கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 12

0

-மேகலா இராமமூர்த்தி

தந்தைக்கு ஆற்றவேண்டிய நீர்க்கடன்களை ஆற்றிமுடித்த இராமன், பரதனின் மரவுரிக் கோலங்கண்டு மனம்பதைத்து, ”இவ் விரதக் கோலம் நீ புனைந்ததேன் பரத!” என்று வேதனையோடு வினவ,

நோவது ஆக இவ் உலகை நோய் செய்த
பாவகாரியின் பிறந்த பாவியேன்
சாவது ஒர்கிலேன் தவம் செய்வேன் அலேன்
யாவன் ஆகி இப் பழிநின்று ஏறுவேன்.
(கம்ப: திருவடிசூட்டு படலம் – 2562)

”இந்த உலகத்தை (இங்கே கோசலத்தைக் குறிக்கும்) துன்புறுத்திய பாவச்செயலைச் செய்தவளிடத்தில் பிறந்த பாவியேனாகிய நான், சாகத் துணிந்தேனில்லை; தவம் செய்வதற்குத் தகுதியுடையேனும் அல்லன். பின்பு எப்படித்தான் எனக்கு ஏற்பட்டுள்ள பழியிலிருந்து நான் விடுபடுவது?” என்று கண்ணீர் உகுத்த பரதன், இராமனை முடிசூட்டிக் கொள்ளுமாறு வற்புறுத்துகின்றான். அவனைத் தொடர்ந்து வசிட்டரும் பரதனின் கருத்தை வழிமொழிய, இராமன் அதனை மறுத்துத் தாய் தந்தையர் இட்ட கட்டளையை நிறைவேற்றத் தவறுவது அறமன்று! ஆதலால் அரசப்பதவியை என்னால் ஏற்றுக்கொள்ள வியலாது என்று திட்டவட்டமாக மறுத்துவிடுகின்றான்.

அப்போது தேவர்கள் வானில் தோன்றி, பரதன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். கோசலத்தின் ஆட்சிப்பொறுப்பை யார் ஏற்பது இராமனா? பரதனா? என்ற விவாதம் வளர்ந்துகொண்டே போவதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இவ்விடத்தில் தேவர்களைப் பரதனுக்குச் சார்பாகக் கருத்துக்கூற வைக்கின்றார் கம்பர். இக்காட்சி வான்மீகத்தில் இல்லை.

தேவர்களின் இக்கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கது என்று இராமன் பரதனிடம் கூற, அதன்பின்னரும் பரதனால் மறுத்துரைக்க இயலவில்லை. அவன் இராமனிடம்,

“ஐய! நீ பதினான்கு ஆண்டுகளில் திரும்பிவந்து அயோத்தியின் ஆட்சியை ஏற்றுக்கொள்ளாவிடில் நான் எரியில் (நெருப்பு) விழுந்து உயிரை விடுவேன்; இது என் ஆணை!” என்று ஆட்சிப்பொறுப்பை ஒரு நிபந்தனையோடு ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கின்றான்.

ஆம்எனில் ஏழ்இரண்டு ஆண்டில் ஐய நீ
நாமநீர் நெடுநகர் நண்ணி நானிலம்
கோமுறை புரிகிலை என்னின் கூர்எரி
சாம்இது சரதம்நின் ஆணை சாற்றினேன்.
(கம்ப: திருவடிசூட்டு படலம் – 2596)

இராமனும் பரதனின் நிபந்தனையை ஏற்றுக்கொள்கின்றான். அதைத் தொடர்ந்து இராமனின் திருவடி நிலைகளை (காலணிகள்) கேட்டுப் பெற்றுக்கொண்டு அவற்றைத் தலையில் சுமந்தபடி இராமனிடம் விடைபெற்றுக் கொண்டான் பரதன்; அவனோடு வந்தவர்களும் அங்கிருந்து அகன்றனர்.

சித்திரகூடத்திலிருந்து புறப்பட்ட பரதன் நேரே அயோத்திக்குச் செல்லவில்லை. அதற்கு அணித்தேயிருந்த நந்தியம்பதி எனும் கிராமத்தில் தங்கி இராமனின் காலணிகளையே, அவன் சார்பாக, அரியணையில் வைத்து ஆட்சிசெய்து வந்தான்.

“அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும்?” என்ற சொலவடைக்கேற்ப அண்ணனின் இடத்தைக் கைப்பற்றத் துடிக்கும் சராசரித் தம்பியாக இல்லாமல் உயர்ந்த விழுமியங்களையும், சிறந்த மானுடப் பண்புகளையும் கொண்ட உன்னத உடன்பிறப்பாகப் பரதன் திகழ்கின்றான்.

இனி, காப்பியத்தின் இறுதியில் வருகின்ற ’மீட்சிப் படலத்தில்’தான் நாம் பண்பில்உயர் பரதனை மீண்டும் சந்திக்கமுடியும்!  

இராமனும் இலக்குவனும் சீதையும் தெற்குநோக்கித் தம் பயணத்தைத் தொடங்கினர். அத்திரி முனிவரின் ஆசிரமத்தை அடைந்து அவரையும் அவருடைய மனைவி அனசூயையையும் (அனசூயை = அசூயை அற்றவள் என்று பொருள்) தரிசித்தனர். அனசூயை சீதைக்கு நல்லாடைகள், அணிகள், வாசனைப் பொருள்கள் முதலியவற்றை அன்போடு அளித்தாள்.

அங்கிருந்து தண்டக வனம் எனும் பகுதிக்கு வந்துசேர்கின்றனர் மூவரும். அவ்விடத்தில் அவர்களை முதலில் எதிர்கொண்டவன் விராதன் எனும் அரக்கன். அவன் திடீரென்று சீதையைத் தூக்கிக்கொண்டு செல்லவும் எதிர்பாராத இந்த நிகழ்வால் அதிர்ச்சியடைந்த இராமன், விராதன்மீது அம்புகளைச் செலுத்த, அவன் சீதையைக் கீழே இறக்கிவிட்டு இராமனோடு போர் புரிகின்றான். இறுதியில் அவ் அரக்கனை வீழ்த்தி மண்ணில் புதைக்கின்றனர் இராம இலக்குவர். புதைந்த அவன் கந்தருவ வடிவில் உயிர்த்தெழுந்து தான் அரக்கனாகச் சாபம் பெற்ற வரலாற்றை விளக்கி, இராமனால் மீண்டும் பழைய வடிவம் கிடைக்கப் பெற்றதற்கு நன்றிகூறிச் செல்கின்றான்.

அத் தண்டக வனத்திலேயே பத்தாண்டுக் காலத்தைக் கழிக்கின்றனர் இராம, இலக்குவரும் சீதையும். பின்பு அகத்திய முனிவரைக் காணும்பொருட்டு அங்கிருந்து புறப்படுகின்றனர். தம்மைக் காண இராம இலக்குவர் சீதையோடு வருவதை அறிந்தார் ’என்றுமுள தென்றமிழை இயம்பி இசைகொண்ட’ அகத்திய முனிவர்; அவர்களைத் தாமே எதிர்கொண்டு வரவேற்றார்.

இங்கே அகத்தியரின் செயற்கரிய செயல்களைப் பட்டியலிடுகின்றார் கம்பர். அதில் ஒரு பாடலில் விண், குரங்கு, புன்னை, நற்றூசு (நல்லாடை), மலைப்பாம்பு, யானை எனும் பல்பொருள் கொண்ட ’நாகம்’ என்ற சொல்லைக் கம்பர் கையாண்டிருக்கும் விதம் நம்மைச் சொக்கவைக்கின்றது.

யோகமுறு பேர்உயிர்கள் தாம் உலைவுறாமல்
ஏகுநெறி யாது என மிதித்து அடியின் ஏறி
மேகநெடு மாலை தவழ் விந்தம்எனும் விண்தோய்
நாகம்அது நாகம்உற நாகம்என நின்றான். (கம்ப: அகத்தியப் படலம் – 2760)
அகத்திய முனிவர் தென்னாடு வந்தபோது விந்திய மலையானது இமயமலைக்குப் போட்டியாக வளர்ந்துகொண்டிருந்ததாம். அதனைக் கண்ட யோகியர் அகத்தியரிடம், இவ்வாறு வளர்ந்துகொண்டே செல்லும் இந்த விந்திய மலையை நாங்கள் கடந்துசெல்வதற்கு உதவ வேண்டும் என்று கேட்க, அகத்தியர் வானளாவி நின்ற விந்திய மலையின் மீதேறி, கீழேயுள்ள பாதாள உலகமாகிய நாக லோகத்தை அம்மலை அடையுமாறு அதனைத் தம் காலால் அழுத்தி, அதன்மேல் யானைபோல் கம்பீரமாக நின்றாராம்!

இதனையே நாகமது (மலையானது), நாகமுற (நாக லோகத்தை அடையுமாறு), நாகமென (யானை போன்று) நின்றான் (அகத்தியன்) என்கிறார் கம்பர்.

கவிஞர்களுக்குக் கற்பனைவளத்தோடு மொழியாளுமையும் இணைந்திருக்கும்போது அவர்தம் பாடல்களுக்குக் கூடுதல் நயத்தையும் சுவையையும் அவை அளித்துவிடுகின்றன!  

அகத்திய முனிவரின் ஆசியையும், கூடவே சில படைக்கலங்களையும் அன்பளிப்பாய்ப் பெற்ற இராமன், தாங்கள் தங்குவதற்கு ஏற்ற இடத்தை அவரிடம் கேட்டபோது, இயற்கையெழில் கொஞ்சும் ’பஞ்சவடி’ எனும் இடத்தைக் குறிப்பிட்ட முனிவர், அதன் இயல்பை வருணிக்கின்றார்.

”இளம் வாழைக் கனிகள் தொங்கும் வாழை மரங்களும், ஒளிபொருந்திய நுனியையுடைய செந்நெல் வயல்களும், தேனொழுகு பூக்களும் ஆங்கே உள. தெய்வத்தன்மை பொருந்திய பொன்னி எனும் ஆற்றையொத்த கோதாவரி எனும் ஆறு ஆண்டுளது; அதுமட்டுமா? பொன்னொத்த சீதையோடு விளையாட பெருநாரைகளும் அன்னங்களும் உண்டு! ஆதலால் பஞ்சவடியை அடைவாய் மஞ்ச(மைந்தன்)!” என்று அகத்திய முனிவர் இராமனை ஆற்றுப்படுத்துகின்றார்.

கன்னி இள வாழை கனி ஈவ கதிர் வாலின்
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வப்
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள போதா
அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட
. (கம்ப: அகத்தியப் படலம் – 2779)

[பஞ்சவடி என்பது ஐந்து ஆலமரங்கள் கூட்டமாய் வளர்ந்துள்ள பகுதியைக் குறிக்கும். இஃது அகண்ட கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.]

முனிவரை வணங்கி விடைபெற்ற மூவரும் தம் பயணத்தைத் தொடர்ந்தனர் பஞ்சவடியை நோக்கி!

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.