பழகத் தெரிய வேணும் – 33
நிர்மலா ராகவன்
முடியும் என்ற நம்பிக்கை வேண்டாமா?
ஒவ்வொரு பள்ளியிலும் என்னிடம் ஏதாவது கோரிக்கை விடுக்க தமிழ்ப்பெண்களை அனுப்பிவிட்டு, நான் என்ன பதிலளிக்கப்போகிறேன் என்று சீன மாணவிகள் ஆவலுடன் கவனிப்பார்கள்.
அந்த வருடமும், பள்ளி இறுதியாண்டிற்கு நான் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தபோது, இருவர் என் மேசைக்கு அருகில் வந்தார்கள்.
“டீச்சர்! இறுதிப் பரீட்சைக்கு எதுவரை படிக்கவேண்டும்?” என்று தெரியாதவள்போல் பத்மா கேட்டாள். அவளுக்குத் துணையாக இன்னொருத்தி.
‘ஏற்கெனவே தெரிவித்திருந்தேனே! இது என்ன கேள்வி!’ என்ற தொனியில், அலட்சியமாகக் கூறினேன்: “இரு வருடப் பாடங்களையும்தான்!”
அவள் உடலைச் சிலிர்த்துக்கொண்டு, “ரொம்ப கஷ்டம், டீச்சர்,” என்றாள்.
‘ஓகோ! பேரம் பேச உன்னை என்னிடம் அனுப்பியிருக்கிறார்களா?’
“You want it easy, go to standard one! (உனக்கு எளிதாக வேண்டுமானால், முதல் வகுப்பிற்குப் போ!”) என்றேன், சூடாக.
அவள் அதிர, “நான் மொதல்லேயே சொல்லலே?” என்று மற்றவள் முணுமுணுத்தபடி போனாள்.
அரசாங்க முழுப்பரீட்சைக்கு மூன்றே மாதங்கள்தான் இருந்தன. அதற்கு முதலிலேயே தயார்ப்படுத்த எண்ணினேன். அது அவர்களுக்குப் புரியவில்லை.
‘பெரியதாக ஒன்றை ஆரம்பித்து, எப்படி முடிக்கப்போகிறோம்!’ என்ற மலைப்பு எவருக்கும் எழுவதுதான்.
பிரச்னைகளிலிருந்து ஓடி ஒளிந்தாற்போல் அவை மறைந்துவிடுமா?
‘கடினம்!’ என்று பயந்து விலகுபவர்கள் சாதிக்க முடியாது. எல்லாவித தடங்கல்களையும் எதிர்ப்புகளையும் சமாளிப்பவர்கள்தாம் வெற்றி பெறுகிறார்கள்.
கதை
எனக்கு அப்போது பதின்ம வயது. நிறைய எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு, பத்திரிகைகளில் எந்த சிறு போட்டி அறிவித்திருந்தாலும், “நானும் பதில் எழுதட்டுமா?” என்று ஓயாது கேட்பேன்.
“இவள் ஒருத்தி, சரியான போர்!” என்று என் ஆசைக்கு தடை விதிக்கப்பட்டது. (நான் பாட்டி வீட்டில் சில காலம் தங்கியிருந்தபோது, சித்தி சொன்னது).
உருப்படியான எதுவுமே எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. எதையுமே பல முறை செய்துபார்த்தால்தான் வெற்றி கிடைக்கிறது.
முயற்சி செய்யாவிட்டால் வெற்றி எப்படிக் கிடைக்கும்?
என்னிடம் ஒரு நல்ல குணம்: யார் சொல்வதையும் கேட்க மாட்டேன். (சிரிக்காதீர்கள்). எனக்குச் சரியென்று பட்டதை செய்தே தீருவேன். `என்னால் முடியும்!’ என்ற நம்பிக்கை (அல்லது அசட்டுத் தைரியம்) எனக்கு இருந்தது. பிறரது ஆமோதிப்பு எதற்கு?
ஒரு காரியம் நமக்குப் பிடித்ததாக இருந்தால், அரைகுறையாக விட்டுவிடத் தோன்றாது. அப்போது கண்டிப்பாகத் தவறுகளும் நிகழும்.
‘எதற்கு இந்த வீண்வேலை! என்ற கசப்போ, எடுத்த காரியத்தில் அசிரத்தையோ ஏற்படாமல் இருந்தால் வெற்றி நிச்சயம்.
சில வருடங்களிலேயே, தமிழ்நாட்டில் பிரபலமான ஒரு பத்திரிகையில் என் முதல் கதை வெளியாகியது.
“உருப்படியா ஏதாவது செய்யேன்! சரியான வேண்டாத வேலை! இதுவா நாளைக்கு உனக்கு சோறு போடப்போகிறது?” என்று பலமுறை கெஞ்சியிருந்த அம்மா அகமகிழ்ந்துபோனாள்.
“எனக்கு அப்போதே தெரியும். உனக்கிருந்த ஆர்வத்துக்கு..!” என்ற பாராட்டு கிடைத்தது பலரிடமிருந்து.
பணமா பிரதானம்?
பணம்தான் பிரதானம் என்று ஒவ்வொரு காரியத்தையும் செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு, `ஏன் நாம் மகிழ்ச்சியாகவே இல்லை?” என்ற வருத்தம் வருகிறது.
விடுமுறை நாட்களிலாவது தமக்குப் பிடித்த காரியங்களை தனியாகவோ, குடும்பத்துடனோ, அல்லது நண்பர்களுடன் சேர்ந்துகொண்டோ, செய்யலாமே! கலை, விளையாட்டு, வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு ஊர் சுற்றுவது என்று எத்தனை இருக்கின்றன!
ஈடுபாட்டுடன் பொழுதைக் கழித்தால் இன்னொரு சலிப்பான வார நாட்களை எதிர்கொள்ளும் உற்சாகம் பெருகும்.
ஆனால், ஒவ்வொரு விடுமுறை நாளையும் ஒரேமாதிரி செலவிட்டால், அதுவும் விரைவில் அலுப்பு தட்டிவிடும்.
அலுப்பு சலிப்பெல்லாம் செய்யும் காரியங்களில் மட்டுமல்ல. உறவுகளிலும் இதே பிரச்னைதான்.
உறவுகளில் சலிப்பு
“எங்களுடையது காதல் திருமணம்தான். இரண்டு வருடங்கள் பெருமகிழ்ச்சியாக இருந்தது. அதற்குப்பின் — உவ்வே!” என்று என்னிடம் தெரிவித்தாள் ஒரு ஆங்கிலப் பெண்.
அவளுடைய தோழிகளிடம் கணவர் மரியாதையாகப் பழகினார். நல்லவர் என்றுதான் எனக்குப் பட்டது.
இருந்தாலும், நெருங்கியே இருந்தால் சலிப்புதான் ஏற்படும்.
இப்போது ஐந்து வருடங்கள் கணவருடன் ஒன்றாகவே கழித்த சாதனா சொல்வதைக் கேளுங்கள்:
“நாங்களிருவரும் சேர்ந்து இருந்தபோது, உற்சாகம் வடிந்ததுபோல் இருந்தது,” என்று ஆரம்பித்தவள், “ஆனால் சண்டை எதுவும் கிடையாது,” என்று சேர்த்துக்கொண்டாள்.
காதலித்து மணந்தவர்கள். அவளை நன்றாகவே புரிந்துகொண்டிருந்த கணவர் விட்டுக்கொடுத்துவிடுவார். அதனால் சண்டைக்கே இடமில்லை.
“இப்போது வேலை நிமித்தம் வெவ்வேறு ஊர்களில் இருக்கிறோம். மாதம் ஒருமுறைதான் சந்தித்துக்கொள்ள முடிகிறது. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று மேலும் பகிர்ந்துகொண்டாள் சாதனா.
(‘வாழ்க்கை எப்படி இருக்கிறது?’ என்று நான் அவளைக் கேட்கவேயில்லை).
கதை
`நான் காதலித்துத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்வேன்!’ என்று உறுதியாக இருந்தான் தம்பிராஜா. அப்படியே செய்தும் காட்டினான்.
ஓரிரு ஆண்டுகள் இனிமையாகக் கடந்தன. அதற்குப்பின், அலுவலகம், மனைவி, குழந்தைகள் என்று இயந்திர கதியில் வாழ்க்கையைக் கடக்க, அலுப்புத் தட்டியது.
‘மனதுக்கு உற்சாகம் அளிக்கும்’ என்று நண்பர்கள் ஆசைகாட்ட, சூதாட்டத்தில் இறங்கினான்.
எந்த மனைவி பொறுப்பாள்?
அவள் சண்டை பிடிக்க, இவன் இன்னும் விலகிப்போனான்.
‘எனக்கும் என் கணவருக்கும் சண்டை, பூசலே வந்தது கிடையாது,’ என்று ஒரு பெண் சொன்னால், அதை நம்புவதற்கில்லை. அல்லது, அவர்கள் உறவு உப்பு சப்பின்றி இருக்கும்.
நிச்சயிக்கப்பட்ட கல்யாணமோ, காதல் மணமோ, அதன் வாழ்க்கை ஈராண்டுகள்தான்.
அதன் பின்னரும் அந்த உறவு குலையாமலிருக்க முயற்சிகள் செய்தால்தான் முடியும். மனைவி அலுத்துவிட்டாளென்று இன்னொரு பெண்ணைத் தேடிப்போகிறவனுக்கு அந்த இன்னொருத்தியும் விரைவில் அலுத்துவிட மாட்டாளா?
எல்லா உறவுகளிலும் இம்மாதிரி சண்டை சச்சரவு உண்டு. காரணங்கள்தான் மாறுபடும்.
“விரிந்த உறவை ஒட்டுவதைப்பற்றி உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்கிறீர்களா?
நானும் என் கணவரும் போடாத சண்டையா!