Category: தொடர்கள்

  • பழகத் தெரிய வேணும் – 34

    பழகத் தெரிய வேணும் – 34

    நிர்மலா ராகவன்

    அடக்கம் — ஆணவம்

    ஆறு வயதான சிறுமியிடம், `உன் அக்காளிடம் பாடம் கற்றுக்கொள்,’ என்று சொன்னால், `அவ ரொம்பத்தான் காட்டிப்பா,’ என்ற சிணுங்கல் வரும்.

    ஓரிரு வயதே பெரியவளான அக்காளுக்குப் பெருமை, தனக்கு தங்கையைவிட அதிகம் தெரிந்திருக்கிறதே என்று. அவளை மட்டம்தட்டிப் பேசத் தோன்றும்.

    பெரியவர்கள் இப்படி நடந்தால், `அகம்பாவம்’ என்று முத்திரை குத்திவிடுகிறோம். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள்.

    தம்மீது நம்பிக்கை இல்லாததாலேயே அப்படி நடக்கிறோம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

    `என்னைப்போல் யார்!’ என்று மார்பை உயர்த்திக்கொண்டு ஒருவன் நடந்தால், தன்னை யாராவது வீழ்த்திவிடுவார்களோ என்ற அச்சம் அவனுக்குள் இருக்கிறது என்று அனுமானிக்கலாம்.

    ஏதாவது துறையில் அவன் தன் திறமையைக்கொண்டு சாதித்திருக்கலாம்.

    அதற்கென்ன! அந்த சாதனையை வீழ்த்த வேறொருவர் வரமாட்டாரா, என்ன!

    `நான் சொல்வதுதான் சரி!’ என்று ஒருவன் அழுத்திக் கூறிக்கொண்டே இருந்தால், பலர் அவன் பின்னால் நடப்பார்கள். எல்லாம், அவனைச் சார்ந்திருந்தால் ஏதாவது காரியம் நடக்குமே என்றுதான்! அவனுடைய கர்வமும் ஓங்குகிறது.

    இந்த கர்வத்திற்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. மனிதனின் பிறவிக் குணம். அவ்வளவுதான்.

    “முட்டாள்தனத்திற்கு அடுத்து அபாயகரமானது ஆணவம்” என்கிறார் ஐன்ஸ்டீன்.

    தான்தான் உயர்ந்திருக்கிறோம் என்ற அகந்தை கொண்டவனுக்கு, `இன்னும் எப்படி முன்னேறலாம்?’ என்ற யோசனை கிடையாது. அதுவரை கிடைத்ததே போதும் என்று மெத்தனமாக இருப்பான்.

    கதை

    எப்போதும் ஒரு நமட்டுச் சிரிப்புடன் நடப்பான் லிங்கம். வெளிநாட்டிலிருந்து கலைக்குழுவினரை வரவழைப்பது அவன் தொழில்.

    அதிகப் படிப்போ, பணமோ அவனிடம் கிடையாது. எப்படியோ ஒரு பெரிய நிறுவனத்தினருடன் தொடர்புகொண்டு, அவர்களுக்காகப் பெரிதும் உழைப்பதுபோல் `காட்டிக்’கொண்டான். எப்போதும் அங்கேயே உட்கார்ந்திருப்பான்.

    அங்குள்ள பிரமுகர்களுடன் – காலில் விழாத குறையாக — பழகி, எந்த விழாவாக இருந்தாலும் அதை நடத்திக்காட்டும் பொறுப்பை ஏற்றான்.

    கலைக்குழுவினரை மட்டமான இடங்களில் தங்கவைப்பது, பெரிய விருந்திற்குச் சுமாரான உணவை ஏற்பாடு செய்வது என்றெல்லாம் தில்லுமுல்லு செய்தால் சம்பாதிக்க முடியாதா, என்ன!

    `நான் இல்லாவிட்டால் இவர்கள் இப்படி நடத்திக்காட்டி இருக்க முடியுமா?’ என்ற பெருமிதம் ஏற்பட்டது.

    ஒரு நிகழ்ச்சியில், “என்ன தம்பி!” என்று அதிகாரி ஒருவர் குசலம் விசாரித்தது இரண்டு வரிசை பின்னால் உட்கார்ந்திருந்த எனக்கே கேட்டது. அவன் ஏன் பதிலளிக்கவில்லை என்று ஆச்சரியமாகப் பார்த்தேன். அலட்சியமாக இருந்தான்.

    சிறிது பொறுத்து, அப்போதுதான் அவரைக் கவனித்ததுபோல், “அட! ஹலோ, டத்தோ! ஹௌ ஆர் யூ?” என்றான், ஆரவாரமாக. (டத்தோ என்பது மலேசியாவில் மாமன்னரோ, மாநில சுல்தான்களில் ஒருவரோ அளிக்கும் பட்டம்).

    உயர்ந்த இடத்தில் பழகியதால் தானும் உயர்ந்தவன்தான் என்று நம்பிய முட்டாள் அவன்.

    “ஆணவம் விவேகத்தைக் குறைத்துவிடும்” (அரபு நாட்டுப் பழமொழி)

    அதிகாரியைக் கவனிக்காது விட்டது ஆணவம் — `நானும் நீங்களும் ஒரே தரத்தில்தான் இருக்கிறோம்,’ என்பதுபோல். இல்லாத தன்னம்பிக்கையை வரவழைத்துக்கொள்ளும் உபாயம் அது.

    அவனுடைய போக்கு அங்கிருந்தவர்களுக்கு எரிச்சலை ஊட்ட, விரைவில் வீழ்ந்தான்.

    இத்தகையவர்கள் தெரிந்தவர்களுடன் மட்டுமே பழகுவார்கள். ஏனெனில், அவர்கள்தாமே ஏற்பார்கள்! அதிகம் தெரியாதவர்களுடன் விறைப்பாக நடப்பார்கள்.

    படித்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்களையும் ஆணவம் விட்டு வைப்பதில்லை.

    இவர்கள் தாம் செய்யும் தவற்றுக்குக்கூட `ஒழுக்கம்’ என்ற சாயத்தைப் பூசுவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ!

    கதை

    இரவு நேரம்.

    தலைமை அதிகாரியின் வீட்டில் ஒரு பார்ட்டி.

    தன் கையில் ஒரு கோப்பை மதுவுடன், அமர்ந்திருந்த ஒவ்வொருவரிடமும் வந்து, “குடி!” என்று அவர் மிரட்டினார். `என்ன! நீ இன்னும் குடிக்க ஆரம்பிக்கலியா?’ என்ற கேலி வேறு, அவ்வப்போது.

    விருந்தினரில், `குடிப்பது நல்லொழுக்கம் இல்லை’ என்று நம்பியவர்கள் சிலர் இருந்தார்கள். இருந்தாலும், ஒழுக்கத்தைவிட மேலதிகாரியின் நல்லெண்ணமே பெரிது என்று பயந்து, அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

    மறுத்தால், அவர் செய்வது தவறு என்பதுபோல் ஆகிவிடாதா!

    ஒரு வேளை, இப்படி அதிகாரமாக, ஆணவத்துடன் நடப்பதால்தான் பெரிய மனிதராக ஆனாரோ என்று, அவரைப் பின்பற்றுகிறவர்களும் உண்டு.

    கதை

    அமீர் எங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அடக்கமான சிறுவன். படிப்பும் சுமாராக இருந்தது.

    அவனது பணிவால் கவரப்பட்டு, அவனை prefect (சட்டாம்பிள்ளை) ஆக்கினார் கட்டொழுங்கு ஆசிரியர்.

    பள்ளியில் எந்த மாணவன் தவறு செய்தாலும், அதைத் தட்டிக்கேட்கும் உரிமை அவனுக்குக் கிடைத்தபோது, அந்த ஆசிரியருக்கு அடுத்தபடி தான்தான் என்று நிச்சயித்துக்கொண்டான்.

    பிற ஆசிரியர்களை மதிப்பது அறவே நின்றுபோயிற்று. எதிர்த்துப் பேச ஆரம்பித்தான்.

    “உனக்கு ஏதோ பதவி கிடைத்துவிட்டதால், நீ ஆசிரியர்களைவிட உயர்ந்த நிலைக்குப் போய்விட்டதாக எண்ணமா?” என்று நான் திட்ட, “சரியாகச் சொன்னீர்கள், டீச்சர்!” என்று மாணவிகள் ஆமோதித்தார்கள். அவர்களுக்கும் அவனுடைய புதிய போக்கால் எரிச்சல்.

    சில வாரங்களிலேயே பொறுக்கமுடியாது போக, என் சக ஆசிரியரிடம் புகார் செய்தேன்.

    “இவனுக்கெல்லாம்போய் பெரிய பதவி கொடுத்திருக்கிறீர்களே! அதைப் பிடுங்கினால்தான் இவன் வழிக்கு வருவான். படிப்பிலும் அக்கறை போய்விட்டது,” என்று எடுத்துச்சொன்னேன்.

    அவருக்கு அவமானமாகப் போய்விட்டது.

    அடுத்த முறை அமீர் என் வகுப்புக்கு வந்தபோது, பயந்தவனாகக் காணப்பட்டான். பதவி போய்விட்டால், தன் மதிப்பு குறைந்துவிடுமே என்ற பயம்.

    சில காலம் இந்த மாற்றம் நிலைக்கும்.

    இன்னொரு கதை

    மலேசிய அரசாங்கப் பள்ளிகளில் காலை, மத்தியானம் என்று இரு அமர்வுகள் உண்டு. காலையில் பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள்.

    வயதில் சற்றுக் குறைந்தவர்களுக்கு மத்தியானப்பள்ளி.

    அதில் போதிக்கும் ஓர் சீன ஆசிரியை என்னிடம் வலிய வந்து, குழைந்து குழைந்து பேசுவாள். எனக்கோ அவள் பெயர்கூடத்தெரியாது.

    `இவள் ஏன் நம்மிடம் இவ்வளவு இழைகிறாள்?’ என்று என் யோசனை போயிற்று.

    நான் பெரிய வகுப்புகளில் போதித்த மூத்த ஆசிரியை. அவள் என்னைவிட வயதில் மூத்தவளாக இருந்தாலும், பட்டதாரி இல்லை. அதனால் வந்த அடக்கம்.

    பள்ளி அரசாங்கப் பரீட்சை ஒன்றில் அவளுடைய மகள் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தாளாம். மகள் பெற்ற வெற்றியால் தானும் உயர்ந்துவிட்டதாக அவள் நினைத்திருக்க வேண்டும்.

    அதன்பின், `நான் உன்னைவிட உயர்த்தி!’ என்று மார்தட்டிக்கொள்வதுபோல் என்னிடம் மரியாதைக்குறைவாகப் பேசினாள்.

    இவளைப்போன்ற பலருக்கு, மற்றவர்களைவிடத் தாங்கள் உயர்ந்திருக்க வேண்டும்.

    உயர்ந்த நிலையில் இருப்பவர்களுடன் இணைந்து பழகினால் தாமும் உயர்ந்துவிட்டதாகப் பிறர் எண்ணுவார்களே என்ற நப்பாசை.

    அல்லது, பிறருடன் ஒப்பிட்டுக்கொண்டு, தாழ்வாக இருக்கிறோமோ என்ற மனக்கலக்கம்.

    அவ்வப்போது அசடு வழி

    `நான் இருக்கிறபடி இருந்துவிட்டுப்போகிறேன். பிறருடன் என்னை ஒப்பிட்டுக் கொண்டிருப்பானேன்!’ என்ற விவேகம் இருந்தால்தான் நிம்மதி கிடைக்கும்.

    எந்த சூழ்நிலையிலும், `பிறர் நம்மைப்பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ!’ என்ற பயத்துடன் நடக்க வேண்டியதில்லை.

    அவ்வப்போது அசட்டுத்தனமாக நடந்தால், நமக்கே நாம் உற்சாகமூட்டிக்கொள்ள முடியும்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 21

    கதை வடிவில் பழமொழி நானூறு – 21

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 43

    யானும்மற்(று) இவ்விருந்த எம்முனும் ஆயக்கால்
    வீரம் செயக்கிடந்த(து) இல்லென்று – கூடப்
    படைமாறு கொள்ளப் பகைதூண்டல் அஃதே
    ‘இடைநாயிற்(று) என்பிடு மாறு’.

    பழமொழி – ‘இடை நாயிற்கு என்பு இடுமாறு‘

    துபாயிலிருந்து கிளம்பி ஒருவழியா இந்தியா வரப்போறோம். கொரோனா தொற்றுவியாதி பிரச்சினையால எங்க எல்லாருக்கும் தற்காலிகமா வேலை இல்ல. நல்ல வேளை. இந்தியன் மென்டாலிடி ஒருத்தருக்கொருத்தர் நல்லா உதவி செய்யறாங்க. ஒரு சர்தார்ஜீ பையா தான் இப்போ எங்க எல்லாரையும் தங்க வச்சி சாப்பாடு போட்டுக்கிட்டிருக்கார். விமானசேவை தொடங்கினவொடனே ஊரப்பாத்துப் போய்ச் சேரணும்.

    க்யா பாயி.. என் வங்காளச் சகோதரன் அழைக்கிறான். ஆமாம் அப்படித்தானே சொல்லணும். நம்ம நாட்ல நம்ம ஊர்ல பாதுகாப்பா இருக்கற வரதான் சாதி சொந்தம் பக்கத்துவீடு பக்கத்து ஊரு இந்தப் பிரச்சினையெல்லாம். நம்ம மாநிலம்விட்டு அயல் மாநிலம் போனாலே நம்ம தமிழ் பேசற எல்லாரும் சொந்தக்காரங்களாத் தெரியுவாங்க.

    அயல் நாட்டுல கேக்கவே வேணாம். எந்த மொழி பேசினாலும் நான் இந்தியர்னு சொன்னாப் போதும் கண்ணுக்கு பங்காளிமாதிரி தான் தெரியுவான். இப்ப இத எல்லாத்தையும் விட்டுட்டு திரும்ப ஊருக்குப் போகணும். அங்க போய் முன்ன மாதிரி இருக்க முடியுமா தெரியல.

    வங்காளச் சகோதரனிடம் புலம்ப ஆரம்பித்தேன்.

    என் ஊருக்குப்போகவே எரிச்சலா வருது. எனக்கு விவரம் தெரியற வர எங்க ஊர்க்கும் பக்கத்து ஊருக்கும் சண்டை. நாள் முழுக்க வேற வேலையே இல்லாத மாதிரி பக்கத்து ஊரப் பத்தி குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நம்ம சரவணன் அந்த ஊரச் சேந்தவன். உனக்கே தெரியும் நாங்க ரெண்டு பேரும் எவ்ளோ பாசமா இருக்கோம்னு. இப்போ ஊருக்குப் போனா பாத்துக்கக்கூட முடியாது. முடிந்த அளவு புலம்பிவிட்டேன். கொஞ்சம் மனசு லேசானது.

    அவன் அறிவுரை கூற ஆரம்பித்தான். வெளிநாட்டுக்குப் போய் வந்ததால உங்க கிராமத்துல தனி மரியாதை குடுப்பாங்க. அதுமாதிரி தான் அவனுக்கும் அத உபயோகிச்சு இளைஞர்களக்கூட்டி எடுத்துச் சொல்லுங்க. யோசிக்க செய்ய நிறைய விசயங்கள் இருக்கு.  இந்த மாதிரி வயல், வரப்பு கடவுள் இந்த சண்டையிலேயே உங்க காலத்தக் கழிச்சிடாதீங்கனு. நீங்க படிச்சு வந்த மாதிரி இந்த இரண்டு வருசத்துல கண்டிப்பா கொஞ்சம் பசங்க படிச்சு வெளிய வந்திருப்பாங்க இல்ல. உங்களுக்குத்தான் தெரிஞ்சிருக்குமே.

    இல்லை. நானும் அவனும் வந்ததிலேந்து ஊர்ப்பக்கம் போகவேயில்ல. என்னவோ மனசுக்குப் பிடிக்கல. அவங்களுக்கு ஒண்ணும் பணத்துக்கெல்லாம் பிரச்சினையில்ல. வயல், சொத்துநிறையவே இருக்கு. இப்ப வேற வழியே இல்ல. அங்கதான் போயாகணும்.

    அடப்பாவிகளா. ஆச்சரியம் விநய் போசுக்கு. உங்க குடும்பத்தார் வரச்சொல்லி வற்புறுத்தலியா. உனக்கு ஒரு சகோதரி இருக்கறதா வேற சொன்ன. இது ரொம்ப தப்பு. ரெண்டு பேரும் சுயநலமா இருந்திருக்கீங்க. இப்ப போனவுடனே உங்களால ஊருக்கு என்ன செய்ய முடியும்னு யோசனை பண்ணுங்க. பிரச்சினைக்கு தீர்வு காண நினைக்கணுமே தவித்து அதுலேந்து ஓடி ஒளிய நினைக்கக் கூடாது.

    என்னவோ நண்பனின் அறிவுரை சரியெனப்பட்டது. ஊருக்கு வந்ததிலேந்து எல்லாரும் ரொம்ப அமைதியா இருக்கற மாதிரி தோணுது. ரெண்டுநாளுக்குமேல பொறுக்க முடியல. அக்காவிடம் கேட்டேவிட்டேன். என்ன ஆச்சு நம்ம ஊர் மக்களுக்கு எப்ப பாத்தாலும் அங்க வெட்டு இங்க குத்துனு தகவல் சொல்லிக்கிட்டேயிருப்பாங்க. இப்ப யாரும் பேசறதேயில்ல. ஊரடங்கால எல்லாரும் மாறிட்டாங்களோ?

    ஓ அதுவா. அய்யா வேற வழியில்லாம ஊர்ப்பக்கம் காலடி எடுத்து வச்சிருக்கீங்க. இந்த ஊர் மாறி வருசம் ஆச்சு. எப்ப பாத்தாலும் சண்டையிழுத்துக்கிட்டு அலைஞ்ச கிழக்கு ஊர்ப்பண்ணையாரோட அடியாட்களுக்கு நம்ம ஊர் பேக்டரியில நிரந்தர வேலை போட்டுக்குடுத்தவொடனே அந்த ஆள் தனியாநின்னு வாலாட்ட முடியாம அடங்கிட்டாரு. எல்லாம் உன்கூட படிச்சானே நிரஞ்சன். அவனோட ஐடியாதான். நல்ல பையன். ஊருக்கு நல்லதுபண்ணிட்டான்.

    ‘இடை நாயிற்கு என்பு இடுமாறு‘னு பழமொழி இருக்குல்ல. ஆடுகளத் திருட நினைக்கறவன் முதல்ல அந்த வீட்ல வளக்கற நாய்க்கு எலும்புத்துண்டு போட்டுப் பழக்குவானாம். அது கத்தாம இருக்கறதுக்காக. அதுமாதிரிதான் நிரஞ்சனும் அந்தப்பண்ணையாரோட ஆட்டத்த நிறுத்த அவரோட அடியாட்களுக்கு வேலை போட்டுக்குடுத்து நம்ம பக்கம் சேத்துக்கிட்டான். இப்பவாவது நல்லது பண்ணணும்னு நினைச்சீங்கன்னா அவன் கூட சேந்து ஏதாவது திட்டம் போடுங்க. சொல்லிவிட்டுச் சென்றாள் உள்ளூர்ப் பள்ளியில் தமிழ் ஆசிரியையாய்ப்பணிபுரியும் என் சகோதரி.

    பாடல் 44

    அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்
    உடையதொன் றில்லாமை யொட்டின் – படைபெற்று
    அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
    ‘இடையன் எறிந்த மரம்’.

    பழமொழி – ‘இடையன் எறிந்த மரம்’

    அமுதவல்லி எனும் நான் வேலைக்கான நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள வந்திருக்கேன். சென்னை எனக்குப் புதுசுதான். ஆனா இந்தக் கம்பெனியில எப்படியும் வேல வாங்கிரணும். அப்பதான் மிச்சமிருக்கிற கொஞ்ச நஞ்ச மானத்தக் காப்பாத்திக்க முடியும்.

    சரி. முதல்ல நம்மகிட்ட கேக்கப்போற கேள்விகள் என்னதா இருக்கும்னு யோசிப்போம்.

    பக்கத்திலிருந்த நபர் மெதுவா ஆரம்பிக்கிறார். மேடம் எத்தன வேகன்சி இருக்குனு தெரியுமா? உங்களுக்கு இந்தக் கம்பெனி பத்தின விவரத்த யார் சொன்னாங்க.

    நான் ஏதும் சிபாரிசுக்கடிதம் கொண்டு வந்திருக்கேனான்னு தெரிஞ்சுக்கிறதுக்காக நாசூக்கா கேக்கறாராமா.

    என் நிலைமை இப்படியா ஆகணும். எத்தன பேருக்கு அப்பா சிபாரிசுக்கடிதம் கொடுத்திருப்பார். எவ்வளவு பேர் அவரால பொழச்சிருப்பாங்க. பட்டியல் ரொம்ப நீளந்தான். ஆனா ஒருத்தருக்குக்கூட இப்ப கண்ணு தெரியலயே.

    அரைமணி நேரத்துக்கப்புறமும் யாரும் வரல. நாங்க ரெண்டுபேர் மட்டுந்தான் உக்காந்திருக்கோம். திரும்பவும் பக்கத்து நபர் பேச முயற்சிக்கிறார். அவருக்கு என்ன பிரச்சினையோ. நான் என் மவுனத்தைக் கலைத்தேன்.

    மொதல்ல உங்களப் பத்தி சொல்லுங்க சார். நீங்க உள்ளூரா. ஏதோ கேக்கறதுக்குன்னே காத்துக்கிட்டு இருந்தமாதிரி பேச ஆரம்பித்து தொடர்ந்து தன் நிலைமையப் புலம்பறார்.  அவரப் பொறுத்தமட்டிலும் உள்ள ஒரு வேகன்சிதான் இருந்திச்சுன்னா நான் விட்டுக்கொடுத்துடுவேன்னு நினைச்சு பொலம்பறார்.

    அப்டிப்பட்ட நிலமையிலா நான் இருக்கேன். அப்பா சேலத்துல பெரிய தொழிலதிபராத்தான் இருந்தாரு. ஆனா வரவன் போறவன்கிட்டயெல்லாம் வாக்கு குடுத்து அவுங்களுக்குத் தேவையானத செஞ்சிக்கிட்டே இருந்ததால தன் தொழில்ல கவனம் செலுத்தல.  பலவித ஏமாற்றங்கள். பொய்ப் புகழ்ச்சிக்கே மயங்கிக்கிட்டு இருந்த அவர கூட இருந்தவங்களே ஏமாத்திட்டாங்க. மொத்த சொத்தும் போச்சு. ஆனாலும் அவர் குணம் மட்டும் மாறவே இல்ல. அப்பறமும் யார் வந்து கேட்டாலும் கடன் வாங்கியாவது செஞ்சுகுடுத்து பெயரக் காப்பாத்திக்கிட்டு இருந்தாரு. கடைசியில கடன் அதிகமாகி மிச்சமிருந்த அம்மாவோட நகைகளையும் வித்து அடைச்சு நடுத்தெருவுக்குவந்துட்டோம். நல்லவேள நான் பிளஸ்2 முடிச்சிட்டதால அந்த தகுதிக்கு ஏத்த வேல தேடிக்கிட்டு பொழைக்கலாம்னு இங்க வந்திருக்கோம். இந்த ஜவுளிக்கடை சேல்ஸ் சூப்பர்வைசர் போஸ்ட் எனக்குக் கிடைச்சா நல்லா இருக்கும்.

    பொறுமையா கேட்டுக்கொண்டிருந்த அந்த பக்கத்து நபர் மனம் மாறிட்டார் போல. ஒருவேள ஒரு காலியிடம்தான் இருந்துதுன்னா நீங்களே சேந்துக்கோங்க. உங்க நிலைமை என்னய விட மோசம். ‘இடையன் எறிந்த மரம்’னு பழமொழி கேள்விப் பட்டிருக்கீங்களா.  அதுதான் உங்கப்பா நிலமையும். இடையன் கொஞ்சம் கொஞ்சமா கிளைய ஒடிச்சே ஒரு மரத்த அழிச்சுடுவானாம். பொருள் முழுக்க கையவிட்டு போனப்புறமும் அது இருக்கறமாதிரியே பந்தா பண்ணிக்கிட்டு எதுக்கு கடன்வாங்கி உதவி செய்யணும். இனிமேலயாவது உங்கப்பாவ கன்ட்ரோலா இருக்கச் சொல்லுங்க. தன் பங்கு அறிவுரையை உதிர்க்கிறார் அந்த நபர்.

    உள்ளேயிருந்து இன்னும் அழைப்பு வரவேயில்லை. இருவரும் காத்திருக்கிறோம்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41

    தி. இரா. மீனா

    இங்கு இடம் பெறும் வசனக்காரர்களின் பெயர், வாழ்க்கை குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முத்திரை கொண்டு இவர்கள் அடையாளம் காணப் பெறுகின்றனர்.

    ஆனந்த சித்தேஸ்வரா

    “மென்மை கடினம் வெப்பம் குளிர்ச்சி அறியும் வரை
    அர்ப்பணிப்பை மீறக்கூடாது
    அங்கத்திடம் ஒன்றினால் இலிங்கமறிய முடியாது
    அழிவற்ற சரணருக்குக் கூழாயினும் பரவாயில்லை
    அமுதமானாலும் பரவாயில்லை
    ஓடும் பரவாயில்லை செம்பும் பரவாயில்லை,
    படுக்கையும் பரவாயில்லை கிழிந்த பாயும் பரவாயில்லை
    அரம்பையும் சரி, சாதாரணமானவளும் சரி,
    அரசனும் பரவாயில்லை சேவகனும் பரவாயில்லை
    ஊரும் சரியே காடும் சரியே
    போற்றுதலும் தூற்றுதலும் நன்றே.
    இத்துணையும் மீறிய பெரிய மனிதர் செயலை
    உலகத்தவர் எங்ஙனம் அறிவர் ஐயனே
    ஆனந்த சித்தேஸ்வரனே.”

    ஈஸ்வரி வரத சென்னராமா

    “பொன் குவியல் ஆயிரம் பெண்கள் பெரிய நாடெனினும்
    இவ்வுடல் அழிவது உறுதி ஆசையைத் துறந்து
    ஈஸ்வரீய வரத சென்னராமனெனும் இலிங்கத்தில் ஆசை
    வைத்தால் எதிர்காலம் நன்றாம் காணீர் அண்ணன்மாரே“

    ஏகாந்தவீர சொட்டாளா

    “வந்த வழியில் மீண்டும் போகாதவன் இலிங்க ஐக்கியன்
    முன்னும் பின்னும் மறந்து ஐயமற்றவன் இலிங்க ஐக்கியன்
    குரு ஏகாந்தவீர  சொட்டாளனுள்
    தன்னைத் தான் மறந்தவன் இலிங்கமுடன் இணைந்தவன்.”

    ஏகோ ராமேஸ்வரலிங்கா

    “தான் இன்புற்றால் தன் இலிங்கம் மெச்ச நடப்பது
    தான் இன்புற்றால் தன் இலிங்கம் மெச்சப் பேசுவது
    நிந்திக்க வேண்டாம் ,பிறரை நிந்திக்க வேண்டாம்
    யாருக்கு ஆனாலென்ன? ஆகாவிட்டாலென்ன?
    தான் இன்புற்றால் போதும்.
    ஏகோராமேஸ்வர இலிங்கத்தின் உண்மையறிந்தால்
    முற்றி வளர்ந்த நெற்கதிர் போல் இருக்க வேண்டும் சரணன்”

    குருவரத விருபாக்ஷா 

    “செல்வமெனில் அனைவரும் வருவர்,
    நெருப்பெனில் யாரும் நிற்க மாட்டார் ஐயனே.
    உலகு எரிகிறது விஷ நெருப்பினால்.
    உருண்டோடுகிறது எண்டிசையும் சுரரின் கூட்டம்
    ஹரிபிரம்மன் திருமகள் கலைமகள் கரம்பிடித்து
    மருள் கொண்டனர் உமது உண்மையறியாமல்
    திருஇருந்தது பக்தருக்கு ,நெருப்பை நீ தரித்துள்ளாய்
    நிகர் யாருமிலர் உனக்கு குருவரத  விருபாக்ஷனே.”

    ஜங்கமலிங்கப் பிரபு

    “உலகிலிருக்கிற கல்லெல்லாம் இலிங்கமெனில் குருவின் தயவேன்
    நதியின் நீரெல்லாம் புனிதமெனில் இலிங்கத்தின் தயவேன்
    விளைந்த பயிரனைத்தும் பிரசாதமெனில் ஜங்கமனின் தயவேன்
    என்பதால் மூவகையின் தயவும் அழிந்தது
    காணாய் ஜங்கமலிங்கப் பிரபுவே.”

    திரைலோச்சன மனோஹர மாணிகேஸ்வரலிங்கா

    “உடல்கள் அழியும் முன்னர் அரவணைத்து
    பார்வை மழுங்கும் முன்னர் பார்த்து
    மதி மயங்கும் முன்னர் இலிங்கம் இலிங்கமென்பீர்
    செல்வம் தொலைந்து போகும் முன்னர்
    ஜங்கமருக்கு வழங்கி
    திரைலோச்சன மனோஹர மாணிகேஸ்வரனே
    நட்பு வைப்பின் மீண்டும் வாராதோ?”

    நஞ்சுண்ட சிவா

    வேதம் சரித்திரம் சிற்றறிவு வாதம் தந்திரம் இதிகாசம்
    நால்வகைப் புராணம் முன்னோர் வசனம் கற்றென்ன?
    குருவிடம் நம்பிக்கையில்லை இலிங்கத்தில் ஒழுக்கமில்லை
    ஜங்கமனிடம் கவனமில்லை பிரசாதத்தில் முழுமையில்லை
    பாதோகத்தில் பரமசுகமில்லை
    இந்த ஐவகை ஒழுக்கங்களிலிருந்து தானழிந்து
    வேற்றுமையறியாமல் நான் பக்தன், விரக்தியுடையோனெனில்
    சிரிக்க மாட்டார்களா உனதடியார்
    பரமகுருவே நஞ்சுண்ட சிவனே“

    [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 97 (மாதவ)

    சேக்கிழார் பாடல் நயம் – 97 (மாதவ)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மாதவ   வேடம்  கொண்ட வன்கணான்  மாடம் தோறும் 
    கோதைசூழ் அளக   பாரக்   குழைக்கொடி  ஆட  மீது
    சோதிவெண் கொடிகள் ஆடும்  சுடர்நெடு  மறுகில்  போகி
    சேதியர்   பெருமான்  கோயில்  திருமணி   வாயில்  சேர்ந்தான்.

    பொருள் :

    பெரிய தவவேடந் தாங்கிய அவ் வன்னெஞ்சம்  உடையவன்; மாடங்கள் எங்கேயும் மாலை சுற்றிய கூந்தலையும் குழையினையும் உடைய கொடிகள்ஆட, அவற்றின் மேலே ஒளிவிளங்கும் வெண்கொடிகள் அசைகின்றதற்கு  இடமாகிய விளக்கம் பொருந்திய, நீண்ட வீதியிலே சென்று, சேதிநாட்டு அரசர்பெருமானாராகிய மெய்ப்பொருள் நாயனாரது அரண்மனையின் அழகிய திருவாயிலை யடைந்தான்.

    விளக்கம் :

    வன்கணான் – தவவேடத்தினுள் மறைந்து வஞ்சிக்க எண்ணியது வன்கண்மையாம். திருக்கோவலூரிற் சேர்வான் – புகுந்தனன் – முத்தநாதன் – புகுந்த – அவ்  வன்கண்ணான் – மறுகிற் போகிக் கோயில் வாயில் சோந்தான் – எனத் தொடர்புபடுத்திக் கொள்க.

    மாடந்தோறும்  கோதைசூழ்  அளக  பாரக்   குழைக்கொடி ஆட  மீது  சோதிவெண்  கொடிகள் ஆடும்  சுடர்நெடு மறுகு – ஒவ்வொரு மாடத்திலும் அளகபாரக் கொடியும் அவற்றின் மீதே சோதி வெண்கொடிகளும் ஆடுகின்றன; அவ்வகை மாடங்களே நிறைந்த மறுகு என்க. அரசரது அரண்மனைக்குப் போகும் மறுகாதலானும், அவ்வரசரது தலைநகர் ஆதலானும் எங்கும் மாடங்கள் நிறைந்திருந்தன. இத்தொடர்  அவற்றின் செல்வங்குறித்தது.

    அளகபாரக் கொடி என்றதனால் பெண்களின் ஆடல்பாடலாதி இன்பமும், குழைக்கொடி என்றதனாற் பொன்மணி முதலிய செல்வமுங் குறிக்கப்  பெற்றன.

    சோதி வெண்கொடி – திருவிழா முதலிய தெய்வச் சிறப்புக் குறிக்கப் பெற்றன. இங்கு முத்தநாதன் வந்தது இரவாகும். இரவிலும் விளங்குவது வெண்மை யாதலானும், வெண்மை திருநீற்றின் சோதியாதலானும் சோதி வெண் கொடி என்றார். வெண் சோதிக் கொடி என்று மாற்றுக. அளகபாரக் குழைக் கொடி என்றது ஆடற்பெண்கள். பெண் கொடியும் – வெண்கொடியும் என இரண்டும் கொடிகளாம். பெண்கொடிகள் மாடங்களிலுள்ள ஆடரங்குகளிலாடுவர். வெண்கொடிகள் மாடங்களின் மீது ஆடுவன. “காந்தாரம் இசைபரப்பிக் காரிகையார் பண்பாடக் கவினார்வீதித், தேந்தாமென் றரங்கேரிச் சேயிழையார் நாடமாடும் திருவையாறே“ என்பது   திருவாக்கு.

    இங்கே ஒருகுறிப்பு : முத்தநாதன்  அரசன் அரண்மனையில்  புகுந்த போது, அங்கே  பக்தியுடன் இசைபாடி, ஆடி மகிழ்வோரைக் காணாமல் மாடந்  தோறும் கொடிகள்  போல் ஆடும் பெண்களைக் கண்டு செல்வது  சிவநெறிக்குப்  புறம்பானது!

    இவ்விரு கொடிகளுள்ளே மாடங்களில் ஆடரங்கிலே ஆடும் கொடிகளின் ஓர்   உறுப்புக் (குழல்) கறுப்பாம். இவை மனத்தினுட் கறுப்பு வைத்துப் புகுந்த முத்தநாதனது களவை அறிந்து அவனை அந்த மாடங்கள்கறுப்புக் கொடிகள் காட்டி “வெளியேறுக“ என்பனபோல அசைந்தன என்பதும், இக்கறுப்புக் கொடிகளின்மீது ஆடும் சோதி வெண் கொடிகள் “உனது உட்கறுப்பின் மேலே விளங்கும் வெண்ணீறும் சடைமுடியுமாகிய திருவேடமே வெற்றிபெறும். வெற்றி எம்முடையதே. இதினும் நீ தோற்பாய்“ என்று அறிவிப்பன போலக் கறுப்புக் கொடிகளைக் கீழ்ப்படுத்தி, மீது சோதியுடன் வெண்கொடி ஆடின் என்பதும் குறிப்புக்களாகத் தன்மை நவிற்சி யணியிலே வைத்து ஆசிரியர் விரித்துக்காட்டிய அழகினைக்   கண்டு களிப்போமாக.

    கறுப்புக்கொடி, உள்வருவோரை வரவேற்காது வெறுத்து வெளிப்போகச் சொல்லும் குறியாக இந்நாளிலும் வழங்கும் வழக்குங் காண்க. இனி, கறுப்பும் வெண்மையுமாயின கொடிகளைத் தன் மனக் கறுப்பும் வெண்ணீறும்போலவே கண்ணாடியிற்போல முத்தநாதன் எங்குந் தன் வண்ணமே கண்டான். அவ்வாறு காண்பவன் தன் மனத்துட் பொதிந்து வஞ்சனையினாலே அகத்தினழகு முகத்திற் றெரியும் என்றபடி முகம் பொலிவிழந்து சென்றானாகவும், மாடங்கள் அவ்வாறில்லாது தன்னை வெற்றிகொண்டன போன்று சுடர்விட்டு அழகுடன் விளங்கக் கண்டுகொண்டு சென்றான் என்பதுமொரு குறிப்பாம். இதனை எட்டாவது பாட்டாக வைத்தோதிய குறிப்பும் காண்க.

    சேதியர் பெருமான் – சேதிநாட்டவரின் தலைவராகிய நாயனார். கோயில் – அரண்மனை. திருமணிவாயில் திரு – அருட்டிரு. மணி – அழகு.மணித் திருவாயில் என்க. மணி கட்டிய வாயில் என்றலுமாம்.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 9

    பரிமேலழகர் உரைத்திறன் – 9

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    அலங்காரத்திற்காக அல்ல அடைச்சொற்கள்!

    முன்னுரை

    ஒவ்வொரு குறட்பாவையும் எழுத்து, அசை, சீர், அடி என ஆழ்ந்து நோக்கி உரையெழுதுவது பரிமேலழகருக்கு இயல்பு. குறட்பாவின் கிடக்கை நிலைக்கேற்ப ஆற்றொழுக்காக நிரல்பட உரைகாண்பது அவர்க்கு இயல்பன்று. குறட்பாவை முற்றாக நோக்கி, முன்பின்னாக உள்ள அதிகாரக் கருத்துக்களைக் கருத்திற்கொண்டு, மனத்துட் பதிவு செய்திருக்கும் நூற்கருத்துக்கள் முழுவதையும் ஒவ்வொரு முறையும் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தி உரையெழுதுவதே அவர் கையாண்ட உரைநெறி. தனக்குத்தானே முரண்படும் ஓரிடம் கூட அவர் உரையில் இல்லாமல் போனதற்குக் காரணம் இதுதான். அந்த வகையில் உவமத்திற்கு வந்த அடைச்சொற்களைப் பொருளுக்கும் பொருளுக்கு வந்த அடைச்சொற்களை உவமத்திற்கும் பொருத்திக்காட்டும் வியத்தகு ஆற்றலை வெளிப்படுத்தும் திருக்குறள் ஒன்று இக்கட்டுரையில் திறனறியும் குறட்பாவாக இடம்பெறுகிறது. குறட்பாவின் கருத்து முழுமையாகப் புரிந்து கொள்ளப்படல் வேண்டும் என்னும் பரிமேலழகரின் பேரார்வமே இவ்வாறு பொருத்தி உரைகாண்பதற்கான அடிப்படைக் காரணமாகும்.

    முற்றும் நோக்கல் என்றால் என்ன?

    ‘உற்று நோக்கல்’ தெரியும் ‘முற்று நோக்கல்’ தெரியுமா? உற்று நோக்கினாலே அது முற்று நோக்கலில் முடியும்.  சான்றாகப்,

    “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவனடி சேரா தார்” (10)

    என்பது கடவுள் வாழ்த்தாகிய தலையதிகாரத்தின் இறுதிக் குறட்பா. இந்தக் குறட்பாவை மேம்போக்காக நோக்கி உரைகண்டால் ‘இறைவன் திருவடியைச் சேராதவர் பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க மாட்டார்’ என்று மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அது பாட்டின் மையக்கருத்தாக இருக்கலாம்., அப்பாட்டின் முழுமையான கருத்தாகக் கொள்ள முடியாது. காரணம் என்ன? மையக்கருத்து முழமையான கருத்தாகாதா? ஆகாது! எப்படி? பாட்டில் ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்று செயப்படுபொருளும் வினைமுற்றும் இருக்கின்றனவே தவிர, ‘யார்?’ என்னும் எழுவாய் இருக்கிறதா? இல்லையே!. அடுத்த நிலையில் ‘இறைவனடி சேராதார் நீந்தார்’ என்று எழுவாயும் வினைமுற்றும் இருக்கின்றனவே தவிர எதனை நீந்தார் என்னும் செயப்படுபொருள் இருக்கிறதா? இல்லையே! எனவே எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் இருந்து பொருளுணர்த்த வேண்டிய நிலையில் உள்ள இரண்டு தொடர்களுமே குறட்பாவின் கட்டமைப்பில் குறையுடையனவே!. ‘குறள் வெண்பா’ என்னும் குறுகிய யாப்பே இதற்குக் காரணம். செறிவை முன்னிறுத்திச் செய்யுள் செய்கிறபோது இது தவிர்க்க இயலாதது. உண்மையில் இது ஓர் உத்தியெனினும் அதனைக் கண்டறிந்து எல்லாருக்கும் புரியும் வகையில் வெளிக்கொணர வேண்டியது உரையாசிரியர் கடமை. அந்தக் கடமையைப் பரிமேலழகர் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

    ‘இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்; அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்’

    என்னும் இப்பாட்டிற்கான பொழிப்பில் பரிமேலழகர் உரையின் உச்சம் தொடுவதைக் காணலாம். குறட்கருக்கத்தை விட இவரின் உரைச்சுருக்கம் நுட்பமானது. ஆனால் குறளில் பெறமுடியாத விளக்கத்தையும் தெளிவையும் இவர் உரையில் காண முடிகிறது. குறட்பாவையும் அதன் பொருளையும் நன்கு உள்வாங்கிக் கொண்டு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியனவற்றை நிரல்படப் பெய்து தெளிவான முழுமையான உரையை எழுதிக்காட்டுவதைக் காணலாம். மேலும் புணையை ‘அதனை’ என்றும் பிறவிப்பெருங்கடலை ‘அதனுள்’ என்றும் சுட்டால் உணர்த்துவார். ‘நீந்தார்’ என்னும் எதிர்மறைக்கு  ‘அழுந்துவர்’ என்னும் மற்றொரு உடன்பாட்டை எதிர்மறையாக்குவார். இந்தக் குறட்பாவும் உரைவிளக்கமும் இங்கே சுட்டப்பட்டதற்குத் திருக்குறள் தொடரமைப்பையும் உவம மற்றும் பொருள் அடைகளையும் நன்கு நோக்கி உரையெழுதும் அவருடைய உரைத்திறனைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும் என்பதற்கேயாம்.

    திறனறியும் குறட்பாவும் பொழிப்புரையும்

    திருக்குறளில் பன்னிரண்டாவதாக அமைந்துள்ள ‘நடுவுநிலைமை’ என்னும் அதிகாரத்துள் எட்டாவது குறட்பாவாக இடம்பெற்றிருப்பது,

    “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
    கோடாமை சான்றோர்க்கு அணி” (118)

    என்னும் குறட்பாவாகும். இதற்குச்,

    1. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் – முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம்போல
    1. அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம்.

    அதிகாரக் கருத்துப் பகுப்பு

    பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட் பாகுபாடுகளை அறிந்து கொள்வது இந்தக் குறட்பாவின் முழுமையான கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்த நெறி புலப்பட உதவக் கூடும்.  திருக்குறள் அதிகாரக் கருத்துக்களைப் பாகுபடுத்துவது பற்றிப் பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி ‘நடுவுநிலைமை’ என்னும் இவ்வதிகாரப் பொருண்மை பின்வருமாறு பரிமேலழகரால் வகுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது ‘நடுவுநிலைமை’ என்னும் அதிகாரத்தில் நடுவுநிலைமை என்னும் பண்பைத் திருவள்ளுவர் பொதுவாக ஆராயவில்லை என்பதாம்.

    1. நடுநிலைமையது சிறப்பு (1)
    2. நடுவுநிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தல் (2)
    3. ஏனைச் செல்வம் தீமை பயத்தல் (3)
    4. தக்கார் தகவிலர் அறியும் ஆறு (4)
    5. கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா (5)
    6. கோடுதல் கேட்டிற்கு ஏதுவாம் (6)
    7. கோடாதவன் வாழ்வு கேடன்று (7)
    8. அவையத்தார்க்கு வேண்டிய நடுவுநிலைமை (8-9)
    9. வணிகத்தார்க்கு வேண்டிய நடுவுநிலைமை (10)

    இப்பகுப்பாய்வில் இறுதியில் உள்ள அவையத்தார்க்கும் வணிகர்க்குமான நடுவுநிலைமைப் பண்பினைப் பரிமேலழகர் தொகுத்துக் கூறுகிறார். கட்டுரையாளர் பொருள் தெளிவு கருதி வகுத்துரைக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘சமன்செய்து’ என்றே குறளிருக்க, தன் கண் வைக்கப்படும் பாரத்தைத் தான் அளக்குமுன் தன்னைச் சரிசெய்து கொள்ள வேண்டும்’ என்னும் நுட்பத்தை உணர்ந்த பரிமேலழகர் ‘முன்னே’ என்னும் சொல்லை வருவித்துக் கொள்கிறார். கொண்டு ‘முன்னே ‘தான் சமனாக நின்று’ என உரையெழுதுகிறார்.
    • தன்னைச் சரிசெய்து கொண்ட பின்பே தன் பணியைச் செம்மையாகச் செய்ய முடியும் என்பதைப் ‘பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும்’ என எழுதுகிறார்.
    • ‘சீர்தூக்கும்’ என்பதற்கு ‘வரையறுக்கும்’ என உரை காண்பதை நோக்க வேண்டும். ‘சீர்’ என்பதற்குச் ‘சிறப்பு’ என்பதுதான் பொருள். ‘சீர் கொண்ட’ என்பது தமிழ்விடுதூது. சீரிடம், சீருடைச் ‘செல்வர்’, சீர்மை என்பன திருக்குறள் கண்ட சீர்கள். ‘சீர் அபிராமி’ என்பது பட்டர் வாக்கு ‘சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்’ என்பது வள்ளலார் வாக்கு. ‘சீரார் பெருந்துறை’ என்பது திருவாசகம். ‘சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர் காள்’ என்பது திருப்பாவை.
    • ‘சமனாக அமைந்து’ என்னும் உவம அடைக்கேற்ப அமைந்து என்பதற்கு ‘இலக்கணங்களால் அமைந்து’ என்னும் பொளுளடையை வருவித்துக் கொள்கிறார்.

    விளக்கவுரை

    “உவமையடையாகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும்,  பொருளடையாகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர் தூக்கலாவது தொடை விடைகளால் உள்ளவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும் ஒருபால் கோடாமையாவது  அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க” என்று விளக்கவுரையில் பரிமேலழகர் பொருளுக்கே முதன்மை தந்திருப்பதைக் காணலாம்.

    விளக்கவுரை நுட்பம்

    • ‘துலாக்கோல்’ உவமம். ‘சான்றோர்’ பொருள். முன்னது பாரத்தை வரையறுக்கிறது. பின்னவர் எத்திறத்தும் நடுவுநிலைமை மாறாமல் செயல்படுபவர் எனினும் குறட்பாவில் உவமத்திற்குச் சொல்லப்பட்ட சமன் செய்து சீரதூக்கல் இரண்டு அடைகளையும் பொருளுக்கு ஆக்கவில்லை. பொருளுக்குரைத்த அமைதலையும் ஒருபால் கோடாமையையும் உவமத்திற்கு ஆக்கவில்லை. இதனைப் பரிமேலழகர் நோக்கி உரையெழுதுகிறார்.
    • சமன் செய்து, அமைந்து, ஒருபால் கோடாது சீர் தூக்கல் என்பது உவமத்திற்கும் பொருந்தும் பொருளுக்கும் பொருந்தும். அதாவது உவமமாகிய துலாக்கோலிற்கும் பொருளாகிய சான்றோருக்கும் இந்த நான்கு பண்புகளும் இருக்க வேண்டும் என்று பரிமேலழகர் கருதுகிறார். கருதி, “உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீரதூக்கலும் பொருட்கண்ணும் பொருளடையாகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி” உரையெழுதுகிறார்.
    • இந்த நான்கு பண்புகளையும் உவமத்திற்கு ஒருமுறையும் பொருளுக்கு ஒரு முறையுமாக அடையாக்குவது குறுகிய யாப்பிலக்கணத்தில் கூடாமையை அவர் புரிந்து கொள்கிறார். கொண்டு புறக்கட்டுமானத்தின் போக்கறிந்து அகக்கட்டுமானத்தின் நுண்ணியம் காண்கிறார்.
    • பொருளுக்கான அடையை உவமத்திற்கு ஆக்கியுரைத்த பரிமேலழகர் (அதிகாரப் பொருள் நுட்பம் கருதி) உவம அடையைப் பொருளுக்குப் பொருத்திய பாங்கு பற்றி மட்டுமே உரையெழுதுகிறார். அதாவது துலாக்கோல் பாரத்தை அளக்கும் பண்பு பற்றிப் பரிமேலழகர் விரித்துரைக்காது சான்றோர் நடுவுநிலைமை தவறாது செயல்படுவதையே விரித்துரைப்பதைக் காணமுடிகிறது. உவம விளக்கத்தைக் கைவிட்டுப் பொருள் விளக்கத்தை மட்டும் பரிமேலழகர் தந்திருப்பதற்கு என்ன காரணம்? இவ்வதிகாரத்தின் இறுதிப்பாட்டில் இந்த உவம ஆற்றலைத் திருவள்ளுவர் வெளிப்படுத்துவதைப் பரிமேலழகர் அறிந்து கொள்கிறார். துலாக்கோலின் பணி அளவில் மாறுபடாமை என்பதைப் பிறவும் தமபோல் செயின் என்னும் தொடர் குறிப்பதையும், அத்தொடருக்குக் “கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல் என்னும் (பட்டினப்பாலை) பரிமேலழகர் தரும் விளக்கத்தையும் அறிந்து கொண்டால் திறனறியும் குறட்பாவில் உவம விளக்கம் விடுபட்டதற்கான காரணத்தை அறியலாம்.
    • நடுவுநிலைமை என்பது மனம், மொழி, செயல் என்னும் மூன்றனுக்கும் உரியதாதலின் செயலாகிய வணிகத்தைப் பிரித்தோதி, 118, 119 ஆகிய குறட்பாக்களில் சான்றோர் திறம் கூறப்படுவதைப் பரிமேலழகரே தெளிவுபடுத்திக் காட்டுகிறார். இதனை அதிகாரக் கருத்துப் பகுப்பில் மூன்று பாடல்களையும் ஒருங்கிணைத்தாலும் முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின, ஏனையது வணிகரை நோக்கியது’ என்னும் அவருரையால் அறிய இயலும்.
    • இந்த அதிகாரத்தின் இறுதிப்பகுதி வணிகர்களை நோக்கியது என்பது ‘வாணிகம் செய்வார்க்கு’ என்னும் குறட்பா தொடராலும் பரிமேலழகர் எழுதிக்காட்டும் உரையாலும் புலப்படும். ஆனால் திறனறியும் குறட்பாவில் ‘வணிகர்க்கு அணி’ என்னாது ‘சான்றோர்க்கு அணி’ என்பது குறித்திருப்பது காண்க. சங்கப் புலவர்களைச் ‘சங்கச் சான்றோர்’ என்பது போன்றது இது. ‘சான்றோர்’ என்னும் இச்சொல் பயன்பாடுதான் பரிமேலழகரின் சிந்தனையைத் தூண்டி இறுதிக்கும் முன்னதாக உள்ள இரண்டு பாடல்களையும் (118,119) ‘அவையத்து நோக்கிச் சொல்லப்பட்டன’ என்னும் உரையெழுத காரணமாய் அமைந்தன எனலாம்.

    இன்னாத கனிகளும் இனிய காய்களும்

    திறனறியும் குறட்பாவில் உவம அடைகளையும் பொருளடைகளையும் இருவழியும் புணர்த்தி, உரையெழுதிய பரிமேலழகர் இது போன்ற நெறியை வாய்ப்புக் கிடைக்கிறபொழுதெல்லாம் பின்பற்றியிருக்கிறார் என்பதற்குச் சான்றுகள் பல உள. இனிய சொற்கள் இருக்க, இன்னாத சொற்களைப் பேசுவது  கனியிருக்குங்கால் காயை உண்ணுவதுபோல என்னும் கருத்துப்பட திருக்குறள் ஒன்றிருக்கிறது.

    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” 100

    இந்தப் பாட்டைக் கிடக்கைநிலையில் பொருள் கண்டால் மேலே கண்டவாறுதான் அமையும். அமையவே எல்லாக் கனிகளும் இனிமை தருமா? எல்லாக் காய்களும் கேடு தருமா? என்னும் வினா எழும். பரிமேலழகர் உரையெழுதுங்கால் பின்பற்றிய நெறிகளில் அது குறள் வெண்பா என்னும் குறுகிய யாப்பில் எழுதப்பட்டது என்பதை நினைவிற்கொள்வது இன்றியமையாத ஒன்று. வேறு வகையாகச் சொன்னால் குறுகத் தறித்த குறள் என்பதை மறந்து அவர் உரை அமைவதில்லை. குறுகத் தறித்தவைகளை விரிவாக வெளிக்கொணர்ந்ததில் அவருடைய உரைக்குப் பெரும்பங்குண்டு. அந்த வகையில்  இந்தப் பாடடு ‘இனிய உளவாக இன்னாத கூறல் இனிய கனியிருப்ப இன்னாத காய்கவர்ந்தற்று’ என இருத்தல் வேண்டும். யாப்புநிலை கருதியே ஆசிரியர் சுருங்க உரைத்தார் எனக் கருதிப் பின்வருமாறு உரையெழுதுகிறார்.

    “பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக் கண்ணும் சென்றன.  இனிய கனிகள் என்றது ஔவை உண்ட நெல்லிக்கனிபோல் அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்பது காஞ்சிரங்காய் போல  நஞ்சாவனவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்”

    பொருளின்கண் சென்ற அடைகளைப் பரிமேலழகர் இவ்வாறு உவமத்திற்குப் புணர்க்காமல் உரையெழுதியிருந்தால் “கனிகள் எல்லாம் இனிமை தரும், காயெல்லாம் கேடு தரும்” என்னும் கருத்துப் பிழையோடு, ‘இனிய கனிகளே நன்மை தரும் இன்னாத காய்களே கேடுதரும்’ என்னும் திருவள்ளுவரின் கருத்து விளக்கமும் புலப்படாமல் போயிருக்கக்கூடும்.

    வில் வணக்கமும் சொல் வணக்கமும்

    உவமத்தை முன்மொழிந்து உவமேயத்தைப் பின்மொழிவதும் உவமேயத்தை முன்மொழிந்து உவமத்தைப் பின்மொழிவதுமாகிய இருநெறிகளைத் திருக்குறளில் காணமுடியும். ‘கூடா நட்பு’ என்னும்  அதிகாரத்தில்,

    “சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க! வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்” (827)

    என்னும் குறட்பா பின்னதற்குச் சான்றாகிறது. (“என்பிலதனை வெயில்போலக் காயுமே” (77) என்பது முன்னதற்குச் சான்றாகிறது. மேற்கண்ட குறட்பாவில் வணங்கியது சொல்லன்றிச் சொல்பவன் அல்லன். வணங்கியது வில்லன்றி வில்லியல்லன். அவ்விரு வணக்கமும் செய்வார்தம் உள்ளக் குறிப்போடு  பொருந்தியதே தவிர சொல்லின் செயலோ வில்லின் செயலோ அன்று அவ்விருவணக்கமும் போலியானது. கொடுமை நிறைந்தது. வெளியில் புலப்படாதது. வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால் பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர் வில்லையேந்தியவனின் தீங்கு குறித்த எண்ணத்தை அவனாலாகிய  வில்வணக்கத்தின் மேலேற்றி ‘வில்வணக்கம் தீங்கு குறித்தமையான்” என்று கூறியதனால் அதற்கு ஏற்ப ஒன்னார் சொல்வணக்கம் தீங்கு குறித்ததை அவர்களாலாகிய சொல்வணக்கத்தின் மேலேற்றி (இங்கு சொல் தீங்கு செய்யாது., சொல்லைப் பணிவாகச் சொல்லும் பகைவனே தீங்கு செய்வான்) ‘ஒன்னார்கண் சொல்வணக்கம் கொள்ளற்க!’ என்று மறுத்துக் கூறுகிறார். இந்த விளக்கத்தையெல்லாம்,

    “வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமை பற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார் வில்லியது குறிப்பு அவனினாய  வில்வணக்கத்தின் மேல் நிற்றலான் ஒன்னாரது குறிப்பும் அவரினால் ஆய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று”.

    ‘வில்வணக்கம் தீங்கு குறித்தது’ என்பது தெளிவு. இது உவமம். ‘சொல்வணக்கம் தீங்கு குறித்ததா?’ என்பதை விளக்குதற்கே இந்த உவமத்தைத் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். இரு வணக்கங்களின் நோக்கமும் வேறாயினும் ‘வணங்குதல்’ ஒப்புமை பற்றி உவமித்தார் என நுண்ணியம் காண்கிறார் பரிமேலழகர். வணங்குவதனாலேயே அதன் நோக்கம் தூய்மையானது எனக் கருதற்க என்பதாம்!

    இதுகாறும் தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் உவமம், உவமேயம் சார்ந்த குறட்பாக்களில் பரிமலழகரின் உரைகாணும் திறன் புலப்பட்டிருக்கக்கூடும். பொருளுக்கும் உவமத்திற்குமான அடைகளை உற்றுநோக்கி அவற்றின் அடிப்படையில் நூலாசிரியர் சொல்லவரும் கருத்தினை நன்கு உள்வாங்கி அதற்கேற்ப உவம அடைகளையும் பொருளடைகளையும் கையாளும் வியத்தகு திறன் அவர் உரையில் ‘தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படுவதைக்’ காணலாம்.

    நிறைவுரை

    திறனறியும் குறட்பாவில் “அமைந்து, ஒருபால் கோடாமை’ என்னும் பொருளுக்கான (சான்றோர்க்கான) அடைமொழிகளை உவமமாகிய துலாக்கோலுக்கும் ஆக்கினாலும் பாடல் சான்றோரின் நடுவுநிலைமையாகிய பண்பு பற்றியதென்பதை உணர்ந்து “அமைந்து சமன் செய்து சீர்தூக்கி ஒரு பால் கோடாமை’ என அவர்தம் உயர்பண்பை விளக்கிக் காட்டிய நுண்ணியமே இப்பாட்டில் பரிமேலழகரின் உரைத்திறனாகும். நூலாசிரியரால் புணர்க்கப்படும் அடைச்சொற்கள் பொருளுக்காயினும் உவமத்திற்காயினும் அவை வெற்று அலங்காரத்திற்காகவோ சீர் நிரப்புதற்காகவோ அல்ல என்பதே பரிமேலழகர் உரையால் புலப்படும் உண்மையாகும்.

    (தொடரும்…)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 20

    கதை வடிவில் பழமொழி நானூறு – 20

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 41

    மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்றவர்க்(கு)
    ஆற்றும் பகையால் அவர்களைய – வேண்டுமே
    வேற்றுமை யார்க்குமுண் டாகலான் ‘ஆற்றுவான்
    நூற்றுவரைக் கொன்று விடும்’.

    பழமொழி – ‘ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்’

    என்ன சார். ரொம்பதான் உறவு கொண்ட்டாடுறீங்க. பெங்களூர்ல பத்து வருசம் ‘இருந்துட்டு வந்தவொடனே எங்களயெல்லாம் மறந்துட்டு போயும் போயும் இவன்கூட சுத்திக்கிட்டு திரியிறீங்க. இவன் யாருங்கற உண்ம தெரிஞ்சா கிட்ட கூட போக மாட்டீங்க. வரிசையாக வீடுகள் இருக்கும் எங்கள் பகுதியில் முன்பு என் வலது பக்கத்து வீட்டு மாடியில குடியிருந்தார் வேலு. இப்ப வேற தெருவுக்கு மாத்தி போயிட்டார். அவர்கூட நான் சுத்தரதப்பத்திதான் என் இடது பக்கத்து வீட்டு உரிமையாளர் நளின் குமுறிக் கொண்டிருக்கிறார்.

    அவர் சொல்வது எல்லாம் உண்மதான். இங்க வந்ததுலேந்து நான் வேலு கூடதான் சுத்திக்கிட்டு இருக்கேன். ஆனா நான் தெரியாம இதச் செய்யல. அவர் குணம் என்னனு தெரிஞ்சிக்கிட்டேதான் பழகறேன்.

    முந்தைய விசயங்களை யோசிக்க ஆரம்பித்தேன். வேலுவோட ஹவுஸ் ஓனர் அதான் என் வலது பக்கத்து வீட்டு உரிமையாளர் எவ்ளோ தொல்ல குடுத்திருப்பார் எனக்கு. வேற எந்த வேலையும் இல்லாதமாதிரி வேணுமினே மொட்டைமாடியில இருக்கற வாட்டர் டேங்க் மூடிய எடுத்துவிட்டுடறது, துணி காயப்போடற கொடிய அறுத்து விடரது. குப்பையப் பூரா எங்க வீட்டுப்பக்கமே தள்ளிவிடரது இந்த மாதிரி.  காலையிலேந்து சாயங்காலம் வரை சின்னச்சின்ன விசயத்துக்கும் சண்டை இழுத்துக்கிட்டே இருப்பாரு.

    உங்க வீட்டு தென்ன மரத்திலேந்து தேங்கா விழுந்து எங்க சன்னல் கண்ணாடி உடைய வாய்ப்பிருக்கு, நீங்க உங்க வீட்டு கேட்ட மதிய நேரத்துல சரியா சாத்தாம வைக்கறதால திருடன் உங்க காம்பவுண்ட் வழியா எங்க வீட்டுக்கு வர வாய்ப்பு இருக்கு. இப்டி பல கற்பனைப் புகார்கள். ஒருகட்டத்துல அவர் தொல்ல தாங்க முடியாம. அவர்கூட பாசமான நண்பராப்பழகிடலாம்னு நானும் மனைவியும் முயற்சித்தோம். ஆனா அந்த சிடுமூஞ்சி மனுசன் யார்கூடயும் பழகத் தயாரியில்ல. அடுத்தவங்கள தொல்ல குடுக்கறதுமட்டும் தான் அவருக்கு சந்தோசம் தரும் போல.

    இவர் தொல்ல தாங்க முடியாமதான் சென்னையிலிருக்கிற சொந்தவீட்ட விட்டுட்டு பெங்களூருக்கு மாத்தல் வாங்கிட்டுப்போனேன். இப்ப பத்துவருசம் கழிச்சும் இந்த மனுசன் மாறல.

    கீழ இவர் குடியிருந்துக்கிட்டு மாடி போர்சன வாடகைக்கு விட்டுட்டு  வாடகைக்கு வரவங்கள தொல்ல பண்ணியே கொல்லறார் போல. இப்ப நான் பழகிக்கிட்டு இருக்குற வேலுவும் இவர் வீட்டு மாடியில குடியிருந்தவர் தான். இவருக்கு சரியான ஜோடி.

    எங்கள மாதிரி வாயத் திறக்காம வசவு வாங்கிக்கிட்டு இருக்கல. நல்லா பதிலுக்கு பதில் குடுத்திருக்கார். அவர் காலி பண்ணிப்போனதிலேந்து இப்ப வரை வேற யாரையும் அந்த வீட்டுக்கு வர உடாம வதந்தி பரப்பிக்கிட்டு இருக்காராம்.

    பக்கத்து வீட்டுக்காரர் மூஞ்சியில இப்ப எள்ளும் கொள்ளும் வெடிக்கறதப் பாக்க சந்தோசமா இருக்கு. ஜன்ம சனியத் தூக்கி தலையில வச்சிக்கிட்ட மாதிரி உன்னய வாடகைக்கு வச்சேன்னு கத்துவாராம். இன்னும் அவர் மாடி போர்சன் காலியாவே கிடக்கு.

    எது எப்படியோ. இனிமே என்கிட்ட வாலாட்ட மாட்டார். முடிஞ்சா வேலுகிட்டேந்து தப்பிக்க சமரசமாத்தான் பேசுவார். நிலைமையை நளினிடம் விளக்கினேன். ‘ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும்’ ங்கற பழமொழி மாதிரி எதிரிக்கு எதிரியையே நண்பனா ஆக்கிக்கிட்டிருக்கேன். தம் பகைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழிக்க வல்லவன்  தான் ஒருவனாகவே நூறு பேர்களைக் கொல்லும் பேராற்றல் உடையவன், அப்டினு பழமொழி நானூறே சொல்லுதே. சொல்லிவிட்டு சந்தோசமாக நடந்து சென்றேன். வேலுவைத் தேடி.

    பாடல் 42

    பட்ட வகையால் பலரும் வருந்தாமல்
    கட்டுடைத் தாகக் கருதிய நல்லறம்
    முட்டுடைத் தாகி ‘இடைதவிர்ந்து வீழ்தலின்
    நட்டறான் ஆதலே நன்று’.

    பழமொழி – ‘இடை தவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று

    கோவை வ.ஊ.சி மைதானம் அன்று களை கட்டியிருந்தது. பத்து வருடங்களுக்குப் பிறகு சுகந்தனை சந்திக்கப்போகிறேன். பார்க்க எப்படியிருப்பானோ? யோசித்துக்கொண்டே கல்லில் உட்கார்ந்தேன்.

    எதிரில் ஊதினால் பறந்து போகிற மாதிரி ஒல்லியா ஒரு பையன் அவன் அம்மாவுக்குத் துணையா பேல்பூரி விற்றுக்கொண்டு நிற்கிறான். நல்லா எண்ண தேச்சி தலைவாரி பளீரென்ற முகத்துடன்.

    அக்கா பஞ்சு மிட்டாய் வேணுமா, பாப்கான் வேணுமா இன்னோரு சின்னப் பையன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து விற்கிறான். மெதுவா பக்கத்திலிருந்த ஐஸ்காரனிடம் பேச்சு குடுக்க ஆரம்பிச்சேன். இங்க எப்படி இவ்வளவு சின்ன பையங்க வித விதமா வியாபாரம் பண்றாங்க. பத்து வருசத்துக்கு முன்ன இப்டி இல்லயே. என் கேள்விக்கு பதில் சொல்லாமலேயே

    ஏம்மா இந்த ஊருக்குப் புதுசா. அதான் கேக்கற. ஒரு ஐஸ் வாங்கிக்கோயேன் அவன் தொடர்வதற்குள் நான் சுதாரித்துக்கொண்டேன் முன்பின் தெரியாத இவன்கூட நான் ஏன் பேசறேன். கொஞ்சம் தள்ளிப் போய் உட்கார்ந்தேன். அவன் இன்னும் என்னயே பாத்துக்கிட்டிருக்கான். சுகந்தனப் பாத்துட்டுக் கெளம்பிற வேண்டியதுதான். பத்துவருசம் முன்ன பக்கத்திலிருந்த ஹாஸ்டல்ல தங்கி தனியார் கம்பெனியில வேலை பாத்ததால தினமும் இந்த பார்க் வரது வழக்கம். அதனால இந்தச் சின்னச் சின்ன மாறுதல்கள் கூட கண்ணுக்குப் படுது.

    முன்னயெல்லாம் நானும் மாதவியும் கொஞ்சம் கூட யோசிக்காம சுகந்தன் கிட்டேந்து சேவ் பூரி வாங்கி ஒருநாளப் போல சாப்பிட்டிருக்கோம். இப்ப இவ்ளோ நேரம் உக்காந்திருக்கேன். ஒண்ணுமே சாப்பிடத்தோணல. யாரப் பாத்தாலும் சந்தேகம் வேற வருது. வயசாக ஆக மனசு குரங்காகிடும் போல. அல்லது சென்னைவாசி ஆயிட்டதால பிளாட்பார தள்ளுவண்டியிலேந்து வாங்கிச் சாப்பிடறது தப்புனு தோணுதோ. தெரியல.

    யோசித்துக்கொண்டிருக்கும்போதே பக்கத்தில்யாரோ கைகாட்டி அழைப்பது தெரிந்தது. ஆமாம் என்னயத் தான் கூப்பிடறான். சேட்டுக்கடையில வேலை பாக்கற மார்வாடிப் பையன். இந்த நேரத்துல இவன் எதுக்குக் கூப்பிடறானோ. யோசித்துக்கொண்டே போனவுடன் தீதீ சீக்கிரம் கடைக்கு வா. யாரோ வெய்ட் பண்றாங்க.

    கடைக்குள் ஜிப்பா, பைஜாமா அணிந்த ஒரு நபர் உட்கார்ந்திருக்கிறார். சேட்டு அந்த நபருக்கு தேநீர் உபசாரம் செய்து கொண்டிருக்கிறார்.

    வா பொண்ணு. ரொம்ப நேரம் வெயிட் செய்யுது இல்ல. இங்க பாத்தியா யாரு வந்திருக்கான்னு. தானே தொடர்கிறார். இது நிம்பிள் சுகந்தன். உன்னையப் பத்தி நிறைய சொல்லியிருக்கு.

    ஓ அந்த நபர்தான் சுகந்தனா. எழுந்து வணக்கம் சொல்கிறான். பார்க்க என்னைவிட பெரிய தோற்றம். அவன் வெளியே அழைக்கவே நாங்கள் இருவரும் வெளியே வந்தோம். அவன் இப்போ அரசாங்க அதிகாரியாம். அவன் நல்ல நிலைமையில இருக்கறதப் பார்த்தப்புறம்தான் அவங்க அம்மா இறந்தாங்களாம். இப்போ சேட்டின் உறவினர் பெண்ணைத்தான் இவன் கல்யாணம் பண்ணியிருக்கானாம். என்ன ஆச்சரியம். இவன் வாழ்க்கையில் எவ்வளவு மாறுதல்கள்.

    என்ன அக்கா. ரொம்ப யோசிச்சுட்டே நடக்கறீங்க போல. ரெண்டு தடவ கேட்டுட்டேன். இந்த இடத்த அடையாளம் தெரியுதான்னு. சரி பரவாயில்ல. இங்க நில்லுங்க செல்பி எடுத்துக்கலாம்.

    ஆமாம் இந்த இடத்தில்தான் அவன் அம்மா சேவ் பூரி கடை போட்டிருந்தாள். நானும் மாதவியும் தின வாடிக்கையாளர்கள். சுகந்தன் ஒல்லியான சின்னப் பையன். அவன்தான் கலந்துதருவான். ஒருதடவை நாங்கள் போனப்போ அவன் அழுதுகொண்டிருந்தான்.அவன் அம்மா தினமும் பேனாவக் குடு, நோட்டக்குடுனு தொல்ல பண்றாம்மா.சாப்பாட்டுக்கே வழியில்ல. இதுல இவனுக்கு படிப்பு எதுக்கு. சொன்னா அழறான். இவனுக்கு புத்திசொல்லுங்க என்றவுடன் நாங்கள் தீர்மானித்தோம்.

    ஒவ்வொரு வருசமும் பள்ளிக்கட்டணம் புத்தகங்கள் மற்றும் படிப்புக்கான இதர செலவுகளுக்கு நானும் மாதவியும் உதவினோம். அவன் பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சவொடனே நான் சென்னைக்கு போயிட்டேன். அப்பறம் ஒருவருசம் மாதவிக்கு பணம் அனுப்பி அவனுக்கு உதவி செய்யச் சொன்னேன்.  அவளும் அங்கேயிருந்து கிளம்பினப்புறம் இவன் என்ன ஆனான்னு நாங்க யோசிக்கவேயில்ல. ‘இடை தவிர்ந்து வீழ்தலின் நட்டறான் ஆதலே நன்று’ னு போனவாரம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில ஒரு பழமொழி கேட்டேன். அதுல ஒருத்தருக்கு உதவ ஆரம்பிச்சப்புறம் பாதியில நிறுத்தக் கூடாது.அப்டி நிறுத்தரத விட தொடக்கத்திலயே உதவ ஆரம்பிக்காம இருக்கறதே

    நல்லதுனு சொன்னார்.

    அப்பதான் எனக்கு சுருக்குனுச்சு. சுகந்தனுக்கு நானும் மாதவியும் ஆச காட்டி மோசம் பண்ணின மாதிரி செஞ்சுட்டோம். பாவம் அவன் படிச்சு முடிச்சானோ என்னவோ? ஒருவழியா அவனக்கண்டு பிடிச்சு பாத்தும் ஆச்சு. நல்லவேள இந்த சேட்டுக்கும் நாங்க இவனுக்கு உதவறது தெரிஞ்சதால நாங்க பாதியில நிறுத்தினப்பறம் அவர் தொடர்ந்து உதவி செஞ்சு அவனப் படிக்க வச்சிருக்கார்.

    அக்கா பேல்பூரி சாப்பிடலாமா. நான் முதலில் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ஒல்லி பையனருகில் நிற்கிறான் சுகந்தன்.

    அக்கா இப்ப இவன்தான் எனக்கு தத்துப்பிள்ளை. உங்கள மாதிரி நான் இவன் படிக்கறதுக்கு உதவிக்கிட்டிருக்கேன்.

    யோசிக்காமல் சட்டெனச் சொன்னேன். என்னய மாதிரி பாதியில நிறுத்திடாதே. கடைசி வர உதவி செய். சிரித்துக்கொண்டே தலையாட்டுகிறான் சுகந்தன்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 33

    பழகத் தெரிய வேணும் – 33

    நிர்மலா ராகவன்

    முடியும் என்ற நம்பிக்கை வேண்டாமா?

    ஒவ்வொரு பள்ளியிலும் என்னிடம் ஏதாவது கோரிக்கை விடுக்க தமிழ்ப்பெண்களை அனுப்பிவிட்டு, நான் என்ன பதிலளிக்கப்போகிறேன் என்று சீன மாணவிகள் ஆவலுடன் கவனிப்பார்கள்.

    அந்த வருடமும், பள்ளி இறுதியாண்டிற்கு நான் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தபோது, இருவர் என் மேசைக்கு அருகில் வந்தார்கள்.

    “டீச்சர்! இறுதிப் பரீட்சைக்கு எதுவரை படிக்கவேண்டும்?” என்று தெரியாதவள்போல் பத்மா கேட்டாள். அவளுக்குத் துணையாக இன்னொருத்தி.

    ‘ஏற்கெனவே தெரிவித்திருந்தேனே! இது என்ன கேள்வி!’ என்ற தொனியில், அலட்சியமாகக் கூறினேன்: “இரு வருடப் பாடங்களையும்தான்!”

    அவள் உடலைச் சிலிர்த்துக்கொண்டு, “ரொம்ப கஷ்டம், டீச்சர்,” என்றாள்.

    ‘ஓகோ! பேரம் பேச உன்னை என்னிடம் அனுப்பியிருக்கிறார்களா?’

    “You want it easy, go to standard one! (உனக்கு எளிதாக வேண்டுமானால், முதல் வகுப்பிற்குப் போ!”) என்றேன், சூடாக.

    அவள் அதிர, “நான் மொதல்லேயே சொல்லலே?” என்று மற்றவள் முணுமுணுத்தபடி போனாள்.

    அரசாங்க முழுப்பரீட்சைக்கு மூன்றே மாதங்கள்தான் இருந்தன. அதற்கு முதலிலேயே தயார்ப்படுத்த எண்ணினேன். அது அவர்களுக்குப் புரியவில்லை.

    ‘பெரியதாக ஒன்றை ஆரம்பித்து, எப்படி முடிக்கப்போகிறோம்!’ என்ற மலைப்பு எவருக்கும் எழுவதுதான்.

    பிரச்னைகளிலிருந்து ஓடி ஒளிந்தாற்போல் அவை மறைந்துவிடுமா?

    ‘கடினம்!’ என்று பயந்து விலகுபவர்கள் சாதிக்க முடியாது. எல்லாவித தடங்கல்களையும் எதிர்ப்புகளையும் சமாளிப்பவர்கள்தாம் வெற்றி பெறுகிறார்கள்.

    கதை

    எனக்கு அப்போது பதின்ம வயது. நிறைய எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு, பத்திரிகைகளில் எந்த சிறு போட்டி அறிவித்திருந்தாலும், “நானும் பதில் எழுதட்டுமா?” என்று ஓயாது கேட்பேன்.

    “இவள் ஒருத்தி, சரியான போர்!” என்று என் ஆசைக்கு தடை விதிக்கப்பட்டது. (நான் பாட்டி வீட்டில் சில காலம் தங்கியிருந்தபோது, சித்தி சொன்னது).

    உருப்படியான எதுவுமே எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. எதையுமே பல முறை செய்துபார்த்தால்தான் வெற்றி கிடைக்கிறது.

    முயற்சி செய்யாவிட்டால் வெற்றி எப்படிக் கிடைக்கும்?

    என்னிடம் ஒரு நல்ல குணம்: யார் சொல்வதையும் கேட்க மாட்டேன். (சிரிக்காதீர்கள்). எனக்குச் சரியென்று பட்டதை செய்தே தீருவேன். `என்னால் முடியும்!’ என்ற நம்பிக்கை (அல்லது அசட்டுத் தைரியம்) எனக்கு இருந்தது. பிறரது ஆமோதிப்பு எதற்கு?

    ஒரு காரியம் நமக்குப் பிடித்ததாக இருந்தால், அரைகுறையாக விட்டுவிடத் தோன்றாது. அப்போது கண்டிப்பாகத் தவறுகளும் நிகழும்.

    ‘எதற்கு இந்த வீண்வேலை! என்ற கசப்போ, எடுத்த காரியத்தில் அசிரத்தையோ ஏற்படாமல் இருந்தால் வெற்றி நிச்சயம்.

    சில வருடங்களிலேயே, தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு பத்திரிகையில் என் முதல் கதை வெளியாகியது.

    “உருப்படியா ஏதாவது செய்யேன்! சரியான வேண்டாத வேலை! இதுவா நாளைக்கு உனக்கு சோறு போடப்போகிறது?” என்று பலமுறை கெஞ்சியிருந்த அம்மா அகமகிழ்ந்துபோனாள்.

    “எனக்கு அப்போதே தெரியும். உனக்கிருந்த ஆர்வத்துக்கு..!” என்ற பாராட்டு கிடைத்தது பலரிடமிருந்து.

    பணமா பிரதானம்?

    பணம்தான் பிரதானம் என்று ஒவ்வொரு காரியத்தையும் செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு, `ஏன் நாம் மகிழ்ச்சியாகவே இல்லை?” என்ற வருத்தம் வருகிறது.

    விடுமுறை நாட்களிலாவது தமக்குப் பிடித்த காரியங்களை தனியாகவோ, குடும்பத்துடனோ, அல்லது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டோ, செய்யலாமே! கலை, விளையாட்டு, வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு ஊர் சுற்றுவது என்று எத்தனை இருக்கின்றன!

    ஈடுபாட்டுடன் பொழுதைக் கழித்தால் இன்னொரு சலிப்பான வார நாட்களை  எதிர்கொள்ளும் உற்சாகம் பெருகும்.

    ஆனால், ஒவ்வொரு விடுமுறை நாளையும் ஒரேமாதிரி செலவிட்டால், அதுவும் விரைவில் அலுப்பு தட்டிவிடும்.

    அலுப்பு சலிப்பெல்லாம் செய்யும் காரியங்களில் மட்டுமல்ல. உறவுகளிலும் இதே பிரச்னைதான்.

    உறவுகளில் சலிப்பு

    “எங்களுடையது காதல் திருமணம்தான். இரண்டு வருடங்கள் பெருமகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப்பின் — உவ்வே!” என்று என்னிடம் தெரிவித்தாள் ஒரு ஆங்கிலப் பெண்.

    அவளுடைய தோழிகளிடம் கணவர் மரியாதையாகப் பழகினார். நல்லவர் என்றுதான் எனக்குப் பட்டது.

    இருந்தாலும், நெருங்கியே இருந்தால் சலிப்புதான் ஏற்படும்.

    இப்போது ஐந்து வருடங்கள் கணவருடன் ஒன்றாகவே கழித்த சாதனா சொல்வதைக் கேளுங்கள்:

    “நாங்களிருவரும் சேர்ந்து இருந்தபோது, உற்சாகம் வடிந்ததுபோல் இருந்தது,” என்று ஆரம்பித்தவள், “ஆனால் சண்டை எதுவும் கிடையாது,” என்று சேர்த்துக்கொண்டாள்.

    காதலித்து மணந்தவர்கள். அவளை நன்றாகவே புரிந்துகொண்டிருந்த கணவர் விட்டுக்கொடுத்துவிடுவார். அதனால் சண்டைக்கே இடமில்லை.

    “இப்போது வேலை நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருக்கிறோம். மாதம் ஒருமுறைதான் சந்தித்துக்கொள்ள முடிகிறது. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று மேலும் பகிர்ந்துகொண்டாள் சாதனா.

    (‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’ என்று நான் அவளைக் கேட்கவேயில்லை).

    கதை

    `நான் காதலித்துத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்!’ என்று உறுதியாக இருந்தான் தம்பிராஜா. அப்படியே செய்தும் காட்டினான்.

    ஓரிரு ஆண்டுகள் இனிமையாகக் கடந்தன. அதற்குப்பின், அலுவலகம், மனைவி, குழந்தைகள் என்று இயந்திர கதியில் வாழ்க்கையைக் கடக்க, அலுப்புத் தட்டியது.

    ‘மனதுக்கு உற்சாகம் அளிக்கும்’ என்று நண்பர்கள் ஆசைகாட்ட, சூதாட்டத்தில் இறங்கினான்.

    எந்த மனைவி பொறுப்பாள்?

    அவள் சண்டை பிடிக்க, இவன் இன்னும் விலகிப்போனான்.

    ‘எனக்கும் என் கணவருக்கும் சண்டை, பூசலே வந்தது கிடையாது,’ என்று ஒரு பெண் சொன்னால், அதை நம்புவதற்கில்லை. அல்லது, அவர்கள் உறவு உப்பு சப்பின்றி இருக்கும்.

    நிச்சயிக்கப்பட்ட கல்யாணமோ, காதல் மணமோ, அதன் வாழ்க்கை ஈராண்டுகள்தான்.

    அதன் பின்னரும் அந்த உறவு குலையாமலிருக்க முயற்சிகள் செய்தால்தான் முடியும். மனைவி அலுத்துவிட்டாளென்று இன்னொரு பெண்ணைத் தேடிப்போகிறவனுக்கு அந்த இன்னொருத்தியும் விரைவில் அலுத்துவிட மாட்டாளா?

    எல்லா உறவுகளிலும் இம்மாதிரி சண்டை சச்சரவு உண்டு. காரணங்கள்தான் மாறுபடும்.

    “விரிந்த உறவை ஒட்டுவதைப்பற்றி உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்கிறீர்களா?

    நானும் என் கணவரும் போடாத சண்டையா!

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 96 (மெய்யெலாம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 96 (மெய்யெலாம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மெய்யெலாம்   நீறுபூசி வேணிகள் முடித்துக்கட்டி
    கையினில் படைகரந்த புத்தகக் கவளிஏந்தி 
    மைபொதி விளக்கேஎன்ன மனத்தினுள் கறுப்புவைத்து
    பொய்தவ வேடம்கொண்டு புகுந்தனன் முத்தநாதன்.

    பொருள் 

    தன் உடம்பெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு, சடைகளை முடித்துக் தொட்டுக்கொண்டு, கையிலே படையை மறைத்து வைத்துப் புத்தகம் போற்கட்டிய புத்தகப்பையை எடுத்து ஏந்திக்கொண்டு, மையினை உள்ளே பொதிந்து வைத்து வெளியே ஒளியினைச் செய்யும் விளக்கே என்று சொல்லும்படி, மனத்தினுள்ளே வஞ்சனையைப் பொதிந்து வைத்துப் பொய்யினை மறைத்த தவவேடங் கொண்டு அந்நகரினுள்ளே முத்தநாதன் என்ற அவ்வரசன் புகுந்தனன்.

    விளக்கம்

    நீறு – வேணி – புத்தகம் இவை சிவசாதனங்களாய், அன்புடையாரை ஆட்படுத்தும் இயல்புடைய அடையாளங்கள். நீறும் வேணியும் காண்டிகையுமே திருவடையாளமாக வைத்து அரசாண்ட மூர்த்தி நாயனார் சரிதமுங் காண்க.

    மெய்யெலாம் நீறு பூசி – முழுத்தவ வேடம் பூண எண்ணினான்  ஆதலின் முழு நீறு பூசிய முனிவர்போல உடம்பெங்கும் நீறு பூசினான். இதற்கு முன்னர் நீறு பூசியவன்   அல்லன்   ஆதலின் தரிக்கக்தக்க இடமிது தகாத இடம் இது என்று அறியாதவனாய் மெய்யெலாம் பூசினான் என்ற குறிப்புமாம். வேணிகள் முடித்துக் கட்டி – தனது குடுமியினைச் சடைகள் போலத் திரித்து அவற்றைத் தொகுத்துச் சடைமுடியாக்கி. முடித்துக் கட்டுதல் – தலைமேல் முடிபோலக் கூப்பி நிற்கும்படி கட்டி முடிதல். வேணி – சடை . நீறும் வேணியும் முன்னர் இவன் சடையனாயின், அவை சைவ அடையாளமாதலின், நாயனார் அவ்வேடத்தை வழிப்பட்டு ஒழுகியிருப்பாரேயன்றிப் பகைப்பட்டுப் போர் செய்திரார்; எனவே, இவற்றை இவன் புதிதாகத் தாங்கினவனாம். நாடிழந்தவன் பலநாள் காட்டில் மறைந்து சடை வளர்த்தான் என்பாருமுண்டு.

    படைகரந்த புத்தகக் கவளிஏந்தி – தான் நினைத்த வஞ்சனைச் செய்கையைச் செய்தற்குக் கருவியாகிய படையை மறைத்து அதனையே ஒருபுத்தகம் போல கவளிகையிற் கட்டி எடுத்து. படையை மறைத்தற்கும்,இதுவும் ஒரு சைவ அடையாளமென வஞ்சித்தற்கும் என இருவகையும் கருதிப் படைகரந்த கவளியாக்கினான் என்பதாம்.

    மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்பு வைத்து – மையாகிய நீல நிறத்தைத் தனக்குள் வைத்தும், அதனைச் சுற்றி விளக்கத்தினைச் செய்து ஒளிரும் விளக்குப்பேல, மனத்தினுள்ளே கறுப்பாகிய வஞ்ச எண்ணம் பொதிந்து வைத்துக் கொண்டு விளக்கஞ் செய்யும் நீறு முதலிய தவவேடத்தைப் புறத்தே விளங்க வைத்தானென்க. எரியும் திரியைச் சுற்றிப் பெரிய நீலக்குப்பாயம் போன்று குவிந்து மேனோக்கியதொரு மை சூழ்ந்துகொண்டிருப்பது காணலாம். அதன் வெளியிற் சூழ்ந்து விளக்கின் சிவந்த சுடர் எரிவதும் காணலாம். அந்த சிவந்த எரிசுடரின் மேற் பகுதியினைச் சுற்றி வெண்சுடர்க் கொழுந்தையும் காணலாம். எனவே ஒவ்வொரு விளக்கின் சுடரும் திரியினைச் சுற்றிய நீலக்குப்பாயம், அதன் மேற் செஞ்சுடர், அதன்மேல் வெண்சுடர் என மூன்று பகுதிகளையுடையது. விளக்குச் சுடர் எரிவதற்கு ஆதரவானது நெய். அது உருகி நெய்யாவியாக மாறும். அது நீல நிறத்துடன் நின்று திரியைச் சுற்றிய சுடரினது உட்பாகமாய், நெருப்புக்கு விறகு உதவுவதுபோல, விளக்குச்சுடர் எரிவதற்குக் காரணமாய் உதவுகின்றது. ஆகவே சுடரின் நிலைப்பகுதியான உட்கறுப்பே அதன் விளக்கத்துக்குக் காரணமாம். இங்கு முத்தநாதன் கொண்ட தவ வேடத்திற்கு அவன் தனது மனத்தினுட் கொண்ட வஞ்சக் கறுப்பே காரணமாயிற்று என இவ்வரிய வுவமத்தின் அழகினை விரித்துக் கண்டுகொள்க.

    “நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீலமணி மிடற்றான்“ முதலிய திருவாக்குக்கள் காண்க. விளக்கும் இருளும் என்ற முரண்பட்ட இரண்டு பொருளுக்கு ஏற்ற இந்த விளக்கு என்ற  அரிய உவமானம் ஆசிரியர் சேக்கிழார் பெருமானது தெய்வமணக்கும் செய்யுற்களிற் காணும் அரிய உவமங்களில் ஒன்று. இஃது வேறு எந்தக் கவிகளிடத்தும் காணுதலரிது.

    இவ்வாறன்றி மை – என்பதற்கு நிழலாகிய இருள் என்று பொருள்கொண்டு தன்கீழே இருளாகிய நிழலைக் கொண்ட விளக்கு என்றுரைப்பாருமுண்டு; விளக்குள்ள பக்கம் நிழலுண்டு என்ற பழமொழியுங் காட்டுவர். மற்றுஞ் சிலர் இதனை இல்பொருள் உவமையென் றொதுக்கினர். சுடருட் பொதிந்து மறைந்து நிற்கும் மைந்நிறங்கொண்ட புகையினை உட்கொண்டு என்பாருமுண்டு.

    பொய்தவ வேடம் – பொய்த்தவம் என்றது எதுகை நோக்கிப் பொய்தவமென நின்றது. பொய்யானது தடவேடங்கொண்டு இவனுடன் வந்ததென்க. பொய்யினைக் கொண்டு உதவிசெய்து கொள்ளத் தவவேட முடன்வந்தது என்றலுமாம். நீறு – வேணி என்னும் சைவத் தெய்வத் தவவேடம் என்றும் மெய்யேயாம்; அவ்வேடம் பொய்யாவதில்லை.

    “மெய்த்தவவேடமே மெய்ப்பொருளெனத் தொழுது வென்றார்“ (481) என்று இச்சரிதத்தத்துவத்தினையும் உண்மையினையும் பின்னர்ச் சுட்டுவதும் காண்க. “நற்றவத்தவர் வேடமே கொடு“ (447) என்ற இடத்துங் காண்க.

    முத்தநாதன் – இஃது அந்த மாற்றலனாகிய அரசன் பெயர். இவன் கடையனாம் என்று குறிப்பார் இங்கு அவன் செய்தியைக் கூறிய மூன்று பாட்டினும் பொய் எனத் தொடங்கும் அடியின் கடையில் இவன் பெயரை ஆசிரியர் வைத்துக்காட்டிய அழகு குறிக்க. இவ்வாறன்றி முத்தன் – முக்தன்- மூடன் அறிவினின்றும் விடுபட்டவன் – விலகியவன் என்றும், இது அவன் பெயறன்ரென்றும், ஆசிரியர் இவ்வாறு தானே அவனுக்கு ஒரு பெயர்தந்து கூறினாரென்றும் கொள்வர் திரு. ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள்.

    ஆசிரியர் இவ்வாறு அவனுக்கு ஒரு புனை பெயர் தந்து கூறப் போதிய காரணம் இல்லை எனவும்,ஆசிரியர் வைத்துக் கூறுவதாயின் இப்பெயராற் புனைந்துரைக்க இயைபில்லை எனவும் தோன்றுகிறது. இது அந்நாளிற் புறச்சமயிகள் தம் வழக்கிற் கொண்ட பெயர்களில் ஒன்றுபோலும்.

    இங்குத் திருநீறு எரிக்குந் தன்மையாலே மாயாமலத்தையும்,விரிந்த சடையை முடித்தலால் விரிந்து செல்லும் கன்ம மலத்தையும், ஞானத்தின் உறையுளாகிய புத்தகத்தால் அறியாமையாகிய ஆணவமலத்தையும் போக்குவதாகிய ஞானாசாரிய அடையாளங்களைத் தாங்குவதே இத்தவ வேடமாம் என்ற கருத்தும் இங்கு வைத்துக்காண்பர். இவை யெல்லாம் உரிய தேசிகர்பாற் கேட்டுணரத்தக்கன. தாம் பாசத்தினீங்கி நல்லுணர்வு பெற்றாரே பிறரை வழிப்படுத்தத் தக்கார். அல்லாதார்

    “குருடுங் குருடுங் குருட்டாட்டமாடிக்,
    குருடுங் குருடுங் குழிவிழுமாறே“,

    “தன்னை யறிந்த தத்துவ ஞானிகள்,
    முன்னை வினையின் முடிச்சையவிழ்ப்பர்கள்,
    பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்,
    சென்னியில் வைத்த சிவனரு ளாலே“

    என்பன திருமூலர் திருமந்திரங்கள். அங்ஙனமாகவும் இங்கு இம்மாற்றலன் கொண்ட பொய்த்தவவேடம் நற்பயன் தந்த தெங்ஙனமோ? எனின், இங்குப் பயன் செய்தது வேடமேயன்றி அவனன்று. அவ்வேடத்தினைத் தாங்கும் குற்றி அல்லது புல்லுருவம் போன்றே அவன் நின்றான். வேடத்தின்பாலே நாயனார் கொண்டொழுகிய அன்பின் உறைப்பானது இவன் செயலால் பின்னரும் உறுதிபெற்றுப் பயன்கொடுத்து நின்றது என்க.

    முத்திநாதன் – புத்திநாதன் – என்பனவும் பாடங்கள்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 19

    கதை வடிவில் பழமொழி நானூறு – 19

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 39

    தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
    மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
    ‘ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக்
    கூற்றமாய் வீழ்ந்து விடும்’.

    ‘ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்த்து விடும்‘

    இன்னிக்குத் திரும்ப அதே ஊருக்குப் போயிட்டிருக்கேன். அதுவும் கல்லூரிப் பேராசிரியர் வேலையை ஏத்துக்கிடறதுக்கு. மனசு சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் ஒரு ஓரத்தில் பழைய நினவுகள் வருத்தின.

    எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் அந்த ஊர்ல. அப்பா இறந்தவொடனே வேற வழியில்லாம பள்ளிப்பட்டிப்பத் தொடர முடியாமப் போயிருச்சு. அம்மாவோட ஆப்பக்கடை வருமானத்த வச்சி ஒண்ணும் பண்ண முடியல. அப்போதான் அந்த பழக்கடைக்காரர் அம்மாவ ஆசை காட்டி பத்தே வயதான என்னயக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு.

    அப்டி ஒண்ணும் அது பெரிய கடையில்ல.. அவர் வீட்டு வாசலக் கடையா மாத்திருந்தாரு. எனக்கு அங்க எடுபிடி வேல. ஆனா சம்பளத்த சரியா அம்மாகிட்ட குடுத்துடுவாரு. காலையில எழுந்ததிலேந்து அவர்கிட்ட குட்டு அடி வாங்கிக்கிட்டே கடையைப் பெருக்கி, பழங்களைஅடுக்கி வச்சி, ஜூஸ் போடற டம்ளர்களக் கழுவி தொடைச்சி வச்சி அப்பாடானு கொஞ்சம் ஒக்காந்தா அவரு சம்சாரம் கூப்பிட்டிடும்.

    அவங்க செல்ல மகன பள்ளிக்கு அனுப்பறதுக்காக அவன் பின்னால நான் நிக்கணும். அவன் ஆறுவயசு சின்னப் பையன்தான்.  அவனக் குளிப்பாட்டி சீருடை போட்டுவிட்டு அவனோட ஷூவப் பாலிஷ் போட்டு வச்சு பஸ்ல ஏத்திவுடற வர எனக்கு வேலைதான். அதுக்கப்புறம்தான் மிச்சம்மீதி இருக்கறதச் சாப்பிடத் தருவாங்க. ரெண்டுவேளச் சாப்பாடுதான். காலையில ஆறுமணிக்கு வந்தா ராத்திரி எட்டுமணிக்குதான் வீட்டுக்குப் போகமுடியும்.

    நான் செஞ்ச புண்ணியம். கடைக்குத் தினமும் ஜூஸ் குடிக்க வந்த சின்னசாமி ஐயா உனக்கு படிக்க விருப்பம்னா சொல்லு உம் முதலாளிக்குத் தெரியாம நான் படிக்க வைக்கறேன்னாரு. எட்டாம் வகுப்புவரைக்கும் படிச்சிருக்கறதால திறந்த நிலைத்தேர்வு எழுதி பத்தாம்வகுப்புல தேர்ச்சிபெறலாம். அதுக்கப்புறமும் உனக்கு விருப்பம் இருந்தா முழுநேரப்பள்ளிக்கூடத்துல சேத்துவிட்டு மேல படிக்கவைக்கிறேன். என்ன சொல்றன்னு கேட்டவொடனே யாராச்சும் உதவ மாட்டாங்களானு காத்துக்கிட்டிருந்த எனக்கு கேக்கவா வேணும்.  அப்புறமும் விசயம் தெரிஞ்சு பழக்கடை முதலாளி என்னபாடு படுத்தினார். பொறுமையா எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டேன். இப்போ சின்னசாமி ஐயா ஆசிர்வாதத்தோட கல்லூரிப்பேராசிரியராவும் ஆயிட்டேன்.

    யோசித்துக்கொண்டிருக்கும்போதே கல்லூரியின் நிறுத்தம் வரவே. இறங்கி உள்ளே நுழைந்தேன். முறைப்படி செய்ய வேண்டிய வேலைகள் முடிந்தவுடன் மனத்திற்குக் கட்டுப்பட்டு பழக்கடை முதலாளியைப் பார்க்கச் சென்றேன்.

    என்ன ஆச்சர்யம். அதே வீடு. எந்த மாற்றமும் இல்லை. உள்ளே மாலை போடப்பட்ட அவரது மனைவியின் புகைப்படம்.

    வாங்க சார். எனப் பணிவாக வரவேற்று தன் முன் கையைக் கட்டிக்கொண்டு நிற்கும் இவன் யார். யோசிக்கும் முன்பே அவனாகவே தொடர்ந்தான். நீங்க வரப்போறதா சின்னசாமி ஐயா சொன்னாரு. அப்பாவுக்கு வாதம் வந்து நாக்கு இழுத்துக்கிச்சு. பேசமுடியாது. உள்ள படுத்திருக்காரு. நான் நீங்க வேலைக்குச் சேந்த கல்லூரியில பியூனா இருக்கேன். என்ன செய்ய. எல்லாம் விதி. எனக்குச் சரியா படிப்பு வரல. அத விடுங்க.

    மொதமொதல்ல எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க. என்ன சாப்பிடறீங்க கேட்டுக் கொண்டே உள்ளே சென்ற அவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். ஓ இதத்தான்  ‘ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்த்து விடும்‘னு பழமொழியாச் சொல்லுவாங்க போல. எளியாரை வருத்த அவர் கண்ணீர்

    வருத்தியவரை அழித்து விடும்னு தமிழ்ல படிச்சது என் நினைவுக்கு வருது.

    பாடல் 40

    ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்
    நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
    வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்
    ‘ஆற்றுணா வேண்டுவ தில்’.

    பழமொழி -‘ஆற்றுணா வேண்டுவது இல்’

    என்ன சார் மலேசிய மாநாடு எல்லாம் சிறப்பா நடந்ததா. கேட்டுக் கொண்டே உள்ளே வருகிறார் தெரிந்த மனிதர். அவரை அப்படித்தான் சொல்ல வேண்டும். நண்பன்னு சொன்னா அது அந்த சொல்லுக்கே அவமானமாப் போகும். எப்படா கீழ விழுவேன் கைகொட்டி சிரிக்கலாம்னே காத்துக்கிட்டு இருக்குற மனுசன். என்கிட்ட மட்டுமில்ல. இன்னும் பலபேர் இவரப்பத்தி இப்டித்தான் பேசிக்கிறாங்க.

    இன்னதுன்னு இல்லாம எல்லாத்துக்கும் எடக்கு. யாரப்பாத்தாலும் வயித்தெரிச்சல். நாலுவீடு தள்ளி குடி இருக்கிற இவர் அரசு அலுவலகத்துல குமாஸ்தாவ வேல பாத்து ரிடையர்ட் ஆனவர். அப்பப்ப நியூஸ்பேப்பர் கேட்டுவந்து தானே பழகிக்கிட்டாரு அவ்வளவுதான். வயசில பெரியவர்னு மரியாதை குடுத்தது தப்பாப்போச்சு.

    என்னசார் மாநாடு எப்டி நடந்ததுனு கேட்டேன். நீங்க மாநாட்டுக்குப் போயிருக்கீங்கனு சங்கரன் சொன்னதிலேந்து ஆச்சரியம். வாயத்திறந்து நாலுவார்த்த தொடர்ந்து பேச மாட்டேங்கிறீங்க. நீங்க எப்படினு. என்னதான் பேராசிரியரா இருந்தாலும் வகுப்பறை வேற. மாநாட்டில பார்வையாளர்கள் வேறதானே. என்ன நான் சொல்றது.

    என்னயப் பத்தி நான்சொல்றதுக்கு முன்னயே தானே நான் இப்டித்தான்னு ஊகிச்சு அத என்கிட்டயே புரூவ் பண்ணிட்டு இருக்கிற சன்மம் இவர்.

    நான் என்ன சொல்லி என்ன ஆகப்போறது. மௌனம் சாதித்து விட்டேன். அவர் தொடர்ந்து கொண்டே போனார்.

    புரியுது புரியுது போன எடத்துல பணம் அதிகம் செலவு ஆகியிருக்கும். இப்பயெல்லாம் ஹோட்டல்கள்ல சாப்பாடா போடறான். நம்ம ஊர்லயே ஒரு தோசை தொண்ணூறு ரூபாய் விலை சொல்றான். அஞ்சு நாள் தங்கிட்டு வந்திருக்கீங்க. சும்மா செலவு பிச்சிக்கிட்டு போயிருக்கும்.

    நீங்க ஒண்ணு செய்யுங்க சார். அடுத்த முறை போகறதுக்கு முன்ன என்கிட்ட சொல்லுங்க. எனக்கு நிறைய நண்பர்கள் வெளிநாட்டுல இருக்காங்க. சாப்பாட்டுக்கு அவங்ககிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிடறேன். கொஞ்சம் செலவு மிச்சமாகும் பாருங்க. அவர் பேசிக்கொண்டே போக எனக்கு எரிச்சல் தலைக்கு ஏறியது.

    நல்ல வேளை. சங்கரன் வந்துவிட்டார். இந்த ஆளுக்கு அவர்தான் சரி. பதிலுக்கு பதில் நல்லா குடுப்பாரு.

    என்ன இங்க பிரசங்கம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஒருவழியா நம்ம பேராசிரியருக்கு கிடைச்ச மரியாதய ஒத்துக்கிட்டீங்களா. இனிமே அவர்கிட்ட பாத்தே பேசுங்க.  சும்மாவா கருத்தரங்கத்த தலைமை வகிச்சு நடத்திட்டு வந்திருக்காரு. ‘ஆற்றுணா வேண்டுவது இல்’னு பழமொழியே இருக்கே. படிச்ச அறிவாளிகளுக்கு போற எடத்துக்கு கட்டுச்சோறு கொண்டுபோகணும்னு அவசியம் இல்லங்கறது அதோட அர்த்தம். . எல்லாரும் தானா வந்தே உபசரிப்பாங்களாம். என்ன சார் உங்களுக்கும் விருந்து உபசாரம் எல்லாம் தடபுடலா நடந்திருக்குமே. எந்த ஓட்டல்ல தங்க வச்சாங்க.

    பட்டுசால்வ எல்லாம் போத்தி அசத்தியிருப்பாங்க. உங்களுக்குக் கிடைச்ச பரிசுப்பொருள் சால்வை எல்லாம் எடுத்துட்டு வாங்க. அப்டியே எடுத்த போட்டோக்களையும் காட்டுங்க. அதப்பாத்தாவது நாங்க சந்தோசப்பட்டுக்கிறோம்.

    அவர் பேசிக்கொண்டே போக, தெரிந்த மனிதரா அறிமுகப்படுத்தப்பட்ட நம்ம ஆளு முகத்தப் பாக்கணுமே. அசடு வழியறத மறச்சிக்கிட்டே தனக்கு ஏதோ முக்கிய வேலை இருக்கறதா பாவ்லா பண்ணிக்கிட்டு எழுந்தரிச்சு போக முயற்சி செய்யறாரு.

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 23

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 23

    மீனாட்சி பாலகணேஷ்

    (கழங்காடல் பருவம்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்பாற் பிள்ளைத்தமிழின் இன்னுமொரு இனிய பருவம் கழங்காடற் பருவமாகும். இதனைப் பெதும்பை எனும் (எட்டுமுதல் பதினோரு ஆண்டு வயதுவரை உள்ள) பெண்மக்கள் விரும்பி விளையாடுவதாகக் கூறுவர்.

    கழங்காடல் அனைத்து வயது மகளிரும் விளையாடும் விளையாட்டுகளுள் ஒன்றாகும். ஆயினும் இது பெதும்பைப்பருவப்பெண்களின் விளையாட்டென்று உலா இலக்கியங்கள் கூறும். விளையாடும் முறைகளையும் விளக்கும். ஏழுகாய்களைக் கொண்டு விளையாடப்படுவது கழங்கு. இது அம்மானை ஆட்டத்தினின்றும், பந்தாட்டத்தினின்றும்  மிகவும் வேறுபட்டதாகும்.

    பந்தாடிக் களைத்த சங்ககால மகளிர் ஆற்றங்கரை மணலில் கழங்காடினர் என்பதனை,

              ‘கைபுனை குறுந்தொடி தத்த, பைபய,
             முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும்
       பட்டின மருங்கின் அசையின்1…,’ எனும் பெரும்பாணாற்றுப்படை வரிகளால் அறியலாம். அதாவது, ‘கையிலணிந்த வளையல்கள் குலுங்க, மென்மையான சிறுமுத்துக்களையொத்த பொடிமணலில் பொன்னாலான கழங்குகளைக் கொண்டு விளையாடும் பட்டினத்தின் ஒரு பக்கம்…..’ எனப்பொருள் கொள்ளவேண்டும்.

    பெருத்த முத்துக்கள், மரக்கட்டையில் கடைந்தெடுத்த  உருண்டைகள், பொன்னால் செய்யப்பட்ட பொற்கழங்குகள் முதலானவை கழங்காடப் பயன்படுத்தப்பட்டன. செடியிலிருந்து கிடைக்கும் கழற்சிக்காய் என்பதும் பயன்படுத்தப்பட்டது.

    இன்றும் கிராமிய விளையாட்டாக, அச்சாங்கல் (ஐந்து காய்களை வைத்து விளையாடுவது) ஏழாங்கல் (ஏழு காய்களைக் கொண்டு ஆடுவது), சுங்கரக்காய் (பல காய்களைக்கொண்டு ஆடுவது) என கூழாங்கற்கள் அல்லது கருங்கற்களைக்கொண்டு இவ்விளையாட்டு விளையாடப்படுகின்றது.

    அம்மானை, கழங்கு ஆகிய விளையாட்டுகள் ஆயமொடு (தங்கள் தோழிமார், விளையாட்டுக் குழுக்களுடன்) ஆடப்பெறும் என்பதனை சங்க இலக்கியங்களிலிருந்து அறியலாம்.

                ‘இனந்துணை ஆயமொடு கழங்குடன் ஆடினும்2,’

                ‘கழங்கா டாயத் தன்றுநம் மருளிய3,’ எனும் பாடலடிகள் இதனை விளக்கும்.

                ‘கூறை நன்மனைக் குறுந்தொடி மகளிர்
             மணலாடு கழங்கின் அறைமின்சத் தாஅம்4,’

    எனும் பாடலடிகள் மகளிர் மாடத்து முற்றங்களில் மணலைப்பரப்பிக் கழங்காடினர் என விளக்கும். விளையாடும் முறையாவது தரையில் பொடிமணலைப்பரப்பி, அதன்மீது கழங்குகளை வைத்து, கையாலெடுத்துத் தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடுவதாகும்.

    கழங்காடும் பொழுது ஏழு காய்களையும் தரையில் பரப்பி வைத்துப் பின் ஒவ்வொரு காயாக எடுத்து மேலெறிந்து, அடுத்து இரண்டிரண்டு காய்களாக எடுத்து மேலெறிந்தும் இவ்வாறு ஏழு வரை மேலெறிந்து, மேலேசென்ற காய் கீழே விழுவதற்குள் மற்றொரு பகுதியை மேலெறிந்துவிட்டுக் கீழேவரும் காய்களைக் கையில் பிடித்து ஆடினால், ஆடினவரே தொடர்ந்து ஆடலாம். கீழேவரும் காய் தரையில் விழுந்துவிட்டால் ஆட்டம் மற்றவர்களுக்கு உரித்தாகிவிடும். இவ்வாறு ஆடும்பொழுது, ஒன்றொன்றாகக் கழங்குகளை மேலே எறிகையில் ஒன்றுமுதல் ஏழுவரை உள்ள பொருட்களைப் பாடிக்கொண்டே ஆடுவார்கள். அவையே ஏழு கண்ணிகளில் உலா இலக்கியங்களில் காணப்படும்.

    பெண்மக்களைப் பருவவகையால் பிரிப்பதனையும், அவர்களின் பருவத்துக்கேற்ற செயல்களையும் நாம் உலா இலக்கியங்களில் காணலாம். கழங்காடும் பெதும்பை எனும் பெண் பாதி பேதைக்குணமும் பாதி மங்கைக்குணமும் கலந்தவள் என்கிறது உலா இலக்கியம். இது எட்டு முதல் பதினோரு ஆண்டு நிரம்பிய சிறுமி என்பதற்குப் பொருத்தாமாயுள்ளது. (கடம்பர்கோயில் உலா) ஆடும் கழங்குகளின் நிறமும் பெருமையும் விளக்கப்படுகின்றன:

    பத்து வயது நிரம்பிய சிறுபெண்ணொருத்தி கைகளில் ஏழுவிதமான கழற்சிக்காய்களை எடுத்துக்கொண்டு கழங்காடுகிறாள். அக்காய்களை வெகு லாவகமாக மேலே வீசுகிறாள்! மேகத்தின் கருநீல நிறத்தையொத்த நீலக்கழங்கொன்று; களங்கமற்ற சந்திரன் போலும் வெளேரென்ற முத்தாலான கழங்கொன்று; எந்தை சிவபிரானின் பாதியுடலைக் கொண்ட பார்வதியைப் போலும் பச்சைநிறம் பொருந்திய மரகதத்தாலான கழங்கு ஒன்று; மறுபாதியான ஐயனின் தகதகக்கும் செம்பவள நிற உடல்போன்ற மாணிக்கத்தாலான கழங்கு இன்னொன்று; மலர்ந்த கொன்றைப் பூக்களின் தேன்போன்ற நிறங்கொண்ட கோமேதகக் கழங்கொன்று; பொருந்திய கங்கைநீர்போல் பளபளக்கும் வயிரக் கழங்கொன்று; மன்றுள் நின்றாடும் எம்பிரானின் சிவந்த சடைபோன்ற மென்மையான செம்பவழக் கழங்கொன்று என ஏழுவிதக் கழங்குகளைக் கையிலெடுத்து ஆடுகிறாள் இப்பெதும்பை எனப்படும் சிறுமி.

                ‘கந்தரம்போல் நீலக் கழங்குங் களங்கமில்லாச்
             சந்திரன்போல் முத்தின் தனிக்கழங்கும்–எந்தையுடற்
             பாதியன்ன பச்சைப் பசுங்கழங்கும் பாதியெழிற்
             சோதிமா ணிக்கச் சுடர்க்கழங்கும்–தாதலரும்
             கொன்றையந்தே னன்னநிறக்கோமே தகக்கழங்கும்
             துன்றுகங்கை போல்வயிரச் சொற்கழங்கும்–மன்றுடையான்
             வேணியன்ன செம்பவழ மென்கழங்கும் பங்கையப்பூம்
             பாணி யதனில் பரிந்தெடுத்து5..’

    ஒவ்வொரு கழங்கை மேலே வீசும்போதும் பாகைப் பழிக்கும் தீங்குரலில் ஒன்றிலிருந்து ஏழுவரை அமைந்த இறைவனின் திருத்தலங்களைப் பற்றிப் பாடுகிறாள் இப்பெண். என்னெவெல்லாம் கூறுகிறாள் எனச் சிறிதே கேட்போமா?

    ஒன்றை எடுத்தவள்  ஏகம் (ஒன்று, அனைத்தும் ஒன்று) எனும் ஏகாம்பரத்தைப் பற்றிப் பாடுகிறாள். கச்சி ஏகாம்பரநாதரைப் பற்றிப்பாடுகிறாள்.

                ……………………………………… ‘நீணிலத்துப்
             பாகாங் குதலைமொழிப் பாவைகுறித் தொன்றையெடுத்
             தேகாம் பரத்தினிசைபாடி5  ………. ‘

    பிறகு இரண்டு கழங்குகளை எடுத்துக்கொண்டு அன்றொருநாள், பிரமன், திருமால் ஆகிய இருவர் சிவபிரானின் அடியும் முடியும் தேடிக் கொண்டாடிய அண்ணாமலையைப் பாடிப் போற்றுகிறாள்.

                ………………………………………  வாகாகக்
             கூடு மிரண்டெடுத்துக் கொண்டாடி யன்றிருவர்
             தேடு மலையின் செயல்பாடி5 ……………..’

    மூன்று கழங்குகளை எடுத்து, புகழ்வாய்ந்த திரிசிராப்பள்ளி எனும் தலத்தைப் பாடுகிறாள். இது திரிசிரன் எனும் மூன்றுதலை அரக்கன் சிவபிரானைப் பூசித்து வழிபட்ட தலமாம்.

                ……………………………  ‘நாடரிய
             வள்ளிதழி மூன்றெடுத்து மன்னு திரிசிராப்
             பள்ளியெனுந்தலத் தைப்பாடி5 ………….’

    விளையாட்டில் உள்ளம் மிக்க மகிழ்ச்சியில் திளைப்பதனால் நான்குகாய்களை எடுத்துக் கொண்டு நான்மாடக்கூடலான மதுரையம்பதியின் வளத்தைப் பாடியாடுகிறாளாம்.

                …………………………… ‘உள்ளமகிழ்
             வாடலா னாலென் றடுத்தெடுத்து நான்மாடக்
             கூடல்வளம் பாடிமிகக்கொண்டாடி5 …………’

    இதழ்கள் மலர்ந்தவிழும் சிவந்த மலர்போலும் வாய் கொண்ட கிளியின் மொழி பேசும் அப்பெண் ஐந்து காய்களைக் கையில் எடுத்துக்கொண்டு பஞ்சநதித்தலமான திருவையாற்றின் பெருமைகளைப் பாடிக் கழங்காடுகிறாள்.

                …………………………………………….. ‘தோடவிழும்
             கிஞ்சுகப்பூஞ் செவ்வாய்க் கிளிமொழியா ளைந்தெடுத்துப்
             பஞ்சநதி மான்மியத்தைப் பாடியே5 ………………’

    காய்களுடன் கண்களும் மேலும் கீழும் சென்றுவர, அவ்வண்ணமே ஆறு காய்களைக் கையில் எடுத்தவள், அன்றொருநாள் ஆறுபெண்கள் அட்டமாசித்திகள் பெற்ற மெய்த்தலமான பட்டமங்கையின் பெருமைகளைப் பாடுகிறாளாம்.

                …………………………………… ‘கஞ்சவிழி
             அத்திறத்தால் ஆறெடுத்து அன்று ஆறு மின்னார் அட்டமா
             சித்திபெற்ற மெய்த்தலத்தின் சீர்பாடி5…………’

    இதனைப் பாடி மகிழ்ந்த பெண்ணரசி, அடுத்து ஏழு கழங்குகளைக் கையிலெடுத்துக் கொண்டு, ஏழு உலகங்களிலும் எம்பெருமானாகிய சிவபிரான் இசைந்து உறையும் இடங்களைப் பற்றிப் பாடியாடுகிறாளம்.

                …………………………….. ‘கைத்தலத்தில்
             ஏழெடுத்துப் பாரிடத்தி லித்தலங்களாதியா
             ஏழுலகத் தெம்மா னிசைதலங்கள்5‘

    இவ்வாறு ஆடுபவள் தன் பாடலில், “இத்தகைய தலங்களில் கிட்டும் பேறுகளெல்லாம் எம்மான் உறையும் இந்தக் கடம்பநகரை அடைந்தோர்க்குக் கிடைக்கும்,” என்றுகூறி எல்லாக் கழங்குகளையும் சேர்த்தெடுத்து மேலே வீசியெறிந்து பிடிக்கிறாள். அவ்வாறு செய்யும்போது, அவளுடைய மூக்குத்தி அசைந்தாடுகிறது; கழுத்திலணிந்த முத்து வடம் சரிந்தாடுகிறது; கண்கள் இரண்டும் மேலும் கீழுமாகக் கழங்குகளோடு ஓடியாடுகின்றன. அவளுடைய கொடியிடையும் உடனாடுகின்றது.

                                            ‘-சல்லாப
             மூக்குத்தி முத்தாட முத்து வடமாட
             நோக்கிரண்டு மாட நுசுப்பாட–ஆக்கமகள்
             கொண்டாட மாதுசெங்கை கொண்டாடும் போதிலே5‘

    எனக் கைகளில் கழங்கினை எடுத்து ஆடுகிறாள் அவள்.

    இக்காட்சி கடம்பர்கோயில் உலாவில் காணப்படுவது. பாடிய புலவரின் பெயர் தெரியவில்லை. ஆனால் ஏழு கழங்குகளுக்கும் பாட்டுடைத்தலைவனாம் சிவபிரானின் ஏழுதலங்களின் சிறப்புகளைப் பாடியுள்ள அழகான உத்தி படித்து ரசிப்பதற்கு சிறப்பாக உள்ளது.

    இவ்வாறு சில உலாப் பிரபந்தங்களில் கழங்காடுதல் பற்றிய அருமையான பாடல்களைக் கண்டு மகிழலாம். காளமேகப்புலவர் பாடிய திரு ஆனைக்கா உலா6 எனும் பிரபந்தம் சிறப்பாகப் பெதும்பை ஆடும் ஏழு கழங்குகளுக்குமாக ஈசனின் செயல்களை அழகுற விவரிக்கின்றது.

    சேறைக்கவிராச பிள்ளையும் தாமியற்றியுள்ள வாட்போக்கியுலா7 எனும் நூலில் கழங்காடும் முறையினை நன்கு விளக்கியுள்ளார். இங்கு தலங்கள் இல்லாது ஒன்றுமுதல் ஏழுவரையிலான இறைவனின் பெருமைகளைக்கூறிப் பெதும்பை கழங்காடுகிறாள் எனப்பாடியுள்ளார்.

    கழங்காட்டம் பற்றிய இத்துணை விரிவான விளக்கத்தின்பின்பு, பிள்ளைத்தமிழ் நூல்களுக்குச் செல்லலாமா?

    சிவயோகநாயகி பிள்ளைத்தமிழ் நூல் பத்துப்பருவங்களையே கொண்டதாயினும் சிறிது வேறுபட்டு கழங்கு, அம்மானை ஆடுதல் இரண்டினையும் முறையே எட்டாவது ஒன்பதாவது பருவங்களாகக் கொண்டுள்ளது. இதிலிருந்தும் கழங்காடுவதென்பது அம்மானையாடும் விளையாட்டிலிருந்து வேறுபட்டதென அறிகிறோம். இந்த பிள்ளைத்தமிழ் நூலில் அம்மை கழங்காடுவது மிகவும் நயமான விதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

    மேலெறியும் ஒவ்வொரு கழங்கிற்கும் உண்டான எண்ணிக்கையில் பாடுவார்கள் என அறிந்தோமல்லவா? அதுபோன்றே அம்மையின் ஒவ்வொரு கழங்குக்கும் புலவர் அருமையான விளக்கம் தருகிறார்.

    உனக்குரிய நினது மணாளன்மீது நீ வைத்துள்ள பக்தி (அன்பு) என ஒரு கழங்கை மேலெறிகின்றனை!

    நீ, உனது தலைவனாகிய ஈசன் என நீவிர் இருவரும் உறைகின்ற உடல்கள் சிவம் சக்தி என இருவகைப்படும் எனக்கூறும் விதமாக இரு கழங்குகளை வீசுகின்றனை!

    மேலுலகு, இவ்வுலகு, பாதாள உலகங்கள் என மூன்று உலகங்களைப் படைத்து அவற்றைக்க் காத்தருளும் திருப்பாதங்கள் முறையே இரண்டு உன்னுடையனவும் இரண்டு ஐயனுடையனவாகவும் நான்காகும் எனும்படி மூன்று, நான்கு எனக் கழங்குகளை வீசுகின்றனை!

    நீ செய்யும் தொழில்கள் ஐந்து (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) எனக்கூறி ஐந்து கழங்குகளையும், உலக உயிர்களுக்கு உள்ள குணங்களான காமம், குரோதம், மதம், மோகம், உலோபம், மாற்சர்யம் இவை ஆறெனவும், சீவித்து வாழும் உயிர்களுக்கெல்லாம் உண்டாகும் பிறப்பு ஏழுவகை என்று உணர்த்தும் வகையாக ஏழு கழங்குகளையும்  வரிசைமுறையில் வைத்துப் பாடியாடி அருளுவாயாக!

    உனது திருவருள் விளங்குமாறு பசியநிற மேனியை உடைய நீ, உனது சிவந்தகையினில் ஏந்தியுள்ள நீலமணிக் கழங்கானது குளிர்ச்சியான பொய்கையின்கண் அலர்ந்த செந்தாமரைமீது கரியநிறம் படைத்த வண்டானது ஆடுவதுபோல உள்ளது. பெருந்துறைச் சிவயோகவல்லியே! நீ கழங்காடியருளுகவே!’ என வேண்டும் பாடலிது.

                உரியநின் கேள்வர்மேல் வைத்திடும் பத்தியொன்
                                றுறைகின்ற மேனி களிரண்டு
                       …………………………………………………
                                சீவிக்கு மாவிக்கெலாந்
                       தேகங்கொடுத்த குறியொரே ழெனக் கொண்டு
                                சீர்வைத் துடன்பாடியே
             ……………………………………………
             கரியவண்டாடுமா போலவே நீலக்கழங் கெடுத்
                                தாடி யருளே
                       கவுரீ பெருந்துறைச் சிவயோக வல்லி
                                கழங்குநீ யாடியருளே8.

    என்பன பாடல்வரிகள்.

    ‘ஒருகாயை மேலெறிந்து ஆறினைக் கீழ்வைத்து, இரண்டினை எறிந்து ஐந்தினை வைத்து (உய்த்து) மூன்றினை எறிந்து நான்கினை வைத்து, நான்கினை எறிந்து மூன்றினை வீசி, ஐந்தினை வீசி இரண்டினை வைத்து, இரண்டினை எறிந்து ஒன்றினை வைத்து  ஏழினையும் வீசிப்பிடித்து,’ எனக்கூறுபவர், இன்னும் வெவ்வேறுவிதமான எண்ணிக்கைகளில் வீசியும் வைத்தும் கைகள் சிவக்குமாறு தாயே நீ கழங்கு ஆடியருளே,’ என வேண்டிப்பாடியுள்ள பாடல் நயம் கருத்தைக் கவருவதாகும்.

                ‘ஒன்றெறிந் தாறுவைத் துய்த்திரண் டைந்துவைத்
                                துய்த்துமூன் றிட்டுநான்
                       குய்த்துநான் கிட்டுமூன் றுய்த்தைந்
                                ……………………………
             ஒன்றொடா வேழுமேத்தர முழங்கைப் பெறும் கைத்தலம்
             …………………………………………
                 கவுரீ பெருந்துறைச் சிவயோக வல்லி
                       கழங்குநீ யாடியருளே9,’ என்பன பாடல்வரிகள்.

    இதில் விளையாடும் முறைமையை விளக்கியுள்ளார் புலவர். இங்ஙனம் அமைந்துள்ள பத்துப்பாடல்களும் நயக்கத் தக்கவையாகும்.

    அடுத்து நாம் காண்பது தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ். இதில் நமக்குக் கிடைத்துள்ளன இரண்டே பாடல்கள்தாம். இரண்டுமே அரிய முத்துக்களாலான கழங்குகள்தான்!

    சிவகாமி அன்னையாகிய பெதும்பை ஆடும் கழங்காட்டம் எதையெல்லாம் ஒத்துள்ளது எனச் சுவைபட விவரிக்கிறார்.

    கழங்கு விளையாடும் சிறுமியர் கண்ணிமைக்கும்பொழுதில் ஒன்று, இரண்டு, மூன்று எனக் கழங்குகளை எடுத்தெடுத்து வீசியாடுவர். பார்ப்போர் கண்களுக்கு இவை பல்வகையாகத் தோற்றமளிக்கின்றனவாம்.

    அந்நாளில் தம்மை நாடிவரும் பாணர்களுக்கு அரசர்கள் பொன்னால் செய்யப்பட்ட தாமரைமலரைப் பரிசிலளிப்பர். சில சமயம் அம்மலரின் இதழ்களில் சிகப்பு நாகமாணிக்க மணிகள்  பதிக்கப்பெற்றும் தண்டில் மரகதமணிகளும் பதிக்கப் பட்டிருக்கும். இவற்றிலிருந்து பொங்கும் ஒளி ஒன்றையொன்று தாக்கி எதிரொளித்தால் எவ்வாறு இருக்கும்? கண்ணைப் பறிக்காதா?

    மாவின் இளம்பிஞ்சுகள் (மாவடுக்கள்) காற்றிலசைந்து மாந்தளிரின்மீது மோதியாடினால் எப்படி இருக்கும்?

    இளம்மகளிரின் வேல்விழிகள் பல நவரத்தினங்கள் பதித்த காதணிகளில் (கொப்பில்) பட்டுத் திரும்பினால் எவ்வாறு இருக்கும்?

    நறுமணம் கலந்து சந்தனம் மணக்கும் அம்மையுனது இளங்கொங்கைகள்மீது உன் கணவராகிய சிவபிரானின் கண்கள் தாவி விளையாடுவது எவ்வாறு இருக்கும்?

    அழகான கருவண்டுகள் தேன் உண்ணுவதற்காகச் செங்காந்தள் மலரை இடைவிடாது மொய்ப்பது கண்கொள்ளாக் காட்சியன்றோ?

    இந்திரநீலக் கற்களைக்கொண்டு வடிவமைக்கப்பெற்ற கழங்குகளைக்கொண்டு அன்னை கழங்காடுவது இவையனைத்தையும் போலுள்ளது எனப் பூரிக்கின்றனர் அடியவர்கள்.

               பாந்தள் மாணிக்கமணி பொற்பூவின்
                       மரகதம்பத்தி பாய்ந்தாடல் எனவும்
             ………………………………………………..
             மழை மதரரிக் கண்கள் பன்மணிக்
                       கொப்பில் மறிந்து விளையாடல் எனவும்
             ………………………………………
             தண்டாது வரிவண்டு செங்காந்தள்
                       மலர்மீது தண்தாது நுகர்வது எனவும்
             ……………………………………………
             …………………………………. இந்திர
                       நறுநீலக் கழங்கு விளையாடி அருளே!
             கனக சிற்சபையில் வாழ் சிவகாம
                       சுந்தரி கழங்கு விளையாடி அருளே10!

    மிக அழகான உவமைகள் நிறைந்ததொரு பாடல் இது. இயற்கையின் செயல்கள் அனைத்திலும் அன்னையின் கழங்காட்டத்தைக் கண்டு உருகும் அடியவர் இப்பெரும்புலவர்.

    இரண்டாம் பாடல் அன்னை விளையாடும் பலவிதமான ஆடல்களையும் தொகுத்துக் கூறுகிறது. கழங்கு விளையாடவேண்டிக் கொள்வதுடன் நிறைவுறுகின்றது.

    சொற்கள் பழகும் இளங்கிளியோடு சில பொழுது கொஞ்சி மகிழ்கிறாள் இப்பெண்!

    பொற்கூண்டில் வளரும் பூவைப்பறவைக்கு மென்மையான சொற்களைப் பயிற்றுவிக்கிறாள்.

    ரத்தினங்கள் பதித்த சிறு பாவைகளுக்கு (பொம்மைகளுக்கு) குழமணம் மொழிந்தும், சிறுவீடு கட்டியும், நறுமணப்பொடிகளைத் தோழியர்மீது வீசி எறிந்தும், யாழினைமீட்டி, இனியகுரலில் இன்னிசைப் பாடல்களைப் பாடியும், மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை வைத்து விளையாடியும், இனிய தோழிமாருடன் நீரில் திளைத்து விளையாடியும், அப்போது நறுமணப்பொடி கலந்த நீரினை இறைத்துக் களித்தும், நீலமயில்மீது     ஏறியமர்ந்து விளையாடியும் மகிழும் பெண்ணே!

    சங்கத்தமிழில் முத்தமிழ்ப் பாடல்களைப் பாடிக் கழங்கு ஆடிடுக! என வேண்டும் பாடலிது.

                பழகுசொல் பச்சிளம் கிள்ளையொடு
                       கொஞ்சியும் பஞ்சரம் வளர் ……
             ……………………………………………….
             குழமணப் பிள்ளைகொடு வண்டல்
                       விளையாடியும்……………………
             கொடுங்கையாழ் குரலிசை நரம்பினொடு
                       ……………………………………
             கழகு முத்தமிழ் பாடும் இகுளையரொடும்
                       பொற்கழங்கு விளையாடி அருளே11!

    என்பன பாடல் வரிகள்.

    இளமகளிரின் ஆடல் பாடல்களைச் சித்தரிப்பதில் உலா இலக்கியங்களும் பிள்ளைத்தமிழ் பிரபந்தங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது மிகையேயல்ல எனலாம்.

    (தொடரும்)

     பார்வை நூல்கள்:

    1. பெரும்பாணாற்றுப்படை
    2. அகநானூறு. பா. 17. வரி.2
    3. அகநானூறு, பா.66. வரி.24
    4. நற்றிணை, பா.79, வரி-2-3.
    5. கடம்பர் கோயில் உலா
    6. காளமேகப்புலவர்- திரு ஆனைக்கா உலா
    7. சேறைக் கவிராச பிள்ளை- வாட்போக்கியுலா.

           8, 9. சிவயோகநாயகி பிள்ளைத்தமிழ்

    10, 11. நல்லதுக்குடி கிருட்டிணையர்- தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-40

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-40

    தி. இரா. மீனா

    அக்கம்மா

    கல்யாணைச் சேர்ந்தவர். ’ஆசாரவே பிராணவாத இராமேஸ்வரலிங்கா’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “பற்றற்றவனுக்கன்றி ஆசையுள்ளவனுக்கு விரதமுண்டோ?
    அமைதியுடையவனுக்கன்றி சினமுடையவருக்கு விரதமுண்டோ?
    கொடையாளிக்கல்லாமல் கருமிக்கு விரதமுண்டோ?
    தன்னாற்றலுக்கு ஏற்றாற்போல் மனத்தூய்மையுடன்
    இருக்கும் மாயபக்தனே உலக வினைகளற்ற சரணர்
    அவர் பாதம் என்னுள்ளத்தில் வார்ப்புப் போலுள்ளது.
    சரணரின் மாட்டுக் கொட்டகையாம்
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம்“

    2. “குருவாக இருந்தாலும் ஒழுக்கக் கேடுடையவனெனில்
    பின்பற்ற முடியாது.
    இலிங்கமாயிருப்பினும் ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டிருப்பின்
    வழிபட முடியாது.
    ஜங்கமனாயிருப்பினும் ஆசாரத்தைப்
    பின்பற்றவில்லையாயின் சேர இயலாது.
    ஆசாரமே பொருள், விரதமே உயிர்,செயலே அறிவு
    அறிவே ஆசாரம்
    ஆச்சாரமே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம் அதுவே“

    3. “தான் மூழ்கிய பின்னர் கடலின் ஆழம் தனக்கேன்?
    தான் ஆயுதமொன்றில் அகப்பட்ட பின்னர்
    தன்னுடலை ஆயுதங்கள் பல தளைப்படுத்தினாலென்ன?
    ஒரு முடிவுக்கு வந்த பின்னர்
    இந்த உலகோருடன் வேறு பேச்செதற்கு?
    இது கட்டுப்பாடுடன் கூடிய நியமம்
    நியமத்தால் வந்த முடிவு
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கத்தின் விருது.“

    4. “பக்தன் வீட்டிற்கு அடியார் வந்தால்
    திருமண  மகிழ்ச்சியை விட அதிகமென நினைத்து
    உடலுருகி மனமிணைந்து கண்கள் நிறைந்து
    வஞ்சனை ஐயம் தோன்றாமல்
    ஐயமற்றவனாகிச் செய்கின்ற பக்தனுடைய
    முற்றத்தின் வாசலே
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கத்தின் சிரமாம்.”

    5. “ஐயமுள்ள வரையில் தவமிருப்பவன் இல்லை
    வாள்முனைக்கு அஞ்சும் வரையில் வீரமுடைய வீரனல்ல.
    மூவகையுடல்  உள்ளவரையில் இலிங்கமுள்ள
    அங்கமுடையவனல்லன்.
    நிந்தனை வந்தபின்னும் அங்கத்தை விடவில்லையெனில்
    ஒழுக்கமுடையவன் அல்லன்.
    இந்த நியமங்களில் உட்பட்டவனுக்கு
    அங்கிங்கெனும் பயமெங்குமில்லை.
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வரலிங்கத்திலுமில்லை.”

    உரிலிங்க பெத்தியின் புண்ணியஸ்திரி காளவ்வே

    உரிலிங்க பெத்தியின் மனைவி.’உரிலிங்க பெத்தியிகளா அரசா ’இவரது முத்திரையாகும்.

    1. “கடமை காயகமற்றவர் பக்தரல்லர்
    வாய்மை தூய்மையற்றது காயகமல்ல
    ஆசையென்பது பிறப்பின் மூலம்
    ஆசையற்றது நித்திய முக்தியாம்
    உரிலிங்கப் பெத்திகளரசனுள், சுலபமல்ல காண் தாயே.”

    3. “தும்பையின் கொள்ளிபோல் எரிகின்றவன் பக்தனா?
    பொய்யுரைத்துப் பெற்றுச் செய்பவன் பக்தனா?
    பக்தர் குலத்தை இகழ்பவன் பக்தனா?
    தன்னுயிருக்குத் துன்பம் வரினும் இவரைவிடவேண்டும்
    விடவில்லையெனில் உரிலிங்கப் பெத்திகளரசன்
    விரும்பான் தாயே“

    எடேமட நாகிதேவய்யாவின் புண்ணியஸ்திரி மசணம்மா 

    ’ நிஜகுணேஸ்வர ’இவரது முத்திரையாகும்.

    “காகம் நாய் இரண்டையும் உண்டவரில்லை;
    விரதம் கெடுத்தவரோடு இணைந்தவரில்லை;
    நாய்க்கு ஆரஞ்சு செரிக்குமா?
    உலக மாந்தருக்கு விரதம் பொருந்துமா ,
    சிவமூலத்துக்கன்றி?
    நிஜகுணேஸ்வர இலிங்கத்தில் தாங்களே சாட்சி“

    எச்சரிகே காயகதா முக்திநாதய்யா :

    இவருக்கு முத்தண்ணா  என்ற பெயருமுண்டு.காயகம் இரவுநேர காவலாளி. ’சுத்த சித்த பிரசித்த பிரசன்ன குரங்கேஸ்வரலிங்கா’ என்பது இவரது முத்திரையாகும்.

    “உடல் மாற்றம் போதும் எழுக,
    வஞ்சகச் செயல்கள் பல மறந்தெழுக,
    பக்தியும் முக்தியும் உமக்களிக்கும் இலிங்க நட்பை
    நினைத்தெழுக.
    உமது குருவின் ஆணை
    உமது பற்றற்ற அறிவின் விழிப்புணர்வறிந்தெழுக.
    சுத்த சித்த பிரசித்த பிரசன்ன குரங்கேஸ்வர
    இலிங்கத்துடன் இணைய வேண்டுமெனில்.”

    [தொடரும்]

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 8

    பரிமேலழகர் உரைத் திறன் – 8

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    “மோப்பக்  குழையும்  அனிச்சமும்  நோக்கக் குழையும்  விருந்தும்”

    முன்னுரை

    திருக்குறளில் ‘ஒன்று மற்றொன்றை விடச் சிறந்தது, ஒன்று மற்றொன்றைவிடத் தாழ்ந்தது’ என்பன போன்ற பதிவுகள் வரும். ஆனால் அவை எப்படிச் சிறந்தது? எப்படித் தாழ்ந்தது? என்பதற்கான காரணத்தைத் திருவள்ளுவர் கூறமாட்டார். அவற்றிற்கான காரணங்களைக் கண்டறிவது கற்பார் கடன். அல்லது உரையாசிரியர் பணி. இது ஓர் உரை நெறி. இந்நெறியில் பரிமேலழகர்  உரை தனித்தன்மை பெற்றது. “பெண்ணின் பெருந்தக்க யாவுள?” என்னும் திருவள்ளுவரின் வினாவிற்கு விடையிறுத்த பரிமேலழகர், “கற்புடையாள்போல் அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் யாவுள?” (54) என்றார் என எழுதுவதையும், “செல்லா இடத்து சினம் பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே! ஏனையது இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீய பிற இல்லை என்றார்” (3020) என எழுதுவதும் காண்க. இந்த வகையில் எதிர்பாராச் சூழலில் இல்லத்திற்கு வரும் விருந்தின் இயல்பு  அனிச்சப்பூவினும் மென்மையானது என்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து கூறும் பரிமேலழகரின் உரைத்திறன் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

    திறனறியப்படும் குறளும் உரையும்

    திருக்குறள் அறத்துப்பாலில் ஒன்பதாவது அதிகாரத்தின் பத்தாவது இறுதிப் பாடலாக அமைந்தது,

    “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து” (90)

    என்னும் குறட்பாவாகும். இதற்கு,

    • அனிச்சம் மோப்பக் குழையும் — அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது
    • விருந்து முகந்திரிந்து நோக்கக் குழையும் – விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர் எனப் பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார்.

    பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட் பாகுபாடுகளை அறிந்து கொள்வது இந்தக் குறட்பாவின் மையக்கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்த நெறி புலப்பட உதவக் கூடும்.

    அதிகாரக் கருத்துப் பகுப்பு

    ஒவ்வொரு அதிகாரத்து உட்பொருளையும் பாகுபடுத்திக் கொள்ள பரிமேலழகர் பெரிதும் முயன்றிருக்கிறார். இந்தப் பகுப்புத்தான் திருக்குறளுக்கான புத்துரைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற உரைத்தளவாடங்கள் ஆகும். பரிமேலழகர் வகுத்துக் காட்டும் பகுப்புமுறையைப் புறந்தள்ளித் திருக்குறளுக்கு உரைசொல்லப் புகுந்தால் ஒவ்வொரு அதிகாரத்திலும் அதிகாரத் தலைப்புக்குப் பொருத்தமில்லாத குறட்பாக்கள் இருப்பதைக் காட்டிவிட இயலும். ‘கடவுள் வாழ்த்து’ என்ற அதிகாரத் தலைப்பிற்கும் “இறைவனடி சேராதார் பிறவிக்கடலை நீந்தார்” என்பதற்கும் என்ன தொடர்பு? ‘ஒழுக்கமுடைமை’ என்ற அதிகாரத் தலைப்பிற்கும் “மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் என்பதற்கும்” என்ன தொடர்பு?” என்று ஆயிரம் வினாக்களைத் தொடுத்துவிட முடியும். “ஒரு தலைப்பின் கீழ் அதுபற்றிய பன்முகப் பரிமாணங்களைத் திருவள்ளுவர் ஆராய்ந்திருக்கிறார்” என்பதுதான் பரிமேலழகரின் உரைப்பணியின் தொடக்க நிலையாகும்.

    1. விருந்தோம்பலின் சிறப்பு (1-2)
    2. விருந்தோம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் (3-5)
    3. விருந்தோம்புவார் மறுமைக்கண் எய்தும் பயன் (6)
    4. இருமைப் பயனுக்கான காரணம் (7)
    5. விருந்தோம்பாவழிப் படும் குற்றம் (8-9)
    6. விருந்தோம்புவார்க்கு வேண்டிய இன்முகம் (10)

    எனப் பகுத்துக் காட்டி, விருந்தோம்பலின் பன்முகப் பரிமாணத்தை எடுத்து விளக்கியதால்தான், ‘இத்தகைய சிறப்புக்கள் உடைய விருந்தினை ஓம்புவார்க்கு இருக்க வேண்டிய எளிய ஆனால் தலையாய இயல்பு இன்முகமே’ என்பதை அவரால் இறுதிக் குறட்பாவிற்கான விளக்கமாக்க முடிந்தது.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘அனிச்சம் குழையும்’ என உடன்பாட்டில் குறளிருக்க ‘மோந்துழியன்றிக் குழையாது’ என எதிர்மறை வாய்பாட்டில் உரை காண்கிறார். அதிகாரம் விருந்தோம்பல். விருந்தினர் மனம் குழைவதே பரிமேலழகரின் கருத்தில் நின்றதாதலின் உடன்பாட்டு உவமத்தை எதிர்மறை வாய்பாட்டிலும் பொருளை உடன்பாட்டிலும் வெளிப்படுத்துகிறார். ‘(காண்டல் தொடுதல் அன்றி,) மோந்தால்தான் அனிச்சம் குழையும்., திரிபு நோக்கினாலேயே விருந்து குழையும்’ என்பது கருத்து.
    • ‘திரிதல்’ என்பது இலக்கணத்துள் மூவகை விகாரங்களுள் ஒன்று. இயல்புதான் திரியும். விருந்தோம்புதற்குரியார், விருந்து வருவது கண்டு மகிழ்வதற்கு மாறாக தமது இசைவின்மையை (விருப்பமின்மையை), முகத்தால் மாறுபட நோக்கின், வந்தவர் மனம் குழைந்துவிடுமாம். நுட்பம் என்னவென்றால் இயல்பாக இருப்பதைச் செயற்கையாக மாற்றிக்கொள்வதைக் ‘கண்டுழி’ “முகம் வேறுபட்டு நோக்குதல்” என்னும் சொல்லாட்சிகளால் பரிமேலழகர் உணரவைப்பதுதான்.

    விளக்கவுரை

    ‘அனிச்சம்’ ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் எனப்து கூறப்பட்டது.

    விளக்கவுரையில் கண்ட உரை நுட்பம்

    • திருக்குறளில் ‘அனிச்சம்’, ‘குவளை’ ஆகிய இரண்டு பூக்கள், முறையே மென்மைக்கும் கண்ணுக்கும் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளன. ‘வாழி அனிச்சமே’ (1111) (மென்மையால்), ‘அனிச்சப்பூ’ கால்களையாள்’ (1115) (மென்மை கருதாது) ‘அனிச்சமும்’ (1120) (மென்மைக்காக எடுக்கப்பட்ட) என்னும் இடங்களிலெல்லாம் ‘அனிச்சம்’ என்னும் சொல் தலைமகன் தலைமகள் நலத்தைப் புகழ்வது ஆதலின் பூவை நேரடியாகக் குறித்தது. இக்குறட்பா ஆசிரியர் கூற்றாக அமைந்ததாதலின் ‘அனிச்சம்’ என்னும் மரத்தின் பெயர் மலருக்கு ஆகுபெயர் ஆயிற்று. அதாவது தலைவன் மரத்தைப் பற்றிப் பேசாது மலரைப் பற்றித்தான் பேசுவான் என்பது குறிப்பு. பாட்டில் ‘குழையும்’ என்ற வினையால் ‘அனிச்சம்’ ஆகுபெயராயிற்று, குழைவது மரத்திற்கின்மையின். தலைமகன் கூற்றில் அனிச்சம் ஆகுபெயராகாததற்கு அவன் கருத்தில் அனிச்சப் பூ மட்டுமே நின்றதனான் என்க.
    • மேம்போக்காக இந்தப் பாடலைக் கண்ணுறுவார் இதனை எடுத்துக்காட்டுவமமாகவே கொள்ளக் கூடும். மோந்தால் அனிச்சம் குழையும் (மாறுபட்ட) நோக்கினால் விருந்து குழையும்’ என்னும் பாட்டின் கிடக்கை நிலையும் அவ்வாறு கொள்ளுமாறு அமைந்திருப்பதும் உண்மை. ஆனால் பரிமேலழகரின் சிந்தனையாற்றலால் பாட்டில் வெளிப்படும் நுண்ணியம் இறுதியில் விளக்கப்படும்.
    • மென்மைக்கு எடுத்துக்காட்டு அனிச்சப்பூ. ‘பூ’ என்னும் சொல்லுக்கே ‘மென்மை’ என்பது பொருள். ‘பூந்தென்றல்’, ‘பூங்கோதை’, ‘பூங்கதவு’ என்பன காண்க. அனிச்சம் பூக்களில் மென்மையானது. அதனினும் விருந்தினர்கள் மென்மையானவர்கள் என்றுதான் வள்ளுவர் சொல்ல வருகிறார் என்பது பரிமேலழகர் அனுமானம். பாட்டில் அதற்கான காரணம் வெளிப்பட இல்லை. அக்காரணத்தை ‘மோப்ப’, ‘நோக்க’ என்னும் இரு சொற்களைக் கொண்டு கண்டறிய முற்படுகிறார். முற்பட்டு ‘மோத்தல்’ என்பது ‘காண்டல், தொடுதல், மோத்தல் என்னும் நிரலில் மூன்றாவதாகவும் ‘நோக்குதல்’ என்பது அவற்றின் தொடக்க வினையாகவும் அமைந்திருப்பதை அறிகிறார். கண்ணால் காணுகிறபொழுது அனிச்சம் வாடாது. விரல்களினால் தீண்டுகிறபோதும் வாடாது. மூக்கினால் மோந்தால்தான் அது வாடும். தொலைவில் வரும் விருந்தினர்களைக் காண்பது ஒரு வினை. அவர்களை இன்சொல்லால் வரவேற்பது அடுத்த வினை. அவர்களை அறுசுவை உண்டியளித்து ஓம்புதல் அவற்றின் தொடர்வினை. ஓம்புபவர் தொலைவில் வரும் விருந்தினர்களைத் தம் பார்வையால் மாறுபட்டு நோக்கினாலேயே மனம் வாடுவர். எனவே மூன்றாம் நிலையில் வாடும் அனிச்சப் பூவினும் முதல் நிலையிலேயே வாடிவிடும் விருந்தினர் மென்மையானவர் என்னும் உண்மையைப் பதிவு செய்கிறார் பரிமேலழகர். இதனைச் “சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்முகமும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்” என்னும் பகுதி உணர்த்துவது காண்க.
    • அதிகார உள்ளடக்கக் கருத்துப் பகுப்பில் பெரிதும் நம்பிக்கை கொண்ட பரிமேலழகர் விருந்தோம்புவார்க்கு முதற்கண் வேண்டுவது இன்முகம் என்பதை வலியுறுத்தவே இக்குறள் இறுதியாக வைக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறார். கருதி, “இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது” எனக் குறட்பாவின் மையக்கருத்தினைப் புலப்படுத்துகிறார்.

    விருந்து பற்றிய விளக்கம்

    இல்லறத்தான் ஓம்புகின்ற அறங்களுள் விருந்து சிறந்தது. ‘விருந்து’ என்னும் சொல் விருந்தினரைக் குறித்தாலும் இவ்வறம் பற்றிய அனைத்துச் சிந்தனைகளும் ஓம்புவாரையே களமாகக் கொண்டுள்ளன என்பதைக் கருத்திற் கொள்ளல் வேண்டும். அதாவது விருந்தோம்பலில் ஓம்புகிறவனே தலைமகன், அறம் செய்வானும் அதற்கான அனைத்துப் பயன்களையும் அனுபவிப்பவன் அவனேயாதலின். தேனும் மீனும் கொடுத்து ஓம்பிய குகனைப் (தெய்வத்தை ஓம்பிய அடியவன்) பற்றியே இராமாயணம் பேசுகிறது. குசேலனை ஓம்பிய கண்ணனைப் (மானுட நண்பனை ஓம்பிய இறைவன்) பற்றியே குசேலோபாக்கியானம் பேசுகிறது. சிவனடியாரை மழையிரவில் ஓம்பிய இளையான்குடி மாறனாரையே (சிவனை ஓம்பிய சிவனடியார்) பெரியபுராணம் பேசுகிறது. விருந்தோம்பலில் ஓம்புகிறவன் (அறம்) செய்பவனாகவும் விருந்து செயப்படுபொருளாகவும் அமைந்துவிடுவதே இதற்குக் காரணம்.  விருந்தோம்பலாகிய அறத்தில் பயன் செய்பவனுக்கே என்பது குறிப்பு. ஓம்புகிறவன் உயர்ந்தவன் என்பது தத்துவம். இந்தப் பின்புலத்தில் பரிமேலழகர் உரையருமையை நோக்கினால் அதன் நுட்பம் புரியக்கூடும்.

    பரிமேலழகரின் உரையருமை

    • ‘விருந்தோம்பல்’ என்னும் பொருண்மை திருக்குறளின் ஒன்பதாவது அதிகாரத்தில் ஆராயப்படினும் ஐந்தாவது அதிகாரத்தின் 43 ஆவது குறட்பாவிலிருந்தே இது பற்றிய சிந்தனையைப் பரிமேலழகர் தொடங்கிவிடுகிறார். இதனை “இருவகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் (தென்புலத்தார், தெய்வம்) கட்புலனாகாதன நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் (ஒக்கல், தான்) பிறர்க்கு ஈதல் அன்மையானும் இடைநின்ற விருந்தோம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்களுக்கு முதலாயிற்று.” என்னும் அதிகாரப் பொருண்மை விளக்கத்தினால் உணர முடியும்.
    • ‘அறிந்து வருவது’, ‘அறியாது வருவது’ என்னும் இருவகையில் எவ்வகையாயினும் எதிர்பாராமல் வருவதே ‘விருந்து’ எனப்படும். ‘விருந்தே புதுமை’ என்பதற்கு அதுதான் பொருள்! அவ்வெதிர்பாராச் சூழலில் வருகின்ற விருந்தினை ஓம்புங்கால் இன்முகமே தலையாயது என்பதனையே திறனறியும் குறட்பாவின் (90) மையக்கருத்தாகப் பரிமேலழகர் கொள்கிறார். விருந்தோம்புவார்க்குரிய முகமலர்ச்சியே இவ்வதிகாரத்தில் கண்ட அனைத்துப் பயன்களையும் தரும் என்பது குறிப்பு. மேற்கண்ட விளக்கங்களையெல்லாம் உள்ளடக்கி “விருந்து என்பது புதுமை. அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது.  அவர் இரு வகையர். பண்டு அறிவுண்மையின் ‘குறித்து’ வந்தாரும் அஃது இன்மையின் ‘குறியாது’ வந்தாரும் என.” என்னும் விளக்கத்தாலும் இவ்வைந்து அறங்களுள் விருந்தோம்பலையே இல்லறத்தின் தலையாய அறமாக விதந்தோதிய திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை அறிந்த நுட்பத்தானும் உணர்க.

    ஒரே அலைவரிசையில் “திருவள்ளுவர் – பரிமேலழகர் — பாவேந்தர் “

    குறிப்பிட்ட குறட்பாவிற்குரிய பரிமேலழகர் உரைத்திறனை மட்டும் எதிர்பார்க்கின்ற சிலர் இந்தப் பகுதியில் இவ்வளவு விளக்கமும் எடுத்துக்காட்டுக்களும் சான்றுகளும் தேவையா என எண்ணக் கூடும். பழந்தமிழ்  உரையாசிரியப் பெருமக்களின் ஒரு பொருள் பற்றிய சிந்தனை, பல தளங்களிலும் வேர்கொண்டிருந்தது என்பது ஓர் இன்றியமையாக் குறிப்பு. ‘விருந்தோம்பல்’ என்பது தமிழர்களின் தலைசான்ற பண்பாட்டுக் குறிப்பு. உலக நீதி உரைக்க வந்த திருவள்ளுவரே “இன்மையுள் இன்மை விருந்தொரால்” (153) என்றும், “உடைமையுள் இன்மை விருந்தோம்பா மடமை” (89) என்றும் இருவகை வாய்பாட்டில் நுட்பமாக இத்தமிழ்ப் பண்பாட்டை ஆராய்ந்திருக்கிறார்.

    கணவனைப் பிரிந்துறைந்த நாளில் தான் இழந்த அறங்ளை நிரல்படுத்திய கண்ணகி விருந்தோம்ப இயலாமையைச் சுட்டி வருந்துவதை இளங்கோடிவகள்  “தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடல் இழந்த என்னை” (சிலம்பு. கொலைக்களக்காதை – 73) என்னும் வரிகளில் கண்ணகி வாய்மொழியாகவே பதிவு செய்திருக்கிறார் என்பதும் அசோகவனத்தில் தனிமைச் சிறையில் வாடிய சீதை வனத்தில் இராமனின் நிலையெண்ணி வருந்தியபோது, ‘விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்” (கம்ப…சுந்தரகாண்டம் – 5083) எனக் கம்பர் பதிவு செய்திருப்பதும் பலராலும் அறியப்பட்டவையே.

    விருந்தோம்பலாகிய மரபுவழிப் பண்பாட்டைத் திருவள்ளுவர் வழி நின்று விளக்கியவர் பரிமேலழகர் என்பது மேற்சொன்ன விளக்கங்களால் புலப்படக் கூடும். திருவள்ளுவரையும் பரிமேலழகரையும் முற்றும் உள்வாங்கிய பாவேந்தர் தமக்கே உரிய தமிழ்ப் பண்பாட்டு உணர்ச்சியுடன் எழுதிய ‘குடும்பவிளக்கு’ என்னும் அரிய காப்பியத்தில் ‘விருந்தோம்பல்’ என்பதை இரண்டாவது பகுதியாக  வைத்திருக்கிறார். அது மட்டுமன்று. குடும்பத்தலைவியாகிய தங்கம் விருந்து வரக் கண்டபோது அடைந்த மகிழ்ச்சியைச்,

    “சுடுவெயிலில் காயவைத்த சோளம் துழவி
    உடல் நிமிர்ந்தாள்., கண்கள் உவந்தாள். —  நடைவீட்டைத்
    தாண்டி வரும்விருந்தைத் தான்கண்டாள்! கையேந்திப்
    பூண்ட மகிழ்வாள் புகழேந்தி – வேண்டி
    வருக!  அம் மாவருக! ஐயா வருக!
    வருக! பாப்பா தம்பி என்று – பெருகன்பால்
    பொன்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள, முகம்
    அன்றலர்ந்த செந்தாமரையாக – நன்றே
    வரவேற்றாள்” (பாரதிதாசன் குடும்பவிளக்கு “விருந்தோம்பல்”)

    என வெளிப்படுத்துவதில் பரிமேலழகருக்கு உரையெழுதுகிறார். மாவரசர், மலர்க்குழலி, நாவரசு நகைமுத்தும் வந்திருக்கிறார்கள் எனக் கேட்டவுடன் மகிழ்ந்த தங்கத்தின் மாமன், மாமி மகிழ்ந்து மருமகள் தங்கத்திடம் விருந்தோம்பலின் சிறப்பைக் கூறுவதில் திருவள்ளுவர், பரிமேலழகர் வார்த்தெடுத்த தமிழ் மரபுப் பாவேந்தரிடம் குடிகொண்ட பாங்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    “வீட்டுக்கு வந்த விருந்தோம்பு! நாட்டிலுறு
    நற்றமிழர் சேர்த்த புகழ் ஞாலத்தில் என்னவெனில்
    ‘உற்ற விருந்தை உயிரென்று — பெற்றுவத்தல்’
    மோந்தால் குழையும் அனிச்சம்பூ முகமாற்றம்
    வாய்ந்தால் குழையும் வருவிருந்தென்று – ஆய்ந்த திரு
    வள்ளுவனார் சொன்னார்! அதனைநீ எப்போதும்
    உள்ளத்து வைப்பாய்! ஒரு போதும் – தள்ளாதே!
    ஆண்டு பல முயன்றே ஆக்குவை ஊண் எனினும்
    ஈண்டு விருந்தினர்க்கும் இட்டுவத்தல் வேண்டுமன்றோ?
    வந்தாரின் ‘தேவை, வழக்கம்’ இவையறிய
    நந்தா விளக்குன்றன் நல்லறிவே! செந்திருவே!
    இட்டுப்பார்! உண்டவர்கள் இன்புற்றிருக்கையிலே
    தொட்டுப்பார் உன் நெஞ்சைத் தோன்றுமின்பம்!
    கரும்பென்பார் பெண்ணைக் கவிஞரெலாம் வந்த
    விருந்தோம்பும் மேன்மையினால் அன்றோ?”

    (பாரதிதாசன் குடும்பவிளக்கு “விருந்தோம்பல்”)

    தமிழிலக்கியத்தில் விருந்தோம்பல் என்னும் தலைப்பில் சிந்தித்து எழுதப்படும் படைப்பு எதுவாக இருந்தாலும் அது பாவேந்தர் சித்திரித்துக் காட்டிய குடும்ப விளக்குக்குப் பிறகுதான் என்பதை இந்தப் பகுதி காட்டும். வள்ளுவரை மனக்கோயிலில் வைத்துக் கொண்டாடும் பாவேந்தர் பரிமேலழகரின் உரைநயத்தையும் ஆழத்தையும் உள்வாங்கியே இந்தப் பகுதியை எழுதியிருக்கிறார் என்பதைக் கற்பார் உணரக்கூடும். “தொல்லோர் சிறப்பின்’ என்ற தொடருக்கு “நற்றமிழர் ஞாலத்தில் சேர்த்த புகழ்” என்று கவிதையில் உரையெழுதுகிறார் பாவேந்தர். விருந்து கண்டவுடன் தங்கத்தின் மேனி பூரித்தது என்பதைப் “பொன்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள, முகம் அன்றலர்நத செந்தாமரையாக” என்று வண்ணனை செய்கிறார். உரைத்திறன் அறியும் இந்தக் குறட்பாவை  முற்றாக எடுத்தாள்கிறார்.  எல்லாவற்றையும் விட திருக்குறளில் சொல்லாத ஆனால் பரிமேலழகர் சொன்ன (சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும் என்னும் முதல் நிலை தவிர்த்து) நண்ணியபழி இன்சொல்லும், உடன்பட்டவழி நன்றாற்றலும் என்ற விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதனவாகிய மற்ற இரண்டு கடமைகளையும் இல்லறக் காட்சிகளாகவே சித்திரித்துக் காட்டியுள்ளார். இதனால் பரிமேலழகர் உரை பாவேந்தரை எப்படிப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் இல்லறத்தின் தலையறமாக விருந்தோம்பலை விதந்தோத, அதற்குப் பரிமேலழகர் ஆழ்ந்த உரையெழுதினார். குறளையும் பரிமேலழகர் உரையையும் செரித்துக் கொண்ட மரபுவழிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அதனைக் குடும்ப விளக்கில் எல்லாருக்குமாகச் சித்திரித்துக் காட்டினார். “வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட மரபு” என்றால் இப்படித்தான் இருக்கும்!

    நிறைவுரை

    பொருட்பகுப்பில் தெளிவு கொண்ட பரிமேலழகர் விருந்தினர்க்கு உவமமாக்கிய அனிச்சத்தின் திறமறிகிறார். அறிந்து ‘அனிச்சத்தை விருந்துக்கு ஒப்பாக்கவில்லை’ என்னும் உண்மை உணர்கிறார். உணர்ந்து ‘ஒப்பு நிலை மாற்றி உறழ்வு நிலையில்’ உரை காண்கிறார். கண்டு ‘அனிச்சமும் விருந்தினரும் ஒப்பு’ என்னும் கருத்தியலைப் பின்னுக்குத் தள்ளுகிறார். தள்ளி, மூன்றாம் நிலையில் வாடுகின்ற அனிச்சத்தினும் முதல் நிலையிலேயே வாடிவிடும் விருந்தினரின் மென்மையின் உயர்ச்சியை வேறுபடுத்தி விளக்குகிறார். இந்த விளக்கத்தால் பெரும்பாலோர்க்கு எடுத்துக்காட்டுவமமாகத் தோன்றும் இந்தப் பா வேற்றுமையணியாக தனது உண்மை உருவத்தைக் காட்டி நிற்கிறது. இதுவே இக்குறட்பாவில் பரிமேலழகர் உரைத்திறனாகும்.

    (தொடரும்…)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 18

    கதை வடிவில் பழமொழி நானூறு – 18

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 38

    எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
    தமரைத் தலைவைத்த காலைத் – தமரவற்கு
    வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின்
    ‘ஆல்என்னிற் பூல்என்னு மாறு’.

    ‘ஆல் என்னிற் பூலென்னுமாறு’

    என்னடா ஊர்லேந்து வந்ததுலேந்து நானும் பாக்கறேன் அது முன்ன உக்காந்து ஜபம் பண்ணிக்கிட்டே  இருக்கயே. என்ன ஆச்சு. வேலையில எதுவும் பிரச்சினையா. சம்பளம் எல்லாம் ஒழுங்காவருதில்ல. பாட்டி எல்லாம் சரியாப் போயிட்டிருக்கு. நான் லேப்டாப்ல வீடியோ கான்பிரன்சிங் அட்டெண்ட் பண்றேன். அப்புறமா பேசலாம். குரல் கொடுத்துவிட்டு மீண்டும் கலந்தாலோசிப்பில் மூழ்கினேன். எல்லாம் ஒரு வழியா முடிச்சாச்சு. நாளைக்கு ரிப்போர்ட் ரெடி பண்ணி அனுப்ப வேண்டியதுதான். அப்புறம் ஐயாக்கு ஜாலிதான். யோசித்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் பாட்டியின் குரல்.

    டேய் சூடா கொழக்கட்ட பண்றேன். வந்து சாப்பிட்டு வேலயப் பாரு.

    வந்ததே அதுக்காகத்தானே. சாப்பிடற வேலய ஒழுங்காப் பாக்கலாம். நாளையிலேந்து ரெண்டுநாள் பாட்டிக்கு என்னன்ன சமைக்கணும்னு சொல்லி செய்யவச்சு சாப்பிட்டுட்டுப் போகணும். தீர்மானித்தேன். எந்தப்பொருளும் அதுக்கேத்த இடத்துல இருந்தா ரொம்ப அழகா தெரியுமில்லயா. அதுமாதிரிதான் இந்த கிராமத்து சாப்பாடும். இத நகரத்து ஓட்டல்களில் உக்காந்து சாப்பிட்டா ருசிக்காது.

    சரி சரி சாப்பிடும்போது ரொம்ப யோசிக்காத. இன்னும் ரெண்டு போட்டு சாப்பிடு.பாட்டி விரட்ட மனம் ஒருநிலைக்கு வந்தது.

    ஆமா நீ இங்க என்னவேலையா வந்திருக்க. வெளிய எங்கேயாவது போகணுமா? பாட்டி கேட்கிறாள்.

    உனக்கு நான் சொன்னாப் புரியுமான்னு தெரியல. இருந்தாலும் சொல்றேன். ஆரம்பித்தேன். எங்க கம்பெனியிலேந்து மூணு என்ஜினியர்கள் வந்திருக்கோம். நம்ம மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கம் காற்றாடிகள் சுத்திக்கிட்டிருக்கு இல்லயா. அதோட பாகங்களத் தயாரிக்கறதுதான் எங்க கம்பெனி வேல. அதுல ஏதாவது புதுவித மாற்றம் செய்ய முடியுமானு ஆராய்ச்சி செய்யறதுக்காக எங்கள அனுப்பியிருக்காங்க. நாங்க ஒரு மாசம் தங்கி புது மாதிரி வடிவங்கள உருவாக்கி மத்ததோட ஒப்பிட்டுப் பாக்கணும். மொதல்ல கேக்க நல்லாத்தான் இருந்திச்சு. ஆனா செய்ய ஆரம்பிச்சவொடனே ரொம்ப சங்கடமா இருக்கும்னு தோணுது. ஒவ்வொரு முறையும் மாதிரி வடிவம் செஞ்சு எடுத்துக்கிட்டுவர சென்னைக்குத்தான் போயாகணும். அலைச்சல் அதிகமாகும். இங்க இருக்கற நேரமும் பொழுது போகறதுக்கு சினிமா தியேட்டர் கூட இல்ல. இதத்தான் மூணுபேரும் சேந்து பேசி முடிவெடுத்தோம்.

    நாளைக்கு எங்க கம்பெனிக்கு ஒரு மெயில் அனுப்பிடுவோம். இடத்தைப் பார்வையிட்டோம். நாம செய்ய நினைத்த ஆராய்ச்சிக்கு இது ஏற்ற இடமில்லனு. அப்புறம் அவங்க வேற இடம் தேட ஆரம்பிப்பாங்க. அதுக்குள்ள புது கம்பெனியில வேலைக்குப் போட்டிருக்கேன். அதுலேந்து தகவல் வந்தா அதுல சேந்திடுவேன். அந்தவேலை ஒரு அறைக்குள்ள உக்காந்து கம்ப்யூட்டர் உபயோகிச்சு செய்ய வேண்டிய வேலை. அலைச்சல் இல்லபாரு.

    நான் பேசப்பேச பாட்டிக்குக் கோபம் தலைக்கேறியது. இதத்தான் எங்க ஊர்ல ‘ஆல்’ என்று சொல்லப் ‘பூல்’ என்று மறுத்துச் சொல்றதுனு சொல்லுவாங்க.  இதோட பொருள் நம்பி அரசன் ஒரு வேலையை ஒப்படைச்ச பின்னாடி வேல் முனையில வீழ்ந்தாவது அதனை நிறைவேற்றணும். அதை விட்டுட்டு செய்யமாட்டேன்னு மறுத்துக் காரணம் சொல்றது ‘ஆல்’ என்று சொல்லப் ‘பூல்’ என்று மறுத்துச் சொல்றதுக்குச் சமானமாம்.

    இவ்வளவு படிச்ச பசங்க நீங்க. இப்டி பண்ணலாமா. தப்பில்லயா. கேட்டுக்கொண்டே பாட்டி வேலையைத் தொடர்கிறாள். நான் யோசிக்க ஆரம்பிக்கின்றேன்.

    பாடல் 38

    விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
    வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்,
    இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ‘ஆற்றக்
    கரும்பனை அன்ன துடைத்து’.

    ‘ஆற்றக் கரும்பனை அன்னது உடைத்து’

    வாங்க வாங்க உக்காருங்க. என்ன சாப்பிடறீங்க காபி, டீ.

    யாரை இப்படி மரியாதையாக உபசரிக்கிறாள் அம்மா. உள்ளறையில் கதை எழுதிக்கொண்டிருந்த நான் எழுந்து வெளியில் வந்தேன். ஐம்பது வயது மதிக்கத்தக்க நபரும் அவருடன் கல்லூரி மாணவன் போன்று விளங்கும் பையனும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள்.

    மரியாதைக்கு வணக்கம் சொல்லிவிட்டு மேல் பனியனுடன் அமர்ந்தால் நாகரிகம் அல்ல என நினைத்து சட்டை போட்டுக்கொள்ள உள்ளறைக்குச் சென்றேன்.

    சமையலறையில் அம்மா அக்காவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

    உங்க தோப்புக்கார சித்தப்பா இந்தப் பையனத்தான் படிக்க வைக்கிறாராமா. ஏதோ என்ஜினியரிங் படிக்கிறான் போல. அநாதைப் பையனாம். கூட வந்திருக்கிறவர் அவன் கல்லூரிப் பேராசிரியராம்.

    உங்க சித்தப்பா நம்ம அப்பாவப் பத்தி ரொம்ப பெருமையா சொல்லியிருப்பார்போல. அதனால மரியாதைக்கு இந்தப் பையனும் அவன் பேராசிரியரும் நம்மளப் பாத்து நன்றி சொல்லிட்டுப் போலாம்னு வந்திருக்காங்க. அந்தப் பையனுக்கு உங்க அப்பா போட்டோ ஒண்ணு வேணுமாம். ஏதும் இருந்தாப் பாரேன்.

    தம்பிகிட்ட இருக்கு. நான் எடுத்துக்கிட்டு வரேன். அடுத்த அறையான என் அறைக்குள்

    நுழைந்த அக்காவைத் தடுத்து நிறுத்தினேன். தீர்மானத்துக்கு வந்தவனாய் போட்ட சட்டையைக் கழட்டிவிட்டு மீண்டும் கதை எழுதுவதைத் தொடர்ந்தேன்.

    ஒருவழியாக அவர்கள் இருவரையும் பேசி அனுப்பிய அம்மா ஏண்டா என்ன ஆச்சு உனக்கு மட்டு மரியாத கிடையாதா. நீ பாட்டுக்கு உள்ளுக்குள்ளயே உக்காந்துட்ட. அவங்க என்ன நினைச்சுப்பாங்க…..தொடர்ந்து புலம்பிக்கொண்டே சமையலறை நோக்கிச் சென்றாள்.

    என் மனம் யோசிக்க ஆரம்பித்தது. அப்பா இறந்து எட்டு வருடம் ஆகி விட்டது.  தன்னய அப்பா சொந்தப் பையன் போல வளர்த்து படிக்க வச்சதா சித்தப்பா சொல்லிட்டுத் திரியுவாரு. நல்லா படிச்சு நல்ல வேலையில டில்லியில் இருக்கார். போதாததுக்கு தான் சேத்துவச்சதுல ஒரு பனந்தோப்பு வேற வாங்கிப் போட்டிருக்கார். எதுக்குமே அவர்கிட்ட பண உதவி எதிர்பாக்காமதான் அம்மா எங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சாங்க. ஆனா ஒரு புத்தகக்கடை வைக்கணும்னு நான் பண உதவி கேட்டப்போ நீயே சம்பாதிச்சு வச்சுக்கோனு சொல்லிட்டார். இப்ப என்னடான்னா யாரோ ஒரு பையனுக்கு உதவி செய்யறாராம்.

    ஆற்றக்கரும்பனை அன்னது உடைத்துங்கற பழமொழி சரியாத்தான் இருக்கு. தன்னய வளத்தவனுக்கு பலன் கொடுக்காம நீண்டகாலத்துக்கப்புறம் யாரோ புதியவனுக்கு பலன்குடுக்கற பனை மரம் மாதிரிதான் இந்த சித்தப்பாமாதிரி ஆளுங்க. இவங்களப்பத்தி நினைக்கறதே நேரவிரயம் தான்.

    அம்மாவும் அக்காவும் பேசுவதைப் பொருட்படுத்தாமல் என் கதையில் மூழ்கினேன்.

    Share
  • திருவள்ளுவர் யார்? – 8

    திருவள்ளுவர் யார்? – 8

    புதுக்கோட்டை பத்மநாபன்

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவனடி சேரா தார்

    என்பது இந்த அதிகாரத்தின் கடைசிக் குறட்பா.

    பகவானின் திருவடியை அடைந்தவர்களே பிறவிப் பெருங்கடலை நீந்தி, பிறவியில்லாப் பெருவாழ்வான மோக்ஷத்தை அடைவார்கள் என்பது இக்குறட்பாவின் கருத்து.

    “विष्णोर्यत्परमं पदं” (ரிக்-1-22-6) என்று திருமாலின் உலகையே மோக்ஷலோகம் என்று ரிக்வேதம் முழங்குகிறது. “विज्ञानसारथिर्यस्तु मनः प्रग्रहवान्नरः।सोऽध्वनःपारमाप्नोति तद्विष्णोःपरमं पदम्॥” (எவனொருவன் புத்தியை ஸாரதியாகவும் மனதைக் கடிவாளமாகவும் கொண்டு இந்திரியங்கள் என்ற குதிரைகள் பூட்டப்பட்ட இந்த உடல் என்னும் தேரைச் செலுத்துகிறானோ அவன் இந்த ஸம்ஸாரக் கடற்பயணத்தின் அக்கரையிலிருக்கும் விஷ்ணுவின் அந்தப் பரமபதத்தை அடைகிறான்) என்று கடோபநிஷத்தும் (கட-1-3-9) விஷ்ணுவின் பரமபதமே ஸம்ஸாரக் கடலைக் கடந்தவர்கள் சென்றடையும் இடம் என்று சொல்கிறது.

    “ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः।अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते॥तेषामहं समुद्धर्ता मृत्युसंसार सागरात्।भवामि न चिरात्पार्थ मय्यावेशितचेतसाम्॥” (பார்த்தா! எவர்கள் எல்லாக் கர்மங்களையும் என்னிடம் அர்ப்பணம் செய்து, என்னை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மற்றொன்றை மனதில் நினைக்காத யோகத்தினால் என்னைத் தியானித்து உபாஸனை செய்கிறார்களோ, அவர்களை ஜனன மரணங்களாகிய ஸம்ஸாரக் கடலிலிருந்து உடனே கரை சேர்த்துவிடுவேன். கீதை-12-6,7) என்று கீதையில் பகவானும் சொல்கிறான்.

    (“மாஅயோயே மாஅயோயே மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி மணிதிகழ் உருவின் மாஅயோயே” (பரிபாடல்-3), “நாறிணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்” (பரிபாடல்-15) என்ற சங்க இலக்கிய வரிகள் திருமாலின் மாசில்லாத திருவடியே பிறவியில்லாப் பெருவாழ்வான மோக்ஷத்தை அளிக்கும் என்றும் திருமால் ஒருவனே வீடுபேற்றை அளிக்கமுடியும் என்றும் கம்பீரமாக முழங்குகின்றன. ஆகவே பரம வைதிகரும் சங்கத் தமிழருமான திருவள்ளுவர் இக்குறட்பாவில் இறைவன் என்ற சொல்லால் திருமாலையே குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது.

    இங்கு நாம் எடுத்துக் காட்டிய கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களிலும் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தக் கருத்துகள் நிறைந்து இருப்பதை நாம் காண முடியும். நற்றாள் தொழாஅர், மாணடி சேர்ந்தார், அடி சேர்ந்தார்க்கு, தாள் சேர்ந்தார்க்கு, தாளை வணங்காத் தலை, அடி சேராதார் என்ற சொற்றொடர்களால் பகவானது திருவடியைப் பற்றியே பேசுகிறார் திருவள்ளுவர்.

    பகவானது திருவடியில் சரணாகதி செய்வது என்பது, ஸ்ரீவைஷ்ணவ ஸிந்தாந்தக் கோட்பாடுகளில் முக்கியமான ஒன்று. ஸ்ரீவைஷ்ணவத்தில் பகவானின் மற்ற அங்கங்களைவிட அவனது திருவடிக்கே பெருமை அதிகம். இக்கருத்தையே “நின்னின் சிறந்த நின் தாள் இணையவை” (பரிபாடல்-4) என்று சங்க இலக்கியமும் கூறுகின்றது. மேலும் பாஞ்சராத்ர ஸ்ரீவைஷ்ணவ ஆகமத்தின் தத்துவமே இந்த பத்துக் குறட்பாக்களிலும் காணப்படுகிறது.

    பாஞ்சராத்ரம் மிகத் தொன்மையான ஆகமம் என்பதைக் கல்வெட்டு ஆதாரங்கள், வரலாற்று ஆவணங்கள் இவற்றின் மூலம் அறிய முடிகிறது. பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் பாஞ்சராத்ரத்தின் கூறுகள் காணப்படுவதால் அதன் தொன்மையைத் தெளிவாக அறிய முடிகிறது. பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி என்று ஐந்து நிலைகள் பகவானுக்கு இருப்பதாகப் பாஞ்சராத்ரம் கூறுகிறது. இந்த ஐந்து நிலைகளையும் இந்தப் பத்துக் குறட்பாக்களிலும் காட்டுகிறார் திருவள்ளுவர்.

    “தனக்குவமை இல்லாதான்”, “கோளில் பொறியில்”, “பிறவிப்பெருங்கடல்” என்ற குறட்பாக்கள் மூலம் பகவானின் பரநிலையையும், “அகரமுதல”, “கற்றதனால் ஆயபயன்” என்ற குறட்பாக்களால் வியூக நிலையையும், “வேண்டுதல் வேண்டாமை”, “இருள்சேர் இருவினையும்”, “பொறிவாயில்” என்ற குறட்பாக்களில் விபவ நிலையையும், “அற ஆழி அந்தணன்” என்ற குறட்பா மூலம் அர்ச்சை நிலையையும், “மலர்மிசை ஏகினான்” என்ற குறட்பா மூலம் அந்தர்யாமி நிலையையும் காட்டுகிறார்.இது தவிர முற்றும் துறந்த தவ யோகிகள் சென்றடையும் மோக்ஷலோகம் தாமரைக்கண்ணனான செங்கண்மாலின் உலகமே என்று “தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக்கண்ணான் உலகு” என்ற குறட்பாவின் மூலம் மிகத்  தெளிவாகக் குறிப்பிடுகின்றார் திருவள்ளுவர்.

    இக்குறட்பாவில் பகவானைத் “தாமரைக்கண்ணான்” என்று குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. “தாமரைக்கண்ணன்” என்பது திருமாலுக்குரிய சிறப்பான திருநாமங்களில் ஒன்று. மேலும் இக்குறட்பாவின் மூலம் சிற்றின்பத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் மோக்ஷலோகமான செங்கண்மால் உலகை அடைய முடியாது என்பதையும் நிரதிசய இன்பமான மோக்ஷ இன்பத்தை விழைபவர்கள் உலகியல் இன்பங்களிலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார்.  ஒரு பெண்பித்துப் பிடித்தவனின் கூற்றாக இக்குறளை அமைத்திருக்கிறார்.

    நிரதிசய இன்பமான மோக்ஷம் என்பது திருமாலின் உலகுதான் என்பது திருவள்ளுவருக்குத் தெரிந்திருந்ததால்தான் மோக்ஷத்தைப் பற்றிய பேச்சு வருமிடத்தில் “தாமரைக்கண்ணான் உலகு” என்ற சொற்றொடர் மூலம் செங்கண்மால் உலகைக் காட்டுகிறார். மோக்ஷத்திற்கு சிற்றின்பம் எதிர்தட்டானது என்பதைக் காட்டவே இக்குறட்பாவைக் காமத்துப்பாலில் வைத்தார். உலகியல் ஆசைகளில் மூழ்கியிருப்பவனுக்கு மோக்ஷத்தின் அருமை தெரியாதென்பதும் மோக்ஷத்தை விரும்புவோர் உலகியல் ஆசைகளை அறவே விடவேண்டும் என்பதும்தான் இந்தக் குறட்பா நமக்குத் தரும் செய்தி.

    பிறவித் தளையிலிருந்து விடுதலை என்று சொல்லக்கூடிய மோக்ஷம் என்பதைத் திருமால் தான் கொடுக்க முடியும் என்ற சங்கத் தமிழரின் கோட்பாட்டை அப்படியே வழிமொழிந்திருக்கிறார் திருவள்ளுவர்.

    நிறைவுப் பகுதி 

    திருவள்ளுவர் தனது நூலில் குறிப்பிடும் தெய்வங்கள் எல்லாமே வைதிக தெய்வங்கள்தான். அந்தத் தெய்வங்களுள் அவர் மனதில் நிறைந்து நின்ற தெய்வங்கள் திருமாலும் திருமகளும்தான். சங்கத் தமிழரின் மரபுப்படி தனது நூலில் திருமாலையே பரம்பொருளாக முழங்கியிருக்கும் திருவள்ளுவர், பெரிய பிராட்டியாரான திருமகளின் அனுக்ரஹம் பற்றியும் சில குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது அவர் அப்பழுக்கற்ற சிறந்த ஸ்ரீவைஷ்ணவர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

    தனது நூலில் வேதம், வைதிக கர்மங்கள், வேதம் ஓதும் அந்தணர்கள், இவற்றின் சிறப்பையெல்லாம் தெளிவாக எடுத்துரைக்கும் திருவள்ளுவர் ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடுகளையும் ஆங்காங்கே காட்டுவதால் அவர் ஒரு ஸனாதன வைதிக நெறியைப் பின்பற்றும் ஸ்ரீவைஷ்ணவ அந்தணர் தான் என்பதே அவரது நூலிலிருந்து வெளிப்படுகிறது. ஆகவே அவருக்கு ஒரு உருவம் கொடுக்க வேண்டுமென்றால், நெற்றியிலும் உடலிலும் பன்னிரண்டு திருமண்காப்புகள், தூய மெல்லிய வெண்ணிற ஆடை, கழுத்தில் தாமரை, துளசி மணிமாலைகள், மார்பில் யஜ்ஞோபவீதம் (பூணூல்) இவற்றுடன் கூடிய ஒரு உருவத்தைத்தான் கொடுக்க முடியும். அவ்வுருவம் தான் அவருடைய நூலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்குப் பொருத்தமான உருவமாக இருக்கும். வேறு எந்த உருவத்தைக் கொடுத்தாலும் அது அவரது நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களுக்கு முரணாகத்தான் இருக்கும்.

    ஆகவே திருவள்ளுவர் ஸனாதன வைதிக மதத்தைப் பின்பற்றும் ஒரு ஸ்ரீவைஷ்ணவ அந்தணர்தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஒருவனுடைய குலத்தை அவனது வாய்ச்சொல்லே காட்டிவிடும் (குறள்-959) என்று திருவள்ளுவரே கூறியிருப்பதால் அவரது சொல்லான திருக்குறளே இதற்குச் சான்று. திருக்குறளுக்குப் பண்டைக் காலத்தில் பல உரைகள் இருந்தாலும் பரிமேலழகரின் உரைதான் சிறந்ததாகக் கொள்ளப்பட்டது. திருவள்ளுவர் வைணவராகவும் திருக்குறள் வைணவ நூலாகவும் இருந்ததால் தான் பரம வைணவரான பரிமேலழகர் அதற்கு உரை எழுதினார். வைணவ ஆசார்யர்களில் பலர் தங்களது தத்துவ விரிவுரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.

    காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோயில் அர்ச்சகராக இருந்தவர் பரிமேலழகர். திருவள்ளுவரின் திருவுள்ளத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு திருக்குறளுக்கு உரை எழுதியவர் அவர். ஆனால் அவரது உரை, சிலருக்குப் பிடிக்காது. ஏனெனில் உண்மையைச் சொன்னால் சிலருக்குப் பிடிக்காது என்பது உண்மைதானே? ஆரியச் சார்போடு உரை எழுதிவிட்டார் என்று அவரைச் சாடுவார்கள். “ஆரியன்” என்றால் “உயர்ந்தவன்”, ”அறிவாளி” என்று பொருள். திருவள்ளுவரும் பரிமேலழகரும் ஆரியர்களே.

    “ஆய்வு” என்ற பெயரில் தங்கள் எண்ணத்துக்கு முரண்பாடான குறட்பாக்களையெல்லாம் இடைச்செருகல் என்பார்கள் சிலர். திருக்குறள் மேல் தங்களின் எண்ணம் என்னும் வண்ணத்தைப் பூச அந்நூலில் உள்ள சொற்களுக்கு நேர்மையற்ற முறையில் வலிந்து பொருள்கொண்டு இன்றும் எத்தனையோ பேர் புதிது புதிதாக உரை எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும்படியாக இவர்கள் உரை எழுதிவிட்டதால் திருக்குறள் இவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் நூலாகிவிடாது. திருவள்ளுவரும் இவர்களைச் சேர்ந்தவர் ஆகிவிடமாட்டார்.

    மேலும் மாட்டுக்கறி, ஆட்டுக்கறி முதலிய புலால் வகைகளை உண்ணுதல், விதவிதமான மதுபானங்களை அருந்துதல், சுயஒழுக்கம் இல்லாமல் வைப்பாட்டிகளோடும் விலைமாதரோடும் இன்பம் துய்த்தல், பெண்களின் சுதந்திரத்துக்குக் கற்பு, ஒழுக்கம் இவையெல்லாம் தடையாக உள்ளவை என்று பிரசாரம் செய்தல், அடுத்தவன் மனைவியை ஒருவன் விரும்புவதும், ஒருவனின் மனைவி வேறொருவனை விரும்புவதும் தவறில்லை என்று பிரசாரம் செய்தல், இறை நம்பிக்கை இல்லாமல் ஸனாதன மதத்தில் உள்ள தெய்வங்களை இழிவுபடுத்துதல்- இவையே இன்று “பகுத்தறிவு”வாதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்களின் பண்புநலன்கள்.

    இந்தப் “பகுத்தறிவு”வாதிகள் கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, ஒழுக்கமுடைமை, பிறனில்விழையாமை, கற்பு, இறை நம்பிக்கை முதலிய நல்லறங்களைப் போதிக்கும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் உரிமை கொண்டாடுவதற்கு என்ன யோக்யதை இருக்கிறது? திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றிப் பேசுவதற்குக் கூட இவர்களுக்குத் தகுதி இல்லை. இவர்களின் பண்புகளுக்கும், திருக்குறளின் கொள்கைக்கும் ஏதாவது ஸம்பந்தம் உண்டா? இன்று, பசுவதை செய்து மாட்டுக்கறி தின்பதை ஆதரிப்பவர்களும், குடிகாரர்களும், கூத்தியருடன் கும்மாளம் அடிப்பவர்களும், ஸநாதன மதத்தின் தெய்வங்களை இழித்துரைப்பவர்களும் “திருவள்ளுவர்“ எங்கள் தமிழ் இனத்துக்கே தலைவர்”, ”எங்கள் பாட்டன்”, ”எங்கள் பூட்டன்”, “எங்கள் ஐயன்” என்றெல்லாம் சொல்லித் திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு திரிகிறார்களே, இவர்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட வெட்கம் இல்லையா?

    ஆகவே இந்தப் “பகுத்தறிவு”வாதிகளும், இவர்களது கொள்கைளையும் நடைமுறைகளையும் பின்பற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாடுவது என்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம் என்பதோடு திருவள்ளுவரையும் திருக்குறளையும் அசிங்கப்படுத்தும் விஷயமும் ஆகும். திருவள்ளுவரை வைத்து இவர்கள் செய்வது ஈனத்தனமான அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? திருவள்ளுவரையும் திருக்குறளையும் பெருமைப்படுத்த விரும்புவோர் திருக்குறளில் சொல்லப்பட்ட அறங்களைத் தங்கள் வாழ்வில் முடிந்த அளவு பின்பற்ற முயல வேண்டும். அது ஒன்று தான் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

    -முற்றும்-

    Share
  • பழகத் தெரிய வேணும் – 32

    பழகத் தெரிய வேணும் – 32

    நிர்மலா ராகவன்

    என் செல்லமே!

    “குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கலாமா, மாமி?” ஓர் இளம் தாய் என் அம்மாவைக் கேட்டாள்.

    பதில்: “படிப்பிலே மட்டும் கூடாது”.

    எது எதற்கோ வழிமுறைகள் இருக்கின்றன. ஆனால், சரியான முறையில் ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது என்பது பலருக்கும் தெரிவதில்லை.

    ஒரு குழந்தையைப்போல் இன்னொன்றை நடத்தமுடியாது. இது இன்னொரு குழப்பம்.

    அன்பைக் கொட்டி வளர்க்கப்படும் குழந்தை நல்லவனாக வளர்வான் என்றால், எத்தனை அன்பு என்ற கேள்வி எழுகிறது.

    சில குடும்பங்களில் மூத்த குழந்தை செல்லமாக வளரும். ஒரு தலைமுறைக்கு முன்புதான் வீட்டில் குழந்தை தவழ்ந்திருக்கும். அதனால், இது வரவேற்கத்தக்க அனுபவமாகிவிடுகிறது.

    “என் மூத்த பிள்ளைக்குப் பத்து விரல்களிலும் தங்க மோதிரம் போட்டு அருமையாக வளர்த்தேம்மா. இப்படிக் கெட்டுவிட்டானே!” என்று ஒரு முதியவர் என்னிடம் சொல்லிப் புலம்பினார்.

    “அதனால்தான்!” என்றேன், அசுவாரசியமாக.

    சிறு வயதிலிருந்தே அந்தப் பையன் என்ன செய்தாலும் யாரும் கண்டிக்கவில்லை. அத்துடன், அவன் கேட்டபோதெல்லாம் பணம் கிடைத்தது. அதனால், மனம் போனபடி வளர்ந்து, பதின்ம வயது முடிவதற்குள் எல்லாவித தீய பழக்கங்களும் வந்தடைந்தன.

    ‘அளவுக்கு மிஞ்சினால்’ என்று சொல்லிவைத்திருப்பது அமுதத்திற்கு மட்டுமல்ல.

    ஆனால், குழந்தைகளே அப்படிக் கவனிக்கப்பட்டால்தான் பிறருக்குத் தன்மேல் அன்பு என்று தவறாக நினைப்பார்கள். கண்டிக்கும் உறவினர்கள் வேண்டாதவர்கள் ஆகிவிடுவார்கள்.

    அவர்களுக்குத்தான் அறியாமை என்றால், பெரியவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று?

    கதை

    சிறு வயதில் காரமாக ஏதாவது சாப்பிடுகையில், குடிக்க நீர் வேண்டுமென்று அலறுவேன்.

    ஓரிரு முறை அம்மா கொண்டுவந்து கொடுத்தாள். அதன்பின், “முதலிலேயே எடுத்து வைச்சுக்கறதுக்கென்ன?” என்றுவிட்டாள்.

    எங்கள் குடும்ப வழக்கப்படி, பாதி சாப்பிடும்போது கண்டிப்பாக எழுந்திருக்கக் கூடாது. ஒவ்வொருமுறையும் எனக்கும் முன்னேற்பாடாக குடிநீர் எடுத்து வைத்துக்கொள்ளவும் தோன்றாது.

    இப்படியே பலமுறை ஆனபிறகு, நான் சாப்பிடும்போது இடையில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டேன்.

    அம்மா காட்டியது ஆக்ககரமான கட்டொழுங்கு. மறைமுகமாக, `எல்லாவற்றிற்கும் பிறரை நம்பிக்கொண்டு இருக்காதே!’ என்று போதித்திருக்கிறாள்.

    வேறு சிலர் தாம் வளர்க்கும் குழந்தைகள் எந்த ஒன்றிற்கும் தம்மை எதிர்பார்ப்பது பெருமைக்குரிய விஷயம் என்று நினைக்கிறார்கள், அது எங்கு கொண்டுவிடும் என்று உணராது.

    கதை

    “ஒரு வயசிலிருந்தே பாபு  எங்கிட்டதான் இருக்கான். அவன் அம்மா இங்கே வந்திருந்தபோது, அவகூட போகமாட்டேன்னு என்னைக் கெட்டியாப் பிடிச்சுண்டான்,” என்று பெருமை பேசுவாள் பாட்டி.

    அந்த வயதுக் குழந்தைக்கு அவ்வளவெல்லாம் தெரியுமா என்பது சந்தேகம்தான்.

    பாபுவின் தாய் அகாலமாக இறந்தது பாட்டிக்கு சௌகரியமாகப் போயிற்று. தனக்குத் தோன்றியபடி வளர்த்தாள். அவன் கேட்டதெல்லாம் கிடைத்தது.

    என்ன தவறு செய்தாலும், `குழந்தைதானே!’ என்ற மன்னிப்பு கிடைத்துவிடும். அதுவே அசட்டுத்துணிச்சலுக்கு வழிகோலியது.

    அரை மணிக்கு ஒருமுறை கேட்டு, காப்பி குடித்தான். ஆனால், சுறுசுறுப்பு கிடையாது. அவனுடன் சோம்பலும் வளர்ந்தது. சற்றே பெரியவனாக ஆனதும், அவனால் செய்யக்கூடிய எளிய வேலைகளைக்கூட பாட்டிதான் செய்யவேண்டும்.

    “கெஞ்சறான். பாவமா இருக்கு!” என்பாள் பாட்டி.

    தான் பார்ப்பவர்கள் எல்லாரும் தன்னை அப்படி நடத்தமாட்டார்கள் என்று புரிந்தபோது, பாபுவிற்குத் தன்னிரக்கம் மிகுந்தது.

    ‘ஏனோ என்னை யாருக்குமே பிடிக்கவில்லை,’ என்று அழுவான்.

    ‘செல்லமான வளர்ப்பு’ என்ற பெயரில் தன்னைப் பிறரது ஏளனத்திற்கு ஆளாகும்படிச் செய்த பாட்டியின்மேல் வெறுப்புதான் எழுந்தது.

    தான் எங்கு தவறிழைத்தோம் என்று அந்த பாட்டிக்குப் புரியவில்லை. `எவ்வளவு அருமையா வளர்த்தேன்!’ என்று புலம்பினாள்.

    பாபுவைப்போல் வளர்க்கப்படும் குழந்தைகளால் சிறிய மனப்பளுவைக்கூடத் தாங்கமுடியாமல் போய்விடும். எப்போதும் யாரையாவது சார்ந்து இருந்தால்தான் தைரியமாக உணர்வார்கள். இதனாலேயே நிறைய வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

    எவருக்கும் சில சமயங்களில் பிறரை நாட வேண்டியிருக்கும். அதற்காக, எப்போதும் பிறரை நாடுவது ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.

    கதை

    ஆயிஷா எங்கள் பக்கத்து வீட்டுப்பெண். ஆறு அண்ணன்மார்களுக்குப்பிறகு பிறந்த குழந்தை. தன்னைக் கொஞ்சிய தந்தையிடம் அவளும் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாள்.

    மூத்தவர்கள் உள்பட, குடும்பத்தில் அனைவரும் அவளைத் தாங்கினார்கள். மகாராணிபோலவே நடந்துகொண்டாள். ஒரு அண்ணனை மரியாதையின்றி பேசுவதையும், அவன் பொறுத்துப்போவதையும் பார்த்திருக்கிறேன்.

    பிடிவாதம், சோம்பல் என்று பல வேண்டாத குணங்கள் வந்தபோதும், யாருக்கும் அவளை தரக்குறைவாக நினைக்கத் தோன்றவில்லை.

    ஆண்களிடம் எப்படிக் குழைந்து நடப்பது என்று புரிந்திருந்ததால் அப்பாவி ஒருவனை மயக்குவது ஆயிஷாவுக்குக்  கடினமாக இருக்கவில்லை.

    ‘பாவம்!’ என்று நாங்கள் அவனுக்காகப் பரிதாபப்பட்டோம்!

    ‘நான் உனக்காக எதுவும் செய்யமாட்டேன். எப்போதும் நீதான் விட்டுக்கொடுக்க வேண்டும்,’ என்று தம்பதியரில் ஒருவர் மட்டும் அதிகாரமாக நடந்தால், தாம்பத்தியம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்?

    கதை

    இடம்: பள்ளிக்கூட ஆசிரியர்களின் அறை.

    வம்புக்கான நேரம். (பெண்கள் பொது அறிவு பெறுதல், ஒருவருடன் ஒருவர் பழகக் கற்பது என்றுகூட வைத்துக்கொள்ளலாம்)

    பிரசவமானதும் பத்தியச் சாப்பாடு, உடல் நோவு, ஓய்வே இல்லாமல் சிசுவைக் கவனிக்க வேண்டியிருப்பது என்று நாங்கள் எதிர்மறையாகவே அடுக்கியபோது, மிஸஸ் சிங் மட்டும் மாற்றுக்கருத்து தெரிவித்தாள்:

    “பிள்ளை பெற்றபிறகு எல்லாரும் என்னை மிகுந்த கரிசனத்துடன் நடத்துவார்கள். எனக்குப் பிடித்த விஷயம் அது!” என்று அவள் கூற, உடன் இருந்தவர்கள் எல்லாரும் சிரித்தோம்.

    சிறு வயதிலேயே தாயை இழந்தவள் அவள். தந்தை மறுமணம் செய்துகொண்டு, அவளை ஏதோ காப்பகத்தில் விட்டுவிட்டார். மாதாமாதம் பணம் கட்டுவதோடு அவருடைய பொறுப்பு முடிந்தது என்று எண்ணியிருந்திருப்பார்.

    அவள் வளர்ந்தபோது, அத்தியாவசியத் தேவைகள் கிடைத்தன. ஆனால், அன்புடன் கவனிக்க ஒருவரும் இல்லையே என்ற ஏக்கம் அவளுக்குள் இருந்திருக்கிறது.

    கரிசனமான கணவன்

    அன்பான கணவன் — அவ்வப்போது

    மனைவியின் உடல்நலம் கெட்டிருக்கும்போது அவள்மீது பரிவு காட்டி, `ஐயோ! உனக்கு ஏதாவது ஆகிவிட்டால், என் கதி!’ என்று கணவன் கலங்குவது அவளுக்குப் பெருமையை அளிக்கலாம்.

    ஆனால், பிற சமயங்களில் அதிகாரமாக, இல்லை, அலட்சியமாக நடத்தும் அவன் அப்போது மட்டும் அன்பாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டால், அவள் நிரந்தர நோயாளியாகிவிடும் அபாயமும் உண்டு.

    பணமே பலம்

    ‘குழந்தைக்காகச் செலவிட நேரம் கிடைக்கவில்லை,’ என்ற குற்ற உணர்ச்சியைப் போக்கிக்கொள்ள பணத்தால் ஈடு செய்கிறார்கள் பல பெற்றோர்.

    இதனால் குழந்தை புரிந்துகொள்வது: என்ன தவறு செய்தாலும் பணத்தால் ஈடுகட்டிவிடலாம்.

    தேவைக்கு அதிகமாகப் பணம் கொடுப்பதோ அவனுக்காகச் செலவழிப்பதோ அன்பில்லை. அது நம் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வழி.

    அன்புடன் கண்டிப்பும் சேர்ந்திருந்தால்தான் ஒரு குழந்தை சுயநலம் ஒன்றே குறிக்கோளாக இல்லாது, பிறர் மதிக்க வளரும்.

    ‘என் குழந்தை ஒரு நாள் பெரியவனாக ஆவான். அப்போது, அவனுக்கு இந்தக் குணங்கள் வேண்டியிருக்கும்’ என்று சற்றே யோசித்தால், நல்ல பழக்கங்களை விதைக்கமுடியுமே!

    அப்படி வளர்த்தவர்களை அவன் என்றும் மறக்கமாட்டான். நன்றியுடன் நினைவுகூர்வான்.

    Share