கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 11

-மேகலா இராமமூர்த்தி
இராமன் காட்டுக்குச் செல்கையில் தங்கியிருந்த பொழிலிலேயே பரதனும் சத்ருக்கனனும் சேனையொடு தங்கினர். இராமன் நடந்ததே சென்றதறிந்து தேரில் வந்துகொண்டிருந்த பரதனும் அதனை நீத்துக் கால்நடையாகவே பயணப்படலானான்.
கங்கையின் வடகரையை அடைந்தான் பரதன். அவனுடைய படையரவத்தைக் கேட்டான் கங்கையின் தென்கரையில் நின்றிருந்த கூற்றினையொத்த ஆற்றலானும், நாவாயோட்டும் வேட்டுவனும், இராமனை ஏற்கனவே சந்தித்து அவன்பால் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டவனுமான குகன். இராமனை அழிக்கவே இந்தச் சேனை வருகின்றதோ என்ற ஐயத்தினால் சீற்றம் எழவே, அவன் கண்கள் கனலைக் கக்கின; நாசியிலிருந்து புகை கிளம்பிற்று!
”வலிமை நிரம்பிய உலகில் வாழுகின்ற, கூரிய நகத்தையுடைய புலிகளெல்லாம் ஒரே இடத்தில் வந்துசேர்ந்தன எனும்படியாக ஒலியெழுப்பும் இந்தப் படையானது என்னைப் பொறுத்தவரை வெறும் எலிப்படை; நான் இந்த எலிகளைக் கிலிகொண்டு ஓடச்செய்து அழித்தொழிக்கும் அரவு” என்று சேனையைக் கண்டு உவகைகொண்டான் குகன்.
எலி எலாம் இப் படை அரவம் யான் என
ஒலி உலாம் சேனையை உவந்து கூவினான்
வலி உலாம் உலகினில் வாழும் வள் உகிர்ப்
புலி எலாம் ஒரு வழிப் புகுந்த போலவே. (கம்ப: கங்கைகாண் படலம் – 2400)
எலிக்கு நாகம் பகை என்பதால்தான் இங்கே எதிராளிகளை எலிப்படை என்றும் தன்னை அரவம் என்றும் கூறிக்கொள்கின்றான் குகன்.
இதே உவமையை நாம் வள்ளுவத்திலும் காணலாம்.
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். (படைமாட்சி – 763)
எலியாய பகை திரண்டு கடல் போல ஒலித்தாலும் நாகத்திற்கு அதனால் என்ன ஏதம் வரும்? அந்நாகம் உயிர்த்த அளவில் அப்படையானது தானே கெடும். எனவே படையின் பெருக்கத்தைவிட அதன் போர்த்திறனே அதற்கு மாட்சிதரும் என்கிறார் வள்ளுவர் இக்குறளில்!
குறளின் கருத்துக்கள் கம்பராமாயணத்தில் பல இடங்களில் பொருத்தமுற எடுத்தாளப்பெற்றுள்ளன; அவற்றில் இதுவும் ஒன்று!
குகன் மனநிலை இவ்வாறிருக்க, அக்கரையில் பரதன் அருகில் நின்றிருந்த சுமந்திரனோ எதிர்க்கரையில் நின்ற குகனைப் பார்த்துவிட்டுப் பரதனிடம், “இவன் உன் அண்ணனாகிய இராமனிடம் கரைகாணாக் காதல் கொண்டவன்; இராமனை வரவேற்கச் செல்லும் உன்னை எதிர்பார்த்தே அங்கே நிற்கின்றான்” என்று கூறுகின்றான். குகனின் சீற்றத் தோற்றம் வெகுதொலைவில் நின்றதனால் சுமந்திரன் கண்களுக்குப் புலப்படவில்லை போலும்!
சுமந்திரன் மொழிகேட்ட பரதன், குகனை உடனே காணும் ஆவலில் விரைந்து புறப்படச் சத்ருக்கனனும் உடன்சென்றான். போருக்குத் தொடைதட்டிக் காத்துக்கொண்டிருந்த குகன், தொலைவில் வந்துகொண்டிருந்த பரதனைக் கண்டதும் திடுக்குற்றான்.
மரவுரியணிந்து புழுதிபடிந்த அவன் மேனியும், ஒளியிழந்த மதிபோன்ற வதனமும், கல்லும் கனியும் வகையில் துயரம் தோய்ந்த தோற்றமும் குகனின் நெஞ்சில் பெருங் கலக்கத்தை விளைவிக்க, அவன் கையிலிருந்த வில் அவனையறியாமல் தரையில் நழுவி வீழ்ந்தது.
வற்கலையின் உடையானை
மாசு அடைந்த மெய்யானை
நற்கலை இல் மதி என்ன
நகை இழந்த முகத்தானை
கல் கனியக் கனிகின்ற துயரானைக்
கண்ணுற்றான்
வில் கையினின்று இடை வீழ
விம்முற்று நின்று ஒழிந்தான். (கம்ப: கங்கைகாண் படலம் – 2419)
பரதனைத் தானே கண்டு உண்மை அறிய விரும்பிய குகன், நாவாயில் ஏறித் தமியனாய்க் கங்கையின் வடகரையை அடைகின்றான். அண்ணனுக்கு அரசாட்சியை அளிப்பதன் பொருட்டே பரதன் கானகம் வந்துள்ளான் என்பதையறிந்து நெகிழ்கின்றான்; அவனைத் தொழுகின்றான்!
”தாய்கேட்ட வரங்களின்படித் தந்தை உனக்களித்த ஆட்சியை ஏற்காமல், அது தீவினையால் வந்தது என்று அதனை உதறிவிட்டு வந்திருக்கும் உன் செயலைக் காண்கையில், ஆயிரம் இராமர்கள் இருந்தால்கூட அவர்கள் உன் ஒருவனுக்கு ஈடாகமாட்டார்கள்!” எனப் பரதனைப் புகழ்கின்றான் குகன்.
தாய் உரைகொண்டு தாதை உதவிய
தரணிதன்னை
தீவினை என்ன நீத்து
சிந்தனை முகத்தில் தேக்கி
போயினை என்றபோழ்து புகழினோய்
தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ
தெரியின் அம்மா. (கம்ப: கங்கைகாண் படலம் – 2425)
வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பரதனைப் பிறர் வாயிலாகப் புகழ்வதைக் கம்பர் தம் காப்பியத்தில் தொடர்ந்து செய்வதைக் காணமுடிகின்றது.
முன்பு கோசலை ”உங்கள் அனைவரை விடவும் நிறைகுணத்தன்; நின்னினும் நல்லன்” என்று பரதனை இராமனிடமே புகழ்ந்ததைக் கண்டோம். இங்கோ ஆயிரம் இராமர்கள் வந்தால்கூட அவர்கள் ஒரு பரதனுக்கு ஈடாகமாட்டார்கள் என்று குகன் புகழ்வதைக் காண்கின்றோம். இப் பாராட்டுரைகள் பரதனின் தன்னேரிலா உயர்குணங்களுக்கு ஏற்புடையவையே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
தன்னோடு புறப்பட்ட குகனையும் அழைத்துக்கொண்டு இராமனைக் காணச் செல்கிறான் பரதன். வழியில் பரத்துவாசர் ஆசிரமத்தில் ஓரிரவைக் கழித்துவிட்டு மறுநாள் மீண்டும் பயணத்தைத் தொடங்கி இராமன் தன் இளவலோடும் மனைவி சீதையோடும் தங்கியிருக்கும் சித்திரகூடத்தை அடைந்தான்.
குகனைப் போலவே சேனையொடு பரதன் வருவதைக் கண்ட இலக்குவனும் பரதன் இராமனைத் தாக்கவே படைகொண்டு வந்திருப்பதாக எண்ணிச் சினந்தான்.
’பரதனோடு வரும் படைகளைக் கலக்குவேன்; அவனை நரகுக்கு அனுப்புவேன்” என்று சூளுரைத்துக் கொண்டிருந்த இலக்குவனை நோக்கிய இராமன், ”பொறு இலக்குவா! என்மீது கொண்ட அன்பின் மிகுதியால் பரதனின் இயல்பறியாது இயம்புகின்றனை! தந்தையின் விருப்பப்படி என்னை அழைத்துப்போகவே அவன் வந்திருக்கக் கூடும்! வேறுவிதமாக நாம் எண்ணுவது பிழை!” என்றான்.
தொழுத கையொடும், அழுத கண்ணொடும் அருகில்வந்த பரதனைக் கண்ட இராமன், ”அயோத்தியில் தந்தை நலந்தானே?” என்று கேட்கவும், ”என் தாய் கேட்ட வரமெனும் சத்தியத்தை மண்ணில் நிலைநிறுத்தி, நித்திய வாசம் செய்ய விண்ணுலகு ஏகினன் தந்தை!” என்று பரதன் துயரொடு செப்பிய மொழிகேட்டு, ” இனி வாய்மைக்கு ஆருளர் மற்று?” என்று அழுதபடி மண்ணில் வீழ்ந்தான் இராமன்.
இராமனின் கையறுநிலை கண்டு, பரதனோடு வந்த குலகுருவான வசிட்டர் அவனுக்கு வாழ்வின் நிலையாமையை விளக்குகின்றார்.
”பிறத்தலும் பிறந்த உயிர்கள் பின்னாளில் இறத்தலும் வாழ்வின் இயற்கையே என்பதை மறைகளின் எல்லையை உணர்ந்த நீ மறந்தனையோ?
மானுட வாழ்க்கையானது சில காலம் ஒளிவிடும் விளக்குப் போன்றது. அந்த விளக்கு எரிவதற்குத் தேவையான நெய்யாகவும், திரியாகவும், தீயாகவும் இருப்பவை மனிதனுடைய நல்வினைப்பயனும் (புண்ணியம்), காலமும் (வயது), ஊழும் ஆகும். (நெய்யும் திரியுமாகிய) நல்வினைப்பயனும், காலமும் முடிந்துபோனால் வாழ்க்கையெனும் விளக்கும் அவிந்துபோவதில் ஐயமில்லை.
நல்வினையும் விதியும் முடிந்தபொழுது உயிர்வாழ்க்கை
முடிந்துபோகும்; காலத் திரியானது விதி எனும் நெருப்பில் எரிந்து போகும்; புண்ணியம் அனுபவித்து வற்றும்; உயிர் உடலைப் பிரியும்; இஃது இயற்கை
நியதி” என்றார் வசிட்டர்.
புண்ணிய நறுநெயில் பொருஇல் காலம்ஆம்
திண்ணிய திரியினில் விதி என் தீயினில்
எண்ணிய விளக்கு அவை இரண்டும் எஞ்சினால்
அண்ணலே அவிவதற்கு ஐயம் யாவதோ. (கம்ப: திருவடிசூட்டு படலம் – 2538)
”ஆதலால் உன் துயரை மாற்று; மேலுலகு எய்திய தந்தைக்குச் செய்யவேண்டிய நீர்க்கடன்களை ஆற்று” என்று இராமனை ஏவினார்.
அழகிய உவமைகளால் மனித வாழ்வின் இயல்பைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் விளக்கியிருக்கும் பாங்கு மனங்கவர்கின்றது.
சிட்டரான வசிட்டரின் மொழிகளால் தெளிவுபெற்ற இராமன், தந்தைக்கு நீர்க்கடன்கள் ஆற்றலானான்.
[தொடரும்]
*****
கட்டுரைக்குத் துணைசெய்தவை:
- கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
- கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
- கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
- கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17