முதுமுனைவா் இரா. சங்கர்
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த் துறை தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
திருப்பத்தூா், வேலூா் மாவட்டம்

ஐந்திணையில்  பாலை நில உருவாக்கம்

சங்க இலக்கியம் ஐந்திணையை அடிப்படையாகக் கொண்டு அக்கால மக்களின் வாழ்க்கை முறையினைக் கூறும் வாழ்க்கைக் களஞ்சியமாகும்.  சங்க இலக்கியத்திற்கு முதன்மைப் பொருளாக விளங்குவது நிலமும் பொழுதுமே.  முதன்மைப் பொருளாக விளங்கும் நிலத்தினைச் சான்றோர்கள் நான்கு வகையாகப் பிரித்து ‘நானிலமென’ முறையாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலெனப் பெயா் வைத்திருந்தனா்.  இருப்பினும், சங்க இலக்கியங்களில் ‘பாலை’ என்கின்ற ஒருவகை நில அமைப்பினைச் சங்க இலக்கிய புலவா்கள் தம் பாடல்களில் புனைந்துள்ளதைக் காண்கிறோம். அத்தகைய நிலத்தைப் பற்றியும், அந்நில மக்களின் வாழ்வியல் முறைகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

நிலப் பாகுபாடு

இயற்கை சார்ந்த தமிழக நில அமைப்பை மலை, காடு, வயல், கடலென நான்கு கூறுகளாகப் பிரித்திருந்தனா். மலையும் மலை சார்ந்த பகுதியிலும் குறிஞ்சி மலா் சிறப்புற்ற காரணத்தினால் குறிஞ்சி நிலமென்றும்;  காடும் காடு சார்ந்த பகுதியிலும் முல்லை மலரின் அழகுமிக்க காட்சியினைக் கண்டு முல்லை நிலமென்றும்; வயலும் வயல் சார்ந்த பகுதியிலும் மருத மரத்தின் செழிப்பினைக் கண்டு மருத நிலமென்றும்; கடலும் கடல் சார்ந்த பகுதியிலும் உப்பங்கழிகளில் பூத்துக் குலுங்கும் நெய்தல் மலரின் அழகினைக் கண்டோர் நெய்தல் நிலம் என்றும் அந்தந்த நிலத்தின் அழகுமிக்க மலரினை நிலத்திற்குரிய பெயராக வைத்திருந்தனா்.

இதனைத் தொல்காப்பியா் ‘தமிழகத்தின் ஒட்டுமொத்த நில அமைப்பினை இயற்கையின் அடிப்படையில் நான்காகப் பிரித்திருந்தனா்’ என்பதை,

நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்

படுதிரை வையம் பாத்திய பண்பே(தொல்.பொருள்: அகம்: 2)

என்று, நடுவில் இருக்கின்ற பாலையைத் தவிர ஏனையவற்றைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலென நிலத்தினை நான்காகப் பிரித்து, பாலை நிலத்திற்கு நிலவரையறை செய்யாமல் விடுத்திருக்கிறார்.  இந்நூற்பாவிற்கு உரையெழுதிய உரையாசிரியா்கள் பாலை நிலத்தினைப் பற்றிப் பலவாறாகக் கருத்து கூறுகின்றனா்.

உரையாசிரியா்களின் கருத்து

தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணனார், “பாலை என்பதற்கு நிலம் இன்றேனும், வேனிற்காலம் பற்றி வருதலால், அக்காலத்தில் தளிரும் சினையும் வாடி நிற்பது.  பாலை என்பதோர் மரம் வேனிற் வெப்பத்திலும் காய்ந்து போகாமல் பூத்துக் குலுங்குவதால் அதன் சிறப்பு அந்நிலத்திற்குப் பாலையென்று பெயா் வைத்திருக்கின்றனா்” (தொல்.பொருள் உரை, இளம்பூரணனார்) என்று குறிப்பிடுகின்றார்.

வித்வான் இரா. மாணிக்கனார் ‘நிலத்தினை வளமுள்ள பகுதியாகப் பிரித்தலே நாட்டிற்கு நிறைவைத் தரும் எனக் கருதி, வளமுள்ள பகுதியாகிய மலை, காடு, வயல், கடல் என்பனவற்றை அடிப்படையாக வைத்தே நிலம் பகுக்கப்பட்டது என்றும்;  வளமில்லாப் பாலையையும் ஒரு பகுதியாகக் கொள்ளின் குறைவைத் தருவதாகும் எனக் கருதியே வளமற்ற பாலையை ஒரு பகுதியாகப் பிரிக்கவில்லை’ என்று கூறுகின்றார் (பாலை, கு. சொ. பொ.  ப. 110).

வௌ்ளைவாரணனார் பாலை நிலத்தைப் பற்றிக் கூறும் உரையில்  ‘பாலையென்பதற்கு நிலமில்லையாயினும் வேனிலாகிய காலம் பற்றி வருதலின், அக்காலத்துத் தளிரும் சினையும் வாடாமல் நிற்கும் பாலையென்னும் பெயருடைய மரம் உண்டாகலின் அச்சிறப்பு நோக்கிப் பாலையென்று பெயரிட்டனா்.  ஆகவே குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே வேனில் வெப்பத்தால் வளங்குறைந்து நடத்தற்கரியதாய் மாறிய காலத்துப் பாலையென வழங்கப்படும்’ எனக் கூறுகிறார் (தொல்.பொருள் – உரை ப.84).

இவ்வாறாக உரைகூறும் உரையாசிரியா்களின் கூற்றிற்கு இணங்க,

“——————- வெங்கதிர் வேந்தன்

தானலம் திருகத் தன்மையில் குன்றிய

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல் பிழந்து நடுங்குதுயர் உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்

(சிலம்பு. காடுகாண் காதை: 62-66)

என்ற சிலப்பதிகார அடிகளில் ‘வெவ்விய கதிர்களையுடைய அரசனான ஞாயிறு மாறுபட்டு நிலத்தைச் சுட்டெரிக்க, குறிஞ்சியும் முல்லையும் நல்லியல்பு கெட்டுப் பாலையென்ற தன்மையினைப் பெறும்’ என்று கூறுவதிலிருந்து பாலை நிலமென்பது குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த இடமென்பது புலனாகிறது.

உரிப்பொருள்

இயற்கையின் அமைவிற்கு ஏற்றாற்போல் நிலத்தினைப் பகுத்த தொல்காப்பியா், ஒழுக்கத்தினையும் திணை அமைப்பிற்கு ஏற்ப,

புணா்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்

 ஊடல் இவற்றின் நிமித்தம் என்றிவை

தேருங்காலை திணைக்குரிப் பொருளே

(தொல்.பொருள்.அகம்:16)

என ஐவகையாகப் பகுத்திருக்கிறார்.

மலையும் மலைசார்ந்த பகுதியில் புணா்தலுக்குரிய சூழல் மற்ற நிலங்களைக் காட்டிலும் மிகுதியாகக் கொண்டுள்ளமையால் புணா்தலும் புணா்தலுக்குரிய  நிமித்தமும் குறிஞ்சி நிலத்திற்குரிய ஒழுக்கமென்றும்; காடும் காடு சார்ந்த பகுதியில் ஆநிரைகளை மேய்த்தற் பொருட்டாகச் சென்ற ஆடவரை எதிர்பார்த்து மாலைப்பொழுதில் இல்லின்கண் தலைவி ஆற்றியிருப்பதால் ‘இருத்தலும் இருத்தல் நிமித்தமும்’ முல்லை நிலத்திற்குரிய ஒழுக்கமென்றும்; வயலும் வயல் சார்ந்த பகுதி நீா்ப் பாசனத்தின் பொருட்டு  செழிப்புற்று விளங்கியமையால் இந்நிலத்தில் வாழும் செல்வந்தா்கள் மனைவியை விட்டுப் பரத்தமை கொள்வதும், அதனை அறிந்த தலைவி தலைவனுடன் ஊடல் கொள்வதுமான நிகழ்வுகள் மிகுதியாகக் கொண்டிருந்தமையால் ‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’ மருத நிலத்திற்குரியது என்றும்; கடலும்  கடல்சார்ந்த பகுதியுமான நெய்தல் நிலத்தில் தலைவன் மீன் பிடித்தற்பொருட்டு கடல் பயணம் மேற்கொள்கின்ற பொழுது, அலைகடலின் நிலையை அறிந்து, தலைவன் திரும்புவானா? திரும்பமாட்டானா என்று வருந்திக்கொண்டிருப்பதால் ‘இரங்கலும், இரங்கல் நிமித்தமும்’ நெய்தல் நிலத்திற்குரியது என்று கூறும் தொல்காப்பியா், ‘பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ என்னும் ஒருவகை ஒழுக்கத்தினையும் உணா்த்துகிறார்.  இவ்வாறாக உணா்த்தப்பட்ட ஒழுக்கத்தின் நிலைதான் என்ன என்று எண்ணும்பொழுது, உரையாசிரியா்கள் ‘நான்கு நிலங்களிலும் வினையின் காரணமாகவோ, ஊடலின் காரணமாகவோ, பிரிதல் வேண்டிய சில காரணங்களினால், தலைவனும் தலைவியும் பிரிதலுண்டு; இதனை உணா்த்துவதாகப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும் அமைகிறது என்று கூறுகின்றார்.

எல்லா மக்களிடத்தேயும் இயல்பாக நடைபெறுகின்ற பிரிவைப் பற்றி ஓர் ஒழுக்கமாக உணா்த்திய தொல்காப்பியா், அதனைப் போன்றே அமையும் கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் உரிய ஒழுக்கத்தினைக் கூட்டி, ஒழுக்கத்தினையாவது ஏழாகக் கூறி இருக்கலாம்.  ஆனால் அவா் அவ்வாறாகக் கூறவில்லை. இதிலிருந்து தொல்காப்பியா் ஒழுக்கங்கள் திணையின் அடிப்படையில்தான் புனைந்துள்ளார் என்பது புலனாகிறது.  இதன் அடிப்படையில் பாலையென்கின்ற ஒருவகை நில அமைப்பு தொல்காப்பியா் காலத்தில் மறைமுகமாகப் புனையப் பெற்றிருக்கிறது என்பது உறுதியாகிறது.

இதனைக் காட்டிலும் இன்னமும் சிறப்பாக உணா்த்த வேண்டுமானால், பாலை நிலமென்பது நிலைத்து நிற்கும் தன்மையற்றது, குறிஞ்சியும் முல்லையும் வேனிற்காலத்தில் திரிந்தால் பாலை, மீண்டும் செழிப்புற்றால் அந்நிலம் முல்லையாகவும், குறிஞ்சியாகவும் மாறிவிடும் என்பதனை,

வாகைதானே பாலையது புறனே(தொல்.பொருள்.அகம்:73:1)

என்ற நூற்பாவில் ‘வாகையாகிய வெற்றி ஒரே மன்னனுக்கு நிலைத்திருப்பதில்லை பாலை நிலத்தினைப் போன்று மாறி மாறி வரும் தன்மையது என்பதை உணா்த்துவதாக இந்நூற்பா அமைகிறது.

கருப்பொருள்

வேனிற்காலத்து வெம்மையால் திரிந்த நிலமே பாலை என்பதை மறைமுகமாக உணா்த்திய தொல்காப்பியா், நிலங்களுக்குரிய கருப்பொருளை உணா்த்துவதில் பொதுத்தன்மை காட்டியதற்குக் காரணம் திரிந்த நிலத்திற்குப் பொருள் உணா்த்துவதில் உள்ள சிக்கலேயாகும்.  ஆகையால் அந்தந்த நிலத்திற்குரிய கருப்பொருளைத் தனித்தனியே கூறாமல்

தெய்வம் உணாவே மாமரம் புட்பறை

   செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

   அவ்வகை பிறவும் கருஎன மொழிப (தொல்.பொருள்.அகம்:20)

என்று, நிலம் எத்தனை வகையாக இருப்பினும், அந்தந்த நிலத்தில் உள்ள தெய்வம், உணவுமுறைகள், மரங்கள், பறவைகள், விலங்குகள், நீா்நிலைகள் மற்றும் இசைக்கருவிகள் போன்றவையே அந்நிலத்திற்குரிய கருப்பொருளாக விளங்குமெனக் கூறுகிறார்.

பொதுத் தன்மையாகக் கூறிச் சென்ற தொல்காப்பியரைத் தொடா்ந்த நாற்கவிராச நம்பி, அவா் விட்டுச் சென்ற குழப்ப நிலைக்குத் தீா்வுகாணும் வண்ணமாக, அந்தந்த நிலத்திற்குரிய கருப்பொருளைப் பற்றித் தெளிவாக விளக்குகிறார்.  அவற்றுள் பாலை நிலத்திற்குரிய கருபொருளாக,

கன்னி விடலை காளை மீளி

 இன்னகை எயிற்றி எயினா் எயிற்றியா்

 மறவா், மறத்தியா் புறவுபருந்து எருவை

 கழுகு செந்நாய் கல்கெழு குறும்பு

 குழிவறுங் கூவல் குராஅ மராஅ

 வழிஞ்சில் பாலை யோமை யிருப்பை

 வழங்குகதிர் பாலையாழ் பஞ்சுரம் வெஞ்சுரம்

 பகற் சூறை யாடல் பாலங் கருப்பொருள்(அ.பொ.வி:21)

என்று, ‘பாலை நிலத்திற்குரிய தெய்வம் கொற்றவையென்றும்; அந்நிலத்தில் வாழும் தலைமக்கள் விடலை, காளை, மீளியென்றும்; குடிமக்கள் எயினா், எயிற்றியா், மறவா், மறத்தியரென்றும்; வேனிற் வெப்பத்தினால் காய்ந்து போன நீா்நிலையும், மரங்களும், வலிமை இழந்த விலங்குகளும், பறவைகளும் பாலை நிலத்திற்குரிய கருப்பொருளெனக் கூறுகின்றார்.

இவ்வாறாகத் தொல்காப்பியரும், இளங்கோவடிகளும், நாற்கவிராச நம்பியும், உரையாசிரியா்களும் பாலை நிலத்தினைப் பற்றிக் கூறிய குறிப்புகள் யாவுமே, பாலை என்கின்ற ஒருவகை நிலம் திரிநிலமாக இருந்தது என்பதனை உறுதிப்படுத்துகின்றன. அத்தகைய திரிநிலமான பாலை நிலத்தின் தன்மையைச் சங்க இலக்கியப் பாடல்கள் பலவாறாக விளக்குகின்றன.

பாலை நிலத்தின் தன்மை

குறிஞ்சியும் முல்லையுமாய்ப் பூத்துக் குலுங்கும் சோலைவனம், மழை பொய்த்ததால் கதிரவனின் கதிர்வீச்சு பட்டு, பாலையாகக் காட்சி தரும் இந்நிலத்தில் வற்றிய சுனையும், வறண்ட நீா்நிலையும், காய்ந்த மரங்களும் கடத்தற்கரிய வழியுமாய் இருந்திருக்கிறது.

இந்நிலத்தினைப் பற்றி நச்சினார்க்கினியா், ‘பாலைத் தன்மையாவது காலையும் மாலையும் நண்பகலன்ன கடுமை கூரச் சோலை தேம்பிக் கூவல்மாறி, நீரும் நிழலும் இன்றி, நிலம் பயன்துறந்து புள்ளும் மாவும் புலம்புற்று இன்பமின்றித் துன்பம் பெறுவது’ (தொல். பொருள்.உரை – ப. 84) எனக் கூறுகிறார்.

நச்சினார்க்கினியாரின் கூற்றின்படி பாலைத் தன்மையினைக் கூறும் சங்கப் பாடல்களில் அந்நிலத்தினை நீரற்றது என்றும், வழிப் போக்கா்க்குத் துன்பம் தருவதென்றும், கொலைத் தொழில் புரியும் ஆறலைக் கள்வா் வாழும் பகுதியென்றும் கூறுகின்றனவேயன்றி அந்நிலத்தினை உயா்வாகக் கூறிய பாடல்கள் இல்லை.

இவ்வாறாகப் புலவா்களால் கொடிய தன்மையனவாகப் பாடப்பட்டதற்குக் காரணம், அந்நிலத்தின் சூழல், கொடிய தன்மை வாய்ந்ததாக விளங்கியமையே ஆகும்.  இக்கொடிய தன்மைக்குக் காரணம், வேனிற் வெம்மையே.

வெம்மை

வேனிற் வெப்பத்தினால் உண்டானதே பாலை நிலமாதலின் இந்நிலத்தில் வெம்மையின் கொடுமை மிகுதியாக இருந்திருக்கும்.  பாலை நிலத்தின் வேனிற் வெப்பத்தினை உணா்த்தும் பாடலாக,

உலைக்கல் அன்ன பாறை யேறிக்

கொடுவில் எயினா் பகழி மாய்க்கும் சுரம்(குறுந்:12:2-3)

என்ற குறுந்தொகை அடிகளில் ‘தலைவன் பொருளீட்டச் சென்ற பாலை வழியானது, கொல்லனது உலைக்களத்துள்ள பட்டடைக் கல்லைப் போன்று வெம்மையையுடைய பாறைகள் நிறைந்த காட்டில், எயினா்கள் தம் அம்பினைத் தீட்டிக் கொண்டிருப்பா்.  அத்தகைய கொடுமை வாய்ந்த பாலை நிலத்தின் வழியில் எம்மைப் பிரிந்து சென்றான் நம் தலைவன்’ எனத் தலைவி கூறுவதாக அமைந்த இப்பாடல், வேனிற் வெப்பத்தினைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

கொடுமையான வெப்பத்தினால் இந்நிலத்தில் காணப்படும் மரங்கள் யாவும் உலா்ந்த நிலையில், மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து தீப்பிடித்து காடெங்கும் பற்றி எரிந்து கரிக்காடாய் விளங்கியது என்பதை,

நிழல் கவின் இழந்த கவா் மரத்த (நற்:256:3)

என்ற நற்றிணையடி விளக்குகிறது.

இத்தகைய கொடுமை வாய்ந்த நிலத்தின் வழியாக உமணா்கள் உப்பு விற்கச் செல்கின்ற பொழுது, பாலை நிலம் வந்துவிட்டது என்பதனை அறிந்தவுடன் மனம் வருந்துவா் என்பதனை,

 “வேங்கை கொய்யுநா் பஞ்சுரம் விளிப்பினும்

   ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூவஉங்காடு (ஐங்:311:1-2)

என்ற ஐங்குறுநூற்று அடிகளில் ‘வேங்கை மலரினைச் சூடுதற்காக மரத்திலேறி மலா் கொய்யும் ஆயர் மகளிர், விளையாட்டின் காரணமாகப் பஞ்சுரம் என்னும் பாலைப் பண்ணைப் பாடுவதைக் கேட்டவுடன், இனி வருவது பாலைநிலமென வழிப்போக்கா் அஞ்சும் கொடிய தன்மை வாய்ந்த நிலமாக இருந்திருக்கிறது.

மணல்

தீப்பற்றி எறியாத இடங்களும் வறட்சியுடன் மணல் மிகுந்த பகுதியாகவும் பாலை நிலம் இருந்திருக்கிறது.  மழைக் காலங்களில் குறிஞ்சி நிலத்தில் பெய்த மழை, மருத நிலத்தினை நோக்கி வரும் காட்டாறு, வேனிற்காலத்தில் வற்றிப் போன நிலையில் மணற்பரப்பாக இருந்திருக்கிறது.  பாலை வனத்தினைப் போன்ற காட்டாற்றுப் பாதையில் மணல் காணப்படுவதால் இந்நிலத்திற்குப் பாலை நிலமெனப் பெயா் அமைந்திருக்கலாம்.  இயல்பான நிலங்களில் பாலைவனம் போன்று மிகுதியான மணல் இருந்தமையால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழகத்தில் அதிகமான மழையும் அதற்கு ஏற்றாற் போன்ற வெம்மையும் இருந்திருக்கிறது என்பதனை உணர முடிகிறது.

நீர்வழியில்லா மேட்டு நிலங்கள், நீரற்ற நிலையில் சூறாவளிக் காற்றுடன் புழுதி பறக்கும் தன்மையனவாக இருந்தது என்பதனை,

களிறு உதைத்து ஆடிய கவிர் கண் இடுநீறு

 வெளிறு இல் கார் வெலம் நீடிய

 பழங்கண் முது நெறி மறைக்கும்,

 வழங்க அருங் கானம் ——–” (நற்:302:7-9)

என்ற நற்றிணைப் பாடல் ‘மக்கள் நடந்து செல்லுதற்கு அரிய சுரவழியில், யானை நிலத்தைக் கால்களால் உதைத்து விளையாடியதால் எழும்பிய மிகுதியான புழுதி, வயிரமேறிய வேல மரங்களின் மீது மேலும் கீழுமாகப் படிந்து நிறம்மாறி நெருக்கமாக அமைந்திருக்கும்’ என்று மேட்டுநிலத்தின் தன்மையைக் கூறுகிறது.

பத்துப் பாட்டில் ஆற்றுப்படுத்துவதாக அமையும் ஆற்றுப்படை நூல்களில் பாலை நிலத்தினைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

நல்லியங் கோடனிடம் பரிசில் பெறுவதற்காக ஆற்றுப்படுத்தும் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், பாலை நிலத்தினைப் பற்றிக் கூறுவதாக,

வெயிலுருப் புற்ற வெம்பரல் கிழிப்ப

 வேனில் நின்ற வெம்பத வழிநாள்

 காலை ஞாயிற்றுக் கதிர்கடா வறப்ப

 பாலை நின்ற பாலை நெடுவழிச்

 சுரன்முதன் மரா அத்த வரிநிழல் அசைஇ” (சிறுபாண்.ஆ:8-12)

என்ற சிறுபாணாற்றுப்படை  அடிகளில் ‘அதிகாலையிலே நண்பகல்போல் வெப்பம் தரும் கதிரவன், அப்பாலை நிலத்திலுள்ள பரற்கற்களைச் சூடேற்றி, அந்நிலத்தின் வழியாக வருகின்றவா்களின் கால்களைக் கிழிக்கச் செய்யும் தன்மை வாய்ந்த பாலை நெடுவழியில், கடம்ப மரத்தினுடைய வரிநிழல் காணப்படும். அந்த நிழலில் சிறிது இளைப்பாறி, பின்னா் அவ்விடத்தினை விட்டுக் கடந்து சென்றால், நல்லியங்கோடனின் நாடு வரும்’ என்று உணா்த்தும் இப்பாடலடியில், பாலை நிலம் வெப்பமிக்கது என்றும், அவ்வழியில் பரற்கற்கள் மிகுதியாகக் காணப்படும் என்றும், இளைப்பாறுவதற்கு நல்ல நிழல் இருக்காது என்றும் பாலை நிலத்தின் தன்மையினைப் படம் பிடிக்கிறது.

இதனைப் போன்றே பெரும்பாணாற்றுப்படையில் பாலை நிலம் நீரற்ற தன்மையினை,

 “மான்அடி பொறித்த மயங்குஅதா் மருங்கின்,

 ……………………………………

 அருஞ்சுரம் இறந்த அம்பா்(பெரும்பாண்.ஆ:106-117)

என்ற அடிகளில், ‘மான்களின் அடிச்சுவடு பதிந்து கிடக்கும். மயங்குதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தில், மழை வறண்ட காலத்தில் நீா் பெறும்பொருட்டுத் தோண்டப்பட்ட பல குழிகள் காணப்படும்.  அக்குழிகளை ஆழக்  குழிதோண்டி, அதன் அகத்தே மறைந்தொடுங்கி, நடு இரவில், அகத்திப் பூப்போன்ற வளைந்த மருப்பினையுடைய பன்றிகள் நீருண்ண வரும் வருகையைப் பகுதிநேரம் பார்த்து நிற்பா் எயினா்.  அவ்வாறாக எதிர்பார்த்திருக்கும் எயினருக்குப் பன்றி வேட்டை கிடைக்கவில்லையென்றால், எஞ்சிய அரை நாளில் அங்காந்த வாயையுடைய நாய்களுடன், பசிய தூறுகளை அடித்துக் குவித்த இடத்தே வேலியில் தொடா் வலை கட்டி விடுவா். புதா்களினின்றும் வெளிவரும் முயல்களைத் தப்பிப் போக விடாமல் வலையினகத்தே வளைத்துப் பிடிப்பா்.  பின்னா் தறுகண்மையுடைய அக்காட்டில் வாழ்வோர் அவற்றைக் கூடித் தின்கின்ற நீா் வறண்ட, அரிய பாலைக் கடுஞ்சுரம்’ என்று கூறும் இப்பாடலில் பாலை நிலத்தின் நீரற்ற தன்மையினையும், அந்நிலத்தில் வாழும் மக்கள் இடைவிடாமல் வேட்டையாடும் தொழிலைச் செய்கின்றவா் என்பதனையும் விளக்குகிறது.

இவ்வாறாகப் பாலை நிலத்தின் தன்மையினைக் கூறும் பாலைப் பாடல்கள், புலவா்களோ, அந்நிலத்தின் வழியாகச் சென்று வந்தவா்களோ அந்நிலத்தின் தன்மையைக் கூறுவது போன்ற பாடல்கள் இல்லை.  தலைவன் பொருளீட்டப் பிரிவதும், அவன் பிரிவைத் தாங்காமல் தலைவி வருந்துவதுமாக அமையும் பாலைப் பாடல்களில், தலைவன் பிரிந்த வழி இவ்வாறெல்லாம் இருக்குமெனத் தலைவி நினைப்பதாகவே பல பாடல்கள் அமைந்திருக்கின்றன.

இலக்கியங்களில் இன்பியல் நிகழ்வைக் காட்டிலும் துன்பியல் நிகழ்வே முதன்மையிடத்தைப் பெறுகின்ற நிலையில், பிரிவைப் பற்றிப் புனையும் பாடல்கள் அப்பிரிவுத் துன்பத்தை மிகுவிப்பதற்காக வேண்டி மிகுவருணனை கொண்டிருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.  குறிப்பாக, இந்நில வருணனை புனையும் பல பாடல்கள், ‘அக்கொடிய நிலத்தின் வழியாகச் செல்வோர் ஆறலைக் கள்வரிடமிருந்து மீள்வது அரிது’ என்ற கருத்தினைப் புனைகின்றன.  இவ்வாறான வருணனை யாவுமே இக்காலச் சிறுகதை, நாவல் போன்று அக்காலத்தில் தோன்றிய உயா் கற்பனையே ஆகும்.  ‘பாலை நிலம் வறண்ட தன்மையால் அமைந்திருக்கலாம்,  அந்நிலத்தின் வழியாகச் செல்வோர்க்குத் தாகம் தீா்க்கத் தண்ணீரற்ற நிலை நிலவி இருக்கலாம், வறட்சியால் நீரற்ற நிலை நிலவியதால் எவ்வகையான விளைச்சலுமின்றித் தங்களின் உணவுத் தேவைக்காக வழிப்பறி செய்திருக்கலாமே தவிர, கொலை செய்தனா் என்பது சிந்திக்க வேண்டிய  கருத்தாக இருக்கிறது.

நீர் நிலைகள்

பாலை நிலத்தின் நீா் நிலைகளைக் குறிப்பிடும் பாடல்கள் பொய்த்துப் போன காட்டாற்றையும், வற்றிய சுனையையுமே குறிப்பிடுகின்றன. அந்நிலத்தில்  வாழ்கின்ற மக்களும், விலங்குகளும் தாகம் தீா்க்க மரப்பட்டைகளையும், வேனிற் காலத்தில் விளையும் நெல்லிக் கனியையும் தின்று தாகம் தீா்ப்பதாகப் பாடல்கள் புனையப்பட்டுள்ளன.

சுனை நீர்

காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்ற மக்களுக்குச் சுனை நீரே குடிநீராக இருந்திருக்கிறது. பாறைகளின் நடுவே நீா்த் தங்கும் அளவிற்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையைத் தான் சுனை என்கின்றனா்.  இவ்வாறான சுனைகள் இயற்கையாகவும் நீா்த் தேவைக்காகச் செயற்கையாகவும் அமைக்கப்பட்டிருக்கலாம்.

பாரியின் பறம்பு மலையிலுள்ள சுனைகள், வானத்திலுள்ள விண்மீன்களையொத்தன என்பதை,

“———————— வானத்து

மீன் கண் அற்று, அதன் சுனையே ஆங்கு (புறம்:109:9-10)

என்ற புறநானூற்றுப் பாடல் விளக்குகிறது.  வானத்திலுள்ள விண்மீனைப் போல் பாரியின் மலையில் சுனைகள் காணப்படுகின்றன என்பதனால், சுனைகள் எல்லாம் இயற்கையாக அமைந்தனவாக இருக்காது, செயற்கையாகவும் அமையப் பெற்றிருக்கும் என்பதனை உணா்த்துகிறது.

காடுகளில் வாழ்கின்ற மக்களுக்கு நீர் தரும் சுனை, குளம் போன்றவை அமைந்திருந்தன என்பதை,

சுனையெல்லாம் நீலம் மலர, சுனை சூழ்

  சினை யெலாம் செயலை மலர, காய்கனி

 உறழ நனை வெங்கை ஒள் இணர் மலர,

 மாயோன் ஒத்த இன் நிலைத்தே (பரி :15 : 30-33)

என்ற பரிபாடலில் ‘திருமாலிருஞ் சோலை மலையின்கண் சுனையிடமெல்லாம் நீலமலா் மலரவும் சுனையைச் சுற்றி நிற்கும் அசோக மரத்தின் கிளைகளில் மலா்கள் மலரவும், காட்சிக்கினிய தோற்றத்தினை உடையதாயிற்று’ என்று கூறுவதிலிருந்து சுனைகள் குளம் போல இருந்திருக்கின்றன என்பது புலனாகிறது.

இவ்வாறாக மழைக் காலங்களில் மலர்கள் பூத்துக் குலுங்கும் சுனைகள் வேனிற் வெப்பம் தோன்றியவுடன் நீர் வற்றிய சுனையாக மாறி அந்நிலத்தில் வாழ்கின்ற மக்களுக்கு நீர் கொடுக்காத நிலையினைப் பெற்றிருக்குமென்பதை,

சுவைக்காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கா்

 வீழ் கடைத் திரற் காய் ஓங்குடன் தின்று

 வீசுனை சிறுநீா் குடியினா்(நற்:14:5-7)

என்ற நற்றிணைப் பாடலில் ‘தலைவனுடன் உடன்போக்கு செய்த தலைவி பாலை நிலத்தின் வழியாகச் செல்கின்ற பொழுது, அவ்வேனிற் காலத்தில் விளையும் தன்மையுடைய நெல்லி மரத்தின் நெல்லிக்கனியைத் தின்று, வற்றிய சுனையில் உள்ள குடிநீரைக் குடித்தனா் என்று குறிப்பிடுவதிலிருந்து பாலை நிலத்திலுள்ள சுனை, பெரும்பாலும் வற்றியே காணப்படும் என்பது புலனாகிறது.

இத்தகைய தன்மை வாய்ந்த பாலை நிலங்களில் உள்ள சுனைகள் முற்றிலுமாகக் காய்ந்து போன நிலையில் காட்டாறு ஓடிய மணற் பாதையை அகழ்ந்து அதில் கிடைக்கும் ஊறல் நீரைக் குடிநீராகப் பயன்படுத்தியிருக்கின்றனா்.

மரங்கள்

பாலை நிலங்களில் காணப்படும் மரங்கள் யாவுமே காய்ந்து போனதும், புள்ளிய நிழலைத் தருவதுமான நிலையையே பாடல்களில் புனையப் பெற்றிருக்கின்றன.  இவ்வாறாகப் புனையப்பட்ட வருணனைகள் யாவுமே பாலை நிலத்தின் தன்மையைத் தலைவன் தோழிக்கு உரைப்பதாகவும், அந்நிலத்தின் வழியாகச் செல்கின்ற தலைவனை நினைத்துத் தலைவி வருந்துவதுமாகவே காணப்படுகின்றன.

