(Peer Reviewed) சித்தர் இலக்கியங்களில் பெண்கள் குறித்த பதிவுகள்

 

-முனைவர் க. இளமதி ஜானகிராமன்
பேராசிரியர்,
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்,
புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி- 605014.

*******************************************************

அந்தக் கரணங்கள் நான்கினுள் சித்தத்தை அடக்கி, யோகச் செயல்முறைகட்கு ஆட்படுத்தி, சித்திகளைப்பெற்று சித்தர்களாகி தாம் பெற்ற சித்திகளின் மூலம் சமுதாய மக்களை மேம்படுத்த உயரிய முற்போக்குக் கொள்கைகளைத் தம் பாடல்களில் எழுதி, அனைத்துத் தத்துவங்களின் உண்மைப் பொருள்களையும் புலப்படுத்தி இன்றைக்கும் இம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களின் இலக்கியங்களில் பெண்கள் பற்றிய பல்வேறு செய்திகளைப் பதிவு செய்துள்ளனர். அவற்றை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

சக்தியே பெண் ஆவாள்

பாரதி தம்முடைய பாடலில், ‘பெண் உருக்கொண்டு போந்துநிற்பது தாய் சிவசக்தியாம்’ என்பர். சட்டை முனியும் ‘அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம்’ என்றே தொடங்குவார். தேவருலகத்திலும் மற்றுமுள்ள எவ்வுலகத்திலும் பெண் எனும்  சக்தியைச் சேராதவர்கள் இல்லை. பெண்சக்தியோடு இணையும் பொழுதுதான் மனிதர்களின் வாழ்வும் சிறக்கும். இதனை வெளிக்காட்டவே நீலி, கங்கை எனும் இருவரையும் சிவபெருமான் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் இப்பூமியில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ்ந்தால்தான் உயர்வினை அடைய முடியும் என்பதை வெளிக்காட்டவே ‘உமாபதி’யாக அர்த்தநாரீசுரராக சிவபிரானும் சக்தியும் வெளிப்பட்டிருக்கின்றார்கள் எனும்  கருத்துக்களைப் புலப்படுத்தும் சித்தர்கள்,

மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே
மாதர்தோள் சேர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே
மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்துகொண்டான் ஈசனே  (சிவவாக்கியார்பாடல்) என்றும்

ஆணும் பெண்ணுமாய் அற்புதக் கோலம் நீடி (பட்டினத்தார் பொது) என்றும் பாடித் தெரிவிப்பார்.

உலகத் தோற்றமும் ஒழுக்கமும்

இவ்வுலகம் ஆதிபராசக்தி எனும் பெண் சக்தியில் தோன்றிப் பெண்சக்தியிலேயே ஒடுங்குகின்றது என்பதைக் காகபுசுண்டர் தம் காவியத்தில் உரைப்பர். இதனை இராமதேவர் முதலான சித்தர்களும் ஏற்பர். பிரளயங்கள் ஏற்பட்டு அனைத்தும் அடங்கிவிட்ட பிறகு பிரமம் இவ்வுலகத்தைத் தோற்றுவிக்க நினைக்கும்பொழுது காலத்தம்பத்தில்  ஆதிபராசக்தி   தோன்றி சிவன், திருமால்  போன்ற தெய்வங்களை அழைப்பாள். திருமால் தன் உந்திக்கமலத்தில் பிரமனை உருவாக்க அவருள் அடங்கியிருந்த  உயிரினங்களை  வெளிக்கொணர இவ்வுலகம் தோன்றுகிறது. ஒடுக்கக் காலத்தில் அனைத்தும் உருவாகியபடியே ஆதிபராசக்தியில் ஒடுங்கிவிடுகின்றன என்று காகபுசுண்டர் உரைப்பர். (காகபுசுண்டர் காவியம்)

சித்திகளைத் தருபவள் சக்தியே

சித்தர்கள் பெண் சக்தியே சித்திகளைத் தருகின்றது என்ற மெய்ம்மைப் பொருண்மையாகக் கொண்டமையால் தங்களது பாடல்களில் அவற்றைப் பதிவு செய்துள்ளனர். சட்டைமுனி, ‘சிவனது இடதுபுறத்தில் நிற்பவள் அட்டமாசித்தியினை அளிப்பவள், புகழ் வாய்ந்த இரத்தின ஆரம் பூண்டவள், இவளது  திருவடிவினைக் காண்பதற்கு நவகோடிதேவர், சித்தர் முதலானோர் நிற்பர். எருதின்மேல் ஏறுகின்ற அப்பன் ஏழை எனவே அவரிடம் சொல்லாமல் இவ்அம்மையின் முன்னே வைத்துக் கேட்டால் நாம் கேட்டதையெல்லாம் அருளிச்செய்வாள். அவளின் வழி அவற்றைப்பெற்று மவுனத்தைப் பெறவேண்டும்’ என்பர். (சட்டைமுனி முன்ஞானம் 100)

தாயாகிய சக்தியின் செயற்பாடுகள்

சட்டைமுனி, தாயாகிய சக்தியின் செய்பாடுகள் யோகசாதனைகள் செய்பவரிடத்து வெளிப்படும் என்பதை,

உன்னிநின்ற மூலமுதலாறும் பார்த்தே
உருகுகின்ற சுழுமுனையை யறிந்துபின்பு
மன்னி நின்ற மதிமேல் சாம்பவியைக் கண்டு
மருவிநின்று மணமுறைந்து சேர்த்து பின்பு
பன்னிநின்ற இவ்வளவும் யோக மார்க்கம்
பகலிரவு மற்றவிடம் ஞான மார்க்கம்
கன்னி நின்ற விடங்கண்டா லவனே ஞானி
காட்டுவாள் கேசரியைக் காட்டு வாளே ( சட்டை முனி பா:10)

யோக சாதனைகளில் ஈடுபட்டவர்கள் ஞானமார்க்கத்தை நோக்கிச் செல்லவேண்டும். அவ்விடம் பகலும் இரவும் அற்றதாகும். அது கன்னி எனும் வாலைப்பெண்ணின் இடமாகும் அவ்விடத்தைக் கண்டவனே ஞானியாகும். அவ்வாலைப் பெண்ணே கேசரி எனும் வித்தையைக் காட்டுவாள்.

காட்டுவாள் கிரிதன்னை மேலே யேற்றிக்
கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்வாள்
மூட்டுவாள் குளிகைவிட்டால் கணத்துக்குள்ளே
மூதண்ட புவிகடந்து தெளிவுங் காணும்
ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள்
ஆதிவத்து அனாதிவத்து இரண்டுமொன்றே
ஊட்டுவாள் நிற்குணத்தின் அமுதவல்லி
உயர்ந்து நின்ற ஞானசக்தி யுறவு தானே (பா:11)

வாலைப் பெண்ணானவள் தலையான மலையில் ஏற்றிவிடுவாள். ஏறாவிட்டால் கீழே தள்ளிவிடுவாள். குளிகையை உண்டு ஒருகண நேரத்திற்குள் இப்பெரிய உலகைக் கடந்து செல்வது போல உணர வைப்பாள். அவள் அண்டங்களையும் அவற்றில் வாழ்பவரையும் மாலையாக முடித்து அணிந்தவளாவாள். தகுதிவாய்ந்த அவளைவிட மிகச்சிறந்த உறவுயாருமில்லை எல்லாச் சமயத்தினரையும் திரோதானத்தால் அவள் மாயை செய்து ஆட்டுவிக்கின்றாள்.

கேசரி யோகம்

மனத்தின் முடிவு எல்லையில் தேவியின் திருவடி என்பதை கேசரி யோகத்தால் உணரலாம். கேசரி யோகத்தில் உள்ள வாலைத்தாயின் குண்டலித் தீயினது ஒளி கண்ணும் விண்ணும் கொள்ளாதது. கரை காணமுடியாதது. இதனைப் பறை என்றும் விண் படரும் செயல் என்றும் கூறுவர். அவளை மவுனத்தால் உணரவேண்டும். அவளை உருவம் ஒன்றும் இல்லாத மவுனச் செய்கையாகக் கொள்ளலாம். அவள் வான் மீது படரும் சோதியாகும். மவுனமுற்று இருந்தால் லயத்தின் நேர்மையில் உலகிற்கும் அம்மவுனமாகிய ஜோதி தெரியும்.

கொங்கணரும் இக்கருத்தை உடன்படுவார். தோற்றத்திற்குக் காரணமாக இருக்கும் வாலைப்பெண்தான் ஐந்தெழுத்துமாக நின்றவள்; இவளே ஊமை எழுத்துமாவாள். இவளே ஞானத்தின் வகையாக நிற்பாள் என்பதை,

ஆதியிலைந் தெழுத் தாயினாள் வாலைப்பெண்
ஐந்தெழுத் துமென்று பேரானாள்,
நாதியி னூமை யெழுத் திவள் தானல்ல
ஞான வகையிவள் தானானாள்  (கொங்கணர்  பா:13)

எனும் பாடலில் தெரிவிப்பர். இவர் கூறிய ஊமை எழுத்தினை விரிக்கும்பொழுது இவரே ஊமை எழுத்தே உடலாச்சு என்பர்.  இதனைச் சிவவாக்கியரும் தம் பாடலில் ,

சக்தியாவது உன்னுடல் தயங்குசீவன் உட்சிவம்
வித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே
சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல்லிறந்த தோர்வெளி
சக்தியும் சிவமும் ஆகிநின்ற தன்மையாவது உண்மையே (சிவ:372)

என்று உரைப்பர். இப்பாடலில் நமது உடலாக நிற்பது சக்தி; உள்ளிருக்கும் உயிராக இருப்பது சிவன். இவ்விரண்டையும் சுற்றி ஐந்து கோசங்கள் கோட்டைகட்டி உள்ளன. உள்ளே கூடமாக ஒளி நிற்கின்றது. எனவே சக்தியும் சிவமுமாக நிற்பது உண்மையாகும். என்று உரைப்பதால் உயிர்களின் செயற்பாட்டிற்கு முதன்மையாக உடல் விளங்குவதை அறியலாம்.

மகடூஉ முன்னிலை

பெண்களை முன்னிலையாக வைத்துப் பாடுவது மகடூஉ முன்னிலை எனப்படும். இந்நிலையில் பட்டினத்தார், கொங்கணர், குதம்பைச்சித்தர், அழுகணிச்சித்தர் முதலானோர் பாடல்களைப் பாடுகின்றனர்.

முந்தச் செகங்களுண்டானதுவும் முதல்
தெய்வமுந் தேவருண்டானதுவும்
விந்தையாய் வாலையுண்டானதுவும் ஞான
விளக்கம் பாரடி வாலைப் பெண்ணே!  (கொங்கணர் பா.11)

குதம்பைச்சித்தர்,

வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போருக்கு
பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி  (குதம்பை பா : 12) என்றும் பாடுவர்.

நாயக நாயகி பாவனையில் பாடுதல்

தன்னைப் பெண்ணாகவும் இறைவனை ஆணாகவும் வைத்துக்கொண்டு பாடுதல் நாயக நாயகி பாவனையாகும். பட்டினத்தார் தன்னைப் பெண்ணாகவே கொண்டு பாடுகிறார்.

கன்னி அழித்தவனைக் கண்ணாரக் கண்டேன்டி
என் இயல்பு நானறியேன் ஈதென்ன மாயமடி  என்றும்,

கண்மாயம் இட்டாண்டி கருத்தையும் இழந்தேன்டி
உள்மாயம் இட்டவனை உருஅழியக் கண்டேன்டி (பட்டினத்தார் பா:69) என்றும் பாடுவர்.

பொது நிலையில் பெண்கள்

சித்தர்கள் தங்களது பாடல்களில் பெண்கள் எவ்வாறு  இருந்தனர் என்பதையும் பதிவு செய்துள்ளனர். பெண்டிர் தம்மை அழகுபடுத்திக் கொள்வதில் விருப்பம் உள்ளவர்களாக இருந்தனர். தங்கத்தாலான அணிகலன்களை அணிந்தனர். வளம் குறைந்தவர்கள் பித்தளையினால் ஆகிய அணிகளை விளக்கி அணிந்தனர். கொம்பு இல்லாத உருண்டை மஞ்சளைத் தேய்த்து எண்ணெயும் கூட்டிமுகத்தில் பூசிக் கொண்டனர். சுட்டெரித்த சாந்தினைப் பூசி முகத்தில் நெட்டெழுத்தினைப் போலப் பொட்டிட்டுக்கொண்டனர். மெட்டி அணிந்தனர். இவர்கள் எதனையும் மனத்தில் வைத்திருக்கும் வன்மையில்லாதவர்கள். மானத்தினைக் காப்பது சேலைக்குமேல் எதுவுமில்லை என்று கருதினர். பத்து மாதங்கள் குழந்தையைச் சுமந்து இறைவனையே தியானித்துத் தொந்தி சரிய அங்கமெல்லாம் நொந்து பிள்ளைகளைப் பெறுவர். பெற்ற பிள்ளை ஆண் பிள்ளை என்று கூறினால் மகிழ்வர். தன் முலைப்பாலினைக் கொடுத்து வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள் மேலும் கட்டிலிலும் வைத்து இரவு பகல் என்றில்லாமல் அன்புடன் காப்பர். தேனே, அமிர்தமே, செல்வத்திரவியப் பூவே, மானே என்றழைத்து முகம் மேல் முகம் வைத்து முத்தாடி என்றன் மகனே என்றழைப்பர். குற்றம் குறை போக்கி வளர்ப்பர். தன் மகனுக்கு ஒரு வருத்தம் எனில் சிறிதும் தாங்கார். கணவனோ அன்றிப் பிறரோ இறந்து விட்டால் வீதி வரையில் அழுது கொண்டு வருவர். கணவன், தகப்பன் அண்ணன், தம்பி யாராயினும் பொருள் சம்பாதித்து வருபவர்களையே விரும்புவர். கற்புடைய குலமகளிர் பத்தினிப் பெண்டிர் என்று போற்றப்பெற்றனர்.

கற்பு நிலை திரிந்தபெண்களும் இருந்ததைப் பட்டினத்தார் காட்டுவர்.  சமுதாயத்தில் கற்புடைய பெண்டிர் என்றும் போற்றப்பெற்றனர். சமுதாயத்தில் கற்புடைய பெண்டிர் இருந்ததைப் போன்று விலை மாதர்களும் இருந்தனர். இவர்கள் நாவார வேண்டிய இதம் சொல்வர். தன்னிடம் வந்தவனைப் பிரித்தால் இறப்பதாகக் கூறுவர். வருபவர்களுடன் ஒரு தன்மையாய் அமர்ந்து உண்பர். பொருள் தீர்ந்துவிட்டதெனில் போய் வரச்சொல்லி நடுத்தலையில் குட்டுவர். தினந்தோறும் பொய்யினையே பேசுவர். வம்பு பேசுவதில் சிறந்தவர். இவர்களுக்கென்று தனி வீதிகள் இருந்தன. ஆடவர்கள் பலர் தாங்கள் உழைத்து ஈட்டிய பொருளையெல்லாம் விலைமாதர்களுக்கே தந்து வாழ்ந்தனர். அதனால் நோய்வாய்ப்பட்டவர்களும் உண்டு. பொருள் அற்ற வறியவர்களை இவ்விலைமாதர் தங்களுடன் சேர்ப்பது இல்லை. தங்களை அழகுபடுத்திக் கொண்டு பட்டப்பகலில் வெளி மயக்குச் செய்து திரிவர்.  (க.இளமதி ஜானகிராமன் சித்தர் இலக்கியம் பக்:168-169)) என்று உரைப்பதின் வழி, பெண்கள் பொருளுக்காக ஆண்களை வயப்படுத்தும் நிலை மாறவேண்டும் என்றும் பெண்கள் தங்களுக்கான வாழ்க்கையைத் தாங்களே தேர்வு செய்து முழுமையுமாக  வாழவேண்டும் என்பதையும் புலப்படுத்துவர்.

சித்தர்கள் பெண்களை வெறுப்பவர்கள் என்றும் அவர்களின் உடல் உறுப்புகளை இழிவாகப் பேசுபவர்கள் என்றும் பட்டினத்தார் பாடல்களைச் சான்று காட்டி உரைப்பவர்களும் உண்டு. பட்டினத்தார் வெளிமயக்கு செய்து ஆண்களிடம் பொருள் பெறும் பெண்களைக் குறித்துத்தான் அவ்விதம் பாடினாரே ஒழிய கற்புடைய பெண்களை அவர் குறைகூறவில்லை. அனைத்துச் சித்தர்களும் பெண்களைச் சக்தியின் உருவமாகவே காண்கின்றனர். கொங்கணர்,

உந்தன் பத்தினிமார்களைப் பழித்துக்காட்டாத’ (கொங்கணர் பா:64)

பெண்ணுமில்லாமலே ஆணுமில்லை யிது
பேணிப் பாராடி வாலைப்பெண்ணே (கொங்கணர் பா.72) என்றும்,

கற்புடைப் பெண்கள் குலம் வாழ்க – நின்ற
கற்பை அளித்தவரே வாழ்க (கொங்கணர் பா:46) என்றும் வாழ்த்திப் பாடுவர்.

முடிவுரை

இக்கட்டுரையின் வாயிலாக, சித்தர்கள் பெண் சக்தியே இவ்வுலகத் தோற்ற ஒடுக்கங்களுக்குக் காரணமாகிறது, அனைத்திற்கும் மூலமாக உள்ளது, சித்திகளைத் தருவது, இன்பத்தை அளிப்பது, இறையுடன் ஒன்ற உறுதுணைபுரிவது எனும் நிலைகளில் பெண்மையைப் போற்றியுள்ளமை வெளிப்படுத்தப்படுகின்றது.

*****

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

சித்தர்கள் என்றாலே இல்லற வாழ்வையும் பெண்டிரையும் பழித்துப் பேசும் இயல்பினர் எனும் பொதுப்பார்வையைத் தகர்க்கும் விதத்தில் சித்தர்கள் பெண்களைச் சக்தியின் வடிவாகப் போற்றியவர்களே; அவர்கள் இழித்தும் பழித்தும், தம் பாடல்களில், பேசியிருப்பது ஆடவரின் பொருளுக்காகத் தம் உடலை விற்கும் விலைமகளிரையே என்று இவ் ஆய்வுக்கட்டுரை சான்றுகளோடு விளக்குகின்றது. ஆயினும் முடிவுரைப் பகுதி கட்டுரையின் மையக்கருத்தை இன்னும் விரிவாகவும் விளக்கமாகவும் தொகுத்துரைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அத்தோடு, கட்டுரைக்குத் துணைசெய்த நூல்களின் பட்டியலும் இதில் விடுபட்டுப் போயிருக்கின்றது. ஆய்விதழ்களுக்குக் கட்டுரை அனுப்புவோர் துணைநூற்பட்டியலையும் இணைத்து அனுப்புவது இன்றியமையாதது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

சித்தர் பாடல்களை இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் ஆராயவேண்டியதன் அவசியத்தை இவ் ஆய்வுக் கட்டுரை உணர்த்துகின்றது. ஆய்வாளர்கள், சிறுகதைகள் நாவல்கள் என்ற எளிமையான இலக்கிய வகைமைகளையே ஆய்வுசெய்து பட்டம்பெறுவதைக் காட்டிலும்,  அறிவியல்வழிசார் ஆன்மிகத்தில் ஆழங்காற்பட்ட,  சித்தர் இலக்கியங்களை ஆய்வுசெய்வதன் வாயிலாக அந்த ஞானிகள் கண்டறிந்த பல்வேறு அரிய உண்மைகளைச் சமூகத்துக்கு அறியத் தந்த பெருமைக்குரியோராகலாம். ஆய்வாளர்கள் சிந்திப்பார்களாக!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “(Peer Reviewed) சித்தர் இலக்கியங்களில் பெண்கள் குறித்த பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *