்ளி நிழலும், நீரற்ற நிலையுமாய் விளங்கும் பாலை நிலத்தில், மழைக் காலங்களில் பெய்த மழைநீரைத் தண்டுப்பகுதியில் சேகரித்து வைக்கும் தன்மையனவாக விளங்கும் வெட்பாலை மரம், வேனிற் காலத்தில் வெண்மையான பூக்களைப் பூக்கும் தன்மை வாய்ந்ததாகும். வேனிற் காலத்து நீரற்ற நிலையில், அந்நிலத்தில் வாழ்ந்த விலங்குகள், இம்மரத்தின் தண்ணீர் நிறைந்த தண்டுப்பகுதியைத் தின்று தாகம் தணிக்கும் என்பதை,

    “———————- வள் உதிர்ப்

     பிடி பிறந்திட்ட நார்இல் வெண்கொட்டுக்

     கொடிறு போல் காய வால் இணர்ப்பாலை” (நற்:107:1-3)

    என்ற நற்றிணை அடிகளில், பெரிய நகத்தினையுடைய பெண்யானை, நீர் வேட்கையின் காரணமாகப் பாலை மரத்தின் பட்டையை உரித்துத் தின்றதால் நாரில்லாத வெண்மையான கிளைகளையுடைய இம்மரம், குரடுபோன்ற காய்களை உடையது என்பதனை விளக்குகிறது.

    குரடு போன்ற, கனியாகும் தன்மை பெறாத இம்மரக்காய்கள் காய்ந்து வெடிக்கும் தன்மையவாகும் என்பதனை,

    “————————– இலை தீர் நெற்றம்

    கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்” (நற்:107:4-5)

    என்ற நற்றிணைப் பாடலடிகள் விளக்குகிறது.

     இருப்பை மரம்

    பாலை நிலப் பாடல்களில் குறிப்பிடப்படும் மரங்களில் இவையும் ஒன்று.  இம்மரம் வேனிற்காலத்தில் பூக்கும் என்பதனை,

    “கான விருப்பை வெனல் வெண்பூ

    வளிபொரு நெடுஞ்சினை யுகுத்தலின் ஆர்கழல்பு

     களிறுவழங்கு சிறுநெறி புதையும்” (குறுந்:329:1-3)

    என்ற குறுந்தொகை அடிகளில் ‘வேனிற் காலத்தில் வௌ்ளிய மலரினைப் பூக்கும் இருப்பை மரம், சூறாவளிக் காற்று வீசுதலால் பூக்களை உதிர்க்கும். அவ்வாறு உதிர்ந்த பூக்கள் யானைகள் செல்லும் சிறுவழியை மறைக்குமென்று

    “கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுதின்,

    வில்லோர் தூணி வீங்கப் பெய்த

    அம்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை

    செப்பு அடா; அன்ன தீம் புழல் தய்வாய்

    உழுது காண் துறைய ஆகி, சூர் சுழல்பு

    ஆலி வானின் காலொடு பாறி

    துப்பின் அன்ன செங் கோட்டு இயவின்

    நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பார்க்கும்” (அகம்:9:1-9)

    அகநானூற்றுப் பாடலடிகளில் ‘கொல்லும் தொழிலில் சிறந்ததும், கூா்மையானதும், குறும் புழுகு எனப் பெயா் கொண்டதும் வில்வீரா்களின் அம்பறாத் துணிகளில் மிகுதியாக இட்டு வைக்கப்படுவதுமாகிய குப்பியின் நுனிகளைப் போன்ற இருப்பை மரங்களின் மொட்டுகள் அரும்பின் செப்புத் தகடுகள் போன்ற அம்மரங்களின் சிவந்த தளிர்களெல்லாம் நெய்யைப் போன்ற வெண்மையாகக் காணப்படும் மலா்கள், வேனிற் காற்று வீசுவதால் மரக்கிளையிலிருந்து உதிர்ந்து பவளம் போன்ற சிவந்த மேடாகிய வழிகளில் வீழ்ந்து கிடப்பது குருதி மீது கொழுப்பு பரந்து கிடப்பது போல் காணப்படும்’ என்று கூறுவதிலிருந்து இம்மரம் வேனிற் காலத்தில் பூக்கும் தன்மையது என்பது புலனாகிறது.

    மரா மரம்

    குறிஞ்சி திரிந்த பாலை நிலத்தில் காணப்படும் கடம்ப மரமென்று அழைக்கப்படும் மரா மரம் வேனிற் காலத்தில் பூக்கும் தன்மையினைப் பெற்றதாகும்.  இம்மரம் வெண்மை பூவினையும், சிவந்த பூவினையும் பூக்கும் இரு வகை மரமாகும்.  வௌ்ளிய மலரினைப் பூப்பது வெண் கடம்பமென்றும், சிவந்த மலரினைப் பூப்பது செங்கடம்பமென்றும் அழைப்பர். மலையில் வாழ்கின்ற மக்கள் இம்மரத்தில் தெய்வம் இருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தனர்.  இதனை,

    “மன்ற மரா அத்த பெஎமுதிர் கடவுள்

     கொடியோர்த் தெறுஉ மென்ப” (குறுந்:87:1-2)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகள், ‘பொதுவிடத்திலிருக்கும் மராமரத்தில், கொடியோரைக் கொல்வதற்காக இறைவன் தங்கியிருக்கிறானென்று நம்பிக்கை கொண்டிருந்த குறிஞ்சி நில மக்கள், இம்மரத்தினடியில் மேடையிட்டு மன்றமாகக் கொண்டு வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்’ எனக் கூறுகிறது.

    யா மரம்

    வெட்பாலை மரத்தினைப் போன்றே மழைக் காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரைத் தண்டுப்பகுதியில் சேமித்து வைக்கும் இயல்பினைப் பெற்ற இம்மரம், நெடுங்காலம் நிலைத்திருக்கும் வைரம் பாய்ந்த மரமாக விளங்கியது என்பதை,

    “பொத்தில் காழ வத்த யா அத்துப்

    பொரியரை முழுமுதல் உருவக் குத்தி”(குறுந்:255:1-2)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகள் விளக்குகின்றன.

    இம்மரப்பட்டைகள் வேனிற் காலத்தில் காய்ந்து போகாமல் நீா்த்தன்மைப் பெற்றிருப்பதால், யானைகள் இம்மரப் பட்டையைத் தின்று தாகம் தணிக்கும் என்பதை,

    “பிடிபசி அளைஇய பெருங்கை வேழம்

    மென்சினை யாஅம் பொளிக்கும்” (குறுந்:37:2-3)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகளில் ‘பெண்யானையினது பசியைப் போக்குவதற்காகப் பெரிய துதிக்கையுடைய ஆண்யானை மெல்லிய கிளைகளையுடைய யாமரத்தின் பட்டையை உரித்து அதன் நீரை அப்பிடிக்குக் கொடுத்து தாகத்தைத் தணிக்குமென விளக்குகிறது.

    குறிஞ்சியும் முல்லையும் திரிந்த நிலம் பாலையாதலால், இவ்விரண்டு நிலங்களில் உள்ள அனைத்து மரங்களுமே பாலை நிலத்திற்குரிய மரங்களாகக் கொள்ளாமல், அவ்வேனில் வெப்பத்தினைத் தாங்காமல் மாய்ந்த மரங்களை விடுத்து, வெம்மையினைத் தாங்கி, புள்ளி நிழலையும் வரி நிழலையும் தரும் ஒருசில மரங்களைப் பற்றியே பாலைத் திணைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.  இவ்வாறாகப் பாலைத் திணைப் பாடல்களில் குறிப்பிடும் மரங்கள் யாவுமே வேனிற் காலத்து மலரும் தன்மை வாய்ந்தவையாகவே இருக்கின்றன.

    பறவைகள்   

    மரங்களின் நிலையைப் போன்றே, பல்வேறு வகையான பறவைகள் குறிஞ்சியிலும், முல்லையிலும் காணப்பட்டாலும், அவ்விரண்டு நிலங்களும் திரிந்த நிலமான பாலை நிலத்திற்குப் பறவைகளாகக் கணந்துள், எழால், பருந்து, வங்கா, புறா போன்றவற்றைக் குறிப்பிடுகின்றனா்.  மற்ற பறவைகளைக் குறிப்பிடாமல் இப்பறவைகளை மட்டும் குறிப்பிட்டமைக்குக் காரணம் வேனிற் வெப்பத்தினைத் தாங்கும் தன்மையைப் பெற்றமையாக இப்பறவைகள் விளங்கியமையே அதற்குக் காரணமாகும்.

    கணந்துள்

    [கணந்துள்–ஆள்காட்டி (Lapwing) – http://www.vallamai.com/?p=81865]

    பாலை நிலத்தில் வாழும் இப்பறவை நீண்ட கால்களையும் ஓங்கிய குரலெழுப்பும் இயல்புடையதாக இருந்தது என்பதை,

    “பார்வை வேட்டுவன் படுவலை வொரிஇ

    நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ் விளி

     சுரம் செல் கொடியா் கதுமென இசைக்கும்” (நற்:212:1-3)

    என்ற நற்றிணைப் பாடலடிகளில், ‘பாலை நிலத்தில் முயல் வேட்டைக்காகக் கட்டிய வலையைக் கண்டு நெடிய காலையுடைய கணந்துள் பறவை அச்சமுற்று மிகுந்த ஒலியெழுப்பும்.  அவ்வாறு கணந்துள் பறவைகள் கத்தும் ஓசை, பாலை நிலத்தின் வழியாகச் செல்லும் கூத்தா்கள் வழிச் செல்லும் வருத்தம் புலப்படாதவாறு திடீரென இசைக்கும் யாழிசையுடன் சோ்ந்து ஒத்து ஒலிக்கும்’ என்று கூறுவதில் கணத்துள் பறவை நீண்ட காலினையும் ஓங்கிய குரலையும் உடையது என்பது விளங்குகிறது.

    கொடிய தன்மை வாய்ந்த பாலை நிலத்தின் வழியாகச் செல்வோர், இப்பறவைகள் கத்துவதைக் கேட்டவுடன் இப்பகுதியில் ஆறலைக் கள்வா்கள் இருக்கின்றனரென அறிவா் என்பதை,

    “நெடுங்காற் கணந்துள் ஆளறி வறீஇ

    ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்” (குறுந்:350:5-6)

    என்ற குறுந்தொகைப் பாடலடிகள் விளக்குகின்றன.

    பருந்து

    பாலை நிலத்தில் வாழும் பறவைகளுள் ஒன்றான பருந்து, வானளாவி பறக்கும் தன்மை வாய்ந்தது.  நுண்ணிய பார்வையும் கூரிய வாயையுமுடைய இப்பறவை, நிணத்தினையே விரும்பி உண்பது. ‘ஆறலைக் கள்வா்களால் கொலை செய்யப்பட்ட வழிப்போக்கரின் நாறும் புலாலை விரும்பியுண்ணும் சிவந்த காதுகளையுடைய ஆண் பருந்து, நெருங்கிய தன் சுற்றத்தினை அழைத்துண்ணும்’ என்பதனை,

    “படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி

     எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்” (அகம்:161:5-6)

    என்ற அகநானூற்று பாடல் வரிகள் விளக்குகின்றன.

    பாலை நிலத்து ஆறலைக் கள்வா் போன்ற கொடிய தன்மை வாய்ந்த இப்பறவை உயா்ந்த மரக்கிளையில் கூடுகட்டி, முட்டை ஈன்று அக்கூட்டைச் சுற்றி வரும் பெட்டைப் பறவைக்கு, ஆண்பறவை இரையாகக் குடிகளில் வளா்க்கப்படும் கோழிக் குஞ்சுகளையும், சிறு குருவிகளையும் எலிகளையும் கொண்டு வரும் கொடிய பறவையாக இருக்கிறது.

    வங்கா

    பாலை நிலத்தில் வாழும் இப்பறவை, சிவந்த கால்களையும் புல்லாங்குழலின் ஓசையைப் போன்ற குரலையும் உடைய பறவை என்பதை,

    “வங்காக் கடந்த செங்காற் பேடை

      எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது

     குழலிசைக் குரல் குறும்பல அகவும்” (குறுந்:153:1-3)

    என்ற குறுந்தொகை அடிகளில் ‘ஆண் வங்காப் பறவை இரை தேடுவதற்காகச் சென்றுவிட்ட பொழுது, தனித்திருக்கும் சிவந்த கால்களையுடைய பெண் வங்கா, புல்லூறு என்னும் பறவை தன்னை இரையாகக் கொள்வதற்கு நெருங்கி வருவதைக் கண்டு தம்முடைய கணவனாகிய ஆண் பறவையை வேய்ங்குழல் போன்ற குரலினால் அழைக்கும்’ என்று கூறுவதிலிருந்து இப்பறவை சிவந்த கால்களையும், வேய்ங்குழல் போன்ற குரலினை உடையதுவென்றும், புல்லூறு என்னும் ஒருவகைப் பறவைக்கு அஞ்சி வாழும் இயல்பினது என்றும் உணர முடிகிறது.

    எழால்

    புல்லூறு என்னும் எழால் பறவையும் பாலை நிலத்தில் வாழ்ந்திருக்கிறது.  இப்பறவையைப் பற்றித் தொல்காப்பியர்,

    “மயிலு மெழாஅலும் பயிலத் தோன்றும்” (தொல்.பொருள்.மரபு:589)

    என்ற நூற்பாவில் ‘ஆண்மயிலையும், ஆண் எழாலையும் போத்து என்று கூறப்பெறும்’ என்று கூறுவதிலிருந்து இப்பறவை மயிலைப் போன்ற பெரிய பறவையாக இருக்குமென உணர வைக்கிறது.

    புறா

    பாலை நிலப் பாடல்களில் அதிகப் புலவா்களால் பாடப்பெற்ற பறவையான புறா, குறுகிய கால்களையும் சாம்பல் நிறம் போன்ற சிறகுகளையும் உடையது.  வறட்சிக் காலங்களில் புலா்ந்த நிலத்திலுள்ள பொரிந்த தானியங்களைக் கொத்தித் தின்னும் தன்மை வாய்ந்தது.  வேனிற் காலத்திலும் திரண்டிருக்கும் கள்ளிமரத்தில் கூடுகட்டி வெண்மையான முட்டை ஈனுவது என்பதை,

    “—————————– பாம்பின்

      உரிநிமிர்ந் தன்ன வுருப்பவிர் அமையத்து

      இரைவேட்டு எழுந்த சேவல் உள்ளிப்

      பொறிமயிர் எருத்தில் குறுநடைப் பேடை

      பொரிகாற் கள்ளி விரிகா யங்கட்டுத்

      தயங்க விருந்து புலம்பக் கூஉம்” (குறுந்:154:1-6)

    என்ற பாடலில் ‘பாம்பானது உரி மேலெழுந்தாற் போன்ற கானல் விளங்குகின்ற நண்பகற்காலத்தில், இரை தேடுவதற்காக மேலெழுந்து பறந்து சென்ற ஆண் புறாவை நினைத்து, முட்டை ஈன்ற புள்ளிகளையுடைய மயிர் பொருந்திய கழுத்தையும், குறுக அடியிடும் நடையினையுடையதுமான பெண் புறா, பொரிந்த அடியையுடைய கள்ளி மரத்தில் வருந்திக் கொண்டிருக்குமென்று கூறுவதிலிருந்து, புறா கள்ளி மரத்தில் கூடுகட்டி வாழும் பறவை என்பது விளங்குகிறது.

    பாலை நிலங்களில் காணப்படும் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும் சங்கப் பாடல்கள் யாவுமே, தலைவியை விட்டுப் பொருளீட்டுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன், அந்நிலத்தில் காணப்படும் பறவைகளின் அன்புப் பிணைப்பினைக் கண்டு வருந்துவதாகவே அமைந்திருக்கின்றன.

    விலங்குகள்

    சங்க இலக்கியப் பாலைப் பாடல்களில் பாலை நிலத்தில் வாழும் விலங்காக, வலிமை இழந்த யானை, வலிமையிழந்த புலி, வலிமையிழந்த செந்நாய், கரடி போன்றவற்றையே குறிப்பிடுகின்றனர்.

    நிலம் திரியாக் காலங்களில் வலிமை வாய்ந்தவையாக இருக்கும் இவ்விலங்குகள், வேனிற் வெப்பத்தினால் காடழிந்த நிலையில் தேவையான இரை கிடைக்காததால் இவ்விலங்குகள் வலிமையிழந்து காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றன.

    யானை

    கரிய நிறத்தினையுடைய யானை, மலையில் வாழும் விலங்கினங்களுள் ஒன்று.  மலைகளில் விளைகின்ற தினையினை உண்ணுதலைக் காட்டிலும் மிதித்தலையே மிகுதியாகக் கொண்டிருக்கும் யானை, வேனிற் காலத்தில் புழுதிக் காடாகக் கிடக்கும் பாலை நிலத்தில் தாகம் தீர்க்கத் தண்ணீரின்றி கலங்கிய நீரை உண்ணுமென்பதை,

    “துடிஅடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்

     பிடி ஊட்டி பின் உண்ணும்  களிறு” (கலி:11:8-9)

    என்ற கலித்தொகைப் பாடலடிகளில் ‘துடிபோன்ற அடியினையுடைய ஆண்யானை, நீரற்ற பாலை நிலத்திலுள்ள கலங்கிய நீரைத் தான் உண்ணாமல் தன் பிடிக்குக் கொடுக்குமென்று கூறுவதிலிருந்து பாலை நிலத்தில் யானைகள் இருந்தன என்பது விளங்குகிறது.

    செந்நாய்

    பாலை நிலத்தில் வாழும் விலங்குகளை வேட்டையாடும் தன்மை வாய்ந்த செந்நாய், பசிய கண்களையும் நாய் போன்ற உருவமைப்பும் உடையது.  இத்தகைய கொடுமைத் தன்மை வாய்ந்த செந்நாயையும் நன்நாயாகப் புனைந்திருக்கும்,

    “ஈா்ம்பிணவு புணா்ந்த செந்நாய் ஏற்றை

     மறியுடைய மான்பினை கொள்ளாது கழிய

     மரிய சுரன் வந்தனரே” (ஐங்:354:1-3)

    என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் ‘அன்புமிக்க நெஞ்சையுடைய பெண் நாயைப் புணா்ந்த செந்நாய், குட்டிகளையுடைய பெண்மானை இரக்கங் காரணமாக இரையாக வேட்டங்கொள்ளாமல் விட்டுச் செல்லும் பாலை நிலம்’ என்று கூறுவதில், பாலை நிலத்தில் செந்நாய் என்கின்ற ஒருவகை விலங்கு, மானைக் கொல்லும் தன்மையினவாக இருந்திருக்கிறது என்பதனை உணர முடிகிறது.

    புலி

    மலைகளில் வாழும் இவ்விலங்கு, யானையைத் தாக்குதலும், யானையால் தாக்கப்பட்டு வலி சோ்தலும் உண்டு.  யானை, செந்நாய், மரையினம் முதலியவற்றைக் கொன்று உண்ணும் கொடிய புலிக்கு உடலில் வளைந்த கோடும், கண்களில் செவ்விய நிறமும் உடையது.  இவ்விலங்கு நின்றபடியே இருபக்க நிகழ்வைப் பார்க்கும் தன்மை வாய்ந்தது.  இத்தகைய கொடுமைத் தன்மை வாய்ந்த இவ்விலங்கு, தான் கொன்ற விலங்குகளை மலைக் குகையிலே இட்டு வைத்திருந்ததென்பதை,

    “ஒலிகழை நிவந்த வோங்கமலைச் சாரல்

     புலிபுகா விறுத்த புலவுநாறு கல்லளை

     ஆறுசென் மாக்கள் சேக்கும்

    கோடுயா பிறங்கன் மலை” (குறுந்:253:5-8)

    என்ற குறுந்தொகைப் பாடலில், ‘ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஒலிக்கின்ற மூங்கில்கள் ஓங்கி வளா்ந்த மலைப்பக்கத்தில், புலி தனக்குரிய உணவைச் சேகரித்து வைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கற்குகையினிடத்து, வழிப்போக்கா்கள் தங்குவா்’ என்று கூறுவதில் ‘வேட்டையாடுதலில் வீரமிக்க புலி, தான் கொல்லும் விலங்கு இடப்பக்கம் விழுந்தால், அவ்விலங்கின் நிணத்தைத் தின்னுதலைத் துறக்கும்.  அத்தகைய தன்மை வாய்ந்த புலி வேனிற்காலத்தின் வறட்சியினால் கிடைக்கின்ற நிணத்தினைக் கற்குகையில் சேகரித்து வைத்து உண்ணுமெனப் பாலை நிலத்தில் வாழும் புலியின் நிலையினைக் குறிப்பிடுகின்றது.

    இவ்வாறாகக் கூறும் விலங்கின் நிலையாவுமே பாலை நிலத்தின் வறட்சியினை உணா்த்துவதாகவே அமைகிறது.

    மக்கள்

    பாலை நிலத்தில் வாழும் மக்கள் எயினா், எயிற்றியா், மறவா், மறத்தியா் என்று இலக்கண நூலாரும், உரையாசிரியா்களும் கூறுகின்றனா்.  இக்கருத்தினை ஏற்கும் வண்ணமாகப் பல சங்க இலக்கியப் பாடல்களில் எயினா், மறவா் என்னும் பெயா்க் குறிப்பு காணப்படுகிறது.

    “கொடுவில் எயினா் குறும்பிற்கு ஊக்கும்

     கடுவினை மறவா் வில்லிடத் தொலைந்தோர்

     படுபிணம் கவரும் பாழ்படு நனந்தலை” (அகம்:319:3-5)

    “கொடுவில் எயினா் கோட்சுரம் படர”(அகம்:79:15)

    என்ற அகநானூற்று அடிகள், ‘பாலை நிலமக்கள் எயினா், மறவா்’ என்பதனை உணர்த்துகின்றன.

    வேனிற் காலத்தில் மட்டும் பாலையாகக் காட்சி தரும் பாலை நிலத்தில், எயினா் எயிற்றியா் என்ற குடி நிலைத்திருந்தது என்பது ஏற்கத்தக்கதாக இல்லை.  இருப்பினும், சங்க இலக்கியங்களில் எயினா் பாலை நிலத்தில் வாழ்ந்தனா் என்ற குறிப்பு கிடைக்கிறது.  இதனடிப்படையில் பாலை நில மக்களாகக் கூறப்படும் எயினா் யார்? என்ற வினா நம்மிடையே தோன்றுகிறது.  அவ்வினாவிற்குப் பதில் கூறும் வண்ணமாகச் ச. கு. கணபதி அவர்கள், “நாட்டிலே அரசரது ஆணையை மதியாமல் கொலை, கொள்ளை, திருட்டு முதலிய குற்றங்களைச் செய்தவா்களை, அரசா் நாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். அவ்வாறாக மன்னனால் வெளியேற்றப்பட்ட அம்மக்கள் குடும்பங்களுடன் பாலை நிலத்திலே வாழ்க்கையை நடத்தக் குடிபுகுந்தனா்,  அம்மக்களே எயினராவா்.  குற்றம் புரிந்தவா்களைக் கொலை புரியும் அக்காலத்தில், அம்மக்களை மன்னன் கொலை புரியாமல், காட்டுப் பகுதியில் வாழ வைத்ததற்குக் காரணம் போர்க் காலங்களில் போருக்குப் பயன்படுத்துவதற்காகவே” என்று குறிப்பிடுகிறார். அப்போரிலே அம்மக்கள் மாண்டு போவதாக  நம்பிக்கை.

    எயினர்

    பாலை நிலமக்களைப் பற்றிச் சங்கப் பாடல்களில் எயினரெனப் பல குறிப்பு காணப்படுவதால், காடுகளிலும் மலைகளிலுமென இரண்டு பகுதியிலும் எயினரெனும் ஒருவகை குடி வாழ்ந்திருக்கலாம்.  அக்காடும் மலையும் திரிந்து பாலையாகிய காலத்து, காடுகளில் வாழ்ந்த ஆயரை நில மக்களாகக் கொள்வதா? அல்லது மலைகளில் வாழ்ந்த குறவரை நிலமக்களாகக் கொள்வதா? என்ற குழப்பம் நிலவியிருக்கும்.  இந்நிலையில் இரண்டு குடியிலும் சிறுகுடியாக வாழ்ந்த எயினா் குடி, இரண்டு நிலங்களும் திரிந்து ஒருநிலமாகிய காலத்து அந்நிலத்திற்குரிய பெருங்குடியாகி இருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.

    குறிஞ்சியும் முல்லையுமே பாலையாதலால், குறிஞ்சியிலும், முல்லையிலுமென இரு நிலங்களிலும் வாழ்ந்த எயினரே இந்நிலத்திற்குரிய குடிமக்களாக இருந்தனா் என்பது தெளிவாகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1. அகப்பொருள் விளக்கம், கோவிந்தராச முதலியார் (குறிப்புரை), திருநெல்வெலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை.
    2. ஐங்குறுநூறு, சோமசுந்தரனார், பொ. வே, திருநெல்வெலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை.
    3. கலித்தொகை, விசுவநாதன், அ., நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி) லிட், சென்னை.
    4. குறுந்தொகை, சண்முகம் பிள்ளை,மு., தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    5. குறுந்தொகை, சாமிநாதையர், உ. வே., அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
    6. சிலப்பதிகாரம், ஸ்ரீ சந்திரன், ஜெ., வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
    7. சிறுபாணாற்றுப்படை, சோமசுந்தரனார், பொ. வே., திருநெல்வெலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
    8. தமிழ் இலக்கிய வரலாறு, அடைக்கலசாமி, எம். ஆர்., ராசி பதிப்பகம், சென்னை.
    9. தமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம், வௌ்ளைவாரணனார், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
    10. தெய்வங்களும் சமூக மரபுகளும், பரமசிவன், தொ., நியூ செஞ்சுரி புக் அவுஸ் லிமிடேட், சென்னை.
    11. தொல்காப்பியம் – பொருளதிகாரம், இளம்பூரணனார், சாரதா பதிப்பகம், சென்னை-600014.
    12. நற்றிணை, பாலசுப்பிரமணியன், கு. வே, நியூ செஞ்சுரி புக் அவுஸ்., சென்னை.
    13. வாழ்வியல் களஞ்சியம் (தொகுதி மூன்று), பாலுசாமி, ந. (பதிப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம்

    ================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழ் நில அமைப்பில் பாலை நில உருவாக்கம் பற்றிய தெளிவை முன்வைக்கும் தன்மையில் இக்கட்டுரை அமைந்துள்ளது. பாலை நில உருவாக்கத்தைத் தெளிவுபடுத்த, ஆய்வாளர் தொல்காப்பியம் மற்றும் நம்பியகப்பொருள் கூறும் நிலம் சார்ந்த செய்திகள், தொல்காப்பிய உரையாசிரியர்கள், வெள்ளைவாரணர் மற்றும் இரா.மாணிக்கனார் போன்றோர் கருத்துகள், சிலப்பதிகாரம் கூறும் வரையறை ஆகிய சான்றாதாரங்களைக் கொண்டு பாலை நிலம் உருவான தன்மையை விளக்கியுள்ளார்.

    மேலும் பாலை நிலத்திற்கு வரையறை செய்யப்பட்ட உரிப்பொருள், கருப்பொருள்கள் சார்ந்து, சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பாடல் அடிகளைச் சான்றுகாட்டி  நிறுவியுள்ளார். குறிப்பாக எட்டுத் தொகையில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள பாலை நிலம் சார்ந்த பதிவுகளையும் பத்துப் பாட்டில் ஆற்றுப்படை நூல்களில் இடம் பெற்றுள்ள பதிவுகளையும் சான்று காட்டியுள்ளார்.

    பாலை நிலம் என்பதும் பாலை நிலமக்கள், பொருள்கள் என்பதும் தற்கால நாவல், சிறுகதைகளில் வரும் கற்பனை போன்றது என்று கூறுமிடத்து ஆய்வாளர் சற்று இன்னும் சிந்தித்துப் பதிவு செய்திருக்கலாம். இருப்பினும் ஆய்வாளர் பாலை நிலம் சார்ந்த ஒரு தெளிவை, இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்களுக்குத் தரும் தன்மையில் அமைத்திருப்பது வரவேற்கத் தக்க ஒன்று. மேலும் இறையனார் அகப்பொருள், மாறன் அகப்பொருள், ஐந்திலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ள பாலை நிலம் சார்ந்த பதிவுகளையும் ஆய்வில் சுட்டிக் காட்டி இருப்பின் கட்டுரைக்குச் சிறப்பு சேர்த்திருக்கும். ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.

    ================================================

    Share
  • (Peer Reviewed) பதினெண்கீழ்க்கணக்கு : தமிழ் இலக்கிய வரலாற்று நூற்பதிவுகள்

    முனைவர் ப.திருஞானசம்பந்தம்
    முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்
    தமிழியற் புலம்
    மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
    மதுரை – 21

    பதினெண்கீழ்க்கணக்கு : தமிழ் இலக்கிய வரலாற்று நூற்பதிவுகள்

    மேனாட்டாரின் சிந்தனைகள், கல்வி மரபுகள் தமிழ் மொழியைக் கற்பதிலும் அது குறித்துச் சிந்திப்பதிலும் பல புதிய அணுகுமுறைகளை ஏற்படுத்தித் தந்தன. இலக்கிய வரலாறு என்ற துறை, அத்தகைய புதிய பயில்துறைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. 1930 தொடங்கித் தமிழில் எண்ணற்ற இலக்கிய வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. இன்றும் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ் இலக்கிய வரலாறுகள் இலக்கியங்களின் கால அடிப்படையிலும், இலக்கிய வகைமைகளின் அடிப்படையிலும், பாட நோக்கிலும் எழுதி வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நிலையில் இலக்கிய வரலாற்று நூல்களை எழுதியவர்கள்: பி.டி.சீனிவாச ஐயங்கார், கா.சுப்பிரமணிய பிள்ளை, தி.வை.சதாசிவ பண்டாரத்தார், மது.ச.விமலானந்தம், மு.அருணாசலம், ச.வையாபுரிப்பிள்ளை, மா.இராசமாணிக்கனார், மு.வரதராசனார், ஹெப்சிபா ஜேசுதாசு, தமிழண்ணல், கார்த்திகேசு சிவத்தம்பி, பாக்கியமேரி, அ.கா.பெருமாள், க.பஞ்சாங்கம் முதலியோர். இலக்கிய வரலாற்று நூல்களில் தமிழின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம் முதல் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்விலக்கிய வரலாற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பு, நூற்பெயர்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் காணப்படும் பதினெண்கீழ்க்கணக்குக் குறித்த பதிவுகளை இக்கட்டுரை கவனப்படுத்துகின்றது.

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்துச் செவ்விலக்கியப் பதிப்பு மரபிலும் ஆராய்ச்சி மரபிலும் பெரும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கில் பதினெட்டாவதாக அமையும் நூல், ‘கைந்நிலை’ என்பது தொகுப்பு வழியும் ஆராய்ச்சியாளர்களாலும் இ.வை.அனந்தராமையரின் கைந்நிலை (1931) பதிப்பினாலும் தெளிவுபெற்றது. 1930களுக்கு முன்னர்க் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலையா? இன்னிலையா? என்ற விவாதம் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டது. 1915இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை இன்னிலையைப் பதிப்பித்த பிறகு, கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலைதான் என்று ஒரு சாரார் கருதினர். மற்றொரு புறம் இன்னிலை பொய் நூல், போலி நூல், கற்பித நூல் என்ற கருத்துகள் வலுப்பெற்றன. இறுதியாகக் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் கைந்நிலை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பாடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் கைந்நிலையும் இன்னிலையும் கீழ்க்கணக்கைச் சாராத நூல்கள். திணைமாலை என்னும் பெயரிலான நூல்தான் கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்ற கருத்தும் மற்றொரு புறம் முன்வைக்கப்பட்டது. இவ்வகையான கருத்து நிலைகள், எவ்வாறு இலக்கிய வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறித்து நுட்பமாக ஆராய வேண்டியுள்ளது.

    தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளைக் கீழ்க்கண்ட நிலைகளில் தொகுத்துக் கொள்ளலாம்.

    –           பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலை

    –           பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தவை கைந்நிலையும் இன்னிலையும்

    –           பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலை

    பி.டி. சீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய History of the Tamils from the earliest times to the Tamils (1929) என்னும் நூல், பி.இராமநாதன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழர் வரலாறு (கி.பி.600 வரை) என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்நூலின் மொழிபெயர்ப்பாசிரியர் இராமநாதன் களப்பிரர் காலத்தில் தோன்றிய நூல்களாகக் கீழ்க்கணக்கு நூல்களைக் குறித்துள்ளார். “பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் கி.பி.500 – கி.பி.800 காலத்தவை என்பர்” (பி.இராமநாதன்: மொழிபெயர்ப்பு:2007:68). ஆனால் பி.டி.சீனிவாச ஐயங்கார் கி.பி.6-8 நூற்றாண்டில் தோன்றியனவாகக் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடுகின்றார்.

    கி.பி.8ஆம் நூற்றாண்டு சார்ந்த முத்தரையரைக் குறித்து, நாலடியார் பாடல்கள் இரண்டு குறிப்பிடுகின்றன. களவழி நாற்பது, சோழன் செங்கணான் மீது பாடிய புறப்பாடல். ஐந்து நூல்கள் அகப்பொருள் சார்ந்தவை. களவழி நாற்பதும், இவ்வைந்து நூல்களும் பழைய புறம், அகப்பாடல் மரபின் தேய்ந்து போன கடைசிப் படைப்புகள். 12 நூல்கள் அற நூல்களாகும்; இவை அக்காலத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த சமஸ்கிருத நீதி நூல் பார்த்துப் பாடப்பட்டவை; தென் இந்தியாவில் ஆரியப் பண்பாடு நிலை பெற்றுவிட்டதைக் காட்டுகின்றன. இந்நூல்களில் பெரும்பாலானவை, யாப்பில் உள்ளனவேயொழிய கவிநயம் அற்றவை. ஆனால் அறக் கருத்துகளை நினைவிற் கொள்ளும் வகையில் மனப்பாடம் செய்ய எளிதானவை. உயர்ந்த ஒழுக்கத்தைப் புகட்டும் இவ்வறக் கருத்துகளை விஞ்சியவை வேறு எந்த நாட்டின் படைப்பிலும் இல்லை.

    (பி.டி.சீனிவாச ஐயங்கார்: பி.இராமநாதன்: மொழிபெயர்ப்பு: 2007: 236, 237)

    கீழ்க்கணக்கில் பன்னிரண்டு அற நூல்கள் உள்ளன என்று கூறும் பி.டி.சீனிவாச ஐயங்கார், அந்நூல்கள் எவை என்பதைக் கூறவில்லை. மற்றவர்களைப் போல் இவரும் பன்னிரண்டாவது நூலாக இன்னிலையைக் கருதித் தமது கருத்தை முன்வைத்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

    பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலை என்ற கருத்தை வலிறுத்தித் தமது இலக்கிய வரலாற்று நூல்களில் எழுதியவர்கள் கா.சுப்பிரமணிய பிள்ளை (1930), மு.வரதராசன் (1972) உள்ளிட்டவர்கள். இவர்கள் சமயச் சார்பின் அடிப்படையில் தமது கருத்துகளைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

    கா.சுப்பிரமணிய பிள்ளை 1930இல் இலக்கிய வரலாறு என்ற நூலை எழுதியுள்ளார். இவருக்கு முன் ஆங்கிலத்தில் எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளையாலும், பி.டி.சீனிவாச ஐயங்காராலும் இலக்கிய வரலாறு சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. தமிழில் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் புலவர் சரித்திரமும் சபாபதி நாவலரின் திராவிடப் பிரகாசிகையும் எழுதப்பட்டுள்ளது. குமாரசுவாமிப் புலவர் எழுதிய நூலில் இடம் பெற்றுள்ள புலவர் சரித்திரம் காலமுறைக்கேற்ப எழுதப்படவில்லை; அதுபோல் சபாபதி நாவலர் சில இலக்கியங்களின் இயல்புகளை மட்டுமே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்காரணத்தினால் தமிழில் இலக்கிய வரலாற்று நூலை முதலில் எழுதியதாகக் கா.சுப்பிரமணிய பிள்ளை முன்னுரையில் பதிவு செய்கின்றார். மேலும் இதன்கண் குறைபாடுகள் பல உள்ளன. அவற்றை ஆராய்ந்து திருத்தமான கொள்கைகளை வெளியிடுவதற்கு வாயிலாக இந்நூலை உருவாக்கியதாகக் குறித்துள்ளார். இந்நூலில் கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களாகப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை இவர் அடையாளப்படுத்துகின்றார். (2007:முன்னுரை)

    பதினெண்கீழ்க்கணக்குள் ஒன்றான திருக்குறளின் காலம், திருவள்ளுவரின் காலம், திருவள்ளுவரின் வரலாறு, திருக்குறளின் சிறப்பு, திருக்குறளின் அமைப்பு, திருக்குறள் முன்வைக்கும் கருத்துகள், பரிமேலழகரின் உரை நயம், ஆகியவற்றை விரிவாகக் கா.சுப்பிரமணிய பிள்ளை விளக்குகின்றார். அடுத்து முப்பால் என்பது திருக்குறளைக் குறிக்காது என்ற சி.வை.தாமேதரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் கருதுகின்றனர்; ஆனால் முப்பால் என்பது திருக்குறள் எனப் பலரும் குறிப்பிடுகின்றனர். திருவள்ளுவ மாலையில் ‘வள்ளுவர் முப்பால்’ என்ற தொடர் இடம்பெறுகின்றது. நல்லந்துவனார், கீரந்தையார் முதலியோரும் முப்பால் என்ற தொடரைத் தனித்தனியே தமது நூல்களில் பயன்படுத்தியுள்ளனர். முப்பால் என்ற பெயரில் வேறு நூல்கள் காணப்படாமையால், திருவள்ளுவர் நூலே முப்பால் எனக் கொள்ளத்தக்கது என்கிறார் கா.சுப்பிரமணிய பிள்ளை.

    பிற கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகள் எதையும் குறிப்பிடாத கா.சுப்பிரமணிய பிள்ளை, சில நூல்களின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுச் செல்கின்றார்.

    ஏனைக் கீழ்க்கணக்கு நூல்களாவன, நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, ஐந்திணையைப் பற்றிய திணைமொழியைம்பது, திணையெழுபது என்ற நான்கு நூல்கள். திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்பன. (2007:197)

    கா.சுப்பிரமணிய பிள்ளையின் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்பட்ட காலத்தில், பல பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதிப்பிக்கப்பட்டு, புழக்கத்தில் இருந்துள்ளன. சில நூல்கள் மட்டுமே பரவலான பதிப்பாக்கத்தைப் பெறவில்லை. இவ்வாறு இருக்க, கா.சுப்பிரமணிய பிள்ளை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளைக் குறித்த கருத்துகளை மட்டுமே விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார். பதினெண்கீழ்க்கணக்கு என்றாலே அனைவரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய நூல் திருக்குறள்தான். எனவே கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளின் சிறப்புகளைக் கூறினால், மற்ற நூல்களின் சிறப்புகளைக் குறித்ததற்குச் சமம் எனக் கா.சுப்பிரமணிய பிள்ளை கருதியிருக்க வேண்டும். இக்காரணத்தால் தமது இலக்கிய வரலாற்றில் திருக்குறளின் சிறப்புகளை மட்டும் விரிவாகக் கா.சுப்பிரமணிய பிள்ளை பேசியிருக்கின்றார் எனலாம்.

    தமிழில் உள்ள முற்கால, இடைக்கால, தற்கால இலக்கியங்களின் வரலாற்றை ஆராய்ந்து விளக்குவதாக மு.வரதராசனின் தமிழ் இலக்கிய வரலாறு (1972) என்னும் நூல் உள்ளது. இந்நூல் சாகித்திய அகாதெமியின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலில் மு.வரதராசன், கி.பி.1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.5ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தோன்றிய நூல்களைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று குறிப்பிடுகின்றனர். கீழ்க்கணக்கு என்பதற்கு அடிகள் குறைந்த செய்யுட்களால் ஆகிய நூல்கள் என்கிறார். பதினெட்டு நூல்களில் பன்னிரண்டு நீதி நூல்கள் என்றும் ஐந்து நூல்கள் காதல் பற்றியது என்றும் ஒரு நூல் போர் பற்றியது என்றும் மூன்றாகப் பகுக்கின்றார். கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளையும் நாலடியாரையும் மட்டும் விரிவாகப் பேசுகின்ற மு.வரதராசன், மற்றைய நூல்களின் அமைப்பைச் சுருக்கமாகக் குறிப்பிட்டுச் செல்கின்றார். இவற்றுள் பன்னிரண்டாவது நீதி நூலாக இன்னிலையை இவர் குறிப்பிடுகின்றார்.

    நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், திரிகடுகம் என்பவை நூறு நூறு செய்யுள் கொண்ட நீதி நூல்கள். ஏலாதி என்பதும் நூறு செய்யுள் உடையதே. இனியவை நாற்பது, இன்னா நாற்பது ஆகியவை நாற்பது நாற்பது செய்யுள் உடைய நீதி நூல்கள்.

    பழமொழி நானூறு என்பது நாலடியார் போல், நானூறு செய்யுள் கொண்டது. ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் அது கூறும் நீதிக்கு ஏற்ற பழமொழி ஒன்று உள்ளது. ஆகவே, இந்த நூலால் நீதிகளை உணர்வது மட்டும் அல்லாமல், அந்தக் காலத்தில் வழங்கிய நானூறு பழமொழிகளையும் அறிய முடிகிறது.

    ஆசாரக் கோவை அந்தக் காலத்தில் போற்றப்பட்டிருந்த ஒழுக்க விதிகள் பலவற்றை ஓதுகின்றது. முதுமொழிக் காஞ்சி, திட்பமான சிறு சிறு தொடர்களில் நீதிகள் பலவற்றை உணர்த்துகின்றது. மற்றுமொரு நீதி நூல், நாற்பத்தைந்து செய்யுள்களால் நீதிகளை உணர்த்தும் இன்னிலை என்பது.

    (மு.வரதராசன்:2001:80)

    பன்னிரண்டாவது நீதி நூலாக இன்னிலையைச் சேர்த்துக் கூறும் மு.வரதராசன், காதலைக் குறித்துப் பேசும் அக நூல்களைக் கூறும்போது கைந்நிலையைச் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.

    கார் நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது என்பவை காதல் பற்றிய பாட்டுகள் கொண்ட நூல்கள். கைந்நிலை என்ற நூலையும் அவற்றோடு சேர்த்து எண்ணுதல் உண்டு. (மு.வரதராசன்:2001:80)

    என்று குறித்துள்ளார். இக்கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது இவர் இன்னிலை, கைந்நிலை இரண்டையும் கீழ்க்கணக்கு நூலாகக் கருதுகின்றார் என்பது புலப்படுகின்றது. ஆனால் பதினெட்டு என்ற கணக்கிட்டு இவர் காட்டும் நூல்களின் எண்ணிக்கை பொருந்திச் சென்றாலும், கீழ்க்கணக்கைச் சார்ந்த ஐந்திணை ஐம்பது என்ற நூலின் பெயரையும், இந்நூல் அகப்பொருள் பற்றிப் பாடப்பட்டது என்ற குறிப்பினையும் மு.வரதராசன் குறிப்பிடவில்லை. இது அச்சுப் பிழையால் நேர்ந்ததா? அல்லது அவர் இந்நூலைக் கூறாமல் விட்டுவிட்டாரா? என்பது குறித்து மேலும் சிந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    மது.ச.விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்னும் தலைப்பில் இரு தொகுதிகளை (1987) வெளியிட்டுள்ளார். போட்டித் தேர்வு உள்ளிட்டவற்றிற்குப் பயன்படக் கூடிய கருவி நூலாக இந்நூல் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்தும் அவற்றின் எண்ணிக்கை குறித்தும் விரிவான நடைபெற்ற விவாதங்களை உள்வாங்கிய நிலையில் மது.ச.விமலானந்தம் அவர்களின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிவுகள் அமைந்துள்ளன. இவற்றைப் பின்வருமாறு தொகுத்துரைக்கலாம்.

    • பன்னிரு பாட்டியல் உரை குறிப்பு, தொல்காப்பியரின் அம்மை என்னும் வனப்பிற்குச் சான்றாகப் பதினெண்கீழ்க்கணக்கு அமைகின்றமை, மயிலைநாதர், பேராசிரியர் உரைகளில் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பெயராட்சி இடம்பெற்றுள்ளமை முதலிய செய்திகள் முதன்மை நிலையில் உள்ளன.
    • கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் பழம்பெரும் வெண்பாவை எடுத்துக்காட்டி, பதினெட்டு நூல்கள் குறித்து நிகழ்ந்த விவாதத்தை முன்வைக்கின்றார். இப்பழம்பாடலில் இடம்பெறும் ‘முப்பால்’ என்பது திருக்குறளைக் குறிக்காது என்னும் கருத்துடைய சி.வை.தாமோதரம் பிள்ளை, கே.என்.சிவராசப் பிள்ளை ஆகியோரின் கருத்துகளையும் தொகுத்துத் தருகின்றார்.
    • முப்பால் என்பது திருக்குறளே என்று கூறும் கா.சுப்பிரமணிய பிள்ளையின் கருத்தையும் எடுத்துரைக்கிறார்.
    • கீழ்க்கணக்கைச் சார்ந்த பதினெட்டாவது நூல், கைந்நிலையா? இன்னிலையா? என இருவேறுபட்ட கருத்துகள் இருந்ததைச் சுட்டி, பலரும் கைந்நிலை என்று கூறுகின்றனர் என்கிறார். பிரபந்த தீபிகை கீழ்க்கணக்கின் பதினெட்டு நூல்கள் எவை என்ற பட்டியலைத் தருகிறது என்று சுட்டுகின்றார். அதில் கைந்நிலை இடம்பெற்றுள்ளது.
    • கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டினுள் ஒன்று இன்னிலையா, கைந்நிலையா என்ற தமது கருத்தை இவர் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. பதினெட்டு நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகையில் கைந்நிலையின் அமைப்பையே விளக்கியுள்ளார். ஐந்திணை அறுபது (ப.60) என்ற சிறப்புப் பெயர் இந்நூலுக்கு உண்டு என்று பதிவு செய்கிறார். இதன்வழிப் பதினெண் கீழ்க்கணக்கில் கைந்நிலையைத்தான் இவர் சுட்டுகின்றார் என்ற முடிவுக்கு நாம் வர முடிகின்றது. (மது.ச.விமலானந்தம்: 1987: 103 – 104, 108)

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதங்களைத் தொகுத்து தமது இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யும் மது.ச.விமலானந்தம், இன்னிலை, கைந்நிலை ஆகிய இரு நூல்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றார். ஆனால் பதினெட்டு நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகையில் கைந்நிலை நூலைக் குறித்த கருத்துகளை மட்டுமே பதிவு செய்கின்றார். பதினெட்டாவது நூல் கைந்நிலை என்ற தெளிவு இவருக்கு இருப்பினும் பதினெட்டு நூல்களைத் தொகுத்துச் சொல்லுமிடத்து இன்னிலையினைச் சேர்ந்துக் குறிப்பிடுகின்றார். மற்ற இலக்கிய வரலாற்று ஆசிரியர்களுக்கு இருக்கின்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த பொதுவான கருத்தே இவரிடமும் வெளிப்படுகின்றது.

    தமிழண்ணல் புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலை 1986இல் வெளியிட்டுள்ளார். இந்நூல் இலக்கிய நோக்கில் புதிய நோக்கு, தமிழக வரலாற்றுப் பின்புலம், வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்ற முப்பெருந்தலைப்புகளில் அமைந்துள்ளது. இந்நூல், பல்வகை இலக்கியங்கள், இலக்கணம், தத்துவம், உரை வகை உள்ளிட்ட பல உட்தலைப்புகளில் தமிழ் இலக்கிய வரலாற்றினை விரிவாக விளக்கிச் செல்கின்றது. இதில் பதினெண்மேற்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் வகைத் தொகைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதன்பின்னர், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் பழம்பாடலைத் தருகிறார் தமிழண்ணல். இப்பாடல்வழிப் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்களின் எண்ணிக்கையைப் பன்னிரண்டு என்கிறார். இவர்தம் கருத்து பின்வருமாறு:

    இவற்றுள் நானாற்பது, நாலைந்திணை என்பன எட்டு நூல்களைக் குறிக்கும். இன்னிலை என்ற அறநூலை ஏற்பர் சிலர்; கைந்நிலை என்ற அறநூலை ஏற்பர் சிலர். இவற்றுள் இன்னிலை அடங்கிய நீதி நூல்கள் வருமாறு:

    1) திருக்குறள்

    2) நாலடியார்

    3) நான்மணிக்கடிகை

    4) இனியவை நாற்பது

    5) இன்னா நாற்பது

    6) திரிகடுகம்

    7) ஆசாரக் கோவை

    8) பழமொழி நானூறு

    9) சிறுபஞ்சமூலம்

     10) முதுமொழிக் காஞ்சி

    11) ஏலாதி

    12) இன்னிலை

    (தமிழண்ணல் :2011:153)

    பதினெட்டு நூல்கள் எவை என்பதை வரையறுப்பதில் தமிழண்ணல் அவர்களுக்கும் சிக்கல் இருந்துள்ளது. எனவே, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் கைந்நிலை, இன்னிலை என்னும் இரண்டு நூல்களையும் சேர்த்தே இவர் குறிப்பிடுகின்றார். பத்தொன்பது நூல்கள் குறித்தும் தனித்தனியே அறிமுகத்தைத் தருகின்றார். இதில் சங்கத் தொகை நூல்களுக்குப் பிறகு திணையிலக்கிய வளர்ச்சியினைப் பதினெண் கீழ்க்கணக்கில் காணப்படும் அகம், புறம் பற்றிய நூல்களின் மூலம் புரிந்துகொள்ள முடியும் என்ற கருத்தையும் தமிழண்ணல் முன்வைத்துள்ளார். இவ்விடத்தில் பதினெண் கீழ்க்கணக்கின் புற, அக நூல்களினைக் குறித்த அறிமுகத்தைத் தரும்போது கைந்நிலையின் சிறப்பினைக் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதி பின்வருமாறு:

    கைந்நிலை

    திணைக்குப் பன்னிரண்டு வெண்பாக்களாலான அறுபது பாடல்களையுடையது. இந்நூல் வெண்பாக்கள் பல சிதைந்துள்ளன. இதன் ஆசிரியர் மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் ஆவார். ‘‘இவர் காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டு; இந்நூலில் பாசம், ஆசை, இரசம், கேசம், இடபம், உத்தரம் ஆகிய வடசொற்கள் வந்துள. தென்பாண்டி நாட்டில் கொற்கைக்கு அண்மையில் இவர் வாழ்ந்தாராதல் வேண்டும்’’ (தி.வை.சதாசிவ பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250 – 600), 1955, ப.87) எனப் பேராசிரியர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் இவரைப் பற்றிக் கூறியுள்ளார்.

                                                                   (தமிழண்ணல்:2011:146, 147)

    கைந்நிலையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை, நூலாசிரியர் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்நூலாசிரியர் வாழ்ந்த இடம் குறித்த சி.சதாசிவபண்டாரத்தின் கருத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். இக்கருத்தில் இவருக்கும் உடன்பாடு என்ற தெரிய வருகின்றது. இதற்கடுத்து இன்னிலை நூல் குறித்த அறிமுகத்தைத் தமிழண்ணல் தருகின்றார்.

    இன்னிலை

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ‘கைந்நிலை’ ஒன்றென ஏலாதவர் இன்னிலை என்ற அறநூலை ஏற்பர். வ.உ.சி. அவர்கள் இன்னிலையை உரையெழுதிப் பதிப்பித்துள்ளார். இது பொய்கையார் எழுதியது. கடவுள் வாழ்த்துடன் 46 வெண்பாக்கள் உள்ளன. அறம், பொருள், இன்பம், வீடென நான்கும் பற்றி இது பேசுகிறது. இவர் ‘ஆக்கியளித்து அழிக்குக் கந்தழியின் பேருருவே’ (30) என்று சிவனைக் குறிப்பதால் இவரைச் சிவநெறியினர் என்பர் கா.சு.பிள்ளை அவர்கள். இவர் களவழி பாடிய பொய்கையாருக்குப் பிற்பட்டவர் என்று கூறுகிறார் (கா.சு.பிள்ளை, இலக்கிய வரலாறு, 1956, ப.285).

    திரிகடுகம், பெண்ணுக்கு இலக்கணம் கூறுவதுபோல, இன்னிலையும் கூறுகிறது.

    ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்

    குற்றம் ஒரூஉம் குணத்தளாக் – கற்றறிஞர்ப்

    பேணும் தகையளாக் கொண்கன் குறிப்பறிந்து

    பேணும் தகையினாள் பெண்.

    பெண் ஒத்த உரிமை உடையனாதல் வேண்டும் என்ற கருத்து முதலில் வைக்கப்பட்டுள்ளமை சிந்திக்கத்தக்கது.

    (தமிழண்ணல்:2011:.171, 172)

    இவ்வாறு தமிழண்ணல் கைந்நிலை, இன்னிலை என்ற இரு நூல்களையும் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் என்று குறிப்பிடுகின்றார். இன்னிலையினை வ.உ.சிதம்பரம் பிள்ளை, கா.சுப்பிரமணியப் பிள்ளை ஆகிய இருவரும் குறிப்பிடுவதன் காரணமாகத் தானும் இவற்றைக் குறிப்பிடுவதாகச் சுட்டுகின்றார்.

    தமிழண்ணல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக உலகத் தமிழிலக்கிய வரலாறு (தொன்மை முதல் கி.பி.500 வரை) என்ற தலைப்பில் ஒரு நூலை 2004இல் வெளியிட்டுள்ளார். இந்நூலில் அவர் கைந்நிலையைப் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் என்கிறார்.

    பதினெண்கீழ்க்கணக்கு எனும் பெயர், பிற்கால உரை நூல்களில் காணப்படுகிறது. சங்க காலத்தில் ‘கணக்காயர்’ எனும் பெயர், மொழி கற்பிக்கும் ஆசிரியரைக் குறித்தது. கணக்கு – இலக்கிய இலக்கண நூல் எனப் பொருள்பட்டது. நெடுங்கணக்கு என அகரவரிசை குறிக்கப்பட்டதும் காண்க. பத்துப் பாட்டையும் எட்டுத் தொகையையும் காலத்தால் முற்பட்டவை எனும் பொருளில் பதினெண்மேற்கணக்கு எனக் கொண்டு, இவை ‘பதினெண்கீழ்க்கணக்கு’ எனப்பட்டன. இவ்வாறு தொகுத்துப் பெயரிட்டது. கி.பி.5ஆம் நூற்றாண்டினதாகிய, வச்சிரநந்தி என்ற சமண முனிவரின், தமிழ்ச் சங்கத்தில் நடந்திருக்கலாம் என்பர்… கார்நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை என்பன அகம் பற்றியன.

    (தமிழண்ணல் :2004:163,164)

    இதன் பின்னர், கைந்நிலையை ஏற்காதவர்கள் இன்னிலையைச் சேர்த்துக் குறிப்பிடுவர் என்கிறார். இக்கருத்தைத் தமது இலக்கிய வரலாற்று நூல்களில் தொடர்ந்து தமிழண்ணல் பதிவு செய்திருக்கின்றார்.

    புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, உலகத் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் இரு நூல்களிலும் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு குறித்த தமிழண்ணல் அவர்களின் கருத்துகளைத் தொகுத்து பார்க்கையில், கைந்நிலை, இன்னிலை என்னும் இரு நூல்களையும் சேர்த்தே இவர் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. கைந்நிலை, இன்னிலை இவற்றில் தான் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்ததாக எதைக் கருதுகின்றேன் என்று குறிப்பிடாமல் பொதுவாக அனைவரும் இவ்விரு நூல்களைக் குறிப்பிடுகின்றனர் என்ற நிலையிலேயே இவரின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகள் அமைந்திருக்கின்றன.

                அ.கா.பெருமாள் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு எனும் 2000ஆம் ஆண்டு முதன் முதல் வெளிவந்தது. பல பதிப்புகளைப் பெற்றுள்ள இந்நூல் முழுவதும் திருத்தப்பட்ட பதிப்பாக 2014ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இப்பதிப்பில் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த பதிவுகள் இங்கு விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

                சங்க காலத்திற்கு அடுத்த காலக்கட்டம், களப்பிரரின் இடையீட்டுக் காலமாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இக்காலத்தில் பொதுவான மக்களின் ஒழுக்கங்களும் அழகுணர்ச்சியும் வழக்காற்றில் இருந்து மறைக்கப்பட வேண்டிய சூழல் இருந்தது. இக்காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த சமண, பௌத்த, மதங்கள் பொதுவான ஒழுக்கத்தைக் கட்டாயமாக வற்புறுத்தின. இவ்வொழுக்கங்கள் இக்காலத்தில் தோன்றிய நீதி நூல்களுள் பிரதிபலித்தன. களப்பிரர் காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின என்பர் திறனாய்வாளர்கள். இக்கருத்துகளை முதன்மையாகக் கொண்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த தமது கருத்தை முன்வைக்கின்றார் அ.கா.பெருமாள். இக்கருத்துகளைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துரைக்கலாம்.

    • பதினெண்கீழ்க்கணக்கு என்னும் சொல்லாட்சியினைச் சுட்டுகின்ற நன்னூலின் முதல் உரையாசிரியரான மயிலைநாதரின் உரைக் குறிப்பு, தொல்காப்பியப் பேராசிரியர் உரைக் குறிப்பு ஆகியவற்றை எடுத்துக் குறிப்பிடுகின்றார். இதன் மூலம் கி.பி.13-14ஆம் நூற்றாண்டளவில் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் சொல் வழக்கில் இருந்ததை அறிய முடிகின்றது.
    • மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்னும் வழக்கைப் பன்னிரு பாட்டியல் தான் முதன்முதல் முன்வைக்கின்றது. அதற்குப் பிறகான பாட்டியல் நூல்கள் இப்பாகுபாட்டைச் சுட்டவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
    • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதம் 1885இல் முடிவு பெறவில்லை என்று சுட்டியுள்ளார். ஆனால் இந்நூல்கள் குறித்த விவாதத்தை 1887இல் தமது கலித்தொகைப் பதிப்பின் மூலம் சி.வை.தாமோதரம் பிள்ளை தொடங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பிய உரையாசிரியர்கள் அம்மை என்ற வனப்பினுள் கீழ்க்கணக்கு நூல்களை அடக்கியுள்ளனர்.
    • அ.கா.பெருமாள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை இரு நிலைகளில் பகுத்துக் காட்டுகின்றார். பதினோர் அற நூல்களை ஒரு பகுதியாகவும், ஐந்து அக நூல்கள், ஒரு புற நூலை மற்றொரு பகுதியாகவும் குறிப்பிடுகின்றார். ஐந்து அக நூல்களுள் ஒன்றாகக் கைந்நிலையைச் சுட்டி ‘ஐந்திணை அறுபது’ என்று இந்நூலுக்கு வழங்கும் சிறப்புப் பெயரினையும் குறிப்பிடுகின்றார்.
    • கைந்நிலையின் ஆசிரியர் பெயர், ஐந்து திணைக்குப் பன்னிரண்டு பாடல்கள் வீதம் அறுபது பாடல்கள் இந்நூலில் உள்ளன என்று குறிப்பிடும் அ.கா.பெருமாள், குறிஞ்சித் திணைப்பாடல்கள் சுவையாகவும் மரபான உவமை நயத்துடனும் விளங்குகின்றது என்கிறார்.

                 (அ.கா.பெருமாள்:2012:102)

                பாடத்திட்ட நோக்கில் பல இலக்கிய வரலாற்று நூல்கள் தற்காலத்தில் தோன்றி வருகின்றன. அவை குறிப்புகளாகவும்  வணிக நோக்கிலும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலைப் பாக்யமேரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் 2008இல் வெளியிட்டுள்ளார். இதில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்தும், கைந்நிலையைக் கீழ்க்கணக்குள் ஒன்றாகச் சேர்ப்பதைக் குறித்தும் குறிப்பிட்டுள்ள கருத்துகளைப் பின்வருமாறு தொகுத்து உரைக்கலாம்.

    • பதின்மேல், பதின்கீழ் என்ற இச்சொற்கள் குறித்த விளக்கம், இந்நூல்களின் பாடல் எண்ணிக்கை, நுவல் பொருள்கள் ஆகியவற்றைப் பன்னிரு பாட்டியல் வழி எடுத்துரைக்கின்றார்.
    • தொல்காப்பியம் அம்மை என்ற வனப்பிற்கு இந்நூல்களைச் சான்றுகாட்டிச் சென்றுள்ளமையும் இவர் பதிவு செய்துள்ளார். (ப.151)
    • பதினெட்டு நூல்களுள் கைந்நிலை ஒன்றா? இன்னிலை ஒன்றா? என்று வினா எழுப்பி, கைந்நிலைதான் பதினெட்டில் ஒன்று என்று தெளிவாகச் சுட்டுகிறார் ஆசிரியர். இதற்கு மு.வை.அரவிந்தனின் கருத்தை மேற்கோள் காட்டித் தானும் அக்கருத்திற்கு உடன்படுகின்றேன் என்று உரைக்கின்றார். மேலும் இன்னிலையைப் போலி நூல் என்று குறிப்பிடுகின்றார். (பக்.161, 162)
    • ஐந்திணை அறுபது என்ற பெயரையும் சுட்டுகிறார். (ப.161)
    • பதினெட்டு நூல்களுள் கைந்நிலை அடங்கும் என்று தெளிவுபடுத்திய பின்னரும் இன்னிலை குறித்த விவரங்களை இவர் தருகிறார். (ப.162)

                தமிழகத்தின் நடுப்பகுதியில் இயங்கும் கல்லூரியின் பாடத்திட்ட நோக்கில் எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களைச் சு.ஆனந்தன், ஈஸ்வர், ஸ்ரீசந்திரன் ஆகியோர் தனித்தனியே எழுதியுள்ளனர். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகள் வருமாறு:

                சு.ஆனந்தன் தமது தமிழ் இலக்கிய வரலாறு (2002) நூலில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடும் பழைய வெண்பாவைச் சுட்டி, பேராசிரியரின் செய்யுளியல் உரைக் குறிப்பு, மயிலைநாதர் உரைக் குறிப்பு, கீழ்க்கணக்கு என்பதற்குப் பன்னிரு பாட்டியல் தரும் விளக்கம் ஆகியவற்றையும் எடுத்துத் தருகின்றார். மேலும் பதினெட்டு நூல்களின் பெயர், ஆசிரியர் ஆகியவற்றை இவர் அட்டவணைப்படுத்தித் தந்துள்ளார். இதில் இவர் கைந்நிலையினைப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகவே குறித்துள்ளார். பதினெட்டு நூல்களைக் குறித்த தரவுகளைத் துல்லியமாகச் சேகரித்தும் தந்துள்ளார். கைந்நிலையினைக் குறித்துக் குறிப்பிடுகையில் இந்நூலின் ஆசிரியர் பெயர், இவரது ஊர்ப் பெயர், நூலினுள் உள்ள பாடல்களின் எண்ணிக்கை, பாடல் எண்ணிக்கையின் அடிப்படையில் கைந்நிலைக்கு அமைந்த ‘ஐந்திணை அறுபது’ என்ற சிறப்புப் பெயருக்கான காரணம் ஆகியவற்றையும் இவர் பதிவுசெய்திருக்கின்றார். இறுதியாக மற்ற தமிழ் இலக்கிய வரலாற்று நூல் ஆசிரியர்களுக்கு ஏற்படுகின்ற ஐயத்தை இவரும் எழுப்பி, தாம் கைந்நிலையினைக் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகக் குறிப்பிடுவதற்கான காரணத்தைத் தெளிவாக முன்வைத்துள்ளார்.

    பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெறுவது கைந்நிலையா, இன்னிலையா எனும் ஐயம் உளது. பெரும்பாலோர் கைந்நிலையைக் குறிப்பர். பதினெட்டு நூல்களைக் குறிக்கும் வெண்பாவை ஆராயின், கைந்நிலையே சரியானது என்பது விளங்கும்.

    (சு.ஆனந்தன் : 2003 : 64)

    இவ்வாறு கைந்நிலையைப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகச் சேர்த்ததற்கான காரணத்தைத் தெளிவாய்த் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கருத்துகளை ஜெ.ஸ்ரீசந்திரன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, ஈஸ்வரன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய நூல்களிலும் காண முடிகின்றது.

    பாடத்திட்ட நோக்கில் எழுதப்பட்ட மற்றொரு நூல் மு.அருணாசலம், இராஜா வரதராஜா இருவரும் இணைந்து எழுதிய நூல், தமிழ் இலக்கிய வரலாறு. இந்நூலைத் திருச்சியில் உள்ள அருண் பதிப்பகம் 2012இல் வெளியிட்டுள்ளது. இந்நூலில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகள் வருமாறு:

    சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய நூல்களை வகைப்படுத்தச் ‘சங்க மருவிய கால இலக்கியங்கள்’ என்னும் பெயர் வழங்கப்படுகின்றது. இவற்றைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் அழைப்பர். அடி அளவால் சிறிய பாடல்களை உடைய பதினெட்டு நூல்களின் தொகுப்பு இதுவாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் வெண்பா வருமாறு:

    “நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்

    பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

    இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே

    கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.”

    மேற்கூறிய வெண்பாவில் கைந்நிலைக்கு மாற்றாக இன்னிலை என்னும் நூல் இடம்பெற்றதாக ஒரு கருத்தும் உண்டு. சங்க மருவிய கால இலக்கியங்களில், பதினொரு நூல்கள் நீதி நெறிகளைப் போதிப்பதால், இக்காலத்தை நீதி நூல்களின் காலம் என்றழைப்பது பொருத்தமாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்ப் பட்டியல்:

    நீதி நூல்கள்

    1. திருக்குறள்                              திருவள்ளுவர்
    2. நாலடியார்                                சமண முனிவர்கள்
    3. நான்மணிக்கடிகை          விளம்பிநாகனார்
    4. இன்னா நாற்பது                  கபிலர்
    5. இனியவை நாற்பது           பூதஞ்சேந்தனார்
    6. திரிகடுகம்                                நல்லாதனார்
    7. ஆசாரக்கோவை                  பெருவாயின் முள்ளியார்
    8. பழமொழி                                  முன்றுறையரையனார்
    9. சிறுபஞ்சமூலம்                     காரியாசான்
    10. முதுமொழிக்காஞ்சி          கூடலூர் கிழார்
    11. ஏலாதி                                           கணிமேதாவியார்

    அக நூல்கள்

    1. கார்நாற்பது                             மதுரை கண்ணன் கூத்தனார்
    2. திணைமாலை                       மேதாவியார்
    3. ஐந்திணை                                 எழுபது மூவாதியார்
    4. ஐந்திணை ஐம்பது              மாறன் பொறையனார்
    5. திணைமொழி ஐம்பது     கண்ணன் சேந்தனார்
    6. கைந்நிலை                               புல்லங்காடனார்

    புறநூல்

    1. களவழி நாற்பது                    பொய்கையார்

    நீதி நூல்

    1. இன்னிலை                                பொய்கையார்

    (மு.அருணாசலம், இராஜா வரதராஜா : 2004 : 80, 81)

    தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் ஆசிரியர்கள் பலரும் இன்னிலைக்கு மாற்றாகக் கைந்நிலையைக் கொள்வர் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இவ்விலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் இருவரும் கைந்நிலைக்கு மாற்றாக இன்னிலையைக் கொள்வர் என்று குறிப்பிடுகின்றனர். பதினெட்டு நூல்கள் என்ற வரையறை, சங்க மருவிய கால இலக்கியங்கள் பதினெட்டு என்று குறிப்பிட்டுவிட்டு கீழ்ப்பகுதியில் 19 நூல்களின் பெயர்களையும் ஆசிரியர் பெயர்களையும் பதிவு செய்கின்றனர். ஆனால் இன்னிலையை மட்டும் தனிப் பிரிவில் அதாவது நீதி நூல் என்ற மற்றொரு தலைப்பின்கீழ்க் குறிப்பிடுகின்றனர். மேலே கூறிய கருத்திற்கு முன்னுக்குப் பின் முரணாக இவ்விலக்கிய வரலாற்றாசிரியர்கள் கருத்துரைக்கின்றனர். கைந்நிலை, இன்னிலை இரு நூல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ள கருத்துகள் பின்வருமாறு:

    கைந்நிலை

    அகப்பொருள் ஒழுக்கம் பற்றிய நூல். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வைப்பு முறை உடையது. இந்நூலில் மொத்தம் 60 பாடல்கள் இருந்து (திணைக்கு 12) 18 சிதைந்து, இப்போது 43 வெண்பாக்கள் மட்டும் கிடைக்கின்றன. இந்நூலின் ஆசிரியர் புல்லங்காடனார்.

    இன்னிலை

    மனிதர்கள் இனிமையான வாழ்வினை அடைய வழிவகை கூறும் இன்னிலை. இதன் ஆசிரியர், பொய்கையார். 45 வெண்பாக்களை உடைய இந்நூலில், சிவபெருமான் பற்றிய குறிப்புகள் வருகின்றன. 1915இல் வ.உ.சி. இந்நூலினைப் பதிப்பித்தார்.

    (மு.அருணாசலம், இராஜா வரதராஜா : 2004 :  87, 88)

    பாடத்திட்ட நோக்கில் எழுதப்படுகின்ற தமிழ் இலக்கிய வரலாறு அனைத்தும் இது போன்ற குழப்பங்களை முன்வைத்துச் செல்கின்றன. இத்தகைய இலக்கிய வரலாற்று நூல்களை வாசிக்கின்ற மாணவர்களுக்குப் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த பதினெட்டாவது நூல் கைந்நிலையா? இன்னிலையா? என்ற தெளிவு கிடைக்காமலேயே போய்விடுகின்றது.

    தொகுப்பாக

    தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளை மூன்று நிலைகளில் புரிந்துகொள்ள முடிகின்றது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சார்ந்த பதினெட்டாவது நூல் இன்னிலைதான் என்ற ஒரு சார் கருத்து. மற்றொன்று கைந்நிலைதான் கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்பது. இன்னொரு கருத்து, இவ்விரு நூல்களும் கீழ்க்கணக்கைச் சார்ந்தவை என்பது. இன்னிலை, பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகப் பதிப்பிக்கப்பட்ட காரணத்தினாலேயே இன்றுவரை ஒரு போலி நூல், இலக்கிய வரலாற்றுத் தரவினுள் இடம்பெறுவது கேள்விக்குரியது. முடிவான நிலைப்பாடு இது என இனிவரும் காலங்களில் இலக்கிய வரலாற்றினை எழுதும் ஆசிரியர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

    பாடத்திட்ட நோக்கில் எழுதப்படும் இலக்கிய வரலாற்று நூல்கள், இத்தவறான கருத்தினை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன. இனிவரும் காலங்களில் எழுதப்படுகின்ற இலக்கிய வரலாற்று நூல்களை எழுதுகின்ற ஆசிரியர்கள் உண்மைத் தன்மையை உரிய வகையில் ஆராய்ந்து உரிய கருத்துகளை மட்டுமே இலக்கிய வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பதையே இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.

    சான்றாதார நூல்கள்

    1972    மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்ய அகாதெமி, புதுதில்லி.

    1998    ஜெ ஸ்ரீசந்திரன், தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை.

    2000    வி.செல்வநாயகம், தமிழ் இலக்கிய வரலாறு, குமரன் பதிப்பகம், முதல் பதிப்பு        1951, சென்னை – இலங்கை.

    2003    சு.ஆனந்தன், தமிழ் இலக்கிய வரலாறு, கண்மணி பதிப்பகம், திருச்சி, திருத்திய     பதிப்பு, முதல் பதிப்பு 2002.

    2004    கா.சுப்பிரமணிய பிள்ளை, தமிழ் இலக்கிய வரலாறு, காவ்ய பதிப்பகம், முதல்        பதிப்பு 1930, சென்னை.

    2004    தமிழண்ணல், உலகத் தமிழிலக்கிய வரலாறு (தொன்மை முதல் கி.பி. 50 வரை),    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதல் பதிப்பு.

    2005    மது.ச.விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், முதல் தொகுதி,      ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

    2007    பி.டி.சீனிவாச ஐயங்கார், தமிழர் வரலாறு (கி.பி.600 வரை), தமிழாக்கம் :   பி.இராமநாதன், தமிழ்மண், சென்னை (முதல் பதிப்பு 1929).

    2008    பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, நியூ செஞ்சுரி புக்          ஹவுஸ், சென்னை.

    2011    தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக   நிலையம், மதுரை.

    2012    அ.கா.பெருமாள், தமிழ் இலக்கிய வரலாறு, சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில்.

    2012    மு.அருணாசலம், இராஜா வரதராஜா, தமிழ் இலக்கிய வரலாறு, அருண் பதிப்பகம்,            திருச்சி.

    –           ஈஸ்வரின், தமிழ் இலக்கிய வரலாறு, பாவை பதிப்பகம், மதுரை (பதிப்பாண்டு       இல்லை).

    ===========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    இலக்கிய வரலாறு குறித்த ஆய்வுகள் அதிகம் முன்னெடுக்காத சூழலில் ஆய்வாளர் தம் முயற்சியை மேற்கொண்டுள்ளார். பதினெண்கீழ்க்கணக்குத் தொகுப்பு நெறியில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிட்ட சில இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் மூலமாகத் தெளிவை முன்வைக்கும் தன்மையில் தம் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். இலக்கிய வரலாற்று எழுதுநெறியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் மெத்தனப் போக்கை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இன்னிலை மற்றும் கைந்நிலை நூல்கள் குறித்து மூன்று விதமான புரிதல்களை இலக்கிய வரலாற்று நூல்கள் பதிவு செய்துள்ளமையை விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார். வணிக நோக்கில் தரமற்ற இலக்கிய வரலாறு எழுதுவதை ஒரு பெரும் குறையாகக் குறிப்பிட்டுள்ளார். தொடக்க கால இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் எழுதுநெறிக்கும் தற்கால இலக்கிய வராற்று ஆசிரியர்களின் எழுதுநெறிக்கும் உள்ள முரண்களை ஆய்வாளர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆய்வாளர் மயிலை. சீனியின் பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலினையும் ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பின் ஆய்வு மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். எனினும், இந்த முயற்சிக்குப் பாராட்டுகள்.

    ===========================================

     

    Share
  • (Peer Reviewed) குதித்தெழும் பிரபஞ்சம் ஒப்புரு

    ஸ்ரீ.நடராஜன் , முனைவர் ரெ.சந்திரமோகன்

    முதுஅறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை
    ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை
    மின்னஞ்சல்: natarajangravity@gmail.com, rathinam.chandramohan@gmail.com

    ====================================================

    குதித்தெழும் பிரபஞ்சம் ஒப்புரு

    பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும் , பிரபஞ்சத்தின் மூலநிலை மற்றும் அதன் இயக்கத்தைப் பற்றியும், பெருவெடிப்புத் தத்துவத்தில் மாற்றங்களையும் இக்கட்டுரை வாயிலாகக் காணலாம். மேலும் பிரபஞ்சமானது குதித்தெழும் ஒப்புருவாக ஆய்வு செய்யப்படுவதையும் இக்கட்டுரையில் காண்போம். பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பற்றிக் கணித முறையில் விளக்குவதற்குப் பல்வேறு ஒப்புருக்கள் இருந்தாலும், இயற்பியல் ரீதியிலான பெருவெடிப்புத் தத்துவமானது வெற்றிகரமான ஒப்புருவாக உள்ளது. பெருவெடிப்புத் தத்துவமானது, சமீபத்திய ஆய்வு முடிவுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    விரிவடையும் பிரபஞ்ச அமைப்பு, பிரபஞ்சப் பின்புல வெப்பநிலை ஆகியவை பெருவெடிப்புத் தத்துவத்திற்கு ஆதாரமாக அமைகின்றன. இப்பெருவெடிப்பு தத்துவத்தைப் பற்றிச் சற்று சுருக்கமாகக் காண்போம். இதன் வாயிலாகப் பெருவெடிப்புத் தத்துவமானது, எங்ஙனம் சிக்கல்களைச் சந்திக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். பெருவெடிப்புத் தத்துவத்தின் உருவாக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தொடங்குகிறது. காமோவ் மற்றும் அவர்களது குழுவினரால்[1] இத்தத்துவம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.

    பெருவெடிப்புத் தத்துவத்தின்படி பிரபஞ்சமானது, ஒரு சிறு புள்ளியில் இருந்து உருவாக ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது மூலநிலைப்புள்ளி(singularity) என்று அழைக்கப்படுகிறது. இம்மூலநிலைப் புள்ளியானது மிகுந்த அடர்த்தியுடனும், மிகுந்த அழுத்தத்துடனும், அதிக வெப்பத்துடனும் இருக்கும் என வரையறுக்கப்படுகிறது. இப்புள்ளியிலிருந்து பிரபஞ்சமானது விரிவடைந்து, குளிர்ந்து, தற்போது நாம் காணும் பரந்து விரிந்த பிரபஞ்சமாகத் தோற்றம் அளிக்கிறது என்பதைப் பெருவெடிப்புத் தத்துவம் முன்வைக்கிறது[2].

