நாகரிக மனிதனின் உணவுகளும், காட்டுமிராண்டி வாழ்க்கைமுறையும்! (4)

செல்வன்

இந்தத் தொடரில் கான்சர், டயபடிஸ், மாரடைப்பு, அல்சர், ஆஸ்த்மா முதலிய வியாதிகள் அனைத்தும் ஆதிமனிதனுக்கு இல்லை என்பதும் அதற்கு காரணம் அவன் வாழ்க்கை முறையும், உணவுமே எனும் கருத்து ஆராயப்பட்டது.

குண்டு, ஒல்லி என்பதன் உளவியலை ஆராயாமல் இந்த தொடர் நிறைவுறாது. குண்டாக இருப்பது நம்மைப் பொறுத்தவரை விரும்பதக்கது அல்ல. ஆனால் இத்தகைய உளவியலே நாகரிக மனிதனின் போக்குதான். 20ம் நூற்றாண்டு பத்திரிக்கைகள், ஹாலிவுட், பார்பி பொம்மைகள் ஆகியவை உருவாக்கிய ஒரு செயற்கை பிம்பம் சின்ன இடை, மெலிந்த உடல் தான் அழகு என்பது. பரிணாமரீதியில் குண்டாக இருக்கும் மனிதன்தான் பஞ்சகாலத்தில் உயிர் பிழைக்கக் கூடியவன். நம்மைப் பொறுத்தவரை நம் ஜீன்களுக்கு பசுமைப் புரட்சி நடந்ததும், அம்மா உணவகத்தில் 1 ரூபாய் இட்லி கிடைப்பதும் இன்னும் பதிவாகவில்லை. நம் ஜீன்களுக்கு நாம் இன்னும் ஆதிவாசியாக குகையில் இருக்கிறோம் என்பதுதான் தெரியும். அதனால் அதிக உணவு கிடைத்தால் அதைக் கொழுப்பாக மாற்றி அதனைச் சேமித்து, வரும் குளிர்காலத்துக்கு நம்மை உயிர்பிழைக்க வைக்கும் முயற்சியை எடுக்கிறது.

அதனால் என்னதான் உடல்பயிற்சி செய்தாலும், பட்டினி கிடந்தாலும் நவீன காஸ்மாபாலிடன் பத்திரிக்கையில் இருப்பது மாதிரி மாடல்களின் உடல் அழகை நாம் அடைவது சாத்தியம் இல்லை. அதாவது இயற்கை முறையில். மார்பக அறுவை சிகிச்சை, ஸ்டிராய்டு மாதிரி உட்கொண்டு சிக்ஸ்பேக் வைக்கலாம். ஆனால் இயற்கை உணவில், இயற்கை வாழ்க்கை முறையில் அடையப்படும் அழகு என்பது வேறு.

ஆதிமனிதன் செதுக்கிய பெண் சிற்பம் ஒன்று வில்லன்டாஃர்ப் நகரில் கிடைத்தது. அதில் இருக்கும் பெண் உருவம் “வில்லன்டாஃர்ப் வீனஸ்” என அழைக்கபடுகிறது. அன்றைய அழகியல் மதிப்பீட்டின்படி குண்டாக இருக்கும் பெண்தான் அழகானவளாக கருதப்பட்டாள். இன்று இந்தப் பெண் அழகற்றவளாக கருதப்படுவாள். இன்றைய காலகட்டத்தில் ஒல்லியாக கருதப்படும் மேற்கத்திய அழகியல் மனப்பான்மை ஆதிமனிதனுக்கு இல்லை.

அதனால் நீங்கள் பின்பற்றும் உணவுமுறையை மாற்றுமுன் “எதை அடைவதற்கான நோக்கமாக இந்த உணவுமுறையை நாம் பின்பற்றுகிறோம்” என்பதை தெளிந்துகொள்வது முக்கியம்.

ஆதிமனித உணவு முழுக்க மாமிசமாக இருப்பதால் சைவர்கள் என்ன செய்வது என கேள்வி எழுவது இயல்பு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு சைவர்கள் இல்லை. சைவம் என்பது கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் விவசாய நாகரிகம் பல்கிப் பெருகிய பின், கால்நடைகளை பாதுகாக்க வேண்டி விவசாய சமூகம் கடைபிடித்த வாழ்க்கை முறை. பழங்குடிகளால் காட்டில் முழு சைவர்களாக வாழ்ந்திருக்க இயலாது. சைவ உணவில் முழு ஆரோக்கியத்தை அடையலாம். கலோரிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் எடைகுறைப்பு, சர்க்கரை நோய் குறைப்பு ஆகியவற்றை அடையலாம். என் தனிப்பட்ட கருத்து என்னவெனில் முற்றிய சர்க்கரை வியாதி இருப்பவர்கள் காட்டுமிரான்டி உணவின் மூலமே முழு குணம் அடைய இயலும் என்பது. அவர்களுக்கு மட்டும் சைவ உணவு பலனளிக்காது. மற்ற யாரும் இந்த உணவு முறைக்காக தம் புலால் உண்ணாமை கொள்கையை கைவிட வேண்டியது இல்லை.

கட்டுரைத் தொடரை எழுத வாய்ப்பளித்த வல்லமை ஆசிரியர் குழுவினருக்கும், படித்து கருத்தளித்த அனைவருக்கும் என் நன்றி.

(முற்றும்)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க