(Peer Reviewed) தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு

0

தி.மோகன்ராஜ்

(முனைவர்ப் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010)

(கட்டுரையாளர், தொல்காப்பியத் தொடரியல் நோக்கில் ஐங்குறுநூறு என்ற தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். இவரது மின் அஞ்சல் : mohr_d12@yahoo.co.in; கைப்பேசி : +91 99947 81727)

=================================

தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு

பெயர்ச்சொற்கள் தோற்றங்கொள்ளும் முறை

ஒரு மொழியில் பெயர்ச்சொற்கள் நான்கு வகைகளில் புதியனவாக ஆக்கிக் கொள்ளப்படுகின்றன என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்.  இதனைப் பெயராக்கம் (Derivation of nouns) என்று வழங்குவர்.  அவை

  1. பெயரிலிருந்து பெயராக்கம்
  2. வினையிலிருந்து பெயராக்கம்
  3. பெயரடையிலிருந்து பெயராக்கம்
  4. வினையடையிலிருந்து பெயராக்கம்

என்பனவாம்.

முருகன், அழகன், தமிழ்க்கல்வி, நூலகம், முருகக்கடவுள் போன்றன பெயரிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள். இந்த வகையை ‘Derivation of nouns from nouns’ என்று அழைப்பர். வளர்பிறை, பொங்கல், கற்றவன், பாடுநர் போன்றன வினையிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள்.  இந்த வகையை ‘Derivation of nouns from verbs’ என்று அழைப்பர்.  நன்னடை, இன்னிசை, நல்லொழுக்கம் போன்றன பெயரடையிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள்.  இந்த வகையை ‘Derivation of nouns from adjectives’ என்று அழைப்பர். தமிழிலும் வேறுபல மொழிகளிலும் வினையடையிலிருந்து பெயர்ச்சொற்கள் உருவாவதில்லை. ஒருசில மொழிகளில் மட்டுமே இந்த வகையில் பெயர்கள் தோற்றம் கொள்கின்றன. இந்த வகையை ‘Derivation of nouns from adverbs’ என்று அழைப்பர்.  இக்கட்டுரை, வினையிலிருந்து தோற்றங்கொள்ளும் பெயர்ச்சொற்களைப் (Derivation of nouns from verbs) பற்றித் தொடரியல் நோக்கில் ஆய்கிறது.

வினையிலிருந்து தோன்றும் பெயர்ச்சொற்கள்

தமிழ்மொழியில் வினையை உறுப்பாகக் கொண்டு தோற்றங்கொள்ளும் பெயர்ச்சொற்களை ஐந்து பெரும் பிரிவுகளுள் அடக்கலாம்.  அவை

  1. வினையடிப் பெயர்
  2. வினைத்தொகை
  3. ஆக்கப்பெயர்
  4. தொழிற்பெயர்
  5. வினையாலணையும் பெயர்

ஆகியன.  இவை வினைப்பெயர்கள் (Verbal nouns) எனப்படும்.  இந்த ஐந்து வகையான வினைப்பெயர்களின் தொடரிலக்கண இயல்புகள் ஒவ்வொன்றாக இக்கட்டுரையில் விளக்கப்பெறுகின்றன. (வினையடியின் விகுதி திரிந்து சில வினைகள், பெயரோடு இணைந்து பெயர்ச் சொற்களாக வரும். மண்வெட்டி, மரங்கொத்தி, தொலைபேசி, கடனாளி, தொழிலாளி போன்ற சொற்கள், அவ்வாறு உருவானவையே. இவை ஆக்கப்பெயர்களின்கீழ் அடங்குமெனினும் இக்கட்டுரையின் ஏனைய வகைப்பாட்டுச் சொற்களைப் போன்று சொல்லின் முதலில் நிற்காமல் இறுதியில் நிற்பனவாதலான் இக்கட்டுரையில் ஆராயப் பெறவில்லை.  இக்கட்டுரையின் வகைப்பாட்டில் கொள்ளப்பட்டுள்ள வினைகள் அனைத்தும் சொல்லின் முதலில் நிற்பன மட்டுமேயாம்.)

  1. வினையடிப் பெயர்

பொதுவாகப் பல மொழிகளில் காணப்படுவதைப் போன்று தமிழிலும் ஒருசில வினையடிகள் பெயராகவும் செயல்படுகின்றன.  அடி, அணி, அருள், உரை, அறை, பூ, காய் ஆகியன வினையடியே பெயராக வந்த பெயர்ச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளாகச் ச.அகத்தியலிங்கம் பட்டியலிடுகிறார் (ச.அகத்தியலிங்கம், 2011, ப.75).  இவை போன்று குத்து, கனி, ஆள் ஆகிய வினையடிகளும் பெயர்ச்சொற்களாகச் செயல்படும் தன்மை கொண்டவை.  இவை தமிழ் இலக்கணிகளால் முதனிலைத் தொழிற்பெயர்கள் என்று வழங்கப்படும்.

அட்டவணை-1: பெயராகவும் வினையாகவும் வரும் வினையடிகளின் எடுத்துக்காட்டுகள்

வ.எண் பெயராக வினையாக
1. அடி விழுந்தது நீ அவனை அடி
2. காதில் உள்ள அணி அழகாக இருக்கிறது இந்த நகையை நீ அணி
3. அருள்  கிடைத்தது இறைவா! எனக்கு அருள்
4. ஆற்றிய உரை  சிறப்பாக அமைந்தது நீ பதில் உரை
5. பூ மணக்கிறது முல்லை மாலையில் பூக்கும்
6. காய் வாங்கினேன் மாமரம் காய்த்தது
7. குத்து விட்டான் அவனைக் குத்து
8. கனி  சுவையாக இருந்தது பழம் நன்றாகக் கனிந்தது
9. ஓர் ஆள் வருகிறார் நீ இந்த நாட்டை ஆள்

இவ்வாறு தோன்றும் பெயர்கள், தங்கள் வினைத் தன்மையை இழந்து, முற்றிலும் பெயர்ச்சொல்லின் தன்மையைப் பெறுகின்றன. தொடரமைப்பில் இவை பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர் (Adjective phrase), பெயரெச்சக் கிளவியம் (Adjective clause), வேற்றுமை உருபுகள் ஆகியவற்றை ஏற்று ஒரு பெயர்ச்சொல்லுக்கான அனைத்துப் பண்புகளையும் பெற்று அமைகின்றன.

நல்ல அடி                               – பெயரடையை ஏற்றது

விழுந்த அடி                           – பெயரெச்சத்தை ஏற்றது

நல்ல பலமான அடி               – பெயரெச்சத் தொடரை ஏற்றது

அவன் அடித்த அடி               – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

அவன் அடியைத் தாங்கிக் கொண்டான் – வேற்றுமை உருபை ஏற்றது

ஓடு, நட, படி, கொடு போன்ற வினையடிகள் பெயர்ச்சொற்களாக அமைவதில்லை.  பூ, உரை, அடி, கனி போன்ற வினையடிகளே பெயர்ச்சொற்கள் ஆகின்றன.  இதன் மூலம் எல்லா வினையடிகளும் பெயராவதில்லை என்பதை அறியலாம் (பொற்கோ, 2011, ப.50).

  1. வினைத் தொகை

ஒரு வினையடி முதலில் நின்று ஒரு பெயர்ச்சொல்லோடு இணையும்போது வினைத்தொகை அமைப்பில் ஒரு பெயர்ச்சொல் உருவாகிறது. உயர்திணை, வளர்தமிழ், சுடுசோறு, அடுமனை ஆகியன வினைத்தொகைகள்.  வினைத்தொகை மூன்று காலத்தையும் குறிப்பாக உணர்த்தும் என்று இலக்கணவியலார் விளக்குவர்.  ஒரு பொருளின் தன்மையையே வினைத்தொகையின் வினையடி உணர்த்துகிறது என்று மொழியியலார் கருதுகின்றனர் (ச.அகத்தியலிங்கம், 2011, ப.75).  கொல்களிறு என்பது இலக்கணவியலாளர்களால் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு என்று விளக்கப்படும் நிலையில், மொழியியலார் கொல்லும் பண்பினை உடைய களிறு என்றே விளக்குவர் (செ.வை.சண்முகம், 2008, ப.75).  எவ்வாறு இருப்பினும் வினைத்தொகையாக அமையும் பெயர்ச்சொற்கள், வினையடியே பெயராக அமைந்த பெயர்ச்சொற்களைப் போன்று தமது வினைப் பண்பினை இழந்து பெயர்ச்சொல்லின் பண்பினையே கொண்டுள்ளன.

சுவையான சுடுசோறு                        – பெயரடையை ஏற்றது.

கொதித்த சுடுசோறு                            – பெயரெச்சத்தை ஏற்றது

நல்ல சுவையான சுடுசோறு          – பெயரெச்சத் தொடரை ஏற்றது

அவன் வடித்த சுடுசோறு                  – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

அவன் சுடுசோற்றை உண்டான் – வேற்றுமை உருபை ஏற்றது.

 

  1. ஆக்கப்பெயர்

வினையடிகளுடன் ஒருசில விகுதிகள் சேர்ந்து ஆக்கப்பெயர்கள் உருவாகின்றன.  அம், நர், அல், கை, வி, வை என்பன போன்ற பல விகுதிகளைக் கொண்ட ஆக்கப்பெயர்கள் தமிழில் உள்ளன. உயரம், ஓட்டுநர், வறுவல், அழுகை, கல்வி, பார்வை போன்ற ஆக்கப்பெயர்கள், அவ்வாறு உருவானவையே. இவையும் மேற்கண்ட வினையடிப் பெயர்கள் மற்றும் வினைத்தொகைகளைப் போன்று முழுமையாகப் பெயரின் தன்மையையே பெற்றிருக்கின்றன.

நல்ல கல்வி                                 – பெயரடையை ஏற்றது

உயர்ந்த கல்வி                        – பெயரெச்சத்தை ஏற்றது

நல்ல திறமான கல்வி         – பெயரெச்சத் தொடரை ஏற்றது

நான் கற்ற கல்வி                   – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

கல்வியால் உயர்ந்தான்   – வேற்றுமை உருபை ஏற்றது

 

  1. தொழிற்பெயர்

தொழிற்பெயரும் ஆக்கப்பெயரைப் போன்றே வினையடிகளுடன் ஒருசில விகுதிகள் சேர்வதன் மூலம் உருவாகிறது. தல், அல் போன்ற பல விகுதிகளைக் கொண்ட தொழிற்பெயர்கள் தமிழில் காணப்படுகின்றன. வாழ்தல், ஓடுதல், ஓடல் ஆகியன தொழிற்பெயர்கள் ஆகும். மேற்கண்ட வினையடிப் பெயர்கள், வினைத் தொகைகள், ஆக்கப்பெயர்கள் போன்றல்லாமல் இவை தமது வினைத்தன்மையை முழுதும் இழக்காமலேயே பெயர்களாக அமைந்துள்ளன. அதாவது வேற்றுமை உருபுகளை ஏற்கும் அதே வேளையில் தொடரமைப்பில் இவை பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்காமல் வினைச்சொற்களைப் போன்று வினையடை, வினையெச்சம், வினையெச்சத் தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றையே ஏற்று வருகின்றன (நுஃமான், 2013, ப.69).

அவன் ஓடுதலை விரும்பினான்       – வேற்றுமை உருபை ஏற்றது

நன்றாக ஓடுதல் (நல்லது)                      – வினையடையை ஏற்றது

எழுந்து ஓடுதல் (நல்லது)                        –  வினையெச்சத்தை ஏற்றது

மிகவும் நன்றாக ஓடுதல் (நல்லது)  – வினையெச்சத் தொடரை ஏற்றது

அவன் சொல்லும்போது ஓடுதல் (நல்லது)  –  வினையெச்சக் கிளவியத்தை ஏற்றது

மேலும், வினைகள் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவி வருவதைப் போன்று தொழிற்பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவி, வாக்கியத்தில் இடம் பெறுகின்றன.

அவனோடு ஓடுதல் (நல்லது)           – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

மைதானத்தில் ஓடுதல் (நல்லது)     – ஏழாம் வேற்றுமையோடு வந்தது

மேற்கண்ட தொடர்களை ‘ஓடுதல் அவனோடு நல்லது’ என்றும் ‘ஓடுதல் மைதானத்தில் நல்லது’ என்றும் வேற்றுமை ஏற்ற பெயரின் இடத்தை மாற்றியமைத்தால் பொருள் முழுவதுமாக மாறிவிடும். வேற்றுமையை ஏற்ற பெயர்கள் வினையைத் தழுவுவன போன்று இங்குத் தொழிற்பெயர்களையே தழுவி வந்துள்ளமை இதனால் பெறப்படும். (விகுதி பெற்ற தொழிற்பெயர்கள், விகுதி பெறாத தொழிற்பெயர்கள் என்று தொழிற்பெயர்கள் இருவகைப்படும். இத்தலைப்பின்கீழ் ஆராயப்பட்டுள்ள தொழிற்பெயர்கள் விகுதிபெற்ற தொழிற்பெயர்கள் ஆகும்.  விகுதிபெறாத தொழிற்பெயர்கள் மேலும் இரண்டு வகையாகப் பகுக்கப்படும். அவை முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.  அவற்றுள் முதனிலைத் தொழிற்பெயர்கள் வினையடி என்ற தலைப்பின் கீழ் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.  முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள் முதனிலைத் தொழிற்பெயர்களைப் போன்றே வாக்கியத்தில் செயற்படும் தன்மையன.)

  1. வினையாலணையும் பெயர்

காலம் (தெரிநிலை, குறிப்பு), திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வினைமுற்றே பெயராக அமையின் அது வினையாலணையும் பெயர் எனப்படும். பெயர்ச்சொற்களில் ஒன்றாக இதனைத் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது (தொல்காப்பியம். நூ.70).  இவை மூவிடங்களிலும் வரும் (நன்னூல், நூ. 286).

செய்தேன் வந்தேன் – தன்மை இறந்தகால வினையாலணையும் பெயர்

செய்கிறாய் வா         – முன்னிலை நிகழ்கால வினையாலணையும் பெயர்

செய்வன வந்தன      – படர்க்கை எதிர்கால வினையாலணையும் பெயர்

படர்க்கையில் ஐம்பாலுக்கும் உரிமையாக வரும்.

ஓடுபவன் வந்தான்

ஓடுபவள் வந்தாள்

ஓடுபவர் வந்தனர்

ஓடுவது வந்தது

ஓடுவன வந்தன

வினையாலணையும் பெயர்கள் காலம் காட்டும் தெரிநிலை வினையிலும் காலம் காட்டாத குறிப்பு வினையிலும் தோன்றும். வந்தவள், வருகிறவள், வருபவள் என்று முக்காலத்திலும் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள் வரும்.  நல்லவன், நல்லவள், நல்லவர், நல்லது, நல்லன என்று குறிப்பு வினையாலணையும் பெயர்கள் அமையும்.

தொடரமைப்பில் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள் தொழிற்பெயர்களைப் போன்றே செயற்படுகின்றன. அதாவது, வினையடை, வினையெச்சம், வினையெச்சத்தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றையே ஏற்றுவருகின்றன.

நன்றாகப்  படிப்பவன் (வருகிறான்) – வினையடையை ஏற்றது
முனைந்து  படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சத்தை ஏற்றது
எதையும் நன்றாகப் படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சத் தொடரை ஏற்றது
நான் சொல்லும்போது படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சக் கிளவியத்தை ஏற்றது

 

குறிப்பு வினையாலணையும் பெயர்கள், தொடரமைப்பில் வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப்பெயர்களைப் போன்று பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.  தெரிநிலை வினையாலணையும் பெயர்களுக்கும் குறிப்பு வினையாலணையும் பெயர்களுக்கும் இடையில் தொடரியல் நிலையில் இது முக்கியமான ஒரு வேறுபாடாக அமைகிறது.

சிறந்த நல்லவன் (வந்தான்)                     – பெயரடையை ஏற்றது

படித்த நல்லவன் (வந்தான்)                     – பெயரெச்சத்தை ஏற்றது

மிகவும் சிறந்த நல்லவன் (வந்தான்) – பெயரெச்சத் தொடரை ஏற்றது

நான் பார்த்த நல்லவன் (வந்தான்)      – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

தெரிநிலை மற்றும் குறிப்பு வினையாலணையும் பெயர்கள் ஆகிய இரண்டும் தொழிற்பெயர்களைப் போன்று வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வருகின்றன.

தமிழைப் படித்தவன் (வருகிறான்)     – இரண்டாம் வேற்றுமையோடு வந்தது

தமிழால் உயர்ந்தவன் (வருகிறான்)   – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

மேற்கண்ட தொடர்களில் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள், வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வந்துள்ளன.

பண்பால் நல்லவன் (வந்தான்)        – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

கையில் வாளினன் (வந்தான்)         – ஏழாம் வேற்றுமையோடு வந்தது

மேற்கண்ட தொடர்களில் குறிப்பு வினையாலணையும் பெயர்கள் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வந்துள்ளன.

இவ்விருவகைப் பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வருவதோடு மட்டுமன்றி வேற்றுமை உருபுகளையும் ஏற்றுவரும் பெற்றியன.

படித்தவனைப் பார்த்தேன்  –  தெரிநிலை வினையாலணையும் பெயர்

வேற்றுமையை ஏற்றது

நல்லவனைப் பார்த்தேன் –    குறிப்பு வினையாலணையும் பெயர்

வேற்றுமையை ஏற்றது.

முடிவுத் தொகுப்பு

இக்கட்டுரையினால் அறியலாகும் முடிவுகளைக் கீழ்வருமாறு பட்டியலிடலாம்.

  • தமிழில் பெயராக்க வகைகளில் வினையிலிருந்து தோன்றும் பெயர்கள் என்ற வகையும் ஒன்றாகும்.
  • வினையிலிருந்து தோன்றும் பெயர்கள் ஐந்து திறத்தன. அவை வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப்பெயர், தொழிற்பெயர், வினையாலணையும் பெயர் என்பனவாகும்.
  • வேற்றுமை உருபுகளை ஏற்றல், இந்த ஐவகைப் பெயர்களுக்கும் பொதுப் பண்பாக உள்ளது.
  • வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப் பெயர், குறிப்பு வினையாலணையும் பெயர் ஆகிய நான்கும் தொடரியல் அமைப்பில் பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.
  • தொழிற்பெயர்களும் தெரிநிலை வினையாலணையும் பெயர்களும் தொடரியல் அமைப்பில் வினையடை, வினையெச்சம், வினையெச்சத் தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.
  • வினையாலணையும் பெயர் மட்டும் காலம் (தெரிநிலை வினை மட்டும்), திணை, பால், எண், இடம் ஆகியவற்றைப் பெற்றுப் பெயராக அமைகின்றது.
  • வினைகள் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவுவது போன்றே தொழிற் பெயர்களும் வினையாலணையும் பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வாக்கியங்களில் அமைகின்றன. இத்தன்மை வினையடிப் பெயர்கள், வினைத்தொகை மற்றும் ஆக்கப்பெயர்களுக்கு இல்லை.

 

உசாத்துணை

  • அகத்தியலிங்கம், சு., முனைவர், (2011). தமிழ்மொழி அமைப்பியல், சிதம்பரம் : மெய்யப்பன் தமிழாய்வகம்
  • ஆறுமுக நாவலர், (2011). நன்னூல் காண்டிகையுரை, சொல்லதிகாரம், சென்னை : முல்லை நிலையம்
  • நுஃமான், எம். ஏ., (2013). அடிப்படைத் தமிழ் இலக்கணம், கொழும்பு : பூபாலசிங்கம் புத்தகசாலை
  • பொற்கோ, டாக்டர், (2011). இலக்கண உலகில் புதிய பார்வை, தொகுதி 1, சென்னை : நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்
  • சண்முகம், செ.வை., (2011). தொல்காப்பியத் தொடரியல், சென்னை  : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
  • தொல்காப்பியம், சேனாவரையர் உரை, (2012). சென்னை : சாரதா பதிப்பகம்

====================================================

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

தமிழில் வினைப்பெயர்கள் ஒரு தொடரியல் ஆய்வு என்னும் தலைப்பில் அமைந்துள்ள இக்கட்டுரை, சொல்லாக்க அடிப்படை மற்றும் தொடர் அமைப்பு நோக்கில் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக வினை வடிவங்கள் பெயர்களாகச் செயல்படும் தன்மையைச் சுட்டிக் காட்டி, அச்சொற்கள் எவ்வாறு தொடர்களில் பயின்று வருகின்றன என்பதைச் சான்றுகளுடன் விளக்கிக் கூறுகிறது. பெயர்ச்சொற்கள் ஆக்கம் பெரும் தன்மையின் நான்கு பகுப்புகள், சொல்லாக்கம் சார்ந்த அடிப்படையில் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றான வினையிலிருந்து பெயராக்கம் என்பதன் அடிப்படையில் வினை வடிவங்களின் வகைகள், அவற்றின் மூலம் ஆக்கம் பெறும் பெயர்கள், அவை எவ்வாறு தொடர்களில் பயின்று வந்துள்ளன என்பது குறித்து மிகவும் தெளிவாகவும் படித்தவுடன் புரிந்துகொள்ளும் தன்மையிலும் மிக எளிய நடையில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்னும் உத்தி முறையில் ஆய்வாளர் தனது கட்டுரையை அமைத்துள்ளார். ஆய்வாளர் மேலும் இதுபோன்ற ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, தமிழ் ஆய்வுலகிற்கு நலம் பயக்கும். ஆய்வாளருக்கு வாழ்த்துகள்.

====================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *