எட்டுக் கோணல் பண்டிதன் – 7
தி. இரா. மீனா
அத்தியாயம் ஐந்து
உலகமும், உலக அனுபவங்களும் கற்பனையென்று உணர்ந்து அனைத்திலும் சமத்துவமுற்று சொரூபத்தில் கரைந்து போ என்று ஜனகருக்கு அஷ்டவக்கிரர் உபதேசிப்பது இவ்வத்தியாயமாகும்.
1.எதனோடும் பற்றும் உனக்கில்லை; தூயவனாகிய நீ துறக்க விரும்புவதேன்? அனைத்துணர்வுகளையும் கரைத்து நீ அவ்வாறே கரைந்து போ.
2. கடலிலிருந்து எழும் குமிழிகள் போல உலகம் உன்னிலிருந்து உதிப்பதில்லை. ஒன்றாகிய ஆத்மாவை உணர்ந்து நீ அவ்வாறே கரைந்து போ.
3. கயிற்றிலரவு போல வெளிப்படையாகக் கண் முன் தோன்றினாலும் அது ஒரு தனிப்பொருள் இல்லாததால் உன்னிடம் உலகில்லை என்று இவ்வாறே நீ கரைந்து போ.
4. இன்ப ,துன்பங்களிலும் ஆசை நிராசைகளிலும் ,வாழ்விலும் சாவி லும் கூட சமமாகப் பூரணமாக இவ்வாறே நீ கரைந்து போ.
அத்தியாயம் ஆறு
வரையுற்ற ஜடவுலகிற்கு ஆதாரமாக இருப்பவனே நான். ஆதலால் அதைத் தள்ளுவதும், ஏற்றுக் கொள்ளுவதும் ,ஒழிப்பதும் இல்லையென ஜனகன் கூறுவது இந்த அத்தியாயமாகும்.
1. வானம் போல எல்லையற்றவன் நான், உலகம் குடம் போன்ற ஜடம் என்னும் இதுவே ஞானம். ஆதலால் இதைத் தள்ளுவதும், கொள்ளுவதும், ஒழித்தலுமில்லை.
2. மஹா சமுத்திரம் போன்றவன் நான்; உலகமோ அலை போன்றது. இதுவே ஞானம். ஆதலால் இதைத் தள்ளுவதும், கொள்ளுவதும், ஒழிப்பதுமில்லை.
3. கிளிஞ்சல் போன்றவன் நான்; உலகக் கற்பனை வெள்ளி போன்றது. இதுவே ஞானம். ஆதலால் இதைத் தள்ளுவதும், கொள்ளுவதும், ஒழிப்பதுமில்லை.
4.அகிலப் படைப்பிலும் உள்ளவன் நானே; மேலும் அகிலப் படைப்பே என்னிடம் உள்ளது. இதுவே ஞானம். ஆதலால் இதைத் தள்ளுவதும், கொள்ளுவதும் ,ஒழிப்பதுமில்லை.
அத்தியாயம் ஏழு
அகண்ட அனுபவத்தே நிலை பெறின், உலகத் தோற்றத்தால் சாதக பாதகங்கள் எதுவுமில்லையென்றும், அதனிடம் விருப்பமோ வெறுப்போ உண்டாகாது என்று ஜனகன் கூறுவது இவ்வத்தியாயமாகும்.
1. எல்லையில்லாக் கடலாம் என்னிடம் உலகக் கப்பல் மனக்காற்றால் இங்குமிங்கும் அலைகிறது. அதனால் எனக்கொன்றும் வருத்த மில்லை.
2.எல்லையில்லாக் கடலாம் என்னிடம் உலகத்திரை உண்டானாலும், ஒடுங்கினாலும், அதனால் வளர்வும் தேய்வும் எனக்கில்லை.
3. எல்லையில்லாக் கடலாம் என்னிடம் ஜகம் ஒரு கற்பனையே; நான் அமைதியானவன்; வடிவற்றவன் என்னும் ஞானத்தில் நான் நிலை பெற்றேன்.
4. ஆத்மா விஷயங்களில் இல்லை; வரையற்ற, மாசற்ற அங்கே விஷயமில்லை – என்று பற்றற்று, அவாவற்று அமைதியுடைய நான் இதனில் நிலை பெற்றேன்.
5. நானோ ஞானமயமானவன்; உலகமோ இந்திரஜால நிகர். ஆதலால் எவ்வாறு எதனிடம் எனக்கு வேண்டல் வெறுத்தல் உண்டாம்?
அத்தியாயம் எட்டு
ஜனகருக்கு பந்தங்களின் இயல்பைக் கூறி ,அகந்தையில்லாமல் எதையும் ஏற்றுக் கொள்ளாதும், தள்ளாதும் இருக்க வேண்டுமென அஷ்டவக்கிரர் கூறுதல்
1.எப்போது மனம் ஏதோ ஒன்றை விரும்புவதும், வருந்துவதும், தள்ளுவதும், உவப்பதும் சீறுவதும் உண்டோ, அப்போதே பந்தம்.
2. எப்போது சித்தம் எதையும் விரும்பாது வருந்தாது தள்ளாது மகிழாது சீறாதிருக்குமோ, அப்போதே முக்தி.
3. எப்போது மனம் சில விஷயங்களில் பற்றுமோ அப்போதே பந்தம். எப்போது சித்தம் எவ்விஷயத்திலும் தோயாதோ, அப்போதே வீடு.
4. நானற்ற போது விடுதலை, நானுற்ற காலை பந்தம் என்று விளையாடல் போலறிந்து எதையும் ஏற்றுக் கொள்ளாமல், தள்ளாமலிரு.
[தொடரும்]