படக்கவிதைப் போட்டி – 253

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
முகம்மது ரபி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (12.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
தனித்திரு விழித்திரு…
பயண மெல்லாம் பாதியிலே
பறவை விலங்கினம் வீதியிலே,
துயரில் வீழ்ந்ததே மனிதயினம்
தூய்மை தானே தேவையினி,
பயந்தே யிருந்தால் பலனில்லை
படகை ஓட்டு தனிமையிலே,
வியந்திட வாழலாம் மீண்டெழுந்தே
விதைநெல் லாயிரு தனித்திருந்தே…!
செண்பக ஜெகதீசன்…
படக்கவிதை 253
கடல்நீரும் வானும்
கரையோரப் படகுகளும்
கரைத்திட்டு மணலும்
அக்காட்சி காணும் மனிதர்களும்
கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில்
நிறம் மாறித்தான் போயினவோ
அதன் உரிய வண்ணம் தெரிவதற்க்கு
ஒருபோதும் வாய்ப்பில்லை
கருப்பு நிறம் பணத்தளவில்
கருப்புநிறம் மனத்தளவில்
என்றொரு எண்ணம் வேண்டாம்
வெண்மை நிறம் பணத்தளவில்
வெண்மை நிறம் மனத்தளவில்
என்றே நாளும் வாழ்ந்திடலாம்
இனிதே நாளும் உயர்ந்திடலாம்
சுதா மாதவன்
விடயம்
கட்டுத்தறிக் காளைகளாய்க் கரைநிற்கும் படகுகள்
கொட்டியளக்கும் உழைப்பின் வியர்வைக்கடல் ஊர்திகள்
மட்டுப்படா முனைப்புகளின் விளைவுதரும் மானிகள்
கட்டுக்கடங்கா மகிழ்ச்சியைப் பரிசுதரும் கர்மயோகிகள்
கேள்விக்குறியாய் முதுகுவளையும் செயன்மை
அன்றாட வாழ்வின் ஆதாரம் தேடும் உயிர்மை
பொன்னோடம் ஏறிப் பொழுதுபோக்கும் இளமை
தன்னாவி இனிக்க ஏறத்துடிக்கும் குழுமை
தாவிச்செல்லும் இளமை வேகம்
தாங்கிநிற்கும் சுமையின் போகம்
ஓடநினைக்கும் குழந்தைச் சொந்தம்
மடுத்துக் காக்கும் தந்தை பந்தம்
எல்லாம்;
கண்ணாரக் காணும் காட்சி சொல்லும்
எண்ணாரத் தொகுப்பாய் அமையும் விடயம்
முரண்பாடு
மனக்கடலில் ஆசையலைப்
பேரிரைச்சல் போட்டு ஆட
முகந்தனிலே அமைதி காட்டி
மௌனத்தாழ்ப் போட்டிருந்தேன்
கயமையது உள்ளிருந்துக்
களிநடனம் புரிகையிலே
விடியல் நோக்கிக் காத்திருக்கும்
வேடமதைத் தாங்கி நின்றேன்
பொறாமைத் தீயில் நாளும்
பொசுக்கி வெந்து போனாலும்
அழுக்காறு ஏதுமில்லா
ஆன்றோனாய் காட்டிவைத்தேன்
பெருவெள்ளம் தாண்டி நின்றும்
கரைச்சேர மனமில்லா படகாக
ஆசை நீரில் தத்தளிக்கும்
தக்கையென உழலுகின்றேன்.
முரண்பாட்டின் மொத்த உரு
அசுரனாய் உள் வளர்ந்து நிற்க
முற்றும் துறந்த முனிவனென
முகங்காட்டி நிற்கின்றேன்
கட்டுமனம், பாய்மனம் ,உல்லாச மனம் எனப் பலமனம்
நினைவலைகளில் ஆடிகொண்டே இருப்பதனால்
எந்த மனமும் ஆழ்வதில்லை. ஆழ்ந்தது மீள்வதில்லை
பரந்த வானமும், பரந்த நீலமும் வழிந்து விழுந்தது போலிருக்கும்
பரந்த கடலில் சிறகை விரித்துப் பறந்த பறவைகள் போல்
தேடிச்சென்றது எதுவோ கிடைத்தது எதுவோ
சூரியன் தூங்கியதும் கரை திரும்பும் மனங்கள்
சிலசமயம் பாசம் படிந்து, சிலசமயம் உடைந்து
அல்லது கசியும் ஓட்டையோடு
எக்கருவி எந்த சூத்திரம் கொண்டும்
ஆசாரியர்கள் என்ன பண்படுத்தினாலும்
அலைகளும் அசைவுகளும் மட்டும் ஓய்வதில்லை
அடுத்தநாள் இருக்கும்போதும்…
கரையேறுதல் எப்போது?