நலம்…. நலமறிய ஆவல் (145)
-நிர்மலா ராகவன்
எதிர்மறைச் சிந்தனைகள்
ஒருவர் பல துறைகளிலும் வெற்றி பெற்றிருந்தால், `அவருக்குத்தான் தன்னைப்பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு துல்லியமாக இருக்கிறது!’ என்று வியந்து பாராட்டத் தோன்றுகிறது.
அவரைப் போன்றவர்கள் சிறு வயதிலேயே, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தமக்கு ஏன் ஓர் அசாதாரணமான உணர்வு ஏற்படுகிறது என்று அலசியிருப்பர்.
மூன்று, நான்கு வயதுக் குழந்தைகள் தாயிடம் பொய்யுரைக்கும்போது கவனித்துப் பாருங்கள். முகம் சுருங்கியிருக்கும். `தர்மசங்கடம்’ என்ற அவர்கள் நினைப்பு புரியும்.
அப்படி ஒரு முறை, என் மகள் கேட்டாள், “நான் ஏன் மூஞ்சியை இப்படி வெச்சுக்கறேன்?”
நான் லேசாகச் சிரித்தபடி, “அம்மாகிட்ட பொய் சொல்றோமேன்னு!” என்றேன். எந்த வயதானாலும், குற்ற உணர்ச்சி ஒருவரைப் பாடுபடுத்தும். (குழந்தைகள் பொய் சொல்வது தண்டனையைத் தடுக்கும் வழி. அதைப் பெரிதுபடுத்தாது விட்டுவிட்டால், தானே மாறிவிடுவார்கள்).
சுயமாகச் சிந்திக்கும் வயதில், எல்லா விஷயங்களிலும் பிறர் எதிர்பார்ப்பின்படி நடப்பது நமக்கே நாம் விலங்கிட்டுக்கொள்வதுபோல்தான். நாம் நினைத்ததை வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் போய்விடும். அப்புறம் சுதந்திரமான எண்ணமும் செயலும் ஏது!
பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கிறோமே என்றுதான் பலரும் குழம்புவார்கள்.
அதிலும், உடற்குறையுடன் இருப்பவர்களோ!
கதை
பதின்ம வயதான என் உறவினர் மகள் லல்லியை வெளியில் அழைத்துப் போயிருந்தோம்.
“எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள்!” என்றாள் மனத்தாங்கலுடன். பிறவி ஊனத்தால், ஒரு வித கைத்தடியின் உதவியுடன்தான் அவளால் நடக்கமுடியும்.
“நாமும் அவர்களைப் பார்க்கிறோமே! பிறரைப் பார்ப்பதற்குத்தானே வெளியில் வருகிறோம்!” என்று ஏதோ சமாதானம் சொன்னேன்.
“இல்லை, எனக்குத் தெரியும். அவர்கள் என்னைத்தான் உற்று உற்றுப் பார்க்கிறார்கள்!” என்றாள். இப்படிப்பட்ட எதிர்மறையான சிந்தனைகளே ஒருவரை மேலும் பலகீனமாக ஆக்குகிறது.
என்னைப் பார்க்காதீர்கள்!
நீச்சல் குளத்தில் ஒரு தமிழ் மாது நீச்சலுடை அணிந்து வந்திருந்தாள். `இதென்ன, கால், தொடை, முதுகு எல்லாம் தெரிகிறதே!’ என்று அவளுக்குத் தோன்றிப்போயிருக்க வேண்டும். இல்லை, குடும்பத்தில் யாராவது முகத்தைச் சுளித்திருப்பார்கள். ஆடையை தொடைப்பகுதியிலும், பின்புறத்திலும் அடிக்கடி இழுத்து விட்டுக்கொண்டாள்.
`இழுத்து இழுத்து விட்டுக்குமே..!’ என்று அவளைக்குறித்துப் பிறர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சில நாட்களுக்குப்பின் அவள் வருவது நின்றுபோயிற்று.
தாம் பருமனாகவோ, வழுக்கையாக இருப்பதையோ கேலி செய்துகொள்பவர்கள், `பிறர் சொல்வதற்குமுன் தாமே சொல்லிவிட்டால், அதன் பாதிப்பு குறையும்!’ என்று நினைப்பவர்களாக இருப்பார்கள்.
`என்ன நினைப்பார்களோ!’ என்று எந்த சந்தர்ப்பத்திலும் பயந்துகொண்டே இருந்தால், முழுமையான மகிழ்ச்சி கிட்டுவதில்லை. `நான் இப்படித்தான்! உங்களுக்கென்ன!’ என்று தன்னையே ஏற்றுக்கொள்பவருக்கு மனக்குறை இருக்காது.
`ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறாய்?’ என்று ஒரு பெண் தன் நண்பனிடம் கேட்க, `ஆமாம்!’ என்று நொடித்தான் அவன். `இப்போ இதுக்குப்போய் கவலைப்படச் சொல்றியா?’
எல்லாருக்கும் அவரவர்பற்றிய சிந்தனைதான். நாம் அஞ்சுவதுபோல்தானே அவர்களும் நாம் அவர்களைப்பற்றி என்ன நினைக்கிறோமோ என்று யோசிப்பார்கள்! இது புரிந்தால், அநாவசியமாக குழம்பத் தேவையில்லை.
தம்மை ஒருவர் வார்த்தைகளால் தாக்குமுன் தாம் முந்திக்கொள்ளலாம் என்று சிலர் பிறரிடம் குற்றம் காண்பார்கள். இவர்கள் தம்மைப்பற்றிச் சிந்திக்க அஞ்சுகிறவர்களாக இருப்பார்கள். அலசினால் மேலே எழும் குறைகளை, அவை உண்டாகக் காரணமாக இருந்த சம்பவங்களை மீண்டும் நினைவுகோர நேருமே! இப்போக்கினால் பலகீனம் அடைவது என்னவோ அவர்கள்தாம்.
சிறு வயதில் நமக்குப் பிடிக்காதவைகளை நிறைய அனுபவித்திருப்போம். அப்பிராயத்தில் தவறு செய்வதும் இயற்கை. அவைகளையே எண்ணி, எண்ணி மறுகியபடி வாழ்க்கையைக் கழித்தால் நரகம்தான்.
கதை
சிவநேசனைப் பொறுத்தவரை, ஆண்குழந்தைகளை அடித்தால்தான் ஒழுங்காக வளர்வார்கள். இந்த நம்பிக்கையுடன், அவரது பிள்ளைகள் வீட்டுக்குள் நடமாடும்போதுகூட, கையில் பிரம்புடன் அவர்களைப் பின்தொடர்வார்.
இப்படி வளர்ந்த நடராஜனுடன் பயமும் ஆத்திரமும் ஒருங்கே வளர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. வீட்டில் இருக்கவே பிடிக்காத நிலையில், நண்பர்கள் ஆறுதலாக இருந்தார்கள். `என் நண்பர்களுக்காக உயிரைக்கூடக் கொடுப்பேன்!’ என்பார், அடிக்கடி. அவர்கள் கேட்ட, கேட்காத உதவியைக்கூட வலியப்போய் செய்தார்.
ஆனால், தன் சக்திக்குமீறி பிறருக்காக உழைத்ததில், வீட்டில் தன் மனைவி மக்களிடம் சிடுசிடுப்பாகத்தான் இருக்க முடிந்தது. சிறுவயதில் அடைந்த இனம்புரியாத அச்சம், தனிமை, வருத்தம் எல்லாம் ஆட்டுவிக்க, தன்னைப்போல் துன்பமும் துயரமும் அனுபவிக்காதவர்களிடம் ஆத்திரப்பட்டார்.
இவரது போக்கைக் கண்டு வீட்டிலும் அலுவலகத்திலும் உள்ளவர்கள் பயந்து ஒதுங்க, `நான் யாருக்குமே ஒரு பொருட்டில்லை!’ என்று தோன்றிப்போயிற்று. ஒரு சிறு பிழை செய்தாலும், தடுமாற்றம், அவமானம்.
பிறருக்கு ஓயாது உதவுகிறவர்கள் ஏமாளிகளா?!
பிறர் தன்னைப்பற்றி அப்படி ஓர் எண்ணம் கொண்டிருப்பது நடராஜனுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. அதன்பின், `இப்போது முடியாது!’ என்று பணிவுடன் சொல்லக் கற்றுக்கொண்டார். ஆத்திரம் அவ்வப்போது தலைகாட்டினாலும், வெகுவாகக் குறைந்தது.
`நான் தவறு செய்தால், இனி யாரும் பரிகசிக்கவோ, தண்டிக்கவோ போவதில்லை. பிறருக்கு உதவி செய்தால் எனக்கு மகிழ்ச்சி என்றாலும், தக்கவர்களுக்கு மட்டும்தான் உதவ வேண்டும்,’ என்று தீர்மானித்து, சிறிது சிறிதாக அதை நடைமுறையில் கொண்டுவந்தால், ஒருவரது ஆத்திரம் மட்டுப்பட வழியிருக்கிறது.
உணர் திறன் வளர
தினமும் நம்மைப் பாதித்தவைகளைக் குறித்துவைத்தால், நாளடைவில் நம் உணர்வுகள் புரியவரும். எதையெல்லாம் அடைய விருப்பம் என்பதையும் எழுதலாம். காலப்போக்கில், அப்பட்டியல் மாறிக்கொண்டே போகும்!
நம்மையே ஆராய்ந்து நமக்குப் பிடித்தபடி மாற்றிக்கொண்டாலோ, அல்லது பிறர் சொல்வதைக் கேட்டாலோ, நன்மை விளையும். எப்படி என்கிறீர்களா? நம் பலம், பலவீனம் ஆகியவைகள் புரிந்துபோக, பலத்தைப் பெருக்கிக்கொள்ள முயற்சிகள் எடுக்கமுடியும்.
நம்முடன் நன்கு பழகி, புரிந்தவர்களிடம் நம்மை எடைபோடும்படி கேட்கலாம். ஆனால், அவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்க வேண்டியதில்லை. பிறருக்குத் தவறு என்று படுவது நமக்கு ஏற்புடையதாக இருக்கலாமே! `பிறர் இருக்கிறபடி இருக்கட்டும்!’ என்று விட்டால் இரு தரப்பினருக்கும் நிம்மதி.
நம்மை நாமே புரிந்துகொள்வது நம் தனித்தன்மையை நமக்கு உணர்த்துவதுடன், பிறரையும் புரிந்துகொள்ள வழி வகுக்கிறது. அவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றும் புரியும். அதனால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி நடக்கலாம்.
பிறர் நம்மை ஆட்டுவிக்க இடம் கொடுப்பானேன்! நாம் என்ன, பொம்மையா?