திருச்சி புலவர் இராமமூர்த்தி

ஆவதென்   நின்பால்   வைத்த  அடைக்கலப்   பொருளை  வௌவிப்
பாவகம்    பலவும்  செய்து  பழிக்குநீ   ஒன்றும்  நாணாய் ,
‘’யாவரும்   காண  உன்னை   வளைத்துநான்   கொண்டே  யன்றிப்
போவதும்  செய்யேன் ‘’ என்றான்   புண்ணியப்  பொருளாய்  நின்றான்.

தில்லைமூதூர்க்  குயவராகிய  திருநீலகண்டரிடம் சிவவேதியராய் இறைவனே வந்து தம் கரத்தில் உள்ள  திருவோடு  ஒன்றனைத் தந்தார். ‘’இது சிறந்த ஓடு, இதனை உன் வீட்டில் பாதுகாப்புடன் வைத்து வை. பின்னர் ஒருநாள் வந்து இதைக் கேட்பேன்!‘’ என்றுரைத்துச் சென்றார். நீண்ட காலம் கழித்து அவரே திருநீலகண்டரிடம் வந்தார் . அவ்வேதியரை வணங்கி உரிய வழிபாடு செய்தபின்‘’ உங்களுக்கு அடியேன் செய்யத்தக்கது யாது?’’ எனக் கேட்டார்.

‘’முன்பு   உன்னிடம்  தந்து, பாதுகாப்பாய் வைத்திரு, என்று கூறி யாத்திரை சென்று மீண்டேன்! அந்தத் திருவோட்டை  இப்போது எடுத்துத் தருக!’’ என்று கேட்டார். திருநீலகண்டர் அந்தத் திருவோட்டை வீட்டினுள் வைத்த இடத்தில் தேடினார். அவ்வோடு அங்கில்லை. எல்லா இடங்களிலும் தேடினார். அக்கம் பக்கத்தில் இருந்தோரிடம் கேட்டுப் பார்த்தார். எங்கு  தேடியும்  அந்தத்   திருவோடு கிட்டவில்லை! மிகவும் வியந்து  அச்சம் கொண்டவராய் வேதியரிடம் சென்றார். ‘’எங்கு தேடியும் அந்தத் திருவோடு கிட்டவில்லை! யான் குயவன், ஆதலால்  வேறுஓர்  ஓடு செய்து  தருகிறேன்‘’ என்றார். அவர்பால்  பிணக்கம்  கொண்டவர்போல் அங்கேயே நின்று, நான் தந்த மண்ணாலான ஓட்டினைத் தருக!, வேறேதும் வேண்டா!’’ என்று கூறி நகராமல்  நின்றார். உடனே திருநீலகண்டர், ‘’மண்ணாலான ஓட்டைவிட மதிப்பு மிக்க பொன்னால் ஆன திருவோடு வாங்கித் தருகிறேன்!’’ என்றார். அடைக்கலப் பொருளை மீண்டும் கேட்டபோது தர இயலாத பழிக்கு அடியார் அஞ்சி, அவ்வோட்டை விடப்  புறமதிப்பு அதிகம் உள்ள பொன் ஓட்டைத்  தருவதாகக் கூறினார்!

அதுகேட்ட  வேதியர் “உன்னால் இனி ஆகக் கடவது என்ன இருக்கிறது? உன்னிடம் அடைக்கலமாக ஒப்புவித்த ஓட்டினைக் களவு செய்து, பலப்பல வஞ்ச நடிப்புச் செய்துஅதனால் வரும் பழிக்கு ஒரு சிறிதும் நாணமடையாதவனாயினாய்; யாவரும்காணும்படியாக உன்னை வளைத்துப் பற்றி (எனது பாத்திரத்தை வாங்கிக்கொண்டே யல்லாமல் இங்கு நின்று ஓர் அடி பெயர்த்து) போவதுங்கூடச் செய்ய மாட்டேன்“ என்று புண்ணியங்களுக்கெல்லாம் பொருளாய் நின்ற வேதியராகிய  இறைவன் கூறினார்.

விளக்கம் :-

இப்பாடலில்  ஆவதென்  என்ற சீர், உன் உயிரறிவு என்ற பசுபோதம் கெட்டது. இனிமேல் உன் செயலாவது என்ன உள்ளது? என்ற குறிப்புடையது. அடுத்துப் ‘பாவகம்  பலவும் செய்து‘  என்ற தொடர் உண்மையாக அல்லாமல் உண்மைபோலப் பாவித்துச் செய்த செயலைக் குறிக்கும். ஒன்றை வேறொன்றாக எண்ணிச் செய்யும் செயலே  பாவனை ஆகும். தானே பாவித்துச் செய்தல், பிறரை அவ்வாறு பாவிக்கும்படி  செய்தல் என இருவகைப்படும். பிறர் தன்  பாசாங்கை  உண்மை என நம்பும்படிச் செய்தல். இது வஞ்சனையாகும்.

இறையருளின் வண்ணமே நடந்து கொள்ளாமையால், ‘பழிக்கு அஞ்சும் நாணமும், அச்சமும் உன்னிடம் இல்லை’ என்று சிவவேதியர் குற்றம் சாட்டினார். இதனைப் ‘’பழிக்குநீ  ஒன்றும் நாணாய்‘’ என்ற தொடர் குறிப்பிடுகிறது. பொய் வழக்குப் போடுவது இறைவனின் கருனைச் செயலல்லவா?

‘பாவகம் பலவும் செய்து‘ என்ற தொடரில்  திருநீலகண்டத்தின் வைத்த உறைப்பேறிய பாவனை உபாசனையினாலே உலகப்பற்றை வென்றார் என்பதும், பழிக்கு நீ ஒன்றும்   நாணாய் என்ற விடத்து “நாடவர் பழித்துரை பூணதுவாக“ என்றாற் போல அப்பாவனையினாலேவரும் உலகநிலைப் பழிக்கு அஞ்சார் என்பதும் குறிப்பாக  விளங்குகிறது!

யாவரும் காண   என்பதற்கு திருநீலகண்ட நாயனாரது  விளக்கமான தொண்டை  உலகம் காணக் காட்டுமாறு  வந்தவர்  என்பது   குறிப்பு.

வளைத்து நான்கொண்டே யன்றிப் போவதும் செய்யேன் என்பதில் – உன்னையும் உன் மனைவியையும் சேர்த்துப் பிடித்துக் குடும்பத்துடன் என் உலகத்திற்கு உடன் கொண்டு போவதன்றி இங்கு நின்று அகல்வதில்லை என்ற பிற்சரிதக் குறிப்பும் காண்க.  இதுவே இறைவனின் சங்கற்பம்! இறைவன் அடியார்பால் கொண்ட பேரருளை இது குறிக்கிறது.

புண்ணியப் பொருளாய் நின்றான் – உயர்வாகிய பதிபுண்ணியம் செய்யும் யாவரும் பெறும் பொருளாக நின்றவர், புண்ணியங்களின் குறிக்கோளானவர். நின்றான் – நிலைபெற்றிருப்பவர். நீங்க இயலாமையின் நின்றான் என்றார். நாயனார் இதுவரை செய்த புண்ணியம் எல்லாவற்றிற்கும் இவரே பொருளாயினார் என்ற குறிப்புமாம்.

இப்பாடலால், இறைவனின் பேரருள், உறுதிப்பாடு, திருநீலகண்டரின் உள்ளத்து  உறுதி, அடியாரின் குடும்பத்தவர் பால் காட்டிய அருள் ஆகியவை விளங்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *