சேக்கிழார் பா நயம்தொடர்கள்

சேக்கிழார் பாடல் நயம் – 75 (அந்தணன் ஆம்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி

அந்தணனா  மெந்தைபிரா  னருமறையோர்  முன்பகர்வான்
 ‘’இந்தவேட்   கோவன்பால்  யான்வைத்த   பாத்திரத்தை
 தந்தொழியான்; கெடுத்தானேற் றன்மனைவி  கைப்பற்றி
 வந்துமூழ்   கியுந்தாரான்; வழிசெய்கின் றா’’னென்றார். 

உரை :

‘’அந்தணனாக வந்த எம்பெருமான், தில்லைவாழ் அந்தணர்கள் முன்னே சென்று சொல்லத் தொடங்கினார்.’’ இந்தக் குயவனிடம் நான் முன்பு கொடுத்துச் சென்ற திருவோட்டை  மீண்டும் தராமல் இருக்கிறான். அதனைத் தொலைத்துவிட்டான் என்றால், அந்த உண்மையை உறுதிசெய்யத் தன மனைவியின் கையைப் பற்றிக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய்ய இசைய வில்லை! இவ்வாறு இவன் பிடிவாதம் செய்கின்றான் ‘’ என்று முறையிட்டார்.

விளக்கம் :

சிவவேதியராகத்  திருநீலகண்டர் முன் வந்த சிவபெருமான் தாம் முன்னே அவ்வவடியாரிடம்  வைத்த திருவோட்டைத் திரும்பத்தருமாறு கேட்டார். அடியாரும் இல்லினுள் சென்று அவ்வோட்டினைத்   தேடினார். அவ்வோடு அங்கில்லை. அருகில் தென்பட்டோரிடம் அதுபற்றிக் கேட்டார். எவ்வகையிலும்  அவ்வொடு கிட்டாமையால் சிவவேதியரிடம், ‘’அவ்வோடு எங்கு தேடினும் கிட்ட வில்லை, யான் குயவன் ஆதலால் மண்ணால் புது ஓடு வனைந்து தருகிறேன்’’ என்றார். யான் கொடுத்த திருவோடே எனக்கு  மீண்டும் வேண்டும்‘’ என்று வேதியர் கேட்டார். அடியார் ‘’நான் பொன்னாலான ஓடு வேண்டுமானாலும் செய்து தருகிறேன்’’ என்றார். அதற்கு ‘’யான்கொடுத்த மண்ணோடே வேண்டும்’’ என்று பிணங்கினார். ‘’அப்படியானால் அந்த ஓட்டினைக்  காணவில்லை என்று உன் மைந்தன்  மேல் சத்தியம் செய்து கொடு!’’ என்றார். அதற்கு அடியார், தமக்கு மைந்தன் இல்லை என்றார். ‘’அப்படியானால் உன் மனைவியுடன் குளத்தில் மூழ்கி சத்தியம் செய்!’’ என்றார். ‘’யான்செய்த சூளுரையால் மனைவியுடன் இணைந்து  வாழவில்லை , ஆதலால் அதற்கும் வாய்ப்பு இல்லை’’ என்றார். வேதியர், ‘’நான் இப்போதே தில்லைவாழ் அந்தணர்களிடம் சென்று முறையிடுவேன்’’ என்றார் . அவ்வாறே முறையிட்ட  பாடலே இது. இதன் பொருள். இவ்வாறு முறையிட வந்த சிவபெருமான், ஆதி அந்தணன் ஆவார். இதனை ஞானசம்பந்தர்,

‘’தையலாள் ஒருபாகம் சடை மேலாள் அவளோடும்
ஐயம் தேர்ந்து உழல்வார் ஓர் அந்தணனார் உறையும் இடம்
மெய் சொல்லா இராவணனை மேல் ஓடி ஈடு அழித்து
பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே!’’ 

என்றும் ,

அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே,

என்றும்  பாடுகிறார்.  மேலும்  திருநாவுக்கரசர்,

‘’ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணும் ஆம்
மெய்யன் மேதகு வெண் பொடி பூசிய
மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே’’

என்று பாடுகிறார். சுந்தர மூர்த்தி சுவாமிகளோ,

‘’இந்துசேகரனே இமையோர் சீர் ஈசனே திரு ஆவடுதுறையுள்
அந்தணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே’’ 

என்று  பாடுகிறார். மாணிக்க வாசகர்,

‘’திருமாலும் பன்றியாய் சென்று உணரா திருவடியை
உரு நாம் அறிய ஓர் அந்தணன் ஆய் ஆண்டுகொண்டான் ‘’

என்று பாடுகிறார். திருமூலரோ,

‘’பிறவா நெறி தந்த பேரருளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதி பராபரன்
உறவு ஆகி வந்து என் உளம் புகுந்தானே’’

என்று பாடுகிறார், ‘’அறவாழி அந்தணன்தாள் சேர்ந்தார்க்கு‘’ என்ற திருக்குறள் இங்கே எண்ணத்தக்கது. பழைய வேதத்தை ஓதி வாழும் அந்தணர்களிடம் வேதியர் முறையிடப் போனதன்  நுட்பம்அறிந்து கொள்ளத்தக்கது. அந்தணர்கள் பசுஞானத்தைக்  கடந்து பதிஞானம் கைவரப்பெற்றவர் என்பதே  அது.

மேலும் பழங்காலத்தில் வழக்கு மன்றத்தில் முறையிடச் செல்பவர் தாமே தம் வழக்கினை, மன்றத்தில் முறையிடும் வழக்கம் இருந்தது. இவ்வழக்கில் பொது மக்களின் வழக்கம் சபையாரால் ஆராயப்பட்டது.

வழக்கிடப்பட்டார் நியாயசபை அல்லது அரச நீதியின்பேரால் முறையிடப் பட்டபோது, அதனுக்குட்பட்டுத் தாமே தம்மேல் வழக்கிடுவோரைத் தொடர்ந்து சென்று நீதி மன்றத்தினர் முன் நின்று தமது முறையையும் விளம்பித் தீர்ப்புக்கேட்டு நிற்றல் அந்நாளில் தமிழ்மக்களின் சமூக நிலை, இந்நாளில் நீதிமன்றத்தில் வருமாறு

எத்தனை கட்டளைகள் வரினும் அவற்றிற்கெல்லாம் தப்பிமீறி நிற்கும் நாகரிக  மெனப்படும் நமது சமூக நிலையினுடன் இதனை ஒத்துநோக்கி உலகம் திருத்தமடைக.

திருவிளையாடற் புராணத்திலேஅரசன் பேரால் பார்ப்பனன் முறையிட்டு வேடனைக் குற்றம்சாட்டியபோது அவனைத் தொடர்ந்து அரசன் முன்னர்த் தானே போந்த வேடன் செயலையும் இங்கு வைத்து உன்னுக. முன்னர் வல் வழக்கிட்ட கிழவேதியரைத் தொடர்ந்து வன்றொண்டரும் மணப்பந்தலில் இருந்த சுற்றத்தாரும் மணத் தொழிலை விட்டுத் திருவெண்ணெய் நல்லூர் நீதிமன்றத்தினை அணைந்தமையும், பிறவும் காண்க.

இப்பாடலால் வழக்கிட்டு வாதிப்போர் தமக்குள் முரண்படுதலும், அதனை நீக்க சபையிடம் செல்வதும், சபை விசாரணை செய்வதும் புலப்படுகின்றது. எப்போதும் அருளையே வழங்கும் சிவபிரான் மேல் வைத்த  அன்பினால் சிவவேதியரிடமும் அன்பு கொள்ளாமல்  வழக்கு  மன்றம்  செல்வது பாசஞானத்தின்  செயலே என்பதும் புலப்படுகின்றது.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க