திருச்சி புலவர் இராமமூர்த்தி

மெய்யெலாம்   நீறுபூசி வேணிகள் முடித்துக்கட்டி
கையினில் படைகரந்த புத்தகக் கவளிஏந்தி 
மைபொதி விளக்கேஎன்ன மனத்தினுள் கறுப்புவைத்து
பொய்தவ வேடம்கொண்டு புகுந்தனன் முத்தநாதன்.

பொருள் 

தன் உடம்பெல்லாம் திருநீறு பூசிக்கொண்டு, சடைகளை முடித்துக் தொட்டுக்கொண்டு, கையிலே படையை மறைத்து வைத்துப் புத்தகம் போற்கட்டிய புத்தகப்பையை எடுத்து ஏந்திக்கொண்டு, மையினை உள்ளே பொதிந்து வைத்து வெளியே ஒளியினைச் செய்யும் விளக்கே என்று சொல்லும்படி, மனத்தினுள்ளே வஞ்சனையைப் பொதிந்து வைத்துப் பொய்யினை மறைத்த தவவேடங் கொண்டு அந்நகரினுள்ளே முத்தநாதன் என்ற அவ்வரசன் புகுந்தனன்.

விளக்கம்

நீறு – வேணி – புத்தகம் இவை சிவசாதனங்களாய், அன்புடையாரை ஆட்படுத்தும் இயல்புடைய அடையாளங்கள். நீறும் வேணியும் காண்டிகையுமே திருவடையாளமாக வைத்து அரசாண்ட மூர்த்தி நாயனார் சரிதமுங் காண்க.

மெய்யெலாம் நீறு பூசி – முழுத்தவ வேடம் பூண எண்ணினான்  ஆதலின் முழு நீறு பூசிய முனிவர்போல உடம்பெங்கும் நீறு பூசினான். இதற்கு முன்னர் நீறு பூசியவன்   அல்லன்   ஆதலின் தரிக்கக்தக்க இடமிது தகாத இடம் இது என்று அறியாதவனாய் மெய்யெலாம் பூசினான் என்ற குறிப்புமாம். வேணிகள் முடித்துக் கட்டி – தனது குடுமியினைச் சடைகள் போலத் திரித்து அவற்றைத் தொகுத்துச் சடைமுடியாக்கி. முடித்துக் கட்டுதல் – தலைமேல் முடிபோலக் கூப்பி நிற்கும்படி கட்டி முடிதல். வேணி – சடை . நீறும் வேணியும் முன்னர் இவன் சடையனாயின், அவை சைவ அடையாளமாதலின், நாயனார் அவ்வேடத்தை வழிப்பட்டு ஒழுகியிருப்பாரேயன்றிப் பகைப்பட்டுப் போர் செய்திரார்; எனவே, இவற்றை இவன் புதிதாகத் தாங்கினவனாம். நாடிழந்தவன் பலநாள் காட்டில் மறைந்து சடை வளர்த்தான் என்பாருமுண்டு.

படைகரந்த புத்தகக் கவளிஏந்தி – தான் நினைத்த வஞ்சனைச் செய்கையைச் செய்தற்குக் கருவியாகிய படையை மறைத்து அதனையே ஒருபுத்தகம் போல கவளிகையிற் கட்டி எடுத்து. படையை மறைத்தற்கும்,இதுவும் ஒரு சைவ அடையாளமென வஞ்சித்தற்கும் என இருவகையும் கருதிப் படைகரந்த கவளியாக்கினான் என்பதாம்.

மைபொதி விளக்கே யென்ன மனத்தினுட் கறுப்பு வைத்து – மையாகிய நீல நிறத்தைத் தனக்குள் வைத்தும், அதனைச் சுற்றி விளக்கத்தினைச் செய்து ஒளிரும் விளக்குப்பேல, மனத்தினுள்ளே கறுப்பாகிய வஞ்ச எண்ணம் பொதிந்து வைத்துக் கொண்டு விளக்கஞ் செய்யும் நீறு முதலிய தவவேடத்தைப் புறத்தே விளங்க வைத்தானென்க. எரியும் திரியைச் சுற்றிப் பெரிய நீலக்குப்பாயம் போன்று குவிந்து மேனோக்கியதொரு மை சூழ்ந்துகொண்டிருப்பது காணலாம். அதன் வெளியிற் சூழ்ந்து விளக்கின் சிவந்த சுடர் எரிவதும் காணலாம். அந்த சிவந்த எரிசுடரின் மேற் பகுதியினைச் சுற்றி வெண்சுடர்க் கொழுந்தையும் காணலாம். எனவே ஒவ்வொரு விளக்கின் சுடரும் திரியினைச் சுற்றிய நீலக்குப்பாயம், அதன் மேற் செஞ்சுடர், அதன்மேல் வெண்சுடர் என மூன்று பகுதிகளையுடையது. விளக்குச் சுடர் எரிவதற்கு ஆதரவானது நெய். அது உருகி நெய்யாவியாக மாறும். அது நீல நிறத்துடன் நின்று திரியைச் சுற்றிய சுடரினது உட்பாகமாய், நெருப்புக்கு விறகு உதவுவதுபோல, விளக்குச்சுடர் எரிவதற்குக் காரணமாய் உதவுகின்றது. ஆகவே சுடரின் நிலைப்பகுதியான உட்கறுப்பே அதன் விளக்கத்துக்குக் காரணமாம். இங்கு முத்தநாதன் கொண்ட தவ வேடத்திற்கு அவன் தனது மனத்தினுட் கொண்ட வஞ்சக் கறுப்பே காரணமாயிற்று என இவ்வரிய வுவமத்தின் அழகினை விரித்துக் கண்டுகொள்க.

“நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீலமணி மிடற்றான்“ முதலிய திருவாக்குக்கள் காண்க. விளக்கும் இருளும் என்ற முரண்பட்ட இரண்டு பொருளுக்கு ஏற்ற இந்த விளக்கு என்ற  அரிய உவமானம் ஆசிரியர் சேக்கிழார் பெருமானது தெய்வமணக்கும் செய்யுற்களிற் காணும் அரிய உவமங்களில் ஒன்று. இஃது வேறு எந்தக் கவிகளிடத்தும் காணுதலரிது.

இவ்வாறன்றி மை – என்பதற்கு நிழலாகிய இருள் என்று பொருள்கொண்டு தன்கீழே இருளாகிய நிழலைக் கொண்ட விளக்கு என்றுரைப்பாருமுண்டு; விளக்குள்ள பக்கம் நிழலுண்டு என்ற பழமொழியுங் காட்டுவர். மற்றுஞ் சிலர் இதனை இல்பொருள் உவமையென் றொதுக்கினர். சுடருட் பொதிந்து மறைந்து நிற்கும் மைந்நிறங்கொண்ட புகையினை உட்கொண்டு என்பாருமுண்டு.

பொய்தவ வேடம் – பொய்த்தவம் என்றது எதுகை நோக்கிப் பொய்தவமென நின்றது. பொய்யானது தடவேடங்கொண்டு இவனுடன் வந்ததென்க. பொய்யினைக் கொண்டு உதவிசெய்து கொள்ளத் தவவேட முடன்வந்தது என்றலுமாம். நீறு – வேணி என்னும் சைவத் தெய்வத் தவவேடம் என்றும் மெய்யேயாம்; அவ்வேடம் பொய்யாவதில்லை.

“மெய்த்தவவேடமே மெய்ப்பொருளெனத் தொழுது வென்றார்“ (481) என்று இச்சரிதத்தத்துவத்தினையும் உண்மையினையும் பின்னர்ச் சுட்டுவதும் காண்க. “நற்றவத்தவர் வேடமே கொடு“ (447) என்ற இடத்துங் காண்க.

முத்தநாதன் – இஃது அந்த மாற்றலனாகிய அரசன் பெயர். இவன் கடையனாம் என்று குறிப்பார் இங்கு அவன் செய்தியைக் கூறிய மூன்று பாட்டினும் பொய் எனத் தொடங்கும் அடியின் கடையில் இவன் பெயரை ஆசிரியர் வைத்துக்காட்டிய அழகு குறிக்க. இவ்வாறன்றி முத்தன் – முக்தன்- மூடன் அறிவினின்றும் விடுபட்டவன் – விலகியவன் என்றும், இது அவன் பெயறன்ரென்றும், ஆசிரியர் இவ்வாறு தானே அவனுக்கு ஒரு பெயர்தந்து கூறினாரென்றும் கொள்வர் திரு. ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள்.

ஆசிரியர் இவ்வாறு அவனுக்கு ஒரு புனை பெயர் தந்து கூறப் போதிய காரணம் இல்லை எனவும்,ஆசிரியர் வைத்துக் கூறுவதாயின் இப்பெயராற் புனைந்துரைக்க இயைபில்லை எனவும் தோன்றுகிறது. இது அந்நாளிற் புறச்சமயிகள் தம் வழக்கிற் கொண்ட பெயர்களில் ஒன்றுபோலும்.

இங்குத் திருநீறு எரிக்குந் தன்மையாலே மாயாமலத்தையும்,விரிந்த சடையை முடித்தலால் விரிந்து செல்லும் கன்ம மலத்தையும், ஞானத்தின் உறையுளாகிய புத்தகத்தால் அறியாமையாகிய ஆணவமலத்தையும் போக்குவதாகிய ஞானாசாரிய அடையாளங்களைத் தாங்குவதே இத்தவ வேடமாம் என்ற கருத்தும் இங்கு வைத்துக்காண்பர். இவை யெல்லாம் உரிய தேசிகர்பாற் கேட்டுணரத்தக்கன. தாம் பாசத்தினீங்கி நல்லுணர்வு பெற்றாரே பிறரை வழிப்படுத்தத் தக்கார். அல்லாதார்

“குருடுங் குருடுங் குருட்டாட்டமாடிக்,
குருடுங் குருடுங் குழிவிழுமாறே“,

“தன்னை யறிந்த தத்துவ ஞானிகள்,
முன்னை வினையின் முடிச்சையவிழ்ப்பர்கள்,
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்,
சென்னியில் வைத்த சிவனரு ளாலே“

என்பன திருமூலர் திருமந்திரங்கள். அங்ஙனமாகவும் இங்கு இம்மாற்றலன் கொண்ட பொய்த்தவவேடம் நற்பயன் தந்த தெங்ஙனமோ? எனின், இங்குப் பயன் செய்தது வேடமேயன்றி அவனன்று. அவ்வேடத்தினைத் தாங்கும் குற்றி அல்லது புல்லுருவம் போன்றே அவன் நின்றான். வேடத்தின்பாலே நாயனார் கொண்டொழுகிய அன்பின் உறைப்பானது இவன் செயலால் பின்னரும் உறுதிபெற்றுப் பயன்கொடுத்து நின்றது என்க.

முத்திநாதன் – புத்திநாதன் – என்பனவும் பாடங்கள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *