வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-18

தி. இரா. மீனா      

 சென்னய்யா

“சென்னய்யபிரிய  நிர்மாய பிரபுவே “இவரது முத்திரையாகும். கண்டிப்பான தன்மையுடையதாக இவரது வசனங்கள் அமைகின்றன.

1.“இட்டலிங்கத்துக் காட்டி
அமிர்தமான உணவு கொண்டேன் என்று சொல்வதெதற்கு?
அந்த இட்டலிங்க முகத்தில் நிறைவு காண முடியவில்லையா
அந்த சரணரின் முகத்தில் இலிங்க நிறைவு உண்டேயன்ற
அங்கமுகத்தில் சரணன் நிறைவடைய முடியாது
“விருக்சச்ச வதனம் பூமி லிங்கச்ச  வதனம் ஜங்கமம் ”
என்னும் வேதம் கண்டு அறியாமை கொண்டவர்க்கு
சிவலிங்கம் இல்லையென்றான் உன் சரணன்
சென்னய்யப்பிரிய நிர்மாயப் பிரபுவே “

2.“மரத்திற்கு மண் முகமாகுமோ?
மண்ணிற்கு மரம் முகமாகுமோ?
சரணனுக்கு இலிங்கம் முகமாகுமோ ?
இலிங்கத்திற்கு சரணன் முகமாவானோ?
இந்த வேறுபாடறிந்தோர் கூறுவீர்
மரத்திற்கு நீரிறைத்தால் பூமிக்குப் பயனுண்டு
பூமிக்கு நீரிறைத்தால் மரத்திற்குப் பயனுண்டு
சரணன் முகத்தில் இலிங்கம் நிறைவடையும்
இலிங்கத்தின் முகத்தில் சரணன் நிறைவடைவான்
அந்த இலிங்க முகத்தோன் சரணன் என்றறியாதவர்க்கு
இலிங்கமில்லையென்றான் சரணன்
சென்னய்யப்பிரிய நிர்மாயப் பிரபுவே ’

ஜக்கணய்யா 

“ஜேங்கார நிஜலிங்கபிரபு “இவரது முத்திரையாகும். இவரது வசனங்கள் ஸ்தலங்களின் அடிப்படையில்  “நிரலான மந்தர கோப்ய “ என்ற பெயரில் தொகுக்கப்பட்டிருக்கிறது.

1. “குருவிடம் குணம் தேடவில்லை
இலிங்கத்திடம் உருவம் தேடவில்லை
ஜங்கமனிடம் குலம் தேடவில்லை
குருவிடம் குணம் தேடுதல்
இலிங்கத்திடம் உருவம் தேடுதல்
ஜங்கமனிடம் குலம் தேடுதல் ஆகியன
என்னை நரகத்தில் வீழ்த்தும்
இதற்கு சாட்சி மரங்களை எடுத்துவந்து தீயில் சாம்பலாக்கி
அச்சாம்பலில் மரங்களின் அடையாளத்தை அறியமுடியுமா?
ஜேங்கார நிஜலிங்கப் பிரபுவே“

2. “வேதம் உயர்வென்போனின் பேச்சைக் கேட்கக் கூடாது
சாத்திரம் உயர்வென்போனின் வாதத்தைக் கேட்கக் கூடாது
புராணம் பெரிதெனச் சொல்பவனின் பேச்சைக்கேட்கக் கூடாது
ஆகமம் உயர்வென்பவனின் பேச்சைக் கேட்கக் கூடாது
சோதிடம் உயர்வென்பவனின் வாதத்தை ஏற்கக் கூடாது
தன் ஆன்மாவில் பரப்பிரம்மமறிந்தவனுக்கு
வேதம் சாத்திரம் புராணம் ஆகமம் சோதிடம் எங்குள்ளதோ ?
இதற்கு அகப்படாமல் உன் சரணன் ஒதுங்கினான்
ஜேங்கார நிஜலிங்கப் பிரபுவே”

தேவர தாசிம்மையா

 

 

வசனகாரர்களுள் காலத்தால் பழமையானவராக அமையும் தேவரதாசிம்மையா [ஜேடர தாசிம்மையாஎனவும் அழைக்கப்படுதல்] முதனூரு கிராமத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள இராமநாதன் கோயில் அவருக்கு விஷேஷமானது. விஷ்ணுவின் அவதாரமான இராமன் சிவனை வணங்கியதான ஐதிகப் பின்னணியில் அமைவதால் அங்கு பல கோயில்களிருந்தும் இக்கோயில் அவரைக் கவர்ந்ததால் “இராமநாதா“ அவரது முத்திரையாகிறது. இறைவனருள் வேண்டி கடுமையாகத் தவம் செய்தபோது சிவன் தரிசனம் தந்து “காயக தத்துவ’’த்தைச் [உடல் உழைப்புக் கொள்கை] சொல்லித் தன்னையுணர்த்தியதாகவும், தாசிம்மையா பிறகு தன் பரம்பரைத் தொழிலான நெசவுத்தொழிலை தொடர்ந்ததாகவும் வரலாறு அமைகிறது.

தாசிம்மையாவின் திருமணம் குறித்த செய்தி சுவையானதாக அமைகிறது.மணல் கலந்த அரிசி, ஒரு கரும்புத் துண்டு, ஆகியவற்றைக் கொண்டு தண்ணீர், விறகு இல்லாமல் பாயசம் செய்யும் பெண்தான் தனக்கு மனைவியாக முடியுமெனச் சொல்கிறான். இதைக் கேட்டதுக்களை [பெண் வசனக்காரரும் கூட] கரும்பு கொண்டு வந்து அதிலிருந்து சாறு பிழிந்து சக்கையையைக் காயவைத்து அதையே விறகாகப் பயன்படுத்தி அடுப்பேற்றி கரும்புச் சாற்றில் அரிசியைக் கலக்கிறாள். மணல் கீழே தங்க பாயசம் செய்து தருகிறாள். அந்த அறிவுத்திறனைக் கண்டு அவளை மணக்கிறான். நெசவுத் தொழிலைத் தொடர்கிறான். ஒருமுறை தான் விரும்பி நெய்த வேலைப்பாடான தலைப்பாகையைச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்க முயல்கிறான். அதை ஒரு திருடன் தொட முயன்றபோது ஒரு கூரிய சக்கரம் அவன் கையைத் துண்டாக்குகிறது. அக்காட்சியைப் பார்த்தவர்கள் அது மந்திரத் தன்மையுடையதாக இருக்கலாமென நினைத்து வாங்கத் தயங்குகின்றனர். விற்கமுடியாமல் தாசிம்மையா வீடு திரும்புகிறான். அப்போது எதிர்ப்படும் ஒரு முதியவர் அதைத் தனக்குத் தரும்படி வேண்ட கொடுத்து விடுகிறான். அதை வாங்கியவர் துண்டுகளாகக் கிழித்து தலயிலும், மார்பிலும், கையிலும் சுற்றிக்கொள்கிறார், அதைப் பார்த்து தாசிம்மையா கோபம் கொள்ளவில்லை.

“ஒரு பொருள் உனக்குக் கொடுக்கப்பட்ட பிறகு அதை நீ எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று சொல்லிவிட்டுத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து உணவிடுகிறார். முதியவர் விடை பெறும் போது ஒரு கைப்பிடியரிசியைத் துக்களையிடம் தந்து அரிசிப்பானையில் போடும்படி சொல்ல அது அட்சயபாத்திரமாக வளர்கிறது. வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இராமநாதன் கோயிலுக்குச் சென்று தன்னை அழைத்துக் கொள்ளும்படி வேண்ட “சிவதரிசனம்” கிடைக்கிறது. ’கணவன் பாதையே தன் பாதை’ என துக்களையும் அருள் பெற்றதாக வரலாறு அமைகிறது. இவரது வசனங்கள் சுருக்கம், தெளிவு கொண்டவையாக அமைகின்றன. ஆண், பெண் சமத்துவம், மனிதர்களின் விபரீதப் போக்குகள், தன்னலம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகின்றன. இவரது வசனங்களை புதிய இலக்கிய வடிவம் கொண்டவையாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கன்னட சமய, இலக்கிய உலகில் தனிச் சிறப்புடையவராகப் போற்றப்படுகிறார்.

1. “அறிவை அறிவதற்கு
அடையாளத்தை கையில் தந்தார்
அறிவை மறந்து அடையாளத்தை  மட்டுமே
அறிந்த மனிதர்கள்
முக்தியை எப்படி அறிவார் இராமநாதா “

2. “இன்று பொழுது எப்படி நாளை எப்படியென வருத்தமேன்?
எடுத்து வந்து தருகின்ற சிவனுக்கு
வறுமை உண்டோ இராமநாதா”

3. “என்னை நானறிவதற்கு முன்பு எங்கிருந்தாய் ஐயா
என்னுள் இருந்தாயல்லவா?
என்னை நானறிய குருவின் வடிவில்
என்னுள் அடங்கியிருந்தாயல்லவா இராமநாதா?”

4. “கணவனிருக்கும் பெண்ணை கௌரியென நினைத்தால்
உலகாளும் அரசனாகப் பிறக்கமுடியும்.
கணவனிருக்கும் பெண்ணிடம் மோகம் கொண்டால்
நரகம்தான் கிட்டும் இராமநாதா “

5. “குடத்திற்குள் தெரியும் சூரியனைப் போல
எல்லோருக்கும் இறைவனின் ஆற்றலுண்டு
எனினும் குருவின்றி இறைவனோடு
இணைய  முடியுமா இராமநாதா ?”

6. “மனம் தன் போக்கில் அலைந்த பிறகு
உடல் தன்னிலையில் எவ்வளவு காலம் இருந்தென்ன?
சத்தில்லாத மோரைக் கடையும் போது
ஒரு துளி நெய்யும் அங்கிருக்காது இராமநாதா “

7. “மரத்திற்குள் இருக்கும் தீ எரியாது
நுரைப்பாலின் நெய் மணக்காது
உடல் ஆன்மாவை பார்க்க இயலாது
நீ ஒன்றிணைந்த மர்மம் காண் இராமநாதா “

8. “மேலே முடி வந்தால் பெண்ணென்பார்
தாடி மீசை வந்தால் ஆணென்பார்
நடுவில் சுற்றும் ஆத்மா
ஆணும் அல்ல ,பெண்ணும் அல்ல காண் இராமநாதா”

9. “தீ எரியும் அசையாது
காற்று அசையும் எரியாது
தீ காற்றைச் சேரும் வரை
ஒரசைவுமில்லை
தெரிவதும் செய்வதும் அது போன்றதே
மனிதர்களுக்குத் தெரியுமா இராமநாதா?”

  10.  “இது என்னுடல் என்றால்
என் விருப்பப்படி நடக்க வேண்டும்
இது உன்னுடலென்றால்
உன் விருப்பப்படி நடக்கவேண்டும்
இது என்னுடையதுமில்லை உன்னுடையதுமில்லை
சலனப் புத்தியுள்ள வஸ்து இராமநாதா “

11. “ஒவ்வொருவரும் சாகவே
போருக்குப் போகின்றனர்
நூறில் ஆயிரத்தில் ஒருவர்தான்
எதிரியைக் கொல்கிறார்.
ஒவ்வொரு புளியம்பூவும்  பழமாக முடியுமா இராமநாதா ?”

12. “பூமி உனது பரிசு
பயிர் உனது பரிசு
நான் இதை என்னவென்று சொல்லட்டும்
எல்லாவற்றையும் உன்னிடமிருந்து பெற்றுக் கொண்டு
உன்னைத் தவிர எல்லோரையும் புகழ்வதேன் இராமநாதா?”

                                       [தொடரும்]

About admin

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க