Category: பத்திகள்

பத்தி

  • நான் அறிந்த சிலம்பு – 75 (10.06.13)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை

    தாழை மடலவிழ்க்கும் கானற்சோலையில்
    கடல் விளையாட்டு கண்டு களித்தபோது
    ஊடி நின்ற கோவலன் பிரிந்து சென்றிட
    தான் மட்டும் தனியளாய் இல்லம் புகுந்தனள்
    கரிய மலர் போன்ற நீண்ட கண்களையுடைய மாதவி.
    பின் குயிலோன் அறிவித்த செய்தியை விரும்பியவளாய்
    வானுயர்ந்த மேல் நிலை மாடத்தின் ஒரு புறமிருந்த
    இளவேனில் காலத்துக்குரிய பள்ளியறையில்
    மன்மதனை எதிர்கொள்ளச் சென்றனள்.

    பெருமையும் சிறப்பும் பொருந்திய அணிகலன்களும்
    தென்கடல் முத்தும் பொதிகை மலைச் சந்தனமும்
    மன்மதனுக்கு எப்போதும் செலுத்தப்படும் காணிக்கைகள்.
    மன்மதன் வீற்றிருக்கும் அரண்மனையாகிய
    தனது முலை முற்றத்தில்
    அக்குங்குமக் கோலமிடப்பட்ட பரப்பினில்
    குற்றமற்ற சிறப்புடைய பொருட்களைக்
    காணிக்கையெனச் செலுத்தினள்.

    ஒன்பது வகைப்பட்ட நிலையினுள் முதன்மையான
    பத்மாசன நிலையில் அமர்ந்து
    சுரங்கள் குலைந்திடாத மரபினை உடைய
    தனது யாழது தொழுது வாங்கித்
    தன் வாயால் இனிய பண் பாடினள்.
    பண் அது மயங்கவே
    யாழினை மட்டும் மீட்டினள்.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 15 – 26
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

    படத்துக்கு நன்றி:

    http://kalaalog.com/2007/04/22/raja-ravi-varma/

    Share
  • நீயும், நானும், விஞ்ஞானமும் -2

    இன்னம்பூரான்

    (‘… ஆக மொத்தம், எழுதுவதற்கு விஞ்ஞான விஷயதானங்களுக்கு பஞ்சமில்லை…’)…

    ‘வெள்ளிப் பனிமலையின் மீது உலவுவோம்.அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம். சிங்களத் தீவினிக்கோர் பாலம் அமைப்போம். சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம். வங்கத்திலே ஓடி வரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம் வேறு பல பொருட்களும் குடைந்தெடுப்போம்’

    என்ற மஹாகவியின் சொப்பனங்களுடன் தொடர்புடைய விஞ்ஞான சாதனைகளை இன்று காண்கிறோம். ஆலய நிர்மாணத்துக்கான பொறியியல் சூத்திரங்கள் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் உதயம். அதையும் சுட்டி நான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை இராமானுஜம் மையம் வெளியிட்டது தான் இத்தொடருக்கு ஊக்கம் அளித்த நிகழ்வு. கணக்கு சாத்திரம் கிருஷ்ண பகவான் மாதிரி. எல்லா துறைகளும் அதற்கு கோபிகைகள். அது ஒருபுறமிருக்க, மற்றொரு சிந்தனை.

    மாயை (mysticism) மயக்கியது ஆதிமனிதனை; நம்மையும் தான். அதனுடைய ஈர்ப்பு/ஆகர்ஷணம் ஆழமானது. சிந்தனையின் முதல் பரிமாணம்,‘அதுவோ அல்ல இதுவோ?’ (speculation) என்ற அலைச்சல். விஞ்ஞானத்தின் முதல் படி,‘சோதனை/பரிசோதனை (experimentation). அதனுடைய குறிக்கோள், நிரூபணம் (validation). என்னுடைய இந்த குறும்சிந்தனையை பற்றுக்கோடாக வைத்துக்கொண்டு, தேடுபொறிகளில் ‘விஞ்ஞானம்/அறிவியல்’ என்ற சொற்களுக்குப் பதிவுகள் தேடினேன். பல்லாயிரம் கிடைத்தாலும், பெரும்பாலும் திசை மாறியவை. விஞ்ஞான அணுகுமுறையை (scientific temper) அறவே தவிர்த்தவை. ஆம். திருமதி சுபாஷிணி ட்ரம்மெல் கூறியது போல் தமிழில் விஞ்ஞானத்தை பற்றிய விரிவுரைகள் சொற்பம். அவற்றில் விஞ்ஞான அணுகுமுறையை பற்றி ஒன்று கூட தென்படாததால், அதை பற்றிய ஒரு பழங்கதையை கூற துணிவு பூண்டேன்.

    ஐம்பது வருடங்கள் முன்னால், நான் அடிக்கடி செல்லும் சைண்ட் லூயிஸ் நகரத்திற்கு ஆஷ்பி பிரபு (Lord Ashby FRS: Vice Chancellor of Belfast and Cambridge Universities) வந்திருந்தார். அங்குள்ள புகழ்வாய்ந்த வாஷிங்க்டன் பல்கலைக்கழகத்தில் ( அதன் ஜன்ம சரித்திரம் ஒரு நன்முத்து.) பெளதிக பேராசிரியர் ஆர்தர் க்ராம்டன் (1927 நோபெல்: electromagnetic radiation) அவர்களின் பாமரகீர்த்தி பாட. அடக்கம், பொறுமை, தன்னிச்சை விலக்கல், திறந்த மனம், விஞ்ஞானத்தின் தார்மீகத்தின் மீது அசையா உறுதி, சாதி மத, இன பேதங்களுக்கு அப்பாற்பட்டு இயங்குவது ஆகியவை தான் பேராசிரியர் ஆர்தர் க்ராம்டனின் வாழ்நெறி; அது தான் விஞ்ஞான அணுகுமுறையின் அடித்தளம் என்று அவரை பாராட்டி பேசினார். அந்த பிரசங்கத்தை இருபது வருடங்களுக்கு பிறகு நினைவு கூர்ந்த பேராசிரியர் மைக்கேலிஸ் (Anthony R. Michaelis) மேற்கூறிய வாழ்நெறியின் மற்றொரு உறைவிடம் ஆஷ்பி பிரபு என்று எழுதி, அவருடைய ‘தன்னுடைய அதிகாரம், ஆளுமை, தலைமை ஆகியவற்றை திணிக்காமல், மற்றவர்களை தன்வசம் படுத்தும் திறன்’ பல்கலைக்கழக நிர்வாகத்துக்குத் தூண் என்றார்.

    ஆம். இன்று விஞ்ஞானம், புலமை, ஆய்வு, கல்வி ஆகிய துறைகளிலும் நிர்வாகம் ( தமிழ்த்தாத்தா வாக்கின் படி ‘கார்வார்’) இன்றியமையாதது. ஆஷ்பி பிரபு தன்னுடைய அபார அனுபவத்தின் பயனாக, சொல்வதை கேட்போம். ஆர்வமிருந்தால் மீண்டும் சந்திப்போம்.

    ‘தற்காலம் பல்கலைகழகங்கள் கோடிக்கணக்காக வரவு செலவு செய்கின்றன. நல்ல நிர்வாகமிருந்தால் தான் அவற்றின் பயன் சமுதாயத்திற்கு கிட்டும். அரசு/தனியார் துறை/ராணுவம் போல் அல்லாமல், இங்கு கொள்கை தீர்மானங்களின் பிறப்பு, விஞ்ஞான பரிசோதனை பலகைகளில், நூலகத்தில், விருந்துண்ணும் வேளைகளில்…‘

    ~ஆஷ்பி பிரபு

    அவற்றுடன் கவனம் ( ஆப்பிள் விழுந்த கதை), கனவு (மரபணு சூத்திரத்தின் சித்திரம்), மாயை (புஷ்பக விமானம்), இதரவிதரம் (மின்விளக்கு) ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

    சித்திரத்துக்கு நன்றி:http://www.tribuneindia.com/2004/specials/lead4.jpg

     

    உசாத்துணை: http://garfield.library.upenn.edu/michaelis/title328.pdf

    Share
  • பிக்கோலிம் புளுகு – 4

    தேமொழி

    (தொடர்ச்சி)

    முன் குறிப்பு:
    இது விக்கிபீடியாவில் “பிக்கோலிம் கான்ஃப்ளிக்ட்” என்ற தலைப்பில் பொய்யாகப் புனைந்துரைக்கபட்டு, பின்னர் புளுகுக் கட்டுரை எனக் கண்டறியப்பட்டதால் நீக்கப்பட்ட பதிவின் தமிழாக்கம்.

    மராட்டியர்களின் பிக்கோலிம் ஊடுருவல்:


    சப்போரா ஆற்றின் வடகரையில் போர்சுக்கீசியர்களும், தென்கரையில் மராட்டியர்களும் தங்கள் நிலையைப் பலப்படுத்திக் கொண்ட பின்பு, இந்தத் தகராறின் இழுபறி நிலையை முடிவுக்கு கொண்டு வர போர் ஒன்றே உதவும் என்று இருதரப்பினரும் கருதினர் [12].  மராட்டியர்கள் இன்னமும் போர்ச்சுக்கீசியர்கள்  இப்ரம்பூர் நோக்கித் தங்களது படைகளை நகர்த்தி மராட்டிய எல்லையை ஊடுருவ முயற்சிப்பதாக எண்ணினார்கள். போர்ச்சுக்கீசியர்களோ கோவாவிற்கும் மராட்டியப் பேரரசிற்கும் இடையில் உள்ள பகுதியை ஒரு பாதுகாப்பான அரணாக உருவாக்கிக் கொள்ள விரும்பினர். இதற்கு அவர்கள் கோலாப்பூரையும், கோலாப்பூருக்கு வடக்கில் உள்ள பகுதியையும் அவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டியது  தேவையாயிருக்கும். ஆனால் இந்த நடவடிக்கை உண்மையில் போர்ச்சுக்கீசியர்களின் ஒரு திட்டமா அல்லது வெறும் வதந்தியா என்பது சரிவர உறுதியாகத் தெரியவில்லை [12]. பேர்நேம் பகுதியின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மராட்டியர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளால் சூழப்பட்டிருந்தது. இதனால் பேர்நேம் (Pernem) பகுதியில் போர் நிகழ்வது தவிர்க்க இயலாதது என்பதை இருதரப்பினரும் அறிந்திருந்தார்கள் [11] [13]. மராட்டியர்கள் பேர்நேமை பாதுகாக்கக்  கருதியிருந்த தங்களது ஆரம்பக் காலத் திட்டத்தைக் கைவிட்டு, பிக்கோலிமின் தென்பகுதிக்குத்  தங்கள் படையை நகர்த்தினர் [9].

    பிக்கோலிம் படைகளால் நன்கு பலப்படுத்தப்படா விட்டாலும், மையமாகவும், பான்ஞ்சிம் (Panjim) இல் இருந்து எளிதில் அடையக்கூடிய வழித்தடத்திலும் இருந்தது. மராட்டியர்கள் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில், வடக்குப் பகுதில் இருந்த நிலவழியாக, பரந்த வயல் வெளிகள் வழியாக, சப்போரா ஆற்றின் தென்பகுதியிலிருந்து பிக்கோலிம்மிற்குள் நுழைந்தனர் [9]. இவ்வாறு மராட்டியர்கள் பிக்கோலிமில் நுழைந்ததை அப்பகுதி வாழ் மக்கள் அறிந்திருக்கவில்லை, இத்தகவல் தெரியவராமல் அவர்கள் ஏமாற்றப்பட்டோ அல்லது மராட்டியப் படைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  அத்தகவல் மறைத்தோ வைக்கப் பட்டிருந்தது [9].

    ஆகஸ்ட் மாத முடிவில் மராட்டியக் காலாட்படை கன்சர்பால் (Kansarpal) மற்றும் லட்டம்பர்செம் (Latambarcem) நகர்களையும், மற்றொரு சிறிய படை  அருகிருக்கும் ஸல் (Sal) பகுதியையும் தாக்கியது. இந்த இரு ஊர்களும் முக்கியமான இந்து மதம் மற்றும் இந்துக் கலாச்சாரத்தின் மையங்களாகும் [9] [15]. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் அப்பகுதி அதிக எதிர்ப்பினைக் காட்டவில்லை. அதனால் போரில் மிகக் குறைவான இழப்புகளுடன் அப்பகுதியைக்  கைப்பற்றிய மராட்டியப் படைகள், அதனை மேலும் பலப்படுத்தி தங்கள் படைத்தளமாக மாற்றிக் கொண்டது [9]. சந்தடியின்றி நிகழ்ந்த இந்த மராட்டியப்படையின் ஆக்கிரமிப்பு பிக்கோலிம் நகரில் இருந்த நிகொலு டி  மெல்லோ (Nicolau de Mello) வின் கவனத்திற்கு வர ஒரு வார காலம் ஆனது.  ஆனால் வாஸ்கோடகாமா நகருக்கும், இப்ரம்பூர் மற்றும் அலோர்னா கோட்டைப் பகுதிகளில் இருந்த போர்ச்சுக்கீசியப் படைகளுக்கும் இத்தகவல் கிடைக்க மேலும் அதிக காலம் ஆனது [9].

    மராட்டியப்படை, தோடமார்க் (Dodamarg) பகுதியில் இருந்து பார்டஸ் (Bardez) ன் எல்லைப் பகுதி  வரை  சென்ற நெடுஞ்சாலையையும், அச்சாலைக்கும் சப்போரா ஆற்றிற்க்கும் இடையே உள்ள அனைத்து இடைப்பட்டப் பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது [9].  செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள், அலோர்னாவின் மேற்குப் பகுதியில் இருந்த பாலம் வழியாக போர்சுக்கீசியப் படையினர் சப்போரா ஆற்றைக் கடந்தனர் [9]. அவர்கள் உளவு பார்த்த பொழுது மராட்டியக் காலாட்படைகள் ஆற்றின் தெற்குப் பகுதியில் ரோந்து செய்வது தெரிய வந்தது, இதனால் நள்ளிரவில் போர்ச்சுக்கீசியப் படை ஆற்றைக் கடந்தது. இரவில் நடக்கும் ஆயுதத் தாக்குதல் திறனற்றதாகவும் ஆபத்து நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டது [9]. ஓசையின்றி முன்னேறிய போர்ச்சுக்கீசியப் படையினர்  கன்சர்பாலுக்கு வடக்கில் இருந்த மராட்டியர்களின் படைத்தளத்தை அதிகாலையில் தாக்கினர். எனினும் இறுதியில் மராட்டியப் படை போர்ச்சுக்கீசியர்களை புடை சூழ்ந்த பொழுது  வேறு வழியின்றி அவர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர் [9].

    போர்ச்சுக்கீசியர்களின் இந்தத் தோல்வி, போராட்டத்தில் ஒரு மிக முக்கியத் திருப்பமாக மாறியது.  அவர்களுக்கு சாதகமாக இருந்த நிலை பறிபோனதுடன், ஆயுதங்களையும் இழந்தனர். மராட்டியர்களை முன்னர் கோவாவில் இருந்து விரட்டிய படைகளும் அலோர்னா கோட்டையில் இருந்த தங்கள் ஆயுதக் கிடங்கை கைவிட நேர்ந்தது. மராட்டியர்கள் மீண்டும் எல்லைப்பகுதியில் இருந்து மற்றொரு தாக்குதலை மாலிங்கும்  (Maulinguem) மீது நிகழ்த்தினார்கள். அப்பகுதியில் இந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்ததாலும், அவர்கள் மராட்டியர்களை ஏற்றுக் கொண்டதாலும் மீண்டும் தாக்குதல் சுலபமாக மராட்டியர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது [9].

    போர்ச்சுக்கீசியர்கள் பிக்கோலிம், லம்கவோ (Lamgao), முல்கவான் (Mulgaon), வதாடியோ (Vathadeo) மற்றும் மராட்டியப் பேரரசிற்கும் சட்டாரி (Satari) க்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதிகளில் அவர்களது படைகளை நிலை நிறுத்தினர் [9].  மராட்டியர்களுக்கு பிக்கோலிம் மக்களிடம் இருந்த ஆதரவை நன்கறிந்திருந்த அவர்கள் பிக்கோலிம்மில் இருந்த மராட்டியர்களை நேரடியாகத் தாக்குவதைத் தவிர்த்தனர். போர்ச்சுக்கீசியர்கள் தங்கள் படைகளை நிறுத்தி, பாதுகாப்பினை பலப்படுத்தி இருந்த  ஊர்களில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதனால் அவை மராட்டியர்கள் வசம் இழக்கப்படும் வாய்ப்பும் குறைவாக இருந்தது [9]. அக்டோபரில் வதாடியோ தக்கப்பட்டபொழுது மீண்டும் போர் துவங்கியது [9].

    (தொடரும்)

    (பின் குறிப்பு: அடுத்து வர இருப்பது வதாடியோ போர் பற்றிய பகுதி, அத்துடன் அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று பகுதிகளுக்குப் பின் இக்கட்டுரை நிறைவு பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது.)

    படம் உதவி:
    அலோர்னா கோட்டை-  http://www.portugal-india.com/en/sites/default/files/alorna4.jpg

    ______________________________________

    References:
    [1] Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996. p 207. ISBN 9783161784200
    [2] Thompson op cit. p 208.
    [3] Sakshena, R.N, Goa: Into the Mainstream. Abhinav Publications, 2003. ISBN 9788170170051
    [4] Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868. ISBN 8189004077
    [5] Hunter, William W, The Imperial Gazetteer of India, Trubner & Co, 1886
    [6] Thompson op cit. p 199.
    [7] Thompson op cit. p 200.
    [8] Thompson op cit. p 201.
    [9] Srinivasan Vasantakulan, Bharaitiya Struggles, (1000 AD – 1700 AD), Voice of India, 1998. ISBN 9789132145612
    [10] Thompson op cit. p 203.
    [11] D’Souza David, Roots of conflict in Portuguese Goa, Dakini Books, 1961. ISBN 9782354278882
    [12] Thompson op cit. p 211.
    [13] Thompson op cit. p 212.
    [14] Thompson op cit. p 206.
    [15] Kansarpal (http://www.hindubooks.org/templesofindia/sarvam_sakti_mayam/goa/kansarpal.htm) Hindu religious and cultural locations
    [16] Thompson op cit. p 215.
    [17] Thompson op cit. p 219.

    Further reading
    Rule, William Harris, History of the Inquisition, Wesleyan Conference Office, London 1868
    Thompson, Mark, Mistrust between states, Oxford University Press, London 1996
    Sakshena, R.N, Goa: Into the Mainstream, Abhinav Publications, 2003

     

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (15)

    பவள சங்கரி

    தடையின்றிக் கேட்கவும், சிந்திக்கவும்
    சுயமாய் ஒன்றைக் கண்டறிய முடிகிறபோதும்தான்
    உண்மையில் நீங்கள் அறிவுத்திறன்
    உடையவராய் இருக்க முடியும்.
    ஜே.கிருஷ்ணமூர்த்தி – வாழ்வியல் ஞானி!

    ஒரு சிற்றரசன் ஒரு முறை ஒரு பேரரசனுடன் போர் புரிய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான். படை வீரர்களுக்கு பெரும் பதட்டமான சூழ்நிலை. காரணம், மிகச் சிறிய படையை உடைய தங்களால் அத்துனைப் பெரிய படையை எதிர்த்து நின்று போரிட முடியுமா என்ற அச்சமே. அரசனின் ஆணையையும் மீற முடியாதே. இந்த எண்ணமே அவர்களை துவண்டு போகச் செய்தது. இதனை உணர்ந்துகொண்ட அரசன் படை வீரர்களை அழைத்து, நம்மிடம் மன உறுதி இருந்தால் எத்தகைய பகைவனையும் சமாளிக்கலாம், நம் மனம் எத்துனை பலம் வாய்ந்ததாக இருக்கிறதோ அதைக்கொண்டுதான் எதிரியை வீழ்த்த முடியும், அதனால் எக்காரணம் கொண்டும் மனம் தளரக்கூடாது என்று நம்பிக்கையூட்டும் விதமாக பேசியதோடு, தாங்கள் தங்கியிருந்த காளிமாதா கோவிலின் முன் தங்களுடைய ஆன்ம பலத்தையும் சோதித்துக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டார். ஒரு நாணயத்தை எடுத்து சுண்டிவிட்டு, தலை விழுந்தால் நாம் போரில் எக்காரணம் கொண்டும் தலைகவிழ மாட்டோம் என்று உறுதியாகச் சொல்லி தேவி முன்னால் சங்கல்பம் செய்துகொண்டு அந்த நாணயத்தை சுண்டிவிட்டார். வீரர்கள் மிக ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தபோது அரசன் சொன்னது போலவே தலை விழுந்ததாம். உடனே வீரர்களிடம் உற்சாகம் பொங்கியதோடு, காளிதேவியின் அருள் தங்களுக்குப் பூரணமாகக் கிட்டிவிட்டது, இனி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக நம்பிய படை வீரர்கள் போருக்குத் தயாராகிவிட்டனர். அதே உறுதியோடும், உற்சாகத்தோடும் போரிட்டவர்கள் இறுதியாக வெற்றி மாலையும் சூடி வந்தனர். எல்லாம் முடிந்து அனைவரும் மகிழ்ச்சியாக நாடு திரும்பியவுடன், தளபதி அரசனிடம் மெல்ல வந்து, ‘அரசே, ஒரு வேளை நீங்கள் நாணயத்தை சுண்டிய பொழுது அதில் பூ விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும். வீரர்கள் போரிடவேத் தயங்கியிருப்பார்களே, காரியமே கெட்டிருக்குமே’ என்று ஆச்சரியமாகக் கேட்டார். அப்போது அரசன் புன் சிரிப்புடன் ஒன்றுமே பேசாமல் அந்த நாணயத்தை எடுத்துக் காட்டினார். அதில் இரண்டு பக்கமும் தலை மட்டுமே இருந்தது. அரசரின் சமயோசித புத்தியையும், வீரர்களுக்கு மன உறுதியை ஊக்குவிக்கும் விதமாக செயல் புரிந்ததற்கும் முதலில் அரசனின் தன்னம்பிக்கையும், மன உறுதியும் மற்றும் சரியான வழிநடத்தலுமே என்பதை புரிந்து கொண்டார். இந்த தலைமைப் பண்பு மட்டுமே ஒரு காரியத்தை வெற்றிப்பாதையை நோக்கிச் செலுத்துகிறது.

    நேர்மறையாக எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் நிலைத்து நிற்கக்கூடியது என்பது போல எதிர் மறையாக எடுக்கின்ற முயற்சிகள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெற்றி பெற்றது போன்ற மாயையை ஏற்படுத்தினாலும், அந்த வெற்றி நிலைத்து நிற்பதில்லை. ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்பது போல எதையாவது செய்து சாமர்த்தியமாக காரியம் சாதிக்க வேண்டும் என்று அவசரத்தில் அள்ளித் தெளித்த நீர்க்கோலமாக எடுக்கும் முடிவு நிரந்தரமான வெற்றியை அளிப்பதில்லை. ஒவ்வொருவரையும் பிரித்துவைத்து தனித் தனியாக காரியம் சாதிக்க முயற்சி செய்வதைக் காட்டிலும், அனைவரையும் ஒன்று கூட்டி, ஒற்றுமையுடன் பணிபுரிய வழி வகுத்துக் கொடுப்பதே சிறந்த தலைமைப் பண்பாம். அந்த வகையில் ஒரு வெற்றியாளருக்கு நேர்மறை எண்ணங்கள் மட்டுமே நிரந்தரமான வெற்றியைத் தேடித்தரும் என்பதே சத்தியம்.

    அகல உழுவதைக் காட்டிலும் ஆழ உழுதலே உத்தமம்!


    ஒருவருடைய குறிக்கோள் எத்தகையதாக இருப்பினும், அவர் எப்படிப்பட்ட தன்மையுடையவராயினும், பேரும், புகழும், அளிக்கக்கூடிய வெற்றியாளராக பிரகாசிக்க வேண்டுமெனில் முதலில் தாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று எதை, எங்கிருந்து ஆரம்பிப்பது மற்றும் எதை ஒருக்காலும் செய்யக் கூடாதது என்பதுதான். ஆரம்பத்தில் பல திட்டங்களை வகுத்துக்கொண்டு அதையனைத்தையும் முழுமையாகக் கவனம் கொள்ள முடியாமல், ஆரம்பித்த வேகத்திலேயே நிறுத்தவும் செய்கிறோம். நம்மால் முடியக்கூடிய சிலத் திட்டங்களை மட்டும் ஆரம்பித்து, அதில் தீவிர கவனம் செலுத்தி, சரியான பாதையை வகுத்து அதில் பயணம் செய்யும் வல்லமையை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். ஒரு திட்டத்தை ஆரம்பிப்பது என்பது எவருக்கும் எளிதான காரியம். ஆனால் அதனை செம்மையாக வழிநடத்தி வெற்றி காண்பதற்கு பெரிய அறிவுஜீவியாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் அதற்குத் தேவையான துணிச்சலும், தன்னம்பிக்கையும், கடுமையான பொறுமையும் அத்தியாவசியமாகிறது. கொஞ்சம் பொது அறிவும், நல்லொழுக்கமும், செய்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாத குணமும் இருந்தாலே போதும். தன் தகுதிக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப, சரியான ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்காக கடுமையாக, விடா முயற்சியுடன் உழைத்தாலே போதும். ஒரு சாதனை என்பது சாதாரண வெற்றியைப் போன்று உடனே கிடைப்பது அன்று. பொறுமையுடன் கூடிய நீண்டதொரு கடினமான பயணம் மட்டுமே சாதனையை அடையச் செய்யக்கூடியது. விதையை ஊன்றியவுடன் கனியை எதிர்பார்ப்பது என்பது சாத்தியமன்று. விதை துளிர் விட்டு, செடியாகி, மரமாகி பின்புதான் கனியைக் கொடுக்க வல்லது. அப்படியேதான் நம் திட்டமும் ஆழ உழுதால் மட்டுமே கனி கொடுக்க ஆரம்பிக்கும். ஏதோ ஒரு திட்டத்தை ஆரம்பித்து, அதனை பாதியிலேயே நிறுத்திவிட்டு அடுத்த திட்டத்திற்குத் தாவிக் கொண்டிருப்பவர்கள் இறுதியில் எதையுமே முழுமையாக செய்து முடிக்க மாட்டார்கள். உதாரணமாக முதலில் நூல் வியாபாரம் செய்வதாகத் திட்டமிட்டு, சொற்ப காலங்களிலேயே, தான் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்று முடிவு செய்து உடனே எண்ணெய் வியாபாரம் செய்யத் துணிந்து, பின் அதுவும் திருப்தியில்லாமல், ஜவுளி வியாபாரம் செய்கிறேன் என்று செல்பவர் ஒன்றில் நிலையான வெற்றியை எப்படி அடைய முடியும். இறுதிவரை அவர் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அதை விடுத்து முதலில் ஆரம்பித்த நூல் வியாபாரத்தில் எப்படி முன்னேற்றம் காண்பது என்பதை வரையறுத்து அதற்கான முழு முயற்சியை கடுமையான உழைப்புடன், அதே எண்ணத்துடன் செயல்பட்டால் ஒருநாள் அதன் எல்லையைத் தொட்டு சாதனையாளராக வெளிப்படுவார்.

    எடுத்துக்கொண்ட பணி சிறியதோ அல்லது பெரியதோ எதுவாக இருப்பினும் அதை நுணுக்கமாக கவனம் கொண்டு, அழகாக ஆரம்பித்து, அதே அழகுடன் இறுதி வரை முழுமையாகச் செய்து முடித்தால் அது கொடுக்கும் நம்பிக்கை அதுவே நம்முடைய வழமையாக மாறிவிடக்கூடும். தொடர்ந்து எடுக்கக்கூடிய பணிகள் அனைத்தும் தானாகவே வெற்றிப்பாதையை நோக்கி நடக்க ஆரம்பித்துவிடும் என்பதே சத்தியம்!

    ஆழமற்ற தேடல் என்பது அர்த்தமற்ற அனுபவம்!

    படங்களுக்கு நன்றி:

    http://www.allposters.com/-sp/Motivational-Persistence-Posters_i796514_.htm

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(60)

    சக்தி சக்திதாசன்

     

     

     

     

     

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்களுடன் இவ்வார மடலை வரைகிறேன்.

    இலக்கியம் என்பது மனைத வாழ்க்கையுடன் இன்றியமையாத வகையில் இணைக்கப்படிருக்கிறது. எமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு கணத்தினையும் இலக்கிய உணர்வோடு பார்க்கும் போது அப்பாஅர்வை எம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் சோகத்திலும் சுகமான, இதமான எண்ணங்களை தவழ விடுகிறது.

    இதனால் தான் கவிஞர்கள் சோகத்திலும் அழகிய கவிதைகளை ஆழமான உணர்வுகளோடு வரைஒயும் வல்லமை பெற்றவர்களாகிறார்கள்.

    இலக்கியம் எனும் சொல்லைக் கேட்டவுடனே அதனை ஏதோ அர்த்தம் புரியா கனமான விடயம் எனும் வகையில் பார்க்கும் பலரைக் காணக்கூடியதாக இருக்கிறது.

    ஒவ்வொரு மொழியின் பெருமையும் அதனுடைய இலக்கியத்திலேதான் வெளிப்படுகிறது.

    இலக்கியத்தை ரசிப்பவர் மொழியின் மீது வெறி கொள்வதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை எனலாம்.

    ஒவ்வொரு மனதின் சிந்தனையின் வெளிப்பாடு அதனுடைய உணர்வுகளின் அதீதம் இலக்கியத்தின் பால் திரும்புமானால் எவர் மனதிலும் தீவிரவாதம் தலைதூக்கும் வாய்ப்புகள் அருகிறது,

    இன்றைய நவீன உலகினிலே காணப்படும் வெறித்தனமான போராட்டங்கள் பலவும் மதத்தையோ அன்றி மொழியையோ சார்ந்ததாக இருப்பதன் காரணம் இலக்கிய உணர்வுகள் பெரும்பான்மையோரின் மனங்களில் குன்றிப்போயிருக்கும் காரணத்தினாலேயே என்று சொன்னால் அது மிகையாகாது.

    எதற்காக இந்த ஆழமான முன்னுரை என்று கேட்கிறீர்களா ? இதோ வருகிறேன் விடயத்திற்கு.

    இங்கிலாந்து அரசாங்கத்தினால் “Poet Laureate” அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இலக்கியவாதி எனும் வகையிலான ஒரு கெளரவப் பட்டம் , பெயர் பெற்ற இலக்கியவாதி ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இக்கெளரவப் பட்டம் மூன்று வருட காலத்திற்கு ஒவ்வொருவருக்கும் வழங்கப் படுகிறது.

    இவர்கள் நாட்டின் பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் அந்நிகழ்வுகளைப் பெருமைப்படுத்துவதோடு நாட்டின் இலக்கிய வலர்ச்சியைப் பற்றிய கருத்துக்களை முன்னிலைப் படுத்தும் வகையில் முதன்மையானவர்களாகத் திகழ்கிறார்கள்.

    இவர்களின் பங்களிப்புகளும் இப்படியான ஒரு கெளரவப் பட்டத்தை அரசாங்கமே முன்னிலைப் படுத்தி வழங்குவதும் மக்களின் மனதில் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் என்பதே இதன் ஆதரவாளர்களினது வாதமாகும்.

    இதே போல ஒரு கெளரவப் பட்டத்தை ” Children’s Laureate “ அதாவது குழந்தைகளுக்கான இலக்கிவாதி எனும் வகையில் இளையோர் இலக்கியத்தை முதன்மைப் படுத்தும் எழுத்தாளர்களுக்கும் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

    இம்முறை இக்குழந்தைகளுக்கான இலக்கியவாதி எனும் கெளரவப் பட்டம் முதன்முறையாக ஒரு கறுப்பு இனத்தவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இப்பட்டம் ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டிருப்பது மேலும் ஒரு சிறப்பாகக் கணிக்கப்படுகிறது.

    இப்பட்டத்துக்குரிய பெண்மணி 51 வயதே நிரம்பிய ” மலோரி பிளாக்மன் (Malorie Blackman) “ எனும் ஒரு முன்னனி எழுத்தாளராவார்.

    1962ம் ஆண்டு பிறந்த இவர் “நீல் பிளாக்மன்(Neil Blackman)” எனும் ஸ்கொட்லாந்து நாட்டுக்காரரைக் கணவனாகவும் எலிஸபெத் எனும் 17 வயதுப் பெண்ணின் தாயருமாவார்.

    “ Noughts and Crosses “ எனும் பதின்ம வயது இளையோருக்கான ஒரு தொடர் நாவல்களி எழுதி மிகவும் பிரபலமடைந்தார்.

    இவருடைய நாவல்களின் சாரம் இங்கிலாந்தில் இலைமறைகாய் போல இருந்து வரும் இனவேற்றுமை, நிறவெறி என்பனவற்றைத் துல்லியமாக எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருப்பது இவரது தனித்தன்மையாகும்.

    இலக்கிய உணர்வு சிறுவர்களின் உள்ளத்தில் சிறு பராயத்திலிருந்தே வளர்க்கப்படுவது அவசியம் எனும் இவர் இத்தன்மையை வளர்த்தெடுப்பதற்கு பெற்றோரும், ஆசிரியரும் குழந்தைப்பருவத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிடங்களாவது குழந்தைகளுக்கு கதைப்புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.

    இன்றைய கணணி உலகத்தில் இலக்கியமும் விஞ்ஞானமயப்படுத்தப் பட வேண்டியது அவசியம் என்று கூறும் இதனாலேயே இளையோரை இலக்கியத்தில் ஈடுபடச் செய்யலாம் என்று அறிவுறுத்துகிறார்.

    புத்தகங்கள் படிக்கும் வழக்கம் ஒன்றே தன் வாழ்க்கையில் தனக்கு பல சந்தர்ப்பங்களுக்கான கதவுகளைத் திறக்கக் காரணமாயிருந்தது என்பதே இவரது கருத்தாகிறது.

    ஒவ்வொரு சிறுவர்கள் கைகளிலும் சிறுவர்களுக்கான வாசிகசாலை அங்கத்தவர் அட்டை இருப்பது அவசியம் என்கிறார். இதைப் பெற்றோர் செய்யத்தவறினால் அதற்கான பொறுப்பைப் பாடசாலைகள் ஏற்றுக்கொள்ல வேண்டும் என்பது இவரது வாதமாக இருக்கிறது.

    நாவல்கள் எழுதியது மட்டுமல்லாமல் லண்டன் தொலைக்காட்சியில் இளையோருக்கான ஒரு முன்னனித் தொடரான “பைக்கர் க்றோவ்(Byker Grove)” எனும் தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

    ஒரு நாட்டின் மொழியின் தொன்மை அந்நாட்டின் இலக்கியச் செழுமையிலேயே தங்கியுள்ளது. இவ்விலக்கியம் செழுமையடைய வேண்டுமானால் அச்சமூகத்தின் இளைய தலைமுறை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

    இளையோர்கள் உலகம் இன்று கணனி எனும் மையத்தினுள் சிக்கிக் கிடக்கிறது. இலக்கியம் தன்னை இக்கணனி வலைக்குள் பிணைத்துக் கொண்டால்தான் இளையோர்கள் இலக்கியத்தின் முக்கியத்தினை உள்வாங்கிக் கொள்வார்கள்.

    இளையோர்களுக்கான நாவல்கள் மூலம் புகழ் பெற்ற இத்தகைய முன்னனி எழுத்தாளர்களை முன்னிலைப் படுத்துவதன் மூலம் அவர்கள் இச்செயல்களின் தாக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்கிறார்கள்.

    இதை ஆதரித்துச் செயல்படுத்தும் இங்கிலாந்து அரசாங்கத்தை பாராட்டாமல் இருக்க முடியாது

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

     http://www.thamilpoonga.com

    Share
  • நாகரிக மனிதனின் உணவுகளும், காட்டுமிராண்டி வாழ்க்கைமுறையும்! (4)

    செல்வன்

    இந்தத் தொடரில் கான்சர், டயபடிஸ், மாரடைப்பு, அல்சர், ஆஸ்த்மா முதலிய வியாதிகள் அனைத்தும் ஆதிமனிதனுக்கு இல்லை என்பதும் அதற்கு காரணம் அவன் வாழ்க்கை முறையும், உணவுமே எனும் கருத்து ஆராயப்பட்டது.

    குண்டு, ஒல்லி என்பதன் உளவியலை ஆராயாமல் இந்த தொடர் நிறைவுறாது. குண்டாக இருப்பது நம்மைப் பொறுத்தவரை விரும்பதக்கது அல்ல. ஆனால் இத்தகைய உளவியலே நாகரிக மனிதனின் போக்குதான். 20ம் நூற்றாண்டு பத்திரிக்கைகள், ஹாலிவுட், பார்பி பொம்மைகள் ஆகியவை உருவாக்கிய ஒரு செயற்கை பிம்பம் சின்ன இடை, மெலிந்த உடல் தான் அழகு என்பது. பரிணாமரீதியில் குண்டாக இருக்கும் மனிதன்தான் பஞ்சகாலத்தில் உயிர் பிழைக்கக் கூடியவன். நம்மைப் பொறுத்தவரை நம் ஜீன்களுக்கு பசுமைப் புரட்சி நடந்ததும், அம்மா உணவகத்தில் 1 ரூபாய் இட்லி கிடைப்பதும் இன்னும் பதிவாகவில்லை. நம் ஜீன்களுக்கு நாம் இன்னும் ஆதிவாசியாக குகையில் இருக்கிறோம் என்பதுதான் தெரியும். அதனால் அதிக உணவு கிடைத்தால் அதைக் கொழுப்பாக மாற்றி அதனைச் சேமித்து, வரும் குளிர்காலத்துக்கு நம்மை உயிர்பிழைக்க வைக்கும் முயற்சியை எடுக்கிறது.

    அதனால் என்னதான் உடல்பயிற்சி செய்தாலும், பட்டினி கிடந்தாலும் நவீன காஸ்மாபாலிடன் பத்திரிக்கையில் இருப்பது மாதிரி மாடல்களின் உடல் அழகை நாம் அடைவது சாத்தியம் இல்லை. அதாவது இயற்கை முறையில். மார்பக அறுவை சிகிச்சை, ஸ்டிராய்டு மாதிரி உட்கொண்டு சிக்ஸ்பேக் வைக்கலாம். ஆனால் இயற்கை உணவில், இயற்கை வாழ்க்கை முறையில் அடையப்படும் அழகு என்பது வேறு.

    ஆதிமனிதன் செதுக்கிய பெண் சிற்பம் ஒன்று வில்லன்டாஃர்ப் நகரில் கிடைத்தது. அதில் இருக்கும் பெண் உருவம் “வில்லன்டாஃர்ப் வீனஸ்” என அழைக்கபடுகிறது. அன்றைய அழகியல் மதிப்பீட்டின்படி குண்டாக இருக்கும் பெண்தான் அழகானவளாக கருதப்பட்டாள். இன்று இந்தப் பெண் அழகற்றவளாக கருதப்படுவாள். இன்றைய காலகட்டத்தில் ஒல்லியாக கருதப்படும் மேற்கத்திய அழகியல் மனப்பான்மை ஆதிமனிதனுக்கு இல்லை.

    அதனால் நீங்கள் பின்பற்றும் உணவுமுறையை மாற்றுமுன் “எதை அடைவதற்கான நோக்கமாக இந்த உணவுமுறையை நாம் பின்பற்றுகிறோம்” என்பதை தெளிந்துகொள்வது முக்கியம்.

    ஆதிமனித உணவு முழுக்க மாமிசமாக இருப்பதால் சைவர்கள் என்ன செய்வது என கேள்வி எழுவது இயல்பு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சைவர்கள் இல்லை. சைவம் என்பது கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் விவசாய நாகரிகம் பல்கிப் பெருகிய பின், கால்நடைகளை பாதுகாக்க வேண்டி விவசாய சமூகம் கடைபிடித்த வாழ்க்கை முறை. பழங்குடிகளால் காட்டில் முழு சைவர்களாக வாழ்ந்திருக்க இயலாது. சைவ உணவில் முழு ஆரோக்கியத்தை அடையலாம். கலோரிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் எடைகுறைப்பு, சர்க்கரை நோய் குறைப்பு ஆகியவற்றை அடையலாம். என் தனிப்பட்ட கருத்து என்னவெனில் முற்றிய சர்க்கரை வியாதி இருப்பவர்கள் காட்டுமிரான்டி உணவின் மூலமே முழு குணம் அடைய இயலும் என்பது. அவர்களுக்கு மட்டும் சைவ உணவு பலனளிக்காது. மற்ற யாரும் இந்த உணவு முறைக்காக தம் புலால் உண்ணாமை கொள்கையை கைவிட வேண்டியது இல்லை.

    கட்டுரைத் தொடரை எழுத வாய்ப்பளித்த வல்லமை ஆசிரியர் குழுவினருக்கும், படித்து கருத்தளித்த அனைவருக்கும் என் நன்றி.

    (முற்றும்)

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 74

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
    இளவேனிலின் வருகை
    திருவேங்கடப் பெருமாள் எழுந்தருளிய
    வேங்கடமலையை வடக்கேயும்
    குமரிக் கடலைத் தெற்கேயும்
    எல்லையெனக் கொண்டது தமிழ்நாடு.

    மாடமாளிகைகள் நிறைந்த ஊரானது மதுரை;
    பெருமையில் சிறந்த ஊரானது உறையூர்;
    ஆரவாரம் நிறைந்த நகரானது வஞ்சி;
    ஒலிக்கின்ற கடலும் காவிரியும் உடையது புகார்.

    இந்நான்கு நகரங்களிலும் ஆட்சி செய்தனன்
    புகழும் சிறப்புமுடைய மன்மதராசன்.
    அவனுக்குத் துணையெனவே
    வந்துவிட்டனன் இளவேனில் என்பவனும்.
    இச்செய்தியை குயிலோனுக்குத் தூது கூறினன்
    வளத்தில் சிறந்த பொதிகை மலையில்
    அகத்தியர் பெற்றெடுத்த தென்றல் என்பவன்.

    ஆதலின்,
    “மீன்கொடி மைந்தன்
    மன்மதனின் படையிலுள்ள
    மகளிர் அனைவரும்
    நல் அலங்காரங்கள் செய்திடுங்கள்”
    என்றேதான் சொல்லும் வண்ணம்
    தென்றல் தூதுவன் இட்ட கட்டளையதனை
    பூங்கொடிகள் நிறைந்த
    சோலைப் பாசறையிலிருந்து
    கொம்பு ஊதும் குயிலோன்
    அறிவித்தனன் கூவியே.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 14
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

    படத்துக்கு நன்றி:
    http://www.indiamart.com/forum-art-gallery/abstract-paintings.html

    Share
  • இசையும் கோயிலும்-3 !…

    விசாலம்

    இசையும் கோயிலும் 3      

    தமிழ் நாட்டின் சில கோயில்களில் கற்தூண்களும் இசை பாடும் திறமையைக்கொண்டுள்ளன என்பதை மிகவும் பெருமையுடன் நான் இங்கு கூறிக்கொள்கிறேன் .எல்லாம் மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் கட்டிய கோயில்கள். மிகப்பழமை வாய்ந்த கோயில்கள். ஒவ்வொரு கோயிலிலும் அமைந்திருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தின் அழகுதான் என்ன ! அதில் மிக நுணுக்கமாக வடித்திருக்கும் தூணகள் தான் என்ன ! பார்க்கப்பார்க்க வியந்து போகிறோம் இதில் இசை எழுப்பும் தூண்களை அழகர் கோயில், ஆழ்வார்திருநகரி, குற்றாலம், தாராசுரம்,  செம்பகநல்லூர், சுசீந்திரம் திருவேந்திரம், தாடிக்கொம்பு,  மதுரை சிம்மாசலம், திருநெல்வேலி போன்ற கோயில்களில் காணமுடிகிறது. கும்பகோணத்தில் அருகில் இருக்கும் தாராசுரம் கோயிலில் பலி பீடம் இருக்கும் இடத்தைத் தட்ட அங்கு ஒருவிதமான ஒலி எழும்புகிறது என்ற தகவலும் கிட்டியது.அதைத்தவிர இங்கிருக்கும் ஏழு படிகள் ஏழ ஸ்வரங்களை எழுப்புகின்றன.

    சிம்ஹாசலத்தில் பெரியப்பெரிய தூண்களுக்கு மேல் இசைத்திருக்கும் இலைகள், பூக்கள் இசையை எழுப்புகின்றதாம்.,

    நான் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் போயிருந்தேன் அங்கிருந்த மண்டபத்தில் இருக்கும்  சில கற்தூண்களை  வேகமாகத்தட்ட அங்கு இசை பிறக்கிறது. இவைகளை இசை பாடும் கற்தூண்கள் என்றே சொல்லலாம் இதைப்பார்த்து என்ன architectural wonders என்று பல வெளிநாட்டவர்கள் வியந்து போகிறார்கள்.என் கூட வந்த உதவியாளர் என்னை அந்தத்தூணை தட்டச்சொன்னார் .நானும் தட்டினேன் ஒரு சத்தமும் வரவில்லை. என் கையில் தேவையான பலமில்லை பின் அவர் கராட்டே கலையில் செங்கலை உடைக்க கையை வைக்கும் போஸில் அந்தத் தூணின் மத்தியில் தட்டினார், நானும் தூணின் அருகில் காதை வைத்துக்கொண்ட்டேன் ஆஹா… அருமையான சத்தம் அதிலிருந்து எழும்பியது .சிலர் கனமான குச்சியாலும் தட்டிக்காண்பிக்கின்றனர். எல்லா தூண்களும் ஒரே சுருதியில் அமைந்திருப்பது மிகவும் வியப்பைத்தருகிறது. இதைக்கட்டியவர் கட்டிடகலையில் எவ்வளவு நுணுக்கங்களை அறிந்திருக்க வேண்டும் இதில் ஒரு ஐந்து தூண்களிலிருந்து ஐந்து வித சுரங்கள் வெளிவர அங்கு “நவரோஜ்” என்ற ராகம் பிறக்கிறது.இவை மொட்டைக்கோபுரம் அருகில் பார்க்கலாம். இசை மேதை ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இந்த ஐந்து ஸ்வரங்களைக்கொண்டு “நவரோஜ்’ராகத்தில் பாடல் இயற்றியிருக்கிறார். .

    ஆழ்வார்திருநகர் கோயிலில் அமைந்த வசந்த மண்டபத்தில் இருக்கும் தூண்களைத்தட்டினால் “ச ரி க ம ப த நி  என்ற சப்த சுரங்கள் வெளி வருகின்றன. தவிர ஒரு சன்னதியின் எதிரே இருக்கும் தூணைத்தட்ட சங்கின் ஒலி கேட்கிறதாம். இங்கு கல்லால் ஆன நாயனமும் வைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் தூண்கள் கிரானைட் கற்களால் ஆனவை இவைகளில் நடு நடுவே துளைகள் குடையப்பட்டு இருப்பதால் இந்த இடங்களில் ஊத மிக அழகான இசை ஒலித்து கேட்க மிக இன்பமாக இருக்கிறது இங்கிருக்கும் தூண்கள் வட்ட வடிவமாகவும்  சதுர வடிவ அமைப்பிலும் ஐந்துமுகமான நட்சத்திர வடிவத்திலும் மிக மிக கலை வண்ணத்தோடு அதிநுட்பமாக  செதுக்கப்பட்டுள்ளன.

    சுசீந்திரம் கோயிலில் பைரவர் மண்டபம் எதிரில் நான்கு இசை தூண்கள் உள்ளன. தாடிக்கொம்பு என்ற இடத்தின் கோயிலில் இருக்கும் தூண்கள் வேதங்களின் ஸ்வரங்களை எழுப்புகின்றன. ஹம்பி கோயிலில் இருக்கும் தூண்களில் அடிப்பாகத்தில் ஒரு ஸ்வரமும், நடுப்பாகத்தைத்தட்ட வேறு ஸ்வரமும் தூணின் மேல் பாகத்தைத் தட்ட வேறு ஒருஸ்வரமும் கேட்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.மூன்று பாகங்களையும்  ஒரே நேரத்தில் அடிக்க அங்கு மூன்று ஒலிகளும் சேர்ந்து ஒரு புதுமையான ஒலி பிறந்து நம்மைப்பரவசப்படுத்துகிறது.  கும்பகோணத்தில் இருக்கும் கும்பேஸ்வர கோயிலில் கற்களால் செய்த இரண்டு நாதஸ்வரங்கள் சுவரில் வைக்கப்பட்டுள்ளன. சரஸ்வதி பூஜையின் போது இவைகளை எடுத்து பூஜிக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது தென்காசியில் இருக்கும் கோயிலில் முக்கிய பிரகாரத்தில் அருள் மிகு ஸ்ரீ விசுவநாத சன்னதியின் முன்னும் அருள் மிகு சுப்பிரமண்யர் சன்னதி முன்னும் இசை எழுப்பும் தூண்கள் இருக்கின்றன. திருநெல்வேலியில் நெல்லையப்பர் ஆலயத்தில் தேவி சன்னதி முன் இருக்கும் இரு தூண்கள்  இரு ஸ்வரங்களை எழுப்புகின்றன. ஒன்று மத்தியமம் மற்றொன்று பஞ்சமம்.

    இசை கடவுளிடம் செல்ல ஒரு பாலமாக அமைகிறது. பழங்குடி மக்கள் தங்கள் திருவிழாவில் பலவிதமான வாத்தியங்களை உபயோகித்து வந்திருக்கின்றனர். ஆன்மீக வழிப்பாட்டின் போது தாரை தம்பட்டை ,மேளம் என உபயோகித்து இயற்கையைப் பூசித்திருக்கின்றனர் தேவாலயங்களிலும் பியானோ வாசிக்கப்பட்டு கரோல் என்ற இசை பாடப்படுகிறது.  ஆன்மாவை உயர்ந்த நிலைக்கு அழைத்துப்போகும் சக்தி இசைக்கு உண்டு என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட உண்மை.. இன்னும் நான் பார்க்காத பல கோயில்கள் இதில் இருக்கலாம்.எல்லாமே நாட்டின் பொக்கிஷங்கள்.அவைகளை கண்ணின் இமைப்போல் காப்பது நம் தலையாய கடமை அல்லவா?

    பின் குறிப்பு இதை ஒரு நாலு பேர் படித்தாலும் நான் எழுதிய குறிக்கோள் ஈடேறும் நம் கோயில்களின் சிறப்புக்களை பலரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதே என் அவா  கோயிலின் இசையைப்பற்றி மேலும் பல புது தகவல்களைக்கொடுத்து உதவிய என் தம்பி  திரு வெங்கட் பெரிய இசை மேதை ,சங்கீத வித்துவான்

    ஊத்துக்காடு ஸ்பெஷல், அவருக்கு என் மனமார்ந்த நன்றி

    Share
  • நீயும், நானும், விஞ்ஞானமும் -1

    இன்னம்பூரான்

    கல்விக்கடலின் விசாலம் பெரிது; ஆழம் அதிகம்; அலை ஓசை ஓயாது. திகைத்து ஓடி விடுவது எளிது; அப்படி ஓடினால், அது அறியாமையின், சோம்பலின், அசட்டையின் விளைவே. அக்கடலின் மூலாதாரமோ ஒரு சிறுதுளி தான். தலைக்காவேரி; கங்கோத்ரி, சிறுதுளி பெருவெள்ளம். கல்விக்கடலை கடக்கத் தோணிகள் உண்டு பல. கலங்கரை விளக்குகளும் ஒளி வீசி இருளையும், மருளையும் விலக்கும். தமிழில் விஞ்ஞானத்தை விளக்கும் நூல்கள் சொற்பம். வழக்கறிஞர் பெ.நா. அப்புசாமி அவர்கள் இந்த வகையில் ஒரு முன்னோடி. இடைவிடாமல் 70 வருடங்களுக்கு மேல், பாமர விஞ்ஞானம் படைத்தார்.

    ‘…படைப்பிலக்கிய எழுத்தாளர்களுக்கு ஏற்படாத ஒரு கஷ்டம் அறிவியல் எழுத்தாளர்களுக்கு உண்டு. படைப்பாளிகளுக்கு நினைவும் எழுத்தும் ஏதாவது காலத்தில் உறைந்து போனாலும் தப்பு இல்லை. அதை எழுத்துக்கு வலிமை தரும் அம்சமாகக் கூடப் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் அறிவியல் எழுத்தாளர்கள் படித்தும் கேட்டும் பார்த்தும் தம் அறிவை சதா புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்புசுவாமி இதை அனாயாசமாகச் செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது…’(திரு. இரா. முருகன் இந்தியா டுடே 2001)

    படைப்புகளும், படைப்பாளர்களும் வித விதமான மெய்ப்பாடுகளை முன்னிறுத்தினாலும், சராசரி தமிழன் வாழ்நாள் முழுதும் விஞ்ஞானத்தின் அருமையான போக்குவரத்துக்களை எளிதில், ஆர்வத்துடன் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுபவர்கள் அரிது, அரிது. பெ.நா. அ. அவர்களும் மறைந்து விட்டார். மேலும் தேடி அறிந்துகொள்ளும் திறனை, நாம் வளர்த்துக்கொள்ளமுடியும். அதன் துணைகொண்டு அன்றாட வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். வாரிசுகளின் முன்னேற்றத்தை வசதியாக அமைத்துக்கொள்ள இயலும். இத்தகைய சிந்தனைகள் என்னை ஆட்டிப்படைத்த வண்ணம். அதனால் தான், நோபல் பரிசு, விஞ்ஞானிகள், என்றெல்லாம் எழுதிய யத்தனங்கள் விழலுக்கு இறைத்த நீர் என்றாலும், அத்தகைய ஆர்வங்கள் மடிந்து போகவில்லை. சாக்ஷி, இந்த தொடர்.

    நேற்று (29 05 2013) லண்டனில் ஒரு மருத்துவ ஆய்வாளர் ராயல் சொஸைட்டி எனப்படும் மையத்தில் ஒரு உரையாற்றினார். இலவசம். க்யூ கட்டாயம். காணொளி பிறகு கிடைக்கும். முதலில் அதனுடைய பூர்விகம் கேளும். வில்லியம் க்ரூன் (1633-1684) என்ற அங்கத்தினரின் நன்கொடை இந்த க்ரூனியன் பிரசங்கத்தை 1738 லிருந்து வருடாவருடம் நடத்த உதவுகிறது.

    இவ்வருடம் : ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியர் ப்ரான்செஸ் ஆஷ்க்ராஃப்ட் (Professor Frances Ashcroft FRS) நேற்று மாலை 6 30லிருந்து 7 30 வரை அளித்த ‘சிசுவை பாதிக்கும் டயப்பிட்டீஸ்’ என்ற பிரசங்கத்தின் சாராம்சம்:

    “… ஒரு பெட்டி சாக்லெட்டை ஒரு பிடி பிடித்தாலும் சரி, கொலைப்பட்டினி போட்டாலும் சரி, நமது மண்ணீரல் (பாங்கிரியாஸ்) தனக்குத்தானே, சுரக்கும் இன்சுலினை கட்டுப்படுத்தி, ரத்த ஓட்டத்தில் இருக்கும் சர்க்கரையை சரியான அளவில் வைத்திருக்கும். இந்த இயற்கை வரைமுறை தடுமாறினால், இன்சுலின் சுரப்பதில் தகராறு. சர்க்கரை ஏறும். அது தான் டயபிட்டீஸ். ஒரு நுட்பமான புரத அமைப்பு (ATP-sensitive potassium (KATP) channel) எப்படி இந்த இன்சுலின் ஆளுமையை துல்லியமாகவும், அனாயசமாகவும், தடுமாறாமல் கையாளுகிறது என்பது பற்றிய ஆய்வு விவரங்களை யாவருக்கும் புரியுமாறு, ஆதாரங்களுடன் கூறுவது தான் இந்த பிரசங்கத்தின் முதல் படி. அடுத்தது, மரபு அணு முரண் காரணமாக, பிறந்தவுடன் சில சிசுக்களுக்கு, அபூர்வமாக, இந்த வரைமுறை தடுமாறும் சிக்கல் இருப்பதை கண்டறிந்து, புதிய சிகிச்சை பற்றி விழிப்புணர்ச்சி அளிப்பது. இந்த துறையில் அவர் செய்த ஆய்வுகளின் பயனாக, மருத்துவ உலகத்துக்குக் கிடைத்த புதிய பாதையை பாராட்டி, அவருக்கு இந்த கெளரதை அளிக்கப்பட்டது.

    சில உபரி செய்திகள். ராயல் சொஸைட்டியில் நான் முதலில் தேடியது பூகோள சாத்திரம், தீர்க்க ரேகைகள் பற்றி; நோபலை விட அதிகமாக மதிக்கப்படும் கோப்லி என்ற சிறிய ஆனால் பெரிய பரிசு. அது எடுத்துச் சென்ற இடம், பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் என்ற பிரபல அரசியல்வாதி / விஞ்ஞானியின் ‘மின்சாரக்கனவுக்கு’ அளிக்கப்பட்ட கோப்லி மெடல். அது எடுத்து சென்றவிடம், பேராசிரியர் ப்ரான்செஸ் ஆஷ்க்ராஃப்ட். ஆக மொத்தம், எழுதுவதற்கு விஞ்ஞான விஷயதானங்களுக்கு பஞ்சமில்லை. இந்தியாவிலேயே சிறந்த விஞ்ஞானக்கூடங்களும், விஞ்ஞானிகளும் உண்டு. ஆனால், விஞ்ஞான விழிப்புணர்ச்சி, மிகக் குறைவு. எது எப்படி இருந்தாலும், வாசகர்களின் விருப்பம் தான் ராஜா. ராணியும் அதுவே.

    உசாத்துணை:

    http://royalsociety.org/events/2013/croonian-lecture/

    Notes Rec. R. Soc. Lond. 1960 15, doi: 10.1098/rsnr.1960.0020, published July 1, 1960:Downloaded from rsnr.royalsocietypublishing.org on May 30, 2013

    சித்திரத்துக்கு நன்றி: http://www.york.ac.uk/media/news-and-events/publiclectures/Frances%20Ashcroft.jpg


    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (14)

    பவள சங்கரி

    “நான் உலகத்திற்கு எப்படி தோற்றமளிக்கிறேன் என்பது எனக்குத் தெரி்யாது; ஆனால் என்னைப் பொருத்தவரை, ஒரு சிறுவனாக கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பதைப்போல உணர்கிறேன், கண்டறியப்படாத எத்தனையோ உண்மைகள் எம் முன் பெருங்கடலாக விரிந்து கிடக்கிறது. ஆனால் நானோ அவ்வப்போது ஒரு மென்மையான கூழாங்கல்லோ அல்லது சாதாரண சிப்பியைக் காட்டிலும் மேலும் அழகான ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக என் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறேன் ”.

    ஐசக் நியூட்டன்

    உள்ளொளியை மதித்துப் போற்றுவோம்!

    உயர, உயரப் போன எதுவும் ஓர் நாள் கீழே வந்தாக வேண்டும். கீழே வீழ்ந்ததும் ஓர் நாள் திரும்ப உயரும் காலமும் வரும். ஆனால் இது எப்போதும் எல்லோருக்கும் தானாக நடக்கக் கூடியது அல்ல. பொருளாதார அடிப்படையில் நல்ல நேரங்களும், கெட்ட நேரங்களும், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற நிலைகளும் யதார்த்தம். இருப்பினும் அறிவார்ந்த மக்கள் உயர்வு நிலையைக் கொண்டாடுவதுபோல தாழ்வு நிலையையும் கூட ஏற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை. எந்த ஒரு தொழிலும் சில காலங்கள் உச்சாணிக் கொம்பிலும், சில காலங்கள் சந்தையில் தாழ்வு நிலையிலும் இருப்பதைக் காண்கிறோம். பொதுவாக உயர்வான நிலையில் இருக்கும்போது எவருக்கும் மனதில் தாழ்வு நிலை வரக்கூடும் என்ற சந்தேகமே எழுவதேயில்லை. பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்பவர்கள், அடிக்கடி இந்த அனுபவத்தைப் பெறக்கூடும். நம்மை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் ஒவ்வொரு வெற்றியும், பல துன்பங்களின் மீது கட்டப்பட்டிருக்கலாமே தவிர அந்த துன்பங்களாலேயே ஆனது அல்ல என்பதே நிதர்சனம். ஒருவருக்கு பொருளாதாரப் பின்னடைவு என்பது எந்த நேரத்திலும் எழலாம். இது எத்துனைப் பெரிய தொழிலதிபர்களாக இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்று. இப்படிப்பட்ட ஆபத்துக் காலங்களிலும் நம் வாழ்க்கை ஓட்டத்தைச் சீரமைக்கக்கூடிய ஒரு வரப்பிரசாதம் நம்முடனேயே இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. இந்த இயற்கை வரத்திற்கு ஏற்றவாரு நம் போக்குகளையும், சக்திகளையும், வெற்றிக்கான வாய்ப்புகளையும் அமைத்துக் கொள்வதால் பொருளாதாரம் ஏற்படுத்துகிற எந்த ஒரு சூழலையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் பெற்றுவிட முடியும். அப்படி ஒரு வழிகாட்டியாகச் செயல்படும் வல்லமை பெற்றதுதான் நம்முடைய உள்ளுணர்வு. இதன் அளவுகோளைக் கண்டுபிடிக்கும் எந்தவொரு இயந்திரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்த உள்ளுணர்வின் சக்தியை எப்படி முழுமையாகப் பெற முடியும்?

    நமக்குள்ளேயே பிறந்து, நம்முடனேயே வளர்ந்தாலும் கூட, தெளிவான சிந்தையும், அமைதியான மனமும், முழுமையான நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே இந்த உள்ளுணர்வை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். நம்மை தெளிவான முடிவு எடுக்க உதவி புரிந்து, வழி நடத்திச் செல்வது நம் அறிவு மட்டுமே. இந்த அறிவு மட்டுமே நமக்கு நம்பிக்கையை ஊட்டி, தொடர்ந்து பாடம் பெறவும், புத்திசாலித்தனமான முடிவெடுக்கவும், ஆபத்தை கணக்கிட்டு முன்கூட்டியே எதிர்நோக்கி அதிலிருந்து தப்பிக்க ஆவண செய்யவும் வைக்கிறது. நம் பலவீனங்களை களையெடுக்க உதவுவதும் இதே அறிவுதான்.

    நம் செலவுகள் எல்லை மீறும்போதோ, நாம் தவறு செய்ய நேரும்போதோ, நம்முடைய செயல்களில் மாற்றங்கள் அத்தியாவசியமாகும் பொழுதோ, இந்த உள்ளுணர்வு மட்டுமே அபாயமணியை ஒலிக்கச் செய்கிறது. அதற்கு செவிசாய்க்க ஆரம்பித்தாலே அது வெற்றிப்படியை நோக்கி வழிநடத்திச் செல்லும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் பொறுமையுடன் கவனித்து அதன்வழி நடப்பதுதான். நம் சிந்தையை அலையவிடும்போதுதான், நம் எண்ணங்கள் மரத்திற்கு மரம் தாவும் குரங்கைப் போன்று சிதறுண்டு போகிறது. இழிந்த சிந்தனைகளோ, அச்சமோ, நம்மீதே சந்தேகம் கொள்வதோ அல்லது பழைய தோல்விகளை எண்ணி அச்சமுற்று நம்மை நாமே தரக்குறைவாக கற்பனை செய்து கொள்வதோ நம் ஆக்கப்பூர்வமான உள்ளுணர்வுகளை கட்டிப்போடச் செய்யலாம். இதையெல்லாம் தவிர்ப்பதோடு, நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அதைச் சட்டை செய்யாமல் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியம். இத்தகைய பயிற்சியை மேற்கொள்ளும் ஒருவர் எக்காலத்தும் அடிமட்டத்தில் எழ முடியாதவாறு வீழ்வதில்லை என்பதே சத்தியம். நாம் எந்த அளவிற்கு இந்த மனநிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு ஆழ்ந்த உள்ளுணர்வுகளின் ஆதிக்கம் நம்மை ஆகச் சிறந்த செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. இதையெல்லாம் சொல்லும்போது எதிர்மறை எண்ணங்களே குறுக்கிடாது என்பது அர்த்தமல்ல. சந்தேகம், அச்சம், அவநம்பிக்கை போன்ற எண்ணங்கள் லேசாக தலை தூக்கினாலும், விரைவிலேயே அது கடந்து போய்விடும். பின் நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் தெளிவானதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் ஆகிவிடும். திறந்த மனதுடன், குழப்பமில்லா சிந்தையுடன், நிதானமாக உள்ளுணர்விற்குச் செவிசாய்த்து பிரச்சனையிலிருந்து எளிதாக மீண்டு வரும் உபாயத்தைக் காணலாம். நாம் நம் மீது வைக்கும் ஆழ்ந்த நம்பிக்கையே இதற்கான ஆதாரம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்! தீர்வு இல்லாத பிரச்சனை என்பதே இல்லை. கடந்த காலத்தில் எது நடந்திருந்தாலும், அல்லது இன்று நம் முன்னால் நிற்கும் பிரச்சனை எத்தகையதாயினும், அதைப்பற்றி கவலை கொள்ளாமல், அதற்கும் தீர்வுண்டு என்ற நம்பிக்கையுடன், இந்த முறையைப் பின்பற்றும்போது நாம் மேற்கொண்டு செய்ய வேண்டியது என்ன என்பதற்கான வழி கட்டாயம் பிறக்கும் என்பதில் ஐயமில்லை!

    வாழ்க்கை என்பதே போராட்டம்தானே!
    அதை வாழ்ந்துதான் பார்ப்போமே!

    தொடருவோம்

    படங்களுக்கு நன்றி :

     http://www.geocities.com/Colorado933/page1.htm

    http://sayingimages.com/words-to-live-by-with-pictures/

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…..(59)

    சக்தி சக்திதாசன்

     

     

     

     

    அன்பினியவர்களே !

    அடுத்தொரு மடலில் உங்களைச் சந்திக்கும் மகிழ்விருப்பினும் இம்மடல் தாங்கி வரும் செய்தியின் துயரச்சாயல் நெஞ்சினில் சிறிதளவு துன்பத்தினை தவழத்தான் செய்கிறது.

    மதம், மதம் தாங்கி நிற்கும் தெய்வத்தின் போதனைகள் என்பன என்றுமே தீய எண்ணங்களின் அடிப்படியீஈல் எழுந்தவை அல்ல. எந்த மதமாயினும் சரி தம் வழி நடக்கும் மனிதர்களின் மனதைத் தூய்மைப்படுத்தி அன்பின் வழி நின்று நல்ல மனிதர்களாக வாழ வழிகளைக் கற்றுத் தருவதே அவற்றின் முக்கிய நோக்காகிறது.

    ஆனால் அம்மதங்களின் பெயர்களின் அவற்றின் போதகர்கள் எனக்கூறிக் கொள்ளும் பலர் அம்மதத்தின் கூற்றுக்களின் உண்மையான கூறுகளை விளங்கிக் கொள்ளாது அன்றி அவற்றைத் தமது எண்ணங்களுக்கேற்ப திரிபு படுத்தி வன்முறைகளின் வழிகளில் அவற்றைப் போதித்து வருவது வேதனைக்குரியது.

    கடந்தி சில நாட்களுக்கு முன்னால் லண்டன் தெருவினிலே நடந்த ஒரு அகோரமான, மிலேச்சத்தனமான செய்கை இங்கு வாழும் அனைத்து மக்களின் உள்ளங்களையும் உலுக்கி விட்டது.

    ஓ இப்படியும் ஒரு மிருகத்தனமான செய்கை கூட நடக்குமா? என்னும் எண்ணத்தை அனைவரினதும் உள்ளங்களிலும் ஓடவிட்டு நட்டையே ஒருவித பீதிக்குள்ளாக்கி விட்டது எனலாம்.

    நடந்தது என்ன ?

    கடந்த 22ம் திகதி புதன்கிழமை மதியம் 2 மணியளைவில் லண்டன் தென்கிழக்குப் பகுதியில் உள்ள “வூல்விச்(Woolwich)” எனும் இடத்தில் ஒரு பயங்கர நிகழ்வு இடம் பெற்றது.

    அவ்விடத்தில் அமைந்துள்ள “இராணுவ முகாம் (Army Barracks)” ஒன்றிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் 22 வயதே நிரம்பிய “லீ ரிக்பி(Lee Rigby) . இவர் இங்கிலாந்து இராணிவ வீரர்களில் ஒருவராவார். சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் பணியாற்றி விட்டுத் திரும்பியவராவார்.

    ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் அசம்பாவிதங்களினால் காயமுற்று அங்கவீனர்களாகிய இராணுவ வீரர்களுக்கு உதவுவதற்காக நிறுவப்பட்ட ஒரு உதவி மையமான “ஹெல்ப் த ஹீரோஸ் (Help The Heros)” எனும் அமைப்பினை விளம்பரப்படுத்தும் டீ சார்ட்டை அணிந்திருந்தார்.

    அச்சமயம் அவரை நோக்கி காரைச் செலுத்திய இருவர் அக்காரின்ன்ன்ன்ன்னால் அவரை வழி மறித்து கையில் கொண்டு வந்திருந்த வாளினால் அவரை வெட்டி பட்டப்பகலில் பலரின் முன்னிலையில் படுபயங்கரமாகக் கொலை செய்துள்ளனர்.

    கத்தி மட்டுமின்றி அக்கொலையாளிகளின் கைகளில் துப்பாக்கியும் இருந்தது என்று கண்கூடாகக் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.

    அக்கொலையைப் புரிந்தது மட்டுமல்ல அக்கொலையாளிகளில் ஒருவர் இரத்தம் தோய்ந்த கைகளுடன் தாம் இக்கொலையைப் புரிந்ததை தமது மதமாகிய இஸ்லாமின் அடிப்படையில் நியாயப் படுத்தியுள்ளார்.

    தானாகவே அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் பொலிசாரை அழைக்குமாறு பணித்துள்ளார். போலிஸார் அங்கு விரைந்து வந்ததும் அவர்களை நோக்கி துப்பாக்கி சகிதம் ஓடியுள்ளானர் அச்சமயம் அவர்கள் இருவரும் போலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்து கைது செய்யப்பட்டு காவலுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர்.

    இச்செயல் இங்கு வாழும் பல சமூகத்தினரிடையே நிலவி வந்த பரஸ்பர ஒற்றுமை உணர்வைச் சீர்குலைத்து வைத்துள்ளது. இங்கு வாழும் பெரும்பான்ம்மை இனத்தவர் வெள்ளையர் என்பதும், அவர்களில் பெரும்பான்மையோர் கிறீஸ்துவர் என்பதுமே உண்மை.

    தம்முடைய நாட்டில் புகலிடம் தேடியும், வாழ்க்கையை மேம்படுத்தீஈஈஈஈஈக் கொள்ளும் வகையில் குடிபெயர்ந்தவர்களின் தமது மத்ஹ்ஹ்ஹ்ஹங்களைப் பின்பற்றுவதில் இவர்கள் யாருக்கும் எதுவித தடையும் விதித்ததில்லை.

    அப்படி இருக்கையில் இங்கு தம்மை இந்நாட்டுப் பிரஜைகள் என்று கூறிக் கொள்பவர்கள் இந்நாட்டு இராணுவ வீரர்களையே சமயத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும் கொலை செய்யும் அளவிர்கு முன் வந்து விட்டது இந்நாட்டு பெரும்பான்மை மக்களின் மனதில் ஒருவித ஆத்திர உணர்வினைத் தோற்றுவிப்பது சகஜமே.

    இவர்களுள்ளும் ஏற்கனவே வெளிநாட்டவரின் குடியேற்றத்தைத் தடை செய்ய வேண்டும் எனும் கோஷம் கொண்ட நிறவெறி கொண்ட தீவிரவாதிகள் இல்லாமலில்லை.

    இத்தகைய செய்கை அவர்களின் இனவெறி எனும் தீயிற்கு எண்ணெய் வார்த்தது போலாகி விட்டது.

    இக்கொலைச்சம்பவத்தைத் தொடர்ந்து சில இஸ்லாமியர்களின் கலாச்சார மையங்கள் தாக்கப்பட்டுள்ளன.

    அதுதவிர ஆசிய இனத்தவர்கள் ஆனைவரினதும் மனங்களிலேயும் ஒரு விதமான பாதுகாப்பின்மை எனும் பீதியைக் கீளப்பி விட்டுள்ளது.

    நாம் புலம்பெயர்ந்து வந்து வெளிநாடுகளில் எமக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்கிறோம். எமக்கென தரப்பட்ட சுதந்திர எல்லைக்குள் எமது மதம், காலாச்சாரம் என்பனவற்றை நாம் பேணிப் பாதுகாப்பதில் எதுவித தவறுமில்லை.

    அதேவேளை இந்நாட்டுப் பிரஜைகளாக வாழும் எமக்கு ஒரு அளவிலாவது இந்நாட்டின் பாதுகாப்பினைப் பலப்படுத்தும் உணர்வு இருக்க வேண்டும். எமக்கும், எமது சந்ததிக்கும் ஒரு நிலையான நிம்மதியான வாழ்வை ஈந்த இம்மண்ணின் மீது ஓரளவாவது பற்று இருக்க வேண்டும்.

    இல்லையெனில் இனக்கள், மதங்களுக்கிடையே நிலவி வரும் பரஸ்பர ஒற்றுமை உணர்வு சீர்குலைந்து வாழ்வு நிலையற்றதாகி விடும்.

    அன்பு உள்ளங்களே ! நான் எனது மதத்தை மதிப்பவன், மிகுந்த இறைபக்தி உள்ளவன். ஆனால் எந்த ஒரு மதமும் மற்றவர்களின் வாழ்க்கையைச் சீர்குலைக்க வைக்கும் வகையில் தமது மக்களை வழிநடத்துவதில்லை.

    சுயலாபம் கொண்ட பல தீவிரவாதிகள் மாதம் எனும் போர்வையில் மக்களை ஏமாற்றும் செய்கையாலேயே உலகெங்கும் மததின்ன்ன்ன்ன்ன் அடிப்படையிலான பேத்ங்கள் தலை தூக்குகின்றன.

    இக்கோரச் சம்பவத்தின் எதிரொலியாக விளைந்த ஒரு நன்மை என்னவெனில் இங்குள்ள அனைத்து இஸ்லாமிய மத அமைப்புக்களுமே ஒட்டு மொத்தமாக இக்கொலையை நடத்தியவர்கள் “அல்லாஹோ அக்பர்” எனும் கோஷத்தை ஒலித்திருப்பினும் இக்கொலைக்கும் இஸ்லாம் எனும் மதத்திற்கும் எதுவித சம்மந்தமுமில்லை என்று கூறியிருப்பதுவே.

    அது மட்டுமின்றி வானோலிகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் நடைபெற்ற கருத்தரங்குகளில் இஸ்லாமியர் பெருமளவில் கலந்து கொண்டு இக்கொலையை வன்மையாகக் கண்டித்ததுடன் இதச் செய்தவர்கள் இஸ்லாமியர்களாக இருக்க முடியாது என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்கள்.

    மனிதன் என்பது ஒன்றே ஒரு இனம், அன்பு என்பது ஒன்றே ஒரே மதம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை!.. 6

     

    சாகர் 

     

    புராதன கைரோ

    கோப்டிக் கைரோ (Coptic Cairo) கிருஸ்த்துவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. மெல்ல நடந்து வரும் போது மஹ்மூத் ஒரு மசூதி, சர்ச் மற்றும் யூதர்கள் கும்பிடும் சைனகோக்(Synagogue) மூன்றும் ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக இருப்பதை சுட்டிக்காட்டி எப்படி மூன்றும் இனத்தினரும் அன்னியோனியமாக வசிக்கின்றனர் இங்கே என்று சுட்டிக்காட்டினார். யூத சமயத்தில் அவதரித்த இயேசு கிறிஸ்து போதித்தது பிற்காலத்தில் கிருஸ்துவ மதம் என்று அவதரித்தது.பின்னர் வந்த முஹம்மத் நபி தோற்றுவித்த இஸ்லாமிய மதம் யூத மற்றும் கிருஸ்துவ சமய போதகர்களையும் துறவிகளையும் கடவுளின் தூதர்கள்(prophets) என்று அங்கீகரித்த போதும் அவர்களுக்கும் எல்லாம் உயர்ந்த தேவதூதர்  நபிகள் என்று நம்புகிறது.  ஒன்றுபட்ட ஆரம்பம் உள்ள இந்த சமயங்களுக்குள் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளினால் மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் ரத்த ஆறு ஓடியதும் உண்மை.

    மஹ்மூத் பெருமையாக இதை சொன்னாலும் எகிப்தும் இஸ்ரேலுடன் பலமுறை போர் செய்ததும் சரித்திரம் தான். இன்றும் எந்த நேரம் போர் மூளும் ஒரு சூழ்நிலை உள்ள பிரதேசம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    கிருஸ்துவமதம் எகிப்திற்கு வந்தது அந்த மதம் தோன்றுவதற்கு முன்பே என்பது குறிப்பிடத்தக்கது. ஏரோது(Herod) மன்னரின் கட்டளையின் பேரில் யூதர்களின் அரசன் என்று நம்பப்பட்ட குழந்தை இயேசுவை காப்பாற்ற ஜோசப்பும் மேரியும் தப்பி ஓடி ஓளிந்த இடம் எகிப்து தான். எகிப்து ஏரோதின் ஆதிக்கத்தில் இல்லாத நாடு என்றாலும் அது ரோமானிய சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதி என்பதால் அவர்களால் தடை இன்றி தப்பிக்க முடிந்தது. மேரி ஜோசப் மற்றும் குழந்தை ஏசு அவர்கள் தங்கியதாக ஒரு இடம் இன்றும் கோப்டிக் கைரோவில் உள்ளது. அப்படி தப்பி ஓடிய குழந்தைதான் பின்நாளில் ஏசுவாக வாழ்து போதித்தது தான் கிருஸ்துவ மதம். அவரது சீடர்களில் ஒருவரான புனித மார்க்(St Mark) இந்த மதத்தை எகிப்திற்கு போதித்தார்.

    எங்களை முதலில் கைரோவின் மிக பழமையான சர்ச்சிற்கு அழைத்து சென்றார். இந்த கோவிலுக்கு தொங்கும் சர்ச்(HangingChurch) என்று ஒரு பெயர் உண்டு.

    இன்றைய கோப்டிக் கைரோ பெர்சிய மன்னர்களால் தங்கள் பெருமை வாய்ந்த நகரான பாபிலோன் (Babylon) நகரத்தை நினைவாக பாபிலோன் என்ற நகைரை நிறுவினர். பின்னர் அங்கே அரசாண்ட ரோமானியர் அங்கே ஒரு கோட்டையும் கட்டி அரசாண்டார்கள். பண்டை ரோமானியர் கட்டிய பாபிலோன் கோட்டை மதில்களில் மேல் கட்டப்பட்டது இந்த சர்ச். அடித்தளம் இல்லாமல் தொங்குவது போல அமைக்கப்பட்டது என்பதால் இந்த பெயர். ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சர்ச் 29 படிகளை கொண்ட இந்த சர்ச்சை படிகோயில் என்றும் அழைத்தனர். இந்த இடத்தில மூன்றாம் நூற்றாண்டில் சிறிய சர்ச் இருந்ததாக நம்பப்படுகிறது. கட்டிய காலத்திற்கும் இன்றைக்கும் பூமியளவு ஆறடி உயர்துள்ளமையால் இன்று பாபிலோன் கோட்டை மண்ணிற்கு கீழே தான் உள்ளது. சில இடங்களில் இருந்து பார்த்தால் அந்த கோட்டை சுவர்கள் இன்றும் சர்ச்சிற்கு கீழே உள்ளது தெரிகிறது.

    கிழக்கு ஆர்த்தோடாக்ஸ்(orthodox) கிருத்துவ வகுப்பினரான கோப்டிக் கிருஸ்துவ அமைப்பின் தலைமை தளமாகவும்  ஆர்த்தோடாக்ஸ் கிருத்துவ போபாண்டவரின் ஜாகையகம் இந்த சர்ச் திகழ்ந்தது.

    மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த சர்ச்சின் சிறப்பம்சங்கள் கருமையான எபோனி மரம்(Ebony) மற்றும் யானைத்தந்தங்களால் செய்யப்பட்டவேலைப்பாடுகள்.  மேலும் இங்கு உள்ள ஒரு புனித மேரியின் ஓவியம் எகிப்திய மோனலிசா என்ற சிறப்புப்பெற்றது. நாம் எந்த திசையிலிருந்து பார்த்தாலும் இந்த மேரி ஓவியம் நம்மை பார்ப்பது போன்ற ஒரு பிரமை ஏற்படுத்தும். ஓவியத்தை பார்த்தவாறு நாம் நகர்ந்தாலும் இதே உணர்வு தோன்றுவது இதன் சிறப்பு.

    அடுத்து சர்ச்சின் பக்கத்தில் உள்ள ஒரு யூதர் வழிபாடுதளமான பெண் எஸ்ரா (Ben Ezra) சைனகாகிற்கு சென்றோம். இந்த சைனகாக் பாலஸ்தீனர்களின் சைனகாக் என்றும் அழைக்கப்படுகிறது. குழந்தை மோசஸ் இந்த இடத்தில தான் எகிப்திய ராணியால் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு வரலாறு நிலவுகிறது.

    சிறியதாக இருந்தாலும் மிகவும் அழகாக இருந்தது. யூதர் இஸ்லாமிய பாணியில் உள்ளே சிலைகள் எதுவும் இல்லை. இந்த கோவிலை சுற்றிபார்க்க கால்மணிநேரம் போதுமானதாக இருந்தது.

    அடித்து கைரோவின் புகழ் பெற்ற முகம்மது அலி மசூதி நோக்கி சென்றோம். கைரோவிர்க்கு ஆயிரம் மசூதி கோபுரங்கள் கொண்ட நகரம்(City of 1000 minarets) என்ற பட்டபெயர் உண்டு. எந்த திசையில் பார்த்தாலும் மசூதி கோபுரங்களுள் மினாரெட்ட்டுகளும் கண்ணை கவரும்.

    கைரோ சிட்டாடல்(Citadel) எனப்படும் பகுதியில் அமைக்கப்பட்ட இந்த பெரிய மசூதி முஹம்மத் அலி பாஷா எனப்படும் ஒட்டமன் அரசர்  மகனின் நினைவாக கட்டியது. இவர் துருக்க வம்ச்சதினர் என்பதால் இஸ்தான்புல்லில்(Istambul) உள்ள ஏணி(Yeni) மசூதியை போல வடிவமைத்தார்.1857 வருடம் கட்டிமுடித்தபோது இதுதான் பத்தொம்பதான் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய மசூதி.

    சுண்ணாம்பு கற்களால்(Limestone) கட்டப்பட்ட இந்த மசூதி அலபாச்டர் (Alabaster)பளிங்கினால் அலங்கரிக்க பட்டது. உள்ளே நுழையும் முன் பெண்கள் தலையில் மூடும் பழக்கம் துருக்கியை போலவே இங்கும் நிலவியது. நன்று அலங்கரிக்கப்பட்ட குவிந்த கூரை (Dome) மற்றும் நான்கு சிறிய மண்டபக்கூரைகளும் கொண்டதாக அமைக்கபட்டிருந்தது.

    வடமேற்கு பகுதியில் ஒரு அழகிய பித்தளை மணிக்கூண்டு (brass clock tower)அமைந்திருந்தது. லக்சோர் ஒபெளிச்க்(Luxor Obelisk) ஒன்றை முஹம்மத் அலி பிரான்சு அரசருக்கு பரிசளித்தாராம். இந்த கடிகாரம் முஹம்மத் அலிக்கு பிரான்சு அரசர் லூயிஸ் பிலிப்(Louis Philip) தந்த மாற்று பரிசாம். லக்சோர் ஒபெளிச்க் இன்றும் பாரிஸ் நகரத்தில் பிளேஸ் டி ல கண்க்கார்டில் உள்ளது(Place de la Concorde).

    முஹம்மத் அலி மசூதியை பார்த்து முடித்து மீண்டும் வண்டியில் ஏறி கைரோ அருங்காட்சியகத்திற்கு சென்றோம். கைரோ அருங்காட்சியகம் ஒரு எகிப்திய கலாச்சாரத்தின் கடல். தொல்பொருள் ஆய்வாளர்கள் எகிப்தில் கண்டெடுக்கபட்டவை பெரும்பாலானவை இதில் உள்ளது. மற்றவை பாரிஸில் உள்ள லூவ்ரு(Louvre) அருங்காட்சியகம் மற்றும் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது.

    சிறிது நேர பயணமுடிவில் தாஹ்ரிர் சதுக்கத்தை அடைந்தோம்.  இந்த சதுக்கத்தில் தான் எகிப்திய புரட்சியின் பொது மக்கள் கூடி கிராசி செய்தனர். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நடந்த கைகலப்புகள் இங்கே அதிக்கம் அரங்கேறியது. புரட்சியின் பொது அருங்காட்சியகம் தாக்கப்பட்டது என்றும் அப்போது இரண்டு மம்மிகள் மற்றும் பல தொல்பொருள்கள் சிதலமடைந்தன என்று மஹ்மூத் குறிப்பிட்டார்.

    மேலும் பக்கத்தில் உள்ள ஒரு கட்டடத்தை சுட்டிக்காட்டி அது முன்னால் அதிபர் முபாரக்கின் அலுவலங்களில் ஒன்று என்றும் புரட்சியின் பொது கோபமடைந்த மக்கள் அதனை கொளுத்திவிட்டனர் என்றும் குறிப்பிட்டார்.இன்றும் புகைப் படிந்து சிதலமடைந்த நிலையில் இருந்தது அந்த கட்டிடம்.

    மேலும் எகிப்திய அரசாங்கம் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள தொல் பொருட்களை கீஸாவில் புதிதாக கட்டப்படும் ஒரு அருங்காட்சியகத்திற்கு இன்னும் சில வருடங்களில் கொண்டு செல்வதாக திட்டம் என்றும் கூறினார்.

    நான்காயிர வருட வரலாறு மற்றும் தொல்பொருட்களை பார்க்கும் ஆர்வத்தோடு உள்ளே சென்றோம்.

    தொடரும்…….

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 73 (27.05.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    “வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறுதல்”

    (51)

    தீயைக் கொட்டிப் பரப்பி
    அதன் வெப்பத்தினால்
    எமை வருந்தச் செய்கிறதே
    இம்மாலைப்பொழுததுவே!

    இது இங்ஙனம் நமை வருத்தும்
    என்று சற்றும் நினைந்து பார்த்திடாது
    தலைவன் உரைத்திட்ட
    பொய்ச் சூளுரைகளை
    உண்மையென நம்பி ஏமாந்துவிட்டோமே!

    பூமணம் நிறை கானற்சோலையில் வாழுகின்ற
    சிறப்புப் பொருந்திய கடல் தெய்வமே!
    எம் தலைவர்தம் பொய்ச்சூளுரையைத்
    தண்டிக்காது பொறுத்தருள்வாயாக!
    நின் மலரடி போற்றி வணங்குகிறோம்.

    கட்டுரை

    “கோவலன் ஊழ்வினையால் மனம் மாறுபட்டு மாதவியைப் பிரிந்து போதல்”

    (52)

    இவ்வாறெல்லாம் மாதவி பாடக்கேட்ட கோவலன்
    நான் கானல்வரி பாடினேன்;
    அங்ஙனம் பாடாமல்
    வஞ்சனைப் பொய்கள் கூட்டி
    மாயம் செய்திடும் இம்மாயக்காரியோ
    வேறு யாரையோ நினைத்துப் பாடினள்
    என்று எண்ணுகையில்,
    யாழிசை மேல் வந்து நின்றது
    அவனுடைய ஊழ்வினை.

    முழுநிலவு நாளில் தோன்றுகின்ற
    நிலா போலும் முகமுடைய மாதவியுடன்
    இணைத்த தன் கையை
    அப்போதே ஞெகிழவிட்டனன்;
    பொழுது சாய்ந்துவிட்டது என்று கூறியே
    ஏவலர் மட்டும் சூழ
    மாதவியை விடுத்துப் புறப்பட்டனன்;

    மாதவி, கோவலனுடன் இன்றி, தனியளாய் ஆயத்துடன்
    தன் மனை புகுதல்”
    தாது விரிந்த பூக்கள் நிறைந்த சோலையில்
    தனித்துக் கோவலன் விட்டுச் சென்றிட
    செயலற்றுத் தவித்த மாதவி
    ஆங்கே நிலவிய ஆரவார ஒலிகள் அடங்கியதும்
    வண்டியில் சென்றமர்ந்து
    தனியே தன்மனை புகுந்தனள்
    கோவலன் உடன் இன்றியே.

    புகுந்தபின்,
    இவ்வுலகின் அரசர்கள் எல்லாம் தலைவணங்கும்
    சோழ மன்னனையும்,
    அவனது
    முகபடாம் அணிந்த யானையையும்
    ஒளி பொருந்திய வாளையும்
    “மிகப்பெரிய சக்கரவாளம்
    எனும் மலையை உள்ளடக்கி
    ஆட்சி புரிவதாகுக” என்று
    வெண்கொற்றக் குடையையும்
    வாழ்த்தி நின்றனள் மாதவி.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

    படத்துக்கு நன்றி:
    http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/html/a02141l6.htm
    கானல்வரி முற்றியது; தொடர்வது வேனில் காதை

    Share
  • இசையும் கோயிலும் 2

    விசாலம்

    வாத்தியங்களை எடுத்துக்கொண்டால் எல்லா கோயில்களிலும் நாம் கேட்டு அனுபவிப்பது நாதசுரம் தான் என்பதில் சந்தேகமேயில்லை இது இந்த அளவு சிறந்து விளங்குவதன் காரணம் அதன் ஒலிதான்.மங்களகரமான அதன் த்வனி எல்லோரையும் ஈர்க்கும் சக்தியுடையது. .மேலும் கோயில்களில் இருக்கும் மண்டபங்களில் இந்த ஒலி எதிரொலித்து அருகில் இருக்கும் அக்கிரகாரம் கோடி வரை கேட்பதால் அந்தச்சூழ்நிலையே ஆன்மீக நற்றலைகளால் நிரம்பி மனதுக்கு ஆனந்தமளிக்கிறது, இதைத்தவிர சங்கு, திருச்சின்னம், உடல், முகவீணை, பஞ்சமுகவாத்தியங்கள் என பலவகை வாத்தியங்களையும் காணமுடிகிறது. கேரள நாட்டுக்கோயில்களில் அதிகமான வாத்தியங்கள் இசைப்பதை நாம் காணமுடிகிறது .ஆடிப்பூரம் திருநாளில் ஜண்டை .தவில் தொப்பிமத்தளம் ,வீராணம் டமாரம், மிருதங்கம் போன்ற தோல் வாத்தியங்கள் முக்கியப்பங்கு வகித்து கேட்பவரைப் பரவசப்படுத்துகின்றன. வித விதமான லயங்களை அள்ளி வீசுகின்றன. இவைகளுடன் சேங்கலை,குழித்தாளம்,ஜால்ரா, போன்றவைகளும் ஒன்று சேர நம்மை நாமே மறந்துவிடுகிறோம். .

    கோயில் மணியும் அதன் ஒலியும் நம்மை ஆன்மீக சூழ்நிலைக்கு எடுத்துச்சென்று நம்மையுமறியாமல் இறைவன், இறைவியின் பால் நம் கவனத்தைச்செலுத்துகிறோம்.சில சமயம் அந்த மணி நிற்காமல் டண்,டண் டண் என்று வரிசையாக ஒலிக்கும் சில சமயம் அந்த மணி விட்டு விட்டு ஒலிக்கும் அதன் ஸ்வரம் சட்ஜமமாக இருக்கும் சில கோயில்களில் கோயில் மணியுடன் சங்கும் ஊதுவதுண்டு .நான் அடிக்கடி சிதம்பரம் போய்வருவேன்.அப்போது இதைக்கூர்மையாக கவனிப்பேன் இதில் என்ன சிறப்பென்றால் மணியின் ஒலி “ஸ’ என்று கேட்க சங்கின் ஒலி “ப” என்று இசைக்கும் “ஸ பா ஸ பா “என்று வரிசையாக கேட்க உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும் ஆஹா அது என்ன ஆனந்தம் !

    திருச்சின்னம் என்ற வாத்தியம் பித்தளையினால் ஆனது என நினைக்கிறேன் .இது ஒரு காற்று வாத்தியம் ஆனால் இதன் நடுவில் துளைகள் இல்லை .பெருமாளின் திருமஞ்சனம் அல்லது சிவனின் அபிஷேகம் போது முழங்கப்படும்.இதனது ஒலியும் வெகு தூரம் வரை எட்டும் சீரடி பாபா மந்திரில் இது போன்று ஒலி எழுப்பி கண்டிருக்கிறேன். உடல் என்னும் வாத்தியம் ஒரு பெரிய குச்சியால் அடித்து ஒலி எழுப்புவதாக இருக்கிறது . கோயிலிலிருந்து சுவாமி புறப்பாட்டின் போது “டம்டம்” என்றோ அல்லது மூன்று மூன்றாக “டம் டம் டம் ” என்றோ அடித்து சுவாமி எழுவதைத் தெரிவிப்பது உண்டு கிராமத்து எல்லை தெய்வங்களின் கோயில்களில் தவிலுக்கு முக்கிய பங்கு உண்டு. அத்துடன் உடுக்கு, தண்டைக்கொலுசு, தம்பட்டம்,சலங்கை போன்றவைகளும் பூசாரி உபயோகிப்பதைக்காணலாம் இங்கு இருக்கும் தேவி மாரியம்மன், காளி, பேச்சாயி மூக்காயி போன்ற பெயர்களிலும் ஆண்தெய்வம் கருப்பண்ண சுவாமி மதுரை வீரன் முனீஸ்வரன் போன்ற பெயர்களிலும் காணமுடிகிறது

    தொடரும் .

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (13)

    பவள சங்கரி

     

    “மனிதன் நாற்பது நாட்கள் உணவில்லாமல் உயிர் வாழலாம், மூன்று நாட்கள் நீரில்லாமலும், கிட்டத்தட்ட எட்டு நிமிடங்கள் காற்று இல்லாமலும்கூட வாழலாம். ஆனால் நம்பிக்கை இல்லாமல் ஒரு நொடி மட்டுமே வாழ முடியும்”
    ஹேல் லிண்ட்ஸே

    ‘பதறாத காரியம் சிதறாது’

    இது முதுமொழி. எந்த ஒரு காரியத்தையும் பதற்றம் இல்லாமல் நிதானமாகச் செய்யும்போது தவறுகள் நேராமல், கால விரயமும் தவிர்க்கப்படுகிறது. காலையில் எழுந்தவுடன் நம் முன்னால் பரந்து கிடக்கும் பல வேலைகளில் எதை முதலில் செய்வது, எதற்கு முன்னுரிமைக் கொடுப்பது என்று முடிவு எடுக்க வேண்டிய நேரத்தில் பதற்றம் வந்தால், காரியமே கெட்டுவிடும். எந்த வேலையையும் உருப்படியாக செய்து முடிக்க முடியாமலே போய்விடலாம். அதை விடுத்து நிதானமாக, ஒரு சில நிமிட நேரங்களே அதற்காக ஒதுக்கி தெளிவாகச் சிந்திக்க ஆரம்பித்தாலே, குறிப்பிட்ட அந்த முதலில் செய்ய வேண்டிய வேலையில் ஆரம்பித்து, படிப்படியாக அனைத்தும் ஒழுங்கான முறையில் நடந்தேறும். பதற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம். நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு சூழல் உருவாகும்போது அது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மீண்டும், மீண்டும் அதைப்பற்றியே சிந்திக்க ஆரம்பிக்கும்போது, மன உளைச்சல் அதிகமாகி, பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனைத் தவிர்க்க நாம் முதலில் செய்யக்கூடியது, பதற்றம் ஏற்படுத்தக்கூடிய அந்தத் தவிர்க்க முடியாத சூழலை ஏற்றுக்கொள்வதுதான்.

    ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. நம்முடைய கருத்துக்களையோ, அல்லது எண்ணங்களையோ அடுத்தவர் மீது திணிக்க நினைப்பது சரியல்ல. சுழலும் பூமியைக் கட்டுப்படுத்தும் வல்லமை நம்மிடம் இல்லை என்பதே சத்தியம் அல்லவா. அதுபோலவே எந்தச் சூழலாயினும் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அடுத்தவரின் தவறுகளை, ‘மறப்போம், மன்னிப்போம்’ என்ற தாரக மந்திரத்தையும் நினைவில் கொள்ளும்போது அது நம் மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்கவல்லது. மனதை முழுமையாக நம் பணியில் செலுத்தி , தேவையற்ற சிந்தனைகளை விலக்கி வைப்பது நல்லது. பிரச்சனைக்கான வேரையும், சம்பந்தப்பட்டவர்களின் மன நிலையையும் மற்றும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாரு அதற்கான தீர்வுகளைக் காண்பது உத்தமம். அடுத்தவர்களின் மன உணர்வுகளை மதித்து, அதற்கேற்றவாரு சூழ்நிலையைக் கையாளத் தெரிந்தவரே, மன அழுத்தம் இல்லாத அமைதியான செயல் திறன் பெற்று ஆக்கப்பூர்வமான முன்னேற்றத்தை அடையக்கூடியவர் ஆகின்றனர். நல்ல நட்போ அன்றி உறவோ பலப்பட வேண்டுமாயின், எத்தகைய பிரச்சனையாயினும், சமாதானத்திற்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம். பிரச்சனையால் உறவு முறிந்து போவதைக் காட்டிலும், அதற்காக வளைந்து கொடுப்பதே சரியானது. சில பிரச்சனைகளே நமக்கு உந்துசக்தியாக அமைந்துவிடும் வாய்ப்புகளும் அதிகம். அப்படிப்பட்ட பிரச்சனைகளை அடையாளம் கண்டு நம் முன்னேற்றத்திற்கு அதைப் பயன்படுத்திக் கொள்வதும் அறிவார்ந்த செயல். அதேபோல, சில பிரச்சனைகளுக்கு தீர்வே காண முடியாமலும் போகலாம். அது போன்றவற்றை விடாமல் பற்றிக் கொண்டு தீர்வு தேடி கால விரயம் செய்வதைக் காட்டிலும், அதனை அப்படியே உள்ளபடியே ஏற்றுக் கொண்டு, மன உளைச்சலைத் தவிர்க்கக்கூடிய உபாயத்தைக் காண்பது சிறந்தது. குறிப்பிட்ட அந்த பிரச்சனையிலிருந்து தள்ளி நின்று, நம் கவனத்தை வேறு பணிகளில் ஆழ்ந்து திசை திருப்பிவிடுவதே நன்மை பயக்கக் கூடியது.

    ‘பொறுத்தார் பூமியாள்வார்!’

    “பொறுமை கசப்பானதானாலும், அதன் கனி இனிமையானது”
    _ அரிஸ்டாடில்

    பொறுமை கடலினும் பெரிது என்பதும் முதுமொழி. அதனால்தானோ என்னவோ அத்துனை அகன்ற பொறுமையை கடைபிடிப்பதில் பலருக்கு சிரமம் ஏற்படுகிறது. சிக்னலில் நிற்கும் போது மஞ்சள் விளக்கு எரிந்து, அடுத்து பச்சை விளக்கு எரிவதற்குள்ளாகவும், நம் பின்னால் தொடர்ந்து வருகிற அரசுப் பேருந்து விடாமல் வழி கேட்டு ஒலிப்பானை அழுத்தித் தொடரும் வேளையிலும், நம் பொறுமையை எடை போட்டுக்கொள்ளலாம். இந்த பொறுமையற்ற தன்மையால் படபடப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதாகிறது. ரயில் நிலைய பயணச்சீட்டு வாங்க நிற்கும் நீண்ட வரிசையிலோ, உணவு விடுதியில் காத்திருக்கும் வேளையிலோ, வங்கியில் காத்திருக்கும்போதோ, மருத்துவமனையில் மருத்துவரை அணுக உள்ளே இருக்கும் நோயாளி வெளியில் வரும் வரையிலோ, கடைத்தெருவில் மற்றும் கடையில் சாமான்களைக் கட்டிக் கொடுக்கும் வரையிலோ இப்படி அன்றாடம் பல இடங்களில் நம் பொறுமையைச் சோதித்துக் கொள்ளலாம். என் நண்பர் ஒருவருடன் ஒரு முறை சிற்றுந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அவர் சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர். யோகாசனம், தியானம் என்று ஒரு கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்பவர். அன்று ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக சென்று கொண்டிருக்கும் போது வழியில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால் ஓட்டுநர், கூட்டத்திற்கு நேரமாகிவிட்டதே, மக்கள் காத்திருப்பார்களே என்று படபடப்பாக பதில் சொன்னபோது, அவர் ரொம்பவும் சாதாரணமாக, ‘நம் பொறுமையை சோதித்துக்கொள்ள இது நல்லதொரு வாய்ப்பு’ என்று சொல்லிவிட்டு அமைதியாக இருக்கிறார். அவரே சொன்ன இன்னொரு சம்பவம், தாங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், எதிர்த்த வீட்டில் இருக்கும் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அப்போது அவர் வீட்டில் தனியாக இருந்ததால் தன்னை உதவிக்கு அழைத்த வேளையில் தன்னால் பொறுமையாக அந்தச் சூழலைக் கையாண்டதால் மட்டுமே, மருத்துவ ஊர்தி வந்து சேரும்வரை, அவர்கள் சொன்ன அறிவுரையின்படி அவருக்குத் தேவையான முதலுதவிகளைச் செய்து அவரைக் காப்பாற்ற முடிந்தது என்பதையும் சொன்னார். பல நேரங்களில் குழந்தைகள் ஆர்வமாகத் தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்குக்கூட பதில் சொல்ல முடியாமலும், அடுப்பில் வைத்திருக்கும் குக்கர் முழுமையாக சத்தம் வந்த பின்பும், அந்த ஆவி அடங்கி அதைத் திறக்க வேண்டிய காலம் வரை கூட பொறுமையில்லாமலும் தவிக்க வேண்டியும் வந்துவிடுகிறது.

    பொறுமையாக இருப்பதினால் நம்மால் சாதிக்கக்கூடியது அதிகம் என்று நம் அறிவு உணர்த்தினாலும், சில நேரங்களில் நம் உணர்வு அதை மறைத்துவிடுகிறது. அதற்கான பயிற்சியை நம் சூழ்நிலைகள் தானாக நமக்குக் கொடுக்கும்போது அதை ஏற்றுக் கொள்வது மட்டுமே சிறந்த வழி. அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாமல் தொழில் என்று வரும்போது பொறுமை என்ற ஒன்றின் அத்தியாவசியம் நன்றாகவே உணரப்படும். உதாரணமாக சொத்து வாங்கி விற்கும் தொழிலில் (ரியல் எஸ்டேட்) சில மணி நேர பொறுமை காத்தல்கூட கனிசமான வருமானத்தை அதிகரிக்கவோ அல்லது, பெருத்த நட்டம் வராமலோ காக்கக்கூடும். சூழ்நிலையை உணர்ந்து தேவையான நேரத்தில் பரபரப்பாக முடிவெடுக்காமல் பொறுமையாக நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றிகளை குவிக்க முடியும். இதற்கு நல்ல உதாரணம் விளையாட்டு வீரர்கள். இரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தி, உடனே பந்தைப் போடு, சீக்கிரம் என்றெல்லாம் சத்தம் செய்தாலும், சற்றும் அசராமல், பொறுமையுடன் அமைதி காத்து, தக்க தருணம் அறிந்தே விளையாடத் துணிவார்கள். அப்படிப்பட்டவர்களே சிறந்த வீரர்களாகவும் பிரகாசிக்க முடியும்.

    வாழ்க்கையும் ஒரு விளையாட்டு போலத்தானே! சரியாகத் திட்டமிட்டு, நிதானத்துடன் செயல்பட்டு முன்னேறுபவர்களே வெற்றியாளர் ஆகின்றனர் அல்லவா?

    தொடர்வோம்

    படத்திற்கு நன்றி:

    http://inspirational-images.tumblr.com/

    Share