    இவ்வாறாக பிரபஞ்சமானது விரிவடையும் போது, வெப்பநிலை குறைவதால் அடிப்படைத் துகள்கள், அணுக்கள் மற்றும் அணுக் கூட்டங்கள் என்ற தொடர்ச்சியான மாற்றங்கள் உருவாகின்றன[3]. இச்செயல்பாடே தற்போதைய இயற்பியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்புருவுக்குச் சிறந்ததொரு ஆதாரமாக விளங்குகிறது. பிரபஞ்சம் விரிவடைவது மற்றும் அதன் வெப்பநிலை குறைவதுமான இரு பெரும் தத்துவங்கள் தற்போதும் நிரூபிக்கப்பட முடியும். வகை IA சூப்பர் நோவா தரவுகள்[4] மற்றும் பிரபஞ்சத்தின் பின்புல வெப்பநிலைத் தரவுகள்[5] ஆகியவை பெருவெடிப்புத் தத்துவத்திற்கு மாபெரும் வெற்றியைத் தருகின்றன. பிரபஞ்சம் விரிந்து கொண்டே இருப்பதை சூப்பர்நோவா தரவுகள் நிரூபிக்கின்றன. பிரபஞ்சம் குளிர்ந்து கொண்டே வருவதை பின்புல வெப்பநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வகையான பிரபஞ்சம் ஃப்ரீட்மேன் பிரபஞ்சம் என அழைக்கப்படுகிறது.

    இதுபோன்ற ஒரு சமன்பாடு ஐன்ஸ்டைனின் பிரபஞ்ச ஆய்வில் தெரிவிக்கப்பட்டது[6].
    ஐன்ஸ்டைனின் பிரபஞ்ச ஒப்புருவில் பிரபஞ்சம் விரிவடைவதைப் பிரபஞ்ச மாறிலி என்னும் சமன்பாட்டு நேரமைவின் மூலம் அவர் புகுத்தினார். பின்னர் வந்த அமெரிக்க வானியல் ஆய்வாளரான ஹப்பிள், பிரபஞ்சம் விரிவடைவதை நிரூபித்தவுடன்[7] ஐன்ஸ்டைன் தனது ஒப்புருவில் சேர்க்கப்பட்ட மாறிலியானது பிழை என்று அறிவித்தார்.

    இச்சமன்பாடுகள் செயலாக்கப்பட்ட அதே சமயம், இயற்பியலில் மணிமகுடமாகத் திகழும் குவாண்டம் இயற்பியலின் சமன்பாடுகள் வரையறுக்கப்பட்டும் வந்தன. குவாண்டம் இயற்பியலானது நுண்ணிய அளவிலான அடிப்படைத் துகள்கள், அலைகள் மற்றும் புலங்கள் ஆகியவற்றில் இயக்கத்தை வரையறுத்தது. மேலும் தொன்மை அளவில் சாத்தியமில்லாத சில மாறுபட்ட கருத்துகளையும் நிரூபித்தது. எடுத்துக்காட்டாக குவாண்டம் உட்புகுதல், துகள் – அலை இரட்டைக் கோட்பாடு மற்றும் நிலையில்லாக் கோட்பாடு ஆகியவை தொன்மை அளவில் சாத்தியமில்லாத அல்லது நிரூபிக்க முடியாத கோட்பாடுகளாகும். அவை குவாண்டம் அளவில் அதிகாரத்தில் உள்ளன[8].

    குவாண்டம் இயற்பியலின் குவாண்டமாக்கல் செயல்முறை அடிப்படை நிலையில், துகள்கள் மற்றும் அலைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான விளக்கத்தைத் தந்தது. உதாரணமாக மின்காந்த அலைகளைக் குவாண்டமாக்கல் என்னும் பகுப்பாய்வு செய்யும் போது அவை போட்டான்கள் எனும், சிறு சிறு ஆற்றல் சிப்பங்களாக அல்லது குவாண்டம் துகள்களாக இருப்பது தெரியவந்தது. இவ்வகையில் பிரபஞ்சத்தின் மூல நிலையும் குவாண்டமாக்கல் கணக்கீடுகளுக்குள் உட்புகுத்த முடியும் என்பதாக அறிவியல் அறிஞர்கள் ஆராயத் தொடங்கினர்.

    நீண்ட காலமாகப் பிரபஞ்சத்தின் மூல நிலையைப் பற்றிய கருத்துகள் வெளிவந்தாலும் எவற்றாலும் அங்கு உள்ள ஈர்ப்பு விசை பற்றியோ அல்லது காலவெளியின் நிலையைப் பற்றியோ தெளிவாக விளக்க முடியவில்லை. ஈர்ப்புவிசையைக் குவாண்டமாக்கும் பல்வேறு கருதுகோள் முயற்சிகளும்  இறுதியில் மூலப் புள்ளியில் குவாண்ட அமைப்புகளை விளக்க முடியாமல் நின்று விட்டன[9].

    மூலநிலைப் புள்ளியை அவ்வளவு சீக்கிரமாக குவாண்டமாக்கல் செயல்முறைக்கு உட்படுத்த முடியாததற்குக் காரணம், அங்கு அதிகமான கால வெளியின் வளைவுகள் இருப்பதும் மற்றும் பிரபஞ்சத்தின் பருமன் சுழியம் ஆவதும் ஆகும். மேலும் அங்கு குவாண்டம் விளைவுகள், மிக அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகவே மூலநிலையைத் தெளிவுறக் குவாண்டமாக்க முடியாததும் மேலும் ஈர்ப்பு விசையைக் குவாண்டமாக்க முடியாததுமான சிக்கலை இயற்பியலுக்குத் தந்தது. மேலும் ஈர்ப்பு விசையைக் குவாண்டமாக்கும் செயல்முறைகளில் பின்புலக் காலவெளியின் ஆதிக்கத்தைத் தவிர்த்ததான சமன்பாட்டினை உருவாக்குவது என்பது சாத்தியம் இல்லாததாகவே இருந்து வந்தது. மேலும் மூலப் புள்ளியைத் தவிர்த்த பிரபஞ்ச ஒப்புருவை உருவாக்குவதும் சாத்தியமில்லாததாகவே இருந்தது.

    இவ்வாறான சிக்கலைத் தவிர்க்கவே வளையக் குவாண்டம் பிரபஞ்ச ஒப்புரு[10] என்னும் ஒப்புருவானது முன்வைக்கப்படுகிறது. இவ்வொப்புருவில் காலவெளியானது சுழல் வலைப்பின்னல் அமைப்புகளால் கட்டமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு குவாண்டம் பரப்பும் குவாண்டம் அளவில் ஒரே மாதிரியான தொகுப்பைக் கொண்டிருக்கும் எனவும் வரையறுக்கப்படுகிறது. இவ்வாறாக பிரபஞ்சத்தின் காலவெளியானது குவாண்டமாக்கப்படுகிறது. அதாவது குவாண்டம் அளவில் பிரபஞ்சமானது தொடர்ச்சியாக இல்லாமல் சிறு சிறு குவாண்டம் பகுதிகளாக இருப்பதாக அறியமுடிகிறது.

    இத்தகைய கணிதவியல் அளவீடுகள் மூலம், மூலநிலைப் புள்ளியையும் எளிமையாக குவாண்டமாக்க முடியும். அதாவது மூலநிலைப் புள்ளியில் கொள்ளளவு என்பது சுழியமாக அமையாமலும், மேலும் காலவெளியின் வளைவுகள் குறிப்பிட்ட பெரும அளவுகளுக்குள் அமைவதையும் புரிந்துகொள்ள முடியும். ஆகையால் தொன்மை இயற்பியல் அளவில் விவரிக்க இயலாத பிரபஞ்ச மூலநிலைப் புள்ளியை குவாண்டம் அளவில் வளையக் குவாண்டம் பிரபஞ்ச ஒப்புரு மூலம் தெளிவாக விளக்க முடியும். மேலும் மூல நிலைப் புள்ளிக்குச் சற்று முன்னதான மற்றும் சற்றுப் பின்னதான சூழலிலிருந்து பிரபஞ்சம் எவ்வாறு பரிணமித்திருக்கும் என்பதையும் இக்கணித வரையறைகள் மூலம் சொல்ல முடியும்.

    இம்மூலநிலைப் புள்ளியில் பிரபஞ்சமானது வித்தியாசமான இயக்கவியலைப் பெற்றுள்ளது. தொன்மை இயக்கவியலைப் பொறுத்தவரையில் பிரபஞ்சமானது மூலநிலைப் புள்ளியில் இருந்து வெகு வேகமாகப் பரிமாற்றம் அடைந்து தற்போதுள்ள பிரபஞ்சம் வரையில் விரிந்து வந்ததாகச் சொல்லப்பட்டாலும், வளையக் குவாண்டம் பிரபஞ்சவியலைப் பொறுத்தவரை பிரபஞ்சமானது, மூல நிலைப் புள்ளியைப் பொறுத்து, குதித்தெழும் பிரபஞ்சமாக[11] ஒப்புமைப் படுத்தப்படுகிறது.

    அதாவது மூலநிலைப் புள்ளியை நோக்கி வரும் பிரபஞ்சம் மூல நிலைப் புள்ளிக்கு அருகில் மாறுநிலை அடர்த்தியை எய்தும். அப்போது பிரபஞ்சமானது குதித்தெழும் தன்மையுடன் மீண்டும் விரிந்து செல்லும். மேலும் இச்சூழ்நிலையில் ஈர்ப்பு விசையானது தள்ளும் இசையாக அல்லது விலக்கு விசையாகச் செயல்படுவதையும் இக்கருத்துருவாக்கம் முன்வைக்கிறது. ஆகவே பிரபஞ்சமானது குதித்தெழும் பிரபஞ்சமாக, குவாண்டம் இயக்கவியல் மூலம் கணித முறையில் வரையறுக்கப்பட முடியும். இவ்வாறான பிரபஞ்ச ஒப்புரு, பல்வேறு மூலநிலைச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    மேற்கோள்கள்
    1. Gamow, G. (1982). by G. Gamow, Phys. Rev. 70,572 . Unity Of Forces In The Universe (In 2 Volumes), 1, 459,1946.
    2. Linder, E. V. (2003). Exploring the expansion history of the universe. Physical Review Letters, 90(9), 091301.
    3. Wagoner, R. V. (1973). Big-bang nucleosynthesis revisited. The Astrophysical Journal, 179, 343-360.
    4. Riess, A. G., Strolger, L. G., Casertano, S., Ferguson, H. C., Mobasher, B., Gold, B., … & Tonry, J. (2007). New Hubble space telescope discoveries of type Ia supernovae at z≥ 1: narrowing constraints on the early behavior of dark energy. The Astrophysical Journal, 659(1), 98.
    5. Schlegel, D. J., Finkbeiner, D. P., & Davis, M. (1998). Maps of dust infrared emission for use in estimation of reddening and cosmic microwave background radiation foregrounds. The Astrophysical Journal, 500(2), 525.
    6. Winberg, S. (1972). Gravitation and cosmology. ed. John Wiley and Sons, New York.
    7. Hubble, E. (1929). A relation between distance and radial velocity among extra-galactic nebulae. Proceedings of the National Academy of Sciences, 15(3), 168-173.
    8. Sakurai, J. J., & Commins, E. D. (1995). Modern quantum mechanics, revised edition.
    9. DeWitt, B. S. (1967). Quantum theory of gravity. I. The canonical theory. Physical Review, 160(5), 1113.
    10. Bojowald, M. (2008). Loop quantum cosmology. Living Reviews in Relativity, 11(1), 4.
    11. Wilson-Ewing, E. (2013). The matter bounce scenario in loop quantum cosmology. Journal of Cosmology and Astroparticle Physics, 2013(03), 026.

    ===================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும், பிரபஞ்சத்தின் மூலநிலை மற்றும் அதன் இயக்கத்தைப் பற்றியும், பெருவெடிப்புத் தத்துவத்தில் மாற்றங்களையும் இக்கட்டுரை வாயிலாகக் காண முடிகிறது. மேலும் பிரபஞ்சமானது இக்கட்டுரையில் குதித்தெழும் ஒப்புருவாக ஆய்வு செய்யப்படுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பற்றிக் கணித முறையில் விளக்குவதற்குப் பல்வேறு ஒப்புருக்கள் இருந்தாலும், இயற்பியல் ரீதியிலான பெருவெடிப்புத் தத்துவமானது வெற்றிகரமான ஒப்புருவாக உள்ளது. பெருவெடிப்புத் தத்துவமானது, சமீபத்திய ஆய்வு முடிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விரிவடையும் பிரபஞ்ச அமைப்பு, பிரபஞ்சப் பின்புல வெப்பநிலை ஆகியவை பெருவெடிப்புத் தத்துவத்திற்கு ஆதாரமாக அமைகின்றன.

    தொன்மை இயக்கவியலைப் பொறுத்தவரையில் பிரபஞ்சமானது மூலநிலைப் புள்ளியில் இருந்து வெகு வேகமாகப் பரிமாற்றம் அடைந்து, தற்போதுள்ள பிரபஞ்சம் வரையில் விரிந்து வந்ததாகச் சொல்லப்பட்டாலும், வளையக் குவாண்டம் பிரபஞ்சவியலைப் பொறுத்தவரை பிரபஞ்சமானது, மூல நிலைப் புள்ளியைப் பொறுத்துக் குதித்தெழும் பிரபஞ்சமாக ஒப்புமைப்படுத்தப்படுகிறது. அதாவது மூலநிலைப் புள்ளியை நோக்கி வரும் பிரபஞ்சம், மூல நிலைப் புள்ளிக்கு அருகில் மாறுநிலை அடர்த்தியை எய்தும். அப்போது பிரபஞ்சமானது குதித்தெழும் தன்மையுடன் மீண்டும் விரிந்து செல்லும். மேலும் இச்சூழ்நிலையில் ஈர்ப்பு விசையானது தள்ளும் விசையாக அல்லது விலக்கு விசையாக செயல்படுவதையும் இக்கருத்துருவாக்கம் முன்வைக்கிறது. ஆகவே பிரபஞ்சமானது குதித்தெழும் பிரபஞ்சமாக, குவாண்டம் இயக்கவியல் மூலம் கணித முறையில் வரையறுக்கப்பட முடியும். இவ்வாறான பிரபஞ்ச ஒப்புரு, பல்வேறு மூலநிலைச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    பெரும் பாய்ச்சலில் பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம் என்று குறிப்பிடும் ஆய்வாளர்கள், தமது கோட்பாட்டைப் பெருவெடிப்பு நியதியோடு ஒப்பிட்டு இன்னும் தெளிவாக விளக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு சுருக்கவுரை பிறகு விரிவுரை, இறுதியில் முடிவுரை என்ற அமைப்பில் பிரபஞ்சத் தோற்றக் கோட்பாடுகளைப் படத்துடன் ஆய்வுக் கருத்துரையாக அமைத்துக் காட்ட வேண்டும்.

    ஆய்வாளர்கள், இந்தக் கட்டுரையையும் கவனித்திருக்கலாம்: http://www.vallamai.com/?p=82254

    ===================================================

    Share
  • (Peer Reviewed) சித்தர் இலக்கியங்களில் பெண்கள் குறித்த பதிவுகள்

     

    -முனைவர் க. இளமதி ஜானகிராமன்
    பேராசிரியர்,
    சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்,
    புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி- 605014.

    *******************************************************

    அந்தக் கரணங்கள் நான்கினுள் சித்தத்தை அடக்கி, யோகச் செயல்முறைகட்கு ஆட்படுத்தி, சித்திகளைப்பெற்று சித்தர்களாகி தாம் பெற்ற சித்திகளின் மூலம் சமுதாய மக்களை மேம்படுத்த உயரிய முற்போக்குக் கொள்கைகளைத் தம் பாடல்களில் எழுதி, அனைத்துத் தத்துவங்களின் உண்மைப் பொருள்களையும் புலப்படுத்தி இன்றைக்கும் இம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களின் இலக்கியங்களில் பெண்கள் பற்றிய பல்வேறு செய்திகளைப் பதிவு செய்துள்ளனர். அவற்றை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

    சக்தியே பெண் ஆவாள்

    பாரதி தம்முடைய பாடலில், ‘பெண் உருக்கொண்டு போந்துநிற்பது தாய் சிவசக்தியாம்’ என்பர். சட்டை முனியும் ‘அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம்’ என்றே தொடங்குவார். தேவருலகத்திலும் மற்றுமுள்ள எவ்வுலகத்திலும் பெண் எனும்  சக்தியைச் சேராதவர்கள் இல்லை. பெண்சக்தியோடு இணையும் பொழுதுதான் மனிதர்களின் வாழ்வும் சிறக்கும். இதனை வெளிக்காட்டவே நீலி, கங்கை எனும் இருவரையும் சிவபெருமான் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் இப்பூமியில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ்ந்தால்தான் உயர்வினை அடைய முடியும் என்பதை வெளிக்காட்டவே ‘உமாபதி’யாக அர்த்தநாரீசுரராக சிவபிரானும் சக்தியும் வெளிப்பட்டிருக்கின்றார்கள் எனும்  கருத்துக்களைப் புலப்படுத்தும் சித்தர்கள்,

    மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே
    மாதர்தோள் சேர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே
    மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
    மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்துகொண்டான் ஈசனே  (சிவவாக்கியார்பாடல்) என்றும்

    ஆணும் பெண்ணுமாய் அற்புதக் கோலம் நீடி (பட்டினத்தார் பொது) என்றும் பாடித் தெரிவிப்பார்.

    உலகத் தோற்றமும் ஒழுக்கமும்

    இவ்வுலகம் ஆதிபராசக்தி எனும் பெண் சக்தியில் தோன்றிப் பெண்சக்தியிலேயே ஒடுங்குகின்றது என்பதைக் காகபுசுண்டர் தம் காவியத்தில் உரைப்பர். இதனை இராமதேவர் முதலான சித்தர்களும் ஏற்பர். பிரளயங்கள் ஏற்பட்டு அனைத்தும் அடங்கிவிட்ட பிறகு பிரமம் இவ்வுலகத்தைத் தோற்றுவிக்க நினைக்கும்பொழுது காலத்தம்பத்தில்  ஆதிபராசக்தி   தோன்றி சிவன், திருமால்  போன்ற தெய்வங்களை அழைப்பாள். திருமால் தன் உந்திக்கமலத்தில் பிரமனை உருவாக்க அவருள் அடங்கியிருந்த  உயிரினங்களை  வெளிக்கொணர இவ்வுலகம் தோன்றுகிறது. ஒடுக்கக் காலத்தில் அனைத்தும் உருவாகியபடியே ஆதிபராசக்தியில் ஒடுங்கிவிடுகின்றன என்று காகபுசுண்டர் உரைப்பர். (காகபுசுண்டர் காவியம்)

    சித்திகளைத் தருபவள் சக்தியே

    சித்தர்கள் பெண் சக்தியே சித்திகளைத் தருகின்றது என்ற மெய்ம்மைப் பொருண்மையாகக் கொண்டமையால் தங்களது பாடல்களில் அவற்றைப் பதிவு செய்துள்ளனர். சட்டைமுனி, ‘சிவனது இடதுபுறத்தில் நிற்பவள் அட்டமாசித்தியினை அளிப்பவள், புகழ் வாய்ந்த இரத்தின ஆரம் பூண்டவள், இவளது  திருவடிவினைக் காண்பதற்கு நவகோடிதேவர், சித்தர் முதலானோர் நிற்பர். எருதின்மேல் ஏறுகின்ற அப்பன் ஏழை எனவே அவரிடம் சொல்லாமல் இவ்அம்மையின் முன்னே வைத்துக் கேட்டால் நாம் கேட்டதையெல்லாம் அருளிச்செய்வாள். அவளின் வழி அவற்றைப்பெற்று மவுனத்தைப் பெறவேண்டும்’ என்பர். (சட்டைமுனி முன்ஞானம் 100)

    தாயாகிய சக்தியின் செயற்பாடுகள்

    சட்டைமுனி, தாயாகிய சக்தியின் செய்பாடுகள் யோகசாதனைகள் செய்பவரிடத்து வெளிப்படும் என்பதை,

    உன்னிநின்ற மூலமுதலாறும் பார்த்தே
    உருகுகின்ற சுழுமுனையை யறிந்துபின்பு
    மன்னி நின்ற மதிமேல் சாம்பவியைக் கண்டு
    மருவிநின்று மணமுறைந்து சேர்த்து பின்பு
    பன்னிநின்ற இவ்வளவும் யோக மார்க்கம்
    பகலிரவு மற்றவிடம் ஞான மார்க்கம்
    கன்னி நின்ற விடங்கண்டா லவனே ஞானி
    காட்டுவாள் கேசரியைக் காட்டு வாளே ( சட்டை முனி பா:10)

    யோக சாதனைகளில் ஈடுபட்டவர்கள் ஞானமார்க்கத்தை நோக்கிச் செல்லவேண்டும். அவ்விடம் பகலும் இரவும் அற்றதாகும். அது கன்னி எனும் வாலைப்பெண்ணின் இடமாகும் அவ்விடத்தைக் கண்டவனே ஞானியாகும். அவ்வாலைப் பெண்ணே கேசரி எனும் வித்தையைக் காட்டுவாள்.

    காட்டுவாள் கிரிதன்னை மேலே யேற்றிக்
    கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்வாள்
    மூட்டுவாள் குளிகைவிட்டால் கணத்துக்குள்ளே
    மூதண்ட புவிகடந்து தெளிவுங் காணும்
    ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள்
    ஆதிவத்து அனாதிவத்து இரண்டுமொன்றே
    ஊட்டுவாள் நிற்குணத்தின் அமுதவல்லி
    உயர்ந்து நின்ற ஞானசக்தி யுறவு தானே (பா:11)

    வாலைப் பெண்ணானவள் தலையான மலையில் ஏற்றிவிடுவாள். ஏறாவிட்டால் கீழே தள்ளிவிடுவாள். குளிகையை உண்டு ஒருகண நேரத்திற்குள் இப்பெரிய உலகைக் கடந்து செல்வது போல உணர வைப்பாள். அவள் அண்டங்களையும் அவற்றில் வாழ்பவரையும் மாலையாக முடித்து அணிந்தவளாவாள். தகுதிவாய்ந்த அவளைவிட மிகச்சிறந்த உறவுயாருமில்லை எல்லாச் சமயத்தினரையும் திரோதானத்தால் அவள் மாயை செய்து ஆட்டுவிக்கின்றாள்.

    கேசரி யோகம்

    மனத்தின் முடிவு எல்லையில் தேவியின் திருவடி என்பதை கேசரி யோகத்தால் உணரலாம். கேசரி யோகத்தில் உள்ள வாலைத்தாயின் குண்டலித் தீயினது ஒளி கண்ணும் விண்ணும் கொள்ளாதது. கரை காணமுடியாதது. இதனைப் பறை என்றும் விண் படரும் செயல் என்றும் கூறுவர். அவளை மவுனத்தால் உணரவேண்டும். அவளை உருவம் ஒன்றும் இல்லாத மவுனச் செய்கையாகக் கொள்ளலாம். அவள் வான் மீது படரும் சோதியாகும். மவுனமுற்று இருந்தால் லயத்தின் நேர்மையில் உலகிற்கும் அம்மவுனமாகிய ஜோதி தெரியும்.

    கொங்கணரும் இக்கருத்தை உடன்படுவார். தோற்றத்திற்குக் காரணமாக இருக்கும் வாலைப்பெண்தான் ஐந்தெழுத்துமாக நின்றவள்; இவளே ஊமை எழுத்துமாவாள். இவளே ஞானத்தின் வகையாக நிற்பாள் என்பதை,

    ஆதியிலைந் தெழுத் தாயினாள் வாலைப்பெண்
    ஐந்தெழுத் துமென்று பேரானாள்,
    நாதியி னூமை யெழுத் திவள் தானல்ல
    ஞான வகையிவள் தானானாள்  (கொங்கணர்  பா:13)

    எனும் பாடலில் தெரிவிப்பர். இவர் கூறிய ஊமை எழுத்தினை விரிக்கும்பொழுது இவரே ஊமை எழுத்தே உடலாச்சு என்பர்.  இதனைச் சிவவாக்கியரும் தம் பாடலில் ,

    சக்தியாவது உன்னுடல் தயங்குசீவன் உட்சிவம்
    வித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே
    சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல்லிறந்த தோர்வெளி
    சக்தியும் சிவமும் ஆகிநின்ற தன்மையாவது உண்மையே (சிவ:372)

    என்று உரைப்பர். இப்பாடலில் நமது உடலாக நிற்பது சக்தி; உள்ளிருக்கும் உயிராக இருப்பது சிவன். இவ்விரண்டையும் சுற்றி ஐந்து கோசங்கள் கோட்டைகட்டி உள்ளன. உள்ளே கூடமாக ஒளி நிற்கின்றது. எனவே சக்தியும் சிவமுமாக நிற்பது உண்மையாகும். என்று உரைப்பதால் உயிர்களின் செயற்பாட்டிற்கு முதன்மையாக உடல் விளங்குவதை அறியலாம்.

    மகடூஉ முன்னிலை

    பெண்களை முன்னிலையாக வைத்துப் பாடுவது மகடூஉ முன்னிலை எனப்படும். இந்நிலையில் பட்டினத்தார், கொங்கணர், குதம்பைச்சித்தர், அழுகணிச்சித்தர் முதலானோர் பாடல்களைப் பாடுகின்றனர்.

    முந்தச் செகங்களுண்டானதுவும் முதல்
    தெய்வமுந் தேவருண்டானதுவும்
    விந்தையாய் வாலையுண்டானதுவும் ஞான
    விளக்கம் பாரடி வாலைப் பெண்ணே!  (கொங்கணர் பா.11)

    குதம்பைச்சித்தர்,

    வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போருக்கு
    பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்
    பட்டயம் ஏதுக்கடி  (குதம்பை பா : 12) என்றும் பாடுவர்.

    நாயக நாயகி பாவனையில் பாடுதல்

    தன்னைப் பெண்ணாகவும் இறைவனை ஆணாகவும் வைத்துக்கொண்டு பாடுதல் நாயக நாயகி பாவனையாகும். பட்டினத்தார் தன்னைப் பெண்ணாகவே கொண்டு பாடுகிறார்.

    கன்னி அழித்தவனைக் கண்ணாரக் கண்டேன்டி
    என் இயல்பு நானறியேன் ஈதென்ன மாயமடி  என்றும்,

    கண்மாயம் இட்டாண்டி கருத்தையும் இழந்தேன்டி
    உள்மாயம் இட்டவனை உருஅழியக் கண்டேன்டி (பட்டினத்தார் பா:69) என்றும் பாடுவர்.

    பொது நிலையில் பெண்கள்

    சித்தர்கள் தங்களது பாடல்களில் பெண்கள் எவ்வாறு  இருந்தனர் என்பதையும் பதிவு செய்துள்ளனர். பெண்டிர் தம்மை அழகுபடுத்திக் கொள்வதில் விருப்பம் உள்ளவர்களாக இருந்தனர். தங்கத்தாலான அணிகலன்களை அணிந்தனர். வளம் குறைந்தவர்கள் பித்தளையினால் ஆகிய அணிகளை விளக்கி அணிந்தனர். கொம்பு இல்லாத உருண்டை மஞ்சளைத் தேய்த்து எண்ணெயும் கூட்டிமுகத்தில் பூசிக் கொண்டனர். சுட்டெரித்த சாந்தினைப் பூசி முகத்தில் நெட்டெழுத்தினைப் போலப் பொட்டிட்டுக்கொண்டனர். மெட்டி அணிந்தனர். இவர்கள் எதனையும் மனத்தில் வைத்திருக்கும் வன்மையில்லாதவர்கள். மானத்தினைக் காப்பது சேலைக்குமேல் எதுவுமில்லை என்று கருதினர். பத்து மாதங்கள் குழந்தையைச் சுமந்து இறைவனையே தியானித்துத் தொந்தி சரிய அங்கமெல்லாம் நொந்து பிள்ளைகளைப் பெறுவர். பெற்ற பிள்ளை ஆண் பிள்ளை என்று கூறினால் மகிழ்வர். தன் முலைப்பாலினைக் கொடுத்து வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள் மேலும் கட்டிலிலும் வைத்து இரவு பகல் என்றில்லாமல் அன்புடன் காப்பர். தேனே, அமிர்தமே, செல்வத்திரவியப் பூவே, மானே என்றழைத்து முகம் மேல் முகம் வைத்து முத்தாடி என்றன் மகனே என்றழைப்பர். குற்றம் குறை போக்கி வளர்ப்பர். தன் மகனுக்கு ஒரு வருத்தம் எனில் சிறிதும் தாங்கார். கணவனோ அன்றிப் பிறரோ இறந்து விட்டால் வீதி வரையில் அழுது கொண்டு வருவர். கணவன், தகப்பன் அண்ணன், தம்பி யாராயினும் பொருள் சம்பாதித்து வருபவர்களையே விரும்புவர். கற்புடைய குலமகளிர் பத்தினிப் பெண்டிர் என்று போற்றப்பெற்றனர்.

    கற்பு நிலை திரிந்தபெண்களும் இருந்ததைப் பட்டினத்தார் காட்டுவர்.  சமுதாயத்தில் கற்புடைய பெண்டிர் என்றும் போற்றப்பெற்றனர். சமுதாயத்தில் கற்புடைய பெண்டிர் இருந்ததைப் போன்று விலை மாதர்களும் இருந்தனர். இவர்கள் நாவார வேண்டிய இதம் சொல்வர். தன்னிடம் வந்தவனைப் பிரித்தால் இறப்பதாகக் கூறுவர். வருபவர்களுடன் ஒரு தன்மையாய் அமர்ந்து உண்பர். பொருள் தீர்ந்துவிட்டதெனில் போய் வரச்சொல்லி நடுத்தலையில் குட்டுவர். தினந்தோறும் பொய்யினையே பேசுவர். வம்பு பேசுவதில் சிறந்தவர். இவர்களுக்கென்று தனி வீதிகள் இருந்தன. ஆடவர்கள் பலர் தாங்கள் உழைத்து ஈட்டிய பொருளையெல்லாம் விலைமாதர்களுக்கே தந்து வாழ்ந்தனர். அதனால் நோய்வாய்ப்பட்டவர்களும் உண்டு. பொருள் அற்ற வறியவர்களை இவ்விலைமாதர் தங்களுடன் சேர்ப்பது இல்லை. தங்களை அழகுபடுத்திக் கொண்டு பட்டப்பகலில் வெளி மயக்குச் செய்து திரிவர்.  (க.இளமதி ஜானகிராமன் சித்தர் இலக்கியம் பக்:168-169)) என்று உரைப்பதின் வழி, பெண்கள் பொருளுக்காக ஆண்களை வயப்படுத்தும் நிலை மாறவேண்டும் என்றும் பெண்கள் தங்களுக்கான வாழ்க்கையைத் தாங்களே தேர்வு செய்து முழுமையுமாக  வாழவேண்டும் என்பதையும் புலப்படுத்துவர்.

    சித்தர்கள் பெண்களை வெறுப்பவர்கள் என்றும் அவர்களின் உடல் உறுப்புகளை இழிவாகப் பேசுபவர்கள் என்றும் பட்டினத்தார் பாடல்களைச் சான்று காட்டி உரைப்பவர்களும் உண்டு. பட்டினத்தார் வெளிமயக்கு செய்து ஆண்களிடம் பொருள் பெறும் பெண்களைக் குறித்துத்தான் அவ்விதம் பாடினாரே ஒழிய கற்புடைய பெண்களை அவர் குறைகூறவில்லை. அனைத்துச் சித்தர்களும் பெண்களைச் சக்தியின் உருவமாகவே காண்கின்றனர். கொங்கணர்,

    உந்தன் பத்தினிமார்களைப் பழித்துக்காட்டாத’ (கொங்கணர் பா:64)

    பெண்ணுமில்லாமலே ஆணுமில்லை யிது
    பேணிப் பாராடி வாலைப்பெண்ணே (கொங்கணர் பா.72) என்றும்,

    கற்புடைப் பெண்கள் குலம் வாழ்க – நின்ற
    கற்பை அளித்தவரே வாழ்க (கொங்கணர் பா:46) என்றும் வாழ்த்திப் பாடுவர்.

    முடிவுரை

    இக்கட்டுரையின் வாயிலாக, சித்தர்கள் பெண் சக்தியே இவ்வுலகத் தோற்ற ஒடுக்கங்களுக்குக் காரணமாகிறது, அனைத்திற்கும் மூலமாக உள்ளது, சித்திகளைத் தருவது, இன்பத்தை அளிப்பது, இறையுடன் ஒன்ற உறுதுணைபுரிவது எனும் நிலைகளில் பெண்மையைப் போற்றியுள்ளமை வெளிப்படுத்தப்படுகின்றது.

    *****

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    சித்தர்கள் என்றாலே இல்லற வாழ்வையும் பெண்டிரையும் பழித்துப் பேசும் இயல்பினர் எனும் பொதுப்பார்வையைத் தகர்க்கும் விதத்தில் சித்தர்கள் பெண்களைச் சக்தியின் வடிவாகப் போற்றியவர்களே; அவர்கள் இழித்தும் பழித்தும், தம் பாடல்களில், பேசியிருப்பது ஆடவரின் பொருளுக்காகத் தம் உடலை விற்கும் விலைமகளிரையே என்று இவ் ஆய்வுக்கட்டுரை சான்றுகளோடு விளக்குகின்றது. ஆயினும் முடிவுரைப் பகுதி கட்டுரையின் மையக்கருத்தை இன்னும் விரிவாகவும் விளக்கமாகவும் தொகுத்துரைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அத்தோடு, கட்டுரைக்குத் துணைசெய்த நூல்களின் பட்டியலும் இதில் விடுபட்டுப் போயிருக்கின்றது. ஆய்விதழ்களுக்குக் கட்டுரை அனுப்புவோர் துணைநூற்பட்டியலையும் இணைத்து அனுப்புவது இன்றியமையாதது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

    சித்தர் பாடல்களை இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் ஆராயவேண்டியதன் அவசியத்தை இவ் ஆய்வுக் கட்டுரை உணர்த்துகின்றது. ஆய்வாளர்கள், சிறுகதைகள் நாவல்கள் என்ற எளிமையான இலக்கிய வகைமைகளையே ஆய்வுசெய்து பட்டம்பெறுவதைக் காட்டிலும்,  அறிவியல்வழிசார் ஆன்மிகத்தில் ஆழங்காற்பட்ட,  சித்தர் இலக்கியங்களை ஆய்வுசெய்வதன் வாயிலாக அந்த ஞானிகள் கண்டறிந்த பல்வேறு அரிய உண்மைகளைச் சமூகத்துக்கு அறியத் தந்த பெருமைக்குரியோராகலாம். ஆய்வாளர்கள் சிந்திப்பார்களாக!

     

     

    Share
  • (Peer Reviewed) தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு

    தி.மோகன்ராஜ்

    (முனைவர்ப் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010)

    (கட்டுரையாளர், தொல்காப்பியத் தொடரியல் நோக்கில் ஐங்குறுநூறு என்ற தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். இவரது மின் அஞ்சல் : mohr_d12@yahoo.co.in; கைப்பேசி : +91 99947 81727)

    =================================

    தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு

    பெயர்ச்சொற்கள் தோற்றங்கொள்ளும் முறை

    ஒரு மொழியில் பெயர்ச்சொற்கள் நான்கு வகைகளில் புதியனவாக ஆக்கிக் கொள்ளப்படுகின்றன என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்.  இதனைப் பெயராக்கம் (Derivation of nouns) என்று வழங்குவர்.  அவை

    1. பெயரிலிருந்து பெயராக்கம்
    2. வினையிலிருந்து பெயராக்கம்
    3. பெயரடையிலிருந்து பெயராக்கம்
    4. வினையடையிலிருந்து பெயராக்கம்

    என்பனவாம்.

    முருகன், அழகன், தமிழ்க்கல்வி, நூலகம், முருகக்கடவுள் போன்றன பெயரிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள். இந்த வகையை ‘Derivation of nouns from nouns’ என்று அழைப்பர். வளர்பிறை, பொங்கல், கற்றவன், பாடுநர் போன்றன வினையிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள்.  இந்த வகையை ‘Derivation of nouns from verbs’ என்று அழைப்பர்.  நன்னடை, இன்னிசை, நல்லொழுக்கம் போன்றன பெயரடையிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள்.  இந்த வகையை ‘Derivation of nouns from adjectives’ என்று அழைப்பர். தமிழிலும் வேறுபல மொழிகளிலும் வினையடையிலிருந்து பெயர்ச்சொற்கள் உருவாவதில்லை. ஒருசில மொழிகளில் மட்டுமே இந்த வகையில் பெயர்கள் தோற்றம் கொள்கின்றன. இந்த வகையை ‘Derivation of nouns from adverbs’ என்று அழைப்பர்.  இக்கட்டுரை, வினையிலிருந்து தோற்றங்கொள்ளும் பெயர்ச்சொற்களைப் (Derivation of nouns from verbs) பற்றித் தொடரியல் நோக்கில் ஆய்கிறது.

    வினையிலிருந்து தோன்றும் பெயர்ச்சொற்கள்

    தமிழ்மொழியில் வினையை உறுப்பாகக் கொண்டு தோற்றங்கொள்ளும் பெயர்ச்சொற்களை ஐந்து பெரும் பிரிவுகளுள் அடக்கலாம்.  அவை

    1. வினையடிப் பெயர்
    2. வினைத்தொகை
    3. ஆக்கப்பெயர்
    4. தொழிற்பெயர்
    5. வினையாலணையும் பெயர்

    ஆகியன.  இவை வினைப்பெயர்கள் (Verbal nouns) எனப்படும்.  இந்த ஐந்து வகையான வினைப்பெயர்களின் தொடரிலக்கண இயல்புகள் ஒவ்வொன்றாக இக்கட்டுரையில் விளக்கப்பெறுகின்றன. (வினையடியின் விகுதி திரிந்து சில வினைகள், பெயரோடு இணைந்து பெயர்ச் சொற்களாக வரும். மண்வெட்டி, மரங்கொத்தி, தொலைபேசி, கடனாளி, தொழிலாளி போன்ற சொற்கள், அவ்வாறு உருவானவையே. இவை ஆக்கப்பெயர்களின்கீழ் அடங்குமெனினும் இக்கட்டுரையின் ஏனைய வகைப்பாட்டுச் சொற்களைப் போன்று சொல்லின் முதலில் நிற்காமல் இறுதியில் நிற்பனவாதலான் இக்கட்டுரையில் ஆராயப் பெறவில்லை.  இக்கட்டுரையின் வகைப்பாட்டில் கொள்ளப்பட்டுள்ள வினைகள் அனைத்தும் சொல்லின் முதலில் நிற்பன மட்டுமேயாம்.)

    1. வினையடிப் பெயர்

    பொதுவாகப் பல மொழிகளில் காணப்படுவதைப் போன்று தமிழிலும் ஒருசில வினையடிகள் பெயராகவும் செயல்படுகின்றன.  அடி, அணி, அருள், உரை, அறை, பூ, காய் ஆகியன வினையடியே பெயராக வந்த பெயர்ச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளாகச் ச.அகத்தியலிங்கம் பட்டியலிடுகிறார் (ச.அகத்தியலிங்கம், 2011, ப.75).  இவை போன்று குத்து, கனி, ஆள் ஆகிய வினையடிகளும் பெயர்ச்சொற்களாகச் செயல்படும் தன்மை கொண்டவை.  இவை தமிழ் இலக்கணிகளால் முதனிலைத் தொழிற்பெயர்கள் என்று வழங்கப்படும்.

    அட்டவணை-1: பெயராகவும் வினையாகவும் வரும் வினையடிகளின் எடுத்துக்காட்டுகள்

    வ.எண் பெயராக வினையாக
    1. அடி விழுந்தது நீ அவனை அடி
    2. காதில் உள்ள அணி அழகாக இருக்கிறது இந்த நகையை நீ அணி
    3. அருள்  கிடைத்தது இறைவா! எனக்கு அருள்
    4. ஆற்றிய உரை  சிறப்பாக அமைந்தது நீ பதில் உரை
    5. பூ மணக்கிறது முல்லை மாலையில் பூக்கும்
    6. காய் வாங்கினேன் மாமரம் காய்த்தது
    7. குத்து விட்டான் அவனைக் குத்து
    8. கனி  சுவையாக இருந்தது பழம் நன்றாகக் கனிந்தது
    9. ஓர் ஆள் வருகிறார் நீ இந்த நாட்டை ஆள்

    இவ்வாறு தோன்றும் பெயர்கள், தங்கள் வினைத் தன்மையை இழந்து, முற்றிலும் பெயர்ச்சொல்லின் தன்மையைப் பெறுகின்றன. தொடரமைப்பில் இவை பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர் (Adjective phrase), பெயரெச்சக் கிளவியம் (Adjective clause), வேற்றுமை உருபுகள் ஆகியவற்றை ஏற்று ஒரு பெயர்ச்சொல்லுக்கான அனைத்துப் பண்புகளையும் பெற்று அமைகின்றன.

    நல்ல அடி                               – பெயரடையை ஏற்றது

    விழுந்த அடி                           – பெயரெச்சத்தை ஏற்றது

    நல்ல பலமான அடி               – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    அவன் அடித்த அடி               – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    அவன் அடியைத் தாங்கிக் கொண்டான் – வேற்றுமை உருபை ஏற்றது

    ஓடு, நட, படி, கொடு போன்ற வினையடிகள் பெயர்ச்சொற்களாக அமைவதில்லை.  பூ, உரை, அடி, கனி போன்ற வினையடிகளே பெயர்ச்சொற்கள் ஆகின்றன.  இதன் மூலம் எல்லா வினையடிகளும் பெயராவதில்லை என்பதை அறியலாம் (பொற்கோ, 2011, ப.50).

    1. வினைத் தொகை

    ஒரு வினையடி முதலில் நின்று ஒரு பெயர்ச்சொல்லோடு இணையும்போது வினைத்தொகை அமைப்பில் ஒரு பெயர்ச்சொல் உருவாகிறது. உயர்திணை, வளர்தமிழ், சுடுசோறு, அடுமனை ஆகியன வினைத்தொகைகள்.  வினைத்தொகை மூன்று காலத்தையும் குறிப்பாக உணர்த்தும் என்று இலக்கணவியலார் விளக்குவர்.  ஒரு பொருளின் தன்மையையே வினைத்தொகையின் வினையடி உணர்த்துகிறது என்று மொழியியலார் கருதுகின்றனர் (ச.அகத்தியலிங்கம், 2011, ப.75).  கொல்களிறு என்பது இலக்கணவியலாளர்களால் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு என்று விளக்கப்படும் நிலையில், மொழியியலார் கொல்லும் பண்பினை உடைய களிறு என்றே விளக்குவர் (செ.வை.சண்முகம், 2008, ப.75).  எவ்வாறு இருப்பினும் வினைத்தொகையாக அமையும் பெயர்ச்சொற்கள், வினையடியே பெயராக அமைந்த பெயர்ச்சொற்களைப் போன்று தமது வினைப் பண்பினை இழந்து பெயர்ச்சொல்லின் பண்பினையே கொண்டுள்ளன.

    சுவையான சுடுசோறு                        – பெயரடையை ஏற்றது.

    கொதித்த சுடுசோறு                            – பெயரெச்சத்தை ஏற்றது

    நல்ல சுவையான சுடுசோறு          – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    அவன் வடித்த சுடுசோறு                  – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    அவன் சுடுசோற்றை உண்டான் – வேற்றுமை உருபை ஏற்றது.

     

    1. ஆக்கப்பெயர்

    வினையடிகளுடன் ஒருசில விகுதிகள் சேர்ந்து ஆக்கப்பெயர்கள் உருவாகின்றன.  அம், நர், அல், கை, வி, வை என்பன போன்ற பல விகுதிகளைக் கொண்ட ஆக்கப்பெயர்கள் தமிழில் உள்ளன. உயரம், ஓட்டுநர், வறுவல், அழுகை, கல்வி, பார்வை போன்ற ஆக்கப்பெயர்கள், அவ்வாறு உருவானவையே. இவையும் மேற்கண்ட வினையடிப் பெயர்கள் மற்றும் வினைத்தொகைகளைப் போன்று முழுமையாகப் பெயரின் தன்மையையே பெற்றிருக்கின்றன.

    நல்ல கல்வி                                 – பெயரடையை ஏற்றது

    உயர்ந்த கல்வி                        – பெயரெச்சத்தை ஏற்றது

    நல்ல திறமான கல்வி         – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    நான் கற்ற கல்வி                   – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    கல்வியால் உயர்ந்தான்   – வேற்றுமை உருபை ஏற்றது

     

    1. தொழிற்பெயர்

    தொழிற்பெயரும் ஆக்கப்பெயரைப் போன்றே வினையடிகளுடன் ஒருசில விகுதிகள் சேர்வதன் மூலம் உருவாகிறது. தல், அல் போன்ற பல விகுதிகளைக் கொண்ட தொழிற்பெயர்கள் தமிழில் காணப்படுகின்றன. வாழ்தல், ஓடுதல், ஓடல் ஆகியன தொழிற்பெயர்கள் ஆகும். மேற்கண்ட வினையடிப் பெயர்கள், வினைத் தொகைகள், ஆக்கப்பெயர்கள் போன்றல்லாமல் இவை தமது வினைத்தன்மையை முழுதும் இழக்காமலேயே பெயர்களாக அமைந்துள்ளன. அதாவது வேற்றுமை உருபுகளை ஏற்கும் அதே வேளையில் தொடரமைப்பில் இவை பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்காமல் வினைச்சொற்களைப் போன்று வினையடை, வினையெச்சம், வினையெச்சத் தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றையே ஏற்று வருகின்றன (நுஃமான், 2013, ப.69).

    அவன் ஓடுதலை விரும்பினான்       – வேற்றுமை உருபை ஏற்றது

    நன்றாக ஓடுதல் (நல்லது)                      – வினையடையை ஏற்றது

    எழுந்து ஓடுதல் (நல்லது)                        –  வினையெச்சத்தை ஏற்றது

    மிகவும் நன்றாக ஓடுதல் (நல்லது)  – வினையெச்சத் தொடரை ஏற்றது

    அவன் சொல்லும்போது ஓடுதல் (நல்லது)  –  வினையெச்சக் கிளவியத்தை ஏற்றது

    மேலும், வினைகள் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவி வருவதைப் போன்று தொழிற்பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவி, வாக்கியத்தில் இடம் பெறுகின்றன.

    அவனோடு ஓடுதல் (நல்லது)           – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

    மைதானத்தில் ஓடுதல் (நல்லது)     – ஏழாம் வேற்றுமையோடு வந்தது

    மேற்கண்ட தொடர்களை ‘ஓடுதல் அவனோடு நல்லது’ என்றும் ‘ஓடுதல் மைதானத்தில் நல்லது’ என்றும் வேற்றுமை ஏற்ற பெயரின் இடத்தை மாற்றியமைத்தால் பொருள் முழுவதுமாக மாறிவிடும். வேற்றுமையை ஏற்ற பெயர்கள் வினையைத் தழுவுவன போன்று இங்குத் தொழிற்பெயர்களையே தழுவி வந்துள்ளமை இதனால் பெறப்படும். (விகுதி பெற்ற தொழிற்பெயர்கள், விகுதி பெறாத தொழிற்பெயர்கள் என்று தொழிற்பெயர்கள் இருவகைப்படும். இத்தலைப்பின்கீழ் ஆராயப்பட்டுள்ள தொழிற்பெயர்கள் விகுதிபெற்ற தொழிற்பெயர்கள் ஆகும்.  விகுதிபெறாத தொழிற்பெயர்கள் மேலும் இரண்டு வகையாகப் பகுக்கப்படும். அவை முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.  அவற்றுள் முதனிலைத் தொழிற்பெயர்கள் வினையடி என்ற தலைப்பின் கீழ் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.  முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள் முதனிலைத் தொழிற்பெயர்களைப் போன்றே வாக்கியத்தில் செயற்படும் தன்மையன.)

    1. வினையாலணையும் பெயர்

    காலம் (தெரிநிலை, குறிப்பு), திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வினைமுற்றே பெயராக அமையின் அது வினையாலணையும் பெயர் எனப்படும். பெயர்ச்சொற்களில் ஒன்றாக இதனைத் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது (தொல்காப்பியம். நூ.70).  இவை மூவிடங்களிலும் வரும் (நன்னூல், நூ. 286).

    செய்தேன் வந்தேன் – தன்மை இறந்தகால வினையாலணையும் பெயர்

    செய்கிறாய் வா         – முன்னிலை நிகழ்கால வினையாலணையும் பெயர்

    செய்வன வந்தன      – படர்க்கை எதிர்கால வினையாலணையும் பெயர்

    படர்க்கையில் ஐம்பாலுக்கும் உரிமையாக வரும்.

    ஓடுபவன் வந்தான்

    ஓடுபவள் வந்தாள்

    ஓடுபவர் வந்தனர்

    ஓடுவது வந்தது

    ஓடுவன வந்தன

    வினையாலணையும் பெயர்கள் காலம் காட்டும் தெரிநிலை வினையிலும் காலம் காட்டாத குறிப்பு வினையிலும் தோன்றும். வந்தவள், வருகிறவள், வருபவள் என்று முக்காலத்திலும் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள் வரும்.  நல்லவன், நல்லவள், நல்லவர், நல்லது, நல்லன என்று குறிப்பு வினையாலணையும் பெயர்கள் அமையும்.

    தொடரமைப்பில் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள் தொழிற்பெயர்களைப் போன்றே செயற்படுகின்றன. அதாவது, வினையடை, வினையெச்சம், வினையெச்சத்தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றையே ஏற்றுவருகின்றன.

    நன்றாகப்  படிப்பவன் (வருகிறான்) – வினையடையை ஏற்றது
    முனைந்து  படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சத்தை ஏற்றது
    எதையும் நன்றாகப் படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சத் தொடரை ஏற்றது
    நான் சொல்லும்போது படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சக் கிளவியத்தை ஏற்றது

     

    குறிப்பு வினையாலணையும் பெயர்கள், தொடரமைப்பில் வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப்பெயர்களைப் போன்று பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.  தெரிநிலை வினையாலணையும் பெயர்களுக்கும் குறிப்பு வினையாலணையும் பெயர்களுக்கும் இடையில் தொடரியல் நிலையில் இது முக்கியமான ஒரு வேறுபாடாக அமைகிறது.

    சிறந்த நல்லவன் (வந்தான்)                     – பெயரடையை ஏற்றது

    படித்த நல்லவன் (வந்தான்)                     – பெயரெச்சத்தை ஏற்றது

    மிகவும் சிறந்த நல்லவன் (வந்தான்) – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    நான் பார்த்த நல்லவன் (வந்தான்)      – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    தெரிநிலை மற்றும் குறிப்பு வினையாலணையும் பெயர்கள் ஆகிய இரண்டும் தொழிற்பெயர்களைப் போன்று வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வருகின்றன.

    தமிழைப் படித்தவன் (வருகிறான்)     – இரண்டாம் வேற்றுமையோடு வந்தது

    தமிழால் உயர்ந்தவன் (வருகிறான்)   – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

    மேற்கண்ட தொடர்களில் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள், வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வந்துள்ளன.

    பண்பால் நல்லவன் (வந்தான்)        – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

    கையில் வாளினன் (வந்தான்)         – ஏழாம் வேற்றுமையோடு வந்தது

    மேற்கண்ட தொடர்களில் குறிப்பு வினையாலணையும் பெயர்கள் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வந்துள்ளன.

    இவ்விருவகைப் பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வருவதோடு மட்டுமன்றி வேற்றுமை உருபுகளையும் ஏற்றுவரும் பெற்றியன.

    படித்தவனைப் பார்த்தேன்  –  தெரிநிலை வினையாலணையும் பெயர்

    வேற்றுமையை ஏற்றது

    நல்லவனைப் பார்த்தேன் –    குறிப்பு வினையாலணையும் பெயர்

    வேற்றுமையை ஏற்றது.

    முடிவுத் தொகுப்பு

    இக்கட்டுரையினால் அறியலாகும் முடிவுகளைக் கீழ்வருமாறு பட்டியலிடலாம்.

    • தமிழில் பெயராக்க வகைகளில் வினையிலிருந்து தோன்றும் பெயர்கள் என்ற வகையும் ஒன்றாகும்.
    • வினையிலிருந்து தோன்றும் பெயர்கள் ஐந்து திறத்தன. அவை வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப்பெயர், தொழிற்பெயர், வினையாலணையும் பெயர் என்பனவாகும்.
    • வேற்றுமை உருபுகளை ஏற்றல், இந்த ஐவகைப் பெயர்களுக்கும் பொதுப் பண்பாக உள்ளது.
    • வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப் பெயர், குறிப்பு வினையாலணையும் பெயர் ஆகிய நான்கும் தொடரியல் அமைப்பில் பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.
    • தொழிற்பெயர்களும் தெரிநிலை வினையாலணையும் பெயர்களும் தொடரியல் அமைப்பில் வினையடை, வினையெச்சம், வினையெச்சத் தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.
    • வினையாலணையும் பெயர் மட்டும் காலம் (தெரிநிலை வினை மட்டும்), திணை, பால், எண், இடம் ஆகியவற்றைப் பெற்றுப் பெயராக அமைகின்றது.
    • வினைகள் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவுவது போன்றே தொழிற் பெயர்களும் வினையாலணையும் பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வாக்கியங்களில் அமைகின்றன. இத்தன்மை வினையடிப் பெயர்கள், வினைத்தொகை மற்றும் ஆக்கப்பெயர்களுக்கு இல்லை.

     

    உசாத்துணை

    • அகத்தியலிங்கம், சு., முனைவர், (2011). தமிழ்மொழி அமைப்பியல், சிதம்பரம் : மெய்யப்பன் தமிழாய்வகம்
    • ஆறுமுக நாவலர், (2011). நன்னூல் காண்டிகையுரை, சொல்லதிகாரம், சென்னை : முல்லை நிலையம்
    • நுஃமான், எம். ஏ., (2013). அடிப்படைத் தமிழ் இலக்கணம், கொழும்பு : பூபாலசிங்கம் புத்தகசாலை
    • பொற்கோ, டாக்டர், (2011). இலக்கண உலகில் புதிய பார்வை, தொகுதி 1, சென்னை : நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்
    • சண்முகம், செ.வை., (2011). தொல்காப்பியத் தொடரியல், சென்னை  : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
    • தொல்காப்பியம், சேனாவரையர் உரை, (2012). சென்னை : சாரதா பதிப்பகம்

    ====================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் வினைப்பெயர்கள் ஒரு தொடரியல் ஆய்வு என்னும் தலைப்பில் அமைந்துள்ள இக்கட்டுரை, சொல்லாக்க அடிப்படை மற்றும் தொடர் அமைப்பு நோக்கில் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக வினை வடிவங்கள் பெயர்களாகச் செயல்படும் தன்மையைச் சுட்டிக் காட்டி, அச்சொற்கள் எவ்வாறு தொடர்களில் பயின்று வருகின்றன என்பதைச் சான்றுகளுடன் விளக்கிக் கூறுகிறது. பெயர்ச்சொற்கள் ஆக்கம் பெரும் தன்மையின் நான்கு பகுப்புகள், சொல்லாக்கம் சார்ந்த அடிப்படையில் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றான வினையிலிருந்து பெயராக்கம் என்பதன் அடிப்படையில் வினை வடிவங்களின் வகைகள், அவற்றின் மூலம் ஆக்கம் பெறும் பெயர்கள், அவை எவ்வாறு தொடர்களில் பயின்று வந்துள்ளன என்பது குறித்து மிகவும் தெளிவாகவும் படித்தவுடன் புரிந்துகொள்ளும் தன்மையிலும் மிக எளிய நடையில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்னும் உத்தி முறையில் ஆய்வாளர் தனது கட்டுரையை அமைத்துள்ளார். ஆய்வாளர் மேலும் இதுபோன்ற ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, தமிழ் ஆய்வுலகிற்கு நலம் பயக்கும். ஆய்வாளருக்கு வாழ்த்துகள்.

    ====================================================

    Share
  • (Peer Reviewed) தமிழன்பன் கவிதைகளின் வெளிப்பாட்டில் சமூகத்தின் நிலை

    -மூ.சிந்து,
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை,
    ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    மலுமிச்சம்பட்டி,
    கோயம்புத்தூர் – 641050.
    மின்னஞ்சல்-sindujasms@gmail.com

    *****

    இன்றைய காலகட்டத்தில் மனிதனின் இயக்க நிலையானது திரும்பிப் பார்க்க நேரமின்றி சுற்றிக் கொண்டிருக்கும் கடிகார முள்ளிற்கு இணையாக ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கும் நிலையினை உணரமுடிகிறது. வேகமான உலகத்திற்கேற்ப மனிதனும் தன்னுடைய செயல்களில் சுருக்கமும் தெளிவும் தேடும் நிலையையும், அதே நேரத்தில் இரசிக்கும் தன்மையுடனும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குள் கவிதைகளானது இயங்கிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

    படைப்பாளனின் மன உணர்வின்படி கவிதைகள் எழுதப்பட்டாலும், வாசிப்பாளன் ஏற்கும் மனநிலையில் மட்டுமே அக்கவிதையானது மதிப்பு பெறுகிறது. ஆகவே கவிதைகள் வரலாற்றில் புதுக்கவிதைக்கு என்று ஒரு தனிஇடம் உண்டு.

    காலச் சூழலுக்கு ஏற்ப மனிதன் தன்னை  மாற்றி இயக்கம் கொள்வதுபோல, இலக்கியங்களும் மாற்றம் கொண்ட நிலையினை இன்றைய காலகட்டங்களில் காணமுடிகிறது. சுருங்கக் கூறி விளங்க வைப்பதில் கவிதை இன்றைய சூழலில் முதன்மை பெற்று விளங்குவதைக் காணமுடிகிறது.

    கவிதையின் வளர்ச்சி நிலை

    நாளொரு வண்ணமுமாகப் படைப்பாளன் வளர்ந்து வரும் நிலையில் கவிதையானது வேகமாக வளர்ந்து வரும் நிலையினைக் காணமுடிகிறது. அத்தகைய சூழலில் படைப்பாளனின் படைப்புகளாக நாள்தோறும் புதுப்புது வடிவமாகக் கவிதையானது வடிவம் பெறும் நிலையினைக் கண்கூடாகக் காணலாம். கட்டுப்பாடுகளின்றி கவிதைகள் தோன்றும் இத்தகைய சூழல்களில் கவிதைகளின் தாக்கமானது வாசிப்பாளர்களிடையே பெரிய மாற்றத்தை உண்டாக்கியதையும், உண்டாக்குவதையும் காணமுடிகிறது.

    கவிதைகளின் வளர்ச்சி இன்றைய காலகட்டத்திற்கு முக்கிய ஒன்றாக அமைகிறது. படைப்பாளன் எவ்விதமான கட்டுபாடுகளின்றியும் தனித்து சுதந்தரமாகத் தனது பதிவுகளை வெளியிடும் சூழலும் இன்று அமைந்துள்ளதைக் காணலாம். விரிவாகக் கூறிச் செய்திகளை விளங்க வைப்பதைக் காட்டிலும் கவிதைகளின் வாயிலாக சமூகத்தில் எளிமையாகக் கூற வந்தக் கருத்தினைப் பதிவு செய்ய இயலுகிறது.

    சமூகத்தின் நிலை

    இன்றைய சமூகமானது பயனற்ற நிலையில் இயங்குவதும், மக்கள் தன்னிலை உணர்ந்து தனக்கேற்ற நிலையில் வாழாது, மற்றவர்கள் பார்வையில் தான் கொண்ட இடம், பெறும் மதிப்பு இவற்றை அடிப்படையாக் கொண்டு வாழும் சூழல் பெருகி வருவதையும் உணரமுடிகிறது. மனிதன் தன் வாழ்க்கையைப் பயனற்ற போக்கில் கழித்தும், வாழ்க்கையை இயல்பாகக் கொண்டாடாமல் செயற்கையாகக் கொண்டாடும் நிலையே இன்று பெருகி வருகிறது.

                     ‘கூட்டம் கூட்டம் கூட்டம்
                     கூடல் நகரில் கூட்டம்
                     கூட்டம் பார்க்கக் கூட்டம்
                     கூட்டம் கூட்டம்’…1

    என்ற கவிதையில் இன்றைய சமுதாயத்தில் மனித மனமானது எந்தச் செயலிலும் விரைவாக உட்புகுந்து அவற்றை இரசிப்பதில் எளிமையாக  நுழைந்து பயனுள்ளதா பயனற்றதா என்பதை எல்லாம் ஆராயாது இரசிக்கும் நிலையை மட்டுமே வெளிப்படையாகக் காணமுடிகிறது.

    மாணவர்களின் மனநிலை

    இன்றைய சூழலில் மாணவர்களின் மனமானது எந்த ஒரு செயலையும் எளிதாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்ளக் கூடியதாக விளங்குவதை அறியலாம். நகைச்சுவை என்பது எல்லா இடங்களிலும் தோன்றக் கூடியதில்லை. அவை சொல்லியும் வருவதில்லை. அவை தானாகத் தோன்றக் கூடியதாகும். தோன்றக்கூடிய இடமானது நல்லது, கெட்டது என்றப் பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் தோன்றி அருகில் இருப்பவர்களை ஆனந்தமயமாக வைக்க இந்த நகைச்சுவையானது முக்கியப் பங்கு பெறுகிறது.

                     ‘வாத்தியார் மனைவி
                       செத்ததற்கு
                       பள்ளி விடுமுறை
                       மாணவர் வருத்தம்
                       தலைமையாசிரியருக்கு
                       ஒரே ஒரு மனைவி மட்டும் தானா? 2

    என்ற கவிதையைக் கேட்டவுடன் அனைவரும் சிரிக்கும் நிலையில்  அந்த செய்திக்குப் பின்பு உள்ள சோகத்தை மறக்கக்கூடிய நிலையில் மாணவர்களின் நகைச்சுவையானது அமையப் பெறுவதும், இதில் மாணவர் பருவம் விளையாட்டுத்தனமாகவும், சந்தோசமாகவும் கழிக்கக் கூடிய ஒன்று என்பதையும் அப்பருவத்தில்  மாணவர்கள் குழுவாகவும் சந்தோசமாகவும் இன்ப துன்ப எல்லா நேரங்களிலும் ஒரே இயல்பில் தம் இனக்குழுவுடன் செயல்படுவதை உணரமுடிகிறது.

    அரசியல் நிலை

    இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவைக்கும், கேலி, கிண்டல் ஆகிய அனைத்துச் செயல்களுக்கும் முதன்மை இடம் கொடுத்து நிற்பது அரசியலாகும். மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் என்ற நிலை மாறி, மக்களையும், மக்களுடைய குடும்பத்தையும், மக்களின் வாக்குகளையும் தேர்ந்தெடுக்கும் நிலையாக மாறியுள்ளதைக் காணமுடிகிறது.

     அனைத்துப் பதவிகளுக்கும் கல்வி அடிப்படையாக விளங்கும். ஆனால் அரசியலில் மட்டும் எவ்விதமான அடிப்படைத் தகுதிகளுமின்றியும் எளிமையாக பதவியினைப் பெற முடியும் என்பதனை,

                      ‘அது வராவிட்டால் இது
    இது வராவிட்டால் அது
    எதுவும் வராவிட்டால் அரசியல்’ 3

    என்ற தமிழன்பனின் கவிதை வரிகளின் வாயிலாக இன்றைய அரசியல் நிலையைப் படம்பிடித்துக் கண்முன் காட்டுகிறது. மேலும், இன்று தேர்தல் நிலையினையும் அதில் பதிவாகும் வாக்குகள் இவை அனைத்தும் உண்மையா? என்பதனை யோசிக்க வைக்கிறது.

                     ‘ஓட்டுப் போட்டு விட்டு
    திரும்பிய பிணம் திடுக்கிட்டது
                       தனது கல்லறையில்
    வேறொரு பிணம் என்று’…….. 4

    மேற்கூறிய கவிதையின் வாயிலாக இன்றைய அரசியலில் வாக்களிக்கும் முறை என்பது நேர்மையற்ற நிலையில் இயங்கக் கூடியதாகவும், இறந்தவர்கள் கூட நமது அரசியலில் வாக்களிக்க முடியும் என்ற நிலையில் பொய்வாக்கு தேர்தலில் பதிவாகும்  நிலையினையும் இக்கவிதையானது படம்பிடித்துக் காட்டுகிறது.

    மனைவியின் ஏக்கம்

    மனைவியைப் பிரிந்து தன் குடும்பத்திற்காகக் கணவன் வேறு இடம் சென்று தொழில் மேற்கொள்ளும் நிலையில் கணவன் செல்லக்கூடிய இடம், தொழில், பிரிவு ஆகியவை மனைவிக்குத் துன்பம் தரக்கூடிய நிலையில், பிரிந்து செல்லும் கணவனை மீண்டும் பார்க்கும்வரை மனைவிக்குத் துன்பம் மிகும் என்ற நிலையில் மனைவியின் அன்பு வேண்டுகோளாக அமைவது

                      ‘வழியனுப்ப வந்த மனைவி
                       கண்ணீரோடு சொன்னாள்
                       பணம் அனுப்ப மறந்திடாதீங்க’5
    என்ற தமிழன்பனின் கவிதை வரிகளின் மூலம் இன்றைய காலகட்டத்தில் எல்லா நிகழ்வுக்கும் பணம் இன்றியமையாததாக அமைகிறது என்பதையும், பணம் இன்றி எச்செயலும் நடைபெறாது என்பதையும் உணர்த்துகின்றன.

    குடிமகனின் தவிப்பு

    பாரத திருநாட்டில் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாகும். ஆனால் இன்று நாட்டில் மதுவிற்கு அடிமையாகி மக்கள் குடிமக்களாக இருப்பதைக் காணமுடிகிறது.

     ‘அழுதான் நம்ம அப்பு
    காந்தி சிலையைக் கட்டிப் பிடிச்சு
    போதலையாம் தண்ணி மப்பு’6

    என்ற கவிதையின் வாயிலாக நாட்டு முன்னேற்றத்திற்குத் தூணாக விளங்க வேண்டிய இளைஞர்கள் குடிப்பழக்கத்தினால் தன்னிலை மறந்து நிற்கும் அவல நிலையினை வெளிப்படுத்துகிறது.

    முடிவுரை

    கவிதைகள் மனித வாழ்க்கையோடு ஒன்றியைந்ததாகவும், சமூகத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் எளிதில் புரியும் வகையில் மக்களிடையே கொண்டு சேர்க்கும் கருவியாகவும் சுருங்கக் கூறி விளங்க வைப்பதன் மூலமாக அனைவராலும் விரும்பி ஏற்கக்கூடிய ஒன்றாகவும் விளங்கும் நிலையினைக் காணமுடிகிறது.

    *****

    துணை நின்ற நூல்

    தமிழன்பனின் “என் வீட்டு எதிரே ஓர் எருக்கஞ் செடி” கவிதைத் தொகுப்பு.

    ***********************************************************************

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஆய்வாளர், புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரான தமிழன்பன் அவர்களின் கவிதைகளில் வெளிப்படும் சமூகநிலை குறித்து இக்கட்டுரையில் ஆய்ந்துள்ளார். மிக எளிமையாகவும் எதார்த்தமாகவும் தமிழகத்தின் சமூக நிலையைக் கவிஞர் தம் கவிதைகளில் பிரதிபலிப்பதை இக்கட்டுரை நமக்கு அறியத் தருகின்றது. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி ஆராய்ந்தால், தமிழன்பனின் “என் வீட்டு எதிரே ஓர் எருக்கஞ் செடி” கவிதைத் தொகுப்பில் வெளிப்படும் சமூகத்தின் நிலை என்றே தலைப்பு அமையலாம். தமிழன்பன் கவிதைகளின் வெளிப்பாட்டில் சமூகத்தின் நிலை எனச் சொல்வது பொருந்தாது. கவிஞரின் இதர கவிதைகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருந்தால் இக்கட்டுரை மேலும் வலிமை பெற்றிருக்கும்.

    பொதுவாக, படைப்பிலக்கியங்களின் மீது நிகழ்த்தப்பெறும் பெரும்பான்மையான ஆய்வுகள், உண்மையான ஆய்வுகளாக அமைவதில்லை. பல்வேறு ஆக்கங்களிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரிகளை எடுத்து, அவற்றை விளக்குவது, ஆய்வு ஆகாது. குறைந்த உழைப்பைக் கோருகிற, எளிதில் கட்டுரையை நிறைவு செய்கிற வாய்ப்பும் நோக்கமும், இவற்றில் உண்டு. ஆனால், இவற்றால் ஆய்வாளருக்குப் பெருமையோ, ஆய்வுலகிற்குப் புதிய கருத்துகளோ  கிடைப்பதில்லை. இவற்றை உணர்ந்து அசலான ஆய்வுக் கட்டுரைகளை எழுத, ஆய்வாளர்கள் முனைந்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    ***********************************************************************

    Share
  • (Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

    (Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம்

    (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

    முனைவர் ப. வேல்முருகன்

    தலைவர் & பேராசிரியர், தமிழ்த்துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

    திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: pdrvelmurugan@gmail.com; செல்பேசி    : 9488264166

    இர. ஆனந்தகுமார்

    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: anadhakumar001@gmail.com; கைப்பேசி            : 9488264166

    முன்னுரை

    மூலபாடம் என்பது ஒரு நூலின் மூல நூலாசிரியர் எழுதிய வடிவம் அல்லது அதை ஒத்த பாடம் ஆகும். இதை முன்னோர் சுத்த பாடம் என்று வழங்குவர். ஒரு நூல் சுவடிகளிலிருந்தும் காகிதப் பிரதிகளிலிருந்தும் பதிப்பு நூலாக வெளிவரும் பொழுது பல்வேறு மாற்றங்களைப் பெறுகின்றது. குறிப்பாகச் சுவடிகளிலும் தொடக்க காலக் காகிதப் பிரதிகளிலும் குறில் நெடில், மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆகியவை ஒன்று போலவே தோன்றுகின்றன. அதனால் ஒரு நூல் ஏட்டுப் படிகளாகவோ அச்சுப் படிகளாகவோ வெளிவரும் பொழுது பல திரிபுகளுடன் அமைகின்றது. சுவடிகள், காகிதப் பிரதிகள், அச்சுப் பதிப்புகள் முதலியவற்றில் காணப்படும் பாடங்களையும், பாட வேறுபாடுகளையும் தொகுத்து, உண்மையான பாடத்தைக் கண்டறிய முயல்வது மூலபாடத் திறனாய்வு ஆகும்.

    ஏவா வில்தன் (EVA WILDEN), நற்றிணைக்குரிய சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியவற்றைத் தொகுத்து, ஆராய்ந்து நற்றிணைக்குச் செம்பதிப்பைக் (2008) கொண்டுவந்துள்ளார். இவரது பதிப்பு, நற்றிணைக்கு இதுவரை வெளிவந்த பதிப்புகளில் காணப் பெறாத வகையில், ஏடுகளில் உள்ள பாடங்களைத் தொகுத்து, அறிவியல் அடிப்படையில் மூலபாடத்தைத் தெரிவுசெய்யும் விதமாக அமைகிறது. இச்செம்பதிப்பிலும் சில விடுபாடுகள் உள்ளன. அவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

    நற்றிணை 11-ஆவது பாடலில் விடுபட்டுள்ள பாடங்களையும், பாட வேறுபாடுகளையும் இலக்கணம், அகராதிப் பொருள், உரைகள், ஒப்புமைப் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டு மூலபாடத்தை உறுதிப்படுத்துவது இந்த ஆய்வுக் கட்டுரையின் கருதுகோளாக அமைகிறது. இதில் மூலபாட ஆய்வு அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.

    நற்றிணைக்குக் கிடைத்துள்ள சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியவை ஆய்வின் கருதுகோளை நிறுவுவதற்கான முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. மேலும்,

    S.M. Katre – Introduction to Indian Textual Criticism, அ.விநாயகமூர்த்தி – மூலபாடஆய்வியல் (1978), த.கோ.பரமசிவம்(ப.ஆ.) – சுவடிப் பதிப்பு நெறிமுறைகள் (1989), வெ.பழனியப்பன் – தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் (1990),மூ. இராமகிருட்டிணன் – பிரதிபேத ஆராய்ச்சி, வெ. பிரகாஷ் – பாட ஆய்வியல்: புறநானூறு பாடம், வடிவம் குறித்த ஆய்வு (ஆய்வேடு, 2012), ம.சா.அறிவுடைநம்பி – சுவடி ஆய்வு நெறிமுறைகள்(2013),Eva Maria Wilden – Studies in manuscript Cultures (2014), வெ. பிரகாஷ் – பாட ஆய்வியல் கையேடு (2014) முதலியோர்களின் நூல்கள், துணைமை ஆதாரங்களாக அமைகின்றன.

    நற்றிணை 11-ஆவது செய்யுள்

    ஏவா வில்தன் பதிப்பு :       

    “பெய்யாது வைகிய கோதை போல

    மெய்சாயி னையவர் செய்குறி பிழைப்ப

    வுள்ளி நொதுமலர் நேர்புரை தெள்ளிதின்

    வாரா ரென்னும் புலவி யுட்கொள

    லொழிக மாளநின் னெஞ்சத் தானே

    புணரி பொருத பூமண லடைகரை

    யாழி மருங்கி னலவ னோம்பி

    வலவன் வள்பாய்ந் தூர

    நிலவு விரிந்தன்றாற் கான லானே”.

    மூலபாடத்தைத் தெரிவு செய்வதற்குப் பாடலின் சூழல், பொருண்மை போன்றவை துணை நிற்கும். அவ்வகையில் நற்றிணை 11-ஆவது பாடலுக்கான சூழல், பொருள் விளக்கம்.

    கூற்று                         –           தோழி கூற்று (தோழி, தலைவிக்குச் சொல்லியது)

    துறை                          –

    காப்பு மிகுதிக்கண் இடையீடு பட்டு ஆற்றாளாய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

    துறை விளக்கம் –

    காவல் மிகுதியாலே தலைவனைக் தலைவனைக் கூடப்பெறாமல் ஆற்றாது வருந்திய தலைவியைத் தோழி நோக்கி நீ வருந்தாதேகொள், நிலவு விரிந்ததனால் அவர் இன்னே வருவரெனக் கூறுவோள் போன்று, காவல் மிகுதியால் இரவுக்குறி பிறழ்ந்ததும், அதனாலே தலைவி படுந்துன்பமும் சிறைப்புறத்திருந்த தலைவன் கேட்டு வரைவொடு புகுமாறு கூறுவது (நாரா.).

    செய்யுள் பொருள் விளக்கம்

    அவர் செய்த குறி இடையீடுபட்டு தவறுபட்டதனால், சூடாது கிடந்த பூமாலையைப் போல உடல் இளைத்தனை. அயலவர் பேசுகின்ற பழிச்சொல்லை நினைத்து, தெளிவாக வராமாட்டார் என்கின்ற ஐயத்தை உன் மனத்தின்கண் நினைக்காது விட்டொழிவாயாக. அலைகள் வந்து மோதியதால் நுண்மணலாக உள்ள கடற்கரையில், நண்டுகளின் மேல் தேர்ச்சக்கரங்கள் படாதவாறு பாதுகாத்து, தேர்ப்பாகன் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்துச் செலுத்த, கடற்கரைச் சோலையிலே நிலவு விரிந்தது. சுருங்கக் கூறின்,

    ‘அலவனுக்குத் (நண்டு) தீங்கு செய்யாது தேர் செலுத்த வேண்டும் என்று உரைக்கும் தலைவன், நீ பழிச்சொல்லால் வருந்தாதபடி வரைந்து இல்லறம் நிகழ்த்துவான்’ என்றவாறு.

    செய்யுளில் உள்ள பாடவேறுபாடுகள்

                                                              (அட்டவணை)

     

    ஏவா வில்தன் கொண்ட பாடம் ஏவா வில்தன் கொண்ட பாடங்களும் அவை இடம்பெற்ற பிரதிகளும் ஏவா வில்தன் கொண்ட பாடங்களிலிருந்து வேறுபடும் பாடங்களும் அவை இடம்பெற்ற பிரதிகளும்
    பெய்யாது பெய்யாது- G3, EN, VP, ER, EV, ET பெய்யாத       – C1, G1, G2

    பொய்யாது    – ETv

    நொதுமலர் நேர்புரை நொதுமலர் நேர்புரை- VP, ER, EV நொதுமல் ஏர்புரை- C1, C2, G1, G2,G3, EN

    நொதுமலர் ஏர்புரை  – ET

    நொதுமல் ஓருரை      – ETv

    யுட்கொளல் யுட்கொளல் –

    C1, C2, G1, G2,G3, EN, VP, ER, EV, ET

    யுட்கொளாஅல்- ETv
    நிலவுவிரிந்தன்றால் நிலவுவிரிந்தன்றால்- G1, ER, EV நிலவுவிரிந்தன்றால் – G2, EN, ET, VP

    நிலவுவிரிந்தன்றே   – ETv

    குறிப்பு

    C1                 உ.வே.சா. நூலகப் பிரதி (ஓலை)

    C2                உ.வே.சா. நூலகப் பிரதி (காகிதம்)

    G1, G2, G3 அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப்பிரதி (காகிதம்)

    VP                எஸ். வையாபுரிப்பிள்ளை

    EVA             ஏவா.    ஏவா வில்தன்

    EN               அ. நாராயணசாமி ஐயர்

    ER                மர்ரே. எஸ்.ராஜம்

    ET                 ஔவை சு. துரைசாமிப் பிள்ளை

    EV                 ஹச். வேங்கடராமன்

    ETv               ஔவை சு. துரைசாமிப் பிள்ளைப் பாடவேறுபாடு

     

    ஏவா வில்தன் பதிப்பில் விடுபட்ட பாடம்:’வளவன்‘

    அ) வலவன் – வளவன்

    ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில்  ‘வலவன்வள்பாய்ந்தூர’ (11:8) என்ற அடியில் இடம்பெறும் ‘வலவன்’ என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில்‘வளவன்’ என்ற பாடம் உள்ளது. இப்பிரதிகளில் உள்ள பிற பாடவேறுபாடுகளைச் (காண்க – அட்டவணை) சுட்டிக் காட்டும் ஏவா வில்தன்,C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடவேறுபாட்டினைப் பதிவு செய்யாது விட்டுள்ளார்.

    மேலும் செம்பதிப்பு முன்னுரையில் உச்சரிப்பு வேறுபாடுகள் எனும் தலைப்பில் ‘‘ஒள / அவ், ள்/ல, ர/ற கெளவை / கவ்வை ஆகியவை பொருள் மாறுபாடு செய்யாவிடினும் வட்டார (அல்லது ஏடெழுதும் தனிப்பட்ட ஒருவரின்) வழக்காறுகளைத் தெரிந்துகொள்ள உதவுமாதலால் இவை பதிப்புரையில் குறிப்பிடப்படுகின்றன” (ப.34) என்று பதிவு செய்துள்ளார். ஒலி வேறுபாட்டு அடிப்படையில் பாடல்களில் (36:8., 128:11., 295) உள்ள ஒலி வேறுபாட்டுச் சொற்களைச் (கெளவை / கவ்வை.,ஆகின்றியா / ஆகின்ரியா., அவ்வை / ஒளவை) சுட்டிக் காட்டும் இவர், ‘வலவன்’, ‘வளவன்’ என்ற பாடங்களிலுள்ள லகர ளகர ஒலி வேறுபாட்டினைப் பாடவேறுபாட்டுப் பகுதியில் சுட்டிக்காட்டவில்லை. இவ்வாறான முரண்பாடுகள், நற்றிணைச் செம்பதிப்பு என்ற கருத்தாக்கத்தைக் கேள்விக்குள்ளாகின்றன.

    (குறிப்பு: ஒப்புநோக்கி ஆய, பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம்(EFEO), நற்றிணைக்குச் சுவடி, காகிதப் பிரதிகளைத் தந்துதவியது.)

    நற்றிணைச் செம்பதிப்பு 11-ஆவது பாடலில் உள்ள ‘வலவன்’ என்ற பாடத்திற்கும், C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்திற்கும் பொருள் மாறுபாடுகள் உண்டு.

    ‘வலவன்’என்ற சொல் ‘தேர்ப்பாகன்’ என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் ஏழு இடங்களில் (நற்றிணை, 11:8, 78:10, குறுந்தொகை, 311:2, அகநானூறு, 20:15, 104:3, 190:12, 340:4, 354:8, 400:12, புறநானூறு, 27:8) வந்துள்ளது. ‘வளவன் ’என்ற சொல் சோழமன்னன் கிள்ளிவளவன் என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் ஏழு இடங்களில்  (புறநானூறு, 34:16, 60:10-11, 174:14-15, 226:6, 227:9, 393:24, 397:22-23) வந்துள்ளதைக் காண முடிகிறது.

    இருப்பினும் நற்றிணை 11-ஆவது பாடலில் இடம்பெற்ற ‘வலவன் வள்பாய்ந்தூர’ என்ற பாடலடிக்கு உரையாசிரியர்கள் ‘தேர்ப்பாகன் (குதிரையின்) கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்து செலுத்த’ என உரை எழுதியுள்ளனர். ஆனால் ஏவா வில்தனின் செம்பதிப்பில் விடுபட்ட பாடமான ‘வளவன்’ என்ற பாடத்தினை உரையாசிரியர்கள் எவரும் உரையிலும் பாடவேறுபாட்டுப் பகுதியிலும் குறிப்பிடவில்லை.

    காரணம் பாடலின் பொருண்மையை நோக்குகையில் குதிரையின் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்துச் செலுத்துகின்ற தேர்ப்பாகனைக் குறிக்கும் பாடமாக ‘வலவன்’ என்பது பொருத்தமாக உள்ளது. இவ்வாறன்றி C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்தைப் பின்பற்றி ‘வளவன் வள்பாய்ந்தூர’ எனப் பதிப்பித்து உரை எழுதினால்,  ‘சோழ மன்னனான கிள்ளிவளவன் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்து செலுத்த’ என்று உரைகொள்ள நேரிடும். ஆகவே பாடலின் பொருண்மைக்குத் தேர்ப்பாகனைக் குறித்து வரும் ‘வலவன்’ என்ற பாடமே ஏற்புடையதாகும்.

    வலவன் / வளவன் என்ற இருபாடவேறுபாடுகள் பிரதிகளில் காணப்படுகின்றன. அப்பிரதிகளில் ல/ள ஒலி வேறுபாடு பொருள் வேறுபாட்டுத் தன்மையில் அமைந்திருப்பினும் C1, G1, G2 ஆகிய பிரதிகளை எழுதினோர், அவ்வொலி வேறுபாட்டினை உணராது ‘வளவன்’ என்ற பாடத்தைப் பின்பற்றியுள்ளனர். எனவே இலக்கண அடிப்படையில் ஒலி வேறுபாடு உணர்த்தும் பொருண்மையில் ‘வலவன்’ என்ற பாடம் ஏற்புடையது.

    ஏவா வில்தன் பதிப்பில் விடுபட்ட பாடவேறுபாடு

    ஆ) உலோச்சனார் – கயமனார்

    பாடலுக்குள் இருக்கின்ற பாடவேறுபாடுகள் மட்டுமின்றி புலவர் பெயர்களில் காணப்படும் பாடவேறுபாடுகளையும் ஏவா வில்தன் தன்னுடைய பதிப்பில் குறிப்பிடுகிறார். சான்றாக

    பாலத்தனார் (G1+2: பாலாத்தனார்) (52),

    பெருங்கவுசிகனார் (EN, ER: கெளசிகனார், ET: கோசிகனார்) (139)

    ஆனால் இவர் ஒரு பாடலுக்குரிய புலவர் பெயர் முழுவதும் மாறுபடும் இடங்களைப் பாடவேறுபாட்டுப் பகுதியில் குறிப்பிடாமல் விட்டுள்ளார். காட்டாக, ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளையின் நற்றிணைப் பதிப்பில் “இங்கே உலோச்சனார் என்ற பெயரோடு கயமனார் என்ற பெயரும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது” (ப.56) என அடிக்குறிப்பில் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

    துரைசாமிப்பிள்ளை (1966) பாடவேறுபாட்டுப் பகுதியில் இடம்பெற்ற செய்தி

    மேலும் சில பாடல்களில் புலவர்களின் பெயர்கள் முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

    நற்றிணைச் சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியனவற்றில் நல்விளக்கனார் (85), சல்லியங்குமரனார் (141), பராயனார் (155) ஆகிய புலவர்களின் பெயர்கள் எவ்வித மாறுபாடுகளுமின்றி காணப்படுகின்றன. ஆனால் துரைசாமிப் பிள்ளையின் நற்றிணைப் பதிப்பில் அப்புலவர்களின் பெயர்கள் முறையே நல்விளக்குன்றனார் (85), அரிசிலங்குமரனார் (141), பாரதாயனார் (155) என்று முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

    மேலும் நற்றிணை 64-ஆவது பாடலை உலோச்சனார் பாடியுள்ளதாக அனைத்துப் பிரதிகளிலும் காணப்படுகிறது.  ஆனால் துரைசாமிப் பிள்ளை, 64-ஆவது பாடலை உரோடகத்தனார் பாடியதாகவே குறிப்பிட்டு, குறிப்புப் பகுதியில் ‘‘ஏடுகளில் உரோடகத்தனார் பெயரே உள்ளது. முன்பாட்டை எழுதிய நினைவால் இப்பாட்டையும் உலோச்சனார் பாடியதாக ஏடெழுதினோர் தவறியிருக்கலாம்” (ப.254) என்று குறிப்பிடுகிறார். ஆகவே ஏவா வில்தன், புலவர்களின் பெயர்கள் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுவதை தமது நற்றிணைச் செம்பதிப்பில் குறிப்பிடவில்லை. ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையின் பாடலுக்குள் காணப்படும் பாடவேறுபாடுகள், புலவர் பெயர்களுக்குள் உள்ள பாடவேறுபாடுகள் ஆகியனவற்றைக் குறிப்பிடும் ஏவா வில்தன், இப்புலவர் பெயர் மாறுபாட்டைச் சுட்டிக் காட்டாதது, நற்றிணையின் செம்பதிப்பு முறையியலைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

    நற்றிணை 11- ஆவது பாடலில் மூலபாடத் தெரிவுகள்

    அ) பெய்யாது – பெய்யாத–பொய்யாது

    ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் ‘பெய்யாது வைகிய கோதை போல’ (11:1) என்ற பாடலடியில் உள்ள ‘பெய்யாது’ என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘பெய்யாத’ என்ற பாடம் உள்ளது. துரைசாமிப்பிள்ளை பதிப்பில் காணப்படும் பாடவேறுபாட்டுப் (ETv) பகுதியில் ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாடு காணப்படுகிறது.

    சங்க இலக்கியத்தில் ‘பெய்யாது’ என்ற பாடம் ‘சூடாது’, ‘பெய்யாது’ ஆகிய பொருள்களில் நான்கு இடங்களில் (நற்றிணை 11:1, 365:6. புறநானூறு.105:4, 266:1) வந்துள்ளது. ‘பெய்யாத’ என்ற பாடம் சங்க இலக்கியத்தில் இல்லை. துரைசாமிப் பிள்ளை பதிப்பு, பாடவேறுபாட்டுப் பகுதியில் காணப்படும் ‘பொய்யாது’ என்பது சங்க இலக்கியத்தில் ‘பொய்த்துப் போதல்’, ‘பொய்’, ‘உண்மைக்குப் புறம்பானது’ என்ற பொருளில் நான்கு (நற்றிணை 38:1, 2. ஐங்குறுநூறு. 66:1, 80:1) இடங்களில் வந்துள்ளது.

    ‘பெய்யாது வைகிய கோதை போல’ (11:1) என்ற பாடலடிக்கு உரையாசிரியர்கள் ‘சூடாது கிடந்த பூமாலையைப் போல’ என்று உரை தருகின்றனர். ஆனால் பெய்யாது என்ற பாடத்திற்கு மாற்றாக C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘பெய்யாத’ என்ற பாடம் உள்ளது. இப்பாடத்தை அடிப்படையாகக் கொண்டு ‘பெய்யாத வைகிய கோதை போல’ என்ற பாடலடிக்கு உரைகொண்டால் ‘சூடாத கிடந்த பூமாலை’ என்று பொருள்படும். ‘பெய்யாத’ என்ற பாடம், சங்க இலக்கியத்தில் இல்லை. இதனடிப்படையில் நோக்கினோமானால் உரையாசிரியர்கள் இதை மூலபாடமாகத் தெரிந்தெடுக்கவில்லை என்பதை உய்த்துணர முடிகிறது.

    துரைசாமிப் பிள்ளை பதிப்பின் பாடவேறுபாட்டுப் பகுதியில் ‘பெய்யாது’ என்ற பாடத்திற்கு ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாடு காணப்படுகிறது. இப்பாடவேறுபாட்டின் அடிப்படையில் ‘பொய்யாது வைகிய கோதை போல’ என்று பதிப்பு அமையும். இவ்விடத்து பொய்யாது என்பதற்கு ‘பொய்’ ‘பொய்த்துப்போதல்’ ஆகிய பொருள்கள் உள்ளன. இப்பொருள்களின் அடிப்படையில் ‘பொய்யாது வைகிய கோதை போல’ என்ற பாடலடிக்கு, ‘பொய்கூறாது கிடந்த பூமாலையைப் போல’ என்று உரைகொள்ள நேரிடும். இவ்வுரை பாடலின் பொருண்மைக்குப் பொருத்தமின்றி அமைவதால் ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாட்டை நீக்கி, G3, EN, VP, ER, EV, ET ஆகிய பிரதிகளில் உள்ள பாடமான ‘பெய்யாது’ என்பது பாடலின் பொருண்மைக்கு (‘சூடாது கிடந்த பூமாலையைப் போல’) ஏற்புடையதாக உள்ளதால் உரையாசிரியர்கள் இதனை மூலபாடமாகத் தெரிவு செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    ஆ) நொதுமல் ஏர்புரை – நொதுமலர் ஏர்புரை – நொதுமலர் நேர்புரை – நொதுமல் ஓருரை

    C1, C2, G1, G2,G3, EN ஆகிய பிரதிகளில் ‘நொதுமல் ஏர்புரை’ என்ற பாடமும் ET பிரதியில் ‘நொதுமலர் ஏர்புரை’ என்ற பாடமும் அதே பிரதியில் ‘நொதுமல் ஓருரை’ (ETv) என்ற பாடவேறுபாடும் இருக்க, ஏவா வில்தன் VP, ER, EV ஆகிய பிரதிகளில் உள்ள ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடத்தையே மூலபாடமாகத் தெரிவு செய்துள்ளார். இருப்பினும் அவர் அப்பாடத்தை உறுதிப்படுத்துவதில் உள்ள சிக்கலைக் குறிப்பிடுகையில் ‘‘here the ER reading looks very much like an conjecture supposed to make sence of a number of unsatisfactory variants. As so Aften, we are not in a position to find out whether there were sources supporting such a reading’’ (ராஜம் பதிப்பில் காணப்படும் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடம்   திருப்தியற்ற பல மாறுபாடுகளைக் (நொதுமல் ஏர்புரை – நொதுமலர் ஏர்புரை – நொதுமலர் நேர்புரை – நொதுமல் ஓருரை) கொண்டுள்ளது.  ராஜம் பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடம் ‘நொதுமலர் நேர்புரை’ என்பது, அனுமானத்தால் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதை   உறுதிப்படுத்த ஆதாரங்கள் உள்ளனவா என்பதை ஆராயும் நிலையில் தான் இல்லை) என்று 11-ஆவது பாடலின் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார் ஏவா வில்தன்.

    இருப்பினும் இப்பாடங்களுக்கு யாப்பு முறைகளின்படியும், உலோச்சனாரின் நற்றிணைப் பாடல்களைத் தவிர ஏனைய பாடல்களை ஆராய்வதன் அடிப்படையிலும், உரையாசிரியர்கள் தரும் பொருண்மைகளின் அடிப்படையிலும் சரியான பாடத்தைத் தேர்வு செய்ய இயலும்.

    யாப்பு அடிப்படையில் -‘நொதுமல் ஏர்புரை”நொதுமலர் நேர்புரை‘

    உரையாசிரியர்கள் ‘நொதுமல் ஏர்புரை’, ‘நொதுமலர் நேர்புரை’ ஆகிய பாடங்களுக்குத் தரும் பொருண்மைகளின் அடிப்படையில் எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் சொல் அடிப்படையிலும் யாப்பு அடிப்படையிலும் வேறுபாடுகள் உள.

    •         நொது / மல்                ஏர் / புரை           மா முன் நேர் = நேரொன்றாசிரியத் தளை

                       நிரை   / நேர்              நேர் / நிரை

    • அ. நொது / மலர்             ஏர் / புரை            விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை

                       நிரை     நிரை           நேர் / நிரை

    • ஆ. நொது / மலர்            நேர் / புரை

                       நிரை   நிரை             நேர் / நிரை         விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை

    யாப்பு முறைப்படி 1)‘நொதுமல் ஏர்புரை’ என்ற பாடத்தைப் பிரித்தால் நேரொன்றாசிரியத் தளை வருகிறது. அதே நேரத்தில் 2) அ.‘நொதுமலர் ஏர்புரை’ மற்றும் ஆ.‘நொதுமலர் நேர்புரை’ ஆகிய பாடங்களைப் பிரித்தால் இயற்சீர் வெண்டளை வருகிறது. ஆகவே ஆசிரியப்பாவில் இயற்சீர் வெண்டளையும் விரவி வரலாம் என்பதால் பாடத்தைத் தெரிவு செய்வதில் மேலும் சிக்கல் ஏற்படுகிறது.

    அகநானூற்று உலோச்சனார் பாடலில் -‘நொதுமலர்‘

    ஒரு புலவர் பாடிய பாடலில் பாடவேறுபாடுகள் இருப்பின், அப்புலவர் பாடிய ஏனைய பாடல்களை ஆராய்ந்து, அதில் உள்ள பாடங்களைக் கொண்டு மூலபாடத்தை உறுதிப்படுத்தலாம். அவ்வகையில் உலோச்சனாரின் பாடல்கள், நற்றிணையில் மட்டுமின்றி குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றினைக் கொண்டு ஒப்பிடுகையில் அகநானூற்றில் ‘நொதுமலர் போல பிரியின் கதுமென’(300:11) என்ற அடியில் ‘நொதுமலர்’ என்ற பாடம் வந்துள்ளது.

    C2 (சுவடி)

    C3(சுவடி)

    C5(காகிதம்)

    C6(காகிதம்)

     

    C9 (காகிதம்)

    (C2, C3, C5, C6, C9 – உ.வே.சா. நூல் நிலையப் பிரதிகள்)

    ராஜகோபாலார்யன் (1933)

    வையாபுரிப்பிள்ளை (1940)

    பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார் (வெளியீடு, 1946)

    (குறிப்பு: ஒப்பு நோக்கி ஆய, பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம்(EFEO), அகநானூற்றுக்குச் சுவடி, காகிதப் பிரதிகளைத் தந்துதவியது.)

    மேற்குறிப்பிட்ட உலோச்சனார் பாடிய அகநானூற்றுப் பாடலைச் சுவடிகள் (C2,C3), காகிதப் பிரதிகள் (C5, C6, C9) பதிப்பு நூல்கள் (ராஜகோபாலார்யன், பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசி விசுவநாதன் செட்டியார், வையாபுரிப்பிள்ளை) ஆகியனவற்றைக் கொண்டு ஆராய்கையில் ‘நொதுமலர்’ என்ற பாடம் உள்ளதை அறிய முடிகிறது. மேலும் இப்பாடத்திற்கு வேறான பாடவேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதைத் தரவுகளின் வழியாக உறுதியிட முடிகிறது. ஆகவே உலோச்சனார் நற்றிணையிலும் ‘நொதுமலர்’ என்ற பாடத்தைத்தான் கையாண்டிருப்பார் என்பதைத் தரவுகளின் வழியாக ஊகிக்க முடிகிறது.

    உரையாசிரியர்கள் தரும் பொருள் –’ஏர்புரை‘, ‘நேர்புரை‘

    வையாபுரிப்பிள்ளை (VP) பதிப்பில் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடம் முதன் முதலில் காணப்படுகிறது. அப்பாடமே மர்ரே ராஜத்தின் (ER) சந்தி பிரித்த நற்றிணைப் பதிப்பிலும் உள்ளது. இவ்விரு பதிப்புகளும் உரையில்லாத மூலப் பதிப்புகள். அடுத்தடுத்த பதிப்புகளாக (உரையுடன்) வந்துள்ள வேங்கடராமன் (EV) மற்றும் ஏவா வில்தன் (EVA) ஆகியோர் தமது பதிப்புகளில் மேற்கண்ட பாடத்தையே மூலமாகக் கொண்டு ‘அயலவர் பழிச்சொல்’ என்று உரை கொள்கின்றனர்.

    பொ.வே.சோமசுந்தரனாரின் (நாராயணசாமி ஐயர் உரையுடன், இலக்கணக் குறிப்பும் ஆய்வுரையும் கொண்ட நற்றிணை உரை) இலக்கண ஆய்வுரையில் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடத்தைப் பாடவேறுபாடாகக் கொண்டு ‘அயலோர் வாய் நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்று குறிப்புப் பகுதியில் குறிப்பிடுகிறார். அவற்றைக் கொண்டு நோக்குகையில் ‘நேர்புரை’ என்பதற்கு ‘நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்ற பொருள் கிடைக்கிறது. இப்பொருள் வேங்கடராமன் பதிப்பிலும் ஏவா வில்தனின் பதிப்பிலும் இல்லை. ஆகவே பாடலின் பொருண்மைக்கு ‘நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்ற பொருளைத் தருகின்ற ‘நேர்புரை’ என்ற பாடத்தைக் கொள்ளாமல், ‘எழுதலையுடைய பழிச்சொல்’ (EN), ‘எடுத்துரைக்கும் அலருரை’ (ET) ஆகிய பொருள்களைத் தருகின்ற ‘ஏர்புரை’ என்ற பாடத்தையே ஏற்புடைய பாடமாகக் கொள்ளலாம்.

    முடிவுகள்

    • ஏவா வில்தன், நற்றிணைக்குக் கிடைத்துள்ள சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள், தொல்காப்பிய உரை மேற்கோளில் காணப்படும் நற்றிணைப் பாடல்கள் ஆகியனவற்றைத் தொகுத்து, பாடவேறுபாடுகளைப் பட்டியலிட்டு ஆராய்ந்து, நற்றிணைக்குச் செம்பதிப்பைக் கொண்டுவந்துள்ளார். இதுவரை வந்த நற்றிணைப் பதிப்புகளில் காணப்பெறாத வகையில், மூலபாடத்தை நிறுவும் முயற்சியை இவரது பதிப்பில் காணலாம். மேலும் நற்றிணைக்குக் கிடைத்துள்ள பிரதிகளில் காணப்படும் பாடங்களைத் தொகுத்துப் பட்டியலிடும் அதே நேரத்தில் பாடலுக்குள் காணப்படும் பாடங்களையும் பாடல் எழுதிய புலவர் பெயர்களில் காணப்படும் மாறுபாடுகளையும் குறிப்பிடாமல் விட்டுள்ளார்.
    • ‘வலவன்’ (11:8) என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘வளவன்’ என்ற பாடம் உள்ளது. இப்பிரதிகளில் உள்ள பிற பாடவேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் ஏவா வில்தன், C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்தினைச் சுட்டிக் காட்டவில்லை. அதே போல உலோச்சனார் என்ற பெயரோடு கயமனார் என்ற பெயரும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது என்ற துரைசாமிப் பிள்ளையின் அடிகுறிப்புச் செய்தியும் இவரது பதிப்பில் விடுபட்டுள்ளது.
    • நற்றிணை 11- ஆவது பாடலில் ‘பெய்யாது’(11:1) என்ற பாடத்திற்கு  ‘பெய்யாத’ , ‘பொய்யாது’ ஆகிய பாடவேறுபாடுகள் உள்ளன. அப்பாடவேறுபாடுகளுள் பாடலின் பொருண்மைக்கு ‘பெய்யாது’ என்ற பாடமே மிக அணுக்கமாக உள்ளது.
    • உலோச்சனாரின் பாடல்கள், நற்றிணையில் மட்டுமின்றி குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றினைக் கொண்டு ஒப்பிடுகையில் ‘நொதுமலர்’ என்ற பாடம் அகநானூற்றில் மட்டும் வந்துள்ளதால் நற்றிணையிலும் ‘நொதுமலர்’ என்ற பாடத்தைத் தான் உலோச்சனார் கையாண்டிருப்பார் என்பதைத் தரவுகளின் வழியாக அறிய முடிகிறது.
    • ‘நேர்புரை’, ‘ஏர்புரை’ ஆகிய பாடங்களில் உரையாசிரியர்கள் பொருள்கொள்ளும் அடிப்படையில் நோக்கும் பொழுது ‘ஏர்புரை’ என்ற பாடம் பொருத்தமுள்ளதாகத் தோன்றுகிறது.
    • ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் விடுபட்ட பாடங்களும் மூலபாடத் தெரிவில் இடர்ப்பாடுகளும் காணப்படுவதால் அவரது நற்றிணைச் செம்பதிப்பு என்பது கேள்விக்குள்ளதாக அமைகிறது. ஆக, ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் (2008) உள்ள ஏனைய பாடல்களையும் மூலபாடவியல், பதிப்பியல் நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தினால் மேலும் சில விடுபட்ட பாடங்களும் மூலபாடத் தெரிவில் உள்ள மாறுபாடுகளும் தெரிய வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆகவே ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பினை மீட்டுருவாக்கம் செய்தால், நற்றிணைச் செம்பதிப்பு என்பது சீர்மை பெறும்.

    துணைநூற்பட்டியல்

    • அறிவுடைநம்பி. ம.சா., சுவடி ஆய்வு நெறிமுறைகள், கருமணி பதிப்பகம், 27, சுப்பிரமணியர் கோயில் குறுக்குத்தெரு, இலாசுப்பேட்டை, புதுச்சேரி. சனவரி 2013.
    • இராமகிருட்டிணன். மூ., பிரதிபேத ஆராய்ச்சி, வேங்கடாசலபுரம், (வழி) தேனி, மதுரை. (ஆண்டு குறிப்பிடவில்லை).
    • ஏவா வில்தன் (ப.ஆ.)., நற்றிணை, சங்க இலக்கியங்கள் – செம்பதிப்பு வரிசை – 1.1., பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம் (EFEO) – 2008, தமிழ்மண்பதிப்பகம்.
    • வேங்கடசாமிநாட்டார். திரு. நாவலர் ந.மு. & வேங்கடாசலம் பிள்ளை. கரந்தைக் கவியரசு R. (பதவுரை, விளக்கவுரை), எட்டுத் தொகையுள் ஒன்றான அகநானூறு – மணிமிடை பவளம் (பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன்செட்டியார் அவர்களால் வெளியிடப்பெற்றது) திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், திருநெல்வேலி.ஜனவரி1946.
    • சுப்பிரமணியன். ச.வே., தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108. மார்ச்.2013.
    • சோமசுந்தரனார். பெருமழைப்புலவர் பொ.வே., (இலக்கணக்குறிப்பும் ஆய்வுரையும்) –           எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை நானூறு (பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் எழுதிய உரையும் விளக்கமும்), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், திருநெல்வேலி – 6, நான்காம் பதிப்பு1967.
    • துரைசாமிப்பிள்ளை.சு (உ.ஆ) ., நற்றிணை, அருணா பப்ளிகேஷன்ஸ், உஸ்மான் ரோடு, தியாகராய நகரம், சென்னை – நவம்பர்.1966& 1968.
    • நாராயணசாமி ஐயர். பின்னத்தூர் அ (உரையாசிரியர்)., எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை, சைவ வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னை.1915.
    • பரமசிவம். த.கோ.(பதிப்பாசிரியர்)., சுவடிப்பதிப்பு நெறிமுறைகள் (கருத்தரங்கக்கட்டுரைகள்), தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.மார்ச்1989.
    • பாலசுப்பிரமணியன்.கு.வெ(உரையாசிரியர்)., சங்க இலக்கியம் –நற்றிணை மூலமும் உரையும், நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்(பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600 098. ஐந்தாம் பதிப்பு. அக்டோபர் 2014.
    • பழனியப்பன்.வெ., தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்.1990.
    • பாகனேரி. வெ. பெரி. பழ. மு., திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், (வெளியீடு) லிமிடெட், திருநெல்வேலி.
    • பிரகாஷ். வெ., பாட ஆய்வியல் கையேடு, அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம், திருச்சி. 2014.
    • பிரகாஷ். வெ., பாட ஆய்வியல்: புறநானூறு பாடம், வடிவம் குறித்த ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், 2012,
    • ராஜகோபாலார்யன் (ப.ஆ)., அகநானூறு மூலமும் பழைய உரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாசம், மயிலாப்பூர்.
    • விநாயகமூர்த்தி.அ., மூலபாட ஆய்வியல், பாலமுருகன் பதிப்பகம், 90, பாரதியார் தெரு, சுப்பிரமணியபுரம், மதுரை – 625 011.
    • வெள்ளை வாரணன். க (ப.ஆ) ., தொல்காப்பியம் செய்யுளியல் – உரைவளம், பதிப்புத் துறை, காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை – 625 021. 1989.
    • வேங்கடராமன்.ஹச்(உ.ஆ)., டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், 2, அருண்டேல், கடற்கரைச் சாலை, பெசண்ட் நகர், சென்னை – 600 098.
    • வையாபுரிப்பிள்ளை. எஸ்(ப.ஆ.)., சங்க இலக்கியம், எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும், சைவ சித்தாந்தம் மகா சமாஜம், மயிலாப்பூர், சென்னை. 1940.
    • Eva Mariya wilden., Studies in Manuscript Cultures, 204 Walter de Gruyter Gmbh & KG Berlin / Munchen / Bosten in Germany.
    • S.M. Katre., Introduction to Indian Textual Criticism, Karanatak Publishing House.
    • தமிழ் லெக்ஸிகன்., சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
    • நிகண்டுகள்., சாந்தி சாதனா, 125 சேமியர்ஸ் சாலை, சென்னை – 600 028.
    • மணியன்.,சங்க இலக்கிய வினை வடிவங்கள், திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம் – 86.
    • மாதையன்.பெ., சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 310. 2007.
    • பாண்டியராஜா.சு., சங்க இலக்கியத் தொடரடைவு, sangamconcordance.com
    • தமிழிணையக் கல்விக் கழகம்(tamilvu.org)

    ஆய்வுக் கட்டுரையாளர்களின் தன் விவரக் குறிப்பு

    முனைவர் ப. வேல்முருகன்

    தலைவர் & பேராசிரியர், தமிழ்த் துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

    திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: pdrvelmurugan@gmail.com; செல்பேசி    : 9488264166

    இவர் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பி.எட்., பிஎச்.டி. பட்டங்களும் வரலாறு, தகவல் தொடர்பியல், மொழியியல் ஆகிய பாடங்களில் எம்.ஏ. பட்டங்களும் பெற்றுள்ளார். கணினி அறிவியல், ஹிந்தி மொழி, காந்தியச் சிந்தனை ஆகியவற்றில் சான்றிதழ் பயின்றுள்ளார். அடிப்படை மலையாள மொழியறிவு உடையவர்.

    இவர் சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல், தொல்லியல், தகவல் தொடர்பியல், கவிதையியல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இப்பொருண்மைகளில் ஐந்து நூல்களை எழுதிய இவர் `எழுத்திலக்கண மாற்றம்’, `தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள்’ ஆகிய நூல்களுக்காக, இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழ் இளம் அறிஞர் விருதும்,  `இலக்கண மரபும் இலக்கியப் பதிவும்’ என்ற நூலினுக்காகத் தமிழக முதல்வர் வழங்கும் சிறந்த நூலாசிரியர் விருதும் பெற்றுள்ளார். இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அறுபதிற்கும் மேலான எண்ணிக்கையில் வெளிவந்துள்ளன.

    இவர், பதினாறு ஆண்டுகள், ஆசிரியர் பணி அனுபவம் மிக்கவர்; தற்பொழுது திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்  தமிழ்த் துறைத் தலைவராகப் பேராசிரியர் நிலையில் பணி புரிந்து வருகிறார்.

    இர. ஆனந்தகுமார்

    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: anadhakumar001@gmail.com; கைபேசி        : 9488264166

    இவர் ஆசிரியர் பயிற்சியும், தமிழிலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பட்டமும் பெற்றவர். மேலும் தமிழ் மொழியியலில் முதுகலைப் பட்டமும், மலையாள மொழியில் சான்றிதழ்ப் பட்டமும் (Certificate Course) பெற்றுள்ளார். தற்பொழுது திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில், முனைவர் பட்ட ஆய்வாளராக “நற்றிணைப் பாக்கள்: மொழியியல், இலக்கியவியல், கிளை மொழியியல், மூலபாடவியல் ஆய்வு” (உலோச்சனார் முதலியோரின் 133 பாக்கள் – சொல்லடைவுடன்) எனும் தலைப்பில் ஆய்வு செய்து வருகிறார். இவர், பன்னாட்டு ஆய்விதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

    ===========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பழந்தமிழ் இலக்கியங்களின் உண்மைத் தன்மையை அறிய, அவற்றின் மூலம் கண்டடைதல் என்பது, தேவையான ஒன்று. அந்த வகையில் ஏவா வில்தன் முன்னெடுத்த செம்பதிப்புப் பணி பாராட்டத்தக்கது. இவர் பதிப்பில் உள்ள சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் பதிப்புப் பணியில் ஈடுபடும் பதிப்பாசிரியர்கள் நினைவில் கொள்ளக் கூடிய பதிப்பு அடிப்படைகளையும் நற்றிணைப் பதிப்பில் உள்ள பாடவேறுபாடுகள் குறித்தும் விளக்கும் தன்மையில் கட்டுரை அமைந்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் ஆய்வாளர்கள், பதிப்பாசிரியரின் வலவன், பெய்யாது, நொதுமலர் போன்ற மூலபாடத் தெரிவின் முயற்சிகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மேலும் ஏர்புரை என்பது பொருத்தமான பாடமாகத் தோன்றுகிறது என்று யூகத்தின் அடிப்படையில் கூறுதல் பொருத்தமற்றது. ஆய்விற்குப் பொருத்தமான ஆதாரங்களை முன்வைத்து, பதிப்பாசிரியரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுதல் நலம் பயக்கும். மேலும், ஆய்வாளர்கள் பிறர் கருத்தை மறுக்கும் பொழுது, தன்மையான முறையில் மறுக்க வேண்டும். ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள், இத்தகைய செம்பதிப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைய வேண்டும். மாறாக, அவர்களின் பணியைப் புறந்தள்ளும் தொனி வந்துவிடக் கூடாது. எனினும், ஆய்வாளர்கள் இதுபோன்ற ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, தமிழுக்கு ஆக்கம் நல்கும்.

    ===========================================================

    Share
  • (Peer Reviewed) பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உருவானதா? – இயற்பியல் ஆய்வு

    நடராஜன் ஸ்ரீதர், சந்திரமோகன் இரத்தினம்

    முது அறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி , தேவகோட்டை

     natarajangravity@gmail.com, rathinam.chandramohan@gmail.com

    ===========================================

    இயற்பியல் ஆய்வுகள், அவ்வப்போது பல வியத்தகு முடிவுகளை தருகின்றன. இயற்பியல் ஆய்வுகளில் கணித அளவீடுகளின் தாக்கம் பல புதுமையான விளக்கங்களை, தீர்க்கமுடியாத சிக்கல்களுக்கு வழங்குகின்றன. இயற்பியலின் மிகப் பெரிய கேள்வி இப்பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதாகும். பிரபஞ்ச இயக்கவியலுக்குப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு வியத்தகு மாதிரியான, ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து பிரபஞ்சம் எனும் கோட்பாட்டினைப் பற்றி இவ்வாய்வுக் குறிப்பில் காணலாம்.

    பெருவெடிப்புத் தத்துவம்

    பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்று கேள்வியின் பதிலாகப் பல்வேறு அமைப்புகள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றில் முன்னதாக நிற்பது பெருவெடிப்புத் தத்துவமே ஆகும். இயற்பியல் ரீதியிலும், கணிதவியல் ரீதியிலும் பெருவெடிப்புத் தத்துவம், சிறந்த முடிவுகளையே தருகிறது. மேலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட தரவுகள் கூட பெருவெடிப்புத் தத்துவத்தையே முன்மொழிகின்றன. உதாரணமாக பிரபஞ்சத்தில் பின்புல வெப்பநிலைத் தரவு [1] மற்றும் சூப்பர் நோவா தரவு [2]ஆகியவை பிரபஞ்சம் ஒரு சிறு புள்ளியில் இருந்து உருவாகி இருக்கும் என்பதை வலியுறுத்துகின்றன.

    இத்தத்துவத்தின் படி சுமார் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சமானது ஒரு சிறு புள்ளியில் அழுத்தப்பட்டு, அதிக வெப்பநிலையில், மீயழுத்தத்தில், மீயடர்த்தியில் உறங்கிய நிலையில் இருந்தது. பின்னர் சிறு சிறு துணுக்க அதிர்வுகளிற்குப் பிறகு, இந்தப் பிரபஞ்சமானது விரிவடைய ஆரம்பித்தது. இவ்விரிவடைதல் நிகழ்வு, மிக வேகமாக வீங்குதல் [3] நிகழ்வாக நடந்தது. நிகழும்போது வெப்பநிலையும் அழுத்தமும் குறையக் குறைய அடிப்படைத் துகள்கள், அணுக்கள்,  அணுக்கூட்டங்கள், வாயுக்கள், நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் என உருவாக்கின. இவ்வாறு உருவான இந்தப் பெரும் நாடகம் இன்றைய பிரபஞ்சம் என அழைக்கப்படுகிறது. இன்றைய பிரபஞ்சமானது குளிர்ந்த வெப்ப நிலையிலும் மேலும் விரிவடைந்து செல்லக்கூடிய நிலை கொண்டதாகவும் மிகப் பெரிய பரப்பளவில் தட்டையானதாகவும் அனைத்துத் திசைகளிலும் ஒரே மாதிரியான அமைப்புகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

    இத்தத்துவத்தின்படி, விரிவடையும் பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட அடர்த்தி வரும்வரை விரிவடையும். அவ்வாறான மாறுநிலை அடர்த்தி நிலைக்குப் பிரபஞ்சம் வரும்போது இப்பிரபஞ்சமானது, தனது விரிவடைதலை நிறுத்திக்கொள்கிறது. பிறகு  இப்பிரபஞ்சமானது சுருங்க ஆரம்பிக்கிறது. அவ்வாறான சுருங்குதல் மீண்டும் முந்தைய மூல நிலைக்குப் பிரபஞ்சத்தை எடுத்து வருகிறது. இதை பெருஞ்சுருக்கம் என அறிவியலாளர்கள்அழைக்கின்றனர்.

    இந்தப் பெரும் சுருக்கத்தின் இறுதியாகப் பிரபஞ்சம், மூலப் புள்ளியில் வந்து சுருங்குகிறது. மூல நிலையில் இருந்த மீயடர்த்தி , மீயழுத்த, மீவெப்ப நிலைக்குப் பிரபஞ்சம் செல்கிறது. இது பெருவெடிப்புக் கோட்பாடு என அழைக்கப்படுகிறது.

    சுழற்சிப் பிரபஞ்சம்

    பிரபஞ்சமானது ஒரு சிறு புள்ளியில் ஆரம்பித்துப் பெரிதாக விரிந்து மீண்டும் ஒரு புள்ளியில் வந்து முடிவடைகிறது. இந்த நிகழ்வில் பிரபஞ்சத்தில் உருவாகும் தோற்றப் பொருட்கள், இறுதியாக மூல நிலையில் வந்து முடிவடைகிறது. இது ஒரு பிரபஞ்சத்தின் வாழும் காலம் என அழைக்கப்படுகிறது. இத்துடன் பிரபஞ்சமே முடிவடைந்துவிட்டதா என்றால், இல்லை. அதற்கு மாற்றாகச் சில கணித முடிவுகளும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அம்முடிவுகளின்படி மூல நிலையிலிருந்து உருவாகி வளர்ந்து மீண்டும் மூல நிலையை அடையும் பிரபஞ்சம் ஒரு சுழற்சி நிகழ்வு எனப்படுகிறது. இந்நிகழ்ச்சியானது இத்தோடு நிற்பதில்லை. மீண்டும் துவக்க முறைகளுக்கு உட்பட்டு மற்றுமொரு பிரபஞ்ச இயக்கத்தை உருவாக்குகின்றன என்று கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இக்கோட்பாடு, சுழற்சிப் பிரபஞ்சக் கோட்பாடு [4] என அழைக்கப்படுகிறது.

    சுழற்சிப் பிரபஞ்சக் கோட்பாட்டின் படி, பிரபஞ்சமானது தொடர்ச்சியாக உருவாவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும். அதாவது ஒரு சுழற்சியின் முடிவானது மற்றொரு சுழற்சியின் ஆரம்பமாக இருக்கும். மேலும் இக்கோட்பாடு எல்லா இயற்பியல் விதிகளுக்கும் உட்பட்டு பிரபஞ்சத்தின் இயக்கத்தை தெரிவிக்கிறது. நிரூபிக்கப்பட்ட கணிதவியல் முறைகளும் இக்கோட்பாடு எல்லா விதத்திலும் சரியாக இருப்பதையே உறுதிப்படுத்துகிறது.

    துணுக்கப் பிரபஞ்சம்

    இவ்விரண்டு கோட்பாடுகளிலும் பிரபஞ்சத்தின் மூல நிலை அல்லது பிரபஞ்சத்தின் முடிவு நிலையைப் பற்றி ஆய்வு செய்வதற்குத் துணுக்க இயற்பியலானது தேவைப்படுகிறது. ஏனெனில் மிக நுண்ணிய அளவில் பிரபஞ்சம் சுருங்கி விட்ட பிறகு, தொன்மை இயற்பியல் சமன்பாடுகளால் அங்கு எழும் சிக்கல்களைத் தீர்க்க இயலாது. எனவே அங்கு துணுக்க இயற்பியல் இயக்கங்களின் ஆதிக்கம் பேரளவில் இருக்கும். பிரபஞ்சமானது துணுக்க நிலையில் மிகவும் வேறுபாடாக பரிணமிக்கிறது. துணுக்க முறையில் ஆய்வு செய்யும்போது இந்தப் பிரபஞ்சமே ஒரு வலையமைப்பாக ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு ஒன்றிணைக்கப்பட்டு இருப்பதாக அறிய முடியும்[17]

    இப்பிரபஞ்சத்தின் மூல நிலை மற்றும் இறுதி நிலையை நுணுகி ஆராயும் போது, வியத்தகு முடிவுகள் கிடைக்கின்றன. பிரபஞ்சம் முற்றிலுமாகச் சுருங்கி விடும் போது அங்கு வெற்றிடம் மட்டுமே ஏற்படுகிறது. இந்த வெற்றிடம், பகுதி அளவே அல்லது சிறிது நேரத்திற்கே நீடித்துப் பின் இன்னொரு புதுப் பிரபஞ்சத்தின் துவக்கத்தை நோக்கி இப்பிரபஞ்சம் மாற ஆரம்பிக்கிறது. ஒரு பிரபஞ்சத்தில் முடிவில் மற்றும் மற்றொரு பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஒரு வெற்றிடமானது காணப்படுகிறது. இந்த வெற்றிடமானது அதீத அதிர்வுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது[5].

    வெற்றிடத்தில் இருந்து பிரபஞ்சம்

    அப்படியாயின் அடுத்த ஒரு கேள்வி வரலாம். எவ்வாறு ஒரு பிரபஞ்சத்தின் முடிவு, இன்னொரு பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் தீர்மானிக்கிறது என்று. ஒருவாறாக முடிந்த பிரபஞ்சம் இறுதியாக வெற்றிடத்தைச் சந்திக்கிறது. இந்த வெற்றிடம் அடிப்படையில் வரைகணித அளவில் தட்டையான அமைப்புடையதாக இருக்கிறது. முழுப் பிரபஞ்சமும் துணுக்க அளவிலாக நிலைபெற்று அலைவுற்று நிற்கிறது.  மேலும் புது பிரபஞ்சத்தின் மூல நிலையும் இதே போன்ற துணுக்க வெற்றிட அளவிலேயே தொடங்குகிறது. முடிந்த பிரபஞ்சம் மற்றும் தொடக்க பிரபஞ்சம் எவ்வாறு இணைக்கப்படுகிறது என்பதற்கான நிகழ்தகவைத் துணுக்க உட்குடைதல் தீர்மானிக்கிறது[6]. துணுக்கஉட்குடைதல் என்பது தொன்மை இயற்பியல் அளவில் சாத்தியமில்லாத வழிமுறைகளை உறுதி செய்கிறது.

    இந்நிகழ்வு, தொன்மை இயற்பியல் முறையில் நிச்சயமாக தாவிக் குதித்துச் சென்றிருக்கக்கூடிய பாதைகளை ஊடுருவி உட்புகுந்து கடப்பதன் நிகழ்தகவை வெளிப்படுத்துகிறது. அதாவது தொன்மை முறையில் சாத்தியமே இல்லாத இயக்கத்தின் பாதைகளையும் துணுக்க முறையில் கடக்கும் நிகழ்வானது இயற்கையின் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது[7].

    இவ்வாறான துணுக்கக் குடைதல் பிரபஞ்சமானது, வெற்றிடத்திலிருந்து உருவாவதையும் தெரிவிக்கிறது. ஒரு பிரபஞ்சத்தின் முடிவிலிருந்து வெற்றிடம் வாயிலாக மற்றொரு பிரபஞ்சத்தின் துவக்கம் அமைகிறது. எவ்வாறு ஒரு கதிரியக்கத் தனிமத்திலிருந்து கதிரியக்கம் வெளிப்படுகிறதோ, அதற்கு எந்த ஒரு காரணமும் தேவைப்படுவதில்லையோ அதே போலவே பிரபஞ்சமானது வெற்றிடத்திலிருந்து உருவாவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்[8].

    இவ்வாறு வெற்றிடத்தில் இருந்து உருவாகும் பிரபஞ்சம் மிக அதிகமான விரிவடைந்தது பிற்கால அளவில் பெரியதாக ஒரு மாறுகிறது. இந்தச் சுழற்சி முறை தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பிரபஞ்சமானது வெற்றிடத்தில் இருந்து உருவாகும் என நிறுவப்படுகிறது.

    இவ்வாறான அறிவியல் ஆய்வு முடிவை தமிழ் இலக்கியங்களில் ஒப்பு நோக்கவும் முடியும். பிரபஞ்சத்தின் மூல நிலை வெற்றிடம் என்று தமிழ்க்  குறிப்புகளும் பல்வேறு இடங்களில் காணக் கிடைக்கிறது. திருமூலர்[9], மாணிக்கவாசகர்[10], அருணகிரிநாதர் [11], பாரதியார்[12], வேதாத்திரி மகரிஷி[13], வள்ளலார்[14], அப்பர் [15], மெய்கண்டதேவர் [16] என பலரும் பிரபஞ்சத்தின் மூல நிலை வெற்றிடமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் ஆழ ஆய்வு செய்யும்போது பல்வேறு குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவற்றைக் கணித ரீதியிலோ அல்லது இயற்பியல் விதிகளிலோ ஆய்வு செய்யும்போது வியத்தகு விளக்கங்கள் கிடைக்கின்றன. பிரபஞ்சம் தோன்றிய விதங்களைப் பற்றிய குறிப்புகள், தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கலாம் என்று கூட வரையறுக்கப்பட முடிகிறது. மேலும் பிரபஞ்சமானது வெற்றிடத்தில் இருந்து உருவாக்கியிருக்க முடியும் எனவும் நம்மால் உறுதி செய்துகொள்ள முடிகிறது.

    மேற்கோள்கள்

    1. Schlegel, D. J., Finkbeiner, D. P., & Davis, M. (1998). Maps of dust infrared emission for use in estimation of reddening and cosmic microwave background radiation foregrounds. The Astrophysical Journal, 500(2), 525.
    2. Riess, A. G., Strolger, L. G., Casertano, S., Ferguson, H. C., Mobasher, B., Gold, B., … &Tonry, J. (2007). New Hubble space telescope discoveries of type Ia supernovae at z≥ 1: narrowing constraints on the early behavior of dark energy. The Astrophysical Journal, 659(1), 98.
    3. Guth, A. H. (1981). Inflationary universe: A possible solution to the horizon and flatness problems. Physical Review D, 23(2), 347.
    4. Lehners, J. L. (2008). Ekpyrotic and cyclic cosmology. Physics Reports, 465(6), 223-263.
    5. Tryon, E. P. (1973). Is the universe a vacuum fluctuation?. Nature, 246(5433), 396.
    6. Vilenkin, A. (1984). Quantum creation of universes. Physical Review D, 30(2), 509.
    7. Caldeira, A. O., & Leggett, A. J. (1981). Influence of dissipation on quantum tunneling in macroscopic systems. Physical Review Letters, 46(4), 211.
    8. Vilenkin, A. (1982). Creation of universes from nothing. Physics Letters B, 117(1-2), 25-28.
    9. திருமூலர், திருமந்திரம் ,387,385
    10. மாணிக்க வாசகர். திருவாசகம், சிவபுராணம், திருவண்டப்பகுதி
    11. அருணகிரிநாதர், கந்தரலங்காரம்.
    12. பாரதியார், பரசிவ வெள்ளம்
    13. வேதாத்திரி மகரிஷி, ஞானக்களஞ்சியம் -2, வேதாத்திரிபதிப்பகம்
    14. வள்ளலார், திருவருட்பா
    15. ஜகந்நாதன். கி.வா. அப்பர் தேவார அமுது, பூரவிபதிப்பகம்
    16. மெய்கண்டதேவர் ,சிவஞானபோதம்
    17. நடராஜன்.ஸ்ரீ, சந்திரமோகன். இர.(2017) தீதும்நன்றும்பிறர்தரவாரா – இயற்பியலாளரின் பார்வையில். மின்தமிழ்மேடை (11). 180-186. தமிழ் மரபு அறக்கட்டளை

    கலைச்சொற்கள் மேற்கோள் நூல்

    ஜெ. கோட்டாளம், அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவற்கான ஒரு கையேடு. https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5SzVpQ24tY0NGVXc

    இக்கட்டுரையில் கீழ்க்காணும் கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    துணுக்கம் – Quantum

    துணுக்க உட்குடைதல் – quantum tunneling

    =================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உருவானதா என்ற வினாத் தலைப்பில் இரட்டை ஆய்வாளர்கள், நடராஜன் ஶ்ரீதர் & சந்திரமோகன் இரத்தினம் ஆகியோர், இதுவரை பிரபஞ்சத் தோற்றம் எப்படி உருவானது என்று  விஞ்ஞானிகள் சிலர் யூகித்த ஒரு கோட்பாட்டை உதாரணங்களுடன் விளக்குகின்றனர். இக்கோட்பாடு, இதுவரை [2018]  பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டவையுள் ஒன்றே. வல்லமை வலையிதழில் வெளியிடத் தகுதியுள்ள ஆய்வுக் கட்டுரை. தமது கோட்பாட்டுக்குச் சில தமிழ் இலக்கிய நூல்களையும் சான்றாகக் காட்டியுள்ளனர். அவற்றின் வரிகளையும் ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கலாம்.  இதனுடன் தொடர்புடைய இந்தக் கட்டுரையை ஆய்வாளர்கள் கவனித்திருக்கலாம்: http://www.vallamai.com/?p=83914 

    =================================================================

    Share