விசாலம்

இசையும் கோயிலும் 3      

தமிழ் நாட்டின் சில கோயில்களில் கற்தூண்களும் இசை பாடும் திறமையைக்கொண்டுள்ளன என்பதை மிகவும் பெருமையுடன் நான் இங்கு கூறிக்கொள்கிறேன் .எல்லாம் மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் கட்டிய கோயில்கள். மிகப்பழமை வாய்ந்த கோயில்கள். ஒவ்வொரு கோயிலிலும் அமைந்திருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தின் அழகுதான் என்ன ! அதில் மிக நுணுக்கமாக வடித்திருக்கும் தூணகள் தான் என்ன ! பார்க்கப்பார்க்க வியந்து போகிறோம் இதில் இசை எழுப்பும் தூண்களை அழகர் கோயில், ஆழ்வார்திருநகரி, குற்றாலம், தாராசுரம்,  செம்பகநல்லூர், சுசீந்திரம் திருவேந்திரம், தாடிக்கொம்பு,  மதுரை சிம்மாசலம், திருநெல்வேலி போன்ற கோயில்களில் காணமுடிகிறது. கும்பகோணத்தில் அருகில் இருக்கும் தாராசுரம் கோயிலில் பலி பீடம் இருக்கும் இடத்தைத் தட்ட அங்கு ஒருவிதமான ஒலி எழும்புகிறது என்ற தகவலும் கிட்டியது.அதைத்தவிர இங்கிருக்கும் ஏழு படிகள் ஏழ ஸ்வரங்களை எழுப்புகின்றன.

சிம்ஹாசலத்தில் பெரியப்பெரிய தூண்களுக்கு மேல் இசைத்திருக்கும் இலைகள், பூக்கள் இசையை எழுப்புகின்றதாம்.,

நான் மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் போயிருந்தேன் அங்கிருந்த மண்டபத்தில் இருக்கும்  சில கற்தூண்களை  வேகமாகத்தட்ட அங்கு இசை பிறக்கிறது. இவைகளை இசை பாடும் கற்தூண்கள் என்றே சொல்லலாம் இதைப்பார்த்து என்ன architectural wonders என்று பல வெளிநாட்டவர்கள் வியந்து போகிறார்கள்.என் கூட வந்த உதவியாளர் என்னை அந்தத்தூணை தட்டச்சொன்னார் .நானும் தட்டினேன் ஒரு சத்தமும் வரவில்லை. என் கையில் தேவையான பலமில்லை பின் அவர் கராட்டே கலையில் செங்கலை உடைக்க கையை வைக்கும் போஸில் அந்தத் தூணின் மத்தியில் தட்டினார், நானும் தூணின் அருகில் காதை வைத்துக்கொண்ட்டேன் ஆஹா… அருமையான சத்தம் அதிலிருந்து எழும்பியது .சிலர் கனமான குச்சியாலும் தட்டிக்காண்பிக்கின்றனர். எல்லா தூண்களும் ஒரே சுருதியில் அமைந்திருப்பது மிகவும் வியப்பைத்தருகிறது. இதைக்கட்டியவர் கட்டிடகலையில் எவ்வளவு நுணுக்கங்களை அறிந்திருக்க வேண்டும் இதில் ஒரு ஐந்து தூண்களிலிருந்து ஐந்து வித சுரங்கள் வெளிவர அங்கு “நவரோஜ்” என்ற ராகம் பிறக்கிறது.இவை மொட்டைக்கோபுரம் அருகில் பார்க்கலாம். இசை மேதை ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் இந்த ஐந்து ஸ்வரங்களைக்கொண்டு “நவரோஜ்’ராகத்தில் பாடல் இயற்றியிருக்கிறார். .

ஆழ்வார்திருநகர் கோயிலில் அமைந்த வசந்த மண்டபத்தில் இருக்கும் தூண்களைத்தட்டினால் “ச ரி க ம ப த நி  என்ற சப்த சுரங்கள் வெளி வருகின்றன. தவிர ஒரு சன்னதியின் எதிரே இருக்கும் தூணைத்தட்ட சங்கின் ஒலி கேட்கிறதாம். இங்கு கல்லால் ஆன நாயனமும் வைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் தூண்கள் கிரானைட் கற்களால் ஆனவை இவைகளில் நடு நடுவே துளைகள் குடையப்பட்டு இருப்பதால் இந்த இடங்களில் ஊத மிக அழகான இசை ஒலித்து கேட்க மிக இன்பமாக இருக்கிறது இங்கிருக்கும் தூண்கள் வட்ட வடிவமாகவும்  சதுர வடிவ அமைப்பிலும் ஐந்துமுகமான நட்சத்திர வடிவத்திலும் மிக மிக கலை வண்ணத்தோடு அதிநுட்பமாக  செதுக்கப்பட்டுள்ளன.

சுசீந்திரம் கோயிலில் பைரவர் மண்டபம் எதிரில் நான்கு இசை தூண்கள் உள்ளன. தாடிக்கொம்பு என்ற இடத்தின் கோயிலில் இருக்கும் தூண்கள் வேதங்களின் ஸ்வரங்களை எழுப்புகின்றன. ஹம்பி கோயிலில் இருக்கும் தூண்களில் அடிப்பாகத்தில் ஒரு ஸ்வரமும், நடுப்பாகத்தைத்தட்ட வேறு ஸ்வரமும் தூணின் மேல் பாகத்தைத் தட்ட வேறு ஒருஸ்வரமும் கேட்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.மூன்று பாகங்களையும்  ஒரே நேரத்தில் அடிக்க அங்கு மூன்று ஒலிகளும் சேர்ந்து ஒரு புதுமையான ஒலி பிறந்து நம்மைப்பரவசப்படுத்துகிறது.  கும்பகோணத்தில் இருக்கும் கும்பேஸ்வர கோயிலில் கற்களால் செய்த இரண்டு நாதஸ்வரங்கள் சுவரில் வைக்கப்பட்டுள்ளன. சரஸ்வதி பூஜையின் போது இவைகளை எடுத்து பூஜிக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தது தென்காசியில் இருக்கும் கோயிலில் முக்கிய பிரகாரத்தில் அருள் மிகு ஸ்ரீ விசுவநாத சன்னதியின் முன்னும் அருள் மிகு சுப்பிரமண்யர் சன்னதி முன்னும் இசை எழுப்பும் தூண்கள் இருக்கின்றன. திருநெல்வேலியில் நெல்லையப்பர் ஆலயத்தில் தேவி சன்னதி முன் இருக்கும் இரு தூண்கள்  இரு ஸ்வரங்களை எழுப்புகின்றன. ஒன்று மத்தியமம் மற்றொன்று பஞ்சமம்.

இசை கடவுளிடம் செல்ல ஒரு பாலமாக அமைகிறது. பழங்குடி மக்கள் தங்கள் திருவிழாவில் பலவிதமான வாத்தியங்களை உபயோகித்து வந்திருக்கின்றனர். ஆன்மீக வழிப்பாட்டின் போது தாரை தம்பட்டை ,மேளம் என உபயோகித்து இயற்கையைப் பூசித்திருக்கின்றனர் தேவாலயங்களிலும் பியானோ வாசிக்கப்பட்டு கரோல் என்ற இசை பாடப்படுகிறது.  ஆன்மாவை உயர்ந்த நிலைக்கு அழைத்துப்போகும் சக்தி இசைக்கு உண்டு என்பது எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட உண்மை.. இன்னும் நான் பார்க்காத பல கோயில்கள் இதில் இருக்கலாம்.எல்லாமே நாட்டின் பொக்கிஷங்கள்.அவைகளை கண்ணின் இமைப்போல் காப்பது நம் தலையாய கடமை அல்லவா?

பின் குறிப்பு இதை ஒரு நாலு பேர் படித்தாலும் நான் எழுதிய குறிக்கோள் ஈடேறும் நம் கோயில்களின் சிறப்புக்களை பலரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதே என் அவா  கோயிலின் இசையைப்பற்றி மேலும் பல புது தகவல்களைக்கொடுத்து உதவிய என் தம்பி  திரு வெங்கட் பெரிய இசை மேதை ,சங்கீத வித்துவான்

ஊத்துக்காடு ஸ்பெஷல், அவருக்கு என் மனமார்ந்த நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *