முனைவர் ஹெப்ஸி ரோஸ் மேரி, அ.
உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை
கேரளப் பல்கலைக்கழகம்
திருவனந்தபுரம்

ஆகமம்

         எழுத்துக்கள் தம்முள் புணர்வதைத் தமிழில் புணர்ச்சி என்றும் வடமொழியில் சந்தி என்றும் அழைப்பர்.  சந்தியை அகச்சந்தி (Internal Sandhi) என்றும் புறச்சந்தி (External Sandhi) என்றும் இருவகைப்படுத்துவர்.  ஒரு சொல்லின் இரு கூறுகளுக்கிடையே நிகழும் சந்தியை அகச்சந்தி என்றும் (வந்தான், அங்கு), இரண்டு சொற்களுக்கிடையே நிகழும் சந்தியைப் புறச்சந்தி என்றும் கூறுவர்.  இவ்வகைப் புணர்ச்சியில் தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்கள் நிகழும். தோன்றல் விகாரத்தை வடமொழியில் ஆகமம் என்பர்.  இக்கட்டுரை தொல்காப்பியம் லீலாதிலகம் கூறும் தோன்றல் விகாரத்தை விளக்க முயல்கிறது.

புணர்ச்சி விதிகள் தோன்றக் காரணம்

      தமிழ் எழுத்திலக்கணத்தின் உயிர்ப்பகுதி புணரியல் தான்.  அதனாலேயே எழுத்ததிகாரத்தின் பெரும்பகுதியையும் புணரியல் பற்றிக்கொண்டு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் தமிழ் வரலாற்றிலக்கண ஆசிரியர் ஆ. வேலுப்பிள்ளை. புலமையும் வித்துவத் தன்மையும் காட்டுவதே முக்கியம் என்ற கருத்து நிலவிய காலத்தில் தோன்றிய உரைநடையிலும் செய்யுளிலும் கடின சந்தி விகாரங்களை அமைத்துக் கடின நடையில் தமிழறிஞர் எழுதிவந்தனர்.  கருத்துத் தெளிவே முக்கியம் கருத்தைப் புலப்படுத்த மொழி ஒரு கருவியே என்ற கருத்து இன்று நிலவுவதால் இன்றைய தமிழ் நடையில் சந்தி விகாரங்கள் பெரும்பாலும் அவசியமான இடங்களிலேயே இடம்பெறுகின்றன என்று கூறுகின்றார்.  இன்றைய நிலையில் விரிவான அளவில் புணர்ச்சி முறைகள் நமது மொழிக்கு வேண்டியதில்லை என்னும் கருத்தினை அவர் வலியுறுத்துகிறார்.  ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விரிவான முறையில் புணர்ச்சி விதிகள் பற்றித் தமிழ் இலக்கண நூலால் கூறவேண்டிய தேவையிருந்தது.  சொற்களுக்கு இடையே இடைவெளியிட்டு எழுதும் வழக்கம் அச்சு இயந்திர வரவாலும் ஆங்கிலமொழிச் செல்வாக்காலும் ஏற்பட்டது அதற்கு முன்னர் எழுதுகருவிகள்  காரணமாக எவ்வளவு தூரம் எல்லாச் சொற்களையும் தொடுத்து எழுத முடியுமோ அவ்வளவுக்கு எழுது முயற்சியும் சிக்கனப்படுத்தப்பட்டன. இத்தகைய சிக்கன முயற்சிக்குப் புணர்ச்சி விதிகள் பெருமளவும் உதவின என்று சண்முகதாஸ் குறிப்பிடுகிறார்(2008:82).

          அன்றைய வழக்கில் இருந்த செய்யுள் வடிவமும் பெரும்பாலான புணர்ச்சி விதிகள் செய்யுள் நோக்கில்  அமைக்கக் காரணமாயின.  இக்கருத்தினைச் சொல்லிலக்கணத்தில் யாப்பின் செல்வாக்குப் பற்றி எழுதிய பண்டிதர் க.வீரகக்தியின் கருத்துக்கள் இதற்கு வலுசேர்க்கும்.  அவர் வெவ்வேறு ஓசையின் ஒழுங்கான வரையறைகளே யாப்பிலக்கணமாகி இலக்கணத் துறைகளில் ஒன்றாக விரிவும் தெளிவும் பெற்றுள்ளது.   நேர்சீராயில்லாத சீரமைப்பும் தளைப்பிணிப்பும் பாவின் நீரோசையைச் சிதைத்து அதனை உரைநடைக்குள் தள்ளிவைக்கும்.  “எழுத்திற்கு மாத்திரை கோடலும் அசைத்தலும் சீர்செய்தலும் தளையறுத்தலும் ஓசை பற்றி அல்லது எழுத்துப் பற்றியன்று” என்று கூறும் சிவஞான முனிவரின் விளக்கம் ஓசைக்குள் செல்வாக்கைத் தெளிவாகத் தெரிய வைக்கின்றது.  ஓசை மாசுபடாதிருப்பதற்காக எழுத்தும் சொல்லும் சொற்றொடரும் வேண்டிய இடங்களில் யாப்புக் கட்டுக்கோப்புக் கருதித் தம் இயல்பான அமைதி நிலையிழந்து ஓசை ஓட்டத்திற்குப் பாதை திறந்துவிடுதல் வேண்டும்.  அன்றி ஓசை இவற்றிற்கு விலகிக் கொடுக்காது. விலகின் யாப்பு யாப்பற்றதாய் விடும்.  யாப்பின் செல்வாக்கு இன்றேல் எழுத்திலக்கணம் இத்துணை விரிவடைய இடமில்லை.  சார்பெழுத்துக்களின் விரிவு பல்வகைப்பட்ட விகாரங்கள் எல்லாம் யாப்பின் தாக்கமே(2008:116) என்ற பண்டிதர் க.வீரகத்தியின் கருத்து இங்கு எண்ணத்தக்கது. இதிலிருந்து தமிழ் இலக்கணங்களில் ஏன் பெருந்தொகையான புணர்ச்சி விதிகள் அமைக்கப்பட்டன என்பதற்குரிய காரணத்தினை ஓரளவு ஊகிக்கலாம்.

தொல்காப்பியமும் புணர்ச்சி விதிகளும்

          தொல்காப்பிய எழுத்ததிகாரம் ஆறு இயல்களில் புணர்ச்சி பற்றிக் கூறுகிறது.  புணர்ச்சி பற்றிய பொதுவான கருத்துக்களெல்லாம் புணரியல் என்னும் இயலிலேயே வகைப்படுத்துகிறார்.  முதல் நூற்பாவில் புணர்ச்சி நடைபெறக்கூடிய இடமும் அதனுடன் தொடர்புடைய எழுத்துக்களும் கூறப்படுகின்றன. மொழிக்கு முதலாக வருமென்று கூறிய எழுத்துக்கள் முதனிலையிலும் மொழிக்கு ஈறாக வருமென்று முன்னர் கூறிய எழுத்துக்கள் ஈற்று நிலையிலும் வரும் என்பதை,

             “எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்

               மெய்யெ யுயிரென்று ஆயிரியல” ( தொல். 104)

என்று குறிப்பிடுகிறார்.

புணர்ச்சிக்குரிய மொழிகளினியல்பு அடுத்து கூறப்படுகின்றது. இரண்டு சொற்களினெல்லைகளில் புணர்ச்சி நடைபெறும். அவ்வாறான சொற்களில் புணர்ச்சிக்குரிய ஈற்றினை  நிறுத்தச்சொல் (நிலைமொழி) என்றும் முதனிலையுடையதைக் குறித்தசொல் (வருமொழி) என்றும் கூறுவார். அவ்விருசொற்களின் ஈறும்முதலும் வரும்மாற்றினை,

      “உயிரிறு சொல்முன் உயிவரு வழியும்

        உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்”

தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அவ்விருவகைப்பட்ட சொற்களும் எத்தகைய மாற்றங்கள் நிகழும் என்பதைத் தொல்காப்பியர் பின்வருமாறு வகைப்படுத்துகிறார். பெயர் + பெயர், பெயர் + தொழில் (வினை), தொழில் + பெயர், தொழில் + தொழில் என்பனவாகும்.  புணர்ச்சி காரணமாக ஏற்படும் மாற்றங்கள் மூன்று வகைப்படும். அவை,

          “மெய்பிறிதாதல் மிகுதல் குன்றலென்று

         இவ்வெனமொழிப திரியுமாறே”  ( தொல். 110)

மெய்வேறுபடுதல் (திரிதல்) மிகுதல், குன்றல் என்பனவாகும்.   திரிதல் பண்பு மெய்யெழுத்துக்கு மட்டும் உரியது.  மிகுதலும் குன்றுதலும் உயிருக்கும் மெய்யுக்கும் பொதுவானவை. இவ்வாறு நடைபெறும் புணர்ச்சியினைத் தொல்காப்பியர் வேற்றுமைப்  புணர்ச்சி என்றும் அல்வழிப்புணர்ச்சி என்றும் இருவகையாகப் பாகுபாடு செய்வர்.  உருபுகள், சாரியைகள் புணர்ச்சியிலே எவ்வாறு இடம்பெறுகின்றன என்றும்  புணர்ச்சி காரணமாகப் பொருள் வேறுபடுதலையும் புணரியலில் எடுத்துரைக்கிறார்.

ஆனால் லீலாதிலகம் புணர்ச்சி விதிகளை விரிவாகவும் விளக்கமாகவும் கூறவில்லை.  தமிழ்ப்புணர்ச்சி விதிகளையே பின்பற்றியுள்ளதாகக் கே. என். எழுத்தச்சன் குறிப்பிடுகிறார்.  லீலா திலகம் புணர்ச்சிக்கு 28 விதிகள் தான் கூறியுள்ளது.  அவர் கூறும் விதிகள் உயிர்முன் உயிர், உயிர்முன் மெய், மெய்முன் மெய் என்ற மூன்று அமைப்பில் காணப்படுகிறது.  மெய்முன் உயிர் என்ற அமைப்பில் இடம்பெறவில்லை.  பெரும்பாலும் பெயர் + பெயர் அமைப்பிற்கே விதிகள் கூறுகின்றது..

ஆகமம்

புணர்ச்சி நடைபெறுமிடத்து மூன்று வகையான மாற்றங்கள் நிகழுமெனத் தமிழ் இலக்கண நூலார் குறிப்பிடுகின்றனர்.   அம்மாற்றங்களாவன தோன்றல், திரிதல், கெடுதலாகும். தோன்றல் புனர்ச்சியை வடமொழியாளர் ஆகம சந்தி என்பர். தோன்றல் புணர்ச்சி காரணமாகச் சில இடங்களில் எழுத்துக்களோ சாரியைகளோ தோன்றுவது பற்றித் தொல்காப்பியர் விதியமைத்துள்ளார். பொதுவாக இரண்டு உயிரெழுத்துக்கள் புணரும்போது அவற்றை ஒன்று சேர்ப்பதற்கு அல்லது அவ்விடத்து விட்டிசைத்தலைத் தடுக்க யகர வகரம் உடம்படு மெய்யாக வரும்.  தொல்காப்பியர் உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார் (தொல். எழுத்து. 141) எனப் பொதுவாகக் கூறுகிறாரே ஒழிய  இன்னின்ன மெய்கள் உடம்படுமெய்களாக வரும் என்றும் இன்ன உயிர்முன் இன்ன உயிர் வருமென்று குறிப்பிடவில்லை.   லீலாதிலகம் இரண்டு உயிர்களுக்கு இடையில் யகரம் தோன்றும் என்றும் தனித்து நிற்கும் அ, இ ஆகியவற்றின் முன் உயிர் வரின் வகரம் தோன்றும்.  சிலயிடத்து இரட்டித்து வரும் என்று குறிப்பிடுகிறது.

எ.டு

        ஆன + அது                  =             ஆனயது

        காண்மூ + அது          =             காண்மூவது

       அ + அழகு                     =             அவழகு

       இ  + அழகு                    =             இவழகு

லீலாதிலகம்  நன்னூலைப்  பின்பற்றவில்லை என்பது இங்கு தெளிவாகிறது.  நன்னூலார் “இ ஈ ஐ வழி யவ்வும் ஏனைய உயிர்வரின் வவ்வும்” என்று குறிப்பிடுகிறார். ‘இ’ யின் முன் உயிர் வரின் வகரம் வரும் என்று கூறுவதிலிருந்து இதனை அறியலாம். “ய வ முன் வரினே வகர ஒற்றும்’’ (தொல்.உயிர்மயங். 4) இந்த தொல்காப்பிய நூற்பாவை ஒட்டியே “தஸ்ய  தித்வம் வ சிலயிடத்து இரட்டும்” என்று லீலாதிலகம் குறிப்பிடுகிது.

எ.டு

        அ + அழகு     =             அவ்வழகு

       இ + அழகு     =             இவ்வழகு

பொதுவாகத் திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் இரண்டு உயிர்களுக்கிடையே உண்டாகும் இடைவெளி ‘வ’கர அல்லது ‘ய’கர உடம்படுமெய் நுழைவால் தடுக்கப்பெறும் என்று கால்டுவெல் கூறுவார்.  திராவிட மொழிக் குடும்பத்தின் அடிப்படை என்று இதனைக் கூறலாம்.

         “சுட்டின் முன்னர் ஞ ந மத் தோன்றின்

        ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்” ( தொல். எழுத்து. 206)

இதனை அடியொற்றி லீலாதிலகம் “கேவலாஞ்ஞானமவா நாம் ச”  வினாப்பொருளில் வருகின்ற எகரத் தனிச் சொல்லின்முன் வரும் ஞ ந ம வ ஆகிய எழுத்துக்கள் இரட்டும் என்று குறிப்பிடுகிறது.

எ.டு

       எ + ஞாண்  = எஞ்ஞாண், எந்நூல், எம்மரம்

தொகைச் சொற்களிலும் ஒ, ந, ம வக்கள் அல்லாத மெய்கள் இரட்டும்.

எ.டு

      ஆன  + காடு = ஆனக்காடு ( யானைகள் வாழும் இடம்)

ய ர ல ழ ள ஆகியவற்றின் முன்வரும் கசதபக்கள் இரட்டும் (லீ.தி. 56) என்ற லீலாதிலகம் கூறுவது ‘ரகார இறுதி யகார இயற்றே’ (தொல். 363) என்ற தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றியாகும்.

எ.டு

       பொய் + குதிர =        பொய்க்குதிர

       நீ + கோழி      =   நீர்க்கோழி

‘அளவும் நிறையும் வேற்றுமையியல ( தொல். 32) என்ற நூற்பாவைப் பின்பற்றி மகர ஈற்றுப் பெயரின்  முன் வல்லினம் வரின் இரட்டும் என்று லீலாதிலகம் குறிப்பிடுகிறது.

எ.டு

       வட்டம்   +  பலக      = வட்டப்பலக

      சதுரம்  + கிணறு  = சதுரக்கிணறு

‘யரழளப்ய : கசதபனம த்வித்வம்’(லீ.தி. 388)  ய, ர, ல, ழ, ள ஆகியவற்றின் முன்வரும் கசதபக்கள் இரட்டும்.

எ.டு

       வால் + கிண்டி          = வால்க்கிண்டி

       முள்   + கொம்பு       = முள்க்கொம்பு

இவ்வாறு சொற்கள் இரண்டினை இணைத்து ஒரு சொற்றொடராக மாற்றுவதற்குப் புணர்ச்சியில் தோன்றல் விகாரம் பயன்படுகிறது.  உச்சரிப்பினை இலகுவாக்குவதற்கு மொழியில் பல இடங்களில் தோன்றல் விகாரம் நடைபெறுகின்றது.  பிற்கால மலையாள இலக்கண ஆசிரியர்கள் லீலாதிலகம் அமைத்த ஆகம சந்தி மலையாளத்துக்குரியது என்று கூறுவர். ஆனால் லீலாதிலகம் ஆகமசந்திக்குக் கூறும் விதிகள் அனைத்தும் தொல்காப்பியத்தைப் பின்பற்றி அமைந்தவையாகும்.

பயன்பட்ட நூல்கள்

 1. இளையபெருமாள், மா., லீலாதிலகம், கேரளப் பல்கலைக்கழக வெளியீடு.
 2. இளம்பூரணர், தொல்காப்பியம், கழக வெளியீடு, சென்னை.
 3. சண்முகதாஸ், தமிழ் மொழி இயல்பு, பாவை வெளியீடு, 2008.

 ========================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

லீலா திலகம், மணிப்பிரவாள மொழிநடையை விளக்குவதற்காக எழுந்த இலக்கணம். இக்கட்டுரையில் தொல்காப்பியம் கூறும் தோன்றல் புணர்ச்சி விதியை லீலா திலகத்தின் ஆகம சந்தி என்னும் புணர்ச்சி விதியோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார் கட்டுரையாளர். அதன் விளைவாகத் தொல்காப்பியத்தின் தோன்றல் புணர்ச்சி விதி தான் லீலா திலகத்தில் கூறப்பட்டிருக்கும் ஆகம சந்தி என்னும் புணர்ச்சி விதி என்று இக்கட்டுரையின் மூலம் நிறுவுகிறார். கட்டுரையில் பயன்படுத்திய நூல்களின் விவரங்கள், அவற்றின் பதிப்பு ஆண்டுகள் ஆகியவற்றை ஆய்வாளர் கட்டாயம்  பதிவு செய்ய வேண்டும்.

========================================

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “(Peer Reviewed) ஆகமம்

 1. ஆகமம் – சில குறிப்புகள்

  புணர்ச்சி விதிகள் பற்றிய கருத்துக்களை முன்வைக்க முயல்கிறது ஆய்வு கட்டுரை. பழமையான கிடைக்ககூடிய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் புணர்ச்சி விதிகளையும் வடமொழி நூலான லீலா திலகம் வெளிப்படுத்தும் புணர்ச்சி விதிகளையும் ஒப்பிடும் போக்கில் ஆய்வாளர் தனது கட்டுரையினை வழங்கியுள்ளார்.

  ஆகமம் ஒரு விளக்கம்
  ஆகமம் என்ற சொல்லானது புணர்ச்சி இலக்கணத்தைக் கூறுகின்ற சொல் என்பதை மேலும் கூடுதல் சான்றுகளுடன் எடுத்துக்கூற வேண்டும். ஏனென்றால் வழக்கில் ஆகமம், ஆகம விதிகள் என்ற சொற்கள் கோயில் கலாச்சாரத்தின் வலுவைப்பெற்று இன்று பரவலாகப் பின்பற்றி வருகின்ற சூழ்நிலையினை மேலும் சிந்திக்க துணையாக அமையும். இச்சொல் இலக்கண வழக்கை எவ்வாறு பெற்றது என்பதை எடுத்துக்கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  தொல்காப்பியம் – லீலா திலகம் – நூலாசிரியர்
  தொல்காப்பியம் ஆய்வாளர்களால் நன்கு அறியப்பட்ட நூலாக இருக்கிறது. இலக்கணமாக எழுத்து சொல் பொருள் என்ற வகையில் பொருளை அல்லது வாழ்க்கை நெறியை எடுத்துக்கூறிய பெருமை அனைவரும் அறிந்தது. ஆனால் லீலா திலகம் பற்றி எந்த நிலையிலும் அறிந்துகொள்ளுதல் என்ற வாய்ப்பு ஏற்படாத நிலையில் இந்நூலின் முக்கியத்துவத்தை மேலும் அதிகமாக எடுத்துக்கூறியிருக்கலாம். அதனைத் தெரிந்துகொள்ளும் விருப்பம் ஆய்வாளருக்கு ஏற்படுவது இயல்பானதாகும். அதேபோல நூலின் ஆசிரியர் பற்றிக் குறிப்புகளும் தென்படவில்லை. இதனையும் ஆய்வாளர் எடுத்துக்கூறியிருந்தல் சிறப்பாக அமைந்திருக்கும். ஆகையால் நூலின் அறிமுகமும் அதன் கட்டமைப்பு முறை, கருத்துச்செறிவு முறை போன்ற முக்கியச் செய்திகள் இருந்திருந்தால் மேலும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

  காலம்
  ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூல்களின் காலத்தை ஆய்வாளர் எடுத்துரைத்திருந்தால் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். தொல்காப்பியரின் காலமும் லீலா திலகத்தின் காலமும் எத்தகைய சூழலில் தன்வினை புரிக்கின்றன என்ற ஆய்வு பார்வை மிகவும் முக்கியமானதாகப் படுகிறது. ஆய்வாளர் வடமொழி நூலின் காலத்தைச் சிந்தித்தல் தெளிவு

  ஆய்வு செறிவு
  தனது ஆய்வில் தீPர்க்கமாகப் புணர்ச்சி விதிகளை எடுத்துக்கூற விளைந்த நிலையில் தொல்காப்பியர் புணர்ச்சி விதிகளுக்கு வழங்கிய முக்கியத்துவத்தை லீலா திலகம் நூலாசிரியர் வழங்க வில்லை என்று கூறுவது ஆய்வு பொருளைச் சிந்திக்க உட்படுத்துகிறது. கட்டுரையாளர் தனது ஆய்வுபொருளைத் தெளிந்து முன்மொழிய முயற்சிக்கவில்லையோ என்ற ஐயப்பாட்டைத் தோற்றுவிக்கிறார். மேலும்,
  உயிர் முன் உயிர் வந்தல் யகரம் வரும் என்ற நிலையில் சான்றாக கூறும் இடத்தில் காண்மூூஅதுஸ்ரீகாண்மூவது என்று வகரத்தைப் பயன்படுத்தி கூறியுள்ளார். மற்றொரு இடத்தில் பொய்க்குதிரை என்று எழுதியவர் அடுத்த சான்றை நீூகோழிஸ்ரீ நீர்க்கோழி என்று எடுத்துரைக்கிறார். இவ்விடத்தில் ர் என்ற ஒற்று எவ்வாறு வினையாற்றுகிறது என்பதை அறிவதில் சிக்கல் ஏற்படுகிறது.
  அதேபோன்று யரலவழள ஆகியவற்றின் முன் கசதப வந்தால் இரட்டும் என்று கூறிய நிலையில் நூற்பா எண்னை இருவேறு நிலைகளில் பதிவு செய்துள்ளார். முதலில் இவ்விதிக்கு லீ.தி.56 என்றும் பிறகு இதனையே குறிப்பிடும் நிலையில் லீ.தி.388 என்றும் எடுத்தாண்டுள்ளார். இத்தகைய குழப்பங்கள் தேவையில்லை என்று தோன்றுகிறது.
  ஆய்வாளரின் முயற்சிக்குப் பாராட்டுக்கள் என்றாலும் இது போன்ற கவனிக்கவேண்டிய சில முக்கியப் பண்புகளும் தேவைகளும் இருப்பதை உணரவேண்டும். மேலும் கருத்துப்பிழையும் ஏற்பாடாமல் இருந்தால் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.