சு.ரவி

வணக்கம்,வாழியநலம்,

மஹாபாரத யுத்தகளத்தில் கண்ணன் ஆயுதமேந்தி வரும் தருணமும், காட்சியும் என்னை மிகவும் ஈர்த்த்வை.

பகவானுடைய சபதமும், பாகவதனுடைய சபதமும் உரசிப் பார்த்த உணர்ச்சிகரமான சம்பவம்.

யுத்தகளத்தில் “கறங்கு போல விற்பிடித்து காலதூதனா”க நின்ற பிதாமஹர் பீஷ்மரின் விறலுக்கு முன்னே

அர்ஜுனன் உட்பட எவராலும் எதிர்நிற்க முடியாதபோது, கண்ணன் ஆயுதமேந்தமாட்டேன் என்ற தன் சபதத்தை

மீறி சக்கரப்படையோடு களமிறங்குகிறான். யுத்தகளத்தின் புழுதி படிந்தமேனியும், காற்றினாலும், ஓடிவரும்

வேகத்தினாலும் குலைந்து பறக்கும் பீதாம்பரமும், மாலையும், முகத்தில் மட்டும் பீஷ்மருக்கருளும் கனிவான

பார்வையுமாக வருகின்ற கண்ணனை பயத்துடனும், கலக்கத்துடனும் கால்களைக் கட்டித்தடுக்கும்

அர்ஜுனனும், கைவில்லையும், படைக்கலன்களையும் கீழே போட்டு, கண்ணன் கையால் முக்தி ஏற்கத் தயாராக

வரவேற்றுத் தேர்த்தட்டில் நிற்கும் பீஷ்மரையும் சித்தரிக்கும் இஸ்கான் ஓவியம் என்னை மிகவும் கவர்ந்த

ஒன்றாகும்.

இதனைப் பெரிய அளவில் எண்ணெய் வண்ண ஓவியமாக வரையும் முன்னே, ‘Net practice” போல

முயற்சி செய்த Poster Colour painting இணைப்பாக…

 

பார்க்க, படிக்க,ரசிக்க….

கண்ணனும், பீஷ்மரும்..

பாரதப் போரில் அன்று

பாண்டவர் சேனை எல்லாம்

வேரறு மரங்கள் போலே

வீழ்ந்தனர்; வீரன் பார்த்தன்

கூர்முனைச் சரங்கள் தைக்கக்

குருதியில் நனைந்துவிட்டான்.

மாரதன் பீஷ்மன் ஆங்கே

மறலியாய்க் களத்தில் நின்றான்

எதிர்ப்பவர் எவரும் உண்டோ

எனக்கெதிர் போரில் என்று

முதியதோர் சிங்கம் போலே

முழங்கிடும் பீஷ்மன் முன்னே

விதிக்கொரு விதியைச் செய்யும்

வித்தகக் கண்ணன் கீழே

குதித்தனன்;  பீஷ்மன் நெஞ்சைக

குறித்தனன் புயலைப் போலே!

எத்தனை பழிவந்  தாலும்

ஏற்கலாம், பக்தன் வாக்கு

பொய்த்திடக் கூடா தென்ற

பெரியதோர் நோக்கம் கொண்டு

அத்தனை பேரும் பார்க்க

“ஆயுதம் ஏந்தேன்”  என்ற

சத்தியம் காற்றில் விட்டான்

சக்கரப் படையைத் தொட்டான்!

“யாதவா, வருக! வேத

நாயகா, வருக! வேணு

மாதவா, வருக! செங்கண்

மாலவா, வருக! வாழ்வின்

கேதமே போக்கிக் காக்கும்

கேசவா, வருக! ஜீவ

நாதமே, வருக! எந்தன்

நாரணா, வருக,வருக!

அடியனைக் கொல்வதற்கோ

ஆயுதம் ஏந்தி வந்தாய்!

நெடிதுயர் மாலே,  இந்தா

நேயமாய் என்னைத் தந்தேன்!

நொடியிலே ஏற்றுக் கொண்டு

நோயெனும் பிறவி தீர்ப்பாய்!

அடிமலர் சரணம் கண்ணா!

ஆட்கொள்ள வேண்டும்” என்றான்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *