(Peer Reviewed) பிள்ளைச்சிறு விண்ணப்பம் உணர்த்தும் உயிர் நேயம்

0

முனைவர் பீ. பெரியசாமி,
தமிழ்த்துறைத்தலைவர்,
டி.எல். ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,                  
விளாப்பாக்கம் – 632 521.  தமிழ்நாடு, இந்தியா.

மின்னஞ்சல்: periyaswamydeva@gmail.com    

முன்னுரை

திருவருட்பா – திரு + அருள் + பா எனப் பிரியும்.  இறையருளால் பாடப்பெற்ற பாக்கள் என்றும் இறையருள் வேண்டிப் பாடப்பெற்ற பாக்கள் என்றும் பொருள் கொள்ளலாம். திரு என்பது மேன்மை என்ற பொருளில் வந்துள்ளது. இறைப் பற்றாளர்களின் அருள் அனுபவத்தால் ஊற்றெடுப்பவையே அருட்பாக்கள். இவை வள்ளற் பெருமானின் திருவாக்கினில் ஞானியர்களின் சிந்தனைகளில் சித்தர்கள் யோகிகளின் அனுபவங்களில் இழையோடுவதைக்  காணமுடிகின்றது. வள்ளற் பெருமான் உலகினில் இறைவனை அடையவும் இறவாநிலை பெறவும் ஒரோவழி உலகினில் வாழும் அனைத்து உயிர்களிடத்தும் மனிதநேயத்தோடு நாம் நடந்துகொள்வதே என்கிறார் என்பதை உரிய உதாரணங்களோடு வெளிக்கொணர்வதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

உயிர் இரக்கமே உயர்ந்த பண்பு

“வாழையடி வாழையென வந்த திருக் கூட்ட
மரபினில் யான் ஒருவன் அன்றோ வகை யறியேன் இந்த
ஏழைபடும் பாடு உனக்குத் திருவுளச் சம்மதமோ
இது தகுமோ இது முறையோ இது தருமந்தானோ
மாழை மணிப பொதுவில் நடஞ்செய் வள்ளால் யான் உமக்கு
மகன் அலனோநீ எனக்கு வாய்த்த தந்தை யலையோ
கோழை உலக உயிர்த் துயரம் இனிப பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள் நின அருள் ஒளியைக் கொடுத்தருள் இப்பொழுதே .!”1

எனத் தன்னைப் பற்றிக் கூறியவர். பகைவரும் வணங்கக் கூடிய பண்பாளர் நம் வள்ளற் பெருமான்.  உயிர் இரக்கமே தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர்.

“மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை
மதித்துளம் வருந்திய பிறர்தம்
கண்ணினீர் விடக்கண் டையவோ நானும்
கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
நண்ணிநின் றொருவர் அசப்பிலே என்னை
அழைத்தபோ தடியனேன் எண்ணா
தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி
ஏன்எனல் மறந்தனன் எந்தாய்”2

துயருற்றோரைப் பார்த்துக் கண்ணீர் விடத் தொடங்கியவர் பிறர் அழைத்தபோதும் ஏன் எனல் மறந்தாராம்.

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.”3

என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாய் நம் வள்ளல் விளங்கியதை அறிய முடிகிறது. பசிப்பிணி போக்கும் மருத்துவர், மனிதர் படுகின்ற துன்பங்களைப்,பசிதாகம்பிணி, இச்சைஎளிமைபயம், கொலை4 என்று  வகைப்படுத்துகின்றார். இத்துன்பங்களால் மனிதன் வேதனையுறுகிறான். இவற்றைத் தவிர்க்க எனக்கு வரம் கொடுக்க வேண்டுமென்று வேண்டுகிறார்.

 “கருணையே வடிவாய் பிறர்களுக் கடுத்தகடுந்துயர் அச்சமா திகளைத்
தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புல்கொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழைவழுத்தவும் நிண்ணை வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய்”5

உலக உயிர்களுக்கு வரும் இடையூறுகளைத் தூர நின்று வேடிக்கை பாராமல் விரைந்து சென்று அதைப் போக்க எண்ணுபவனே சன்மார்க்கி.

இதனை, ““வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை6 “இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்7 என்று திருக்குறள் ஈதலின் சிறப்பைக் கூறுகிறது. அறங்களிலேயே சிறந்தது உயிர்களுக்கெல்லாம் உணவளிப்பதுதான்.  எவ்வுயிரும் பட்டினியால் மடியாமல் பாதுகாக்கப்படவேண்டும்.  இந்த உண்மையை வலியுறுத்துவது மணிமேகலை,

“மக்கள் தேவர் எனஇரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓரறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல் என்றே அவரும்
தவப்பெரு நல்லறம் சாற்றினர் ஆதலின்
மடுத்ததீக் கொளிய மன்னுயிர்ப் பசிகெட
எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தானென்.”8

“பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி
மாதர்க் கோலத்து வலவையி னுரைக்கும்”9

“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”10

“கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லார் மற்று
அல்லாதார் யாரோ அறியேன் பராபரமே ”11

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.”12

என எல்லா அற நூல்களும் பசிப்பிணி போக்குதலையும் கொல்லா விரதத்தையும் போற்றுகின்றன. ஈஸ்வர பக்தி என்பது எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருத்தலை அறிதலாகும். ஜீவகாருண்யம் உண்டானால் அருள் உண்டாகும். அருள் உண்டானால் அன்பு உண்டாகும். அன்பு உண்டானால் சிவானுபவம் உண்டாகும். நேயம் ஐந்து வகை என்கிறார் வள்ளலார். இறை அனுபவம்தான் ஆன்மீகம். ஆன்மீகம் என்றால் உயிர்கள் தன்னலத்தைப் பெரிதாகக் கருதாமல் மற்ற உயிர்களுக்கும் பணிபுரிவதுதான் இதுவே வழிபாடு ஜீவகாருண்ய ஒழுக்கம். ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எனப்பெருமான் கூறுகின்றார். இதுதான் சுத்த சன்மார்க்கத்தின் இலட்சியம்,  ஐந்து நேயங்கள் நேயம் என்பதும் அன்பே! இந்திரிய நேயம் என்பது பொறி புலன்களிடம் அன்பு காட்டுவது, கரண நேயம் என்பது கொள்கையில் ஈடுபடுவது, ஜீவநேயம் என்பது மனிதாபிமானத்தைக் குறிப்பது, ஆன்ம நேயம் எல்லா உயிர்களிடத்தும் உருக்கம் காட்டுவது, சிவநேயம் என்பது கடவுள் வழிபாடு.

நடமாடும் உயிர்களுக்குச் சேவை

இந்திரிய நேயம் மிக்கவர்கள் தங்கள் உடலை அழுகு படுத்துவதிலும் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதிலுமே குறிக்கோளாய் வாழ்வர்.  இவ்வாறு வாழும் வாழ்க்கை சுயநலம் மிக்கதாகும்.  சாமானிய மனிதர்களின் வாழ்க்கை பெரும்பாலும் இவ்வாறே அமைந்து தங்கள் பிறப்பின் காரணத்தை அறிந்து கொள்ளாமலேயே வாழ்ந்து மறைவதாக உள்ளது.  கரண நேயம் மிக்கவர்கள் தாம் கொண்ட கொள்கையில் பிடிவாதமாய் இருப்பர். ஜீவநேயம் என்பது மனிதர்களிடையே தோன்றும் நேயமாகும். இங்கே மற்ற ஜீவராசிகள் மீது இரக்கம் என்பது பின்பற்றப்படுவதில்லை.  எல்லா ஜீவராசிகளும் தங்கள் இனத்தின் மீது காட்டும் நேயமும் இதுவே ஆகும்.  ஆன்ம நேயம் என்பது தம் இனம் மட்டுமின்றி எல்லா உயிர்களிடத்தும் காட்டும் நேயமாகும்.  வள்ளலார், புத்தர் போன்றோர் இந்நேயத்தோடு வாழ்ந்து மனிதர்களையன்றி எல்லா உயிர்களையும் மதித்துள்ளனர்.

“உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு”13

உயிர் காத்தலைத் தவமாகப் போற்றுபவர்களாவர் இவர்கள்.

“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”14

என்கிறார் திருமூலர். நடமாடும் உயிர்களுக்குச் சேவை செய்தலே இறைவன் நீக்கமற நிறைந்துள்ளான் என்று உணர்ந்தவர்களின் நிலையாகும். அடுத்து ஐந்து சிவநேயம் என்பது கடவுள் வழிபாடு.  உயிர்கள் மீது நேயம் காட்டுதலையே கடவுள் வழிபாடாகக் கொள்வதாகும். வள்ளற் பெருமான் கடவுளை வழிபடவே சாதனம் வகுத்துக் கூறியுள்ளார் அது சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவர் உண்டென்றும் அவர் ஒருவரே என்றும் அவரை உண்மையின்பால் வழிபட வேண்டும்.  அப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கத்துக்கு  உரிய  கடவுளை வழிபாடு செய்வதற்குச் சாதனம் இருவகை.  பரோபகாரம் – என்பது தேகத்தாலும், வாக்காலும், பொருளாலும் உபகாரம் செய்வன, சத்விசாரம் – என்பது நேரிட்ட பக்ஷத்தில் ஆன்ம நேய சம்பந்தமான  தயாவிசாரத்தோடு  இருப்பது. கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையையே  கடவுளிடம் விண்ணப்பித்தல் என்பதாகும். இவ்வகையில் நம்பெருமான் இறைவனிடம் தன் பல்வேறு விண்ணப்பங்களைக் கூறி இறையருளை வேண்டியுள்ளார் என்பது விளங்குகிறது.

 “அருள் அலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய்ச்சிவமே!”15

என அகவல் கூறுகிறது. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற தத்துவத்தின் பொருள் இதன் மூலம் விளங்குவதை அறிய முடிகிறது.  ஆன்ம நேயமே மனிதனின் அடையாளம் என்று வாழ்ந்து காட்டிய பெருமான் சாகாவரம் தான் பெற்று விட்டதாகவும் அதைப் பெறுவதற்கான வழியையும் நமக்கு எடுத்துரைக்கின்றார்.

“நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் – தேவாநின்
பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார்உளர்நீ சற்றே அறை.”16

“நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றோர்
சொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.”17

“யானே பொய் என் நெஞ்சும் பொய்
என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனை வந்து உறுமாறே!”18

என்கிறார் மாணிக்கவாசகரும். அதோடு மட்டுமின்றி மனித சமுதாயத்தின் குறிக்கோள் ஞானத்தை அடைவதே ஆகும்.  இன்பம் மனித வாழ்வின் இலட்சியமன்று. ஞானம் ஒன்றுதான் மனித வாழ்வின் இலட்சியம்.  இன்பமும், மகிழ்ச்சியும், துன்பமும் அழியக் கூடியவை.  எனவே உண்மையான ஞானத்தைப் பெறுவதே சிறந்தது.  அழியாத ஞானத்தைப் பெற வள்ளலார் கூறிய ஒழுகலாறுகள், ஜீவகாருணிய ஒழுக்கம், பசித்துயர் போக்குதல், ஆன்ம நேய ஒருமைப்பாடு, சாதி மதம் கடந்த சமரசம், ஒளி வழிபாடு என்பவை.  மேற்கண்ட உபாயங்களால் அழியாத உடம்பைப் பெறுவது உறுதி. இதனையே, உடம்பார் அழியில் உயிரார் அழிவர்”19 எனத் திருமூலர் குறிப்பிடுகிறார்.

“பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது
அற்றோர் உறுவது அறிக.”20

என்கிறது மணிமேகலை.  தாம் பெற்ற வரத்தைக் கூறுகையில்,

“சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.”21

ஒட்டுமொத்த திருவருட்பாவில் கூறப்பட்ட செய்திகளைப் பிள்ளைச்சிறு விண்ணப்பத்திலேயே கூறியுள்ளார் என்று அறுதியிட்டுக் கூறலாம். தன்னை மகனாகப் பாவித்து தனக்கு வரமருள வேண்டியதின் உண்மையான தவிப்பை, ஒவ்வொரு பாடலிலும் உணர முடிகிறது.

உயிரிரக்கத்தால் பிறர் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவற்றைக் கண்டபோது இரக்கப்படுதலே ஆன்ம உருக்கமாகும். எவ்வுயிரும் பின்பற்றக் கூடிய ஒழுக்கத்தை நிறுவிய வள்ளலார் மனிதன் இதை ஏன் செய்ய வேண்டும் என்று விளக்குகிறார். “மனிதப் பிறவி மிகச்சிறந்த பிறவி கிடைப்பதற்கு அறிய பிறவி மனித தேகத்தில் தான் ‘அருள்’ விளக்கம் விளங்குகிறது. முக்தி இன்பத்திற்குரிய தேகமிது – வழி சன்மார்க்கம். மனித தேகமே அறிவைப் பெறக்கூடியது மனிதனே பிறர் உணர்வை உணரக் கூடியவன்.22 இவ்வாறே இறையுணர்வையும் பெறக் கூடியவன்  முறையான சாதனம் பயின்றால் தான் இறைவனை உணரமுடியும் என்பதை இராமகிருஷ்ண பரமஹம்சர்,

“பாலில் உள்ள வெண்ணெய்யைக் கண்களால்
பார்க்க முடிகின்றதா! வெண்ணெய்யைக் காணவேண்டி
மத்து இட்டுக் கடைய வேண்டுமன்றோ! இதைப்
போலவே இறைவனைக் காணவேண்டினும்
சாதனம் பயில வேண்டும்”23

“ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர் செல்வமெல்லாம்
அன்றென்றிரு பசித்தோர் முகம் பார் நல்லறமும் நட்பும்
நன்றென்றிரு நடு நீங்காமலே நமக்கு இட்டபடி
என்றென்றிரு மனமே உனக்கே உபதேச மிதே.”24

இரக்கப்படுதலே ஆன்ம உருக்கம்

ஒரு மனிதனுக்குத் தெய்வ நம்பிக்கை உண்டாகிவிட்டால் செல்வத்தின் மீது உண்டான அவா நீங்கும். காணும் உயிர்களிலெல்லாம் பொருட்களிலெல்லாம் இறைவனையே காண்பான்.  அதனால்தான் எந்த உயிரும் துன்பப்படுவதை விரும்புவதில்லை.  தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து அவ்வுயிருக்கு வந்த துன்பத்தை அகற்றுகின்றான்.  கண்ணப்ப நாயனாரும் அவ்வாறே தன் கண்ணைப் பெயர்த்து இறைவனுக்கு ஏற்பட்ட துன்பத்தை அகற்ற முற்படுகின்றார்.  உடல் எடுத்ததன் பயனே உயிர்களைக் காவல் செய்யவே ஆகும்.

“தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.”25

என்று கேள்வி கேட்கிறார் வள்ளுவர்.

இன்றைய உலக சமுதாய சூழ்நிலையில் விரிந்த கண்ணோட்டத்தோடு மக்களுக்கு தொண்டு முறையில் ஆன்மீக அறிவை ஊக்குவிக்கவும்அதனைத் தடுத்துக் கொண்டிருக்கும் கற்பனை புகையையும்துன்பங்கள், சிக்கல்கள் இவற்றைக் குறைப்பதற்காகவும் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட நிறுவனமே ‘உலக சமுதாய சேவா சங்கமும்அதன் செயல்வழியாகிய மனவளக்கலையுமாகும். கர்ம  யோகம் என்னும் வாழ்க்கை நெறியை மக்கள் பண்பாடாக  வளர்ப்பது சிறந்ததோர் சீர்திருத்தத் திட்டமாகும்.26 என்கிறார் அருள் தந்தை யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி.

மனிதனுக்கு உரிமையுணர்ச்சி பிறவியிலேயே அமைகிறது.  ஆனால்  கட்டுப்பாட்டுணர்ச்சி  பயிற்சியால் தான் கிடைக்கிறது என்கிறார் மு.வ.  தங்கத்தைச் சுடச்சுட பல்வேறு உருவம் எடுப்பதுபோல் வைரம் பட்டை தீட்டத் தீட்ட ஒளிர்வது போல் மனிதன் எத்துணை துன்பங்கள் வந்தாலும் இறைவனையே கைவிடாது தொழுதல் வேண்டும். அடுத்தடுத்த துன்பங்களே அவனைச் சோதிக்கும் பயிற்சிகளாகின்றன.

வருத்தப்பட்டுப்  பாரஞ்சுமக்கிறவர்களே!  நீங்கள் என்னிடத்தில் வாருங்கள்நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.  நான் சாந்தமும் மனத் தாழ்மையுமாய் இருக்கிறேன். என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்27 என்கிறார் இயேசு கிறிஸ்து.

பல மதனிகளும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும்படி கூறுகின்றனர்.  துன்பம் இடைவிடாமல் நேர்ந்தாலும்   கொள்கையில் மாறாத அடியார்களின் கூட்டுறவால் ஞானசுத்த சன்மார்க்க சங்கம் காண விழைகிறார் வள்ளலார்.  அச்சங்கம் சார்பாகத் திருக்கோயில் கண்டிடவும்  நல்விளக்கமே   தரும  சன்மார்க்க  சங்கம்   நிடூழி  வாழவும் அந்தச் சங்கத்தில்தான் ஈடுபாட்டுடன் மனம் குளிர அருட்ஜோதி ஆண்டவனை நினைத்துப் பாடவும் ஆடவும் நமக்கு விருப்பமுள்ளதாய்ப் பிள்ளைச்சிறு விண்ணப்பத்தில் விளக்கி உரைக்கின்றார்.

”தங்கமே அனையார் கூடிய ஞான சமரச சுத்தசன் மார்க்கச்
சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் சார்திருக் கோயில்கண் டிடவும்
துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி துலங்கவும் சங்கத்தில் அடியேன்
அங்கமே குளிர நின்றனைப் பாடி ஆடவும் இச்சைகாண் எந்தாய்.”28

எனவரும் அடிகள் இதனை மெய்ப்பிக்கும்.

வள்ளலாரது சிந்தனை வளர்ச்சி

பிற சமயவாதிகள்,  தத்துவக் கொள்கைவாதிகள்,  துறவிகள், மதகுருமார்கள், மக்களுக்கு ஆன்மீக ஞானத்தை போதனை அளவில் புகட்டுவதைப்போலன்றி நடைமுறையில் பயன்பெற வழிவகுத்தவர் இவர்.  இதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர். தம் உடலையும் உள்ளத்தையும் உயிரையும் பல்வேறு ஒழுக்க நியதிக்கு உட்படுத்திப் புடம் போட்ட பொன்னாக ஆக்கிக் கொண்டு பிறரும் அந்த வாய்ப்பைப் பெற வழிகாட்டியவர். சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை ஏற்படுத்தி ஒளி வழிபாட்டைத் துவங்கி வைக்கிறார். இறைவன் உருவமற்ற ஒளிவடிவானவன் என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி”

என்ற தாரக மந்திரத்தையும் போதித்தருளினார் நம் பெருமான். இந்த மகாமந்திரத்தில் உள்ள எழுத்துக்கள் 33 தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களின் தொகையும் 33. நம் முதுகெலும்பிலுள்ள எலும்புகள் 33 மனித மொழிகளிலுள்ள எழுத்துக்களின் ஒளி வடிவங்களும் 33 தான் இவற்றை ‘ஒலியன்கள்’  என்பர். இம்மகாமந்திரத்தில் உள்ள மெய் எழுத்துக்களை நீக்கி எண்ணினால் வரும் எழுத்துக்கள் 25 இவை 25 அனுபவங்களைக் குறிக்கின்றன.  இவை ஜீவ அனுபவம் 5, பர அனுபவம் 5, நின்மல அனுபவம் 5, குரு அனுபவம் 5, இறை அனுபவம் 5 ஆக 25 அனுபவங்கள். சன்மார்க்கக் கொடி ஒன்றையும் நம் பெருமான் உருவாக்கியருளினார். சன்மார்க்கக் கொடியில் மேல் 3/4 பாகம் வெண்மைநிறம் கீழ் 1/4 பாகம் பொன்மை நிறம் மகாமந்திரத்தில் அருட்பெருஞ்ஜோதி 3 முறை வருவது வெண்மையைக் குறிக்கும். தனிப்பெருங்கருணை ஒரு முறை வருதல் பொன்மையைக் குறிக்கும். வெண்மை தூய்மையைக் குறிப்பதோடு அறியாமையையும் குறிக்கும்.  அறியாமை நீங்க வேண்டுமானால் தொடர்ந்து உயிர்ப்பணி புரிதல் வேண்டும்.

உயிர்ப்பணி புரியச் சத்திய தருமச் சாலை

1867-இல் சத்திய தருமச்சாலையை நிறுவி அணையா அடுப்பேற்றி வைத்து அங்கு வருவோர்க்குப்  பசியாற உணவளித்தாராம்.  இன்றும் அந்த அடுப்பு வடலூரில் எரிந்த வண்ணம் உள்ளது. பசித்தோரின் வயிறு குளிர்ந்த வண்ணம் உள்ளது. கொலை புலை தவிர்த்தோர் உறவினத்தார் என்றும்,

“உயிர்க்கொலையும் புலைப்பசிப்பும் உடையவர்கள்
உறவினத்தார் அல்லர் அவர் புறவினத்தார் அவர்க்குப்
பயிர்ப்புறும் ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
புரிந்த மற்றைப் பண்புரையேல் நன்புத வேலிங்கே
நயப்புறும் சன்மார்க்கம் அவர் அடையளவும் இதுதான்
நம் ஆணை என்றெனக்கு நவின்ற அருள் இறையே””29

உறவினத்தார், புறவினத்தார் என்று இரண்டு வகையான மனிதர்களைப் பற்றிப் பாடலில் கூறியுள்ளார். சாதி, சமய பேதமற்று மனிதர்களின் பசியைப் போக்க எழுப்பிய இத்தருமச் சாலையில் உறவினத்தார்க்கு (கொலை, புலை, தவித்தோர்) மட்டுமே உணவு என்று மாற்றி விடுவார்களோ என்றஞ்சிய வள்ளற் பெருமான் புறவினத்தார்க்கும் உணவிட்டுப் பசியாற்று விக்குமாறு ஆணையிடுகிறார்.  ஆணையிட்டு ஒருவரின் தீய குணங்களை யாராலும் மாற்ற இயலாது.  பசியாறியவுடன் புறவினத்தார் தம் குணத்தைப் பற்றி யோசித்து தாம் கூறிய வழியில் தானாகவே நடக்க முன்வருவார் என்று பெருமான் நம்புகிறார்.

பஞ்சோபாயம்

நயமாகப் பேசி நல்லவர்களாக்குதல், பொருளைக் கொடுத்து வசப்படுத்தல், வேறுபாடு காட்டி திருத்துதல், வணங்கி வழிக்குக் கொண்டு வருதல், இறைவனிடம் வழிபாடு செய்து திருத்துதல் என்பன பஞ்சோபாயமாகும். இதனை,

“முதல் நான்கு உபாயங்களைவிட ஐந்தாவது உபாயம்
மிகச் சிறந்தது, உயர்ந்தது.  தீய மனம் படைத்தவர்களை
சன்மார்க்கிகள் தகுந்த அணுகுமுறையை மேற்கொண்டு
பஞ்சோபாயத்தால் வென்று திருத்தி உயர்த்த வேண்டும்”30

“சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே”31

என்று மக்களின் தவறான செயல்களை எடுத்துக்கூறி வேறுபாடு காட்டி சன்மார்க்க நெறிக்கு அழைக்கிறார் நம்பெருமான்.

“பொய்விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ கொடிய முயற்றுலகீர்
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே!!”32

என்று பலவாறு கூறி சிறுமையினைத் திருத்த முற்படுகின்றார் பெருமான்.

“மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய்!
பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்லறம் செய்வோர் நல்லுலகு அடைதலும்
அல்லறம் செய்வோர் அருநரகு அடைதலும்
உண்டு என உணர்தலின் உரவோர் களைந்தனர்
கண்டனையாகு …”33

என்று சீத்தலைச்சாத்தனாரும் அறிவை மயக்கும் கள்ளையும் பிறவுயிரைக் கொல்லும் செயலையும் அறிவுள்ளோர் வெறுத்து அகற்றினர். மேலும், நல்ல அறங்கள் செல்வோர் துறக்கம் பெறுவர். தீய அறம் (பாவம்) செய்வோர் கொடிய நரகம் அடைவர் என்று கூறி எச்சரிப்பதைக் காணலாம். மணிமேகலை என்ற புத்தமதக் கொள்கையை வலியுறுத்தும்  காவியத்தில் மேற்கண்ட கருத்துக்கள் பல நிரம்பியுள்ளன. மதங்கள் வேறானாலும் மார்க்கங்கள் பலவானாலும் கொள்கைகள் ஒன்றே என்பதை அறிய முடிகிறது.  சத்திய தருமச்சாலையில் பசியாற்றுதல் என்ற உயர் தர்மம் ஒன்றே இன்றளவும் பின்பற்றப்பட்டு பெருமானின் ஆணைக்கும் கட்டுப்பட்டு வாழ்கின்றனர் பெரியோர்.

முதல் திருமுறை முதல் ஆறு திருமுறைகள்

நாயன்மார்கள் ஆழ்வார்களைப் போல் பாடல்களை மனமுருகப்பாட ஆரம்பித்தவர் தன் சிந்தனையில் செயலில் வேறுபட்டவராக நமக்குக் காட்சியளிக்கின்றார். முருகனின் அழகை வர்ணித்துப் பாடுகையில், சீர் கொண்ட வதனங்கள் ஆறும்34 என்று மனமுருகப் பாடியவர். மேலும் பிள்ளையாரை, திருமாலை,  வடிவுடைய  மாணிக்கவல்லியை,  தியாகேசப் பெருமானை என முதலில் உருவ வழிபாட்டில் மனம் லயித்தவராய் காண்கிற நம்மால் அவருடைய எண்ணம் வித்தியாசமான சிந்தனையில் ஆழ்ந்திருந்ததை அறிய முடிகிறது.

“வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில் குயிலாச்சுதடி – அக்கச்சி
மயில் குயிலாச்சுதடி
துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
வள்ளலைக் கண்டேனடி – அக்கச்சி
வள்ளலைக் கண்டேனடி
சாதி சமயக் சழக்கைவிட் டேனருள்
ஜோதியைக் கண்டேனடி – அக்கச்சி
ஜோதியைக் கண்டேனடி”35

என்ற வரிகள் மூலமாகத் தம்முடைய மாற்றத்தைத் தானே கூறுவதை நம்மால் உணர முடிகிறது. சர்வ அழகு பொருந்திய பறவை மயில் கண்ணுக்குத் தெரியக் கூடியது.  ஆனால், குயிலோ எங்குள்ளது என்றே நம்மால் அறிய முடியாது.  ஆனால், இனிய ஓசை மட்டும் நம் காதுகளில் வந்து ஒலிக்கும்.  இந்த அழகான உவமையை எழுத்துக்குக் கூறியுள்ள விதம் எண்ணி எண்ணி இன்புறத்தக்கதாகும். மனிதனின் மனம் ஒருமைப்பட ஒரு உருவம் தேவைப்படுவது உண்மை.  நாளாக ஆகப் பக்தியில் பயிற்சியில் மேம்பட மேம்பட உருவமற்ற ஒரு சோதி வடிவில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்கிறான் மனிதன் தானே இறைவனாக இரண்டற்ற ஒரு நிலைக்கு வந்து விடுகிறான்.  நம் பெருமானும் அவ்வாறே முதல் ஐந்து திருமுறைகளில் உருவ வழிபாட்டில் ஈடுபட்டவராய் காணப்படுகிறார்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன். ”36

என்பார் மாணிக்கவாசகர் சிவபுராணத்தில். ஓரறிவுடைய புல், பூண்டாக, ஊர்வன, பறப்பனவாக விலங்காக பிறவியெடுத்த உயிர் தன் பரிணாம வளர்ச்சியால் மனிதனாகப் பிறக்கிறது.  ஆறறிவு கொண்ட மனிதனுக்குப் பல சிறப்புகள் உள்ளன. ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ மானிடப் பிறவியில் மட்டுமே தன்னுயிர்போல் மன்னுயிர் போற்றும் ஆறாவது அறிவு உருவாகிறது. இரக்கத்தாலும் அன்பாலும் கருணையாலும் மனிதன் இந்த உலகையே ஆட்கொள்கிறான்.  தன் பிறப்பின் பொருள் தேடுகிறான்.  தான் யார் என்று ஆராய்கிறான்.  தன்னை உணர்ந்தவன் தலைவனை (இறைவனை) அறிகிறான்.  இவ்வுலகிற்குத் தான் வந்ததன் குறிக்கோளை மனதிற் கொண்டு செயல்படுகிறான். நம்பெருமானும் அவ்வாறே தன் இலட்சியத்தைக் கூறுகிறார். உலகில் பெரும்பாலான மக்கள் இரட்டை வாழ்க்கை நடத்துகின்றனர்.  ஒரு நூறு பேய்கள் ஆட்டமாடும் பிணக்காடாய் இருக்கும் உள்ளத்தை மறைத்து உடலை ஆடை அணிகலன்களால் அழகுபடுத்திக் கொண்டு வலம் வருகின்ற மக்களைப் போல் வாழ்க்கை வாழ்பவர்களைக் கிறிஸ்துவ வேத நூல், “வெள்ளையடிக்கப் பட்ட கல்லறை போல் இருப்பதாகக் கூறுகிறது37  இவர்களைத் திருத்தி உள்ளும் புறமும் மாற்றமின்றி தூயவராய் மாற்றவே தான் இவ்வுலகிற்கு  வந்துள்ளதாகக்  கூறுகிறார் பெருமான்.  இதையே திருக்குறள்,

”மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற” 38

என்கிறது.

“பெறற்கரிய மானிடப் பிறவியைப் பெற்றும்
இந்தப் பிறவியிலேயே இறையனுபூதி பெற முயலாதவன்
வீணில் பிறந்தவனே!”39

மானிடர் அனைவரும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையையும் பெற்று இறையனுபூதி அடைய வேண்டும் என்று பாடுபட்டவர் நம் பெருமானார். தான் கண்ட ஆனந்த  அனுபவத்தைப் பாடல்களாக்கினார் அன்பர்கள் இதைத் தொகுத்து நமக்குத் தந்துள்ளனர்.

திருவருட்பாவின் ஒவ்வொரு திருமுறைப் பகுதிகளும் படித்துப் படித்துப்பார்த்து எண்ணியெண்ணி இன்புறத்தக்கதாகும். பெருமானின் அனுபவங்கள் நமக்குப் பாடமாகவும் நற்பேறுடைய ஓர் வழியாகவும் உள்ளது.

“நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.”40

நல்ல வழியில் ஆராய்ந்து நாம் அருள் என்ற பண்பையே கடைப்பிடிக்க வேண்டும்.  ஏனெனில் பல வழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக விளங்குகிறது என்கிறது உலகப் பொது மறை. அந்த வகையில் திருவருட்பா நமக்குக் காட்டும் அருள்வழியில் அன்பு வழியில் நாம் நடந்தோமேயானால் வாழ்வில் இன்புறலாம்.

“யாவர்க்குமாம் இறைவற் கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே”41

முடிவுரை

உலகினில் பிறந்த மனிதர்கள் எல்லாம் மனிதர்கள் அல்லர். அடுத்த உயிரின் மீது யார் அதிக பாசமும் நேயமும் கொண்டு விளங்குகிறார்களோ அவர்களே சிறந்த மனிதர்கள் என்பதை வள்ளலாரின்  பாடல்களிலிருந்து  நாம் உணர்ந்து கொள்ளலாம். அவர், உயிர் இரக்கமே மற்ற பண்புகளைக் காட்டிலும் உயர்ந்த பண்பு என்கிறார்.  நடமாடும் உயிர்களுக்கு நாம் செய்யும் சேவை கடவுள் சேவைக்கு நிகரானது என்கிறார். உயிர்கள் வருத்தப்படும்போது வருந்துவதே ஆன்ம உருக்கம் என்கிறார். வள்ளலார் ஆரம்பத்தில் உருவ வழிபாடு கொண்டு வழிபட்டுப் பிறகுத தன் ஆத்ம ஞானத்தினால் ஒளி வழிபாட்டினை மேற்கொண்டார். அவ்வாறு ஒளி வழிபாட்டினை மேற்கொண்டவர் அனைத்து மத மனிதர்களும் சாதி, மதப் பாகுபாடின்றி  பசியிலிருந்து விடுபடச்  சத்திய  தருமச்சாலையை நிறுவினார். இதன் வழி அவர் ஓர் உயிருக்கு நாம் செய்ய வேண்டிய முதல் கடமை உணவளித்தல் என்பதை நமக்கு அறிவுறுத்துகிறார். பஞ்சோபாயம் என்பது கடவுள் வழிபாடு என்பது உயிர்களைக் கொல்லாது, துன்புறுத்தாது காத்தலே என்பதை உணர்த்துதலாகும். இதையே அனைத்துத் திருமுறைகளும் உணர்த்துகின்றன. இவற்றின் வழி வள்ளலார் பிள்ளைச்சிறு விண்ணப்பத்தில் மனிதநேயமே கடவுளை அடையவும் இறவாநிலை பெறவும் ஒரோவழி என்கிறார் என்பதை நாம் உணரலாம்.

”வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”
(திருவருட்பா பாடல்:3471)

அடிக்குறிப்புகள்

 1. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.469.
 2. மேலது, பா. எண்.269.
 3. திருவள்ளுவர், திருக்குறள், 71.
 4. இராமலிங்கர், ஜீவகாருண்ய ஒழுக்கம், ப – 8.
 5. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.210.
 6. திருவள்ளுவர், திருக்குறள், 221.
 7. மேலது, 223.
 8. ஊரன் அடிகள், புத்தரும் வள்ளலாரும், ப – 46.
 9. மேலது, ப – 93.
 10. மேலது, ப – 77.
 11. தாயுமானவர், தாயுமான சுவாமி பாடல்கள், ப – 314.
 12. திருவள்ளுவர், திருக்குறள், 260.
 13. மேலது, 261.
 14. திருமூலர், பெரியபுராணம், ப – 130.
 15. சேலம் சேக்கிழார், வள்ளலாரும் இராமகிருஷ்ணரும், ப – 142.
 16. அப்பாய் செட்டியார். கோ.அ, அருட்பெருஞ்சோதி அகவல், ப – 26, பா. எண்.2.
 17. மேலது, பா. எண்.1530.
 18. மாணிக்கவாசகர், திருவாசகம், ப – 377.
 19. டாக்டர்குருசாமி. மா.பா, வாழ்விக்க வந்த வள்ளலார், ப – 17.
 20. சீத்தலைச் சாத்தனார், புத்தரும் வள்ளலாரும், ப – 40.
 21. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.743.
 22. இராமலிங்கர், ஜீவகாருண்ய ஒழுக்கம், ப – 11.
 23. இராமகிருஷ்ண பாமஹம்சர், வள்ளலாரும் இராமகிருஷ்ணரும், ப – 108.
 24. பட்டினத்தார், சித்தர் பாடல்கள், ப – 65.
 25. திருவள்ளுவர், திருக்குறள், 251.
 26. யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, வாழ்க்கை மலர்கள், ப – 67.
 27. புதிய ஏற்பாடு, ப – 17.
 28. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.209.
 29. மேலது
 30. இராமலிங்கர், சன்மார்க்க பேருபதேசம், ப – 28.
 31. மேலது, ப – 1005.
 32. இராமலிங்கர், சன்மார்க்க பேருபதேசம், ப – 1476.
 33. ஊரன் அடிகள், புத்தரும் வள்ளலாரும், ப – 53.
 34. இராமலிங்கர், திருவருட்பா, பா. எண்.53.
 35. மேலது.2211.
 36. மாணிக்கவாசகர், திருவாசகம், ப – 121.
 37. புதிய ஏற்பாடு, ப – 36.
 38. திருவள்ளுவர், திருக்குறள், 242.
 39. இராமகிருஷ்ணர், ஞானமுரசு, ப – 29.
 40. திருவள்ளுவர், திருக்குறள், 242.
 41. திருமூலர், சித்தர் பாடல்கள், ப – 85.

பயன்பட்ட நூல்கள்

 1. அரு. இராமநாதன் (பதி), சித்தர் பாடல்கள், 13-ஆம் பதிப்பு – 2005, பிரேமா பிரசுரம், 35, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை – 24.
 2. ஊரன் அடிகள், சன்மார்க்க தேசிகன், புத்தரும்வள்ளலாரும், மு.ப. 2005, சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம், வடலூர்.
 3. தாயுமானவர்,  ஸ்ரீ தாயுமானசுவாமி பாடல்கள், மு.ப. 1980, ஸ்ரீ ராம கிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை – 639 115, எலமனூர் ரயில்வே ஸ்டேஷன், திருச்சி ஜில்லா.
 4. திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், திருஅருட்பிரகாச வள்ளலார் அருளிய திருஅருட்பா, ஆறாம் திருமுறை, மூ.ப. 2004, சிந்தாமணி பிரிண்டர்ஸ், மயிலாடுதுறை – வடலூர் – 607 303.
 5. திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், சன்மார்க்கம் பேருபதேசம், மு.ப.2003, திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர் – 607 303.
 6. பரிசுத்த வேதாகமம், பதிப்பு 2000-2001, இந்திய வேதாகமச் சங்கம், 206, மகாத்மா காந்தி, பெங்களுர் – 560 001.
 7. வேதாத்திரி மகரிஷி, வாழ்க்கை மலர்கள் (நாள் ஒரு நற்சிந்தனை), மு.ப. மார்ச் 2003, வேதாத்திரி பதிப்பகம், 156 காந்திஜி சாலை, ஈரோடு – 638 001.
 8. இராமகிருஷ்ணர், ஞான முரசு, மு.ப. 2001, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை – 4.
 9. சித்பவானந்தர் ஸ்ரீமத் சுவாமி (உ.ஆ.), திருவாசகம், மூ.ப. 1975, ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை – 639 115. எலமனூர் ஸ்டேஷன், திருச்சி ஜில்லா.
 10. சேக்கிழார். கொ. அ. (சேலம்) அப்பாய் செட்டியார், வள்ளலாரும் ராமகிருஷ்ணரும், மு.ப. டிசம்பர் 1988, மணிவாசகர் பதிப்பகம், 55. லிங்க தெரு, சென்னை – 1.
 11. திருமுருக கிருபானந்த வாரியார், பெரிய புராணம், மு.ப. 2003, குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், 107 சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப் பேட்டை, சென்னை – 2.
 12. திருஅருட்பிரகாச வள்ளலார், திருவருட்பா உரை – நடைப்பகுதி, மு.ப. 5.10.2000, திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்.
 13. குருசாமி. மா.பா, வாழ்விக்க வந்த வள்ளலார், மு.ப. 2006, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், நெ.41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 98.

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review): 

பிள்ளைச் சிறு விண்ணப்பம் உணர்த்தும் உயிர் நேயம் என்னும் இக்கட்டுரை திருவருட்பிரகாச வள்ளலாரின் அமுதனைய அருட்கோட்பாடுகளைப் பிழிவாக எடுத்து மொழிகிறது. வள்ளற் பெருமானின் உயிரிரக்கக் கொள்கை தோன்றுவதற்குக் காரணமான முந்தைய இலக்கியங்களின் சாரத்தையும் மேற்கோள்கள் வாயிலாக இக்கட்டுரை நிறுவியுள்ளது.

மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாக உள்ள உணவே பசித்த வயிறுகளுக்குக் கிட்டாத காரணத்தால் சிக்கல்களுக்கும் காரணமாக உள்ளது என்பது வள்ளற் பெருமானின் அடிப்படைக் கொள்கை. இதனைத் தொடக்கத்திலிருந்தே தமிழ் இலக்கியங்கள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கின்றன என்பதையும் இக்கட்டுரை நிறுவுகிறது.

வள்ளல் பெருமானின் வழிகாட்டுதலின்படி நடாமாடும் எல்லா உயிர்களுக்கும்  அன்பு செய்து அவை உற்ற துயர்களைத் தீர்ப்பதே சன்மார்க்கியின் தலையாய கடன் என்பதையும், அதற்கான வழிமுறைகளைத் தந்துள்ள திருவருட்பாக் கருத்துகளையும் இக்கட்டுரை எடுத்து மொழிகிறது. அவற்றுள் முக்கியமானதாக விளங்கும் பஞ்சோபாயம் சன்மார்க்கிகளுக்கான தனிச்சிறப்பு என்பதையும் உணர்த்துகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆறு திருமுறைகளாக உள்ள திருவருட்பாக்களின் மொத்தப் பிழிவும் அவர் இயற்றிய பிள்ளைச் சிறுவிண்ணப்பத்திலேயே நிறைந்திருக்கிறது என்பதை இக்கட்டுரை நிறுவ முயல்கிறது.

கட்டுரையாசிரியர் தம் கருத்துக்கு உரமாகச் சேர்க்கும் அருளாளர்களின் பாடல்களைப் பிழையில்லாமல் கையாளக் கற்றுக் கொள்ளுதல் அவசியம்.


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.