Category: தொடர்கள்

  • நாலடியார் நயம் – 2

    நாலடியார் நயம் – 2

    நாங்குநேரி வாசஸ்ரீ

     2. இளமை நிலையாமை

    பாடல் 11

    நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
    குழவி யிடத்தே துறந்தார்; – புரைதீரா
    மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
    இன்னாங் கெழுந்தீருப் பார்

    என்றாவது ஒருநாள்
    எப்படியும் மூப்பு வரும்
    என்றுணர்ந்த அறிவுடையோர்
    இளமையில் இன்பம் துறந்தார்
    இன்பமாய் வாழ்ந்து நிலையில்லா
    இளமையைக் கழித்தோர்
    இன்னாத்துயருடன் மூப்பில்
    இன்புற்றிருக்க இயலாமல்
    கோலூன்றி எழுந்து நிற்பர்
    கட்டுக்கடங்கா வருத்தத்துடன்.

    பாடல் 12

    நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார்
    அற்புத் தளையும் அவிழ்ந்தன, – உட்காணாய்;
    வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம்? வந்ததே
    ஆழ்கலத் தன்ன கலி

    நட்புக் கயிறு அறுந்தது
    நல்லாளும் அன்பில் குறைந்தனள்
    உற்றாரின் அன்பாகிய
    உரிமைக் கயிறும் அவிழ்ந்தது
    சிந்தித்துப்பார்!
    சீறும் கடலில்
    மூழ்கும் கப்பல்போல்
    முதுமையும் வந்தது- இனி
    உயிரோடு வாழ்வதால்
    உண்டாகும் பயன்தான் என்ன?

    பாடல் 13

    சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப்
    பல்கழன்று பண்டம் பழிகாறும் – இல்செறிந்து
    காம நெறிபடரும் கண்ணினார்க்கு இல்லையே
    ஏம நெறிபடரும் ஆறு.

    வாய் பேச முடியாது
    வார்த்தைத் தடுமாறி
    கோலூன்றித் தள்ளாடும்
    கிழப்பருவம் எய்தி
    பற்கள் வீழ்ந்துபட
    பலர் நகைக்கும் போதும்
    இல்வாழ்வில் பற்றுவைத்து
    இறுதிவரை சிற்றின்பத்தில்
    நீந்தித் தவிக்கும்
    நெறிகெட்ட மாந்தர்க்கு
    பேரின்ப வழி அடையும்
    பேறு கிட்டுவதில்லை.

    பாடல் 14

    தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா
    வீழா இறக்கும் இவள்மாட்டும் – காழ்இலா
    மம்மர்கொள் மாந்தர்க்கு அணங்காகும் தன்கைக் கோல்
    அம்மனைக்கோல் ஆகிய ஞான்று

    தலை நடுங்கிக் கூன் விழுந்து
    தடி ஊன்றித் தள்ளாடி
    இறக்கும் நிலையிலுள்ள
    இவளிடத்தும் முன்பிவளின்
    தாய் கையில் ஊன்றுகோல்
    தங்கியிருந்த காலத்தே
    மயக்கமுற்று வருந்தியிருந்திருப்பர்
    மன உறுதியில்லாக் காமுகர்
    ஆதலில் உணர்வீர் இளமையும்
    அழகும் நிலையற்றதென்று.

    பாடல் 15

    எனக்குத்தாய் ஆகியாள் என்னை ஈங்கிட்டுத்
    தனக்குத்தாய் நாடியே சென்றாள்; – தனக்குத்தாய்
    ஆகியவளும் அதுவானாள் தாய்த்தாய்க்கொண்டு
    ஏகும் அளித்திவ் வுலகு

    தாய் சென்றாள் என்னைத்
    தனியே தவிக்க விட்டுத்
    தனக்கொரு தாயை நாடி
    தாய்க்குத் தாயும் இறந்து தன்
    தாய் தேடச்சென்றவளே
    இவ்வுலகம் ஒருதாய்
    இன்னொரு தாய்தேடும்
    நிலையற்ற தன்மையோடு
    நிலையாய் என்றும் உள்ளது.

    பாடல் 16

    வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி
    முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க
    மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி
    அறிவுடை யாளர்கண் இல்

    வெறியாடும் பலிக் களத்தில்
    வெட்டுப்படக் காத்திருக்கும் ஆடு
    பூசாரி கைப்பூமாலையின் தளிரை
    பூரிப்புடன் உண்ணுவதுபோல்
    நிலையில்லா  இன்பத்தை
    நிலையென எண்ணி இளமையில்
    அகமகிழ்ந்து  இன்புறுதல்
    அறிவுடையோரிடத்து இல்லை.

    பாடல் 17

    பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்
    கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை – நனிபெரிதும்
    வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும்
    கோல்கண்ண ளாகும் குனிந்து

    நில்லா இளமையின்
    நிலை எதுவெனில்
    பழம் உதிர்ந்து
    பயனற்று வீழும்
    குளிர்மிகு சோலையின்
    கனிநிறை மரங்கள் போலாம்
    இளமைமிகு நங்கை இவளை
    இன்பம் தரும் வேல்விழியாளென
    ஆசை மிகுதியால் விளித்து
    அதிசயிப்போரே! உணர்வீர்
    மூப்பில் இவளுக்கும் ஊன்றுகோல்
    முன்நடக்க உதவும் கண்ணாகுமென்பதை.

    பாடல் 18

    பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை
    இருசிகையும் உண்டீரோ என்று – வரிசையால்
    உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள்
    எண்ணார் அறிவுடை யார்.

    பருவம் எத்தனை?
    பல்லாட்டம் கண்டதோ?
    இருபுறமும் மென்றுதின்ன
    இயலுமோ உம்மாலென
    முதியவர் குறைகேட்க
    முயற்சிக்கும் அறிவுடையோர்
    இளமையின் உடல்வலிமை
    இறுதிவரை தொடருமென எண்ணார்.

    பாடல் 19

    மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது
    கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்
    முற்றியிருந்த கனியொழியத் தீவளியால்
    நற்காய் உதிர்தலும் உண்டு

    இளைஞன் நான்
    இனிவரும் காலத்தில்
    நல்லறம் செய்வேனென
    நாட்களைக் கடத்தாதீர்
    பலநேரம் கடுங்காற்றில்
    பழுத்த கனி வீழாது
    விளைந்த காய்களும் உதிரும்
    விதியின் சதியால் அதுபோல்
    வயதானவர் பிழைத்திருக்க
    வாலிபர் சாதலுமுண்டு.

    பாடல் 20

    ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால்
    தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் – பீட்பிதுக்கிப்
    பிள்ளையைத் தாய்அலறக் கோடலான் மற்றதன்
    கள்ளம் கடைப்பிடித்தல் நன்று

    மரணப் பிடியிலுள்ள
    மனிதனைத் தேடும்
    அருளில்லாத எமன்
    அருகில் வருவானென்பதால்
    தோளில் ஏற்றத்
    தகுந்த புண்ணியமெனும்
    கட்டுச் சோற்றை
    காலத்தே தேடிப்
    பிழைத்துக்கொள்ளுங்கள்
    பத்து மாதம் சுமந்தவளின்
    பிள்ளையை அவள் கதறக்
    கொண்டு செல்லும்
    எமனின் வஞ்சனையை
    அறிந்து செயல்படுவீர்
    அனுதினமும் நற்செயலை.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 11

    பழகத் தெரிய வேணும் – 11

    நிர்மலா ராகவன்

    (குழந்தைகளுடன் பழகுவது) 

    ‘எல்லாரும் வீட்டுக்குள்ளேயேதான் இருக்க வேண்டும் வெளியில் தலைகாட்டினால் தண்டனை!’ உலகெங்கும் பரவியிருக்கும் தொற்றுநோயைத் தடுக்கப் பல நாடுகளிலும் அமலாக்கப்பட்ட சட்டம் இது.

    இதை ஒட்டி வலைத்தளங்களில் வெளியான துணுக்கு ஒன்றில், குழந்தைகளும், வீட்டு வளர்ப்பு நாயும் ஓடிப் பிடித்துக்கொண்டிருக்க, சத்தம் தாங்க முடியாததாக இருக்கும். `நான் என் அலுவலகத்துக்குப் போகிறேன்,’ என்று சொல்லிவிட்டு, அப்பா தன் மடிக்கணினியுடன் கழிவறைக்குப்போய் கதவைச் சார்த்திக்கொள்வார்!

    சாதாரணமாகவே, குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு, அவர்களை எப்படி ‘கட்டி மேய்ப்பது’ என்று புரியாத பல பெற்றோரின் நிலை இதுதான்.

    “விடுமுறை வந்தாலே எனக்குப் பிடிப்பதில்லை. ‘அம்மா, அம்மா’ என்று என் குழந்தைகள் ஏதாவது கேள்வி கேட்டு, பிராணனை வாங்கும்”. இப்படிச் சொன்னவள் என் சக ஆசிரியை. `மாணவிகளைக் கேள்வி கேட்பதே நிம்மதி,’ என்ற மனப்பக்குவம் கொண்டவள்.

    பலரும் அவளை ஒத்துப் பாடினார்கள். “இந்த மூன்று, நான்கு வயதுக் குழந்தைகள் எப்போதடா பெரிதாகப் போவார்கள் என்றிருக்கிறது! அவர்கள் கேட்கும் கேள்விகள்!”

    “எனக்கு அந்தப் பருவம்தான் மிகவும் பிடிக்கும்,” என்றேன் நான்.

    “எங்கள் குழந்தைகளை உன்னிடம் அனுப்புகிறோம். நீ அவர்களுடன் பேசிக்கொண்டிரு” என்று சிரித்தார்கள்.

    படிக்கத் தெரியாத அந்த வயதில், தமக்குத் தெரியாதவற்றைக் குழந்தைகள் வேறு எப்படித்தான் அறிந்துகொள்வார்கள்?

    இப்போதெல்லாம் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் கையில் பொம்மையோ, பம்பரமோ இருப்பதைக் காண முடிவதில்லை. அம்மாவுடைய கைப்பேசி அல்லது ஐ பேட்தான் அவர்கள் கையின் ஓர் இன்றியமையாத அங்கமாக விளங்குகிறது.

    நாகரீகமான யுகம் என்பதால் மட்டுமல்ல. ஏதாவது திரையை வெறித்துக்கொண்டிருந்தால் குழந்தைகள் நம்மைத் தொந்தரவு செய்யாது, அதிலேயே ஆழ்ந்து போயிருப்பர், நாம் நிம்மதியாக இருக்கலாம் என்றெண்ணி, தம் பொறுப்பைத் தட்டிக் கழிக்க நினைக்கும் பெரியவர்கள்தாம் இந்த வாழ்க்கைமுறையின் முக்கியக் காரணம்.

    இப்படி வளர்கிறவர்கள் பெற்றோரைவிட, திரையில் தாம் காண்பவர்களிடமிருந்துதான் கற்கிறார்கள். பொழுதுபோக்கிற்காகத் தயாரிக்கப்படும் படங்களில் உண்மையான வாழ்க்கை வெளிப்படுமா?

    SESAME STREET போன்ற கார்ட்டூன்களால் ஆங்கில மொழி அறிவு வளரும். குழந்தைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, திரையில் காண்பதை விளக்கினால், மொழியுடன் உறவும் பலப்படுமே! (நான் அப்படிச் செய்ய, மூன்று வயதிலேயே ‘காமிக்ஸ்’ படங்களைச் செய்தித்தாள்களில் படித்துப் புரிந்துகொண்ட குழந்தைகளும் உண்டு).

    குழந்தைக்கும் உணர்ச்சி உண்டு

    ஐந்து மாதக் குழந்தைக்குக்கூட அழுகை, சிரிப்பு மட்டுமின்றி, பிற உணர்ச்சிகளையும் வெளிக்காட்டத் தெரியும்.

    கதை

    ‘குழந்தை என்ன இவ்வளவு குண்டாகிவிட்டது! இடுப்பெல்லாம் ஒரே சதை,’ என்று குழந்தையின் தந்தை அயர, தாயும் ஒத்துப் பாடினாள். ‘இதுக்கு எப்பவும் பசி. பசி வந்துட்டா ஒரேயடியா அலறும். உனே பால் கொடுக்கணும். குண்டாகாம எப்படி இருக்கும்?’

    இந்த ரீதியில் அவர்களது பேச்சு தொடர, குழந்தையின் முகத்தில் சோகம். தன்னைப் பற்றிக் குறையாக ஏதோ பேசுகிறார்கள் என்றவரை புரிந்திருக்கும்.

    “குழந்தைக்கு ஒரே வருத்தம். அதை வைத்துக்கொண்டு ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?” என்று அங்கிருந்த நான் அதட்டினேன்.

    தாய் திடுக்கிட்டு, அதன் முகத்தைப் பார்த்தாள். “நீ எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும்பா!” என்று சமாதானத்துக்கு இறங்கினாள்.

    அழுகை பலவிதம்

    பசி, தூக்கம், ஈர உடையை மாற்ற என்று ஒவ்வொரு தேவையையும் வெவ்வேறு விதமான அழுகையால் வெளிப்படுத்துவார்கள் குழந்தைகள்.

    உண்மையான அன்பு என்பது அவர்களுடைய தேவையைக் குறிப்பால் உணர்ந்து, வேண்டுவதை உரிய காலத்தில் செய்வது.

    கதை

    என் தோழி தேவி காதலித்து, எதிர்ப்புகளைச் சமாளித்துக் கல்யாணம் செய்துகொண்டவள். விரைவிலேயே, சூதாடும் அவனுடைய போக்கு ஆத்திரத்தை ஊட்டியது. தன் குழந்தைமேல் அதை வெளிப்படுத்தினாள்.

    “பிள்ளையை பேயாட்டம் போட்டு அடிக்கும்!” என்று தேவியின் தாய் என்னிடம் முறையிட்டாள். அவளுடைய ஆதரவில் இருந்த தாய்க்கு மகளைத் தடுக்கும் துணிவு இருக்கவில்லை.

    “எதுக்கு அடிக்கிறது! பேசிப் புரிய வையேன்,” என்றேன்.

    “பேசினா விளங்காதே!’ என்று சலித்துக்கொண்டாள்.

    சின்னஞ்சிறு குழந்தைக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று புரிந்து, அவனையும் ஒரு பொருட்டாக மதித்து அவள் பேசியிருந்தால்தானே!

    ‘ஒன் வயசு இப்போ நாலு மணி நேரமா! எவ்வளவு பெரியவனாகிவிட்டே!’ என்று அன்றுதான் பிறந்த குழந்தையைக் கொஞ்ச, அதற்கு என் தொனி புரிந்து சிரித்தது.

    (நான்கு வருடங்கள் கழித்து, ‘எனக்கு நாலு வயசு!’ என்று ஒவ்வொருவரிடமும் பெருமையாகப் பலமுறைச் சொல்லிக்கொள்வான். அவர்கள் கண்களைக் குத்தாத குறையாக அவனுடைய நான்கு விரல்கள் விரியும்).

    நாம் பேசுவது புரிந்துதான் சிரிக்கிறதா, இல்லை, நம்மைக் கவனிக்கிறார்களே என்ற பெருமிதத்துடன் சிரித்துவைக்கிறதா?

    என்னுடைய இந்தக் கேள்விக்கு இதுவரை எந்தக் குழந்தையும் பதில் சொல்லவில்லை.

    நீட்டி முழக்கி, குழந்தை போலவே பேசுவதுதான் அதன் மொழி.

    அருகிலிருக்கும் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தாலும், அப்பேச்சு ஒரு சிசுவின் கவனத்தைக் கவராது.

    எப்படிப் பேசுவதோ?

    குழந்தைகளுக்குப் பதில் சொல்லத் தெரியாது என்ற நிலையில், கேள்விகளை அடுக்கக் கூடாது. நம் கேள்வியிலேயே பதிலும் அடங்கியிருக்க வேண்டும்.

    ‘நீலச் சட்டை போட்டிருக்கியா? ஜோரா இருக்கே!’

    நம் பாராட்டில் குழந்தை அகமகிழ்ந்து சிரிக்கும்.

    அதட்டலாகப் பேசினால், உதடு விம்ம அழுகை எட்டிப் பார்க்கும்.

    வார்த்தைகள் புரிகிறதா, அல்லது தொனியா?

    பேச வந்தாலும் கஷ்டம்தான்

    குழந்தைகளுக்கு மொழிவளம் வந்தால் புத்தி கூர்மையாகும் என்று நிறையப் பேசுகிறோம். அதுவே சில சமயம் தொந்தரவாகிவிடுகிறது. வாய் ஓயாமல் பேசுவார்கள்.

    ஒரு முறை, என் மகளைக் கண்டித்தேன். “சும்மா தொணதொணன்னு பேசாதே!”

    சில நாட்களுக்குப்பின், நான் அவளிடம், “குளி, வா!” என்று அழைத்தேன். அவள் கவனிக்காத மாதிரி இருந்தாள். இன்னொரு முறை கூற வேண்டியிருந்தது.

    “தொணதொண பேசறே!” என்று என்னிடம் குற்றம் கண்டுபிடித்தாள் மூன்று வயது மகள்!

    நாம் செய்வது, சொல்வது எல்லாம் நமக்கே திரும்பி வரும். அதனால், கவனமாக இருக்கவேண்டும்.

    தொலைக்காட்சியில் குழந்தைகள்

    தொலைக்காட்சியில், மூன்று, நான்கு வயதுக் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்.

    வேடிக்கை என்று நினைத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் மரியாதையின்றி, வயதுக்கு மீறி பேசுகிறார்கள் அக்குழந்தைகள். (‘நான்தான் அழகு. நீங்க அசிங்கமா இருக்கீங்க’).

    பெற்றோர் பெருமையாகச் சிரிக்கிறார்கள். அவையினரும் அதிர்ச்சியை வெளிக்காட்டும் தொகுப்பாளரின் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.

    “எங்கப்பா வேஸ்ட். எப்பவும் சித்தியைக் கூட்டிக்கிட்டு வெளியே போயிடுவார்,” என்று ஒரு குழந்தை கூற, அந்த அப்பாவின் முகத்தில் அசடு வழிந்தது.

    இந்த மாதிரி வார்த்தைகளை உபயோகிக்க குழந்தைகள் யாரிடம் கற்றிருப்பார்கள்?

    ‘நான் தொலைக்காட்சியில் தலைகாட்டிவிட்டேனே!’ என்ற பெருமிதத்துடன், பிறரை மதிக்கத் தெரியாது வளர்கிறார்கள் எதிர்காலச் சந்ததியினர்.

    இவர்களை இப்படி வளரவிட்டது யார் தவறு?

    கதை

    ஏதோ விசேஷத்திற்காக என் உறவினரது வீட்டில் நிறைய பெண்கள் கூடியிருந்தார்கள். வழக்கம்போல், அருகில் இல்லாத பிற பெண்களைப் பற்றி – உறவினர்களோ, தெரிந்தவர்களோ — அவதூறாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    பத்து வயதுப் பையனான சிவா அங்கே உட்கார்ந்திருந்ததை அவர்கள் லட்சியம் செய்யவில்லை. சிரித்தபடி சுவாரசியமாக அவர்களது வம்பைக் கேட்டுக்கொண்டிருந்தான் சிறுவன்.

    “இப்படித்தான் குழந்தைகள் கெட்டுப்போகிறார்கள்!” என்று ஆக்ரோஷமாகக் கத்தியபடி, ஐம்பது வயதான உறவினர் வந்து, செத்த எலியை அருவருப்புடன் தூக்கி எறிவதுபோல, சிவாவின் காதைப் பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு போனார்.

    அவன் வயதில் நானும் அப்படி எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால், ஒரு விதி: பெரியவர்களின் பேச்சு காதில் விழாதமாதிரி இருந்துவிட வேண்டும்.

    சற்று விவரம் புரிந்ததும், எனக்கு நிறைய பேருடைய அந்தரங்க வாழ்க்கை, அதிலுள்ள அவலம், புரிந்தது. கதைகளுக்கான கருவை வெளியே தேடும் அவசியம் குறைந்தது.

    இப்படி வளர்ந்த ஒரு சிறுமியை, `உனக்கு எப்படி இத்தனை விஷயங்கள் தெரிகிறது!’ என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டபோது, `அப்பாவும் அம்மாவும் பேசறதைக் கேட்டுண்டே இருப்பேன். குறுக்கே பேசாட்டா, திட்டு விழாது!’ என்றாள்!

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-18

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-18

    தி. இரா. மீனா      

     சென்னய்யா

    “சென்னய்யபிரிய  நிர்மாய பிரபுவே “இவரது முத்திரையாகும். கண்டிப்பான தன்மையுடையதாக இவரது வசனங்கள் அமைகின்றன.

    1.“இட்டலிங்கத்துக் காட்டி
    அமிர்தமான உணவு கொண்டேன் என்று சொல்வதெதற்கு?
    அந்த இட்டலிங்க முகத்தில் நிறைவு காண முடியவில்லையா
    அந்த சரணரின் முகத்தில் இலிங்க நிறைவு உண்டேயன்ற
    அங்கமுகத்தில் சரணன் நிறைவடைய முடியாது
    “விருக்சச்ச வதனம் பூமி லிங்கச்ச  வதனம் ஜங்கமம் ”
    என்னும் வேதம் கண்டு அறியாமை கொண்டவர்க்கு
    சிவலிங்கம் இல்லையென்றான் உன் சரணன்
    சென்னய்யப்பிரிய நிர்மாயப் பிரபுவே “

    2.“மரத்திற்கு மண் முகமாகுமோ?
    மண்ணிற்கு மரம் முகமாகுமோ?
    சரணனுக்கு இலிங்கம் முகமாகுமோ ?
    இலிங்கத்திற்கு சரணன் முகமாவானோ?
    இந்த வேறுபாடறிந்தோர் கூறுவீர்
    மரத்திற்கு நீரிறைத்தால் பூமிக்குப் பயனுண்டு
    பூமிக்கு நீரிறைத்தால் மரத்திற்குப் பயனுண்டு
    சரணன் முகத்தில் இலிங்கம் நிறைவடையும்
    இலிங்கத்தின் முகத்தில் சரணன் நிறைவடைவான்
    அந்த இலிங்க முகத்தோன் சரணன் என்றறியாதவர்க்கு
    இலிங்கமில்லையென்றான் சரணன்
    சென்னய்யப்பிரிய நிர்மாயப் பிரபுவே ’

    ஜக்கணய்யா 

    “ஜேங்கார நிஜலிங்கபிரபு “இவரது முத்திரையாகும். இவரது வசனங்கள் ஸ்தலங்களின் அடிப்படையில்  “நிரலான மந்தர கோப்ய “ என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

    1. “குருவிடம் குணம் தேடவில்லை
    இலிங்கத்திடம் உருவம் தேடவில்லை
    ஜங்கமனிடம் குலம் தேடவில்லை
    குருவிடம் குணம் தேடுதல்
    இலிங்கத்திடம் உருவம் தேடுதல்
    ஜங்கமனிடம் குலம் தேடுதல் ஆகியன
    என்னை நரகத்தில் வீழ்த்தும்
    இதற்கு சாட்சி மரங்களை எடுத்துவந்து தீயில் சாம்பலாக்கி
    அச்சாம்பலில் மரங்களின் அடையாளத்தை அறியமுடியுமா?
    ஜேங்கார நிஜலிங்கப் பிரபுவே“

    2. “வேதம் உயர்வென்போனின் பேச்சைக் கேட்கக் கூடாது
    சாத்திரம் உயர்வென்போனின் வாதத்தைக் கேட்கக் கூடாது
    புராணம் பெரிதெனச் சொல்பவனின் பேச்சைக்கேட்கக் கூடாது
    ஆகமம் உயர்வென்பவனின் பேச்சைக் கேட்கக் கூடாது
    சோதிடம் உயர்வென்பவனின் வாதத்தை ஏற்கக் கூடாது
    தன் ஆன்மாவில் பரப்பிரம்மமறிந்தவனுக்கு
    வேதம் சாத்திரம் புராணம் ஆகமம் சோதிடம் எங்குள்ளதோ ?
    இதற்கு அகப்படாமல் உன் சரணன் ஒதுங்கினான்
    ஜேங்கார நிஜலிங்கப் பிரபுவே”

    தேவர தாசிம்மையா

     

     

    வசனகாரர்களுள் காலத்தால் பழமையானவராக அமையும் தேவரதாசிம்மையா [ஜேடர தாசிம்மையாஎனவும் அழைக்கப்படுதல்] முதனூரு கிராமத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள இராமநாதன் கோயில் அவருக்கு விஷேஷமானது. விஷ்ணுவின் அவதாரமான இராமன் சிவனை வணங்கியதான ஐதிகப் பின்னணியில் அமைவதால் அங்கு பல கோயில்களிருந்தும் இக்கோயில் அவரைக் கவர்ந்ததால் “இராமநாதா“ அவரது முத்திரையாகிறது. இறைவனருள் வேண்டி கடுமையாகத் தவம் செய்தபோது சிவன் தரிசனம் தந்து “காயக தத்துவ’’த்தைச் [உடல் உழைப்புக் கொள்கை] சொல்லித் தன்னையுணர்த்தியதாகவும், தாசிம்மையா பிறகு தன் பரம்பரைத் தொழிலான நெசவுத்தொழிலை தொடர்ந்ததாகவும் வரலாறு அமைகிறது.

    தாசிம்மையாவின் திருமணம் குறித்த செய்தி சுவையானதாக அமைகிறது.மணல் கலந்த அரிசி, ஒரு கரும்புத் துண்டு, ஆகியவற்றைக் கொண்டு தண்ணீர், விறகு இல்லாமல் பாயசம் செய்யும் பெண்தான் தனக்கு மனைவியாக முடியுமெனச் சொல்கிறான். இதைக் கேட்டதுக்களை [பெண் வசனக்காரரும் கூட] கரும்பு கொண்டு வந்து அதிலிருந்து சாறு பிழிந்து சக்கையையைக் காயவைத்து அதையே விறகாகப் பயன்படுத்தி அடுப்பேற்றி கரும்புச் சாற்றில் அரிசியைக் கலக்கிறாள். மணல் கீழே தங்க பாயசம் செய்து தருகிறாள். அந்த அறிவுத்திறனைக் கண்டு அவளை மணக்கிறான். நெசவுத் தொழிலைத் தொடர்கிறான். ஒருமுறை தான் விரும்பி நெய்த வேலைப்பாடான தலைப்பாகையைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்க முயல்கிறான். அதை ஒரு திருடன் தொட முயன்றபோது ஒரு கூரிய சக்கரம் அவன் கையைத் துண்டாக்குகிறது. அக்காட்சியைப் பார்த்தவர்கள் அது மந்திரத் தன்மையுடையதாக இருக்கலாமென நினைத்து வாங்கத் தயங்குகின்றனர். விற்கமுடியாமல் தாசிம்மையா வீடு திரும்புகிறான். அப்போது எதிர்ப்படும் ஒரு முதியவர் அதைத் தனக்குத் தரும்படி வேண்ட கொடுத்து விடுகிறான். அதை வாங்கியவர் துண்டுகளாகக் கிழித்து தலயிலும், மார்பிலும், கையிலும் சுற்றிக்கொள்கிறார், அதைப் பார்த்து தாசிம்மையா கோபம் கொள்ளவில்லை.

    “ஒரு பொருள் உனக்குக் கொடுக்கப்பட்ட பிறகு அதை நீ எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று சொல்லிவிட்டுத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவிடுகிறார். முதியவர் விடை பெறும் போது ஒரு கைப்பிடியரிசியைத் துக்களையிடம் தந்து அரிசிப்பானையில் போடும்படி சொல்ல அது அட்சயபாத்திரமாக வளர்கிறது. வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இராமநாதன் கோயிலுக்குச் சென்று தன்னை அழைத்துக் கொள்ளும்படி வேண்ட “சிவதரிசனம்” கிடைக்கிறது. ’கணவன் பாதையே தன் பாதை’ என துக்களையும் அருள் பெற்றதாக வரலாறு அமைகிறது. இவரது வசனங்கள் சுருக்கம், தெளிவு கொண்டவையாக அமைகின்றன. ஆண், பெண் சமத்துவம், மனிதர்களின் விபரீதப் போக்குகள், தன்னலம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகின்றன. இவரது வசனங்களை புதிய இலக்கிய வடிவம் கொண்டவையாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கன்னட சமய, இலக்கிய உலகில் தனிச் சிறப்புடையவராகப் போற்றப்படுகிறார்.

    1. “அறிவை அறிவதற்கு
    அடையாளத்தை கையில் தந்தார்
    அறிவை மறந்து அடையாளத்தை  மட்டுமே
    அறிந்த மனிதர்கள்
    முக்தியை எப்படி அறிவார் இராமநாதா “

    2. “இன்று பொழுது எப்படி நாளை எப்படியென வருத்தமேன்?
    எடுத்து வந்து தருகின்ற சிவனுக்கு
    வறுமை உண்டோ இராமநாதா”

    3. “என்னை நானறிவதற்கு முன்பு எங்கிருந்தாய் ஐயா
    என்னுள் இருந்தாயல்லவா?
    என்னை நானறிய குருவின் வடிவில்
    என்னுள் அடங்கியிருந்தாயல்லவா இராமநாதா?”

    4. “கணவனிருக்கும் பெண்ணை கௌரியென நினைத்தால்
    உலகாளும் அரசனாகப் பிறக்கமுடியும்.
    கணவனிருக்கும் பெண்ணிடம் மோகம் கொண்டால்
    நரகம்தான் கிட்டும் இராமநாதா “

    5. “குடத்திற்குள் தெரியும் சூரியனைப் போல
    எல்லோருக்கும் இறைவனின் ஆற்றலுண்டு
    எனினும் குருவின்றி இறைவனோடு
    இணைய  முடியுமா இராமநாதா ?”

    6. “மனம் தன் போக்கில் அலைந்த பிறகு
    உடல் தன்னிலையில் எவ்வளவு காலம் இருந்தென்ன?
    சத்தில்லாத மோரைக் கடையும் போது
    ஒரு துளி நெய்யும் அங்கிருக்காது இராமநாதா “

    7. “மரத்திற்குள் இருக்கும் தீ எரியாது
    நுரைப்பாலின் நெய் மணக்காது
    உடல் ஆன்மாவை பார்க்க இயலாது
    நீ ஒன்றிணைந்த மர்மம் காண் இராமநாதா “

    8. “மேலே முடி வந்தால் பெண்ணென்பார்
    தாடி மீசை வந்தால் ஆணென்பார்
    நடுவில் சுற்றும் ஆத்மா
    ஆணும் அல்ல ,பெண்ணும் அல்ல காண் இராமநாதா”

    9. “தீ எரியும் அசையாது
    காற்று அசையும் எரியாது
    தீ காற்றைச் சேரும் வரை
    ஒரசைவுமில்லை
    தெரிவதும் செய்வதும் அது போன்றதே
    மனிதர்களுக்குத் தெரியுமா இராமநாதா?”

      10.  “இது என்னுடல் என்றால்
    என் விருப்பப்படி நடக்க வேண்டும்
    இது உன்னுடலென்றால்
    உன் விருப்பப்படி நடக்கவேண்டும்
    இது என்னுடையதுமில்லை உன்னுடையதுமில்லை
    சலனப் புத்தியுள்ள வஸ்து இராமநாதா “

    11. “ஒவ்வொருவரும் சாகவே
    போருக்குப் போகின்றனர்
    நூறில் ஆயிரத்தில் ஒருவர்தான்
    எதிரியைக் கொல்கிறார்.
    ஒவ்வொரு புளியம்பூவும்  பழமாக முடியுமா இராமநாதா ?”

    12. “பூமி உனது பரிசு
    பயிர் உனது பரிசு
    நான் இதை என்னவென்று சொல்லட்டும்
    எல்லாவற்றையும் உன்னிடமிருந்து பெற்றுக் கொண்டு
    உன்னைத் தவிர எல்லோரையும் புகழ்வதேன் இராமநாதா?”

                                           [தொடரும்]

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 75 (அந்தணன் ஆம்)

    சேக்கிழார் பாடல் நயம் – 75 (அந்தணன் ஆம்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    அந்தணனா  மெந்தைபிரா  னருமறையோர்  முன்பகர்வான்
     ‘’இந்தவேட்   கோவன்பால்  யான்வைத்த   பாத்திரத்தை
     தந்தொழியான்; கெடுத்தானேற் றன்மனைவி  கைப்பற்றி
     வந்துமூழ்   கியுந்தாரான்; வழிசெய்கின் றா’’னென்றார். 

    உரை :

    ‘’அந்தணனாக வந்த எம்பெருமான், தில்லைவாழ் அந்தணர்கள் முன்னே சென்று சொல்லத் தொடங்கினார்.’’ இந்தக் குயவனிடம் நான் முன்பு கொடுத்துச் சென்ற திருவோட்டை  மீண்டும் தராமல் இருக்கிறான். அதனைத் தொலைத்துவிட்டான் என்றால், அந்த உண்மையை உறுதிசெய்யத் தன மனைவியின் கையைப் பற்றிக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்ய இசைய வில்லை! இவ்வாறு இவன் பிடிவாதம் செய்கின்றான் ‘’ என்று முறையிட்டார்.

    விளக்கம் :

    சிவவேதியராகத்  திருநீலகண்டர் முன் வந்த சிவபெருமான் தாம் முன்னே அவ்வவடியாரிடம்  வைத்த திருவோட்டைத் திரும்பத்தருமாறு கேட்டார். அடியாரும் இல்லினுள் சென்று அவ்வோட்டினைத்   தேடினார். அவ்வோடு அங்கில்லை. அருகில் தென்பட்டோரிடம் அதுபற்றிக் கேட்டார். எவ்வகையிலும்  அவ்வொடு கிட்டாமையால் சிவவேதியரிடம், ‘’அவ்வோடு எங்கு தேடினும் கிட்ட வில்லை, யான் குயவன் ஆதலால் மண்ணால் புது ஓடு வனைந்து தருகிறேன்’’ என்றார். யான் கொடுத்த திருவோடே எனக்கு  மீண்டும் வேண்டும்‘’ என்று வேதியர் கேட்டார். அடியார் ‘’நான் பொன்னாலான ஓடு வேண்டுமானாலும் செய்து தருகிறேன்’’ என்றார். அதற்கு ‘’யான்கொடுத்த மண்ணோடே வேண்டும்’’ என்று பிணங்கினார். ‘’அப்படியானால் அந்த ஓட்டினைக்  காணவில்லை என்று உன் மைந்தன்  மேல் சத்தியம் செய்து கொடு!’’ என்றார். அதற்கு அடியார், தமக்கு மைந்தன் இல்லை என்றார். ‘’அப்படியானால் உன் மனைவியுடன் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்!’’ என்றார். ‘’யான்செய்த சூளுரையால் மனைவியுடன் இணைந்து  வாழவில்லை , ஆதலால் அதற்கும் வாய்ப்பு இல்லை’’ என்றார். வேதியர், ‘’நான் இப்போதே தில்லைவாழ் அந்தணர்களிடம் சென்று முறையிடுவேன்’’ என்றார் . அவ்வாறே முறையிட்ட  பாடலே இது. இதன் பொருள். இவ்வாறு முறையிட வந்த சிவபெருமான், ஆதி அந்தணன் ஆவார். இதனை ஞானசம்பந்தர்,

    ‘’தையலாள் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும்
    ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையும் இடம்
    மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து
    பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே!’’ 

    என்றும் ,

    அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே,

    என்றும்  பாடுகிறார்.  மேலும்  திருநாவுக்கரசர்,

    ‘’ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணும் ஆம்
    மெய்யன் மேதகு வெண் பொடி பூசிய
    மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான்
    பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே’’

    என்று பாடுகிறார். சுந்தர மூர்த்தி சுவாமிகளோ,

    ‘’இந்துசேகரனே இமையோர் சீர் ஈசனே திரு ஆவடுதுறையுள்
    அந்தணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே’’ 

    என்று  பாடுகிறார். மாணிக்க வாசகர்,

    ‘’திருமாலும் பன்றியாய் சென்று உணரா திருவடியை
    உரு நாம் அறிய ஓர் அந்தணன் ஆய் ஆண்டுகொண்டான் ‘’

    என்று பாடுகிறார். திருமூலரோ,

    ‘’பிறவா நெறி தந்த பேரருளாளன்
    மறவா அருள் தந்த மாதவன் நந்தி
    அறவாழி அந்தணன் ஆதி பராபரன்
    உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே’’

    என்று பாடுகிறார், ‘’அறவாழி அந்தணன்தாள் சேர்ந்தார்க்கு‘’ என்ற திருக்குறள் இங்கே எண்ணத்தக்கது. பழைய வேதத்தை ஓதி வாழும் அந்தணர்களிடம் வேதியர் முறையிடப் போனதன்  நுட்பம்அறிந்து கொள்ளத்தக்கது. அந்தணர்கள் பசுஞானத்தைக்  கடந்து பதிஞானம் கைவரப்பெற்றவர் என்பதே  அது.

    மேலும் பழங்காலத்தில் வழக்கு மன்றத்தில் முறையிடச் செல்பவர் தாமே தம் வழக்கினை, மன்றத்தில் முறையிடும் வழக்கம் இருந்தது. இவ்வழக்கில் பொது மக்களின் வழக்கம் சபையாரால் ஆராயப்பட்டது.

    வழக்கிடப்பட்டார் நியாயசபை அல்லது அரச நீதியின்பேரால் முறையிடப் பட்டபோது, அதனுக்குட்பட்டுத் தாமே தம்மேல் வழக்கிடுவோரைத் தொடர்ந்து சென்று நீதி மன்றத்தினர் முன் நின்று தமது முறையையும் விளம்பித் தீர்ப்புக்கேட்டு நிற்றல் அந்நாளில் தமிழ்மக்களின் சமூக நிலை, இந்நாளில் நீதிமன்றத்தில் வருமாறு

    எத்தனை கட்டளைகள் வரினும் அவற்றிற்கெல்லாம் தப்பிமீறி நிற்கும் நாகரிக  மெனப்படும் நமது சமூக நிலையினுடன் இதனை ஒத்துநோக்கி உலகம் திருத்தமடைக.

    திருவிளையாடற் புராணத்திலேஅரசன் பேரால் பார்ப்பனன் முறையிட்டு வேடனைக் குற்றம்சாட்டியபோது அவனைத் தொடர்ந்து அரசன் முன்னர்த் தானே போந்த வேடன் செயலையும் இங்கு வைத்து உன்னுக. முன்னர் வல் வழக்கிட்ட கிழவேதியரைத் தொடர்ந்து வன்றொண்டரும் மணப்பந்தலில் இருந்த சுற்றத்தாரும் மணத் தொழிலை விட்டுத் திருவெண்ணெய் நல்லூர் நீதிமன்றத்தினை அணைந்தமையும், பிறவும் காண்க.

    இப்பாடலால் வழக்கிட்டு வாதிப்போர் தமக்குள் முரண்படுதலும், அதனை நீக்க சபையிடம் செல்வதும், சபை விசாரணை செய்வதும் புலப்படுகின்றது. எப்போதும் அருளையே வழங்கும் சிவபிரான் மேல் வைத்த  அன்பினால் சிவவேதியரிடமும் அன்பு கொள்ளாமல்  வழக்கு  மன்றம்  செல்வது பாசஞானத்தின்  செயலே என்பதும் புலப்படுகின்றது.

    Share
  • நாலடியார் நயம் – 1

    நாலடியார் நயம் – 1

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நாலடியார் நயம்

    பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த வேளாண் வேதம் எனப் போற்றப்படும் நாலடியார் சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நீதி நூல். நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பை கொண்ட இந்நூலில் திருக்குறளைப் போன்றே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகள் உள்ளன.

    அறத்துப்பால்

    1. செல்வம் நிலையாமை

    பாடல் 1

    அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
    மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச்
    சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
    உண்டாக வைக்கற்பாற் றன்று.

    அறுசுவை உணவை இனியமனைவி
    அருகமர்ந்து ஊட்ட ஒருகவளத்துக்கு மேல்
    உண்ண முடியாது மறுகவளத்தை
    உதறித்தள்ளும் செல்வந்தரும் ஏழையாய்ப்
    பிறிதோர் நாளில் கூழ் வேண்டிப்
    பிச்சையெடுக்க நேரிடும் என்பதால்
    செல்வம் நிலையானது என்ற
    சிந்தனையை விலக்கிடுவீர்.

    பாடல் 2

    துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
    பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
    அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
    சகடக்கால் போல வரும்.

    குற்றமற்ற நல்வழியில் ஈட்டிய
    குறைவற்ற பெருஞ்செல்வம்
    சேரத் தொடங்கிய நாள் முதல்
    சோர்வில்லா எருமைகள்பூட்டி உழுது
    உண்டாக்கிய சோற்றை வறியவர்
    உடனமர்ந்து பகிர்ந்து உண்பீர்.
    நிலையில்லாத செல்வம் எவரிடமும்
    நிற்காது வண்டிச் சக்கரம்போல்
    உயர்த்தியும் தாழ்த்தியும் அதனை
    உடையோரை ஆட்டுவிக்கும்.

    பாடல்- 3

    யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
    சேனைத் தலைவராய்ச் சென்றோரும் – ஏனை
    வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
    மனையாளை மாற்றார் கொள.

    பெருமையுடன் யானை மீதமர்ந்து
    படைகள்சூழ உலா வந்த செல்வம் மிக்க
    அரசர்களும் வினைப்பயனால்
    அவர்தம் நல்நிலை தாழ்ந்து மனையாளை
    பகைவர் கடத்திச் செல்ல யாருமற்று
    பதைபதைக்கும் வறுமை நிலையுற்றுத்
    தாழ்வர் என்பதனால் பொருள் உள்ளபோதே
    தானம் செய்து அற வாழ்க்கை வாழ்வீர்!. .

    பாடல் 4

    நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
    ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
    சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
    வந்தது வந்தது கூற்று

    நிலைபெற்று நிற்கும் என
    நினைத்த பொருளெல்லாம்
    நில்லாமல் அழியும்
    நிலை கண்டபின்னும்
    நற்காரியங்கள் நிகழ்த்த
    நாட்களைக் கடத்தாதீர்
    விரைந்து குறையும் நம்
    வாழ்நாட்கள் உணர்வீர் அதை.
    கிளம்பிவிட்டான் எமன்
    கோபத்துடன் கொண்டுசெல்ல.

    பாடல் 5

    என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
    பின்னாவ தென்று பிடித்திரா – முன்னே
    கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
    கொடுத்தாறு செல்லும் சுரம்

    கிடைக்கப்பெற்ற ஓர் பொருளை
    கடைக்காலத்திற்கு உதவுமென
    பிடித்துவைத்துக் கொள்ளாது
    பற்றற்று தானம் செய்தவர்கள்
    கொடும் எமன் பின்னே
    நரகம் செல்லாது விடுத்து
    நல் இன்பம்மிகு சுவர்க்கம் எய்துவர்.

    பாடல் 6

    இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
    கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; – ஆற்றப்
    பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் நாளைத்
    தழீஇம்தழீஇம் தண்ணம் படும்.

    தம் வாழ்வின் முடிவை மாற்ற
    தப்பிக்குதித்து ஓடி எமனிடம்
    அகப்படாமல் வாழ்ந்தோர் எவருமில்லை
    அளவற்ற பொருள் வைத்திருப்போரே!
    வாரி வழங்குவீர் பிறருக்கு
    விரைவில் பிணப்பறை
    ஒலிக்கும் தழீம் தழீம் எனும்
    ஓசையுடன் உங்களுக்கும்.

    பாடல் 7

    தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
    கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; – ஆற்ற
    அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
    பிறந்தும் பிறவாதார் இல்

    சூரியனை நாழிபோல் வைத்து
    சூழ்ச்சியாய் வாழ்வை அளக்கும்
    எமன் இறுதியில் நம் உயிரை
    எடுத்துச் செல்வான் நிச்சயமாய்
    ஆதலினால் அருளுடையவராய்
    அறம் செய்து வாழ்வீர்
    பொறுப்பற்று இவ்வழி நடவாதோர்
    பிறந்தும் இவ்வுலகில் பிறவாதவரே..

    பாடல் 8

    செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
    புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லில்
    கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
    மருங்கறக் கெட்டு விடும்.

    இருக்கும் செல்வம் கொண்டு
    இறுமாப்போடு அலையும்
    அடுத்த பிறவிபற்றிய
    அறிவற்றோர் செல்வம்
    கருமேகத்தின் வாயில்
    கணநேரம் தோன்றி
    மின்னி மறையும்
    மின்னல் போல்
    இல்லாமல் அழியும்
    இருந்த இடம் காட்டாமல். .

    பாடல் 9

    உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
    துன்னருங் கேளிர் துயர்களையான் – கொன்னே
    வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ
    இழந்தான்என் றெண்ணப் படும்.

    தானும் உண்ணாது
    தக்க மதிப்பையும் பெறாது
    உயர்ந்த செயல் செய்யாது
    உறவினர் துன்பம் களையாது
    வேண்டியவர்க்கு உதவாது
    வாழ்பவனின் செல்வம்
    இருந்தும் இல்லாததுபோல்
    இரங்கத்தக்க நிலையில்
    அய்யகோ! பொருளிழந்தானென
    அனைவராலும் கருதப்படும்.

    பாடல் 10

    உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
    கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது
    வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
    உய்த்தீட்டும் தேனீக் கரி

    விண்தொடும் மலைநாட்டின்
    வேந்தனே!
    விரும்பியதை உடுக்காது
    வாய்க்கு ருசியாய் உண்ணாது
    நலிவுற்ற காலத்தும்
    நல்லறம் செய்யாது
    தேவைக்கு உதவாது
    தேக்கிவைப்போர் செல்வம்
    பல மலரின் தேனை
    பாங்காகச் சேர்த்துவைத்து
    பலன் எதுவுமில்லாமல்
    பின்இழக்கும் தேனீ போலாகும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-133

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-133

    நாங்குநேரி வாசஸ்ரீ

    133. ஊடலுவகை

    குறள் 1321

    இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
    வல்ல தவரளிக்கும் ஆறு

    அவுககிட்ட எந்த தப்பும் இல்லையின்னாலும் பிணங்கிநிக்கது எம்மேல நேசம் வைக்கச்செய்யும்.

    குறள் 1322

    ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
    வாடினும் பாடு பெறும்

    பிணக்குனால எனக்கு ஏற்படுத சின்ன சங்கடத்துக்காவ அவுக காட்டுத அளவத்த நேசம் வாடினாலும் பெருமையத் தரும்.

    குறள் 1323

    புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
    நீரியைந் தன்னார் அகத்து

    நிலத்தோட தண்ணி கலந்தாமாரி ஒத்துமையா நேசம் வச்சிருக்க காதலர்கிட்ட ஏற்படுத பிணக்குல கெடைக்க சந்தோசம் சொர்க்கத்துலயும் கெடைக்குமா?

    குறள் 1324

    புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
    உள்ளம் உடைக்கும் படை

    இறுக்க கட்டிப்பிடிச்சி விடாம இருக்காமாரி அமையுத பிணக்குலதான் என் நெஞ்சுறுதியக் குலையச்செய்யுத ஆயுதமும் இருக்கு.

    குறள் 1325

    தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
    அகறலின் ஆங்கொன் றுடைத்து

    தப்பே பண்ணாத நேரமும் பிணங்கி நேசம் வச்சவளோட மெல்லிசான தோளப் பிரிஞ்சி இருக்கதுல ஒரு சந்தோசம் இருக்கு.

    குறள் 1326

    உணலினும் உண்ட தறலினிது காமம்
    புணர்தலின் ஊடல் இனிது

    சாப்பாடு சாப்பிடுததவிட முன்ன சாப்பிட்டது செரிச்சிச்சின்னா அது ஒரு சுகம். அதுகணக்கா காதல்ல சேருதத விட பிணங்கி நிக்கது அவுகளுக்கு ஒரு சுகம்.

    குறள் 1327

    ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
    கூடலிற் காணப் படும்

    பிணக்குல தோத்தவுக செயிச்சதுக்குச் சமானம். இத பொறவு கூடிச்சேந்து சந்தோசப்படையில தெரிஞ்சுக்கிடலாம்.

    குறள் 1328

    ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
    கூடலில் தோன்றிய உப்பு

    நெத்திவேர்க்க கூடிச்சேருத சந்தோசத்த திரும்ப ஒருக்க பிணக்கு உண்டாகையில பெத்துக்கிடலாமில்லையா.

    குறள் 1329

    ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
    நீடுக மன்னோ இரா

    பளபளக்குத மொகமுள்ள காதலி இன்னும் பிணங்கட்டும். அதுக்காவ நான் அவகிட்ட கையேந்தி நிக்குத சந்தோசத்தப் பெறுததுக்காக ராப்பொழுது நீண்டுபோவட்டும்.

    குறள் 1330

    ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்

    காதலுக்கு சந்தோசம் தருதது ஒருத்தருக்கொருத்தர் கோவப்பட்டு சிணுங்கிப் பிரியுத ஊடல். அதுக்குப்பொறவு கூடிச்சேந்து சந்தோசப்பட்டாகன்னா அது அந்த ஊடலுக்கு இன்பம்.

    (முற்றும்)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-132

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-132

    நாங்குநேரி வாசஸ்ரீ

    132. புலவி நுணுக்கம்

    குறள் 1311

    பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்
    நண்ணேன் பரத்தநின் மார்பு

    பொம்பளைங்க எல்லாரும் தங்களோட கண்ணால பொதுப்பொருளா நெனச்சி உன் மார்ப நுகருதாங்க. அதனால நான் உன் மார்பச் சேரமாட்டேன்.

    குறள் 1312

    ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
    நீடுவாழ் கென்பாக் கறிந்து

    நான் பிணங்கி இருக்கையில அவுக தும்மினாக, ஆயுசோட நெறைய நாள் வாழணும்னு நான் வாழ்த்துவேனோன்னு நெனைச்சு.

    குறள் 1313

    கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
    காட்டிய சூடினீர் என்று

    கிளைகள்ல பூத்துக்கெடக்குத பூவக்கட்டி நான் சூடிக்கிட்டாலும் யாருக்கோ காணிக்கதுக்காவத்தான் சூடி இருக்கேம்னு கோவப்பட்டு நிக்கா.

    குறள் 1314

    யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்
    யாரினும் யாரினும் என்று

    யாரையும்விட அதிகமா நேசம் வச்சிருக்கேம்னு சொன்னேம். யார விட? யார விட? னு தொளைச்சு எடுத்து பிணங்கி நின்னுக்கிட்டா.

    குறள் 1315

    இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
    கண்நிறை நீர்கொண் டனள்

    இந்தப் பொறப்புல நான் பிரிஞ்சுபோவமாட்டேம்னு சொன்னேன். இனி வரப்போவுத பொறப்புல பிரிஞ்சுபோடுவேம்னு கண்ணீர் உட்டுக்கிட்டு நிக்கா.

    குறள் 1316

    உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
    புல்லாள் புலத்தக் கனள்

    நான் உன்னய நெனச்சேம்னு சொன்னேன். அம்புட்டுதான் அப்பம் என்னய மறந்து இருந்தீயளான்னு ஏசி தழுவாம பிணங்கி நின்னுட்டா.

    குறள் 1317

    வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
    யாருள்ளித் தும்மினீர் என்று

    நான் தும்மினேன். வழக்கம்போல வாழ்த்தினவ எவ உம்மபத்தி நெனச்சா இப்பம் தும்முததுக்குன்னு கேட்டு அழுக ஆரம்பிச்சிட்டா.

    குறள் 1318

    தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
    எம்மை மறைத்திரோ என்று

    அவ பிணங்குவான்னு பயந்து தும்மல அடக்கிக்கிட்டேன். அப்பமும் உமக்கு வேண்டப்பட்டவுக நெனைக்கத தெரிஞ்சுக்கிடக்கூடாதுனு  மறைக்கீயனு கேட்டு அழுதா.

    குறள் 1319

    தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
    இந்நீரர் ஆகுதிர் என்று

    நான் பணிஞ்சுபோய் அவ பிணக்கப் போக்கி சந்தோசப்படுத்தினாலும் நீர் மத்த பிள்ளைங்ககிட்டயும் இப்டித்தான் நடந்துக்கிடுவீயளானு கேட்டு ஏசுவா.

    குறள் 1320

    நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
    யாருள்ளி நோக்கினீர் என்று

    அவ அழக நெனைச்சு நான் அமைதிய ஒக்காந்து பாத்துக்கிட்டே இருந்தாலும் யார் கூட ஒப்பிட்டுப் பாக்கீறுனு கோவப்படுதா.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 10

    பழகத் தெரிய வேணும் – 10

    நிர்மலா ராகவன்

    (சிடுசிடுப்பான கடைக்காரர்கள்)   

    “புன்னகை புரியும் முகமாக இல்லாதவன் கடை திறக்கக் கூடாது” (சீனப் பழமொழி). சீனாவிலிருந்த ஒருவர் தன் எட்டு வயது மகனை மலேசியாவுக்கு கப்பலில் ஏற்றிவிட்டார், தனியாக.

    ‘அங்கு போய் பிழைத்துக்கொள்!’ என்ற அறிவுரை மட்டும் கூறி வழியனுப்பினார்.

    என் பக்கத்து வீட்டில் குடியிருந்த பெட்ரீஷியா என்ற கணக்காய்வாளர் தன் தந்தையைப்பற்றிக் கூறிய கதை இது.

    எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வளவு சிறு வயதில் தனியாக ஏதோ ஒரு நாட்டுக்கு அனுப்புவார்களா!

    ‘நேர்மையாக இரு. கடுமையாக உழை,’ என்று தான் போதித்த பாடங்களை வைத்துக்கொண்டு மகன் பிழைத்துவிடுவான் என்ற நம்பிக்கை அந்த தந்தைக்கு இருந்திருக்கிறது.

    சிறுவன் வாங் ஒரு மளிகைக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான்.

    பள்ளிக்கூடத்தில் அவன் கல்வி பெறவில்லை.

    ஆனாலும், கடின உழைப்பு, எதையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம், பிறரை மரியாதையாக நடத்துவது முதலிய குணங்கள் அவனை சொந்தக்கடை நடத்தும் அளவிற்கு படிப்படியாக உயர்த்தின.

    தன்னைப்போல் தன் குழந்தைகளும் கஷ்டப்படக்கூடாது என்ற உறுதியுடன், அவர்களைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினான் வாங்.

    அவர்களது மதிப்பெண்கள் சிவப்பு மையால் எழுதப்பட்டிருந்தபோது அவர்களுக்கு அடி விழும். மாறுகின்ற காலத்தை ஒட்டி நடக்க குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்று கடையின் ஓரத்தில் ஒரு கணினி.

    சாயங்கால வேளைகளில் விளையாடி முடிந்ததும், எல்லாக் குழந்தைகளையும் ஓர் அறையில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு போகச் சொல்லி, கதவை வெளியில் சாத்திவிடுவான் வாங்.

    ‘சிறிது நேரம் சும்மா உட்கார்ந்திருப்போம். அப்புறம், என்ன செய்வதென்று புரியாது, படிக்க ஆரம்பித்துவிடுவோம்,’ என்கிறாள் பெட்ரீஷியா.

    தந்தை எதிர்பார்த்தபடியே, எல்லாரும் உயர்கல்வி பெற்று, நல்ல வேலைகளில் அமர்ந்தார்கள்.

    தந்தை தன் வாழ்க்கையைப்பற்றி அடிக்கடி கூறி வளர்த்திருந்ததால், அவருடைய நற்குணங்கள் குழந்தைகளிடமும் அமைந்தன.

    கடையில் வேலை செய்யும் ஒருவருக்கு அவசியம் இருக்கவேண்டிய குணங்களை இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

    ஒரு கடைக்காரர் எப்படி இருக்கக்கூடாது?

    1. பல வருடங்களுக்கு முன்பு, கோலாலம்பூரில் பிரபலமாக இருந்த ஒரு கிளினிக்கிற்குப் போயிருந்தேன். சிறிது தாமதத்திற்குப்பிறகு மருத்துவரின் அறைக்குள் நுழைய அனுமதி.

    அந்த மனிதரோ, நான் வந்ததைக் கவனியாது, சுவாரசியமாக ஒரு ஜனரஞ்சகமான தமிழ் பத்திரிகையைப் படித்துக்கொண்டிருந்தார்.

    நான் பொறுமையை இழந்துகொண்டிருந்தேன்.

    அது புரிந்தோ என்னவோ, மெல்ல தலைநிமிர்ந்து, “கொஞ்சம் இருங்கள்,” என்றுவிட்டு, மீண்டும் படிப்பதில் ஆழ்ந்தார்.

    அடுத்த முறை போனபோது, நான் அவரைப் பார்க்க விரும்பவில்லை.

    அங்கிருந்த சீன மருத்துவரின் அறைக்குள் எதற்கோ நுழைந்தவர், என்னை அங்கு பார்த்து திடுக்கிட்டார்.

    ‘நம் இனத்தவரே நம்மை ஒதுக்குகிறார்களே!’ என்று வருந்தியிருப்பார்.

    இதில் யார்மேல் தவறு?

    கடைக்கு வரும் வாடிக்கையாளரோ, மருத்துவமனைக்கு வரும் நோயாளியோ, நம்மை நாடி வருகிறவர்களின் தேவை அல்லது பிரச்னை என்னவென்று புரிந்துகொள்ள ஆர்வம் காட்டவேண்டாமா?

    சுரத்தே இல்லாது, வேறு வேலையில் ஈடுபட்டிருப்பது ஒருவரை அவமதிப்பதுபோல்தான்.

    2. அதே கிளினிக் இரவு ஒன்பது மணிவரை திறந்திருக்கும் என்று தெரிந்து, நான் போனபோது, எட்டே முக்கால் மணி.

    “கொஞ்சம் முன்னாலேயே வருவதற்கென்ன?” என்று ஒரேயடியாகக் கோபித்தாள் மருந்துகளை எடுத்துக் கொடுக்கும் பெண்.

    இனி யாரும் வராவிட்டால், வீட்டுக்கு முன்னதாகவே போய்விடலாமே என்ற ஆசை அவளுக்கு. உடல்நலக்குறைவுடன் வருகிறவர்களிடம் இனிமையாகப் பேச அவளுக்குத் தெரியவில்லை. நிர்வாகத்தினர் சொல்லிக்கொடுக்கவும் இல்லை.

    3 . இரவில் ஒரு மளிகைக்கடைக்குப் போனபோது, கடை மூட அரைமணி இருந்தது.

    நாற்பது வயது மதிக்கத்தக்க கடைச் சிப்பந்தி, “கடைசி நிமிஷத்திலே வந்து உயிரை வாங்கறீங்களே!” என்று இரைந்தார்.

    ‘நாள் முழவதும், குறைந்த சம்பளத்தில் வேலை செய்து, களைத்துப்போயிருக்கிறார், பாவம்!’ என்று புரிந்தது. இவரை எப்படிக் கோபிப்பது?

    “சாமான்கள் எங்கே இருக்குன்னு காட்டினா, நாங்களே எடுத்துக்கறோம்,” என்றேன்.

    அவருடைய வேலை பாதியாகக் குறைய, இறுதியில், “இன்னிக்கு ரொம்ப வேலை,” என்றார், மன்னிப்புக் கேட்கும் வகையில்.

    வாடிக்கையார்களை உற்ற நண்பர்கள்போல் நடத்தினால் வியாபாரம் செழிக்கும்.

    4. சில கடைக்காரர்கள் தாம் விற்கும் சாமான்களை ஒரேயடியாகப் புகழ்ந்து, வலுக்கட்டாயமாக நம் தலையில் கட்டப்பார்ப்பார்ப்பார்கள்.

    “நான் இவ்வளவு சொல்கிறேன், உங்களுக்கு வேண்டாமா?” என்று ஒரு சீனர் இரைய, எரிச்சல் தாங்காது, “உங்களுக்குத்தான் இவ்வளவு பிடித்திருக்கிறதே! நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்,” என்று நடையைக்கட்டினேன்.

    5. நானும், மகளும் ஒரு கடையில் சாப்பிடும்போது, மடியில் இருந்த ஒருவயதுப் பேரனுக்கும் ஒரு வாய் ஊட்டினேன்.

    “பிள்ளைக்கும் குடுத்தீங்களே!” என்று மூன்று பேருக்கான பணத்தைக் கேட்டான் அங்கு வேலை செய்துகொண்டிருந்தவன்.

    சீக்கிரமே பெரும் பணக்காரனாகிவிடலாம் என்று எண்ணியிருப்பான். அதனால், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை அவன் அறியவில்லை.

    (அதற்குப்பிறகு நாங்கள் அங்கு போகவில்லை. கடையையும் காணோம்).

    6. எங்கள் வீட்டருகே, தன் வீட்டின் முன்பகுதியையே மளிகைக்கடையாக மாற்றி இருந்தார் அந்த மலாய்க்காரர். பாக்கிச் சில்லறை கொடுப்பதில் ஏமாற்றுவது, யாரும் பார்க்காத சமயத்தில் அழுகலான உருளைக்கிழங்கை அவர்கள் சாமான்களுடன் சேர்த்துப் போட்டுவிடுவது – இதிலெல்லாம் கைதேர்ந்தவர். எல்லாரிடமும் எரிந்துவிழுவார். அந்த இடமே அசுத்தமாக இருக்கும்.

    யாரோ புகார் செய்ய, ‘இப்பகுதியில் உள்ள வீடுகளில் கடை வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. வேறு இடத்திற்குப் போகவும்,’ என்று அரசாங்க சார்பில் கடிதம் வந்திருந்தது.

    சில வார்த்தைகள் புரியாது, என்னை விளக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.

    “பொறாமை!” என்று புகார் செய்தவர்களைத் திட்டினார்.

    ஆனால், அன்றிலிருந்து என் குடும்பத்தினருக்கு அலாதி மரியாதை. நான் அவருக்குக் கற்றுக்கொடுத்த ஆசிரியை ஆயிற்றே!

    சிறு லாபம், கடுமையான உழைப்பு

    பொதுவாக, எந்தத் துறையானாலும், பிரதிபலனை எதிர்பார்க்காது நேர்மையான வழியில் சென்றால் என்றாவது பலன் கிடைக்கும்.

    லாபம் சிறிதாக இருந்தாலும் அதற்காக கடுமையாக உழைப்பது வியாபாரத்தில் முன்னுக்கு வரும் வழி.

    சில கடைகளில் சிப்பந்திகள் எல்லாரும் சிரித்த முகமாக இருப்பார்கள். நமக்கு வேண்டிய பொருள் இன்னதென்று கோடி காட்டினாலே போதும். புரிந்துகொள்வார்கள். அவர்கள் முதலாளியால் நல்லவிதமாக நடத்தப்படுகிறார்கள் என்று அவர்களுடைய பணிவிலிருந்தும், வேலையில் அவர்கள் காட்டும் ஆர்வத்திலிருந்தும் நாம் புரிந்துகொள்ளலாம்.

    கதை

    தமிழ்நாட்டிலிருந்து வந்த சாப்பாட்டுக்கடை சிப்பந்தி வேலு. ஐம்பது வயதிருக்கும்.

    ஒரு மாலை வேளையில், நான் அங்கு போயிருந்தபோது, அவர் முகம் சிடுசிடுவென்று இருந்தது.

    “ரொம்ப வேலையா?” என்று கேட்டேன், மெல்ல.

    ‘நம் நலனில்கூட ஒருவர் அக்கறை காட்டுகிறாரே!’ என்ற நிறைவுடன், தன் கஷ்டங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

    காலை ஏழு மணியிலிருந்து இரவு ஒன்பதுவரை வேலை. அதன்பின், கணக்குவழக்கைப் பார்க்கவேண்டும்.

    சாப்பாடு இலவசம் என்றாலும், குடும்பத்தைவிட்டு, தனியாக அயல்நாட்டில் உழைப்பது எளிதல்ல.

    வந்துவிட்டாலோ, புதிய வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டியதுதான். எரிச்சலுடன் செயல்பட்டால், பணம் கிடைத்தாலும், மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்குமா?

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 74 (ஆவதென்)

    சேக்கிழார் பாடல் நயம் – 74 (ஆவதென்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ஆவதென்   நின்பால்   வைத்த  அடைக்கலப்   பொருளை  வௌவிப்
    பாவகம்    பலவும்  செய்து  பழிக்குநீ   ஒன்றும்  நாணாய் ,
    ‘’யாவரும்   காண  உன்னை   வளைத்துநான்   கொண்டே  யன்றிப்
    போவதும்  செய்யேன் ‘’ என்றான்   புண்ணியப்  பொருளாய்  நின்றான்.

    தில்லைமூதூர்க்  குயவராகிய  திருநீலகண்டரிடம் சிவவேதியராய் இறைவனே வந்து தம் கரத்தில் உள்ள  திருவோடு  ஒன்றனைத் தந்தார். ‘’இது சிறந்த ஓடு, இதனை உன் வீட்டில் பாதுகாப்புடன் வைத்து வை. பின்னர் ஒருநாள் வந்து இதைக் கேட்பேன்!‘’ என்றுரைத்துச் சென்றார். நீண்ட காலம் கழித்து அவரே திருநீலகண்டரிடம் வந்தார் . அவ்வேதியரை வணங்கி உரிய வழிபாடு செய்தபின்‘’ உங்களுக்கு அடியேன் செய்யத்தக்கது யாது?’’ எனக் கேட்டார்.

    ‘’முன்பு   உன்னிடம்  தந்து, பாதுகாப்பாய் வைத்திரு, என்று கூறி யாத்திரை சென்று மீண்டேன்! அந்தத் திருவோட்டை  இப்போது எடுத்துத் தருக!’’ என்று கேட்டார். திருநீலகண்டர் அந்தத் திருவோட்டை வீட்டினுள் வைத்த இடத்தில் தேடினார். அவ்வோடு அங்கில்லை. எல்லா இடங்களிலும் தேடினார். அக்கம் பக்கத்தில் இருந்தோரிடம் கேட்டுப் பார்த்தார். எங்கு  தேடியும்  அந்தத்   திருவோடு கிட்டவில்லை! மிகவும் வியந்து  அச்சம் கொண்டவராய் வேதியரிடம் சென்றார். ‘’எங்கு தேடியும் அந்தத் திருவோடு கிட்டவில்லை! யான் குயவன், ஆதலால்  வேறுஓர்  ஓடு செய்து  தருகிறேன்‘’ என்றார். அவர்பால்  பிணக்கம்  கொண்டவர்போல் அங்கேயே நின்று, நான் தந்த மண்ணாலான ஓட்டினைத் தருக!, வேறேதும் வேண்டா!’’ என்று கூறி நகராமல்  நின்றார். உடனே திருநீலகண்டர், ‘’மண்ணாலான ஓட்டைவிட மதிப்பு மிக்க பொன்னால் ஆன திருவோடு வாங்கித் தருகிறேன்!’’ என்றார். அடைக்கலப் பொருளை மீண்டும் கேட்டபோது தர இயலாத பழிக்கு அடியார் அஞ்சி, அவ்வோட்டை விடப்  புறமதிப்பு அதிகம் உள்ள பொன் ஓட்டைத்  தருவதாகக் கூறினார்!

    அதுகேட்ட  வேதியர் “உன்னால் இனி ஆகக் கடவது என்ன இருக்கிறது? உன்னிடம் அடைக்கலமாக ஒப்புவித்த ஓட்டினைக் களவு செய்து, பலப்பல வஞ்ச நடிப்புச் செய்துஅதனால் வரும் பழிக்கு ஒரு சிறிதும் நாணமடையாதவனாயினாய்; யாவரும்காணும்படியாக உன்னை வளைத்துப் பற்றி (எனது பாத்திரத்தை வாங்கிக்கொண்டே யல்லாமல் இங்கு நின்று ஓர் அடி பெயர்த்து) போவதுங்கூடச் செய்ய மாட்டேன்“ என்று புண்ணியங்களுக்கெல்லாம் பொருளாய் நின்ற வேதியராகிய  இறைவன் கூறினார்.

    விளக்கம் :-

    இப்பாடலில்  ஆவதென்  என்ற சீர், உன் உயிரறிவு என்ற பசுபோதம் கெட்டது. இனிமேல் உன் செயலாவது என்ன உள்ளது? என்ற குறிப்புடையது. அடுத்துப் ‘பாவகம்  பலவும் செய்து‘  என்ற தொடர் உண்மையாக அல்லாமல் உண்மைபோலப் பாவித்துச் செய்த செயலைக் குறிக்கும். ஒன்றை வேறொன்றாக எண்ணிச் செய்யும் செயலே  பாவனை ஆகும். தானே பாவித்துச் செய்தல், பிறரை அவ்வாறு பாவிக்கும்படி  செய்தல் என இருவகைப்படும். பிறர் தன்  பாசாங்கை  உண்மை என நம்பும்படிச் செய்தல். இது வஞ்சனையாகும்.

    இறையருளின் வண்ணமே நடந்து கொள்ளாமையால், ‘பழிக்கு அஞ்சும் நாணமும், அச்சமும் உன்னிடம் இல்லை’ என்று சிவவேதியர் குற்றம் சாட்டினார். இதனைப் ‘’பழிக்குநீ  ஒன்றும் நாணாய்‘’ என்ற தொடர் குறிப்பிடுகிறது. பொய் வழக்குப் போடுவது இறைவனின் கருனைச் செயலல்லவா?

    ‘பாவகம் பலவும் செய்து‘ என்ற தொடரில்  திருநீலகண்டத்தின் வைத்த உறைப்பேறிய பாவனை உபாசனையினாலே உலகப்பற்றை வென்றார் என்பதும், பழிக்கு நீ ஒன்றும்   நாணாய் என்ற விடத்து “நாடவர் பழித்துரை பூணதுவாக“ என்றாற் போல அப்பாவனையினாலேவரும் உலகநிலைப் பழிக்கு அஞ்சார் என்பதும் குறிப்பாக  விளங்குகிறது!

    யாவரும் காண   என்பதற்கு திருநீலகண்ட நாயனாரது  விளக்கமான தொண்டை  உலகம் காணக் காட்டுமாறு  வந்தவர்  என்பது   குறிப்பு.

    வளைத்து நான்கொண்டே யன்றிப் போவதும் செய்யேன் என்பதில் – உன்னையும் உன் மனைவியையும் சேர்த்துப் பிடித்துக் குடும்பத்துடன் என் உலகத்திற்கு உடன் கொண்டு போவதன்றி இங்கு நின்று அகல்வதில்லை என்ற பிற்சரிதக் குறிப்பும் காண்க.  இதுவே இறைவனின் சங்கற்பம்! இறைவன் அடியார்பால் கொண்ட பேரருளை இது குறிக்கிறது.

    புண்ணியப் பொருளாய் நின்றான் – உயர்வாகிய பதிபுண்ணியம் செய்யும் யாவரும் பெறும் பொருளாக நின்றவர், புண்ணியங்களின் குறிக்கோளானவர். நின்றான் – நிலைபெற்றிருப்பவர். நீங்க இயலாமையின் நின்றான் என்றார். நாயனார் இதுவரை செய்த புண்ணியம் எல்லாவற்றிற்கும் இவரே பொருளாயினார் என்ற குறிப்புமாம்.

    இப்பாடலால், இறைவனின் பேரருள், உறுதிப்பாடு, திருநீலகண்டரின் உள்ளத்து  உறுதி, அடியாரின் குடும்பத்தவர் பால் காட்டிய அருள் ஆகியவை விளங்கும்.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-131

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-131

    நாங்குநேரி வாசஸ்ரீ

    131. புலவி

    குறள் 1301

    புல்லா திராஅப் புலத்தை அவருறும்
    அல்லல்நோய் காண்கம் சிறிது

    பிணங்குத நேரம் அவுக அடையுத சங்கடத்த காணுததுக்காவ அவுகளத் தழுவாம செத்த பிணங்கி நில்லு.

    குறள் 1302

    உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
    மிக்கற்றால் நீள விடல்

    பிணங்கி நிக்கதுக்கும் சேந்து சந்தோசப்படுததுக்கும் இடையில இருக்க நேரம் சாப்பாட்டுல சரிஉப்பு சேத்துக்கிடது கணக்கா ஆவும். அந்த நேரம் சாஸ்தி ஆவுதது உப்புகரிச்ச சாப்பாடு கணக்காதான்.

    குறள் 1303

    அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
    புலந்தாரைப் புல்லா விடல்

    பிணங்கி நிக்குதவுகளோட பிணக்க வெலக்கி தழுவாம இருக்கது ஏற்கனவே சங்கடத்துல இருக்கவங்களுக்கு மேல சங்கடத்த உண்டாக்குதது கணக்கா ஆவும்.

    குறள் 1304

    ஊடி யவரை உணராமை வாடிய
    வள்ளி முதலரிந் தற்று

    பிணங்கி இருக்கவுகளுக்கு புத்தி சொல்லி நேசம் வைக்காம விடுதது முன்னம் வாடி கெடக்க கொடிய அடிப்பாகத்துல அத்துப் போடுதது கணக்கா ஆவும்.

    குறள் 1305

    நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
    பூவன்ன கண்ணார் அகத்து

    நல்ல கொணத்தால ஒசந்தவுகளுக்கு அழகுதருதது பூ கணக்கா கண் இருக்க பெண்பிள்ளைங்க மனசுக்குள்ளார நடக்குத பிணக்கு ஆவும்.

    குறள் 1306

    துனியும் புலவியும் இல்லாயின் காமம்
    கனியும் கருக்காயும் அற்று

    பெரும்பிணக்கும் சிறு பிணக்கும் இல்லையினா பழுத்துக்கொழுத்து ஓஞ்ச பழம் கணக்காவும், ஒண்ணுத்துக்கும் ஒதவாத பிஞ்சுகணக்காவும் காதல் பிரயோசனமில்லாமப் போவும்.

    குறள் 1307

    ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
    நீடுவ தன்றுகொல் என்று

    சேந்துஇருக்க சந்தோசம் நீட்டிக்குமோ இல்லையோன்னு ஏங்கி ரோசன பண்ணுததால பிணக்குலையும்  ஒருவகையான சங்கடம் இருக்கு.

    குறள் 1308

    நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
    காதலர் இல்லா வழி

    நம்மள நெனச்சுதான் வெசனப்படுதான்னு (வருத்தப்படுதான்னு)  உணந்துக்கிடதுக்கு காதலர் இல்லாத சமயம் வெசனப்படுததால என்ன பிரயோசனம்?

    குறள் 1309

    நீரும் நிழல தினிதே புலவியும்
    வீழுநர் கண்ணே இனிது

    தண்ணிகூட வெயில்ல இல்லாம நிழலில இருந்தாத்தான் குளுந்து இனிமையா இருக்கும். அதுகணக்கா பிணக்கும் நேசம் இருக்கவுககிட்ட காட்டுனாதான் இனிமை.

    குறள் 1310

    ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
    கூடுவேம் என்ப தவா

    பிணங்குத நேரம் எனக்கு உணர்த்தி தெளிவிக்காம மனச வாட விடுதவுககிட்ட கிட்ட கூடிஇருக்கணும்னு எம்மனசு மொனையுததுக்குக் காரணம் அதோட ஆசதான்.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-17

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-17

    தி. இரா. மீனா                                                                                                        

    சென்னபசவண்ணர்

    அல்லமாபிரபுவால் “ஞானி” என்று போற்றப்பட்ட சென்ன பசவண்ணர் சரணர்கள் மத்தியில் வயதில் சிறியவர். எனினும் நிறைந்த பக்குவமுடையவர். கூடலசங்கமம் இவரது ஊராகும்.பசவேசரின் புரட்சிகரமான போராட்டங்களில் பங்கேற்றவர். சித்தராமனுக்கு இஷ்டலிங்க தீட்சை தந்தவர். ”கூடல சென்ன சங்கமதேவா” இவரது முத்திரையாகும். ”சுவரவசனா“,  ”மந்திரகோப்யா”,  “மிச்ரார்ப்பணா“ போன்ற நூல்களின் ஆசிரியர்.

    1. “உடலில் இலிங்கம் இணைந்தபிறகு உடலே இலிங்கம்
    மனதில் இலிங்கம் இணைந்தபிறகு ஐம்பொறிகள் இலிங்கம்
    உயிரில் இலிங்கம் இணைந்தபிறகு ஞானபோகம் இலிங்கம்
    உடல் முழுவதிலுமான இலிங்கம் சர்வபோக இலிங்கம்
    கூடல சென்னசங்கம தேவனே.”

    2. “புறத்தில் செயல்படாமல்
    அகத்தில் அறிந்தென்ன?
    உடலில்லாவிட்டால் உயிருக்கும் புகலிடமேது?
    கண்ணாடியில்லா விட்டால் முகம் காணமுடியுமா?
    நம் கூடல் சென்ன சங்கமதேவன்
    உருவம் அருவம் இரண்டும் ஒன்றானவன்”

    3. “உணவிடுவது புண்ணியம் உடை தருவது அறம்
    பொருள் தருவது மேன்மை.
    மனம் உடல் வாக்கு தூய்மையுடன்
    கூடல சென்ன சங்கமதேவனை நினைப்பது முக்தி ”

    4. “அறிவையறிய கையில் அடையாளம் தந்தான் குரு
    அறிவை மறந்து அடையாளத்தை முதன்மையாக்கும்
    மனிதரைப் பார்ப்பாய்
    கூடல சென்ன சங்கம தேவனே “

    5. “பொருள் பெருமை நானெனும் பெருமை ,குலப்பெருமை நீக்காமல்
    ஜங்கம ஒழுக்கம் ,ஜங்கமபக்தி கிடைப்பதில்லை
    சொல்லின் ஜாலத்தில் மயங்கும் மக்களுக்கு
    ஜங்கம பக்தி எப்படியிருக்கும்?
    கூடல் சென்ன சங்கமதேவனே “

    6. “பறக்கும் பட்டமானாலும் நூல் துணை வேண்டும்
    வீரனானாலும் பயிற்சி வேண்டும்
    வண்டியோட தரை வேண்டும்
    இலிங்கத்துடன் உடலிணைந்திருக்க வேண்டும்
    கூடல சென்ன சங்மகதேவருள் இணையாமல்
    இலிங்கத்தை விட்டவனெனச் சொல்லலாமா?”

    7. “முன்னோர் வசனமென்ன ,பாதையில் கிடைக்கும் பணமா?
    ஒவ்வொரு வீடு சென்று போதிப்பதும் மகிழ்விப்பதும்
    பக்தியின் இடமா ? ஜங்கமத்தின் இடமா?
    பக்தன் என்பவன் சேவகன்.
    இயல்பற்றவர்களை எனக்குக் காட்டாதே
    கூடல சென்ன சங்கமதேவனே “

    8. “இருந்தும் கட்டுப்பட்டவன் இல்லை
    சுற்றி வந்தும் மாசுடையவன் இல்லை
    எதனோடும் யாரோடும் சேராமல்
    உண்மையாய் இணைந்தவன்
    வேண்டும் வேண்டாம் என்றில்லாமல்
    அழிந்தும் அழியாமல் கற்பூர மலையை
    அனல் பற்றியது போல இருப்பான்
    கூடல சென்ன சங்கம இலிங்கத்தில் இணைந்தவன் “

    9. “இல்லாத மாயயைத் தன்னுள் வைத்து
    ஆளுமைக்கு மயங்குவதேன்?
    இல்லாத மாயையை இல்லையென அறியாமல்
    குழம்பி நின்று தவிப்பதேன் ?
    எல்லாவற்றிலும் தன்னையே தானறிந்து பார்த்தால்
    தானே கூடல சென்ன சங்கய்யனன்றி வேறில்லை “

     10. “குரு ஒருவனே ,இலிங்கம் ஒன்றே
    மனைவிக்கொன்று ,மகனுக்கொன்று அண்ணனுக்கொன்று
    பணிப்பெண்ணுக்கொன்று என இலிங்கமிராது.
    ஒரு வீட்டிற்கு குரு இலிங்கமென இரண்டிருப்பின்
    மகிழமாட்டார் ,நம் கூடல சென்ன சங்கமனின் அடியார் “

     11. “அந்தரங்கம் பகிரங்கம் இரண்டுமழியாமல்
    அறிவொழுக்கம் தன்வயமாவதில்லை.
    அறிவொழுக்கம் தன்வயமாகாமல்
    இலிங்கவொளி காணமுடியாது இலிங்கவொளி காணாமல்
    கூடல சென்ன சங்கமய்யனுள் அமைதியில்லை  “

    12. “பக்தனுக்கும் இறைவனுக்கும் ஒரே உணவென்பர்
    இதை நாம் அறிகிலேம்
    உடலில் இலிங்கம் கொண்ட பின்னர்
    இலிங்கத்திற்கும் தனக்கும் ஒரே உணவேயன்றி
    வேறு உணவுண்டோ?
    வேறுவுணவிருப்பின் உடலில் இலிங்கம் தரிக்க இயலுமா?
    இந்த இரகசியம் அறிவான் கூடல சென்ன சங்கமதேவனே “

    13. “விரும்பாத வரையில் காமதேனு தருவதில்லை
    கற்பனை இல்லையெனில் கற்பகத்தரு தருவதில்லை
    சிந்தனை இல்லாத போது சிந்தாமணி தருவதில்லை
    நினைக்காத வரையில் சிவனருள் கிடைப்பதில்லை
    விருப்பமின்றி,கற்பனையின்றி சிந்தனையின்றி,நினைவின்றி
    இருப்பினும்உன்னடியார் தருவர் கூடலசென்ன சங்கம தேவனே”

    14. “உறுதியோடு தாஸோகம் செய்யும் சரணர்
    ஏழையாயின் அவருக்கு உதவி செய்து வழிபட்டு
    மீண்டுமவரை தாஸோகம் செய்ய வைத்தால்
    அவரே ஜங்கமன்,அவருக்கு வணக்கம்
    அதுவன்றி முன்னாள் செய்தீர் இந்நாள் செய்வீரென்று
    கண்டனம் செய்பவர் ஜங்கமராவாரோ?
    வெறும் பிறப்பைச் சுமப்பவர் கூடல் சென்ன சங்கமதேவனே”

    15. “உடல் பிரம்மசாரியாகி என்ன பயன்
    ஆசை பிரம்மச்சாரி ஆகவில்லையெனில்?
    வார்த்தைகள் மௌனமாகியென்ன
    நினைவுகள் மௌனமாகவில்லையெனில்?
    உடல் நிர்வாணமாகியென்ன
    உள்ளம் நிர்வாணமாகவில்லையெனில் ?
    கூடல சென்ன சங்கமதேவனே
    உன் சரணரின் இடத்தை
    யாரும் தன்வயப்படுத்த முடியாது”

    16. “ஏரியில் பார்க்கும் போது நீரென்பேன்
    வீட்டிற்குக் கொண்டு வந்தால் தீர்த்தமென்பேன்
    கடையில் இருக்கும்போது நெல் என்பேன்
    அது வீட்டிற்கு வந்தால் புனித தானியமென்பேன்
    சமைக்கும் போது உணவென்பேன்
    பிறருக்குத் தரும் போது பிரசாதமென்பேன்
    அஞ்சி அதை எச்சிலென்றால்
    விரதம் தவறியவனென்பேன்
    கூடல சென்ன சங்கம தேவனே “

    17. “பிறர் வீட்டைத் தன் வீடென்றெண்ணும் குருவி போல
    மண் பொருள்,பெண் ஆகியவை தனதென்று எண்ணி
    உயிர் துடித்துச் சாகிறது,
    படைத்தவன் கூடல சென்ன சங்கமதேவன் என்றறியாமல் ”

    18. “உடல் காமம் உள்ளக் காமம்
    பொருள் காமம் உணவு உடை காமமன்றி
    இலிங்கத்தை விரும்புபவரை
    கூடல சென்ன சங்கமதேவனென்பேன் “

    19. “நெய் ,உறை நெய் இரண்டிற்கும் வேறுபாடுண்டோ?
    தீபத்திற்கும் ஒளிக்கும் வேறுபாடுண்டோ?
    உடலுக்கும் உயிருக்கும் வேறுபாடுண்டோ?
    பாலுக்கும் சுவைக்கும் வேறுபாடுண்டோ?
    உருவமே அருவமென்றறிந்து
    அங்கலிங்க நட்பில்லாதவரின் உறவு கெடுதலென
    கூடல் சென்ன சங்கமதேவனின் சரணர் சொல்வதில்லை “

    20.  “வேண்டுமென்பது மனித குணம்
    வேண்டாமென்பது ஆசையற்ற குணம்
    இரண்டும் நல்லதன்று
    இரண்டைப் புறக்கணித்து வாழ்பவன்
    கூடல சென்ன சங்கம தேவனின் சரணராவர் “

                                                                   [தொடரும்]   

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்-17

    குழவி மருங்கினும் கிழவதாகும்-17

    மீனாட்சி பாலகணேஷ்

    (உடைவாள் செறித்தல்)

    அரிதாகப் பாடப்பட்ட பிள்ளைப்பருவங்களின் வரிசையில் அடுத்து வரும் ஆண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவம் ‘உடைவாள் செறித்தல்’ என்னும் பருவமாகும். இப்பருவத்தைப் பற்றிப் பாடியுள்ள ஒரே நூலான கதிர்காம பிள்ளைத்தமிழில் இது  கடைசிப்பருவமாக வைக்கப்பட்டுள்ளது.

                ‘………………….. பன்னீ ராண்டினிற்
             கச்சொடு சுரிகை காமுறப் புனைதல்1‘ என்று இதனை பிங்கல நிகண்டு எடுத்தியம்பும்.

    ஆண்பால் பிள்ளைத்தமிழின் பருவங்கள் குழந்தை சிறுவனாகிப் பின் அரசுகட்டில் ஏறும்வரை வகைப்படுத்திப் பாடப்பெறும். அரசுகட்டில் ஏறுவதற்கு முந்தைய பருவமே ‘கச்சொடு சுரிகை காமுறப் புனைதல்’ என்பதாகும் எனக்கொள்ள இடமிருக்கின்றது. இது ‘உடைவாளினைக் காண்போர் விருப்பங்கொள்ளும்வண்ணம்  இடைக்கச்சில் அணிந்து கொள்ளுதல்’ எனப் பொருள்படும். அரசனாகப் போகும் இளம்சிறுவன், வாள், வில் வித்தைகளில் தேர்ச்சிபெற்று விளங்க வேண்டும். தனது வீரத்தை இவ்வித்தைகளைக் கொண்டு போர்களில் வீரச்செயல்கள் செய்து வெற்றி பெறுவதன் மூலம் வெளிப்படுத்தல் வேண்டும் என்பது அவனது நாட்டுக் குடிமக்களின் எதிர்பார்ப்பு. கிடைக்கப்பெற்ற மூன்று பாடல்களின் சிறப்பையும் நயத்தையும் காணலாம்.

    கொடியதொரு வேடன், மானைக்கொன்று அவ்விறைச்சியை வேலனுக்குப் படைத்து வழிபாடு செய்த தலமே வலவையாற்றங்கரையினில் அமைந்துள்ள கதிர்காமம் எனும் பதியாகும்.

    ஒருகாலத்தில் தாரகாசுரன் முதலான அசுரர்களின் தொல்லை தாங்காத தேவர்கள் குமரனின் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளில் வீழ்ந்து உளறிப்புலம்பி தம்மைக் காக்குமாறு முறையீடு செய்தனராம்; சிவபிரான் அவர்களிடம், “உமது தலைவனாகிய முருகன் இன்னும் சிறியவன்; மழலைச்சொல் பேசுபவன்; ஆதலால் இப்போது போருக்குச் செல்ல இயலாது. ஆகவே நான்கைந்து ஆண்டுகள் சென்றபின் நீவிர் வருக; இப்போது செல்க!” என்றான்.

    “அவ்வாறு கூறியவன் கொடியதான போருக்குச் சென்றுவரத் தன் மகனாகிய உன்னை (முருகனை) அனுப்ப முனைபவன் போன்று, உனக்குக் கச்சினில் உடைவாளைச் செறித்து அணிவித்துப் ‘போர்க்கலையைப் பழகுவாயாக’ என்று கூறினான். நீயும் அங்ஙனம் செய்வதனைப் பருவமங்கையர் தம் வாள்போலும் கண்களாற்கண்டு காமுறும்வண்ணம் உடைவாளை இடையில் செருகிப் பயிலுவாயாக!” எனக் கூறும் பாடலிது.

    ‘கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்’ எனும் இலக்கணக் கூற்றிற்கேற்ப இப்பாடல் மிகப் பொருத்தமாக அமைக்கப்பட்டதனைக் கண்டு வியந்து களிக்காமல் இருக்கவியலுமா?

                ஊன்குன்ற மாமசுரர் ………… ……………
                                உம்பரர் நுந்தையடிவீழ்ந்
                       துளறிப்பு லம்பிமுறை யிட்டனர் …..
                                உந்தையஞ் சற்கவென்று        
             …………………… நும் தலைவனின் னுஞ்சிறிஞன்
                                மழலையுநி ரம்பிற்றிலன்
                       வருகநா லைந்தாண்டி னிப்போக …………….
                                ………….. கடிதுபோர்க்குத்
             தான்சென்று வரவிடுப் பான்போலு நின்னைவாள்
                                சாலுடைசெ றித்தல்பயிலே
                       தகுமிளம் பருவமங் கையர்பிறழ்கண் வாளோடு
                                …………………… பயிலே2!

    இப்பாடலின் ஆசிரியர் ஒரு கம்பராமாயணக் கருத்தைத் தன் பாடலில் கொணர்ந்துள்ள அருமையையும் கண்டு இரசிக்கலாம்.

    விசுவாமித்திர முனிவன் தனது வேள்விக்கு இடையூறு செய்துவந்த அரக்கர்களை அழிக்கும்பொருட்டு இராமனை அனுப்பித்தருமாறு தசரதனிடம் வேண்டுகோள் விடுக்கிறான். துணுக்குற்ற தசரதன், “என் மகன் இராமன் சிறியவன்; படைக்கலங்களில் தேர்ந்த பயிற்சி இல்லாதவன்; ஆகவே நானே வந்து உமக்கு உதவுகிறேன்,” எனக் கூறுகிறான்.

                ‘படையூற்றம் இலன் சிறியன் இவன் பெரியோய்
                       பணி இதுவேல் 3………….,‘

    என்பன பாடல்வரிகள்.

    இவ்வாறு அரிதாகப் பாடப்பட்ட பருவங்கள் பிள்ளைத்தமிழ் நூல்களில் காணப்பட்டாலும் அவை புதுமையான நயங்களையும் கருத்துக்களையும் தொன்மங்களையும் கொண்டமைந்துள்ளன என நாம் உணர்ந்துகொள்ளலாம்.

    அடுத்த பாடலைக் காண்போம்:

    இது முருகனை உடைவாள் செறிக்க வேண்டுங்காலை, அவனது அருள்செய்யும் பெற்றியையும், அருளின் திறத்தையும் விளக்கும் பாடல்.

    எளியேங்களாகிய நம் புலன்களிற் பொருந்தும் ஆசையை ஒழித்த தன்மையானது ஐம்புலன்களையும் கேடுவராமல் காக்கின்றது; அதனால் அது ஓவியங்களமைத்து  நிரப்பிய  சட்டை அல்லது கவசம் எனும் மெய்யுறையாக உருவகிக்கப்படுகின்றது. முருகப்பெருமானே இந்த அவவாற்ற தன்மையை, ஆசைகளொழிந்த நிலையை நமது உள்ளத்திற் குடியிருந்து நமக்கு அளித்து அருள்பவன்.

    ‘ஆசை அறுமின்கள்! ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்4!’ என திருமந்திரம் கூறுவது இதனால்தான் என்னவோ! இத்தகைய கேடு விளைவிக்கும் ஆசை எனப்படும் பற்றானது இருவகைப்படும்; அகப்பற்று, புறப்பற்று என்பன அவை. அதாவது தம்மிடமுள்ள பொருளை விடாமல் பிடித்துக் கொள்ளுதலும், தமதல்லாதவற்றைத் தாமடைய விழைவதுமாகும். இந்த இருவகைப் பற்றையும் இல்லாமற் செய்து தனது பொன்னாலான (செருப்பணிந்த) திருவடிக் கழல்களில் நம்மைச் சேர்த்துக் கொள்கிறான் முருகப்பெருமான். அது மட்டுமின்றி, அருள்சுரந்து குறுமுறுவல் பூத்து உபசரிக்கிறான். அத்தகையவன் இந்த கதிர்காமப் பெருமான்!

    அவன், இந்த அழகன் முருகன், உடைவாளை அணிந்துகொள்ளும் முன்பு அரைக்கவசம் எனப்படும் வட்டுடையை அதனைக் கட்டுவதற்குரிய கயிற்றுடன் முழந்தாளிலிருந்து இடுப்புவரை புதுமையானதொரு முறையில் விளங்குமாறு அழகாக விரித்துச் சுருக்கி, குறுக்கிக் கட்டி, தொடையும் இடுப்பும் மறைய உடுத்தியுள்ளான்; அந்த ஆடையின் விளிம்பில் அதனை எடுப்பாகக் காண்பிக்கும் பச்சைநிற மரகதங்கள் வைத்துத் தைத்ததும் சுருண்ட பாம்பினை ஒத்ததுமான கச்சினை அணிந்துள்ளான். அதன்மீது கடற்சிப்பிகள் உமிழ்ந்த முத்துக்களாலான வாளின் உறையைக் கச்சிதமாகப் பொருத்தி அணிந்து அதனுள் வயிரங்கள் பதித்த உடைவாளைஅவன் செறித்தருள வேண்டும் எனப் புலவர் வேண்டுகிறார்.

                பொருந்து மெளியே மவவின்மைப்
                                பொதியோ வியமெய் யுறைபோர்க்க
             ………………………………………….
                       முந்து குறங்கில் வட்டுடைஞாண்
                                முழந்தா டொடங்கி நுசுப்புவரை
             …………………………………………
                       விளிம்பிற் பச்சை மணிநிரைத்த
                                வெருள்பாம் பன்ன கச்சினையார்த்
             ………………………………………..
                       யெண்செந் நிலைக்கைப் பிடிவயிர
                                வீர்வாண் ஞானஞ் செறித்தருளே5!

    இங்கு வட்டுடையும், கச்சும் கலையின் செல்வமான நிரம்பிய அறிவும், அதன் தொடர்பாக உண்டாகும் நல்லொழுக்கமும் என உருவகிக்கப்பட்டன. அதன்மீது சாந்தத்தையே கைப்பிடி எனக்கொண்ட வாளினை, உறுதியான வயிரம் போலும் வாள் எனும் ஞானத்தை,  வேதங்களாலான உறையினுள் (எம் அகத்தே, உள்ளத்தில்) செறித்தருள் என முருகப்பெருமானிடம் அடியார் வேண்டுவதாக அமைத்துள்ளார் புலவனார். வாள் எனும் ஞானம் வேதம் எனும் வாளுறையில் பொருந்துகிறது. இப்பாடலுள்ளும் மற்றப் பாடல்களைப் போலவே அருமையான தத்துவக் கருந்து பொதிந்துள்ளது.

    அடுத்த பாடலும் இவ்வண்ணமே அருமையான கருத்தை உள்ளடக்கிப் பொலிகின்றது.

    முருகனுக்கு முன் செல்லும் பூதப்படைகளே அவனது சுற்றமாக விளங்குகின்றன. அவை வெற்றிபெற்றதாகக் கருதி வெற்றிக்கூத்தாகிய குணலைக் கூத்தினை ஆடின. பெருமைவாய்ந்த தேவர்கள் யாழினையும் குழலினையும் இசைத்தும் முழவினை அடித்தும் பூக்களைச் சொரிந்தும் செல்ல, முருகப்பெருமானைத் தாங்கிச்செல்ல அம்புபோல விரைந்து செல்லும், குடைபோலத் தோகையை விரித்த மயிலாக இந்திரனே வந்தான். போர்க்களத்தே இந்திரனே மயிலாக வந்து முருகனைத் தாங்கினான் என்பர். இவ்வாறு முருகன் போருக்கு எழுந்தருளுங்காலை, தமிழ்பாடும் ஞானத்தொண்டராகிய அடியார்களின் படையாகிய குழாம் வாயினால் ஒலியெழுப்பி ஆரவாரம் செய்தனர். ‘ஆவலங் கொட்டுதல்’ என்பது வெற்றி முழக்கங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படும். சூரனுக்கு அடிமையாக தேவர்கள் வாழ்ந்த வாழ்வு தொலைந்தது. படையெழுந்ததால் மூவுலகிலும் தூசிப்பொடி எழுந்து பரவிப் பூசியது. அறங்கள் செழித்து வளரவும், பகைவர் அச்சமுற்று நாணி உன்னை வணங்கவும் ஆகும்படிக்கு நீ மாலையணிந்த வாளினை இடையாடையில் அணிந்தருளுக! எனப் புலவர் வேண்டுவதாக அமைந்த பாடலிதுவாகும்.

                கூளிச் சுற்றத் தூசிப் பஞிலங்
                                குணலைக் கூத்தியலும்
                       கொன்புத் தேளிர் யாழ்குழல், முழவிசை
                                குவிபூப் பொதுளுமரோ
             …………………………………………
             தூளிப் பொடிமூ வுலகும் பூசச்
                                சூரடி மைவாழ்வு
                       தொலைவுற …………………..
             …………………………………………….
                                தார்வா ளுடைசெறியே
                       தமியேங் கதிர்மலை யாண்டகை! வாழி
                                தார்வா ளுடைசெறியே6!

    உடைவாள் செறித்தல் எனும் பருவமான இது மிக அழகான பருவம். பாடல்களால் போற்றிக் களிக்க மிகவும் அருமையான இப்பருவத்தை ஏன் புலவர்கள் பாடவில்லை எனும் வினா நம்முள்ளத்தே எழுகின்றது.

    இத்துடன் ஆண்பாற் பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் நிறைவு பெறுகின்றன. இனி வரும் பகுதிகளில் அரிதாகப் பாடப்பெற்ற பெண்பாற் பிள்ளைத்தமிழின் அருமையான பருவங்களைக் காண்போம்.

    பார்வை நூல்கள்:

    1. பிங்கல நிகண்டு- பாடல் 267- பிங்கல முனிவர்
    2. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்
    3. கம்பராமாயணம்- கம்பர், பாலகாண்டம். கையடைப்படலம். பா.
    4. திருமந்திரம்- திருமூலர்
    5, 6. கதிர்காமப் பிள்ளைத்தமிழ்- சிவங் கருணாலய பாண்டியப் புலவர்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-130

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-130

    நாங்குநேரி வாசஸ்ரீ

     130. நெஞ்சோடு புலத்தல்

    குறள் 1291

    அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
    நீயெமக் காகா தது

    ஏ நெஞ்சே! அவுகளோட நெஞ்சம் அவுகளுக்கு தொணையா நிக்குதப்போ நீ மட்டும் எனக்குத் தொணையாகாம அவுகள நெனச்சு உருகுதது ஏன்?

    குறள் 1292

    உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
    செறாஅரெனச் சேறியென் நெஞ்சு

    நெஞ்சே நம்ம மேல நேசம் வைக்காதவர்னு தெரிஞ்ச பொறவும் வெறுக்க மாட்டாகனு நம்பி அவுக பொறத்தால போவுதுயே.

    குறள் 1293

    கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ
    பெட்டாங் கவர்பின் செலல்

    நெஞ்சே! நீ என்னய உட்டுப்போட்டு அவுக பொறத்தால போவுதது சங்கடத்தால வெசனப்படுதவங்களுக்கு சேக்காளி இருக்க மாட்டாக ங்குத நெனப்புலயோ.

    குறள் 1294

    இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
    துனிசெய்து துவ்வாய்காண் மற்று

    நெஞ்சே! நீ சண்டபோட்டு பொறவு கூடிச் சேந்து அனுவிக்கலாம்னு நெனக்க மாட்ட. அதனால அதப்பத்தி உங்கிட்ட யார் பேசப்போவுதாங்க. நான் பேச மண்டேன்.

    குறள் 1295

    பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்
    அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு

    என் நெஞ்சம் காதலரக் காங்கலன்னு சங்கடப்படும் வந்த பொறவு உட்டுப்போட்டுப் போயிடுவாகளோன்னு சங்கடப்படும்.

    குறள் 1296

    தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
    தினிய இருந்ததென் நெஞ்சு

    காதலரப் பிரிஞ்சு ஒத்தேல கெடந்து ரோசன பண்ணுதப்போ எம்மனசே என்னயத் தின்னுபோடுதது கணக்கா சங்கடமா இருந்திச்சு.

    குறள் 1297

    நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
    மாணா மடநெஞ்சிற் பட்டு

    அவுகள அயத்துப்போவ முடியாம திணருத என் கூறுகெட்ட மனசோட சேந்து நான் என் வெக்கத்தையும் அயத்துக் கெடக்கேன்.

    குறள் 1298

    எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்
    உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு

    பிரிஞ்சுபோன அவுகள எளக்காரமா நெனச்சா தனக்கும் தாழ்ச்சினு நெனச்சு எம் மனசு அவுகளோட ஒசந்தகொணத்தையோ நெனப்புல வச்சிக்கிட்டிருக்கும்.

    குறள் 1299

    துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சந் துணையல் வழி

    சங்கடம் வருத நேரம் உரிம உள்ள நெஞ்சமே தொணையா நிக்கலன்னா வேற யாரு வருவாக?

    குறள் 1300

    தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
    நெஞ்சம் தமரல் வழி

    நம்மளோட நெஞ்சமே நம்மகிட்ட ஒட்டுஒறவா இல்லாதநேரம் அல்லசல் ஒட்டாம இருக்கது சுளுவு.

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள்-129

    நெல்லைத் தமிழில் திருக்குறள்-129

    நாங்குநேரி வாசஸ்ரீ

     129. புணர்ச்சி விதும்பல்

    குறள் 1281

    உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
    கள்ளுக்கில் காமத்திற் குண்டு

    மனசால நெனக்கையில கெடைக்க சந்தோசமும், ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கிடுதப்போ கெடைக்க சந்தோசமும் சாராயம் குடிக்கவங்களுக்கு கெடைக்காது. காதலிக்கவங்களுக்கு உண்டு.

    குறள் 1282

    தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
    காமம் நிறைய வரின்

    பனையளவு காதல் பெருகிவருதப்போ தினையளவு கூட பிணக்கு வச்சிக்கிடக்கூடாது.

    குறள் 1283

    பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
    காணா தமையல கண்

    என்னைய அரவணைச்சுப் போவாம தனக்குப் பிடிச்சதையே செஞ்சிக்கிட்டிருந்தாலும் என் கண்ணுங்க காதலரக் காணாம பொருந்தமாட்டேக்கு.

    குறள் 1284

    ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
    கூடற்கண் சென்றதென் னெஞ்சு

    ஏ சேக்காளீ! நான் அவுகளக் கண்டு சண்டபிடிக்கணும்னு தான் போனேன். கண்டுகிட்ட பொறவு எம் மனசு அந்த நோக்கத்த மறந்து இணங்கி சேந்துக்கிடப் போயிடுச்சு.

    குறள் 1285

    எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கண்
    பழிகாணேன் கண்ட இடத்து

    மைபூசுத நேரம் மை தீட்டும் கோலக் காணமுடியாத  கண்ணுங்க கணக்கா என் காதலரக் காணுத நேரம் அவுக என்னய உட்டுப்போட்டு போன குத்தத்த அயத்துப் போயிடுதேன்.

    குறள் 1286

    காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
    காணேன் தவறல் லவை

    அவுகளப் பாக்குத நேரம் குத்தங்கொறைய நான் கண்டுக்கிட மாட்டேன். பாக்காத நேரம் குத்தங்கொறையத் தவித்து நன்மய நான் காணுததே கெடையாது.

    குறள் 1287

    உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
    பொய்த்தல் அறிந்தென் புலந்து

    வெள்ளம் இழுத்துக்கிட்டுப் போயிடும்னு தெரிஞ்சும் அதுல குதிக்கது கணக்கா பிரயோசனம் இல்லன்னு தெரிஞ்சும் சண்டபிடிக்கதனால ஆவது என்ன?

    குறள் 1288

    இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
    கள்ளற்றே கள்வநின் மார்பு

    எம் மனசக் களவாண்ட களவாணியே! தாழ்ச்சி தருத சங்கடத்த நீ தந்தாலும் ,கெடுதலத் தருதுனு தெரிஞ்சும் கள்ளு குடிக்கவங்க ஆசப்பட்டு அதக் குடிக்கது கணக்கா என்னய மயக்குது உன் மார்பு.

    குறள் 1289

    மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
    செவ்வி தலைப்படு வார்

    காதல் தருத சந்தோசம் பூவ விட மென்மை. அத உணந்து அனுவிக்கவுக ஒரு சில பேர் தான்.

    குறள் 1290

    கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
    என்னினும் தான்விதுப் புற்று

    கண்ணால பிணக்கத் தெரியப்படுத்தி பொறவு என்னயக் காட்டிலும் வெரசலாத் தழுவி சேந்துக்கிட்டா.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 9

    பழகத் தெரிய வேணும் – 9

    நிர்மலா ராகவன்

    (வேண்டாத) விருந்தினராகப் போவது

    ‘அதிதிகளைக் கவனிப்பது தேவர்களுக்கே தொண்டு செய்வதுபோல்,’ என்று எக்காலத்திலோ சொல்லி வைத்திருக்கிறார்கள். இதை இன்றும் நம்புகிறவர்கள் அரிது.

    இது புரிந்து, ஒரு தாய் மகனுக்குக் கூறிய அறிவுரை: ‘மாமியார் வீட்டுக்கு விருந்தாளியாகப் போகிறாயா? சோற்றில் உன் முகம் தெரியும்போது, புறப்பட்டுவிடு’.

    அவளுக்கு உலகின் போக்கு தெரிந்திருந்தது. முதல்நாள், மருமகனுக்குத் தடபுடலான உபசாரம் நடக்கும். இரண்டாம் நாள் சற்றுக் குறைந்துவிடும். மூன்றாம் நாளோ, மாமியார் பழைய சோற்றில் நீரை விட்டுக்கொடுப்பாளாம்.

    ‘விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு,’ என்று இதற்காகத்தான் சொல்லிவைத்திருக்கிறார்கள்.

    மரியாதையாகக் கவனிப்பது

    உறவினரோ, நண்பரோ, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர் அவரைக் கவனிப்பது நாம் அவரை எவ்வளவு மதிக்கிறோம் என்பதைக் குறிக்கிறது.

    கதை

    ஒரு கூட்டுக்குடும்பத்தில் மாமியார் சமையலைக் கவனித்துக்கொண்டாள். கறிகாய் நறுக்குவதிலிருந்து, அரைப்பது, கரைப்பது என்று எல்லா வேலையையும் தானே செய்தாள்.

    ‘மகன் வீட்டில் தங்கி இருக்கிறோமே! தன்னைப் பாரம் என்று மருமகள் கருதிவிட்டால்?’ என்று அவள் எண்ணியிருக்கக்கூடும்.

    தங்களைப்போலவே பிறரும் இருக்கவேண்டும் என்று  எதிர்பார்ப்பதும் கோளாறுதான்.

    அவர்கள் வீட்டில் சில தினங்கள் தங்க, மாமியாரின் உறவுக்காரப் பெண்மணி வந்தாள்.

    மருமகளிடம், “நீயும் கொஞ்சம் ஒத்தாசை செய்யக்கூடாதா? ஒருத்தியே திண்டாடுகிறாளே!’ என்று கூறினாள். எழுபது பிராயத்தை எட்டிவிட்ட மாமியாருக்கு எப்போதும் உடல்வலி என்று தெரிந்துதான் அப்படிக் கூறினாள்.

    இருப்பினும், ‘நல்லதற்குத்தானே சொல்கிறேன்!’ என்று பிறரது குடும்ப விவகாரங்களில் அநாவசியமாகத் தலையிட்டால், மனத்தாங்கல்தான் வரும்.

    மாமியார்தான் ஏதோ சொல்லிக் கொடுத்திருப்பார்கள் என்று மருமகள் நினைக்க வாய்ப்பிருக்கிறதே! அப்போது அவர்கள் உறவில் விரிசல் ஏற்படாதா?

    நான் அந்த வீட்டுக்குப் போனபோது, ‘உன் காலம் முடிந்ததும், யார் இப்படி எல்லாருக்கும் சமைத்துப் போடுவார்கள்?’ என்று முதியவளை கேட்கத்தான் தோன்றியது.

    சில சமயம், நமக்குத் தோன்றுவதை எல்லாம் வெளிப்படையாகச் சொல்லாதிருப்பதுதான் நன்மை. அதனால் அடக்கிக்கொண்டேன். ‘அவரவர் பாடு, நமக்கென்ன!’ என்று ஒதுங்க வேண்டியதுதான்.

    ‘ஒவ்வொரு காயை ஒவ்வொரு விதமாக நறுக்கவேண்டும். அதனால்தான் நான் பிறரிடம் அந்த வேலையை விடுவதில்லை,’ என்று, எல்லா வேலைகளையும் தானே செய்வதாகச் சொல்கிறார்கள் சிலர். அதிகாரம் தன் கையை விட்டுப் போய்விடுமே என்ற பயமோ?

    மாதிரிக்கு, ஒரு துண்டை நறுக்கி, ‘இதைப்போல் செய்,’ என்றால் புரியாதா?

    பன்னிரண்டு வயதுக்கு மேல், குழந்தைகளையே இப்படிப் பழக்கலாம். பெரியவர்கள் தமக்குப் பிடித்த வேறு வேலையில் ஈடுபடலாம், மகிழ்ச்சியுடன்.

    புத்தி புகட்ட வேண்டாமே!

    பிறர் எதை, எப்படிச் செய்யவேண்டும் என்று நச்சரித்துக்கொண்டே இருப்பார்கள் விருந்தினராக வரும் சிலர்.

    ‘நான் உன்னைவிட கல்வியில், செல்வச்செழிப்பில், திறமையில் உயர்ந்திருக்கிறேன்,’ என்ற அகங்காரம் இப்படி ஆட்டுவிக்கலாம். இத்தகைய போக்கு மற்றவர்களை இவர்கள் மதிக்காததைத்தான் காட்டுகிறது.

    மற்ற எந்த தகுதியைவிடவும் முக்கியமானது பணிவும் மரியாதையும். தாமே தம் மரியாதையைக் கெடுத்துக்கொண்டு, பிறரைப் பழிப்பானேன்!

    கல்யாண வீடுகளில் விருந்தினர்

    தங்கள் வீட்டில் இருக்கும் சௌகரியங்களைப் போகும் இடங்களில் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

    ஒரு கல்யாணத்துக்குப் போகிறீர்கள். வருகை புரிந்த உறவினவர்கள் எல்லாரையும் ஒரே இடத்தில் தங்க வைத்திருக்கிறார்கள்.

    ‘தரை ஈரம்!’

    ‘பாத்ரூமுக்கு பத்துப் படிகள் ஏற வேண்டுமா!’

    ‘அது என்ன, பெரிய ஹாலில் நாலே நாலு கட்டில்? எல்லாவற்றையும் வயதானவர்கள் பிடித்துக்கொண்டுவிட்டார்கள்! நானும், கைக்குழந்தையும் எங்கே தூங்குவது?’

    இம்மாதிரியான புகார்களை நிறைய கேட்கமுடியும்.

    வசதி இருந்தால், ஹோட்டலில் தங்கலாம். இல்லாவிட்டால், வாயை மூடிக்கொண்டிருப்பதுதான் சரி. பெண் வீட்டுக்காரர்கள் எவ்வளவோ செலவழித்திருப்பார்கள். விருந்தினர்வேறு கஷ்டம் கொடுக்கவேண்டுமா?

    குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியது

    பிறர் வீட்டுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது, எதையும் அறிய ஆர்வமுடைய வயதில், எல்லாவற்றையும் கையில் எடுத்துப் பார்ப்பார்கள்.

    வீட்டுக்காரர்கள், ‘சாமான்கள் உடைந்துவிடப்போகிறதே!’ என்ற கவலையுடன், வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் திணறுவார்கள்.

    உடைந்துவிட்டாலோ, குழந்தைகளின் பெற்றோர் மன்னிப்பு கேட்கவேண்டிய நிலை.

    ‘போகிற இடத்தில் எதையும் தொட்டு விஷமம் பண்ணக்கூடாது,’ என்று முதலிலேயே கண்டித்தால், இரு தரப்பினருக்கும் இந்த தர்மசங்கடமான நிலைமை ஏற்படாதே!

    விருந்துண்ணும்போது

    குழந்தைகளுடன் பிறர் வீட்டில் சாப்பிட நேருகிறதா? அப்படியானால், முதலிலேயே அளிக்கவேண்டிய எச்சரிக்கை:

    ‘அவர்கள் கொடுப்பதைச் சாப்பிடுங்கள். நன்றாக இருக்கிறது, இல்லை, என்ற நேரடி வர்ணனை எல்லாம் வேண்டாம்!’

    விருந்தினரை நன்கு கவனிப்பதாக நினைத்துக்கொண்டு, அவர்கள், `போதும், போதும்’ என்று கதற, உணவுப்பண்டங்களை அவர் தட்டில் பரிமாறிக்கொண்டே இருப்பது நாகரீகம்தானா?

    அழையா விருந்தாளி

    கை நிறையப் பணம் கிடைக்குமென்ற ஆசையுடன், செல்வம் வெளிநாட்டில் வேலை தேடிக்கொண்டார். சில ஆண்டுகள் அங்கு தங்க வேண்டியிருந்தது.

    தனிமை வாட்டுமே!

    புதிய நாட்டில் ஏற்படும் குழப்பங்களை எப்படிச் எதிர்கொள்வது?

    இந்த பிரச்னைகளைச் சமாளிக்க, தன் நாட்டிலிருந்து வந்திருந்த ஒருவரைப்பற்றி அவரது உறவினரிடமிருந்து அறிந்து, அவரைத் தொடர்பு கொண்டார்.

    மரியாதை கருதி, அவரைப் பண்புடன் நடத்தினார்கள் அக்குடும்பத்தினர்.

    செல்வத்திற்கு அவர்கள் நல்ல குணம், மரியாதை, புரியவில்லை. ‘பிறர் வீட்டில் சாப்பிட்டால், நம் செலவு குறையும், நிறைய சேமிக்கலாமே!’ என்று குறுக்கு வழியில் யோசனை போயிற்று.

    ஒவ்வொரு விடுமுறையின்போதும், ‘நான் வருகிறேன்,’ என்று அறிவித்துவிட்டு, காலையிலேயே வந்துவிடுவார். காலை, மத்தியான, சாயங்கால உணவு எல்லாம் அவர்கள் வீட்டில்தான். அவர்களுக்குத் தன் சுயநலமான போக்கினால் அசௌகரியம் ஏற்படக்கூடும் என்பதை நினைத்தும் பார்க்கவில்லை.

    அவர்களுக்குச் சொல்லவும் தயக்கமாக இருந்தது.

    உரிய காலம் வந்ததும், ‘நான் திரும்பிப் போக வேண்டும். இங்கேயே வேறு வேலை பார்த்துக் கொடுக்கிறீர்களா?’ என்று கேட்டார் செல்வம்.

    ‘ஓய்வுநாள் வந்தால் யார் வீட்டுக்குச் சாப்பிடப் போவது என்று அலைகிறீர்கள். உங்கள் குழந்தைகள் நினைவாகவே இருக்கிறீர்கள். பேசாமல், உங்கள் ஊரைப் பார்க்கப் போய்சேருங்கள்!’ என்று கறாராகச் சொன்னார்கள்.

    செல்வம் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘ஆமாம்,’ என்றார் வருத்தமாக. அவ்வப்போது தாய்நாடு திரும்பி, மனைவி, குழந்தைகளைப் பார்த்துவிட்டு, எங்கோ தனியாக இருப்பது பொறுக்க முடியாததாக இருந்தது.

    அதற்காக, பிறரைத் தொல்லைப்படுத்தலாமா? இவரது தப்பாத வருகையால், அவர்களுக்கு வெளியில் எங்கும் போக முடியவில்லை. ஓய்வு நாட்களிலும் ஓய்வாக இருக்க முடியவில்லை.

    அரைமனதுடன் சொந்த நாட்டிற்குப் போனார் செல்வம்.

    ‘இரண்டு வீடுகள் வாங்கிவிட்டான்!’ என்று பிரமித்தார்கள் நண்பர்கள். அவர்களுக்குத் தெரியவில்லை, எப்படி ‘பக்கித்தனமாக’ பணம் சேர்த்தார் என்று.

    பிறரது வாழ்க்கைப் பிரச்னைகளில் உண்மையான அக்கறை காட்டாது, ஒருவர் தன் நலனையே யோசித்துக்கொண்டிருந்தால் மரியாதை குறைந்துவிடும்.

    செல்வத்தைப் போன்றவர்கள் எல்லாரிடமும் ஒரே விதமாகப் பழகமாட்டார்கள். ‘இவருடன் பழகினால் தனக்கு என்ன நன்மை கிடைக்கும்?’ என்று கணக்குப்போட்டு, அதன்படி நடப்பார்கள்.

    இவர்களுக்கு உண்மையான நண்பர்கள் எப்படிக் கிடைப்பார்கள்?

    Share