குறளின் கதிர்களாய்…(317)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்...(317)
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.
-திருக்குறள் – 478 (வலியறிதல்)
புதுக் கவிதையில்...
செல்வம்
செலவாகும் வழி பெரிதாகாமல்
சிறிதாகவே வைத்திருந்தால்,
அரசர்க்கு
அச்செல்வம் வரும்வழி
சிறிதானாலும்
அதனால் பெருந்தீமை
ஏதும் வந்திடாதே…!
குறும்பாவில்...
பெரிதாகாமல் பார்த்துக்கொண்டால்
பொருள் செலவாகும் வழி, தீதில்லை
சேரும்வழி சின்னதானாலும் மன்னர்க்கு…!
மரபுக் கவிதையில்...
சேர்த்து வைக்கும் செல்வமதைச்
செலவு செய்யும் வழியதனைப்
பார்த்தால் பெரிதாய் ஆகாமல்,
பக்கம் நிலைக்கும் பொருளதுவே,
மார்க்க மிதனைச் செயல்படுத்தும்
மன்னர் தமக்குத் தீதில்லை
சேர்க்கும் பொருளின் வரவுவழி
சின்ன தாகப் போயினுமே…!
லிமரைக்கூ..
கவனம்கொண்டு செலவுவழி மீதே
பெரிதாகாமல் பார்த்திடும் அரசனுக்கு, வரவுவழி
சிறிதானாலும் வருவதில்லை தீதே…!
கிராமிய பாணியில்...
கொறச்சிக்க கொறச்சிக்க
செலவயெல்லாம் கொறச்சிக்க,
வரவுக்குள்ள செலவுசெஞ்சா
வந்திடுமே வலிம ஒனக்கு..
செலவு செய்யிற வழியெல்லாம்
பெருசாகாம
பாத்துக்கிற ராசாவுக்கு
வரவுவழி
சிறுசாப் போனாலும்,
வராது ஒருநாளும்
வாழ்க்கயில கெடுதியே..
அதால
கொறச்சிக்க கொறச்சிக்க
செலவயெல்லாம் கொறச்சிக்க,
வரவுக்குள்ள செலவுசெஞ்சா
வந்திடுமே வலிம ஒனக்கு…!