இலக்கியம்கட்டுரைகள்

அக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 13 (அகவன் மகள்)

ச. கண்மணி கணேசன் (ப.நி.),
முன்னாள் முதல்வர் & தமிழ்த் துறைத்தலைவர்,
ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி, சிவகாசி.

முன்னுரை

அகஇலக்கியச் சிறுபாத்திரங்களின் அகரவரிசைப் பட்டியலில் முதலில் இடம் பெற வேண்டிய பாத்திரம் அகவன்மகள் ஆவாள். தொல்காப்பியம் அகவன்மகள் பற்றிப் பேசவில்லை. தொகைஇலக்கியம் அகவன் மகளை ஒரு பாடலில் நேரடியாகக் காட்சிப்படுத்துகிறது. கட்டுவிச்சி என்னும் அகவன்  மகளிடம்   தோழி  பேசுகிறாள்.

அகவன்மகளின் தோற்றம்

தோழி அகவன்மகளிடம் நேரடியாகப் பேசும் பாடல் மட்டுமின்றி; தலைவியிடம் தலைவனின் மனநிலையை விளக்கக்  கையாளும் உவமையில் அகவன்மகளிர் எனும்  தொகைப் பாத்திரம் இடம்பெறும் பாடலும் ஒன்று உளது. இதன் மூலம்  அகவன்மகளின் தோற்றம்  தெளிவாகிறது.

அகுதை தந்தையிடம் அகவன்மகளிர் பரிசிலாகப் பெண்யானை பெற்றனர்.

“வெண்கடைச் சிறுகோல் அகவன்மகளிர்” (குறுந்தொகை- 298)

என அவர்களது தோற்றம் வருணிக்கப்  பெற்றுள்ளது. வெள்ளிய முனையினை உடைய சிறிய கோலைக் கையிலேந்தியவராய் அவர்கள் காட்சி அளிக்கின்றனர். அவளைக் கட்டுவிச்சி என்று விதந்தோதும் பொ. வே. சோமசுந்தரனாரின் உரையும் இதனால் பொருத்தமாகிறது. இன்றைய சமுதாயத்திலும் குறி சொல்பவர் கையில் கோலுடன் இருப்பதைக் காண்கிறோம்.

தோழி நேரிடையாகப் பேசும் அகவன்மகள் முதியவளாகக் காட்டப் படுகிறாள். அவளது நரைத்த கூந்தல் சங்குமணியைக் கோத்தது போல் வெண்மையாக நீண்டு இருந்தமை;

“மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன்மகளே” (குறுந்.- 23)

என்ற பாடலடிகளால் தெரிகிறது. இவ்வொப்புமைக்குச் சங்கின் வெண்மை காரணமாக அமைகிறது. அத்துடன் அவளது கூந்தல் சுருண்டு இருந்த தன்மையும் நம் மனக்கண்களுக்குப் புலனாகிறது.

தோழியின் சொல்வன்மையைக் காட்டுவதற்குரிய கருவி

தன் மகளின் உடல்மெலிவிற்கும் சோர்விற்கும் காரணம் தேடும் அன்னை கட்டுவிச்சியை அழைத்துக் குறிகேட்கிறாள். கட்டுவிச்சியோ தன் மரபு மாறாமல்; பிறந்த மலை, வழிபடும் தெய்வத்தின் மலை என ஒவ்வொரு மலையையும் வாழ்த்தித் தொடர்கிறாள். தலைவியின் காதல் ஒழுக்கம் பற்றிச் செவிலியிடம் அறத்தொடு நிற்க எண்ணிய தோழி சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்கிறாள்.

“அகவன்மகளே அகவன்மகளே…
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன்மகளே  பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே” (மேற்.)

என்று அகவன்மகளிடம் பேசுவதன் மூலம் தலைவியின் காதலைக் குறிப்பாகப் புலப்படுத்துகிறாள். கட்டுவிச்சி பாடிய பாட்டு தலைவனின் மலை பற்றிய பாட்டு. அதை மீண்டும் மீண்டும் பாடச் சொல்லி வற்புறுத்துவது செவிலியின் மனதைத் தெளிவிப்பதற்காகவே ஆகும். தலைவி காதல்நோயால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறாள் என்ற உண்மையைச் சொல்லாமலே புரியவைக்கும் முயற்சிக்கு அகவன்மகள் பாத்திரம் ஒரு கருவியாக எடுத்தாளப்பட்டுள்ளது. அகவன்மகள் பதிலளிப்பதாகப் பாடல் இல்லை எனினும்; அவள் பாடியமையே  தோழியின் கூற்றுக்கு ஆதாரம் ஆகிறது. சொல்வன்மையையும் காட்டுகிறது.

அகவன்மகளை மீண்டும் மீண்டும் அழைப்பது நாட்டார் வழக்காற்றின் தலையாய தன்மை ஆகும். மறித்து வரும் தொடர்களைத் தமிழக நாட்டார் பாடல்கள் பலவற்றிலும் காணலாம்

கட்டுவிச்சியிடம் குறி கேட்கும் நம்பிக்கை ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது என்பதை இப்பாடல் மூலம் அறிகிறோம்.

முடிவுரை

வெள்ளிய முனையினை உடைய சிறிய கோலைக் கையிலேந்திய அகவன்மகளிடம் குறி கேட்கும் நம்பிக்கை ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது. தோழியின் சொல்வன்மையைக் காட்டுவதற்குரிய கருவியாக அகவன்மகள் பாத்திரம் எடுத்தாளப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க