காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 2

-மேகலா இராமமூர்த்தி

மாந்தக் கூட்டத்தின் ஆதிகுடிகள் மலைப்பகுதியை வாழ்விடமாகக் கொண்ட குறிஞ்சிநில மக்களே எனினும் காலப்போக்கில் மக்கட்தொகை பெருகப் பெருக அவர்கள் மெல்ல நகர்ந்து புலம்பெயர்ந்து  மலையை அணித்தேயிருந்த காட்டுப் பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். இதனையே முல்லைநிலம் என மொழிகின்றது தமிழ். இயற்கையோடு இயைந்து இனிமையாய் வாழ்வதற்கு ஏற்ற சூழலும் மலைப்பகுதியைவிடக் காட்டுப் பகுதியிலேயே மிகுதி. எனவே முல்லைநிலம் மனித நாகரிக வளர்ச்சியில் மகத்தான பங்காற்றியிருக்கின்றது என்பதை மறுக்கவியலாது.

காட்டுப்பகுதியில் குடியேறி வாழத் தொடங்குவதற்கு முன்னரே மனிதர்கள் விலங்குகளை வளர்க்கப் பழகியிருந்தனர். எனவே முல்லைநிலத்தில் ஆனிரைகளையும், ஆடுகளையும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வளர்க்கத் தொடங்கினர். ஆதலால், ’ஆயர்கள்’ எனும் பெயர் இந்நிலமக்களைக் குறிக்கும் அடையாளப் பெயராயிற்று.

மாடுகளை வளர்ப்பது, அவற்றினால் கிடைக்கும் பால்படு பொருள்களைப் பிறருக்கு விற்பது என்று ஆரம்பித்துச் செல்வ வளம் மிக்கதாய் இம்மக்களின் வாழ்க்கை மாறத் தொடங்கியது. ’மாடு’ என்றாலே ’செல்வம்’ என்ற பொருள் இதனால்தான் ஏற்பட்டது. வான்புகழ் வள்ளுவரும்,

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
’மாடல்ல மற்றை யவை’
எனும் குறளில் ’மாடு’ என்பதைச் செல்வத்துக்கான மாற்றுச்சொல்லாய்ப் பயன்படுத்தியிருப்பது ஈண்டு நினையற்பாலது.

முல்லைநிலத்தின் தலைவனான ஆண்மகன், ’கோன்’ என்று அழைக்கப்பட்டான். பின்னாளில் ’கோன்’ எனும் சொல் நாட்டை ஆண்ட மன்னனுக்கும் ஆகிவந்தது.

”வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்” என்ற பாடலில்  ஔவை, கோன் என்ற சொல்லை மன்னனுக்குப் பயன்படுத்தியிருக்கக் காண்கின்றோம்.

மந்தைகளை மேய்க்கப் பயன்பட்ட கோலே பின்னாளில் அரசனின் செங்கோலாயிற்று. அத்தோடு சமூகத் தலைமையும் மெல்ல மெல்லப் பெண்கள் கையிலிருந்து ஆண்கள் கைக்கு இடமாறுவதற்கு முல்லைநிலச் செல்வ வாழ்க்கை வழியமைத்துக் கொடுத்தது. பெண்களுக்கு மட்டுமே ’அதிகம்’ வலியுறுத்தப்படும் கற்புக் கோட்பாடு தோற்றம்பெற்றதும் இங்குதான்!

முல்லை சான்ற கற்பின் மெல்லியள் குறுமகள்” (அகம்-274) என்று முல்லைநிலப் பெண்ணின் கற்பு உயர்த்திப் பேசப்படுவதைச் சங்கப் பாடல்கள் சான்றாய் நின்று விளக்குகின்றன.

முல்லைநில இளநங்கையொருத்தியை மணங்கொள்ளுதற்கு ஏறு தழுவுதலில் ஓர் ஆடவன் வெற்றிபெற வேண்டும் எனும் நிபந்தனையும் இந்நிலத்தில் விதிக்கப்பட்டதனை முல்லைக்கலி வாயிலாய் அறிகின்றோம்.
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை  மறுமையும்
புல்லாளே ஆயமகள்”
(கலி-103) என்று ஆயமகளின் வீரவுள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றது முல்லைக்கலிப் பாடல்!

தலைவன் பொருள்தேடவோ, அரசனுக்குப் பணிசெய்யவோ அல்லது கல்விகற்றிடவோ பிரிந்துசென்றிடும் காலத்தில் ’எப்போ வருவாரோ எந்தன் கலிதீர?” என்று அவனை எதிர்பார்த்து இல்லிலிருந்தபடியே அல்லலுற்று ஆற்றியிருத்தல் தலைவியின் கடனாயிற்று.

தலைவனின் வரவுக்காகக் காத்திருந்து அவன் வரக்காணோமே என்று ஏங்கித் தவித்துத் தன்னருமைத் தோழியிடம் புலம்பும் முல்லைநிலத் தலைவியின் மனநிலையைக் குறுந்தொகைப் பாடலொன்றில் படம்பிடித்துக்காட்டுகிறார் ’ஒக்கூர் மாசாத்தியார்’ எனும் புலவர்பெருமாட்டி.

இளமை பாரார் வள நசைஇச் சென்றோர்
இவணும் வாரார் எவணரோ எனப்
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயிறு ஆக
நகுமே தோழி நறுந்தண் காரே.” (ஒக்கூர் மாசாத்தியார்: குறுந்-126)

”என்னுடைய இளமையை நினையாது பொருளே பெரிதெனச் சென்ற தலைவர் இன்னும் திரும்பி வரவில்லை; அவர் எங்குளார் எனவும் நானறியேன். இதனைக் கண்டு, ”கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன்!” என்று வாக்குக்கொடுத்துச் சென்ற உன் தலைவர் பொய்த்துவிட்டார் பார்!” என முல்லை மொட்டுக்களையே தன் ஒளி பொருந்திய பற்களாகக் கொண்டு இக் கார்காலம் என்னை எள்ளி நகையாடுகின்றது” என்கிறாள் தலைவனைப் பிரிந்து தவித்திருக்கும் தலைவி.

தொலைதூரம் சென்றவர்களோடு தொடர்புகொள்ளுதற்குத் தொலைபேசி வசதியற்ற அந்நாளில் குறித்த காலத்தில் கணவன் மீளவில்லை என்றால் அவன் வரவை எதிர்நோக்கியிருக்கும் மனைவியின் மனம் என்ன பாடுபடும்? எத்துணை அவலமுறும்? என்பதை எண்ணுகையில் தலைவியின் நிலைகண்டு நமக்கும் பெருவேதனை பிறக்கவே செய்கின்றது.

அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்” (நற்-142) இயல்புடைய தமிழ்ப் பெண்டிர், கணவன் இல்லில் இல்லையென்றால் இல்லம் நாடிவரும் அறவோரைப் பேணுதல், அந்தணர் ஓம்புதல் முதலிய நற்செயல்களைச் செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாய் இருந்திருக்கின்றனர். சிலம்பின் தலைவியான கண்ணகியின் வாய்மொழிகளால் இக்கருத்து உறுதிப்படுகின்றது.

அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை… 
(சிலம்பு – கொலைக்களக் காதை: 71-73)

(தொடரும்)

*****

துணைநூல்கள்:

1. சிலப்பதிகாரம் மூலமும், ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையும்  – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
2. கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்.
3. குறுந்தொகை மூலமும் டாக்டர் உ.வே.சாமிநாதையர் உரையும்.
4. அகநானூறு மூலமும் ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையும்.
5. நற்றிணை மூலமும் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்     உரையும்.

 

 

Leave a Reply

Your email address will not be published.