நாங்குநேரி வாசஸ்ரீ

நாலடியார் நயம்

பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த வேளாண் வேதம் எனப் போற்றப்படும் நாலடியார் சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நீதி நூல். நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பை கொண்ட இந்நூலில் திருக்குறளைப் போன்றே அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகள் உள்ளன.

அறத்துப்பால்

1. செல்வம் நிலையாமை

பாடல் 1

அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று.

அறுசுவை உணவை இனியமனைவி
அருகமர்ந்து ஊட்ட ஒருகவளத்துக்கு மேல்
உண்ண முடியாது மறுகவளத்தை
உதறித்தள்ளும் செல்வந்தரும் ஏழையாய்ப்
பிறிதோர் நாளில் கூழ் வேண்டிப்
பிச்சையெடுக்க நேரிடும் என்பதால்
செல்வம் நிலையானது என்ற
சிந்தனையை விலக்கிடுவீர்.

பாடல் 2

துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.

குற்றமற்ற நல்வழியில் ஈட்டிய
குறைவற்ற பெருஞ்செல்வம்
சேரத் தொடங்கிய நாள் முதல்
சோர்வில்லா எருமைகள்பூட்டி உழுது
உண்டாக்கிய சோற்றை வறியவர்
உடனமர்ந்து பகிர்ந்து உண்பீர்.
நிலையில்லாத செல்வம் எவரிடமும்
நிற்காது வண்டிச் சக்கரம்போல்
உயர்த்தியும் தாழ்த்தியும் அதனை
உடையோரை ஆட்டுவிக்கும்.

பாடல்- 3

யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் ஏனை
வினை உலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள.

பெருமையுடன் யானை மீதமர்ந்து
படைகள்சூழ உலா வந்த செல்வம் மிக்க
அரசர்களும் வினைப்பயனால்
அவர்தம் நல்நிலை தாழ்ந்து மனையாளை
பகைவர் கடத்திச் செல்ல யாருமற்று
பதைபதைக்கும் வறுமை நிலையுற்றுத்
தாழ்வர் என்பதனால் பொருள் உள்ளபோதே
தானம் செய்து அற வாழ்க்கை வாழ்வீர்!. .

பாடல் 4

நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று

நிலைபெற்று நிற்கும் என
நினைத்த பொருளெல்லாம்
நில்லாமல் அழியும்
நிலை கண்டபின்னும்
நற்காரியங்கள் நிகழ்த்த
நாட்களைக் கடத்தாதீர்
விரைந்து குறையும் நம்
வாழ்நாட்கள் உணர்வீர் அதை.
கிளம்பிவிட்டான் எமன்
கோபத்துடன் கொண்டுசெல்ல.

பாடல் 5

என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம்
கொடுத்தாறு செல்லும் சுரம்

கிடைக்கப்பெற்ற ஓர் பொருளை
கடைக்காலத்திற்கு உதவுமென
பிடித்துவைத்துக் கொள்ளாது
பற்றற்று தானம் செய்தவர்கள்
கொடும் எமன் பின்னே
நரகம் செல்லாது விடுத்து
நல் இன்பம்மிகு சுவர்க்கம் எய்துவர்.

பாடல் 6

இழைத்தநாள் எல்லை இகவா; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; – ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின் நாளைத்
தழீஇம்தழீஇம் தண்ணம் படும்.

தம் வாழ்வின் முடிவை மாற்ற
தப்பிக்குதித்து ஓடி எமனிடம்
அகப்படாமல் வாழ்ந்தோர் எவருமில்லை
அளவற்ற பொருள் வைத்திருப்போரே!
வாரி வழங்குவீர் பிறருக்கு
விரைவில் பிணப்பறை
ஒலிக்கும் தழீம் தழீம் எனும்
ஓசையுடன் உங்களுக்கும்.

பாடல் 7

தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்; – ஆற்ற
அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின்; யாரும்
பிறந்தும் பிறவாதார் இல்

சூரியனை நாழிபோல் வைத்து
சூழ்ச்சியாய் வாழ்வை அளக்கும்
எமன் இறுதியில் நம் உயிரை
எடுத்துச் செல்வான் நிச்சயமாய்
ஆதலினால் அருளுடையவராய்
அறம் செய்து வாழ்வீர்
பொறுப்பற்று இவ்வழி நடவாதோர்
பிறந்தும் இவ்வுலகில் பிறவாதவரே..

பாடல் 8

செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வம் – எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும்.

இருக்கும் செல்வம் கொண்டு
இறுமாப்போடு அலையும்
அடுத்த பிறவிபற்றிய
அறிவற்றோர் செல்வம்
கருமேகத்தின் வாயில்
கணநேரம் தோன்றி
மின்னி மறையும்
மின்னல் போல்
இல்லாமல் அழியும்
இருந்த இடம் காட்டாமல். .

பாடல் 9

உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் – கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ
இழந்தான்என் றெண்ணப் படும்.

தானும் உண்ணாது
தக்க மதிப்பையும் பெறாது
உயர்ந்த செயல் செய்யாது
உறவினர் துன்பம் களையாது
வேண்டியவர்க்கு உதவாது
வாழ்பவனின் செல்வம்
இருந்தும் இல்லாததுபோல்
இரங்கத்தக்க நிலையில்
அய்யகோ! பொருளிழந்தானென
அனைவராலும் கருதப்படும்.

பாடல் 10

உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் – கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி

விண்தொடும் மலைநாட்டின்
வேந்தனே!
விரும்பியதை உடுக்காது
வாய்க்கு ருசியாய் உண்ணாது
நலிவுற்ற காலத்தும்
நல்லறம் செய்யாது
தேவைக்கு உதவாது
தேக்கிவைப்போர் செல்வம்
பல மலரின் தேனை
பாங்காகச் சேர்த்துவைத்து
பலன் எதுவுமில்லாமல்
பின்இழக்கும் தேனீ போலாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.