புதுக்கோட்டை பத்மநாபன்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்

என்பது இந்த அதிகாரத்தின் கடைசிக் குறட்பா.

பகவானின் திருவடியை அடைந்தவர்களே பிறவிப் பெருங்கடலை நீந்தி, பிறவியில்லாப் பெருவாழ்வான மோக்ஷத்தை அடைவார்கள் என்பது இக்குறட்பாவின் கருத்து.

“विष्णोर्यत्परमं पदं” (ரிக்-1-22-6) என்று திருமாலின் உலகையே மோக்ஷலோகம் என்று ரிக்வேதம் முழங்குகிறது. “विज्ञानसारथिर्यस्तु मनः प्रग्रहवान्नरः।सोऽध्वनःपारमाप्नोति तद्विष्णोःपरमं पदम्॥” (எவனொருவன் புத்தியை ஸாரதியாகவும் மனதைக் கடிவாளமாகவும் கொண்டு இந்திரியங்கள் என்ற குதிரைகள் பூட்டப்பட்ட இந்த உடல் என்னும் தேரைச் செலுத்துகிறானோ அவன் இந்த ஸம்ஸாரக் கடற்பயணத்தின் அக்கரையிலிருக்கும் விஷ்ணுவின் அந்தப் பரமபதத்தை அடைகிறான்) என்று கடோபநிஷத்தும் (கட-1-3-9) விஷ்ணுவின் பரமபதமே ஸம்ஸாரக் கடலைக் கடந்தவர்கள் சென்றடையும் இடம் என்று சொல்கிறது.

“ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः।अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते॥तेषामहं समुद्धर्ता मृत्युसंसार सागरात्।भवामि न चिरात्पार्थ मय्यावेशितचेतसाम्॥” (பார்த்தா! எவர்கள் எல்லாக் கர்மங்களையும் என்னிடம் அர்ப்பணம் செய்து, என்னை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மற்றொன்றை மனதில் நினைக்காத யோகத்தினால் என்னைத் தியானித்து உபாஸனை செய்கிறார்களோ, அவர்களை ஜனன மரணங்களாகிய ஸம்ஸாரக் கடலிலிருந்து உடனே கரை சேர்த்துவிடுவேன். கீதை-12-6,7) என்று கீதையில் பகவானும் சொல்கிறான்.

(“மாஅயோயே மாஅயோயே மறுபிறப்பறுக்கும் மாசில் சேவடி மணிதிகழ் உருவின் மாஅயோயே” (பரிபாடல்-3), “நாறிணர்த்துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்” (பரிபாடல்-15) என்ற சங்க இலக்கிய வரிகள் திருமாலின் மாசில்லாத திருவடியே பிறவியில்லாப் பெருவாழ்வான மோக்ஷத்தை அளிக்கும் என்றும் திருமால் ஒருவனே வீடுபேற்றை அளிக்கமுடியும் என்றும் கம்பீரமாக முழங்குகின்றன. ஆகவே பரம வைதிகரும் சங்கத் தமிழருமான திருவள்ளுவர் இக்குறட்பாவில் இறைவன் என்ற சொல்லால் திருமாலையே குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகிறது.

இங்கு நாம் எடுத்துக் காட்டிய கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களிலும் ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தக் கருத்துகள் நிறைந்து இருப்பதை நாம் காண முடியும். நற்றாள் தொழாஅர், மாணடி சேர்ந்தார், அடி சேர்ந்தார்க்கு, தாள் சேர்ந்தார்க்கு, தாளை வணங்காத் தலை, அடி சேராதார் என்ற சொற்றொடர்களால் பகவானது திருவடியைப் பற்றியே பேசுகிறார் திருவள்ளுவர்.

பகவானது திருவடியில் சரணாகதி செய்வது என்பது, ஸ்ரீவைஷ்ணவ ஸிந்தாந்தக் கோட்பாடுகளில் முக்கியமான ஒன்று. ஸ்ரீவைஷ்ணவத்தில் பகவானின் மற்ற அங்கங்களைவிட அவனது திருவடிக்கே பெருமை அதிகம். இக்கருத்தையே “நின்னின் சிறந்த நின் தாள் இணையவை” (பரிபாடல்-4) என்று சங்க இலக்கியமும் கூறுகின்றது. மேலும் பாஞ்சராத்ர ஸ்ரீவைஷ்ணவ ஆகமத்தின் தத்துவமே இந்த பத்துக் குறட்பாக்களிலும் காணப்படுகிறது.

பாஞ்சராத்ரம் மிகத் தொன்மையான ஆகமம் என்பதைக் கல்வெட்டு ஆதாரங்கள், வரலாற்று ஆவணங்கள் இவற்றின் மூலம் அறிய முடிகிறது. பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் பாஞ்சராத்ரத்தின் கூறுகள் காணப்படுவதால் அதன் தொன்மையைத் தெளிவாக அறிய முடிகிறது. பரம், வ்யூஹம், விபவம், அர்ச்சை, அந்தர்யாமி என்று ஐந்து நிலைகள் பகவானுக்கு இருப்பதாகப் பாஞ்சராத்ரம் கூறுகிறது. இந்த ஐந்து நிலைகளையும் இந்தப் பத்துக் குறட்பாக்களிலும் காட்டுகிறார் திருவள்ளுவர்.

“தனக்குவமை இல்லாதான்”, “கோளில் பொறியில்”, “பிறவிப்பெருங்கடல்” என்ற குறட்பாக்கள் மூலம் பகவானின் பரநிலையையும், “அகரமுதல”, “கற்றதனால் ஆயபயன்” என்ற குறட்பாக்களால் வியூக நிலையையும், “வேண்டுதல் வேண்டாமை”, “இருள்சேர் இருவினையும்”, “பொறிவாயில்” என்ற குறட்பாக்களில் விபவ நிலையையும், “அற ஆழி அந்தணன்” என்ற குறட்பா மூலம் அர்ச்சை நிலையையும், “மலர்மிசை ஏகினான்” என்ற குறட்பா மூலம் அந்தர்யாமி நிலையையும் காட்டுகிறார்.இது தவிர முற்றும் துறந்த தவ யோகிகள் சென்றடையும் மோக்ஷலோகம் தாமரைக்கண்ணனான செங்கண்மாலின் உலகமே என்று “தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக்கண்ணான் உலகு” என்ற குறட்பாவின் மூலம் மிகத்  தெளிவாகக் குறிப்பிடுகின்றார் திருவள்ளுவர்.

இக்குறட்பாவில் பகவானைத் “தாமரைக்கண்ணான்” என்று குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. “தாமரைக்கண்ணன்” என்பது திருமாலுக்குரிய சிறப்பான திருநாமங்களில் ஒன்று. மேலும் இக்குறட்பாவின் மூலம் சிற்றின்பத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் மோக்ஷலோகமான செங்கண்மால் உலகை அடைய முடியாது என்பதையும் நிரதிசய இன்பமான மோக்ஷ இன்பத்தை விழைபவர்கள் உலகியல் இன்பங்களிலிருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார்.  ஒரு பெண்பித்துப் பிடித்தவனின் கூற்றாக இக்குறளை அமைத்திருக்கிறார்.

நிரதிசய இன்பமான மோக்ஷம் என்பது திருமாலின் உலகுதான் என்பது திருவள்ளுவருக்குத் தெரிந்திருந்ததால்தான் மோக்ஷத்தைப் பற்றிய பேச்சு வருமிடத்தில் “தாமரைக்கண்ணான் உலகு” என்ற சொற்றொடர் மூலம் செங்கண்மால் உலகைக் காட்டுகிறார். மோக்ஷத்திற்கு சிற்றின்பம் எதிர்தட்டானது என்பதைக் காட்டவே இக்குறட்பாவைக் காமத்துப்பாலில் வைத்தார். உலகியல் ஆசைகளில் மூழ்கியிருப்பவனுக்கு மோக்ஷத்தின் அருமை தெரியாதென்பதும் மோக்ஷத்தை விரும்புவோர் உலகியல் ஆசைகளை அறவே விடவேண்டும் என்பதும்தான் இந்தக் குறட்பா நமக்குத் தரும் செய்தி.

பிறவித் தளையிலிருந்து விடுதலை என்று சொல்லக்கூடிய மோக்ஷம் என்பதைத் திருமால் தான் கொடுக்க முடியும் என்ற சங்கத் தமிழரின் கோட்பாட்டை அப்படியே வழிமொழிந்திருக்கிறார் திருவள்ளுவர்.

நிறைவுப் பகுதி 

திருவள்ளுவர் தனது நூலில் குறிப்பிடும் தெய்வங்கள் எல்லாமே வைதிக தெய்வங்கள்தான். அந்தத் தெய்வங்களுள் அவர் மனதில் நிறைந்து நின்ற தெய்வங்கள் திருமாலும் திருமகளும்தான். சங்கத் தமிழரின் மரபுப்படி தனது நூலில் திருமாலையே பரம்பொருளாக முழங்கியிருக்கும் திருவள்ளுவர், பெரிய பிராட்டியாரான திருமகளின் அனுக்ரஹம் பற்றியும் சில குறட்பாக்களில் குறிப்பிடுகிறார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது அவர் அப்பழுக்கற்ற சிறந்த ஸ்ரீவைஷ்ணவர் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.

தனது நூலில் வேதம், வைதிக கர்மங்கள், வேதம் ஓதும் அந்தணர்கள், இவற்றின் சிறப்பையெல்லாம் தெளிவாக எடுத்துரைக்கும் திருவள்ளுவர் ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடுகளையும் ஆங்காங்கே காட்டுவதால் அவர் ஒரு ஸனாதன வைதிக நெறியைப் பின்பற்றும் ஸ்ரீவைஷ்ணவ அந்தணர் தான் என்பதே அவரது நூலிலிருந்து வெளிப்படுகிறது. ஆகவே அவருக்கு ஒரு உருவம் கொடுக்க வேண்டுமென்றால், நெற்றியிலும் உடலிலும் பன்னிரண்டு திருமண்காப்புகள், தூய மெல்லிய வெண்ணிற ஆடை, கழுத்தில் தாமரை, துளசி மணிமாலைகள், மார்பில் யஜ்ஞோபவீதம் (பூணூல்) இவற்றுடன் கூடிய ஒரு உருவத்தைத்தான் கொடுக்க முடியும். அவ்வுருவம் தான் அவருடைய நூலில் சொல்லப்பட்ட கருத்துகளுக்குப் பொருத்தமான உருவமாக இருக்கும். வேறு எந்த உருவத்தைக் கொடுத்தாலும் அது அவரது நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களுக்கு முரணாகத்தான் இருக்கும்.

ஆகவே திருவள்ளுவர் ஸனாதன வைதிக மதத்தைப் பின்பற்றும் ஒரு ஸ்ரீவைஷ்ணவ அந்தணர்தான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஒருவனுடைய குலத்தை அவனது வாய்ச்சொல்லே காட்டிவிடும் (குறள்-959) என்று திருவள்ளுவரே கூறியிருப்பதால் அவரது சொல்லான திருக்குறளே இதற்குச் சான்று. திருக்குறளுக்குப் பண்டைக் காலத்தில் பல உரைகள் இருந்தாலும் பரிமேலழகரின் உரைதான் சிறந்ததாகக் கொள்ளப்பட்டது. திருவள்ளுவர் வைணவராகவும் திருக்குறள் வைணவ நூலாகவும் இருந்ததால் தான் பரம வைணவரான பரிமேலழகர் அதற்கு உரை எழுதினார். வைணவ ஆசார்யர்களில் பலர் தங்களது தத்துவ விரிவுரைகளில் திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கின்றனர்.

காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோயில் அர்ச்சகராக இருந்தவர் பரிமேலழகர். திருவள்ளுவரின் திருவுள்ளத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு திருக்குறளுக்கு உரை எழுதியவர் அவர். ஆனால் அவரது உரை, சிலருக்குப் பிடிக்காது. ஏனெனில் உண்மையைச் சொன்னால் சிலருக்குப் பிடிக்காது என்பது உண்மைதானே? ஆரியச் சார்போடு உரை எழுதிவிட்டார் என்று அவரைச் சாடுவார்கள். “ஆரியன்” என்றால் “உயர்ந்தவன்”, ”அறிவாளி” என்று பொருள். திருவள்ளுவரும் பரிமேலழகரும் ஆரியர்களே.

“ஆய்வு” என்ற பெயரில் தங்கள் எண்ணத்துக்கு முரண்பாடான குறட்பாக்களையெல்லாம் இடைச்செருகல் என்பார்கள் சிலர். திருக்குறள் மேல் தங்களின் எண்ணம் என்னும் வண்ணத்தைப் பூச அந்நூலில் உள்ள சொற்களுக்கு நேர்மையற்ற முறையில் வலிந்து பொருள்கொண்டு இன்றும் எத்தனையோ பேர் புதிது புதிதாக உரை எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும்படியாக இவர்கள் உரை எழுதிவிட்டதால் திருக்குறள் இவர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் நூலாகிவிடாது. திருவள்ளுவரும் இவர்களைச் சேர்ந்தவர் ஆகிவிடமாட்டார்.

மேலும் மாட்டுக்கறி, ஆட்டுக்கறி முதலிய புலால் வகைகளை உண்ணுதல், விதவிதமான மதுபானங்களை அருந்துதல், சுயஒழுக்கம் இல்லாமல் வைப்பாட்டிகளோடும் விலைமாதரோடும் இன்பம் துய்த்தல், பெண்களின் சுதந்திரத்துக்குக் கற்பு, ஒழுக்கம் இவையெல்லாம் தடையாக உள்ளவை என்று பிரசாரம் செய்தல், அடுத்தவன் மனைவியை ஒருவன் விரும்புவதும், ஒருவனின் மனைவி வேறொருவனை விரும்புவதும் தவறில்லை என்று பிரசாரம் செய்தல், இறை நம்பிக்கை இல்லாமல் ஸனாதன மதத்தில் உள்ள தெய்வங்களை இழிவுபடுத்துதல்- இவையே இன்று “பகுத்தறிவு”வாதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்களின் பண்புநலன்கள்.

இந்தப் “பகுத்தறிவு”வாதிகள் கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, ஒழுக்கமுடைமை, பிறனில்விழையாமை, கற்பு, இறை நம்பிக்கை முதலிய நல்லறங்களைப் போதிக்கும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் உரிமை கொண்டாடுவதற்கு என்ன யோக்யதை இருக்கிறது? திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றிப் பேசுவதற்குக் கூட இவர்களுக்குத் தகுதி இல்லை. இவர்களின் பண்புகளுக்கும், திருக்குறளின் கொள்கைக்கும் ஏதாவது ஸம்பந்தம் உண்டா? இன்று, பசுவதை செய்து மாட்டுக்கறி தின்பதை ஆதரிப்பவர்களும், குடிகாரர்களும், கூத்தியருடன் கும்மாளம் அடிப்பவர்களும், ஸநாதன மதத்தின் தெய்வங்களை இழித்துரைப்பவர்களும் “திருவள்ளுவர்“ எங்கள் தமிழ் இனத்துக்கே தலைவர்”, ”எங்கள் பாட்டன்”, ”எங்கள் பூட்டன்”, “எங்கள் ஐயன்” என்றெல்லாம் சொல்லித் திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு திரிகிறார்களே, இவர்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட வெட்கம் இல்லையா?

ஆகவே இந்தப் “பகுத்தறிவு”வாதிகளும், இவர்களது கொள்கைளையும் நடைமுறைகளையும் பின்பற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாடுவது என்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம் என்பதோடு திருவள்ளுவரையும் திருக்குறளையும் அசிங்கப்படுத்தும் விஷயமும் ஆகும். திருவள்ளுவரை வைத்து இவர்கள் செய்வது ஈனத்தனமான அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்? திருவள்ளுவரையும் திருக்குறளையும் பெருமைப்படுத்த விரும்புவோர் திருக்குறளில் சொல்லப்பட்ட அறங்களைத் தங்கள் வாழ்வில் முடிந்த அளவு பின்பற்ற முயல வேண்டும். அது ஒன்று தான் திருவள்ளுவருக்கும் திருக்குறளுக்கும் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும்.

-முற்றும்-

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருவள்ளுவர் யார்? – 8

  1. “இந்தப் “பகுத்தறிவு”வாதிகள் கொல்லாமை, புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, ஒழுக்கமுடைமை, பிறனில்விழையாமை, கற்பு, இறை நம்பிக்கை முதலிய நல்லறங்களைப் போதிக்கும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் உரிமை கொண்டாடுவதற்கு என்ன யோக்யதை இருக்கிறது? திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றிப் பேசுவதற்குக் கூட இவர்களுக்குத் தகுதி இல்லை. இவர்களின் பண்புகளுக்கும், திருக்குறளின் கொள்கைக்கும் ஏதாவது ஸம்பந்தம் உண்டா? இன்று, பசுவதை செய்து மாட்டுக்கறி தின்பதை ஆதரிப்பவர்களும், குடிகாரர்களும், கூத்தியருடன் கும்மாளம் அடிப்பவர்களும், ஸநாதன மதத்தின் தெய்வங்களை இழித்துரைப்ப வர்களும் “திருவள்ளுவர்“ எங்கள் தமிழ் இனத்துக்கே தலைவர்”, ”எங்கள் பாட்டன்”, ”எங்கள் பூட்டன்”, “எங்கள் ஐயன்” என்றெல்லாம் சொல்லித் திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு திரிகிறார்களே, இவர்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட வெட்கம் இல்லையா?” இந்தத் தொடர்க் கட்டுரையை (?) நான் தொடர்ந்து படித்துக் குறிப்பெடுத்து வருகிறேன். ஆய்வுக்கட்டுரை ஒன்றில் இருக்க வேண்டிய அணுகுமுறை, நெறிமுறை, வலிமையான தரவுகள், சொல்லாடல்கள், மாற்றுக் கருத்துக்களை மறுக்கிற போது அதனின் வலிமை கொண்ட தரவுகள் மற்றும் சான்றுகள் பிறநூல் எடுத்துக்காட்டுக்கள். இப்பொருள் பற்றிய அறிஞர் பிறர்தம் கருத்துக்கள் இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்தத் தொடரின் முதல் பகுதியில் இக்கட்டுரையாளர் ‘அடியேன்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தியிருந்ததையும் மேலே நான் காட்டியிருக்கிற பகுதியையும் பொருத்திப் பார்க்கிறேன். என் நெஞ்சம் பெருமிதத்தால் பூரிப்படைகிறது1 கட்டுரையின் ஒவ்வொரு தொடரிலும் வெளிப்படும் இவரது பண்பாடு பிறரால் போற்றத்தகுந்தது! கட்டுரைக் கருத்துக்களில் வல்லமைக்குத் தொடர்பில்லாமல் இருக்கலாம். தளம் அமைத்துக் கொடுத்த பாவத்தில் இருந்து அது தப்ப இயலுமா? என்பது இறைவனுக்கே வெளிச்சம்!

    மிக உயர்ந்த பண்பாட்டு வெளிப்பாடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *