வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (14)
பவள சங்கரி
“நான் உலகத்திற்கு எப்படி தோற்றமளிக்கிறேன் என்பது எனக்குத் தெரி்யாது; ஆனால் என்னைப் பொருத்தவரை, ஒரு சிறுவனாக கடற்கரையில் விளையாடிக் கொண்டிருப்பதைப்போல உணர்கிறேன், கண்டறியப்படாத எத்தனையோ உண்மைகள் எம் முன் பெருங்கடலாக விரிந்து கிடக்கிறது. ஆனால் நானோ அவ்வப்போது ஒரு மென்மையான கூழாங்கல்லோ அல்லது சாதாரண சிப்பியைக் காட்டிலும் மேலும் அழகான ஒன்றைக் கண்டுபிடிப்பதற்காக என் கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருக்கிறேன் ”.
ஐசக் நியூட்டன்
உள்ளொளியை மதித்துப் போற்றுவோம்!
உயர, உயரப் போன எதுவும் ஓர் நாள் கீழே வந்தாக வேண்டும். கீழே வீழ்ந்ததும் ஓர் நாள் திரும்ப உயரும் காலமும் வரும். ஆனால் இது எப்போதும் எல்லோருக்கும் தானாக நடக்கக் கூடியது அல்ல. பொருளாதார அடிப்படையில் நல்ல நேரங்களும், கெட்ட நேரங்களும், பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற நிலைகளும் யதார்த்தம். இருப்பினும் அறிவார்ந்த மக்கள் உயர்வு நிலையைக் கொண்டாடுவதுபோல தாழ்வு நிலையையும் கூட ஏற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை. எந்த ஒரு தொழிலும் சில காலங்கள் உச்சாணிக் கொம்பிலும், சில காலங்கள் சந்தையில் தாழ்வு நிலையிலும் இருப்பதைக் காண்கிறோம். பொதுவாக உயர்வான நிலையில் இருக்கும்போது எவருக்கும் மனதில் தாழ்வு நிலை வரக்கூடும் என்ற சந்தேகமே எழுவதேயில்லை. பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்பவர்கள், அடிக்கடி இந்த அனுபவத்தைப் பெறக்கூடும். நம்மை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும் ஒவ்வொரு வெற்றியும், பல துன்பங்களின் மீது கட்டப்பட்டிருக்கலாமே தவிர அந்த துன்பங்களாலேயே ஆனது அல்ல என்பதே நிதர்சனம். ஒருவருக்கு பொருளாதாரப் பின்னடைவு என்பது எந்த நேரத்திலும் எழலாம். இது எத்துனைப் பெரிய தொழிலதிபர்களாக இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்று. இப்படிப்பட்ட ஆபத்துக் காலங்களிலும் நம் வாழ்க்கை ஓட்டத்தைச் சீரமைக்கக்கூடிய ஒரு வரப்பிரசாதம் நம்முடனேயே இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. இந்த இயற்கை வரத்திற்கு ஏற்றவாரு நம் போக்குகளையும், சக்திகளையும், வெற்றிக்கான வாய்ப்புகளையும் அமைத்துக் கொள்வதால் பொருளாதாரம் ஏற்படுத்துகிற எந்த ஒரு சூழலையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் பெற்றுவிட முடியும். அப்படி ஒரு வழிகாட்டியாகச் செயல்படும் வல்லமை பெற்றதுதான் நம்முடைய உள்ளுணர்வு. இதன் அளவுகோளைக் கண்டுபிடிக்கும் எந்தவொரு இயந்திரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த உள்ளுணர்வின் சக்தியை எப்படி முழுமையாகப் பெற முடியும்?
நமக்குள்ளேயே பிறந்து, நம்முடனேயே வளர்ந்தாலும் கூட, தெளிவான சிந்தையும், அமைதியான மனமும், முழுமையான நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே இந்த உள்ளுணர்வை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். நம்மை தெளிவான முடிவு எடுக்க உதவி புரிந்து, வழி நடத்திச் செல்வது நம் அறிவு மட்டுமே. இந்த அறிவு மட்டுமே நமக்கு நம்பிக்கையை ஊட்டி, தொடர்ந்து பாடம் பெறவும், புத்திசாலித்தனமான முடிவெடுக்கவும், ஆபத்தை கணக்கிட்டு முன்கூட்டியே எதிர்நோக்கி அதிலிருந்து தப்பிக்க ஆவண செய்யவும் வைக்கிறது. நம் பலவீனங்களை களையெடுக்க உதவுவதும் இதே அறிவுதான்.
நம் செலவுகள் எல்லை மீறும்போதோ, நாம் தவறு செய்ய நேரும்போதோ, நம்முடைய செயல்களில் மாற்றங்கள் அத்தியாவசியமாகும் பொழுதோ, இந்த உள்ளுணர்வு மட்டுமே அபாயமணியை ஒலிக்கச் செய்கிறது. அதற்கு செவிசாய்க்க ஆரம்பித்தாலே அது வெற்றிப்படியை நோக்கி வழிநடத்திச் செல்லும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் பொறுமையுடன் கவனித்து அதன்வழி நடப்பதுதான். நம் சிந்தையை அலையவிடும்போதுதான், நம் எண்ணங்கள் மரத்திற்கு மரம் தாவும் குரங்கைப் போன்று சிதறுண்டு போகிறது. இழிந்த சிந்தனைகளோ, அச்சமோ, நம்மீதே சந்தேகம் கொள்வதோ அல்லது பழைய தோல்விகளை எண்ணி அச்சமுற்று நம்மை நாமே தரக்குறைவாக கற்பனை செய்து கொள்வதோ நம் ஆக்கப்பூர்வமான உள்ளுணர்வுகளை கட்டிப்போடச் செய்யலாம். இதையெல்லாம் தவிர்ப்பதோடு, நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அதைச் சட்டை செய்யாமல் நன்மையை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது அவசியம். இத்தகைய பயிற்சியை மேற்கொள்ளும் ஒருவர் எக்காலத்தும் அடிமட்டத்தில் எழ முடியாதவாறு வீழ்வதில்லை என்பதே சத்தியம். நாம் எந்த அளவிற்கு இந்த மனநிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு ஆழ்ந்த உள்ளுணர்வுகளின் ஆதிக்கம் நம்மை ஆகச் சிறந்த செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. இதையெல்லாம் சொல்லும்போது எதிர்மறை எண்ணங்களே குறுக்கிடாது என்பது அர்த்தமல்ல. சந்தேகம், அச்சம், அவநம்பிக்கை போன்ற எண்ணங்கள் லேசாக தலை தூக்கினாலும், விரைவிலேயே அது கடந்து போய்விடும். பின் நாம் எடுக்கக்கூடிய முடிவுகள் தெளிவானதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் ஆகிவிடும். திறந்த மனதுடன், குழப்பமில்லா சிந்தையுடன், நிதானமாக உள்ளுணர்விற்குச் செவிசாய்த்து பிரச்சனையிலிருந்து எளிதாக மீண்டு வரும் உபாயத்தைக் காணலாம். நாம் நம் மீது வைக்கும் ஆழ்ந்த நம்பிக்கையே இதற்கான ஆதாரம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்! தீர்வு இல்லாத பிரச்சனை என்பதே இல்லை. கடந்த காலத்தில் எது நடந்திருந்தாலும், அல்லது இன்று நம் முன்னால் நிற்கும் பிரச்சனை எத்தகையதாயினும், அதைப்பற்றி கவலை கொள்ளாமல், அதற்கும் தீர்வுண்டு என்ற நம்பிக்கையுடன், இந்த முறையைப் பின்பற்றும்போது நாம் மேற்கொண்டு செய்ய வேண்டியது என்ன என்பதற்கான வழி கட்டாயம் பிறக்கும் என்பதில் ஐயமில்லை!
வாழ்க்கை என்பதே போராட்டம்தானே!
அதை வாழ்ந்துதான் பார்ப்போமே!
தொடருவோம்
படங்களுக்கு நன்றி :
http://www.geocities.com/Colorado933/page1.htm
http://sayingimages.com/words-to-live-by-with-pictures/