உகாய் மரம்

பாலைப் பாடல்களில் அதிகமாகப் பேசப்படும் இம்மரம், சாம்பல் நிறத்தினைப் போன்ற அடிப்பகுதியையும் வேனிற் காலத்திலும் நிழல் தரும் தன்மை வாய்ந்தது என்பதை, பொருளீட்டி வருவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிய இருக்கும் தலைவனுக்குத் தோழி அறிவுரை கூறுவதாக அமையும்,

புல்லரை யுகாஅய் வரிநீழல் வதியும்

 இன்னா வடுதிறம் மிறத்தல்

 இனிதோ ———————(குறுந்:363:4-6)

என்ற குறுந்தொகைப் பாடலடிகளில் ‘பொருளீட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவனே! நீவிர் செல்லும் வழியில் கொடுமையான பாலை நிலம் உள்ளது.  அந்நிலத்தில் வாழும் எருது, செவ்விய தண்டினையுடைய அறுகினது நீண்ட கொத்தைக் காத்துத் தின்று, உகாய் மரத்தின் புள்ளிய நிழலில் தங்கும் கொடிய நிலமாகும்.  ஆதலால் பொருளீட்டுதலைக் கைவிடுவாயாக’ எனக் கூறுவதாக அமையும் இப்பாடல் வரியில், இயல்பாகவே மழையென்றும், வெயிலென்றும் பாராமல் வாழும் காட்டெருது, மிகுந்த வேனிற் வெப்பத்தினைத் தாங்காமல் மர நிழலில் தங்குகின்றனவென்றும், அரிய அவ்வழியில் மரங்களெல்லாம் உலா்ந்து போன நிலையில் புள்ளி நிழலே காணப்படுமென்றும் பாலை நிலத்தின் தன்மையை விளக்குகிறது.

கள்ளிமரம்

இயல்பான காலங்களில் புதா்ச்செடிகள் நிறைந்து காணப்படும் காடுகள், வேனிற் காலத்தில் கள்ளிக் காடாகக் காணப்பட்டன என்பதனை,

வள்ளிளெயிற்றுச் செந்நாய் வயவறு பிணவிற்

 கள்ளியங் கடத்திடைக் கேழல் பார்க்கும்(ஐங்:323:11-21)

என்ற ஐங்குறுநூற்று அடிகளில் ‘கூரிய பற்களையுடைய செந்நாய், கருவுற்றிருக்கும் பெண் நாய்க்கு ஊன் வழங்குதற்காகக் கள்ளிக் காட்டினூடே பதுங்கிக் கிடந்து பன்றியின் வரவினை எதிர்பார்க்கும்’ என்று கூறுவதிலிருந்து கள்ளி மரங்கள் நிறைந்த காடாக வேனிற்காலத்துப் பாலை நிலம் விளங்கியது என்பதனை உணர முடிகிறது.

வெட்பாலை மரம்

கள்ளிக்காடும், புள்ளி நிழலும், நீரற்ற நிலையுமாய் விளங்கும் பாலை நிலத்தில், மழைக் காலங்களில் பெய்த மழைநீரைத் தண்டுப்பகுதியில் சேகரித்து வைக்கும் தன்மையனவாக விளங்கும் வெட்பாலை மரம், வேனிற் காலத்தில் வெண்மையான பூக்களைப் பூக்கும் தன்மை வாய்ந்ததாகும். வேனிற் காலத்து நீரற்ற நிலையில், அந்நிலத்தில் வாழ்ந்த விலங்குகள், இம்மரத்தின் தண்ணீர் நிறைந்த தண்டுப்பகுதியைத் தின்று தாகம் தணிக்கும் என்பதை,

“———————- வள் உதிர்ப்

 பிடி பிறந்திட்ட நார்இல் வெண்கொட்டுக்

 கொடிறு போல் காய வால் இணர்ப்பாலை(நற்:107:1-3)

என்ற நற்றிணை அடிகளில், பெரிய நகத்தினையுடைய பெண்யானை, நீர் வேட்கையின் காரணமாகப் பாலை மரத்தின் பட்டையை உரித்துத் தின்றதால் நாரில்லாத வெண்மையான கிளைகளையுடைய இம்மரம், குரடுபோன்ற காய்களை உடையது என்பதனை விளக்குகிறது.

குரடு போன்ற, கனியாகும் தன்மை பெறாத இம்மரக்காய்கள் காய்ந்து வெடிக்கும் தன்மையவாகும் என்பதனை,

“————————– இலை தீர் நெற்றம்

கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்(நற்:107:4-5)

என்ற நற்றிணைப் பாடலடிகள் விளக்குகிறது.

 இருப்பை மரம்

பாலை நிலப் பாடல்களில் குறிப்பிடப்படும் மரங்களில் இவையும் ஒன்று.  இம்மரம் வேனிற்காலத்தில் பூக்கும் என்பதனை,

கான விருப்பை வெனல் வெண்பூ

வளிபொரு நெடுஞ்சினை யுகுத்தலின் ஆர்கழல்பு

 களிறுவழங்கு சிறுநெறி புதையும் (குறுந்:329:1-3)

என்ற குறுந்தொகை அடிகளில் ‘வேனிற் காலத்தில் வௌ்ளிய மலரினைப் பூக்கும் இருப்பை மரம், சூறாவளிக் காற்று வீசுதலால் பூக்களை உதிர்க்கும். அவ்வாறு உதிர்ந்த பூக்கள் யானைகள் செல்லும் சிறுவழியை மறைக்குமென்று

கொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுதின்,

வில்லோர் தூணி வீங்கப் பெய்த

அம்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை

செப்பு அடா; அன்ன தீம் புழல் தய்வாய்

உழுது காண் துறைய ஆகி, சூர் சுழல்பு

ஆலி வானின் காலொடு பாறி

துப்பின் அன்ன செங் கோட்டு இயவின்

நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பார்க்கும் (அகம்:9:1-9)

அகநானூற்றுப் பாடலடிகளில் ‘கொல்லும் தொழிலில் சிறந்ததும், கூா்மையானதும், குறும் புழுகு எனப் பெயா் கொண்டதும் வில்வீரா்களின் அம்பறாத் துணிகளில் மிகுதியாக இட்டு வைக்கப்படுவதுமாகிய குப்பியின் நுனிகளைப் போன்ற இருப்பை மரங்களின் மொட்டுகள் அரும்பின் செப்புத் தகடுகள் போன்ற அம்மரங்களின் சிவந்த தளிர்களெல்லாம் நெய்யைப் போன்ற வெண்மையாகக் காணப்படும் மலா்கள், வேனிற் காற்று வீசுவதால் மரக்கிளையிலிருந்து உதிர்ந்து பவளம் போன்ற சிவந்த மேடாகிய வழிகளில் வீழ்ந்து கிடப்பது குருதி மீது கொழுப்பு பரந்து கிடப்பது போல் காணப்படும்’ என்று கூறுவதிலிருந்து இம்மரம் வேனிற் காலத்தில் பூக்கும் தன்மையது என்பது புலனாகிறது.

மரா மரம்

குறிஞ்சி திரிந்த பாலை நிலத்தில் காணப்படும் கடம்ப மரமென்று அழைக்கப்படும் மரா மரம் வேனிற் காலத்தில் பூக்கும் தன்மையினைப் பெற்றதாகும்.  இம்மரம் வெண்மை பூவினையும், சிவந்த பூவினையும் பூக்கும் இரு வகை மரமாகும்.  வௌ்ளிய மலரினைப் பூப்பது வெண் கடம்பமென்றும், சிவந்த மலரினைப் பூப்பது செங்கடம்பமென்றும் அழைப்பர். மலையில் வாழ்கின்ற மக்கள் இம்மரத்தில் தெய்வம் இருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தனர்.  இதனை,

மன்ற மரா அத்த பெஎமுதிர் கடவுள்

 கொடியோர்த் தெறுஉ மென்ப (குறுந்:87:1-2)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள், ‘பொதுவிடத்திலிருக்கும் மராமரத்தில், கொடியோரைக் கொல்வதற்காக இறைவன் தங்கியிருக்கிறானென்று நம்பிக்கை கொண்டிருந்த குறிஞ்சி நில மக்கள், இம்மரத்தினடியில் மேடையிட்டு மன்றமாகக் கொண்டு வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்’ எனக் கூறுகிறது.

யா மரம்

வெட்பாலை மரத்தினைப் போன்றே மழைக் காலங்களில் கிடைக்கின்ற தண்ணீரைத் தண்டுப்பகுதியில் சேமித்து வைக்கும் இயல்பினைப் பெற்ற இம்மரம், நெடுங்காலம் நிலைத்திருக்கும் வைரம் பாய்ந்த மரமாக விளங்கியது என்பதை,

பொத்தில் காழ வத்த யா அத்துப்

பொரியரை முழுமுதல் உருவக் குத்தி(குறுந்:255:1-2)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் விளக்குகின்றன.

இம்மரப்பட்டைகள் வேனிற் காலத்தில் காய்ந்து போகாமல் நீா்த்தன்மைப் பெற்றிருப்பதால், யானைகள் இம்மரப் பட்டையைத் தின்று தாகம் தணிக்கும் என்பதை,

பிடிபசி அளைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்(குறுந்:37:2-3)

என்ற குறுந்தொகைப் பாடலடிகளில் ‘பெண்யானையினது பசியைப் போக்குவதற்காகப் பெரிய துதிக்கையுடைய ஆண்யானை மெல்லிய கிளைகளையுடைய யாமரத்தின் பட்டையை உரித்து அதன் நீரை அப்பிடிக்குக் கொடுத்து தாகத்தைத் தணிக்குமென விளக்குகிறது.

குறிஞ்சியும் முல்லையும் திரிந்த நிலம் பாலையாதலால், இவ்விரண்டு நிலங்களில் உள்ள அனைத்து மரங்களுமே பாலை நிலத்திற்குரிய மரங்களாகக் கொள்ளாமல், அவ்வேனில் வெப்பத்தினைத் தாங்காமல் மாய்ந்த மரங்களை விடுத்து, வெம்மையினைத் தாங்கி, புள்ளி நிழலையும் வரி நிழலையும் தரும் ஒருசில மரங்களைப் பற்றியே பாலைத் திணைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.  இவ்வாறாகப் பாலைத் திணைப் பாடல்களில் குறிப்பிடும் மரங்கள் யாவுமே வேனிற் காலத்து மலரும் தன்மை வாய்ந்தவையாகவே இருக்கின்றன.

பறவைகள்   

மரங்களின் நிலையைப் போன்றே, பல்வேறு வகையான பறவைகள் குறிஞ்சியிலும், முல்லையிலும் காணப்பட்டாலும், அவ்விரண்டு நிலங்களும் திரிந்த நிலமான பாலை நிலத்திற்குப் பறவைகளாகக் கணந்துள், எழால், பருந்து, வங்கா, புறா போன்றவற்றைக் குறிப்பிடுகின்றனா்.  மற்ற பறவைகளைக் குறிப்பிடாமல் இப்பறவைகளை மட்டும் குறிப்பிட்டமைக்குக் காரணம் வேனிற் வெப்பத்தினைத் தாங்கும் தன்மையைப் பெற்றமையாக இப்பறவைகள் விளங்கியமையே அதற்குக் காரணமாகும்.

கணந்துள்

[கணந்துள்–ஆள்காட்டி (Lapwing) – http://www.vallamai.com/?p=81865]

பாலை நிலத்தில் வாழும் இப்பறவை நீண்ட கால்களையும் ஓங்கிய குரலெழுப்பும் இயல்புடையதாக இருந்தது என்பதை,

பார்வை வேட்டுவன் படுவலை வொரிஇ

நெடுங் கால் கணந்துள்அம் புலம்பு கொள் தௌ் விளி

 சுரம் செல் கொடியா் கதுமென இசைக்கும்(நற்:212:1-3)

என்ற நற்றிணைப் பாடலடிகளில், ‘பாலை நிலத்தில் முயல் வேட்டைக்காகக் கட்டிய வலையைக் கண்டு நெடிய காலையுடைய கணந்துள் பறவை அச்சமுற்று மிகுந்த ஒலியெழுப்பும்.  அவ்வாறு கணந்துள் பறவைகள் கத்தும் ஓசை, பாலை நிலத்தின் வழியாகச் செல்லும் கூத்தா்கள் வழிச் செல்லும் வருத்தம் புலப்படாதவாறு திடீரென இசைக்கும் யாழிசையுடன் சோ்ந்து ஒத்து ஒலிக்கும்’ என்று கூறுவதில் கணத்துள் பறவை நீண்ட காலினையும் ஓங்கிய குரலையும் உடையது என்பது விளங்குகிறது.

கொடிய தன்மை வாய்ந்த பாலை நிலத்தின் வழியாகச் செல்வோர், இப்பறவைகள் கத்துவதைக் கேட்டவுடன் இப்பகுதியில் ஆறலைக் கள்வா்கள் இருக்கின்றனரென அறிவா் என்பதை,

நெடுங்காற் கணந்துள் ஆளறி வறீஇ

ஆறுசெல் வம்பலர் படைதலை பெயர்க்கும்(குறுந்:350:5-6)

என்ற குறுந்தொகைப் பாடலடிகள் விளக்குகின்றன.

பருந்து

பாலை நிலத்தில் வாழும் பறவைகளுள் ஒன்றான பருந்து, வானளாவி பறக்கும் தன்மை வாய்ந்தது.  நுண்ணிய பார்வையும் கூரிய வாயையுமுடைய இப்பறவை, நிணத்தினையே விரும்பி உண்பது. ‘ஆறலைக் கள்வா்களால் கொலை செய்யப்பட்ட வழிப்போக்கரின் நாறும் புலாலை விரும்பியுண்ணும் சிவந்த காதுகளையுடைய ஆண் பருந்து, நெருங்கிய தன் சுற்றத்தினை அழைத்துண்ணும்’ என்பதனை,

படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ்செவி

 எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்(அகம்:161:5-6)

என்ற அகநானூற்று பாடல் வரிகள் விளக்குகின்றன.

பாலை நிலத்து ஆறலைக் கள்வா் போன்ற கொடிய தன்மை வாய்ந்த இப்பறவை உயா்ந்த மரக்கிளையில் கூடுகட்டி, முட்டை ஈன்று அக்கூட்டைச் சுற்றி வரும் பெட்டைப் பறவைக்கு, ஆண்பறவை இரையாகக் குடிகளில் வளா்க்கப்படும் கோழிக் குஞ்சுகளையும், சிறு குருவிகளையும் எலிகளையும் கொண்டு வரும் கொடிய பறவையாக இருக்கிறது.

வங்கா

பாலை நிலத்தில் வாழும் இப்பறவை, சிவந்த கால்களையும் புல்லாங்குழலின் ஓசையைப் போன்ற குரலையும் உடைய பறவை என்பதை,

வங்காக் கடந்த செங்காற் பேடை

  எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது

 குழலிசைக் குரல் குறும்பல அகவும்(குறுந்:153:1-3)

என்ற குறுந்தொகை அடிகளில் ‘ஆண் வங்காப் பறவை இரை தேடுவதற்காகச் சென்றுவிட்ட பொழுது, தனித்திருக்கும் சிவந்த கால்களையுடைய பெண் வங்கா, புல்லூறு என்னும் பறவை தன்னை இரையாகக் கொள்வதற்கு நெருங்கி வருவதைக் கண்டு தம்முடைய கணவனாகிய ஆண் பறவையை வேய்ங்குழல் போன்ற குரலினால் அழைக்கும்’ என்று கூறுவதிலிருந்து இப்பறவை சிவந்த கால்களையும், வேய்ங்குழல் போன்ற குரலினை உடையதுவென்றும், புல்லூறு என்னும் ஒருவகைப் பறவைக்கு அஞ்சி வாழும் இயல்பினது என்றும் உணர முடிகிறது.

எழால்

புல்லூறு என்னும் எழால் பறவையும் பாலை நிலத்தில் வாழ்ந்திருக்கிறது.  இப்பறவையைப் பற்றித் தொல்காப்பியர்,

மயிலு மெழாஅலும் பயிலத் தோன்றும் (தொல்.பொருள்.மரபு:589)

என்ற நூற்பாவில் ‘ஆண்மயிலையும், ஆண் எழாலையும் போத்து என்று கூறப்பெறும்’ என்று கூறுவதிலிருந்து இப்பறவை மயிலைப் போன்ற பெரிய பறவையாக இருக்குமென உணர வைக்கிறது.

புறா

பாலை நிலப் பாடல்களில் அதிகப் புலவா்களால் பாடப்பெற்ற பறவையான புறா, குறுகிய கால்களையும் சாம்பல் நிறம் போன்ற சிறகுகளையும் உடையது.  வறட்சிக் காலங்களில் புலா்ந்த நிலத்திலுள்ள பொரிந்த தானியங்களைக் கொத்தித் தின்னும் தன்மை வாய்ந்தது.  வேனிற் காலத்திலும் திரண்டிருக்கும் கள்ளிமரத்தில் கூடுகட்டி வெண்மையான முட்டை ஈனுவது என்பதை,

“—————————– பாம்பின்

  உரிநிமிர்ந் தன்ன வுருப்பவிர் அமையத்து

  இரைவேட்டு எழுந்த சேவல் உள்ளிப்

  பொறிமயிர் எருத்தில் குறுநடைப் பேடை

  பொரிகாற் கள்ளி விரிகா யங்கட்டுத்

  தயங்க விருந்து புலம்பக் கூஉம்(குறுந்:154:1-6)

என்ற பாடலில் ‘பாம்பானது உரி மேலெழுந்தாற் போன்ற கானல் விளங்குகின்ற நண்பகற்காலத்தில், இரை தேடுவதற்காக மேலெழுந்து பறந்து சென்ற ஆண் புறாவை நினைத்து, முட்டை ஈன்ற புள்ளிகளையுடைய மயிர் பொருந்திய கழுத்தையும், குறுக அடியிடும் நடையினையுடையதுமான பெண் புறா, பொரிந்த அடியையுடைய கள்ளி மரத்தில் வருந்திக் கொண்டிருக்குமென்று கூறுவதிலிருந்து, புறா கள்ளி மரத்தில் கூடுகட்டி வாழும் பறவை என்பது விளங்குகிறது.

பாலை நிலங்களில் காணப்படும் பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும் சங்கப் பாடல்கள் யாவுமே, தலைவியை விட்டுப் பொருளீட்டுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன், அந்நிலத்தில் காணப்படும் பறவைகளின் அன்புப் பிணைப்பினைக் கண்டு வருந்துவதாகவே அமைந்திருக்கின்றன.

விலங்குகள்

சங்க இலக்கியப் பாலைப் பாடல்களில் பாலை நிலத்தில் வாழும் விலங்காக, வலிமை இழந்த யானை, வலிமையிழந்த புலி, வலிமையிழந்த செந்நாய், கரடி போன்றவற்றையே குறிப்பிடுகின்றனர்.

நிலம் திரியாக் காலங்களில் வலிமை வாய்ந்தவையாக இருக்கும் இவ்விலங்குகள், வேனிற் வெப்பத்தினால் காடழிந்த நிலையில் தேவையான இரை கிடைக்காததால் இவ்விலங்குகள் வலிமையிழந்து காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றன.

யானை

கரிய நிறத்தினையுடைய யானை, மலையில் வாழும் விலங்கினங்களுள் ஒன்று.  மலைகளில் விளைகின்ற தினையினை உண்ணுதலைக் காட்டிலும் மிதித்தலையே மிகுதியாகக் கொண்டிருக்கும் யானை, வேனிற் காலத்தில் புழுதிக் காடாகக் கிடக்கும் பாலை நிலத்தில் தாகம் தீர்க்கத் தண்ணீரின்றி கலங்கிய நீரை உண்ணுமென்பதை,

துடிஅடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்

 பிடி ஊட்டி பின் உண்ணும்  களிறு(கலி:11:8-9)

என்ற கலித்தொகைப் பாடலடிகளில் ‘துடிபோன்ற அடியினையுடைய ஆண்யானை, நீரற்ற பாலை நிலத்திலுள்ள கலங்கிய நீரைத் தான் உண்ணாமல் தன் பிடிக்குக் கொடுக்குமென்று கூறுவதிலிருந்து பாலை நிலத்தில் யானைகள் இருந்தன என்பது விளங்குகிறது.

செந்நாய்

பாலை நிலத்தில் வாழும் விலங்குகளை வேட்டையாடும் தன்மை வாய்ந்த செந்நாய், பசிய கண்களையும் நாய் போன்ற உருவமைப்பும் உடையது.  இத்தகைய கொடுமைத் தன்மை வாய்ந்த செந்நாயையும் நன்நாயாகப் புனைந்திருக்கும்,

ஈா்ம்பிணவு புணா்ந்த செந்நாய் ஏற்றை

 மறியுடைய மான்பினை கொள்ளாது கழிய

 மரிய சுரன் வந்தனரே” (ஐங்:354:1-3)

என்ற ஐங்குறுநூற்றுப் பாடல் ‘அன்புமிக்க நெஞ்சையுடைய பெண் நாயைப் புணா்ந்த செந்நாய், குட்டிகளையுடைய பெண்மானை இரக்கங் காரணமாக இரையாக வேட்டங்கொள்ளாமல் விட்டுச் செல்லும் பாலை நிலம்’ என்று கூறுவதில், பாலை நிலத்தில் செந்நாய் என்கின்ற ஒருவகை விலங்கு, மானைக் கொல்லும் தன்மையினவாக இருந்திருக்கிறது என்பதனை உணர முடிகிறது.

புலி

மலைகளில் வாழும் இவ்விலங்கு, யானையைத் தாக்குதலும், யானையால் தாக்கப்பட்டு வலி சோ்தலும் உண்டு.  யானை, செந்நாய், மரையினம் முதலியவற்றைக் கொன்று உண்ணும் கொடிய புலிக்கு உடலில் வளைந்த கோடும், கண்களில் செவ்விய நிறமும் உடையது.  இவ்விலங்கு நின்றபடியே இருபக்க நிகழ்வைப் பார்க்கும் தன்மை வாய்ந்தது.  இத்தகைய கொடுமைத் தன்மை வாய்ந்த இவ்விலங்கு, தான் கொன்ற விலங்குகளை மலைக் குகையிலே இட்டு வைத்திருந்ததென்பதை,

ஒலிகழை நிவந்த வோங்கமலைச் சாரல்

 புலிபுகா விறுத்த புலவுநாறு கல்லளை

 ஆறுசென் மாக்கள் சேக்கும்

கோடுயா பிறங்கன் மலை(குறுந்:253:5-8)

என்ற குறுந்தொகைப் பாடலில், ‘ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஒலிக்கின்ற மூங்கில்கள் ஓங்கி வளா்ந்த மலைப்பக்கத்தில், புலி தனக்குரிய உணவைச் சேகரித்து வைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கற்குகையினிடத்து, வழிப்போக்கா்கள் தங்குவா்’ என்று கூறுவதில் ‘வேட்டையாடுதலில் வீரமிக்க புலி, தான் கொல்லும் விலங்கு இடப்பக்கம் விழுந்தால், அவ்விலங்கின் நிணத்தைத் தின்னுதலைத் துறக்கும்.  அத்தகைய தன்மை வாய்ந்த புலி வேனிற்காலத்தின் வறட்சியினால் கிடைக்கின்ற நிணத்தினைக் கற்குகையில் சேகரித்து வைத்து உண்ணுமெனப் பாலை நிலத்தில் வாழும் புலியின் நிலையினைக் குறிப்பிடுகின்றது.

இவ்வாறாகக் கூறும் விலங்கின் நிலையாவுமே பாலை நிலத்தின் வறட்சியினை உணா்த்துவதாகவே அமைகிறது.

மக்கள்

பாலை நிலத்தில் வாழும் மக்கள் எயினா், எயிற்றியா், மறவா், மறத்தியா் என்று இலக்கண நூலாரும், உரையாசிரியா்களும் கூறுகின்றனா்.  இக்கருத்தினை ஏற்கும் வண்ணமாகப் பல சங்க இலக்கியப் பாடல்களில் எயினா், மறவா் என்னும் பெயா்க் குறிப்பு காணப்படுகிறது.

கொடுவில் எயினா் குறும்பிற்கு ஊக்கும்

 கடுவினை மறவா் வில்லிடத் தொலைந்தோர்

 படுபிணம் கவரும் பாழ்படு நனந்தலை(அகம்:319:3-5)

கொடுவில் எயினா் கோட்சுரம் படர(அகம்:79:15)

என்ற அகநானூற்று அடிகள், ‘பாலை நிலமக்கள் எயினா், மறவா்’ என்பதனை உணர்த்துகின்றன.

வேனிற் காலத்தில் மட்டும் பாலையாகக் காட்சி தரும் பாலை நிலத்தில், எயினா் எயிற்றியா் என்ற குடி நிலைத்திருந்தது என்பது ஏற்கத்தக்கதாக இல்லை.  இருப்பினும், சங்க இலக்கியங்களில் எயினா் பாலை நிலத்தில் வாழ்ந்தனா் என்ற குறிப்பு கிடைக்கிறது.  இதனடிப்படையில் பாலை நில மக்களாகக் கூறப்படும் எயினா் யார்? என்ற வினா நம்மிடையே தோன்றுகிறது.  அவ்வினாவிற்குப் பதில் கூறும் வண்ணமாகச் ச. கு. கணபதி அவர்கள், “நாட்டிலே அரசரது ஆணையை மதியாமல் கொலை, கொள்ளை, திருட்டு முதலிய குற்றங்களைச் செய்தவா்களை, அரசா் நாட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார். அவ்வாறாக மன்னனால் வெளியேற்றப்பட்ட அம்மக்கள் குடும்பங்களுடன் பாலை நிலத்திலே வாழ்க்கையை நடத்தக் குடிபுகுந்தனா்,  அம்மக்களே எயினராவா்.  குற்றம் புரிந்தவா்களைக் கொலை புரியும் அக்காலத்தில், அம்மக்களை மன்னன் கொலை புரியாமல், காட்டுப் பகுதியில் வாழ வைத்ததற்குக் காரணம் போர்க் காலங்களில் போருக்குப் பயன்படுத்துவதற்காகவே” என்று குறிப்பிடுகிறார். அப்போரிலே அம்மக்கள் மாண்டு போவதாக  நம்பிக்கை.

எயினர்

பாலை நிலமக்களைப் பற்றிச் சங்கப் பாடல்களில் எயினரெனப் பல குறிப்பு காணப்படுவதால், காடுகளிலும் மலைகளிலுமென இரண்டு பகுதியிலும் எயினரெனும் ஒருவகை குடி வாழ்ந்திருக்கலாம்.  அக்காடும் மலையும் திரிந்து பாலையாகிய காலத்து, காடுகளில் வாழ்ந்த ஆயரை நில மக்களாகக் கொள்வதா? அல்லது மலைகளில் வாழ்ந்த குறவரை நிலமக்களாகக் கொள்வதா? என்ற குழப்பம் நிலவியிருக்கும்.  இந்நிலையில் இரண்டு குடியிலும் சிறுகுடியாக வாழ்ந்த எயினா் குடி, இரண்டு நிலங்களும் திரிந்து ஒருநிலமாகிய காலத்து அந்நிலத்திற்குரிய பெருங்குடியாகி இருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.

குறிஞ்சியும் முல்லையுமே பாலையாதலால், குறிஞ்சியிலும், முல்லையிலுமென இரு நிலங்களிலும் வாழ்ந்த எயினரே இந்நிலத்திற்குரிய குடிமக்களாக இருந்தனா் என்பது தெளிவாகிறது.

துணைநின்ற நூல்கள்

 1. அகப்பொருள் விளக்கம், கோவிந்தராச முதலியார் (குறிப்புரை), திருநெல்வெலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை.
 2. ஐங்குறுநூறு, சோமசுந்தரனார், பொ. வே, திருநெல்வெலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை.
 3. கலித்தொகை, விசுவநாதன், அ., நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி) லிட், சென்னை.
 4. குறுந்தொகை, சண்முகம் பிள்ளை,மு., தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
 5. குறுந்தொகை, சாமிநாதையர், உ. வே., அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.
 6. சிலப்பதிகாரம், ஸ்ரீ சந்திரன், ஜெ., வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
 7. சிறுபாணாற்றுப்படை, சோமசுந்தரனார், பொ. வே., திருநெல்வெலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
 8. தமிழ் இலக்கிய வரலாறு, அடைக்கலசாமி, எம். ஆர்., ராசி பதிப்பகம், சென்னை.
 9. தமிழ் இலக்கிய வரலாறு, தொல்காப்பியம், வௌ்ளைவாரணனார், அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
 10. தெய்வங்களும் சமூக மரபுகளும், பரமசிவன், தொ., நியூ செஞ்சுரி புக் அவுஸ் லிமிடேட், சென்னை.
 11. தொல்காப்பியம் – பொருளதிகாரம், இளம்பூரணனார், சாரதா பதிப்பகம், சென்னை-600014.
 12. நற்றிணை, பாலசுப்பிரமணியன், கு. வே, நியூ செஞ்சுரி புக் அவுஸ்., சென்னை.
 13. வாழ்வியல் களஞ்சியம் (தொகுதி மூன்று), பாலுசாமி, ந. (பதிப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம்

================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

தமிழ் நில அமைப்பில் பாலை நில உருவாக்கம் பற்றிய தெளிவை முன்வைக்கும் தன்மையில் இக்கட்டுரை அமைந்துள்ளது. பாலை நில உருவாக்கத்தைத் தெளிவுபடுத்த, ஆய்வாளர் தொல்காப்பியம் மற்றும் நம்பியகப்பொருள் கூறும் நிலம் சார்ந்த செய்திகள், தொல்காப்பிய உரையாசிரியர்கள், வெள்ளைவாரணர் மற்றும் இரா.மாணிக்கனார் போன்றோர் கருத்துகள், சிலப்பதிகாரம் கூறும் வரையறை ஆகிய சான்றாதாரங்களைக் கொண்டு பாலை நிலம் உருவான தன்மையை விளக்கியுள்ளார்.

மேலும் பாலை நிலத்திற்கு வரையறை செய்யப்பட்ட உரிப்பொருள், கருப்பொருள்கள் சார்ந்து, சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பாடல் அடிகளைச் சான்றுகாட்டி  நிறுவியுள்ளார். குறிப்பாக எட்டுத் தொகையில் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள பாலை நிலம் சார்ந்த பதிவுகளையும் பத்துப் பாட்டில் ஆற்றுப்படை நூல்களில் இடம் பெற்றுள்ள பதிவுகளையும் சான்று காட்டியுள்ளார்.

பாலை நிலம் என்பதும் பாலை நிலமக்கள், பொருள்கள் என்பதும் தற்கால நாவல், சிறுகதைகளில் வரும் கற்பனை போன்றது என்று கூறுமிடத்து ஆய்வாளர் சற்று இன்னும் சிந்தித்துப் பதிவு செய்திருக்கலாம். இருப்பினும் ஆய்வாளர் பாலை நிலம் சார்ந்த ஒரு தெளிவை, இக்கட்டுரையை வாசிக்கும் வாசகர்களுக்குத் தரும் தன்மையில் அமைத்திருப்பது வரவேற்கத் தக்க ஒன்று. மேலும் இறையனார் அகப்பொருள், மாறன் அகப்பொருள், ஐந்திலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ள பாலை நிலம் சார்ந்த பதிவுகளையும் ஆய்வில் சுட்டிக் காட்டி இருப்பின் கட்டுரைக்குச் சிறப்பு சேர்த்திருக்கும். ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.

================================================

1 thought on “(Peer Reviewed) ஐந்திணையில்  பாலை நில உருவாக்கம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க