உலகம் பெரிது
அண்ணாகண்ணன்
இந்தப் பாடலை ஆசிரியர் அண்ணாகண்ணன் குரலில் இங்கே கேட்கலாம்:
உலகம் பெரிது உலகம் பெரிது
எதற்கும் அஞ்சாதே – நீ
திலகம் உறுதி. எந்த நெற்றியில்
என்பது பிற்பாடே!
ஒருவர் மறுத்தால் ஒருவர் ஏற்பார்
கவலை கொள்ளாதே
ஒன்றில் குறைந்தால் ஒன்றில் கூடும்
எதற்கு கண்ணீரே?
ஒருவழி அடைத்தால் மறுவழி திறக்கும்
உத்திர வாதம்இது.
ஒருவிதை பிழைத்தால் மறுவிதை முளைக்கும்
வாழ்வின் விளக்கம்இது.
உழைப்பில் உண்மை; இலக்கில் மேன்மை
உனக்குள் இருக்கிறதா?
கனவு மெய்ப்படும்; கைவசம் ஆகும்
காலம் இருக்கிறது.
விழியே உறங்கு; உடலே உறங்கு
மனமே விழித்திருப்பாய்
வழியும் வாய்ப்பும் தோன்றும் கணத்தை
வாகாய் வளைத்திருப்பாய்!
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)