-மேகலா இராமமூர்த்தி

இந்த ஒளிஓவியத்துக்குச் சொந்தக்காரர் திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம். இதனைப் படக்கவிதைப் போட்டி 252க்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விருவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மானுடக் குழந்தைகளும், ஆவின் குழவியும் அருகணைந்து நிற்கும் அழகிய காட்சி நெஞ்சில் இன்பத்தைப் பூக்கச்செய்கின்றது.

இப்பூவுலகை இயற்கை படைத்தளித்தது அனைத்துயிர்களும் இன்பமாய் வாழ்வதற்கே. ஆனால் மானுடனோ உயிர்கள் அனைத்தையும் இரக்கவுணர்வின்றிக் கொன்றழிக்கின்றான் உணவுக்காக. அதன்விளைவாய்த் தீராத துன்பங்களையும் தேவையற்ற நோய்களையும் எதிர்கொண்டு கலங்குகின்றான்.

எந்த ஒரு வினைக்கும் இணையான எதிர்வினை உண்டு என அறிவியலும் அறவியலும் உரைப்பது பொய்ப்பதில்லை!

சிந்தனையைத் தூண்டும் இவ்வினிய படத்துக்குக் கவியெழுதித் தந்திருக்கின்றார்கள் வல்லமையின் வித்தகக் கவிஞர்கள்; அவற்றை ஒவ்வொன்றாய்ச் சுவைத்துவருவோம்! வாருங்கள்!

*****

”பெரியோரினும் விஞ்சிய பாசத்தோடு இணைந்திருக்கும் பயமறியாக் கன்றுகள் இவை!” என்று வியக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

கன்றிலே ஒன்றாய்…

பயமதை அறியாக் கன்றுகளைப்
பாசம் ஒன்றாய்ச் சேர்த்திடுமே,
வயலில் மேய்ந்திடும் பசுமாடு
வந்தே ஊட்டிடும் கன்றுக்கே,
வெயிலில் ஆடிய பிள்ளைகளும்
வந்து சேர்ந்தார் கன்றுடனே,
செயலில் பெரியோர் செய்யாததைச்
சின்னஞ் சிறிதுகள் செய்திடுமே…!

*****

”இளங்கன்றை இறுக்கிப் பிடிக்கும் இன்முகச் சிறார்களே! கண்ணனாய் என் கண்ணுக்குக் காட்சிதரும் நீங்கள், தெய்வமாய் மக்கள்தொழும் பசுமாட்டின் கன்றினைக் கட்டி வைக்காதீர்கள்! தாயோடு அதனைச் சேர்த்துவிடுங்கள்!” என்று தம்முடைய இரண்டு கவிதைகளிலும் அன்பாய் வேண்டுகோள் விடுக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

இளங்கன்றை இறுக்கிப் பிடிக்கும்
இளஞ்சிறார்கள் நீங்கள்தானோ
வாய்நிறையப் புன்னகைக் குவியல்
வாரியணைத்த மகிழ்ச்சியால்தானோ?

உங்கள் புன்னகையில் கள்ளமில்லை
அவைப் பூத்துக் குலுங்கும் பன்னீர்ப் பூக்கள்
நீங்கள் வாரியணைத்த கன்றும் கூட
வாகாய்த்தான் சிரிக்கிறதே!

கோமாதா நம் குலமாதாவெனப்
போற்றுகின்ற உலகமிது
அதன் கோமியமும் சிறந்த மருந்தென்று
சொன்னாரே முன்னோர் அன்று!

பால் மட்டும் பொழிகின்ற
பசுமாடாய் இல்லையவள்
நம்மையெல்லாம் இரட்சிக்கின்ற
காமதேனு தெய்வமவள்!

பசுஞ்சாணத்தை உரமாக்கி
எரிவாயுவும் அதிலுருவாக்கி
எண்ணிலடங்கா வளம் நல்கும்
கற்பக விருட்சமவள்!

பாய்ந்தோடக் காத்திருக்கும்
பசுங்கன்றை விடுங்கடா!
பரிதவிக்கும் அதன் தாயோடு
மனம் களிக்கப் புரளட்டும்!

*****

உங்கள் கைகளால் கட்டிப்போட்ட
கன்றினை அவிழ்த்து விடலாமே!
அது பாய்ந்தோடக் காத்திருக்கு!
பாசத்தாயைக் காண்பதற்கு!

ஆயர்பாடிக் கண்ணனாய் நீங்கள்!
ஆழிமழைக் கண்ணனும் நீங்கள்!
என் கண்களுக்குத் தெரிகிறீர்
கன்றினை அணைத்தபடி
நான் காணும் உங்கள் கோலம்

தாய்ப்பசு எதிரில் வருகிறதா?
தாவித்திரியக் கன்றும் முயல்கிறதா?
அதன் சுதந்திரத்தைப் பறிக்காதீர்!
கரம் கொட்டி அனுப்பி விடும்!
உறவோடு சேர்த்து விடும்!
தாயென்ற உறவோடு சேர்த்து விடும்!

*****

கள்ளமின்றித் திரிந்துவரும் கன்றும், பிள்ளைகளும் எங்கள் வாழ்வில் ஒன்றே!” எனக் கவிதையில் சமத்துவம் விதைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

வீட்டுக் கன்றுக்குட்டி

வீடு முழுதும் துள்ளிச் செல்லும்
காடு முழுதும் சுற்றித் திரியும்
நாடியாரும் வரும் போதெல்லாம்
ஓடிப் பதுங்கி ஒளிந்து அவரை
ஓரக்கண்ணால் பார்த்திருக்கும்
கள்ளங் கபடமின்றிக் கனிவாய் நின்றிருக்கும்
எல்லைகள் ஏதுமின்றி எங்கும் திரிந்து வரும்
தொல்லைகள் பல செய்தாலும்
சுகமாய் அவைகள் தோன்றும்
பிள்ளையும் கன்றும் ஒன்றாய் எங்கள்
வாழ்க்கையில் கலந்தே இருக்கும்!

கன்றுக்குட்டிமீது நீங்கள் பாடியிருக்கும் கவிதைகள் நன்று கவிஞர்களே! பாராட்டுக்கள்!

அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

எங்க வீட்டுக் கன்னுக்குட்டி இனிமையான செல்லக்குட்டி
திங்கப் புல்லைக் குடுத்திட்டாலும் தேடித்தாயை ஓடும்குட்டி
முட்டி முட்டிப் பால்குடிக்க மோதி மோதித் தாய்மடியை
எட்டிக் எட்டிக் கவ்வும் குட்டி எம்பி எம்பிக் குதிக்கும் குட்டி

எங்க வீட்டுப் பாப்பாவுக்கும் என்றுபாலை மிச்சம் வச்சி
பங்கு போட்டுக் குடிக்கும் குட்டி பாசமுள்ள ஆசைக்குட்டி
அங்க இங்க எண்ணு சொல்லி அடிக்கொருக்கா பாயுங்குட்டி
தங்கமான குணம்படைச்ச தாவி வந்து அணையும் குட்டி

கிட்டப்போயி அணைச்சிட்டாலும் எட்டித் திமிறி ஓடிடாது
கட்டிப் புடிச்சிக் கொஞ்சினாலும் காலையுதறி எகிறிடாது
பட்டுப்போல உடம்பும் நல்ல பாசங்கொட்டும் முகமும் கொண்ட
கெட்ட குணம் எதுவுமில்லாக் கீழ்ப்படியும் தங்கக் கட்டி

தாயை மேய அனுப்பினாலும் தானுமட்டும் தொழுவத்தில
காயக்காய நிக்கும் குட்டி கண்டு விட்டா எங்கமீது
பாயநின்னு தவிக்கும் குட்டி பாலை மறந்து மகிழும் குட்டி
தூய நெஞ்சில் அன்புகாட்டி துயர்மறந்து துள்ளும் குட்டி

மாலை நேரம் அம்மாவர மகிழ்ந்து கொஞ்சி செல்லங்காட்டி
பாலைக் குடித்துப் பசியைப்போக்கி பாப்பாவுக்கும் வைக்கும் குட்டி
வாலைத்தூக்கி நிமிர்த்திக்கோண்டு வாளி பாஞ்சி ஓடும்குட்டி
சோலையெல்லாம் துள்ளித்துள்ளி சோர்வில்லாமல் திரியும் குட்டி

பட்டுப்போல் உடம்புகொண்ட கன்னுக்குட்டியின் பாசத்தை, பசுவின் பாலைத் தான்மட்டும் குடிக்கவேண்டும் எனும் தன்னலமில்லாமல் பாப்பாவுக்கும் மிச்சம் வைக்கும் நேசத்தை, அதன் சேட்டைகளை அழகானதொரு ‘குழந்தைப் பாடலாக’ வடித்துத் தந்திருக்கும் திரு. கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 252-இன் முடிவுகள்

  1. வல்லமை படக்கவிதைப் போட்டி 252க்காக நானெழுதிய எங்க வீட்டுக் கண்ணுக்குட்டி என்று தொடங்கும் குழந்தைப்பாடலை வாரத்தின் சிறந்தபாடலாகவும் என்னைச் சிறந்த கவிஞராகவும் பாராட்டியுள்ள மேகலா இராமமூர்த்தியவர்களுக்கும, வல்லமை குழுமத்தினருக்கும், மற்றும் பங்குபற்றிய அனைத்துக் கவிஞர்களுக்கும் எனது அன்பு நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *