Advertisements
இலக்கியம்கட்டுரைகள்

எழுவகைப் பெண்கள் – 13

அவ்வைமகள்

தென்னிந்தியத் தலைமுடிக்காய் ஆலாய்ப் பறக்கும் உலகம்

பெண்களின் உடல்நலம் குறித்து நானும் அந்த ராணுவ அதிகாரியும் தொடர்ந்து செய்து வரும் உரையாடலில் அடுத்த பகுதியாக அமைவது பெண்களின் தலை முடி.

அவர் சொன்னார்: எங்கள் அமெரிக்கப் பெண்களுக்கு மிகப் பெரிய பிரச்சினை இருக்கிறது – அதுதான் தலைமுடிப் பிரச்சினை. முடிப் பராமரிப்புப் பொருட்களுக்காகவும் முடிப் பராமரிப்புச் சேவைக்காகவும் அவர்கள் அதிகப் பணம் செலவிடுகிறார்கள். அதிக நேரம் செலவிடுகிறார்கள். இருப்பினும் சரியான தலைமுடி ஆரோக்கியத்தையோ அல்லது உண்மையான பராமரிப்புச் சேவையையோ அவர்கள் அடைந்ததான நிறைவு அவர்களுக்கு ஏற்படுவதில்லை. எங்கள் பெண்கள் தலைமுடிக்காகச் செலவிடும் பணம் கொஞ்சநஞ்சமல்ல. ஆண்டுக்கு பில்லியன் கணக்கில் போகிறது. நீங்களே வலை தளத்தில் சென்று  பார்க்கலாம். நான் சொல்வது அத்தனையும் உண்மை! தலைமுடிப் பொருட்கள் என்கிற மாபெரும் வணிகத்துறை அமெரிக்கப் பெண்களை வைத்தே எழுந்து கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

வேலைக்குப் போய் சம்பாதிக்கும் பணத்தில் முக்கால்வாசி தலைமுடிக்கே போனதென்றால் இந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரம் என்னவாகும்?  இந்தப் பரிதாப நிலை எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்குக்கிறது என்றவர் மேலும் தொடர்ந்தார்.

இந்நிலையில் நான் இன்னொன்றையும் அறிந்து கொண்டேன். உலகில் தென்னிந்தியத் தலைமுடிக்கு ஏகப்பட்ட கிராக்கி – டிமாண்ட் இருக்கிறது. எத்தனை பணம் கொடுத்தும் உங்கள் தலைமுடியை வாங்கிச் சிகையலங்காரம் செய்து கொள்ள உலகமே துடிக்கிறது என்றறிந்தேன் என்றார்.

பொதுவாகவே உங்கள் பெண்களின் தலைமுடி கருப்பழகுடன் நீளமாக, அடர்த்தியாக, ஆரோக்கியமாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. இதற்கு ஜெனிடிக் காரணங்கள் உண்டா அல்லது பராமரிப்பின் இரகசியம் தான் காரணமா?

ஜெனிடிக் அதாவது மரபு சார் ரீதியாகப் பார்க்கிறபோது, எம் இன மக்களின் தலைமுடி கருப்பு நிறத்தில் சுருளற்று நேரிழைகளாக இருக்கும். முடி அடர்த்தியில் உலகில் நாங்கள் இரண்டாவதுதான் – வெள்ளையர்கள் தான் அடர்த்தியில் முதலிடம்.

ஆனால் எங்கள்  மண்டை மிகுந்த எண்ணெய்ப் பசையோடு இருக்கும் – முடி வெகு அடர்த்தியாக இல்லையென்றாலும் நல்ல அடர்த்தி இருக்கும். வெய்யிலில் இருந்து மண்டையைக் காப்பாற்றுவதற்காக இயற்கை செய்திருக்கிற ஏற்பாடுகள்தாம்  இவை இரண்டுமே.

அதே போன்று  கருப்பு நிறமும், வெய்யிலின் கொடை தான். எங்கள் முடியில் மெலனின் நிறமி செரிந்திருப்பதால் தான் கரு நிறம். மெலனின் நிறமிகளில் இரண்டு வகை  உண்டு: யூமெலனின் (eumelanin) மற்றும் பியூமெலனின் (phaeomelanin).

யூமெலனின் ஆழ்ந்த கருப்பில் உள்ள நிறமி. பியூமெலனின் வெளுத்த கருப்பில் உள்ளது. எங்கள் முடியில், யூமெலனின் அதிகம் இருப்பதால் ஆழ்ந்த கருவண்ணம் கொண்ட முடியாக அது தெரிகிறது. வெய்யில் பிரதேசங்களில் யூமெலனின் தோலிலும் முடியிலும் செறிந்து இருப்பது இயற்கையின் அற்புதமான ஏற்பாடு. எங்களுக்கெல்லாம் தோல் புற்றுநோய் வராது என்பதற்கும் எங்கள் தோலில் யூமெலனின் செரிந்திருப்பதுதான் காரணம்.

மேலும் எங்களுடைய தலைமுடியின் மயிர் ஒவ்வொன்றும் வட்ட அச்சில் சீராக உருவாகி ஒரு குழல் போல இருக்கும்.

எங்கள் முடிக்கு சுருள் தன்மை கிடையாது. நேர் மயிரிழைகளான அமைப்பு அதற்கு இருப்பதால், நீளவாக்கில் தங்குதடையின்றி அது அழகாய் அது வளர்கிறது.

ஆனால், முடியின் ஆரோக்கியமும் நீளமும், அடர்த்தியும் பெரும்பாலும் பராமரிப்பில் தான் உள்ளது.

உலகின் மிக உறுதியான தலைமுடி எங்களுடையது. எந்தவித சிகை அலங்காரத்துக்கும் எங்கள் தலைமுடி நெளிந்து வளைந்து ஒத்தாசை கொடுக்கும். மேலும், இழுப்புதிறன் அதிகம் உள்ளதால் வெகு சிக்கலான  முடிச்சுகள் – பின்னல்கள் என ஏகப்பட்ட தொந்தரவுகளையும் அது தாங்கி நிற்கும். அறுந்து போகாது – பிடுங்கிக்கொண்டு வராது. மேலும் எங்களது தலைமுடி எல்லா வண்ணங்களையும் அனாயாசமாய் ஏற்றுக்கொள்ளும். உலக மார்க்கெட்டில், தென்னிந்திய முடிக்கு உள்ள கிராக்கிக்கும் போட்டிக்கும் இதுதான் காரணம் என்றேன்.

ஓ அப்படியா? பராமரிப்பில் தான் உங்கள் முடிவளத்தை நீங்கள் காத்துக் கொள்ளுகிறீர்கள் என்று சொல்லலாமா?

ஆம்! எங்கள் முடி பராமரிப்பு முறைகள்  மிகவும் பழமையானவை என்பதோடல்லாது மிகவும் அறிவியல் பூர்வமானவை என்று தொடர்ந்தேன்.

வாரம் இரண்டு நாள் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கவேண்டும் என்பது கட்டாய நியதி, என்று நான் சொல்லிமுடிக்கும் போதே குறுக்கிட்டார்.

ஏற்கனவே எண்ணெய்த்தலை – அதற்கு எண்ணைத் தேய்த்துக் குளிப்பதா? இது சுத்த முட்டாள்தனம் – இதைப் போய் அறிவியல் முறை என்கிறீர்களே – என்றார்.

இதை நான் பின்னர் விளக்க இருந்தேன் – உங்கள் கேள்வி இதனை முதலிலேயே விளக்க வைக்கிறது – மிக்க நன்றி என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்.

முதலில், மண்டையில் எண்ணெய்ப் பசை எதனால் வருகிறது என்று பார்ப்போம். செபம் (sebum) எனப்படும் ஒரு பிசின் போன்ற கொழுப்பினை, நம் மண்டையின் புறத்தோல் (scalp) ஓயாமல் சுரந்து கொண்டே இருக்கிறது. செபச் சுரப்பிகள் தலை முதல் கால் வரை உடலின் மேல்தோல் முழுவதும்  இருக்கின்றன. ஆனால் சுரக்கப்படுகின்ற செபம் உடல் உறுப்புக்கு ஏற்றார் போல் கொஞ்சம் வித்தியாசப் படுகிறது. மண்டையில், முகத்தில், கழுத்தில், கைகளில், கால்களில் சுரக்கும் செபத்தின் தன்மைகள் வெவ்வேறாய் இருக்கும். உறுப்பின் பயன்பாடு, சுற்றுச்சூழலுக்கு அவ்வுறுப்பு இலக்காகும் காலம் – அதன் தீவிரம் ஆகியனவற்றைப் பொறுத்து செபம் மாறுபடுகிறது.

பொதுவாக, செபம் இலேசான மஞ்சள் வண்ணத்தில் உள்ளதொரு பிசினாகும். மண்டையில் சுரக்கும் செபத்தில் என்னென்ன இருக்கின்றன என்று பார்த்தால்:

  • த்ரிக்ளிசரைட் – திடப்பொருள்
  • கொழுப்பு அமிலங்கள் – திடப்பொருள்
  • கொலச்டரால் எஸ்டர்கள் – கூழ்மப் பொருள்
  • கொலச்டரால் – திடப்பொருள்
  • மெழுகு – திடகாத்திரம் இல்லாத திடப்பொருள்
  • ஸ்குவாலீன் எனப்படும் ஒரு சிறப்பு எண்ணெய்

செபத்தின் பிசின் தன்மைக்கு இந்தக் கலவையின் கூட்டுப் பண்பே காரணம். செபம் என்பது மண்டையையும் முடியின் வேர்க்கால்களையும் உயவுத் தன்மையோடு (lubrication) ஈரப்பதத்தில் வைத்துக் காப்பதற்காக சுரக்கப்படுவது.

மண்டையின் உள்வெப்பச்சூடு, வெய்யில் மற்றும் வெளிக்காற்றின் தாக்கம் ஆகியனவற்றை எதிர்த்து மண்டையில் சுரக்கும் செபம் ஓயாமல் போராடுகிறது. அதன் விளைவாக, செபம், ஓயாமல் உலர்ந்து வறண்டு போய், கெட்டித்துப் பாளம் பாளமாய் மண்டையின் மீது படிக்கிறது. இவ்வாறு மண்டியில் அது உலர்ந்து படியும்போது, வேர்க்கால்களை இறுகிப்  பிடித்து அமுக்குகிறது. பழைய செபம் மேலே உறைந்து வேர்க்கால்களை அடைத்து நிற்பதால், புதிய செபம் வெளியே வர முடியாமல் உள்ளிருந்து விசையுடன் மயிர்க்காலை வெளித்தள்ளி, தான் வெளிவர எத்தனிக்கிறது. ஏற்கனவே தன்மீது செபம் உறைந்ததால் நெளியமுடியாது விறைத்து நிற்கிற மயிர்க்கால் உள்ளிருந்து வெளிப்புறம் ஒரு அழுத்தமும், வெளியிலிருந்து உட்புறம் ஒரு அழுத்தமும் என்கிறதான இருமுனை அழுத்தத்தை அடைவதால், வேர்க்கால் தளர்ந்து – கழன்று – முடி உதிர  ஆரம்பிக்கிறது.

எனவே, உறைந்து போகும் செபத்தை வெளியேற்றுவது என்பது முக்கியமாகிறது.

நம்மைப்போலவே விலங்குகள் பலவற்றுக்கும் செபம் சுரக்கிறது. எடுத்துக்காட்டாக, பறவைகளுக்கு நம்மைப்போலவே தாராளமாக செபம் சுரக்கிறது அவற்றின் இறகுகளின் வேர்க்கால்களில்.  பறவைகள், தம்  அலகால் தம்  இறகை அடியிலிருந்து வெளியீடாகக் கோதிக் கோதி, செபத்தை இளக்கி, இளகிய செபத்தை  தம் சிறகின் மீது தீற்றி தீற்றி இறகின் வேர்க்கால்களை பராமரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவ்வாறு கோதி விட்டவுடன் அவற்றின் இறகுகள் பளபளப்பு ஏறி மின்னுவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த மினுமினுப்பு, அவற்றின் மீது படும் சூரிய ஒளியை எதிரொளித்து விடுகின்றன. பறவைகள் வெட்ட வெளியில் சதா இருப்பினும் அவை பாதிப்பு இன்றி இருப்பதன் காரணம் செபம் தரும் பாதுகாப்பு தான்.

பறவைகளைப் போலல்லாமல் மனிதனுடைய செபம் கொஞ்சம் பிரச்சனைக் குரியதான விடயமாகும்.

தட்டையான மண்டை உச்சியும், பெருத்தத் தலையுமாக நிமிர்ந்து நிற்க்கக் கூடிய ஒரே விலங்கு மனிதன் எனபதும் அவனுடைய இயக்கங்கள் பிற விலங்குகளை விட வேகத்தில் குறைவு என்பதாலும் – அவனுக்கு வெப்பத்தில் வியர்க்கும் கூடுதல் தகவமைப்பு உள்ளது என்பதாலும் சிக்கல்கள் விளைகின்றன.

அதனால்,  செபம் கெட்டியாவதும் வியர்வையுடன் சேர்ந்து, அது கசண்டாகி மண்டையில் படிந்து உலர்வதும் வெகு துரிதமாக நடந்துவிடுகிறது – கூடவே மனிதனுக்கு நாள்தோறும் நடக்கும் வளர்சிதை மாற்றத்தால் விலகும் இறந்த செல்களும் இக்கசண்டோடு சேர்ந்து இன்னமும் கெட்டிப் படுகின்றன.

எனவே, உறைந்து போகும் செபத்தை நீக்கி, மண்டையையும் மயிர்க்கால்களையும் தொடர்ந்து சுத்தமாய் வைக்க வேண்டிய நித்திய கடப்பாடு மனிதனுக்கு உள்ளது. அன்றேல், அவனுக்கு மண்டையின் ஆரோக்கியமும் – முடியின் ஆரோக்கியமும் கெட்டுப்போகும்.

இங்கு எண்ணெய்க் குளியல் எவ்வாறு உதவுகிறது என்று பார்ப்போம். செபத்தில் உள்ள கொழுப்புப் பொருட்கள் யாவும் பூரிதத் தன்மை (saturated) உள்ளவை – விரைவில் ஆவியாகி மண்டையை விட்டு வெளியேறி விடாமல் இருப்பதற்கான இயற்கை ஏற்பாடு இது.

எனவே நாம் ஒரு சவால் நிறைந்த செபத்தை மண்டையில் சுரக்கிறோம்.  இங்கு தான் சில எண்ணெய்களின் ஆற்றல் பற்றிய அறிவு மிக முக்கியமாகிறது. திட மற்றும் கூழ்மக் கொழுப்புகளைக் கரைக்கும் ஆற்றல் சில எண்ணெய்களுக்கு உண்டு. அவற்றுள் ஒரு சில எண்ணெய்களுக்குள் மட்டுமே நம் தலையில் பயன்படுத்தக் கூடிய தகுதிகள் உண்டு அவை: நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், இந்த நான்கு எண்ணெய்களுக்குள் இரண்டு எண்ணெய்கள் கொஞ்சம் பழசானால் காரல் (rancidity) எடுப்பவை: ஆலிவ் எண்ணெய் மற்று தேங்காய் எண்ணெய்.

விளக்கெண்ணெய், அதிக அடர்த்தி உடையது எனவே முழுதாய்த் தனியே தலைக்குப் பயன்படுத்தமுடியாது. ஆக, ஒரு எண்ணெய் மட்டுமே தலைக்கு வைக்க, மிகச்சிறந்த பயன்பாட்டுத் தகுதிகள் உடைத்ததாய்  இருக்கிறது; அந்த எண்ணெய் தான் நல்லெண்ணெய்; நல்ல எண்ணெய் என்பதால் இதற்கு நல்லெண்ணெய் என்று பெயர்.

தலையில் பயன்படுத்தும் படியான கூடுதல் தனிச்சிறப்பும்  நல்லெண்ணெய்க்கு உண்டு. அது என்னவென்றால், தலையில் சுரக்கும் செபத்தில் இருக்கிற அதே முக்கியப் பொருட்களான த்ரிக்ளிசரைட் மற்றும் கொழுப்பு அமிலங்களை, நல்லெண்ணெய், திரவ நிலையில் வைத்திருக்கிறது – அதுவும் மிக அதிகமான அளவில். மேலும்,  நல்லெண்ணெயிலே, வைட்டமின் K  தாராளமாக இருக்கிறது. இதனால், கொழுப்புத் தன்மை உடைய செபத்தைக் கரைத்தெடுக்கும் ஆற்றல் கொண்ட – ஒரு நேசனாய், நல்லெண்ணெய் விளங்குகிறது.

இருப்பினும் நல்லெண்ணெயை நாங்கள் தலைக்குளியலுக்கு அப்படியே பயன்படுத்துவதில்லை இஞ்சி, மிளகு, கைக்குத்தல் அரிசி சேர்த்துக் காய்ச்சி, அந்த எண்ணெயை, இளஞ்சூட்டில் தலையில் அழுத்திப் பரபரவெனத் தேய்த்து – எண்ணெய் மயிர்க்கால்களில் இறங்குமுகமாக, ஒரு வாத்தியத்தைத் தட்டுவது போல் லயத்தோடு தட்டி – ஒருமணிநேரம் ஊறிய பின்பு – கவனமாகத் தயாரிகப்பட்ட சிகைகாய்ப் பொடிபோட்டுக் குளித்து எழுவது வழக்கம்.

இவ்வாறான எண்ணெய்க் குளியலின் போது, தலைக்கு எண்ணெய் வைத்தபின் உடல் முழுவதும் இடு பொருட்கள சேர்க்காத தனி நல்லெண்ணெய், தடவி, உடல் தோல் – தசையை நன்கு உருவிவிடுவார்கள்.

இவ்வாறாக, தலையும் – உடலும் ஏகமாக ஒரு மணி நேரம் எண்ணையில் ஊறிக் குளிப்பதுதான்  எண்ணெய்க் குளியல்.

வாரம்  இருமுறை எனும்போது – ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனிதனி நாட்கள், பெண்களுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளி. ஆண்களுக்கு புதன் மற்றும் சனி.

இது என்ன புதுப் புதிராய் இருகிறதே – ஆணையும் பெண்ணையும் குளியலில் கூட வேறு வேறாய்ப் பார்க்கிறீர்களே – ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித் தனி நாட்களா – உண்மையாகவா சொல்லுகிறீர்கள்? என்றார்.

ஆமாம், ஆணின் உடல் – பெண்ணின் உடல் ஆகியன உட்ற்கூற்றிலும் – வளர்சிதை மாற்ற  வேகத்திலும், உடலின் வெப்ப உற்பத்தியிலும் வேறுபட்டவை என்பதால் அவர்கள் இருவருக்கும் பொருத்தமான கோள் அமைப்பு கொண்ட நாட்கள் தெரிவு செய்யப்பட்டன என்றேன்.

வெகு சுவாரசியமாய் இருக்கிறது – தலைமுடி விஷயத்தில், நான் உங்களிடம் நிறைய கேட்க வேண்டியதிருக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசுவோமே என்றேன்.

                                                 (மேலும் பேசுவோம்)

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க