நிர்மலா ராகவன்

(குழந்தைகளுடன் பழகுவது) 

‘எல்லாரும் வீட்டுக்குள்ளேயேதான் இருக்க வேண்டும் வெளியில் தலைகாட்டினால் தண்டனை!’ உலகெங்கும் பரவியிருக்கும் தொற்றுநோயைத் தடுக்கப் பல நாடுகளிலும் அமலாக்கப்பட்ட சட்டம் இது.

இதை ஒட்டி வலைத்தளங்களில் வெளியான துணுக்கு ஒன்றில், குழந்தைகளும், வீட்டு வளர்ப்பு நாயும் ஓடிப் பிடித்துக்கொண்டிருக்க, சத்தம் தாங்க முடியாததாக இருக்கும். `நான் என் அலுவலகத்துக்குப் போகிறேன்,’ என்று சொல்லிவிட்டு, அப்பா தன் மடிக்கணினியுடன் கழிவறைக்குப்போய் கதவைச் சார்த்திக்கொள்வார்!

சாதாரணமாகவே, குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டுவிட்டு, அவர்களை எப்படி ‘கட்டி மேய்ப்பது’ என்று புரியாத பல பெற்றோரின் நிலை இதுதான்.

“விடுமுறை வந்தாலே எனக்குப் பிடிப்பதில்லை. ‘அம்மா, அம்மா’ என்று என் குழந்தைகள் ஏதாவது கேள்வி கேட்டு, பிராணனை வாங்கும்”. இப்படிச் சொன்னவள் என் சக ஆசிரியை. `மாணவிகளைக் கேள்வி கேட்பதே நிம்மதி,’ என்ற மனப்பக்குவம் கொண்டவள்.

பலரும் அவளை ஒத்துப் பாடினார்கள். “இந்த மூன்று, நான்கு வயதுக் குழந்தைகள் எப்போதடா பெரிதாகப் போவார்கள் என்றிருக்கிறது! அவர்கள் கேட்கும் கேள்விகள்!”

“எனக்கு அந்தப் பருவம்தான் மிகவும் பிடிக்கும்,” என்றேன் நான்.

“எங்கள் குழந்தைகளை உன்னிடம் அனுப்புகிறோம். நீ அவர்களுடன் பேசிக்கொண்டிரு” என்று சிரித்தார்கள்.

படிக்கத் தெரியாத அந்த வயதில், தமக்குத் தெரியாதவற்றைக் குழந்தைகள் வேறு எப்படித்தான் அறிந்துகொள்வார்கள்?

இப்போதெல்லாம் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் கையில் பொம்மையோ, பம்பரமோ இருப்பதைக் காண முடிவதில்லை. அம்மாவுடைய கைப்பேசி அல்லது ஐ பேட்தான் அவர்கள் கையின் ஓர் இன்றியமையாத அங்கமாக விளங்குகிறது.

நாகரீகமான யுகம் என்பதால் மட்டுமல்ல. ஏதாவது திரையை வெறித்துக்கொண்டிருந்தால் குழந்தைகள் நம்மைத் தொந்தரவு செய்யாது, அதிலேயே ஆழ்ந்து போயிருப்பர், நாம் நிம்மதியாக இருக்கலாம் என்றெண்ணி, தம் பொறுப்பைத் தட்டிக் கழிக்க நினைக்கும் பெரியவர்கள்தாம் இந்த வாழ்க்கைமுறையின் முக்கியக் காரணம்.

இப்படி வளர்கிறவர்கள் பெற்றோரைவிட, திரையில் தாம் காண்பவர்களிடமிருந்துதான் கற்கிறார்கள். பொழுதுபோக்கிற்காகத் தயாரிக்கப்படும் படங்களில் உண்மையான வாழ்க்கை வெளிப்படுமா?

SESAME STREET போன்ற கார்ட்டூன்களால் ஆங்கில மொழி அறிவு வளரும். குழந்தைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து, திரையில் காண்பதை விளக்கினால், மொழியுடன் உறவும் பலப்படுமே! (நான் அப்படிச் செய்ய, மூன்று வயதிலேயே ‘காமிக்ஸ்’ படங்களைச் செய்தித்தாள்களில் படித்துப் புரிந்துகொண்ட குழந்தைகளும் உண்டு).

குழந்தைக்கும் உணர்ச்சி உண்டு

ஐந்து மாதக் குழந்தைக்குக்கூட அழுகை, சிரிப்பு மட்டுமின்றி, பிற உணர்ச்சிகளையும் வெளிக்காட்டத் தெரியும்.

கதை

‘குழந்தை என்ன இவ்வளவு குண்டாகிவிட்டது! இடுப்பெல்லாம் ஒரே சதை,’ என்று குழந்தையின் தந்தை அயர, தாயும் ஒத்துப் பாடினாள். ‘இதுக்கு எப்பவும் பசி. பசி வந்துட்டா ஒரேயடியா அலறும். உனே பால் கொடுக்கணும். குண்டாகாம எப்படி இருக்கும்?’

இந்த ரீதியில் அவர்களது பேச்சு தொடர, குழந்தையின் முகத்தில் சோகம். தன்னைப் பற்றிக் குறையாக ஏதோ பேசுகிறார்கள் என்றவரை புரிந்திருக்கும்.

“குழந்தைக்கு ஒரே வருத்தம். அதை வைத்துக்கொண்டு ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்?” என்று அங்கிருந்த நான் அதட்டினேன்.

தாய் திடுக்கிட்டு, அதன் முகத்தைப் பார்த்தாள். “நீ எப்படி இருந்தாலும் எனக்குப் பிடிக்கும்பா!” என்று சமாதானத்துக்கு இறங்கினாள்.

அழுகை பலவிதம்

பசி, தூக்கம், ஈர உடையை மாற்ற என்று ஒவ்வொரு தேவையையும் வெவ்வேறு விதமான அழுகையால் வெளிப்படுத்துவார்கள் குழந்தைகள்.

உண்மையான அன்பு என்பது அவர்களுடைய தேவையைக் குறிப்பால் உணர்ந்து, வேண்டுவதை உரிய காலத்தில் செய்வது.

கதை

என் தோழி தேவி காதலித்து, எதிர்ப்புகளைச் சமாளித்துக் கல்யாணம் செய்துகொண்டவள். விரைவிலேயே, சூதாடும் அவனுடைய போக்கு ஆத்திரத்தை ஊட்டியது. தன் குழந்தைமேல் அதை வெளிப்படுத்தினாள்.

“பிள்ளையை பேயாட்டம் போட்டு அடிக்கும்!” என்று தேவியின் தாய் என்னிடம் முறையிட்டாள். அவளுடைய ஆதரவில் இருந்த தாய்க்கு மகளைத் தடுக்கும் துணிவு இருக்கவில்லை.

“எதுக்கு அடிக்கிறது! பேசிப் புரிய வையேன்,” என்றேன்.

“பேசினா விளங்காதே!’ என்று சலித்துக்கொண்டாள்.

சின்னஞ்சிறு குழந்தைக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று புரிந்து, அவனையும் ஒரு பொருட்டாக மதித்து அவள் பேசியிருந்தால்தானே!

‘ஒன் வயசு இப்போ நாலு மணி நேரமா! எவ்வளவு பெரியவனாகிவிட்டே!’ என்று அன்றுதான் பிறந்த குழந்தையைக் கொஞ்ச, அதற்கு என் தொனி புரிந்து சிரித்தது.

(நான்கு வருடங்கள் கழித்து, ‘எனக்கு நாலு வயசு!’ என்று ஒவ்வொருவரிடமும் பெருமையாகப் பலமுறைச் சொல்லிக்கொள்வான். அவர்கள் கண்களைக் குத்தாத குறையாக அவனுடைய நான்கு விரல்கள் விரியும்).

நாம் பேசுவது புரிந்துதான் சிரிக்கிறதா, இல்லை, நம்மைக் கவனிக்கிறார்களே என்ற பெருமிதத்துடன் சிரித்துவைக்கிறதா?

என்னுடைய இந்தக் கேள்விக்கு இதுவரை எந்தக் குழந்தையும் பதில் சொல்லவில்லை.

நீட்டி முழக்கி, குழந்தை போலவே பேசுவதுதான் அதன் மொழி.

அருகிலிருக்கும் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்தாலும், அப்பேச்சு ஒரு சிசுவின் கவனத்தைக் கவராது.

எப்படிப் பேசுவதோ?

குழந்தைகளுக்குப் பதில் சொல்லத் தெரியாது என்ற நிலையில், கேள்விகளை அடுக்கக் கூடாது. நம் கேள்வியிலேயே பதிலும் அடங்கியிருக்க வேண்டும்.

‘நீலச் சட்டை போட்டிருக்கியா? ஜோரா இருக்கே!’

நம் பாராட்டில் குழந்தை அகமகிழ்ந்து சிரிக்கும்.

அதட்டலாகப் பேசினால், உதடு விம்ம அழுகை எட்டிப் பார்க்கும்.

வார்த்தைகள் புரிகிறதா, அல்லது தொனியா?

பேச வந்தாலும் கஷ்டம்தான்

குழந்தைகளுக்கு மொழிவளம் வந்தால் புத்தி கூர்மையாகும் என்று நிறையப் பேசுகிறோம். அதுவே சில சமயம் தொந்தரவாகிவிடுகிறது. வாய் ஓயாமல் பேசுவார்கள்.

ஒரு முறை, என் மகளைக் கண்டித்தேன். “சும்மா தொணதொணன்னு பேசாதே!”

சில நாட்களுக்குப்பின், நான் அவளிடம், “குளி, வா!” என்று அழைத்தேன். அவள் கவனிக்காத மாதிரி இருந்தாள். இன்னொரு முறை கூற வேண்டியிருந்தது.

“தொணதொண பேசறே!” என்று என்னிடம் குற்றம் கண்டுபிடித்தாள் மூன்று வயது மகள்!

நாம் செய்வது, சொல்வது எல்லாம் நமக்கே திரும்பி வரும். அதனால், கவனமாக இருக்கவேண்டும்.

தொலைக்காட்சியில் குழந்தைகள்

தொலைக்காட்சியில், மூன்று, நான்கு வயதுக் குழந்தைகளை வைத்து நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்.

வேடிக்கை என்று நினைத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துபவர்களிடம் மரியாதையின்றி, வயதுக்கு மீறி பேசுகிறார்கள் அக்குழந்தைகள். (‘நான்தான் அழகு. நீங்க அசிங்கமா இருக்கீங்க’).

பெற்றோர் பெருமையாகச் சிரிக்கிறார்கள். அவையினரும் அதிர்ச்சியை வெளிக்காட்டும் தொகுப்பாளரின் முகத்தைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்.

“எங்கப்பா வேஸ்ட். எப்பவும் சித்தியைக் கூட்டிக்கிட்டு வெளியே போயிடுவார்,” என்று ஒரு குழந்தை கூற, அந்த அப்பாவின் முகத்தில் அசடு வழிந்தது.

இந்த மாதிரி வார்த்தைகளை உபயோகிக்க குழந்தைகள் யாரிடம் கற்றிருப்பார்கள்?

‘நான் தொலைக்காட்சியில் தலைகாட்டிவிட்டேனே!’ என்ற பெருமிதத்துடன், பிறரை மதிக்கத் தெரியாது வளர்கிறார்கள் எதிர்காலச் சந்ததியினர்.

இவர்களை இப்படி வளரவிட்டது யார் தவறு?

கதை

ஏதோ விசேஷத்திற்காக என் உறவினரது வீட்டில் நிறைய பெண்கள் கூடியிருந்தார்கள். வழக்கம்போல், அருகில் இல்லாத பிற பெண்களைப் பற்றி – உறவினர்களோ, தெரிந்தவர்களோ — அவதூறாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பத்து வயதுப் பையனான சிவா அங்கே உட்கார்ந்திருந்ததை அவர்கள் லட்சியம் செய்யவில்லை. சிரித்தபடி சுவாரசியமாக அவர்களது வம்பைக் கேட்டுக்கொண்டிருந்தான் சிறுவன்.

“இப்படித்தான் குழந்தைகள் கெட்டுப்போகிறார்கள்!” என்று ஆக்ரோஷமாகக் கத்தியபடி, ஐம்பது வயதான உறவினர் வந்து, செத்த எலியை அருவருப்புடன் தூக்கி எறிவதுபோல, சிவாவின் காதைப் பிடித்து வெளியே இழுத்துக்கொண்டு போனார்.

அவன் வயதில் நானும் அப்படி எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறேன். ஆனால், ஒரு விதி: பெரியவர்களின் பேச்சு காதில் விழாதமாதிரி இருந்துவிட வேண்டும்.

சற்று விவரம் புரிந்ததும், எனக்கு நிறைய பேருடைய அந்தரங்க வாழ்க்கை, அதிலுள்ள அவலம், புரிந்தது. கதைகளுக்கான கருவை வெளியே தேடும் அவசியம் குறைந்தது.

இப்படி வளர்ந்த ஒரு சிறுமியை, `உனக்கு எப்படி இத்தனை விஷயங்கள் தெரிகிறது!’ என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டபோது, `அப்பாவும் அம்மாவும் பேசறதைக் கேட்டுண்டே இருப்பேன். குறுக்கே பேசாட்டா, திட்டு விழாது!’ என்றாள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *