(Peer Reviewed) பதினெண்கீழ்க்கணக்கு : தமிழ் இலக்கிய வரலாற்று நூற்பதிவுகள்
முனைவர் ப.திருஞானசம்பந்தம்
முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்
தமிழியற் புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை – 21
பதினெண்கீழ்க்கணக்கு : தமிழ் இலக்கிய வரலாற்று நூற்பதிவுகள்
மேனாட்டாரின் சிந்தனைகள், கல்வி மரபுகள் தமிழ் மொழியைக் கற்பதிலும் அது குறித்துச் சிந்திப்பதிலும் பல புதிய அணுகுமுறைகளை ஏற்படுத்தித் தந்தன. இலக்கிய வரலாறு என்ற துறை, அத்தகைய புதிய பயில்துறைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. 1930 தொடங்கித் தமிழில் எண்ணற்ற இலக்கிய வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. இன்றும் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ் இலக்கிய வரலாறுகள் இலக்கியங்களின் கால அடிப்படையிலும், இலக்கிய வகைமைகளின் அடிப்படையிலும், பாட நோக்கிலும் எழுதி வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நிலையில் இலக்கிய வரலாற்று நூல்களை எழுதியவர்கள்: பி.டி.சீனிவாச ஐயங்கார், கா.சுப்பிரமணிய பிள்ளை, தி.வை.சதாசிவ பண்டாரத்தார், மது.ச.விமலானந்தம், மு.அருணாசலம், ச.வையாபுரிப்பிள்ளை, மா.இராசமாணிக்கனார், மு.வரதராசனார், ஹெப்சிபா ஜேசுதாசு, தமிழண்ணல், கார்த்திகேசு சிவத்தம்பி, பாக்கியமேரி, அ.கா.பெருமாள், க.பஞ்சாங்கம் முதலியோர். இலக்கிய வரலாற்று நூல்களில் தமிழின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம் முதல் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்விலக்கிய வரலாற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பு, நூற்பெயர்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் காணப்படும் பதினெண்கீழ்க்கணக்குக் குறித்த பதிவுகளை இக்கட்டுரை கவனப்படுத்துகின்றது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்துச் செவ்விலக்கியப் பதிப்பு மரபிலும் ஆராய்ச்சி மரபிலும் பெரும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கில் பதினெட்டாவதாக அமையும் நூல், ‘கைந்நிலை’ என்பது தொகுப்பு வழியும் ஆராய்ச்சியாளர்களாலும் இ.வை.அனந்தராமையரின் கைந்நிலை (1931) பதிப்பினாலும் தெளிவுபெற்றது. 1930களுக்கு முன்னர்க் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலையா? இன்னிலையா? என்ற விவாதம் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டது. 1915இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை இன்னிலையைப் பதிப்பித்த பிறகு, கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலைதான் என்று ஒரு சாரார் கருதினர். மற்றொரு புறம் இன்னிலை பொய் நூல், போலி நூல், கற்பித நூல் என்ற கருத்துகள் வலுப்பெற்றன. இறுதியாகக் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் கைந்நிலை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பாடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் கைந்நிலையும் இன்னிலையும் கீழ்க்கணக்கைச் சாராத நூல்கள். திணைமாலை என்னும் பெயரிலான நூல்தான் கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்ற கருத்தும் மற்றொரு புறம் முன்வைக்கப்பட்டது. இவ்வகையான கருத்து நிலைகள், எவ்வாறு இலக்கிய வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறித்து நுட்பமாக ஆராய வேண்டியுள்ளது.
தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளைக் கீழ்க்கண்ட நிலைகளில் தொகுத்துக் கொள்ளலாம்.
– பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலை
– பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தவை கைந்நிலையும் இன்னிலையும்
– பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலை
பி.டி. சீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய History of the Tamils from the earliest times to the Tamils (1929) என்னும் நூல், பி.இராமநாதன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழர் வரலாறு (கி.பி.600 வரை) என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்நூலின் மொழிபெயர்ப்பாசிரியர் இராமநாதன் களப்பிரர் காலத்தில் தோன்றிய நூல்களாகக் கீழ்க்கணக்கு நூல்களைக் குறித்துள்ளார். “பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் கி.பி.500 – கி.பி.800 காலத்தவை என்பர்” (பி.இராமநாதன்: மொழிபெயர்ப்பு:2007:68). ஆனால் பி.டி.சீனிவாச ஐயங்கார் கி.பி.6-8 நூற்றாண்டில் தோன்றியனவாகக் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடுகின்றார்.
கி.பி.8ஆம் நூற்றாண்டு சார்ந்த முத்தரையரைக் குறித்து, நாலடியார் பாடல்கள் இரண்டு குறிப்பிடுகின்றன. களவழி நாற்பது, சோழன் செங்கணான் மீது பாடிய புறப்பாடல். ஐந்து நூல்கள் அகப்பொருள் சார்ந்தவை. களவழி நாற்பதும், இவ்வைந்து நூல்களும் பழைய புறம், அகப்பாடல் மரபின் தேய்ந்து போன கடைசிப் படைப்புகள். 12 நூல்கள் அற நூல்களாகும்; இவை அக்காலத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த சமஸ்கிருத நீதி நூல் பார்த்துப் பாடப்பட்டவை; தென் இந்தியாவில் ஆரியப் பண்பாடு நிலை பெற்றுவிட்டதைக் காட்டுகின்றன. இந்நூல்களில் பெரும்பாலானவை, யாப்பில் உள்ளனவேயொழிய கவிநயம் அற்றவை. ஆனால் அறக் கருத்துகளை நினைவிற் கொள்ளும் வகையில் மனப்பாடம் செய்ய எளிதானவை. உயர்ந்த ஒழுக்கத்தைப் புகட்டும் இவ்வறக் கருத்துகளை விஞ்சியவை வேறு எந்த நாட்டின் படைப்பிலும் இல்லை.
(பி.டி.சீனிவாச ஐயங்கார்: பி.இராமநாதன்: மொழிபெயர்ப்பு: 2007: 236, 237)
கீழ்க்கணக்கில் பன்னிரண்டு அற நூல்கள் உள்ளன என்று கூறும் பி.டி.சீனிவாச ஐயங்கார், அந்நூல்கள் எவை என்பதைக் கூறவில்லை. மற்றவர்களைப் போல் இவரும் பன்னிரண்டாவது நூலாக இன்னிலையைக் கருதித் தமது கருத்தை முன்வைத்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலை என்ற கருத்தை வலிறுத்தித் தமது இலக்கிய வரலாற்று நூல்களில் எழுதியவர்கள் கா.சுப்பிரமணிய பிள்ளை (1930), மு.வரதராசன் (1972) உள்ளிட்டவர்கள். இவர்கள் சமயச் சார்பின் அடிப்படையில் தமது கருத்துகளைப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கா.சுப்பிரமணிய பிள்ளை 1930இல் இலக்கிய வரலாறு என்ற நூலை எழுதியுள்ளார். இவருக்கு முன் ஆங்கிலத்தில் எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளையாலும், பி.டி.சீனிவாச ஐயங்காராலும் இலக்கிய வரலாறு சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. தமிழில் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் புலவர் சரித்திரமும் சபாபதி நாவலரின் திராவிடப் பிரகாசிகையும் எழுதப்பட்டுள்ளது. குமாரசுவாமிப் புலவர் எழுதிய நூலில் இடம் பெற்றுள்ள புலவர் சரித்திரம் காலமுறைக்கேற்ப எழுதப்படவில்லை; அதுபோல் சபாபதி நாவலர் சில இலக்கியங்களின் இயல்புகளை மட்டுமே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்காரணத்தினால் தமிழில் இலக்கிய வரலாற்று நூலை முதலில் எழுதியதாகக் கா.சுப்பிரமணிய பிள்ளை முன்னுரையில் பதிவு செய்கின்றார். மேலும் இதன்கண் குறைபாடுகள் பல உள்ளன. அவற்றை ஆராய்ந்து திருத்தமான கொள்கைகளை வெளியிடுவதற்கு வாயிலாக இந்நூலை உருவாக்கியதாகக் குறித்துள்ளார். இந்நூலில் கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களாகப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை இவர் அடையாளப்படுத்துகின்றார். (2007:முன்னுரை)
பதினெண்கீழ்க்கணக்குள் ஒன்றான திருக்குறளின் காலம், திருவள்ளுவரின் காலம், திருவள்ளுவரின் வரலாறு, திருக்குறளின் சிறப்பு, திருக்குறளின் அமைப்பு, திருக்குறள் முன்வைக்கும் கருத்துகள், பரிமேலழகரின் உரை நயம், ஆகியவற்றை விரிவாகக் கா.சுப்பிரமணிய பிள்ளை விளக்குகின்றார். அடுத்து முப்பால் என்பது திருக்குறளைக் குறிக்காது என்ற சி.வை.தாமேதரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் கருதுகின்றனர்; ஆனால் முப்பால் என்பது திருக்குறள் எனப் பலரும் குறிப்பிடுகின்றனர். திருவள்ளுவ மாலையில் ‘வள்ளுவர் முப்பால்’ என்ற தொடர் இடம்பெறுகின்றது. நல்லந்துவனார், கீரந்தையார் முதலியோரும் முப்பால் என்ற தொடரைத் தனித்தனியே தமது நூல்களில் பயன்படுத்தியுள்ளனர். முப்பால் என்ற பெயரில் வேறு நூல்கள் காணப்படாமையால், திருவள்ளுவர் நூலே முப்பால் எனக் கொள்ளத்தக்கது என்கிறார் கா.சுப்பிரமணிய பிள்ளை.
பிற கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகள் எதையும் குறிப்பிடாத கா.சுப்பிரமணிய பிள்ளை, சில நூல்களின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுச் செல்கின்றார்.
ஏனைக் கீழ்க்கணக்கு நூல்களாவன, நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, ஐந்திணையைப் பற்றிய திணைமொழியைம்பது, திணையெழுபது என்ற நான்கு நூல்கள். திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்பன. (2007:197)
கா.சுப்பிரமணிய பிள்ளையின் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்பட்ட காலத்தில், பல பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதிப்பிக்கப்பட்டு, புழக்கத்தில் இருந்துள்ளன. சில நூல்கள் மட்டுமே பரவலான பதிப்பாக்கத்தைப் பெறவில்லை. இவ்வாறு இருக்க, கா.சுப்பிரமணிய பிள்ளை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளைக் குறித்த கருத்துகளை மட்டுமே விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார். பதினெண்கீழ்க்கணக்கு என்றாலே அனைவரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய நூல் திருக்குறள்தான். எனவே கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளின் சிறப்புகளைக் கூறினால், மற்ற நூல்களின் சிறப்புகளைக் குறித்ததற்குச் சமம் எனக் கா.சுப்பிரமணிய பிள்ளை கருதியிருக்க வேண்டும். இக்காரணத்தால் தமது இலக்கிய வரலாற்றில் திருக்குறளின் சிறப்புகளை மட்டும் விரிவாகக் கா.சுப்பிரமணிய பிள்ளை பேசியிருக்கின்றார் எனலாம்.
தமிழில் உள்ள முற்கால, இடைக்கால, தற்கால இலக்கியங்களின் வரலாற்றை ஆராய்ந்து விளக்குவதாக மு.வரதராசனின் தமிழ் இலக்கிய வரலாறு (1972) என்னும் நூல் உள்ளது. இந்நூல் சாகித்திய அகாதெமியின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலில் மு.வரதராசன், கி.பி.1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.5ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தோன்றிய நூல்களைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று குறிப்பிடுகின்றனர். கீழ்க்கணக்கு என்பதற்கு அடிகள் குறைந்த செய்யுட்களால் ஆகிய நூல்கள் என்கிறார். பதினெட்டு நூல்களில் பன்னிரண்டு நீதி நூல்கள் என்றும் ஐந்து நூல்கள் காதல் பற்றியது என்றும் ஒரு நூல் போர் பற்றியது என்றும் மூன்றாகப் பகுக்கின்றார். கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளையும் நாலடியாரையும் மட்டும் விரிவாகப் பேசுகின்ற மு.வரதராசன், மற்றைய நூல்களின் அமைப்பைச் சுருக்கமாகக் குறிப்பிட்டுச் செல்கின்றார். இவற்றுள் பன்னிரண்டாவது நீதி நூலாக இன்னிலையை இவர் குறிப்பிடுகின்றார்.
நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், திரிகடுகம் என்பவை நூறு நூறு செய்யுள் கொண்ட நீதி நூல்கள். ஏலாதி என்பதும் நூறு செய்யுள் உடையதே. இனியவை நாற்பது, இன்னா நாற்பது ஆகியவை நாற்பது நாற்பது செய்யுள் உடைய நீதி நூல்கள்.
பழமொழி நானூறு என்பது நாலடியார் போல், நானூறு செய்யுள் கொண்டது. ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் அது கூறும் நீதிக்கு ஏற்ற பழமொழி ஒன்று உள்ளது. ஆகவே, இந்த நூலால் நீதிகளை உணர்வது மட்டும் அல்லாமல், அந்தக் காலத்தில் வழங்கிய நானூறு பழமொழிகளையும் அறிய முடிகிறது.
ஆசாரக் கோவை அந்தக் காலத்தில் போற்றப்பட்டிருந்த ஒழுக்க விதிகள் பலவற்றை ஓதுகின்றது. முதுமொழிக் காஞ்சி, திட்பமான சிறு சிறு தொடர்களில் நீதிகள் பலவற்றை உணர்த்துகின்றது. மற்றுமொரு நீதி நூல், நாற்பத்தைந்து செய்யுள்களால் நீதிகளை உணர்த்தும் இன்னிலை என்பது.
(மு.வரதராசன்:2001:80)
பன்னிரண்டாவது நீதி நூலாக இன்னிலையைச் சேர்த்துக் கூறும் மு.வரதராசன், காதலைக் குறித்துப் பேசும் அக நூல்களைக் கூறும்போது கைந்நிலையைச் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.
கார் நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது என்பவை காதல் பற்றிய பாட்டுகள் கொண்ட நூல்கள். கைந்நிலை என்ற நூலையும் அவற்றோடு சேர்த்து எண்ணுதல் உண்டு. (மு.வரதராசன்:2001:80)
என்று குறித்துள்ளார். இக்கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது இவர் இன்னிலை, கைந்நிலை இரண்டையும் கீழ்க்கணக்கு நூலாகக் கருதுகின்றார் என்பது புலப்படுகின்றது. ஆனால் பதினெட்டு என்ற கணக்கிட்டு இவர் காட்டும் நூல்களின் எண்ணிக்கை பொருந்திச் சென்றாலும், கீழ்க்கணக்கைச் சார்ந்த ஐந்திணை ஐம்பது என்ற நூலின் பெயரையும், இந்நூல் அகப்பொருள் பற்றிப் பாடப்பட்டது என்ற குறிப்பினையும் மு.வரதராசன் குறிப்பிடவில்லை. இது அச்சுப் பிழையால் நேர்ந்ததா? அல்லது அவர் இந்நூலைக் கூறாமல் விட்டுவிட்டாரா? என்பது குறித்து மேலும் சிந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
மது.ச.விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்னும் தலைப்பில் இரு தொகுதிகளை (1987) வெளியிட்டுள்ளார். போட்டித் தேர்வு உள்ளிட்டவற்றிற்குப் பயன்படக் கூடிய கருவி நூலாக இந்நூல் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்தும் அவற்றின் எண்ணிக்கை குறித்தும் விரிவான நடைபெற்ற விவாதங்களை உள்வாங்கிய நிலையில் மது.ச.விமலானந்தம் அவர்களின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிவுகள் அமைந்துள்ளன. இவற்றைப் பின்வருமாறு தொகுத்துரைக்கலாம்.
- பன்னிரு பாட்டியல் உரை குறிப்பு, தொல்காப்பியரின் அம்மை என்னும் வனப்பிற்குச் சான்றாகப் பதினெண்கீழ்க்கணக்கு அமைகின்றமை, மயிலைநாதர், பேராசிரியர் உரைகளில் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பெயராட்சி இடம்பெற்றுள்ளமை முதலிய செய்திகள் முதன்மை நிலையில் உள்ளன.
- கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் பழம்பெரும் வெண்பாவை எடுத்துக்காட்டி, பதினெட்டு நூல்கள் குறித்து நிகழ்ந்த விவாதத்தை முன்வைக்கின்றார். இப்பழம்பாடலில் இடம்பெறும் ‘முப்பால்’ என்பது திருக்குறளைக் குறிக்காது என்னும் கருத்துடைய சி.வை.தாமோதரம் பிள்ளை, கே.என்.சிவராசப் பிள்ளை ஆகியோரின் கருத்துகளையும் தொகுத்துத் தருகின்றார்.
- முப்பால் என்பது திருக்குறளே என்று கூறும் கா.சுப்பிரமணிய பிள்ளையின் கருத்தையும் எடுத்துரைக்கிறார்.
- கீழ்க்கணக்கைச் சார்ந்த பதினெட்டாவது நூல், கைந்நிலையா? இன்னிலையா? என இருவேறுபட்ட கருத்துகள் இருந்ததைச் சுட்டி, பலரும் கைந்நிலை என்று கூறுகின்றனர் என்கிறார். பிரபந்த தீபிகை கீழ்க்கணக்கின் பதினெட்டு நூல்கள் எவை என்ற பட்டியலைத் தருகிறது என்று சுட்டுகின்றார். அதில் கைந்நிலை இடம்பெற்றுள்ளது.
- கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டினுள் ஒன்று இன்னிலையா, கைந்நிலையா என்ற தமது கருத்தை இவர் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. பதினெட்டு நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகையில் கைந்நிலையின் அமைப்பையே விளக்கியுள்ளார். ஐந்திணை அறுபது (ப.60) என்ற சிறப்புப் பெயர் இந்நூலுக்கு உண்டு என்று பதிவு செய்கிறார். இதன்வழிப் பதினெண் கீழ்க்கணக்கில் கைந்நிலையைத்தான் இவர் சுட்டுகின்றார் என்ற முடிவுக்கு நாம் வர முடிகின்றது. (மது.ச.விமலானந்தம்: 1987: 103 – 104, 108)
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதங்களைத் தொகுத்து தமது இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யும் மது.ச.விமலானந்தம், இன்னிலை, கைந்நிலை ஆகிய இரு நூல்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றார். ஆனால் பதினெட்டு நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகையில் கைந்நிலை நூலைக் குறித்த கருத்துகளை மட்டுமே பதிவு செய்கின்றார். பதினெட்டாவது நூல் கைந்நிலை என்ற தெளிவு இவருக்கு இருப்பினும் பதினெட்டு நூல்களைத் தொகுத்துச் சொல்லுமிடத்து இன்னிலையினைச் சேர்ந்துக் குறிப்பிடுகின்றார். மற்ற இலக்கிய வரலாற்று ஆசிரியர்களுக்கு இருக்கின்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த பொதுவான கருத்தே இவரிடமும் வெளிப்படுகின்றது.
தமிழண்ணல் புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலை 1986இல் வெளியிட்டுள்ளார். இந்நூல் இலக்கிய நோக்கில் புதிய நோக்கு, தமிழக வரலாற்றுப் பின்புலம், வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்ற முப்பெருந்தலைப்புகளில் அமைந்துள்ளது. இந்நூல், பல்வகை இலக்கியங்கள், இலக்கணம், தத்துவம், உரை வகை உள்ளிட்ட பல உட்தலைப்புகளில் தமிழ் இலக்கிய வரலாற்றினை விரிவாக விளக்கிச் செல்கின்றது. இதில் பதினெண்மேற்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் வகைத் தொகைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதன்பின்னர், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் பழம்பாடலைத் தருகிறார் தமிழண்ணல். இப்பாடல்வழிப் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்களின் எண்ணிக்கையைப் பன்னிரண்டு என்கிறார். இவர்தம் கருத்து பின்வருமாறு:
இவற்றுள் நானாற்பது, நாலைந்திணை என்பன எட்டு நூல்களைக் குறிக்கும். இன்னிலை என்ற அறநூலை ஏற்பர் சிலர்; கைந்நிலை என்ற அறநூலை ஏற்பர் சிலர். இவற்றுள் இன்னிலை அடங்கிய நீதி நூல்கள் வருமாறு:
1) திருக்குறள்
2) நாலடியார்
3) நான்மணிக்கடிகை
4) இனியவை நாற்பது
5) இன்னா நாற்பது
6) திரிகடுகம்
7) ஆசாரக் கோவை
8) பழமொழி நானூறு
9) சிறுபஞ்சமூலம்
10) முதுமொழிக் காஞ்சி
11) ஏலாதி
12) இன்னிலை
(தமிழண்ணல் :2011:153)
பதினெட்டு நூல்கள் எவை என்பதை வரையறுப்பதில் தமிழண்ணல் அவர்களுக்கும் சிக்கல் இருந்துள்ளது. எனவே, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் கைந்நிலை, இன்னிலை என்னும் இரண்டு நூல்களையும் சேர்த்தே இவர் குறிப்பிடுகின்றார். பத்தொன்பது நூல்கள் குறித்தும் தனித்தனியே அறிமுகத்தைத் தருகின்றார். இதில் சங்கத் தொகை நூல்களுக்குப் பிறகு திணையிலக்கிய வளர்ச்சியினைப் பதினெண் கீழ்க்கணக்கில் காணப்படும் அகம், புறம் பற்றிய நூல்களின் மூலம் புரிந்துகொள்ள முடியும் என்ற கருத்தையும் தமிழண்ணல் முன்வைத்துள்ளார். இவ்விடத்தில் பதினெண் கீழ்க்கணக்கின் புற, அக நூல்களினைக் குறித்த அறிமுகத்தைத் தரும்போது கைந்நிலையின் சிறப்பினைக் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதி பின்வருமாறு:
கைந்நிலை
திணைக்குப் பன்னிரண்டு வெண்பாக்களாலான அறுபது பாடல்களையுடையது. இந்நூல் வெண்பாக்கள் பல சிதைந்துள்ளன. இதன் ஆசிரியர் மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் ஆவார். ‘‘இவர் காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டு; இந்நூலில் பாசம், ஆசை, இரசம், கேசம், இடபம், உத்தரம் ஆகிய வடசொற்கள் வந்துள. தென்பாண்டி நாட்டில் கொற்கைக்கு அண்மையில் இவர் வாழ்ந்தாராதல் வேண்டும்’’ (தி.வை.சதாசிவ பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250 – 600), 1955, ப.87) எனப் பேராசிரியர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் இவரைப் பற்றிக் கூறியுள்ளார்.
(தமிழண்ணல்:2011:146, 147)
கைந்நிலையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை, நூலாசிரியர் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்நூலாசிரியர் வாழ்ந்த இடம் குறித்த சி.சதாசிவபண்டாரத்தின் கருத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். இக்கருத்தில் இவருக்கும் உடன்பாடு என்ற தெரிய வருகின்றது. இதற்கடுத்து இன்னிலை நூல் குறித்த அறிமுகத்தைத் தமிழண்ணல் தருகின்றார்.
இன்னிலை
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ‘கைந்நிலை’ ஒன்றென ஏலாதவர் இன்னிலை என்ற அறநூலை ஏற்பர். வ.உ.சி. அவர்கள் இன்னிலையை உரையெழுதிப் பதிப்பித்துள்ளார். இது பொய்கையார் எழுதியது. கடவுள் வாழ்த்துடன் 46 வெண்பாக்கள் உள்ளன. அறம், பொருள், இன்பம், வீடென நான்கும் பற்றி இது பேசுகிறது. இவர் ‘ஆக்கியளித்து அழிக்குக் கந்தழியின் பேருருவே’ (30) என்று சிவனைக் குறிப்பதால் இவரைச் சிவநெறியினர் என்பர் கா.சு.பிள்ளை அவர்கள். இவர் களவழி பாடிய பொய்கையாருக்குப் பிற்பட்டவர் என்று கூறுகிறார் (கா.சு.பிள்ளை, இலக்கிய வரலாறு, 1956, ப.285).
திரிகடுகம், பெண்ணுக்கு இலக்கணம் கூறுவதுபோல, இன்னிலையும் கூறுகிறது.
ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
குற்றம் ஒரூஉம் குணத்தளாக் – கற்றறிஞர்ப்
பேணும் தகையளாக் கொண்கன் குறிப்பறிந்து
பேணும் தகையினாள் பெண்.
பெண் ஒத்த உரிமை உடையனாதல் வேண்டும் என்ற கருத்து முதலில் வைக்கப்பட்டுள்ளமை சிந்திக்கத்தக்கது.
(தமிழண்ணல்:2011:.171, 172)
இவ்வாறு தமிழண்ணல் கைந்நிலை, இன்னிலை என்ற இரு நூல்களையும் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் என்று குறிப்பிடுகின்றார். இன்னிலையினை வ.உ.சிதம்பரம் பிள்ளை, கா.சுப்பிரமணியப் பிள்ளை ஆகிய இருவரும் குறிப்பிடுவதன் காரணமாகத் தானும் இவற்றைக் குறிப்பிடுவதாகச் சுட்டுகின்றார்.
தமிழண்ணல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக உலகத் தமிழிலக்கிய வரலாறு (தொன்மை முதல் கி.பி.500 வரை) என்ற தலைப்பில் ஒரு நூலை 2004இல் வெளியிட்டுள்ளார். இந்நூலில் அவர் கைந்நிலையைப் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் என்கிறார்.
பதினெண்கீழ்க்கணக்கு எனும் பெயர், பிற்கால உரை நூல்களில் காணப்படுகிறது. சங்க காலத்தில் ‘கணக்காயர்’ எனும் பெயர், மொழி கற்பிக்கும் ஆசிரியரைக் குறித்தது. கணக்கு – இலக்கிய இலக்கண நூல் எனப் பொருள்பட்டது. நெடுங்கணக்கு என அகரவரிசை குறிக்கப்பட்டதும் காண்க. பத்துப் பாட்டையும் எட்டுத் தொகையையும் காலத்தால் முற்பட்டவை எனும் பொருளில் பதினெண்மேற்கணக்கு எனக் கொண்டு, இவை ‘பதினெண்கீழ்க்கணக்கு’ எனப்பட்டன. இவ்வாறு தொகுத்துப் பெயரிட்டது. கி.பி.5ஆம் நூற்றாண்டினதாகிய, வச்சிரநந்தி என்ற சமண முனிவரின், தமிழ்ச் சங்கத்தில் நடந்திருக்கலாம் என்பர்… கார்நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை என்பன அகம் பற்றியன.
(தமிழண்ணல் :2004:163,164)
இதன் பின்னர், கைந்நிலையை ஏற்காதவர்கள் இன்னிலையைச் சேர்த்துக் குறிப்பிடுவர் என்கிறார். இக்கருத்தைத் தமது இலக்கிய வரலாற்று நூல்களில் தொடர்ந்து தமிழண்ணல் பதிவு செய்திருக்கின்றார்.
புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, உலகத் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் இரு நூல்களிலும் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு குறித்த தமிழண்ணல் அவர்களின் கருத்துகளைத் தொகுத்து பார்க்கையில், கைந்நிலை, இன்னிலை என்னும் இரு நூல்களையும் சேர்த்தே இவர் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. கைந்நிலை, இன்னிலை இவற்றில் தான் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்ததாக எதைக் கருதுகின்றேன் என்று குறிப்பிடாமல் பொதுவாக அனைவரும் இவ்விரு நூல்களைக் குறிப்பிடுகின்றனர் என்ற நிலையிலேயே இவரின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகள் அமைந்திருக்கின்றன.
அ.கா.பெருமாள் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு எனும் 2000ஆம் ஆண்டு முதன் முதல் வெளிவந்தது. பல பதிப்புகளைப் பெற்றுள்ள இந்நூல் முழுவதும் திருத்தப்பட்ட பதிப்பாக 2014ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இப்பதிப்பில் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த பதிவுகள் இங்கு விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.
சங்க காலத்திற்கு அடுத்த காலக்கட்டம், களப்பிரரின் இடையீட்டுக் காலமாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இக்காலத்தில் பொதுவான மக்களின் ஒழுக்கங்களும் அழகுணர்ச்சியும் வழக்காற்றில் இருந்து மறைக்கப்பட வேண்டிய சூழல் இருந்தது. இக்காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த சமண, பௌத்த, மதங்கள் பொதுவான ஒழுக்கத்தைக் கட்டாயமாக வற்புறுத்தின. இவ்வொழுக்கங்கள் இக்காலத்தில் தோன்றிய நீதி நூல்களுள் பிரதிபலித்தன. களப்பிரர் காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின என்பர் திறனாய்வாளர்கள். இக்கருத்துகளை முதன்மையாகக் கொண்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த தமது கருத்தை முன்வைக்கின்றார் அ.கா.பெருமாள். இக்கருத்துகளைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துரைக்கலாம்.
- பதினெண்கீழ்க்கணக்கு என்னும் சொல்லாட்சியினைச் சுட்டுகின்ற நன்னூலின் முதல் உரையாசிரியரான மயிலைநாதரின் உரைக் குறிப்பு, தொல்காப்பியப் பேராசிரியர் உரைக் குறிப்பு ஆகியவற்றை எடுத்துக் குறிப்பிடுகின்றார். இதன் மூலம் கி.பி.13-14ஆம் நூற்றாண்டளவில் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் சொல் வழக்கில் இருந்ததை அறிய முடிகின்றது.
- மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்னும் வழக்கைப் பன்னிரு பாட்டியல் தான் முதன்முதல் முன்வைக்கின்றது. அதற்குப் பிறகான பாட்டியல் நூல்கள் இப்பாகுபாட்டைச் சுட்டவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதம் 1885இல் முடிவு பெறவில்லை என்று சுட்டியுள்ளார். ஆனால் இந்நூல்கள் குறித்த விவாதத்தை 1887இல் தமது கலித்தொகைப் பதிப்பின் மூலம் சி.வை.தாமோதரம் பிள்ளை தொடங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பிய உரையாசிரியர்கள் அம்மை என்ற வனப்பினுள் கீழ்க்கணக்கு நூல்களை அடக்கியுள்ளனர்.
- அ.கா.பெருமாள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை இரு நிலைகளில் பகுத்துக் காட்டுகின்றார். பதினோர் அற நூல்களை ஒரு பகுதியாகவும், ஐந்து அக நூல்கள், ஒரு புற நூலை மற்றொரு பகுதியாகவும் குறிப்பிடுகின்றார். ஐந்து அக நூல்களுள் ஒன்றாகக் கைந்நிலையைச் சுட்டி ‘ஐந்திணை அறுபது’ என்று இந்நூலுக்கு வழங்கும் சிறப்புப் பெயரினையும் குறிப்பிடுகின்றார்.
- கைந்நிலையின் ஆசிரியர் பெயர், ஐந்து திணைக்குப் பன்னிரண்டு பாடல்கள் வீதம் அறுபது பாடல்கள் இந்நூலில் உள்ளன என்று குறிப்பிடும் அ.கா.பெருமாள், குறிஞ்சித் திணைப்பாடல்கள் சுவையாகவும் மரபான உவமை நயத்துடனும் விளங்குகின்றது என்கிறார்.
(அ.கா.பெருமாள்:2012:102)
பாடத்திட்ட நோக்கில் பல இலக்கிய வரலாற்று நூல்கள் தற்காலத்தில் தோன்றி வருகின்றன. அவை குறிப்புகளாகவும் வணிக நோக்கிலும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலைப் பாக்யமேரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் 2008இல் வெளியிட்டுள்ளார். இதில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்தும், கைந்நிலையைக் கீழ்க்கணக்குள் ஒன்றாகச் சேர்ப்பதைக் குறித்தும் குறிப்பிட்டுள்ள கருத்துகளைப் பின்வருமாறு தொகுத்து உரைக்கலாம்.
- பதின்மேல், பதின்கீழ் என்ற இச்சொற்கள் குறித்த விளக்கம், இந்நூல்களின் பாடல் எண்ணிக்கை, நுவல் பொருள்கள் ஆகியவற்றைப் பன்னிரு பாட்டியல் வழி எடுத்துரைக்கின்றார்.
- தொல்காப்பியம் அம்மை என்ற வனப்பிற்கு இந்நூல்களைச் சான்றுகாட்டிச் சென்றுள்ளமையும் இவர் பதிவு செய்துள்ளார். (ப.151)
- பதினெட்டு நூல்களுள் கைந்நிலை ஒன்றா? இன்னிலை ஒன்றா? என்று வினா எழுப்பி, கைந்நிலைதான் பதினெட்டில் ஒன்று என்று தெளிவாகச் சுட்டுகிறார் ஆசிரியர். இதற்கு மு.வை.அரவிந்தனின் கருத்தை மேற்கோள் காட்டித் தானும் அக்கருத்திற்கு உடன்படுகின்றேன் என்று உரைக்கின்றார். மேலும் இன்னிலையைப் போலி நூல் என்று குறிப்பிடுகின்றார். (பக்.161, 162)
- ஐந்திணை அறுபது என்ற பெயரையும் சுட்டுகிறார். (ப.161)
- பதினெட்டு நூல்களுள் கைந்நிலை அடங்கும் என்று தெளிவுபடுத்திய பின்னரும் இன்னிலை குறித்த விவரங்களை இவர் தருகிறார். (ப.162)
தமிழகத்தின் நடுப்பகுதியில் இயங்கும் கல்லூரியின் பாடத்திட்ட நோக்கில் எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களைச் சு.ஆனந்தன், ஈஸ்வர், ஸ்ரீசந்திரன் ஆகியோர் தனித்தனியே எழுதியுள்ளனர். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகள் வருமாறு:
சு.ஆனந்தன் தமது தமிழ் இலக்கிய வரலாறு (2002) நூலில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடும் பழைய வெண்பாவைச் சுட்டி, பேராசிரியரின் செய்யுளியல் உரைக் குறிப்பு, மயிலைநாதர் உரைக் குறிப்பு, கீழ்க்கணக்கு என்பதற்குப் பன்னிரு பாட்டியல் தரும் விளக்கம் ஆகியவற்றையும் எடுத்துத் தருகின்றார். மேலும் பதினெட்டு நூல்களின் பெயர், ஆசிரியர் ஆகியவற்றை இவர் அட்டவணைப்படுத்தித் தந்துள்ளார். இதில் இவர் கைந்நிலையினைப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகவே குறித்துள்ளார். பதினெட்டு நூல்களைக் குறித்த தரவுகளைத் துல்லியமாகச் சேகரித்தும் தந்துள்ளார். கைந்நிலையினைக் குறித்துக் குறிப்பிடுகையில் இந்நூலின் ஆசிரியர் பெயர், இவரது ஊர்ப் பெயர், நூலினுள் உள்ள பாடல்களின் எண்ணிக்கை, பாடல் எண்ணிக்கையின் அடிப்படையில் கைந்நிலைக்கு அமைந்த ‘ஐந்திணை அறுபது’ என்ற சிறப்புப் பெயருக்கான காரணம் ஆகியவற்றையும் இவர் பதிவுசெய்திருக்கின்றார். இறுதியாக மற்ற தமிழ் இலக்கிய வரலாற்று நூல் ஆசிரியர்களுக்கு ஏற்படுகின்ற ஐயத்தை இவரும் எழுப்பி, தாம் கைந்நிலையினைக் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகக் குறிப்பிடுவதற்கான காரணத்தைத் தெளிவாக முன்வைத்துள்ளார்.
பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெறுவது கைந்நிலையா, இன்னிலையா எனும் ஐயம் உளது. பெரும்பாலோர் கைந்நிலையைக் குறிப்பர். பதினெட்டு நூல்களைக் குறிக்கும் வெண்பாவை ஆராயின், கைந்நிலையே சரியானது என்பது விளங்கும்.
(சு.ஆனந்தன் : 2003 : 64)
இவ்வாறு கைந்நிலையைப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகச் சேர்த்ததற்கான காரணத்தைத் தெளிவாய்த் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கருத்துகளை ஜெ.ஸ்ரீசந்திரன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, ஈஸ்வரன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய நூல்களிலும் காண முடிகின்றது.
பாடத்திட்ட நோக்கில் எழுதப்பட்ட மற்றொரு நூல் மு.அருணாசலம், இராஜா வரதராஜா இருவரும் இணைந்து எழுதிய நூல், தமிழ் இலக்கிய வரலாறு. இந்நூலைத் திருச்சியில் உள்ள அருண் பதிப்பகம் 2012இல் வெளியிட்டுள்ளது. இந்நூலில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகள் வருமாறு:
சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய நூல்களை வகைப்படுத்தச் ‘சங்க மருவிய கால இலக்கியங்கள்’ என்னும் பெயர் வழங்கப்படுகின்றது. இவற்றைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் அழைப்பர். அடி அளவால் சிறிய பாடல்களை உடைய பதினெட்டு நூல்களின் தொகுப்பு இதுவாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் வெண்பா வருமாறு:
“நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.”
மேற்கூறிய வெண்பாவில் கைந்நிலைக்கு மாற்றாக இன்னிலை என்னும் நூல் இடம்பெற்றதாக ஒரு கருத்தும் உண்டு. சங்க மருவிய கால இலக்கியங்களில், பதினொரு நூல்கள் நீதி நெறிகளைப் போதிப்பதால், இக்காலத்தை நீதி நூல்களின் காலம் என்றழைப்பது பொருத்தமாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்ப் பட்டியல்:
நீதி நூல்கள்
- திருக்குறள் திருவள்ளுவர்
- நாலடியார் சமண முனிவர்கள்
- நான்மணிக்கடிகை விளம்பிநாகனார்
- இன்னா நாற்பது கபிலர்
- இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார்
- திரிகடுகம் நல்லாதனார்
- ஆசாரக்கோவை பெருவாயின் முள்ளியார்
- பழமொழி முன்றுறையரையனார்
- சிறுபஞ்சமூலம் காரியாசான்
- முதுமொழிக்காஞ்சி கூடலூர் கிழார்
- ஏலாதி கணிமேதாவியார்
அக நூல்கள்
- கார்நாற்பது மதுரை கண்ணன் கூத்தனார்
- திணைமாலை மேதாவியார்
- ஐந்திணை எழுபது மூவாதியார்
- ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார்
- திணைமொழி ஐம்பது கண்ணன் சேந்தனார்
- கைந்நிலை புல்லங்காடனார்
புறநூல்
- களவழி நாற்பது பொய்கையார்
நீதி நூல்
- இன்னிலை பொய்கையார்
(மு.அருணாசலம், இராஜா வரதராஜா : 2004 : 80, 81)
தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் ஆசிரியர்கள் பலரும் இன்னிலைக்கு மாற்றாகக் கைந்நிலையைக் கொள்வர் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இவ்விலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் இருவரும் கைந்நிலைக்கு மாற்றாக இன்னிலையைக் கொள்வர் என்று குறிப்பிடுகின்றனர். பதினெட்டு நூல்கள் என்ற வரையறை, சங்க மருவிய கால இலக்கியங்கள் பதினெட்டு என்று குறிப்பிட்டுவிட்டு கீழ்ப்பகுதியில் 19 நூல்களின் பெயர்களையும் ஆசிரியர் பெயர்களையும் பதிவு செய்கின்றனர். ஆனால் இன்னிலையை மட்டும் தனிப் பிரிவில் அதாவது நீதி நூல் என்ற மற்றொரு தலைப்பின்கீழ்க் குறிப்பிடுகின்றனர். மேலே கூறிய கருத்திற்கு முன்னுக்குப் பின் முரணாக இவ்விலக்கிய வரலாற்றாசிரியர்கள் கருத்துரைக்கின்றனர். கைந்நிலை, இன்னிலை இரு நூல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ள கருத்துகள் பின்வருமாறு:
கைந்நிலை
அகப்பொருள் ஒழுக்கம் பற்றிய நூல். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வைப்பு முறை உடையது. இந்நூலில் மொத்தம் 60 பாடல்கள் இருந்து (திணைக்கு 12) 18 சிதைந்து, இப்போது 43 வெண்பாக்கள் மட்டும் கிடைக்கின்றன. இந்நூலின் ஆசிரியர் புல்லங்காடனார்.
இன்னிலை
மனிதர்கள் இனிமையான வாழ்வினை அடைய வழிவகை கூறும் இன்னிலை. இதன் ஆசிரியர், பொய்கையார். 45 வெண்பாக்களை உடைய இந்நூலில், சிவபெருமான் பற்றிய குறிப்புகள் வருகின்றன. 1915இல் வ.உ.சி. இந்நூலினைப் பதிப்பித்தார்.
(மு.அருணாசலம், இராஜா வரதராஜா : 2004 : 87, 88)
பாடத்திட்ட நோக்கில் எழுதப்படுகின்ற தமிழ் இலக்கிய வரலாறு அனைத்தும் இது போன்ற குழப்பங்களை முன்வைத்துச் செல்கின்றன. இத்தகைய இலக்கிய வரலாற்று நூல்களை வாசிக்கின்ற மாணவர்களுக்குப் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த பதினெட்டாவது நூல் கைந்நிலையா? இன்னிலையா? என்ற தெளிவு கிடைக்காமலேயே போய்விடுகின்றது.
தொகுப்பாக
தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளை மூன்று நிலைகளில் புரிந்துகொள்ள முடிகின்றது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சார்ந்த பதினெட்டாவது நூல் இன்னிலைதான் என்ற ஒரு சார் கருத்து. மற்றொன்று கைந்நிலைதான் கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்பது. இன்னொரு கருத்து, இவ்விரு நூல்களும் கீழ்க்கணக்கைச் சார்ந்தவை என்பது. இன்னிலை, பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகப் பதிப்பிக்கப்பட்ட காரணத்தினாலேயே இன்றுவரை ஒரு போலி நூல், இலக்கிய வரலாற்றுத் தரவினுள் இடம்பெறுவது கேள்விக்குரியது. முடிவான நிலைப்பாடு இது என இனிவரும் காலங்களில் இலக்கிய வரலாற்றினை எழுதும் ஆசிரியர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
பாடத்திட்ட நோக்கில் எழுதப்படும் இலக்கிய வரலாற்று நூல்கள், இத்தவறான கருத்தினை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன. இனிவரும் காலங்களில் எழுதப்படுகின்ற இலக்கிய வரலாற்று நூல்களை எழுதுகின்ற ஆசிரியர்கள் உண்மைத் தன்மையை உரிய வகையில் ஆராய்ந்து உரிய கருத்துகளை மட்டுமே இலக்கிய வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பதையே இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.
சான்றாதார நூல்கள்
1972 மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்ய அகாதெமி, புதுதில்லி.
1998 ஜெ ஸ்ரீசந்திரன், தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை.
2000 வி.செல்வநாயகம், தமிழ் இலக்கிய வரலாறு, குமரன் பதிப்பகம், முதல் பதிப்பு 1951, சென்னை – இலங்கை.
2003 சு.ஆனந்தன், தமிழ் இலக்கிய வரலாறு, கண்மணி பதிப்பகம், திருச்சி, திருத்திய பதிப்பு, முதல் பதிப்பு 2002.
2004 கா.சுப்பிரமணிய பிள்ளை, தமிழ் இலக்கிய வரலாறு, காவ்ய பதிப்பகம், முதல் பதிப்பு 1930, சென்னை.
2004 தமிழண்ணல், உலகத் தமிழிலக்கிய வரலாறு (தொன்மை முதல் கி.பி. 50 வரை), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதல் பதிப்பு.
2005 மது.ச.விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், முதல் தொகுதி, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.
2007 பி.டி.சீனிவாச ஐயங்கார், தமிழர் வரலாறு (கி.பி.600 வரை), தமிழாக்கம் : பி.இராமநாதன், தமிழ்மண், சென்னை (முதல் பதிப்பு 1929).
2008 பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
2011 தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
2012 அ.கா.பெருமாள், தமிழ் இலக்கிய வரலாறு, சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில்.
2012 மு.அருணாசலம், இராஜா வரதராஜா, தமிழ் இலக்கிய வரலாறு, அருண் பதிப்பகம், திருச்சி.
– ஈஸ்வரின், தமிழ் இலக்கிய வரலாறு, பாவை பதிப்பகம், மதுரை (பதிப்பாண்டு இல்லை).
===========================================
ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):
இலக்கிய வரலாறு குறித்த ஆய்வுகள் அதிகம் முன்னெடுக்காத சூழலில் ஆய்வாளர் தம் முயற்சியை மேற்கொண்டுள்ளார். பதினெண்கீழ்க்கணக்குத் தொகுப்பு நெறியில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிட்ட சில இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் மூலமாகத் தெளிவை முன்வைக்கும் தன்மையில் தம் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். இலக்கிய வரலாற்று எழுதுநெறியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் மெத்தனப் போக்கை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இன்னிலை மற்றும் கைந்நிலை நூல்கள் குறித்து மூன்று விதமான புரிதல்களை இலக்கிய வரலாற்று நூல்கள் பதிவு செய்துள்ளமையை விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார். வணிக நோக்கில் தரமற்ற இலக்கிய வரலாறு எழுதுவதை ஒரு பெரும் குறையாகக் குறிப்பிட்டுள்ளார். தொடக்க கால இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் எழுதுநெறிக்கும் தற்கால இலக்கிய வராற்று ஆசிரியர்களின் எழுதுநெறிக்கும் உள்ள முரண்களை ஆய்வாளர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆய்வாளர் மயிலை. சீனியின் பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலினையும் ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பின் ஆய்வு மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். எனினும், இந்த முயற்சிக்குப் பாராட்டுகள்.
===========================================
வாழ்த்துகள் அண்ணா.